அறிவியல் வினா விடை - விலங்கியல்/மக்கள் நல்வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

10. மக்கள் நல்வாழ்வு

1. பொது நல்வாழ்வும் வாழ்நலமும் என்றால் என்ன?

மருத்துவமனை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஊசி போடுதல் முதலியவற்றிற்கு அரசு ஏற்பாடு செய்து இவற்றை மேம்படச் செய்கிறது. தனி நல்வாழ்வும் வாழ்வு நலமும் இவற்றோடு பின்னிப் பிணைந்தவை.

2. இம்முறைகளால் மனிதன் வாழ்நாள் நீட்டித்துள்ளதா?

நீட்டித்துள்ளது. மனிதன் சராசரி வாழ்நாள் 60 என்று உயர்ந்துள்ளது. இறப்புவீதம் குறைந்துள்ளது.

3. சுசுமா டோனிகாவா செய்த அரும்பணி யாது?

மரபணுக்கள் சேர்ந்து எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குகின்றன. இவை நிறப்புரியில் ஒன்றுக்கு மற்றொன்று நெருக்கமாக நகர்பவை என்று காட்டினார்.

4. பெனிசிலின் என்பது யாது? எதிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது?

முதல் உயிர் எதிர்ப்பு மருந்து. தொற்று நுண்ணங்களை அழிப்பது. பெனிசிலியும் நொட்டேட்டம் என்னும் பூஞ்சனத்திலிருந்து செய்யப்படுவது.

5. இதை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?

1928இல் அலெக்சாண்டர் பிளமிங் கண்டுபிடித்தார்.

6. எர்னஸ்ட்செயின், ஹோவார்டு வால்டர் பிளார்க் ஆகிய இருவரும் செய்ய அருஞ்செயல் யாது?

1938இல் மருத்துவத்தில் பயன்படுவதற்காக பெனிசிலினை அதன் பூஞ்சனத்திலிருந்து பிரித்துத் துய்மைப்படுத்தினர். இதற்காக 1945இல் இவர்கள் நோபல் பரிசு பெற்றனர்.

7. ஸ்டெப்டோமைசினைக் கண்டறிந்தவர் யார்?

1944இல் செல்மன் வாக்ஸ்மன் கண்டறிந்தார்.

8. அழற்சி என்றால் என்ன?

காயம், நோய், தொற்றல், உறுத்தல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். எ-டு தோலழற்சி, நுரையீரல் அழற்சி.

9. இதன் அறிகுறிகள் யாவை?

வீக்கம், சிவத்தல், அரிப்பு, வலி.

10. வெட்டுக்காயங்கள் என்பவை யாவை?

கத்தி, ஊசி, கூரிய தகடு முதலியவற்றால் ஏற்படும் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். எ-டு. அயோடக்ஸ் அல்லது அயோடின் கரைசல்.

11. புண்கள் என்றால் என்ன?

தீ, வெப்பம், வேதிப்பொருள் முதலியவற்றால் தோல் திசுக்கள் தைவுறுதல். நோய்த் தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால், கட்டுப் போட வேண்டும்.

12. புண்களின் வகைகள் யாவை?

1. செம்புண்
2. கொப்புளப் புண்
3. தோல்நீங்குபுண்
4. தீப்புண்

13. நைவுப்புண் என்றால் என்ன?

நோய், காயம், புண் ஆகியவற்றால் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.

14. கன்றிப்புகள் என்றால் என்ன?

ஊமைக் காயங்கள், தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள திசுக்களில் குருதி வெளிப்படுவதால் தோலின் நிறம் கருஞ்சிவப்பாதல்.

15. தும்மல் என்றால் என்ன?

இச்செயலில் குரல்வளை திறந்திருக்கும். ஆழ்ந்த உள் மூச்சும் வலுவற்ற வெளிமூச்சும் இருக்கும். பாதி மூக்கு வழியாகவும் பாதி வாய்வழியாகவும் காற்று செல்லும். நெடி, நுண்கிருமிகள் முதலியவை இதற்குக் காரணிகள்.

16. குறட்டை விடுதல் என்றால் என்ன?

