உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாந்தரும் அசோகரும்/இந்தியப் பேரரசு

விக்கிமூலம் இலிருந்து

3. முதல் இந்தியப் பேரரசு

லெக்சாந்தருக்கு முன்னர் யவன நாடு பல இராச்சியங்களாகச் சிதறிக் கிடந்தது போலவே, அக் காலத்தில் வட இங்தியாவும் இருந்தது; பல அரசர்கள் ஒற்றுமையின்றிப் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். அந்நிலையில், திடீரென்று பெரும் புயல் வீசியது போல, மிக்க தொலைவிலிருந்து அலெக்சாந்தர் படையெடுத்து வந்தான். அவனுடைய போர் முறைகளும், முற்றுகைகளும் உறங்கிக் கிடந்த மக்களை விழிப்படையச் செய்தன. பல மன்னர்கள், இரத்தினங்களிழைத்த மரக்கால்களைப் போல, முடிகளைத் தாங்கிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றும், நாடு ஒரே பேரரசின் கீழ் ஒற்றுமைப் பட்டிருந்தால்தான் வெளியார் படையெடுப்பைத் தடுக்க முடியும் என்றும் உணரும் நிலை ஏற்பட்டது.

அந்த நிலையைச் சந்திரகுப்தர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் பழைய நந்த வமிசத்தைச் சேர்ந்த மகாநந்தியின் வழிவந்தவர்; மகத அரசில் அவருக்கு உரிமை இருந்தது. ஆனால் அப்பொழுது மகதத்தை ஆண்டுவந்த மகாபத்ம நந்தன் வஞ்சனையால் இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டவன். அவனுடைய தாழ்ந்த குலத்தையும், அவன் இராணியை வசப்படுத்திக் கொண்டு, மகத மன்னர் மகாநந்தியையும், அவர் மைந்தர்களான இரண்டு இளவரசர்களையும் வதைத்து, அரசைக் கைப்பற்றியதையும் மகத மக்கள் வெறுத்து வந்தனர். ஆயினும் அவன் அவர்களைக் கடுமையாக அடக்கி ஆண்டு வந்தான். அவனுக்குப் பின்னர், அவனுடைய மைந்தர்களான நவநந்தர்களில் மூத் தோனான சுகற்பன் அரியணை ஏறினான். அவன்

சந்திரகுப்தரும் சாணக்கியரும்

காலத்தில் தான் சந்திரகுப்தர் நாடுகடந்து வெளியேற நேர்ந்தது. அவர் மகதத்தின் தலைநகரான பாடலியில் தங்கியிருந்தால், அவருடைய உயிருக்கே ஊறு நேர்ந்திருக்கும்.

நல்ல வேளையாக அவருக்குச் சாணக்கியருடைய உதவி கிடைத்தது. சாணக்கியரை விஷ்ணுகுப்தர், கெளடில்யர் என்றும் கூறுவதுண்டு. அவர் அந்தணர்; வேதங்களை அறிந்தவர்; கலைக் கடலைக் கரைகண்டவர்; ஆசையற்றவர்; பிடிவாதமும் கோபமும் மிக்கவர்; மதியால் விதியை வெல்பவர் என்றெல்லாம் புகழப் பெற்றவர். பொம்மைகள் போல் கொலுவீற்றிருந்த நவநந்தர்களை ஒழித்துக் கட்டி, மகதநாட்டை விடுவிக்கச் செய்யவேண்டும் என்று அவரும் உறுதி கொண்டிருந்தார். சந்திரகுப்தரோ இயற்கையிலேயே அரசுரிமையுள்ளவர்; மகாவீரர். இருவரும் சேர்ந்து மகத இராச்சியத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருந்தனர். தட்சசீலத்தில் யவன வீரனான அலெக்சாந்தரைச் சந்தித்ததிலிருந்து, சந்திரகுப்தருக்குத் தாமும்அவனைப்போல வெற்றி வீரராக விளங்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இராச்சியத்தைப் பிடித்துக்கொள்வதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டே இருந்தார் சாணக்கியர்.

