அறிவியல் வினா விடை - விலங்கியல்/உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11. உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்

1. உயிரிலித் தோற்றம் என்றால் என்ன?

உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர்ப்பொருள்கள் தோன்றுதல்.

2. படிமுறை வளர்ச்சி அல்லது பரிணாமம் என்றால் என்ன?

எளிய உயிரிலிருந்து (அமீபா) அரிய உயிர் (மனிதன்) எவ்வாறு ஒரு மலர்ச்சியின் மூலம் தோன்றியது என்பதாகும்.

3. இதை விளக்கி அழியாப் புகழ்பெற்றவர் யார்?

சார்லஸ் தார்வின்

4. மூதாதைத் தோற்றம் என்றால் என்ன?

கால்வழியில் மூதாதையர் பண்புகள் தோன்றுதல். பெற்றோர் பண்புகள் தோன்றுதல் இல்லை.

5. நிறப்புரி (குரோமசோம்) என்றால் என்ன?

கால்வழியுள்ள மரபணு. ஓரிணை இழைப்பொருள். உயிர்வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கை வேறுபடும். 100 இணைகளுக்கு மேலுண்டு. எ-டு மனிதன் 23. டிரசோபைலா 4.

6. இதை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

1880களில் வால்நர் பிளீமிங் என்பார் கண்டறிந்தார்.

7. மார்கன் தம் புகழ்வாய்ந்த ட்ரோசோபைலா கனி ஆராய்ச்சிகளை எப்பொழுது தொடங்கினார்?

1907இல் தொடங்கினார். கால்வழியில் நிறப்புரிகளின் பங்கை மெய்ப்பித்து, சடுதிக் கொள்கையை நிறுவினார்.

8. முதல் நிறப்புரி செயற்கையாக எப்பொழுது யாரால் உருவாக்கப்பட்டது?

1983 இல் ஆண்ட்ரூ முர்ரே, ஜேக் கோஸ்டாக் ஆகிய இருவரும் இந்நிறப்புரியை உருவர்ககினார்.

9. தற்புரி என்றால் என்ன?

இணையாகவுள்ள உடல் நிறப்புரிகளின் பாலை உறுதி செய்யப் பயன்படாதவை.

10. பால் நிறப்புரி என்றால் என்ன?

இது பாலை ஆணா பெண்ணா என்று உறுதி செய்வது.

11. துணை நிறப்புரி என்றால் என்ன?

இது பால் நிறப்புரி.

12. எக்ஸ் நிறப்புரி என்றால் என்ன?

பாலின நிறப்புரிகளில் ஒன்று. பால் தன்மையை உறுதி செய்வது. ஆண், பெண் இருவரிடமும் உள்ளது.

13. ஒய் நிறப்புரி என்றால் என்ன?

இது பால் நிறப்புரியாகும். வேறுபட்ட பாலில் மட்டும் காணப்படும். அதாவது ஆண்களில் மட்டும் தெரிவது.

14. மரபணு என்றால் என்ன?

நிறப்புரியில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள காரணி. இது தனியாள் மரபுப் பண்புகளைக் குறிப்பது. மரபுப் பண்பின் அலகு.

15. மரபணுவியல் அல்லது மரபியல் என்ன?

உயிரியின் கால்வழி பற்றி ஆராயும் உயிரியல் துறை.

16. மரபணுவியலின் தந்தை யார்?

ஜான் கிரிகார் மெண்டல்.

17. மரபணு (Gene) என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்? எப்பொழுது

1909இல் வில்கம் ஜொகான்சன் மரபணு என்னும் சொல்லை உருவாக்கினார்.

18. இவர் நிலைபெறச் செய்த மற்ற இரு சொற்கள் யாவை?

புறமுத்திரை (Phenotype), மரபுமுத்திரை (genotype) என்னும் இரு சொற்கள் ஆகும்.

19. தலைமை மரபணு என்றால் என்ன?

நம் உடலில் பல உறுப்புகளை உருவாக்குவதில் சிறப்பான பங்குபெறும் மரபணு. இது டாக்டர் ஜோனதன் குக் என்பார் தம் குழுவினரோடு இலண்டன் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்டுபிடித்துள்ளார். இதனால் வளர்ச்சிக்குரிய காரணத்தை அறிய இயலும்.

20. நோய் மரபணு என்றால் என்ன?