உள்நாக்கு அதிர்வதால் இஃது உண்டாகிறது. உறங்கும் பொழுது வாயினால் மூச்சுவிடுவதால் இது நடை பெறுகிறது.

17. சுளுக்கு என்றால் என்ன?

ஓர் இணைப்பைச் சூழ்ந்துள்ள மென் திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம் முதலியவை ஏற்படும். சுளுக்கு வழிக்கலாம். அல்லது வலி நீக்கியைத் தடவலாம்.

18. அடைகாலம் என்றால் என்ன?

ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம். இது சில நாட்களில் அமையும். எ-டு. நீர்க் கொள்ளல், காய்ச்சல், அம்மைவார்த்தல்.

19. காய்ச்சல் என்றால் என்ன?

வெப்பத்தால் உடல் இயல்பான வெப்பநிலைக்கு மேல் உயருதல். ஒரு நோயின் அறிகுறி. அம்மை வருவதற்கு முன் கடும் காய்ச்சல் உண்டாகும். காய்ச்சல் முறைக் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் எனப் பல வகைப்படும்.

20. வயிற்றுக்கடுப்பு என்றால் என்ன?

வயிறு அளைந்து கொண்டு அடிக்கடி நீர்மமாக மலம் வெளியேறும் நிலை.

21. இது ஏற்படக் காரணம் என்ன?

1. எண்டமீபா.
2. வேதி உறுத்துபொருள்கள்.

22. வயிற்றுப்போக்கு என்றால் என்ன?

மலம் நீர்மமாகச் செல்லுதல். இது வயிற்றுக் கோளாறு.

23. ஆக்டினோமைகோசிஸ் என்றால் என்ன?

ஆக்டினோமைகோசிஸ் இஸ்ரேலி என்னும் குச்சிய உயிரியால் உண்டாகும் கால்நடை நோய்.

24. இந்நோயின் அறிகுறிகள் யாவை?

நுரையீரல், தாடை, குடல் ஆகிய இடங்களில் நோய் தாக்கும். கட்டிகள் தோன்றிச் சீழ்வடியும். சீழில் கந்தகத் துணுக்குகள் இருக்கும்.

25. கொள்ளை நோய் (எபிடமிக்) என்றால் என்ன?

பெருமளவில் பரவி அழிவை உண்டாக்குவது. எ-டு. காலரா.

26. இடநோய் (எண்டமிக்) என்றால் என்ன?

எல்லாக் காலங்களில் ஓரினத்தில் குறிப்பிட்ட இடங்களில் உள்ளது. எ-டு. மலேரியா.

27. காலரா (கழிநோய்) என்றால் என்ன?

மிகக் கொடிய கொள்ளை நோய் விப்ரியோகோமா என்னும் நுண்ணுயிரியால் உண்டாவது. நீரினால் பரவுவது.

28. இதன் அறிகுறிகள் யாவை?

கஞ்சி போன்ற கழிவு வெளியேறும், குமட்டல், தசைப் பிடிப்பு காணப்படும்.

29. இதைப்போக்கும் வழிகள் யாவை?

உடன் உப்பு நீர் உட்கொள்ள வேண்டும்.தடுப்பூசிபோட்டுக் கொள்ள வேண்டும்.

30. பச்சைநோய் என்றால் என்ன?

இளம் பெண்களிடம் காணப்படும் ஒரு வகை குருதிச் சோகை.

31. தீயுறுகட்டி என்றால் என்ன?

சில புதுக்கணியங்கள் மிகுதியாகப் பெருகுதல். இவை தடுக்கப்படாவிடில் புற்று நோயாக மாறும்.

32. சர்க்கரை நோய் என்றால் என்ன?

மாப்பொருள் வளர்சிதை மாற்றக் குறைவால் ஏற்படும் மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, ஊசி போட்டுக் கொள்ளுதல் ஆகிய இரண்டின் மூலம் கட்டுப்படுத் தலாம்.

33. நோய்களில் உடன் கொல்லக் கூடியது எது?

மாரடைப்பு நோய்.

34. நோய்களில் இன்னும் குணப்படுத்த இயலாத நோய் எது?

புற்றுநோய்.

35. தீராத நோய்களை எப்படிப் போக்க இயலும்?