அலெக்சாந்தர் கி. மு. 323 இல் பாபிலோனில் மரணமடைந்தபின், சந்திரகுப்தரும் சாணக்கியரும் பாஞ்சாலப் பகுதியில் நாடு நகரங்களை யெல்லாம் சுற்றி, எங்கும் தேசிய எழுச்சியைத் தோற்றுவித்தனர். மக்கள் அந்நியர் ஆட்சியைப் பூண்டோடு ஒழித்துவிட முன்வந்தனர். தட்ச சீலத்திலிருந்த யவனப் படை வெளியே துரத்தப்பட்டது. சந்திரகுப்தருக்குப் பல துணைவர்கள் சேர்ந்தார்கள். அவர் பெரிய படையைச் சேர்த்துக்கொண்டு மகத நாட்டிற் புகுந்து, நந்த வமிசத்தினரை அழித்து, பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றி விட்டார். அவர் மகத மன்னராக முடி சூட்டிக் கொண்டார். நந்தர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்களில் தங்கப் பணமாக மட்டும் 80 கோடி இருந்ததாம். ஒரு பணம் ரூபா 7 வீதம் இது ரூபா 560 கோடியாகும்.

அலெக்சாந்தருக்குப் பின்னர் அவனுடைய பழைய தளபதிகளில் ஒருவனான செலியூகஸ் ஆசியா மைனருக்கும் இந்தியாவுக்கும் இடையிலிருந்த நாடுகளை ஆண்டுவந்தான். தானே ‘உலகின் சக்கரவர்த்தி’ என்று அவன் பட்டம் சூட்டிக் கொண்டிருந்தான். அவனை ‘நிகேடார்’ (வெற்றியாளன்) என்றும் சொல்வதுண்டு. அந்த வீரன் இந்தியாவின் வடபகுதியில் சிந்து நதியைத் தாண்டிப் படையெடுத்து வந்தான். சந்திரகுப்தர், 4,00,000 காலாட் படையினர், 20,000 குதிரை வீரர், 4,000 தேர்கள், 6,000 யானைகள் கொண்ட படையுடன், அவனை எதிர்த்துப் போரிட முன்வந்தார். செலியூகஸிடம் 1,50,000 வீரர்கள் இருந்தனர். தட்ச சீலத்தில் நடைபெற்ற போரில் யவனப் படையினர் கூட்டம் கூட்டமாக வதைக்கப்பட்டனர். சந்திரகுப்தரே வெற்றி பெற்றார்.

செலியூகஸ் அவருடன் சமாதானம் செய்து கொண்டான். தன் ஆட்சியிலிருந்த ஆப்கனிஸ்தானம், பலுசிஸ்தானம் முதலிய நான்கு நாடுகளை அவருக்கு அளித்து விட்டுத் திரும்பிச் செல்ல அவன் இசைவு தெரிவித்தான். அதன்படி கி. மு. 303 இல் தட்சசீலத்தில் உடன்படிக்கை நிறைவேற்றப் பெற்றது. சந்திரகுப்தர் செலியூகஸின் மகளையும் மணந்துகொண்டு, அவனுக்கு 500 யானைகளைப் பரிசாக அளித்தனுப்பினார். முன்னர் அலெக்சாந்தரின் தலைமையில் இந்தியாவுக்கு வந்து போரிட்ட தளபதிகளில் செலியூகஸ் ஒருவன். போரில் யானைகளின் வலிமையை அவன் நேரில் பார்த்தறிந்தவன். மேலும் அவனுக்கு அப்பொழுது யானைகளின் உதவி மிகவும் தேவையாயிருந்தது. ஆசியா மைனரிலும் சிரியாவிலும் ஆண்டுகொண்டிருந்த ஆன்டி கோனஸைத் தான் எதிர்த்து விரட்ட அவை பயன்படும் என்று கருதி அவன் அவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினான்.

நாளடைவில் ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியா முழுதும் சந்திரகுப்தர் வசமாயிற்று. தென் திசையில் சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களாக இருந்த தமிழகம் மட்டும் தனித்திருந்தது. கீழைக் கடற்கரையை ஒட்டி மகாநதிக்கும் கோதாவரி நதிக்கும் இடையிலிருந்த கலிங்க நாடு முன்னரே மகத மன்னனுக்கு அடங்கிக் கப்பம் கட்டி வந்து கொண்டிருந்தது. சந்திரகுப்தர், பாடலியைத் தாக்கு முன்னரே கலிங்க மன்னனுடன் ஒப்பந்தம் பேசி, உதவி பெற்றிருந்தார். அதன்படி அவர் மகதத்தைத் தாக்குகையில்,கலிங்க மன்னன் தன் படையுடன் சென்று, அவருக்கு உதவியாகத் தென் பக்கத்திலிருந்து போர் செய்தான். எனவே அவனும் அவர் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருந்தான். இவ்வாறு வரலாற்று முறையில் இந்திய நாட்டின் முதல் பேரரசராக அமர்ந்தவர் சந்திரகுப்தரே யாவர்.

