அறிவியல் வினா விடை - விலங்கியல்/சூழ்நிலை இயல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

12. சூழ்நிலை இயல்

1. சூழ்நிலை என்றால் என்ன?

ஒரு தொகுதியைச் சூழ்ந்துள்ள சுற்றச் சார்பு

2. சூழ்நிலை இயல் என்றால் என்ன?

உயிர்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராயும் உயிரியல் துறை.

3. சூழ்நிலையின் இரு பிரிவுகள் யாவை?

1. தனிச்சூழ்நிலை இயல் - தனி உயிர்கள் பற்றியது.
2. தொகுசூழ்நிலை - தொகுதி உயிர்கள் பற்றியது.

4. தகைவு என்றால் என்ன?

உயிரிகள் தம் சூழ்நிலைக்கேற்பச் செயற்படும் நிலை. இது உறுப்பு, நிறம் முதலியவற்றில் இருக்கும். விலங்குகள் தங்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள இது பயன்படுகிறது.

5. தகைவின் பல வகைகள் யாவை?

1. பாதுகாப்புநிறம் - வெட்டுக்கிளி
2. தாக்குநிறம் - பச்சைப்பர்பு
3. எச்சரிக்கை நிறம் - விரியன் நல்லபாம்பு.
4. நிறமாற்றம் - பச்சோந்தி

6. தகைவுப் போலி என்றால் என்ன?

உறுப்பு, ஒலி முதலியவற்றில் தீங்குள்ள விலங்குகள் தீங்கற்ற விலங்குகளை ஒத்திருத்தல். ஒலைப்பாம்பு நிறத்தில் விரியனை ஒத்திருத்தல்; சாரைப்பாம்பு நல்லபாம்பு போல் சீறுதல்.

7. ஆட்சி எல்லை என்றால் என்ன?

உணவு உண்ணல், கூடுகட்டுதல், கலவி நிகழ்த்தல் முதலிய செயல்களுக்காக ஒரு விலங்கு பாதுகாக்கும் இடம்.

8. போட்டி என்பதின் சிறப்பு யாது?

நீர் முதலியவற்றிற்காக இரு உயிரிகளுககிடையே ஏற்படும் இடைவினை. இயற்கைத் தேர்வில் இது ஒர் இன்றியமையாக் காரணி.

9. புறவெப்ப வாழ்வி என்றால் என்ன?

சூழ்நிலையிலிருந்து நேரடியாக வெப்பத்தைப் பெறும் தனிஉயிர். பறவைகள், பாலூட்டிகள் தவிர, ஏனையவை இவ்வாறு வெப்பத்தைப் பெறுபவை.

10. இயலிட உயிரி என்றால் என்ன?

ஓரிடத்திற்கே உரிய உயிரி. புலி நம் நாட்டிற்கே உரியது.

11. எழுச்சி என்றால் என்ன?.

ஒரு விலங்கின் நடத்தைத் துண்டல் விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருத்தல்.

12. உயிர்நலம் என்றால் என்ன?

இது ஒரு விலங்கின் நடத்தை. இது அதன் பிழைப்பு வாய்ப்புகளையும் இனப்பெருக்க வாய்ப்புகளையும் குறைப்பது. ஆனால், அதன் இனத்தைச் சார்ந்த மற்றொரு விலங்கில் அவை அதிகமாகும். காட்டாக, ஆட்காட்டிக் குருவி ஒன்று தின்னும் பறவை ஒன்றைக் கொத்துவது போல் பாவனை செய்து, தன் கூட்டிலிருந்து விரட்டுவதன் மூலம் தன் குஞ்சுகளைக் காப்பாற்றும்.

13. நடத்தை என்றால் என்ன?

ஓர் உயிரியின் பலதிறப்பட்ட செயல்களைக் குறிப்பது. இதில் உடற்செயல்களும் உளச்செயல்களும் அடங்கும். இதில் தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகிறது.

14. நடத்தை மரபணுவியல் என்றால் என்ன?

உயிரி நடத்தை பற்றி ஆராயும் மரபணுவியலின் ஒரு பிரிவு.