ஆராய்ச்சி நிலையில் இருக்கும் மரபுப் பண்டுவம் செயல் நிலைக்கு வருமானால், இந்நோய்கள் பெனிசிலின் ஊசிபோட்டு நீக்குவது போலப் போக்கப்படும்.

36. பெனிசிலின் வந்த பின் அறவே ஒழிந்த நோய் எது?

பிளவை நோய்.

37. நைட்ரஜன் சமநிலை என்றால் என்ன?

ஓர் உயிரி நைட்ரஜனை உட்கொள்வதற்கும் வெளியேற் றுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு வளரும் குழந்தைகளிடத்து இது நேர்க்குறி + நோயாளிகளிடத்து எதிர்க்குறி

38. வெண்ணியம் என்றால் என்ன?

ஓர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா.

39. ஆல்புமின் என்றால் என்ன?

இது கோளப்புரதத் தொகுதியில் ஒன்று. நீரில் கரையும். வெப்பப்படுத்தக் கரையா உறைபொருளா கும். இது முட்டை வெள்ளை, குருதி, பால் முதலியவற்றில் உள்ளது

40. மலச்சிக்கல் என்றால் என்ன?

செரிக்கப்படாத உணவுப்பொருள்கள் கழிவுக் குடலில் இறுகிக் குறிப்பிட்ட காலத்தில் (48மணி நேரம்) கழிவாக வெளியேறாத நிலை.

41. இதைப்போக்கும் இயற்கை வழிகள் யாவை?

1. ஒரு நாளைக்கு ஒரு தடவை மலங்கழிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுதல்.
2. தாது உப்புக்கள், வைட்டமின்கள்,செல்லுலோஸ் ஆகியவை காய்கிறி, கீரைகளில் உள்ளதால், அவற்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளுதல்.
3. படுக்கப்போகும் முன் ஒரு குவளை நீர் தவறாது அருந்துதல்.
4. ஒன்று இரண்டு வாழைப்பழங்கள் இரவில் சாப்பிடுதல்.

42. தடுப்பாற்றல் உருவாக்கல் என்றால் என்ன?

நோய்க்குத் தடை தெரிவிக்குமாறு ஓர் உயிரினைச் செய்தல்.

43. தடுப்பாற்றல் என்றால் என்ன?

நோய், நச்சு முதலிய தீய விளைவுகளைத் தாக்குப் பிடிக்கும் ஓர் உயிரியின் திறன்.

44. தடுப்பாற்றல் எத்தனை வகைப்படும்?

1. இயற்கைத்தடுப்பாற்றல் - தெளி நீர், வெள்ளணுக்களால் ஏற்படுவது. வாழ்நாள் முழுவதும் இருப்பது.
2. செயற்கைத்தடுப்பாற்றல் - சில நோய்களைத் தடுக்க ஊசி போட்டுக்கொள்ளுதல். மாத்திரைகள் சாப்பிடுதல் - இது குறிப்பிட்ட காலத்திற்கே இருக்கும்.

45. நசிதல் என்றால் என்ன?

உடல் உறுப்பு செயல்திறன் இழத்தல்.

46. தன்தடுப்பாற்றல் என்றால் என்ன?

ஓர் உயிரியின் உடல் திசுக்களுக்கு எதிராகவே அவற்றில் எதிர்ப்புப் பொருள்கள் உண்டாதல்.

47. தன்நஞ்சாதல் என்றால் என்ன?

உடலுக்குள்ளேயே உண்டாகும் பொருள்களால் நஞ்சாதல் நடைபெறுதல்.

48. தொற்றுத் தடுப்பு என்றால் என்ன?

ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவையில்லா உயிர்கள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை.

49. தொற்றுத் தடுப்புக்கொடி என்றால் என்ன?

தொற்றுத்தடுப்புக் கப்பலில் பறக்குங் கொடி புள்ளியுள்ள மஞ்சள் நிறங்கொண்டது. கப்பலில் எவருக்கேனும் தொற்றுநோய் இருக்குமானால் இக்கொடி பறக்க விடப்படும்.

50. தன்தொற்று என்றால் என்ன?