ஜப்பான் அறிவியலார் 1990களில் கண்டுபிடித்தது. இது பிற்போக்கு நச்சியத்தின் ஒரு பகுதி. மூட்டுவலியை உண்டாக்குவது. ஒரு புற்றுநோய் மரபணு.

21. ஒத்த பண்பு மரபணுக்கள் என்பவை யாவை?

உயிரணுக்கள் சிறப்பாக்கம் பெற்று, உடலின் பல உறுப்புகளையும் உண்டாகுமாறு செய்பவை. வேறுபெயர் தேல்கி மரபணுக்கள்.

22. 1993ஆம் ஆண்டின் மூலக்கூறு எனச் சிறப்பிக்கப்பட்டது எது?

பி 53 மரபணு. பல புற்றுநோய்களால் அடிக்கடி ஏற்படும். சடுதி மாற்றங்களுக்கு இலக்காக இருப்பது இது.

23. 1993ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பென்ன?

குடல்புற்றுநோய்க்குரிய மரபணு அடையாளங் கண்டறியப்பட்டது.

24. கொல்மரபணு என்றால் என்ன?

மாற்றமடைந்த இணைமாற்று. தானுள்ள உயிரைக் கொல்வது.

25. மரபுநிகழ்தகவு என்றால் என்ன?

ஓர் உயிர்த் தொகுதியில் குறிப்பிட்ட மரபணு அடிக்கடி தோன்றுதல்.

26. மரபணு நிலையம் என்றால் என்ன?

டிஎன்ஏ துணுக்குகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் திரட்டுதல். இத்திரட்டில் குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும்.

27. மரபணு மதிப்பு என்றால் என்ன?

உட்பெருக்கம் நடைபெறும் சிறு உயிர்த்தொகுதிகளில் காணப்படும் போக்கு வேற்றுநிலை மரபணு இணைகள் ஓர் இணைமாற்றுக்கு அல்லது மற்றொன்றிற்கு ஓரியல் இணைகளாதல். இது வாய்ப்பாக நிகழ்வது, தேர்வாக் அன்று.

28. மரபுக் கலவை என்றால் என்ன?

உயிர் அணுக்கணியத்திலும் நிறப்புரிகளிலும் அமைந்துள்ள மரபுக்காரணிகளின் தொகுமொத்தம்.

29. மரபணுச் சேமகம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட உயிர்த்தொகுதியின் எல்லா மரபணுக்களின் தொகுமாத்தம்.

30. மரபணுச்சுமப்பி என்றால் என்ன?

ஒடுங்குமரபணுவைச் சுமந்து செல்லும் உயிரி. எ-டு நிறக்குருடு,

31. மரபுப்புரி (gene+some = genome) என்றால் என்ன?

ஓர் உயிரியில் அமைந்துள்ள நிறப்புரிகளின் நிறைத் தொகுதி.

32. மனித மரபுப்புரித்திட்டம் எப்பொழுது தொடங்கிற்று? எப்பொழுது இது முடியும்?

1988இல் தொடங்கிற்று. 2003இல் முடியும்.

33. நம் உடலில் சற்றேறக் குறைய எத்தனை மரபணுக்கள் உள்ளன?

1 1/2 இலட்சம் மரபணுக்கள் உள்ளன.

34. இதுவரை தெரிந்த தெரியாத மரபணு நோய்கள் யாவை?

தெரிந்தவை 5000; தெரியாதவை பல.

35. இத்திட்டத்தின் நோக்கம் யாது?

மனிதநோய்களை ஒழித்து மனிதநலம் பேணுவது ஆகும்.

36. டிஎன்ஏ என்றால் என்ன?

உயிரணுவின் கருவில் காணப்படும் விந்தை வேதிப் பொருளான டி ஆக்சிரிபோஸ் உட்கரு காடியாகும். கால்வழியைக் கட்டுப்படுத்துவது.

37. உட்கரு காடிகளை முதன்முதலில் உற்றுநோக்கியவர் யார்?

முதன்முதலில் 1869இல் ஆல்தோ பிரடரிச் மிஷர் என்பார் உற்றுநோக்கினர்.

38. இந்த அமிலங்களில் சர்க்கரை உள்ளது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?

1909இல் போபஸ் ஏரான் தியோடர் எல்வீன் முதன் முதலில் கண்டறிந்தார்.

39. டி.என்.ஏவை விளக்கும் புகழ்பெற்ற மாதிரி எது?

வாட்சன்-கிரிக் மாதிரி. அது ஓர் இரட்டைச்சுருள்.