15. தணிப்பு நடத்தை என்றால் என்ன?

ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் வலுத்தாக்கலை நிறுத்தும் நடத்தை காட்டாக, வலுவுள்ள நாயிடம் வலு வில்லாத நாய் நயந்தும் குழைந்தும் வாலை ஆட்டுதல்.

16. வலுத்தாக்கல் என்றால் என்ன?

ஒருவகை விலங்குநடத்தை. பிறவிலங்குகளை அச்சுறுத்த வும் எதிர்க்கவும் நடைபெறுவது. இது எதிர்ப்புக்குரிய துலங்கலே, எ-டு. புலி, சிங்கம்.

17. ஆழிட வாழ்விகள் என்றால் என்ன?

ஏரி அல்லது கடலடியில் வாழும் தாவரத்தொகுதிகளும் விலங்குத் தொகுதிகளும் ஆகும். எ-டு இயக்கமற்ற விலங்குகள் தவழ்ந்தும் வளைதோண்டியும் வாழ்பவை.

18. வேலை ஒப்புமை என்றால் என்ன?

உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்டதாக இருத்தல். எ-டு பறவைச் சிறகுகளும் பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டும்; தோற்றத்தில் இல்லை.

19. வேலை ஒப்புமை உறுப்புகள் என்றால் என்ன?

வேலையில் உறுப்புகள் ஒத்திருத்தல்.எ-டு. பறவைச் சிறகுகளும் பூச்சி சிறகுகளும்.

20. பகற்சுறுசுறுப்பு என்றால் என்ன?

பகற்பொழுதில் செயலாக்கம் மிகுதியாக இருத்தல். எ-டு. தேனிக்கள்.

21. உயிரியல் கடிகாரம் என்றால் என்ன?

பல பருவச் சுழற்சிகளையும் பகற்செயல் ஒழுங்குகளையும் ஒரே சீராக்கும் உயிரியல் உள்விசை நுட்பம்.

22. பகற்பொழுது ஒழுங்கு என்றால் என்ன?

பகற்பொழுது தாளமுறை தாவரங்களிலும் விலங்குகளிலு முள்ள பல வளர்சிதை மாற்றச் செயல்களான பகற்கால ஒழுங்கு மனிதன் 40 பகற்கால ஒழுங்குகளைக் கொண்டவன்.

23. பருவ இடப்பெயர்ச்சி என்றால் என்ன?

பருவத்திற்கேற்ப விலங்குகள் ஒரிடத்திலிருந்து மற்றோ ரிடத்திற்குச் செல்லுதல், வலசைபோதல் என்றுங் கூறலாம்.

24. இடம்பெயர் இயக்கம் என்றால் என்ன?

விலங்குகள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல். இச்சிறப்பியல்பு தாவரங்களுக்கில்லை.

25. தூண்டல் இயக்கம் என்றால் என்ன?

ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல்நோக்கி நகர்வது. தூண்டல் செறிவைப் பொறுத்தது இயக்கம். காட்டாக, மரப்பேன். ஈரச்சூழலில் மெதுவாகவும், உலர்சூழலில் விரைவாகவும் செல்லும்.

26. கோடை உறக்கம் என்றால் என்ன?

இது கோடையில் தாவரத்திலும் விலங்கிலும் உண்டாவது. எ-டு. பாம்பு, மீன், கரடி.

27. காட்டுவிலங்குப் பாதுகாப்பு என்றால் என்ன?

காடுகளில் வாழ்பவை காட்டுவிலங்குகள். மனிதன் தன்வசதிக்காகவும் வாழ்வு நலத்திற்காகவும் மேற்கொள் ளும் செயற்கை முறைகளால் இவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இன்று அவ்வாறு அழியாமலிருக்க மேற்கொள்ளப்படும் தடுப்பு முயற்சியே காட்டுவிலங்குப் பாதுகாப்பாகும். புலி, சிங்கம், மான், பறவை முதலிய 500க்கு மேற்பட்ட காட்டு விலங்குகள் இந்தியாவில் உள்ளன. இவற்றைக் காப்பதற்கென்று பல இடங்களில் புகலிடங்களும் பூங்காக்களும் உள்ளன. தமிழ்நாட்டில் முதுமலை, முண்டந்துறை, வேடந்தாங்கல் முதலிய இடங்களில் புகலிடங்கள் உள்ளன.