இது ஒரு நோய்த்தொற்று. எ-டு. பூஞ்சை தன் வாழ்க்கைக் சுற்றை ஒம்புயிரியில் முடித்தல்.

51. தொற்றல் என்றால் என்ன?

ஒரு நோய் ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்குப் பரவுதல், எ-டு. சொறிசிரங்கு நீர்க்கொள்ளல்.

52. தொற்று நோய்கள் என்பவை யாவை?

காற்று, உணவு முதலியவை மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக் கூடிய நோய். எ-டு. அம்மை, காலரா.

53. முதன்முதலாக யார் எப்பொழுது அம்மை குத்தினார்?

எட்வர்டு ஜென்னர் 1796 இல் முதன் முதலாக அம்மை குத்தினார்.

54. அம்மை குத்தலுக்குத் தற்பொழுது மாற்று என்ன?

ஆவைன் செலுத்துதல்.

55. முதல் ஆவைனை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?

1953 இல் ஜோன்ஸ்சால்கு என்பார் கண்டுபிடித்தார்.

56. முதன் முதலில் எயிட்ஸ் நோய் எப்பொழுது ஏற்பட்டது? எங்கு?

அமெரிக்காவில் 1980-1981 இல் ஏற்பட்டது.

57. எயிட்ஸ் நச்சியம் எப்பொழுது பிரிக்கப்பட்டது?

1983 இல் பிரிக்கப்பட்டது.

58. சுரப்பி நச்சியம் (அடினோ வைரஸ்) என்றால் என்ன?

டி என் ஏ என்னும் வேதிப் பொருளைக் கொண்டுள்ள நச்சியத் தொகுதியில் ஒன்று. கால் நடை, குரங்கு மனிதன் முதலிய உயிரிகளிடம் காணப்படுவது.

59. எச் ஐ வி என்பது என்ன?

HIV human-immuno deficiency virus. மனிதத் தடுப்பாற்றல் குறைபாட்டு நச்சியம். எயிட்ஸ் நோயை உண்டாக்குவது. உயிர்க்கொல்லி.

60. எச் ஐ வி யைக் கொண்டு நோய்களை எவ்வாறு போக்க இயலும்?

திருடன் திருடனைப் பிடிப்பது போல, ஒரு நோயைக் குணப்படுத்த இதைப் பயன் படுத்த அமெரிக்க அறிவியலார் முயன்று கொண்டுள்ளனர். மூளையில் இதைக் கொண்டு குணப்படுத்தும் மரபணுக்களைச் செலுத்த முயற்சி செய்து கொண்டுள்ளனர். இதே போன்று கல்லீரலிலும் குருதிக் கண்ணறைகளிலும் செய்யலாம். பல நோய்களைக் குணப்படுத்த இம்முறை பயன்படும்.

61. பாஸ்டர் முறை எப்பொழுது உருவாக்கப்பட்டது?

1856 இல் லூயி பாஸ்டர் என்பரால் உருவாக்கப்பட்டது.

62. நுண்ணமழித்தல் என்றால் என்ன?

வெப்பம், வேதிப்பொருள் முதலியவை கொண்டு நுண்ணுயிர்களை அழித்தல்.

63. முதலுதவி என்றால் என்ன?

ஏற்பட்ட புண் அல்லது கோளாறுக்கு உடன் வீட்டில் செய்யப்படும் உதவி, எ-டு காயத்திற்குப் புரைத்தடுப்பு மருந்து போடுதல்.

64. வீட்டில் முதலுதவி செய்வதற்கு இருக்க வேண்டியவை யாவை?

அயோடின் கரைசல், பஞ்சு, கட்டுந் துணி, புரைத்தடுப்புக் களிம்புகள். இவற்றை முதலுதவிப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.

65. முதலுதவிப் பெட்டி எங்கு வைக்கப்பட்டிருக்கும்?

பேருந்து, தொழிற்சாலை முதலிய இடங்களில் இப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். தொழிற்சாலைச் சட்டப்படி இது இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

66. எவ்வாழ்வு மக்கள் நல்வாழ்விற்கேற்றது.?

இயற்கையோடு இயைந்த வாழ்வு. சித்தர்கள் வற்புறுத்துவது இவ்வாழ்வையேதான்.