40. டிஎன்ஏ எந்த ஆண்டு யாரால் பிரிக்கப்பட்டது?

1969இல் மெய்சர் என்பவரால் பிரிக்கப்பட்டது.

41. ஆர்டிஎன்ஏவைப் புனைந்தவர்கள் யார்? எப்பொழுது?

1972இல் பால்பர்க், டேல் கெய்சர் ஆகிய இருவரும் புனைந்தனர்.

42. நொதி பாலிமரேஸ் I என்பதை யார் எப்பொழுது அடையாளங் கண்டறிந்தனர்?

1959இல் கோர்ன்பர்க், செவிரே ஓக்கோ ஆகிய இருவரும் அடையாளங் கண்டறிந்தனர். இந்நொதி டிஎன்ஏ தொகுப்பை ஊக்குவிப்பது. இதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

43. ஹென்றி எர்லிச் அறிவித்தது யாது?

மயிரிழைப் புரி ஒன்றில் டிஎன்ஏவின் தனியன் ஒன்றை இனங் கண்டறியும் முறையைக் கண்டுபிடித்துள்ளதாக இவர் அறிவித்தார்.

44. டிஎன்ஏ கணிப்பொறி என்றால் என்ன?

டிஎன்ஏ மூலக்கூறு அடிப்படையில் வேலை செய்யும் மிகப் புதிய கணிப்பொறி. இதில் பிழை ஏற்படாதது தனிச்சிறப்பு. வேதித் தொகுதிகளையும் உயிரியல் தொகுதிகளையும் ஆராயப் பயன்படும்.

45. டிஎன்ஏ வழிக் கணித்தல் என்றால் என்ன?

இது ஒரு புதிய தொழில்நுட்பம். டிஎன்ஏவிற்குச் செய்திகளைத் தேக்கும் திறன் நிரம்ப உண்டு. கணிப்பொறி போன்று தன் செயல்களைச் செய்வது. இதற்கு நொதிகள் உதவுபவை. இந்நொதிகள் உயிரியல் வினை ஊக்கிகள் ஆகும். தேவைப்பட்ட செயல்களைச் செய்ய இவை மென்பொருள்போல் உதவுபவை.

46. ஆர்என்ஏ என்றால் என்ன?

உயிர்அணுவின் கருவிலும் அதற்கு வெளியிலும் காணப்படும் விந்தை வேதிப்பொருள், ரிபோஸ் உட்கரு காடியாகும். கால்வழியைக் கட்டுப்படுத்த டிஎன்ஏவிற்கு உதவுவது.

47. யா-மிங் ஹவ், பால் ஷிமல் ஆகிய இருவரின் கண்டுபிடிப்பு யாது?

மாற்று ஆர்என்ஏவில் காணப்படும் மரபுத் தொகுதியிலுள்ள ஒரு பகுதியை எவ்வாறு பூட்டவிழ்ப்பது என்பதை 1989இல் கண்டுபிடித்தனர்.

48. ஆர்என்ஏ உலகம் என்பது யாது?

இது மூலக்கூறு உயிரியலுக்குரியது. டிஎன்ஏ மரபணுப் பொருளாக வருவதற்கு முன் இவ்வுலகம் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கருத்துப் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

49. இக்கருத்து எவ்வாறு புகழ்பெற்றது?

டாக்டர் சிட்னி ஆல்ட்மன், டாக்டர் தாமஸ் ஆகிய இருவரும் உயிரியல் வினையூக்கியாக ஆர்என்ஏ செயற்படவல்லது என்பதைக் கண்டறிந்த பின் இக்கருத்துப் புகழ்பெற்றது.

50. இவ்விருவரும் எப்பொழுது எதற்காக நோபல் பரிசு பெற்றனர்?

ஆர்என்ஏ மூலக்கூறுகள் நொதிப்பண்புகள் உள்ளவை என்று கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு 1989இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

51. பெயர்ப்பு என்றால் என்ன?

தூது ஆர்என்ஏவில் பதிந்துள்ள மரபுச் செய்தி பெயர்க்கப் பெற்றுப் புரதமாக மாற்றப்படுதல். ரிபோசோம்களில் பகர்ப்பு நடைபெறுவது.

52. எஸ்டிஎம் என்பது என்ன? இதைக் கண்டுபிடித்தவர் யார்?