28. சமப்பல்லுருத் தோற்றம் என்றால் என்ன?

உயிர்த்தொகைகளில் இரண்டிற்கு மேற்பட்ட வகைகள் இயற்கைத் தேர்வினால் சமநிலையுடன் இருத்தல். இதனைப் பூச்சிவகைகளில் காணலாம்.

29. நேர்நிலை என்றால் என்ன?

இது உடலின் இருக்கை நிலையைக் குறிக்கும். இதனைக் காப்பது இயக்குத்தசைகள். நிற்றல், நடத்தல், ஒடுதல் முதலிய எல்லா நிலைகளும் இத்தசைகளால் கட்டுப் படுத்தப்படுகின்றன. எடுப்பான தோற்றத்திற்கு இத்தசைகளே காரணம்.

30. பரிமாற்ற வாழ்வு என்றால் என்ன?

இது விலங்குகளுக்கிடையே நிலவும் ஒருவகை உறவு. இதில் வலிய உயிரி எளிய உயிரியை அழித்தலாலும், அச்செயல் பொறுத்துக் கொள்ளப்படுவது.எ-டு. எருமைத் தோலிலுள்ள ஒட்டுண்ணிகளைக் காகம் உண்ணல்.

31. வேற்றின இணைவாழ்வு என்றால் என்ன?

வேறுபட்ட வகைகளைச் சார்ந்த இரு விலங்குகள் ஒரு சேர வாழ்தல். இச்செயல் ஒன்றுக்கு நன்மை. மற்றொன் றுக்கு ஏற்போ இழப்போ இல்லை எ-டு. துறவி நண்டின் ஒட்டில் கடலனிமோன் இணைந்து வாழ்தல்.

32. சமச்சீர் என்றால் என்ன?

தாவரப்பூவும் விலங்குடலும் ஒரு தளத்தில் அமைந்திருக்கும் முறை.

33. இதன் வகைகள் யாவை?

1. இருபக்கச் சமச்சீர் - மீன்.
2. ஆரச்சமச்சீர் - நட்சத்திர மீன்.

34. ஆரச்சமச்சீர் என்றால் என்ன?

ஒரு பொதுமையத்தைச் சுற்றியமைந்துள்ள ஒத்த பகுதிகளை எச்செங்குத்துக்கோட்டில் வெட்டினாலும், அவற்றை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. நட்சத்திரமீன்.

35. ஆரச்சமச்சீரிகள் என்றால் என்ன?

ஆரச்சமச்சீருடைய விலங்குகள். எ-டு குழிக் குடலிகள், முட்தோலிகள்.

36. ஆரம் விலகியது என்றால் என்ன?

ஆரச்சமச்சீருடைய வாய்க்கு எதிரே உடல் மேற்பரப்பு அமைதலைக் குறிப்பது.

37. புவிவளரியல் ஊழிகள் யாவை?

1. புத்துழி - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
:2. இடையூழி - 65-225 மில்லியன் ஆண்டுகள்.
3. தொல்லூழி - 570 - 225 மில்லியன் ஆண்டுகள்.
4. முன்தொல்லுழி - 4600 - 2500 மில்லியன் ஆண்டுகள்.
38. கேம்பிரியன் ஊழி என்றால் என்ன?

தொல்லூழியின் தொடக்கப் புவி வளரியல் காலம். 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100 மில்லியன் ஆண்டுக்காலம்வரை நிலவியது. இக்காலத்தில் வாழ்ந்த தொல்லுயிர்ப் படிவங்கள், கடல் உயிர்களாலானவை.

39. டிவோனியன் ஊழி என்றால் என்ன?

தொல்லுயிர் சார்ந்த புவிவளரியல் காலம்.395 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்காலப் பாறைகளில் மாசிகள், மீன்கள் ஆகியவற்றின் புதைபடிவங்கள் புதைந்துள்ளன.