தலைநகரான பாடலியில் இருந்துகொண்டு அந்தப் பேரரசை ஆள்வதற்குரிய திட்டங்களை அவரும் சாணக்கியரும் சேர்ந்து உருவாக்கி நிறைவேற்றினார்கள். பேரரசு நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பெற்று, மூன்று மாநிலங்கள் சக்கரவர்த்தியின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டு வந்தன. இந்தப் பிரதிநிதிகள் யாவரும் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய மாநிலம் பேரரசர் நேரிடையான ஆட்சியில் இருந்தது. வடமேற்கு மாநிலத்திற்குத் தட்சசீலநகரும், மேற்கு மாநிலத்திற்கு உச்சயினி நகரும், தெற்கு மாநலத்திற்குக் கிர்னார் நகரும் தலைநகர்களாக விளங்கின. இமயம் முதல் தமிழகம் வரையிலும், மேலைக் கடலிலிருந்து கீழைக் கடல்வரையிலும் பரவியிருந்த அந்தப் பேரரசில் பாடலிபுத்திரத்திலிருந்து பேரரசரின் அனுப்பிய ஆணைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கப்பட்டன. இன்றியமையாத நிகழ்ச்சிகள் யாவும் எல்லா இடங்களிலிருந்தும் அவருக்குச் செய்திகளாக வங்து கொண்டேயிருந்தன. அரசாங்க அதிகாரிகள் அனைவரும், அச்சத்துடனும் பக்தியுடனும், தத்தம் கடமைகளை நிறைவேற்றி வந்தனர். நாடெங்கும் ஒற்றர்கள், மக்களும் அதிகாரிகளும் அவரவர் கடமைகளை நிறைவேற்றி வருவதுபற்றி உளவறிந்து தெரிவித்து வந்தனர். உட்பகைகள் ஒடுக்கப்பெற்றன. நால்வகைப் படைகளும் பெருக்கப்பட்டன.

நம் காலத்தில் பெரிய அரசாங்கம் ஒன்று செய்துவரக்கூடிய பணிகளில் பெரும்பாலானவை சந்திரகுப்தர் காலத்திலேயும் நடந்து வந்தன என்பது வியக்கத் தக்கதாம். பின்னர்ப் புகழோடு ஆண்ட பேரரசராகிய அக்பர் காலத்தில் இருந்ததைவிட அரசாங்கம் அப்பொழுது செம்மையாக இருந்தது என்று கூறப்பட்டிருக்கின்றது. பயிர்த்தொழிலுக்கு வேண்டிய வசதிகள் யாவும் செய்யப் பெற்றன. நிலங்களை அளந்து, தீர்வை விகிதங்கள் முறைப்படி தீர்மானிக்கப்பெற்றன. உணவுப் பொருள்கள், கடைகள், சந்தைகள், தொழிற்சாலைகள், மாட்டுப் பண்ணைகள், முதலியவைகளை யெல்லாம் அரசாங்கம் கண்காணித்து வந்தது. தானியங்களைக் குவித்துச் சேர்த்து வைத்துக்கொண்டு கொள்ளை இலாபம் பெறுவதும், உணவுப் பொருள்களில் கலப்புச் செய்வதும் தடை செய்யப் பெற்றன. வாணிகப் பொருள்களுக்கு வரிகள் வாங்கப் பெற்றன. சுகாதாரத்தைக் கவனிக்கவும், மருத்துவ நிலையங்களை அமைத்து நடத்தவும் தனிப் பிரிவுகள் இருந்தன. திக்கற்றவர், விதவைகள், நோயாளர், தொழில் செய்ய முடியாத உடற்குறையுள்ளவர்கள் முதலியவர்களுக்கு அரசாங்கம் உதவிநிதி அளித்து வந்தது. எதிர்பாராத பஞ்சம், பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களுக்கு உதவி புரிவதற்காக அரசாங்கம் ஆங்காங்கே தானியங்களைக் கொள்முதல் செய்து சேர்த்துவைத்திருந்தது.