இதன் விரிவு Site-Directed Mutagenesis. இடவழிப்படு சடுதித் தோற்றம் என்பது இதன் பொருள். இந்நுணுக்கத்தைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர்த்தொழில் நுட்ப இயலார் மைக்கல் சிமித். இதற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதியை இவர் பெற்றார் இந்நுணுக்கத்தைக் கொண்டு புதுப்பண்புள்ள புரதங்களின் உண்டாக்கலாம். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது.

53. அலெக் ஜெப்ரேஸ் செய்த அருஞ்செயல் யாது?

1984இல் டிஎன்ஏ மாதிரிகளைக் கொண்டு விரல்பதிவு நுணுக்கத்தைக் கண்டுபிடித்தார்.

54. இந்தியாவில் டாக்டர் லால்ஜி சிங் செய்த அருஞ்செயல் யாது?

1988இல் டிஎன்ஏ விரல்பதிவைக் கண்டுபிடித்தார். இதற்கு இவர் அனைத்து டிஎன்ஏ துருவியை அமைத்துள்ளார்.

55. டிஎன்ஏ விரல்பதிவின் பயன்கள் யாவை?

1. உரிய பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்கலாம்.
2. திருடர்களையும் கொள்ளையர்களையும் கண்டுபிடிக்கலாம்.
3. திசுவகைகளை உறுதிசெய்யலாம்.
4. குறிப்பிட்ட பூச்சி இனத்தை உறுதிசெய்யலாம்.

56. பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்பது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

B பிரிவு குருதியணுக்கள் குறைவாகவும் C பிரிவு குருதியணுக்கள் அதிகமாகவும் இருந்தால் பிறப்பது ஆண் என்பது உறுதி. இதையே தற்காலத்தில் அலகிடும் ஆய்வுகளும் செய்கின்றன.

57. ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் பிறப்பது எவ்வாறு?

மனித நிறப்புரிகள் 23 இணைகள்.
ஆணில் ஓர் இணையில் மட்டும் xy என்னும் நிறப்புரிகள் இருக்கும். பெண்ணில் இந்த வேறுபாடு இல்லை. எல்லாம் xx தான். ஆணிலுள்ள X பெண்ணிலுள்ள X ஆகிய இரண்டும் சேருமானால் பிறப்பது பெண். ஆணிலுள்ள Y பெண்ணிலுள்ள X ஆகிய இரண்டும் சேருமானால் பிறப்பது ஆண்.
XX - பெண்
XY - ஆண்.

58. ஒரே சமயம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகள் எவ்வாறு பிறக்கின்றன?

ஒரு விந்தணு ஒரு கருமுட்டையோடு சேரும்பொழுது உண்டாவது கருவணு. இதிலிருந்து பிறப்பது ஒரு குழந்தை. புணர்ச்சிகளின் பொழுது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண் அணு, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டையோடு சேரும் பொழுது பிறப்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும். இது நாய், பன்றி முதலிய விலங்குகளில் வழக்கமாக அதிகம்.

59. தண்டுக் கண்ணறைகள் (stem cells) என்றால் என்ன?

நம் உடலில் திசுக்களில் காணப்படுபவை.இவை முதிர்ச்சி யடையாக் கால்வழிக் கண்ணறைகளாகும். திசுக்களை யும் உறுப்புகளையும் உண்டாக்கும் கண்ணறைகளை உற்பத்தி செய்பவை.

60. இந்த ஆராய்ச்சியின் மருத்துவச் சிறப்பென்ன?

அறுவைக்குப்பின் திசுக்களை எளிதில் குணப்படுத்த லாம். வெண்புற்றுள்ள நோயாளிகளுக்கு நலமுள்ள குருதியணுக்களை வழங்கலாம். திசுக்களை மாற்றிப் பொருத்தலாம். (கண்)

61. பால் மாற்றம் என்றால் என்ன?

இது அலி மாற்றமாகும். ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுவதற்குரிய பண்புகள் தோன்றுதல்.

62. அலிப்பண்பு என்றால் என்ன?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட பண்பு.

63. ஈட்டுபண்பு என்றால் என்ன?

தன் உடல் கண்ணறைகளில் சூழ்நிலை விளைவினால் ஒர் உயிர் பெறும் பண்பு. இதற்கு மரபு வழி உண்டு என்பது இலெமார்க் கொள்கையாகும்.

64. கால்வழிப்பண்பு என்றால் என்ன?

மரபணுக்கள் மூலம் வரும் உடற்பண்புகள். எ-டு சுருட்டை மயிர், சிகப்பு, கறுப்பு.