அறிவுக்கு உணவு/விருப்பும் வெறுப்பும்
காணப்படுகின்ற பொருள்களிலே இல்லை. காண்கின்ற மக்களுடைய உள்ளத்திலேயே இருக்கின்றன. வேப்பங்கனியைப் பறவைகளெல்லாம் வெறுக்கின்றன. காகம் விரும்புகிறது. எல்லோரும் விரும்பும் இனிப்பையும் சிலர்வெறுக்கின்றனர்.
ஒரே பெண் தன் தந்தையின் உள்ளத்திற்கொரு விதமாகவும், தமையனின் உள்ளத்திற்கொரு விதமாகவும் காதலன் உள்ளத்திற் கொரு விதமாகவும் காட்சியளிக்கிறாள். இவ் வேறுபாடு பெண்ணிடத்தில் தோன்றாமல், காண்கின்றவன் கண்ணிடத்தே தோன்றுகிறது.
இதிலிருந்து விருப்பும் வெறுப்பும் பொருள்களில் இல்லையென்றும், மக்கள் உள்ளத்தே உள்ளதென்றும் எளிதாக உணரலாம். துன்பத்தை இன்பமாகக் கண்டு மகிழ்வதும் இன்பத்தைத் துன்பமாகக் கண்டு வருந்துவதும் உனது உள்ளமேயாகும். சிறுபொருளை இழந்து வருந்தி அழுவாரும், பெரும் பொருளை இழந்து மகிழ்ந்து வாழ்வோரும் மக்களுள் உண்டு. நீ உனது உள்ளத்தை வலுப்படுத்து; துன்பத்தையே அறியாது வாழலாம்.