நாடெங்கும் பெரிய நகரங்களில் நகராட்சி மன்றங்கள் நிறுவப் பெற்றன. அவற்றை முறைப்படுத்தி கடத்துவதற்குரிய ஆணையாளர் நியமிக்கப் பெற்றிருந்தனர். துறைமுகங்களைக் கண்கானிக்கவும், கடல் வாணிகத்தைப் பெருக்கவும் வழிகோலப்பட்டது. தலைநகரான பாடலியுடன் பல இராச்சியங்களும் நெருங்கிய தொடர்பு கொள்ளவும், வாணிகம் பெருகவும், படைகளின் நடமாட்டத்திற்கு உதவவும் பெருஞ் சாலைகள் பல அமைக்கப்பெற்றன. இடையிடையே யாத்திரிகர்கள் தங்குவதற்குரிய விடுதிகளும் நிறுவப்பட்டன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்ததால், ஆடம்பரப் பொருள்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. ஆடல், பாடல், நாடகங்கள் முதலியவைகளும் பெருகி வளர்ந்தன.

இத்தனை வெற்றிகளும் சந்திரகுப்தரின் இருபத்தைந்து ஆண்டு ஆட்சியில் ஏற்பட்டதைப் போன்ற நிகழ்ச்சியை வரலாற்றில் காண்பது அரிது. பேரரசுத் தேவதை மூடனிடம் நெடுநாள் தங்கியிராது; அது பயங்கொள்ளியைப் பார்த்ததும் பரிகசித்து நீங்கும்; வீரன் ஒருவனுக்கே அஃது அடங்கிக் கிடக்கும் என்பர். சந்திரகுப்தர் அத்தகைய வீரராயிருந்ததால், அவரிடம் பேரரசு நிலைத்து நின்றது. அத்துடன் அவருக்கு ஆலோசனை கூறி ஆட்சிபுரிய உதவிய அமைச்சர் நுண்ணறிவு, வன்மை, அன்பு ஆகியவைகளிலே சிறங்து விளங்கிய சாணக்கியர். அவர் இடம், பொருள், ஏவல் எல்லாவற்றையும் ஆராய்ந்து, தக்க சமயத்தில் தக்க உபாயம் கூறி வந்ததாலும், அதனை ஏற்றுச் சந்திரகுப்தர் நிறைவேற்றி வந்ததாலும், அவரது ஆட்சி மிக உயர்ந்த நிலையை அடைந்தது. சாணக்கியர் மன்னர் மன்னரான சந்திரகுப்தரின் முதல் அமைச்சராயிருந்த போதிலும், மிக்க எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. பண்டை நூல் ஒன்றில் அவர் குடியிருந்த வீட்டின் வருணனை காணப்படுகின்றது; இடிந்து போன சுவர்கள், மேலே உலர்வதற்காகப் போடப்பெற்றிருந்த பலாசங் குச்சிகளால் வளைந்து அழுந்திப் போன கூரை, உட்புறம் மாணவர்கள் சேர்த்து வைத்திருந்த தருப்பைக் கட்டுகள், உலர்ந்த காட்டுவரட்டிகளை உடைத்துத் தூளாக்க உதவும் ஒரு கல் துண்டு ஆகிய இவையே அவர் வீட்டில் காணப்பட்டன.

சாணக்கியர் பாடலியில் ஆண்டு வந்த நந்தர்களை ஒழிக்க வேண்டும் என்று சூள் உரைத்தார் என்றும், அது நிறைவேறும்வரை தம் சிகையை முடிப்பதில்லை என்று அவிழ்த்து வைத்திருந்தார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் சோழியராதலால் முன் குடுமி உள்ளவர். ஆகவே அவிழ்ந்து கிடந்த அக்குடுமி பார்ப்பவர்களுக்கெல்லாம் தெளிவாய்த் தெரியும். நந்தர்கள் அழிந்து, சந்திரகுப்தரின் ஆட்சி ஏற்பட்டதும், அவர், “சினமாகிய தீயின் புகைக் கொடி எனது சிகை! அது நந்த வமிசத்துக்குக் கரு நாகம்! நந்த முளைகளை எதிர்த்து நீறாக்கியது இந்தச் சினத் தீ! பூமியின் நோய்களைப் போன்ற நந்தர்கள் ஒன்பது பேர்களும் என்னால் வேரோடு களைந்து எறியப்பட்டார்கள். பொய்கையிலே நிலைத்து நிற்கும் தாமரைபோல், நரேந்திரராகிய சாணக்கியரிடத்திலே திருமகள் நிலைத்து நிற்கிறாள்!” என்று பெரு ஆனால் சுகற்பநந்தனிடம் அமைச்சராயிருந்த சுபுத்தி சர்மன் என்ற திறமைமிக்க அறிவாளியிடம் அவர் பகைமை பாராட்டாமல், அவரைச் சந்திர குப்தரின் அமைச்சரவையில் அமரச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். சுபுத்திக்கு இராட்சசர் என்றும் ஒரு பெயருண்டு. அவர், நந்தர்கள் அழிந்த பின்பும், அவர்களிடம் கொண்டிருந்த அன்பு மாறாமல், சந்திரகுப்தரை எதிர்த்து மறைவாக வேலைசெய்து கொண்டிருந்தார். அதைப் பற்றி அவ்வப்பொழுது தெரிந்துகொண்ட சாணக்கியர் அவர் திட்டங்களை யெல்லாம் தகர்த்து, அவரை இணங்க வைக்க ஏற்பாடு செய்தார். அதற்காக இராட்சசரின் உயிர் நண்பரான சந்தன தாசர் என்ற வைசியர் ஒருவரைப் பிடித்துத் தூக்கில் போடப்போவதுபோல் அவர் பாவனை செய்தார். சாணக்கியரின் உட்கருத்தை அறியாத அந்த உத்தமர், உண்மையிலேயே தாம் தம் நண்பருக்காக உயிர்த்தியாகம் செய்யப் போவதாக எண்ணியிருந்தார். அப்பொழுது அவர் மைந்தன் வந்து கொலைக் களத்திலே அவரைக் கண்டு வணங்கினான். அவருடைய மரணத்திற்குப் பிறகு தான் என்ன செய்யவேண்டும் என்று வினவினான். சந்தன தாசர் வேறொன்றும் சொல்லவில்லை. “குழந்தாய்! நீ சாணக்கியன் இல்லாத ஒரு நாட்டிற்குச் சென்று வாழ வேண்டும்” என்று மட்டும் சொன்னாராம். பின்னர் இராட்சசரும் அங்கு வந்ததும், சாணக்கியர் அவரிடம் பேசி, சந்திரகுப்தரின் அமைச்சுப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளும்படி செய்து, சந்தன தாசரை விடுதலை செய்யும்படி பணித்தார் என்பது கதை. சாணக்கியரின் மேலான நோக்கம் தெரிந்த பின்பு, சந்தனதாசர் தம் மகனிடம், சாணக்கியர் இல்லாத நாட்டிலே குடியிருக்க வேண்டா என்று சொல்லியிருப்பார். சாணக்கியரைப் பற்றிய இத்தகைய விவரங்களை ‘முத்ரா ராட்சசம்’ என்ற உயர்ந்த ஓர் அரசியல் நாடகமாக விசாகதத்தர் என்ற ஆசிரியர் வடமொழியில் இயற்றியுள்ளார். அது தமிழிலும் வெளிவந்துள்ளது.

ஐரோப்பாவுக்கே நாகரிகத்தை அளித்த யவன நாட்டிலே அலெக்சாந்தரின் குருவாக விளங்கிய அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் அந்தக் காலத்தில் அடிமைகளை வைத்துக்கொண்டு வேலை வாங்கும் முறைக்கு ஆதரவான வாதங்களைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் இந்தியாவில் வாழ்ந்த அரசியல் மேதை சாணக்கியர், அடிமைகளை வைத்திருக்கும் முறை காட்டு மிராண்டிகளுக்கே ஏற்றது என்றும், நாகரிக மக்களிடம் அதை ஒழித்தே தீர வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அரசியல், பொருளாதார முறைகளைப் பற்றிய அவர் கருத்துக்களை யெல்லாம் அவரது ‘அர்த்த சாத்திரம்’ என்ற நூலிலே காணலாம். வாணிகம், தொழில்கள், சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலைகள், நகராட்சி, சமூகப் பழக்க வழக்கங்கள், திருமணம், விவாகரத்து, பெண்களின் உரிமைகள், சொத்துரிமைகள், சுரங்கங்கள், பயிர்த் தொழில், பாசன வசதிகள், கடற்போக்குவரத்து, மரக்கலன்கள், மக்கள் தொகையைக் கணக்கிடுதல் முதலிய பல பொருள்களைப் பற்றியும் அது விரிவாகக் கூறுகின்றது. 2,000 ஆண்டுகட்கு முன்னரே அத்தகைய நூல் ஒன்று இந்தியாவில் இயற்றப் பெற்றது பெருமைக்குரியது.

சந்திரகுப்தருக்குப் பின் அவர் மைந்தர் பிந்துசாரர் மோரிய வமிசத்து இரண்டாம் பேரரசராகக் கி. மு. 298 இல் அரியணை ஏறினார். அவருக்கும் சாணக்கியர் ஆலோசனை கூறிவந்தார். வரலாற்றில் அவரைப் பற்றி அதிகமான விவரமில்லை. ஆயினும் அவரும் வீரராக விளங்கினார் என்றும், பல போர்களில் வெற்றி பெற்று, பகைவரின் எமன் என்று பொருள்படும் ‘அமித்ர காதா’ என்ற பட்டம் பெற்றார் என்றும் தெரிகின்றது. தக்காணத்தில் நெல்லூர் வரை அவர் வென்றிருக்க வேண்டும். ஏனெனில் அவருடைய மைந்தர் அசோகர் பட்டத்திற்கு வருகையில் அந்தப் பகுதியும் அவர் இராச்சியத்துடன் சேர்ந்திருந்தது.

பண்டைத் தமிழ் நூல்களில் மோரியர் தமிழகத்தின் மீதும் படையெடுத்ததாகக் கூறப்பெற்றுள்ளது.

‘கனைகுரல் இசைக்கும் விரைசெலல் கடுங்கணை
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு’

என்று மாமூலனார் பாடியுள்ளதிலிருந்து, மோரியர் வடுக மன்னருடைய படையின் உதவியுடன், தென்னார்க்காட்டிலுள்ள மோகூர் நகர்வரை வந்ததாகத் தெரிகிறது. முதலில் மோகூர் மன்னன் பணிய மறுத்த போதிலும், பின்னர் மோரியர் இரண்டு இலட்சம் வீரர் அடங்கிய பெரும்படையுடன் வந்து தாக்கியதாகவும், மன்னன் பொதிகை மலைப் பக்கம் சென்றதாகவும், மோரியப் படையும் அதுவரை சென்றதாகவும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இந்தப் படையெடுப்பு சந்திரகுப்தர் காலத்தில் நடந்திருக்க முடியாது. வட இந்தியாவிலேயே அவர் தமது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. மேலும் அவர் கலிங்க மன்னன் தமது ஆணையை ஏற்றால் போதும் என்று, அவனிடம் சமாதானமாகவே இருந்து வெற்றியடைந்தார். ஆந்திர மன்னரிடமும் தமிழக மன்னரிடமும் அமைதியாகவே அவர் நட்புக் கொண்டிருந்தார். பின்னர் அசோகர் காலத்திலும் தமிழகத்தின்மீது படையெடுப்பில்லை. ஆகவே பிந்துசாரர் காலத்திலேயே மோரியப் படை இந்தப் பக்கம் வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படை வென்ற இடங்களைக் கைப்பற்றி வைத்துக் கொள்ளவில்லை என்று வரலாற்று ஆசிரியர் வி. ஏ. ஸ்மித் குறித்துள்ளார்.

சந்திரகுப்தர் காலத்தில் ஏற்பட்ட யவன நாட்டு உறவைப் பிந்துசாரர் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார். யவனத் தூதரும், எகிப்திய மன்னன் தாலமி அனுப்பிய தூதரும் பாடலியில் தங்கினர். தந்தையார் அளித்த பேரரசை எல்லாத் துறைகளிலும் வலிமைப் படுத்தி, உறுதி பெறச் செய்தார் பிந்துசாரர்.

பிந்துசாரருக்குப் பின்னர் அவருடைய மைந்தர் அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால், அரசுரிமை பற்றிய ஏதோ பூசல் காரணமாக, நான்கு ஆண்டுகள் காத்திருந்த பின்பே, அவர் முடிபுனைந்தார்.