அலெக்சாந்தரும் அசோகரும்/அசோகரின் அருங்குணங்கள்

விக்கிமூலம் இலிருந்து

7. அசோகரின் அருங்குணங்கள்

இந்திய வரலாற்றிலேயே அசோகரின் காலம் பொன்னேட்டில் எழுதத் தக்க பெருமையுடையதாகும். நம் தாயகத்தின் தவச் செல்வமாய் விளங்கிய மனித குலமாணிக்கம் ஜவகர்லால் நேரு அவர்கள் பேரரசர் அசோகரின் புகழ் நிரம்பிய வரலாற்றை இந்தியவரலாற்றின் புகழ் மண்டிய பகுதி என்று சுட்டிக்காட்டியுள்ளார். ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்னும் குடியரசுக் கொள்கையை மேற் கொண்ட ஜவகர் அசோகரின் கொள்கைகளையும் செயல்களையும் பாராட்டியுள்ளார். அசோகர் பேரரசராக இருந்தும் மனிதப்பண்பு நிரம்பியவராக இருந்ததால் முடிமன்னரை வெறுக்கும் ஜவகர் அசோகரிடம் மட்டும் பெருமதிப்புக் கொண்டிருந்தார்.

நல்லரசர் ஒருவருக்கு வேண்டிய அருங்குணங்கள் யாவும் அசோகரிடம் ஒருங்கே பொருந்தி இருந்தன.

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு”

என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க, அச்சமில்லாமை, கொடுக்கும் தன்மை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு குணங்களும் அசோகரின் பிறவிக் குணங்களாகவே அமைந்திருந்தன என்று கூறலாம். இப்பண்புகளாலேயே அவர் எடுத்த செயல்கள் யாவற்றிலும் வெற்றி மாலை சூடினார். இந்தியாவில் பரந்த நிலப்பரப்பை ஆண்ட பெருமன்னருள் அசோகர் தலைசிறந்தவராக எண்ணப்படுகிறார்.

புவியாளும் மன்னர்க்கு வேண்டிய இன்றியமையாத குணங்கள் காட்சிக்கு எளியவராக இருத்தலும் கடுஞ்சொல் அற்றவராக இருத்தலும் ஆகும். அசோகர் தம் குடிமக்களைத் தம் குழந்தைகளைப் போலப் பாராட்டி என்றும் எளிமையாகவே நடந்து கொண்டார். பொது நன்மையை அன்புமுறையிலேயே வளர்க்க எண்ணிய அசோகர், தம்மைக் கண்டு முறையிட விரும்பும் குடிமக்கள் தம்மை எந்த நேரத்திலும் வந்து காண இசைவளித்தார். “நான் உண்ணுகிறேன்; உறங்குகிறேன் என்று பாராமலும், கொலுமண்டபத்தில் இருக்கிறேன், மாதர்களோடு இருக்கிறேன், தோட்டங்களில் உலவிவருகிறேன் என்று பாராமலும் எல்லா நேரங்களிலும் அரசியல் அலுவலர்கள் நாட்டு நிகழ்ச்சிகளை என்னிடம் கூறவேண்டும்” என்று அவர் ஆணையிட்டிருந்தார். அசோகரின் எளிமைக்கு இதைவிடச் சிறந்த சான்று வேண்டுமோ?

அசோகர் அன்பே உருவமானவர்; ஆற்றிவுள்ள மக்களிடம் காட்டும் அன்பைப் போல ஐயறிவு உடைய உயிர்களிடமும் அவர் அன்பு காட்டினார். விலங்குகளுக்கு நோய்வந்தால் அவற்றுக்கு மருத்துவம் செய்வதற்காகத் தனியே உயர்மருத்துவ நிலையங்களை ஏற்படுத்தினார்; உயிர்களைப் பலியிடும் கொடுமையைப் போக்கினார். அசோகரின் அன்பு நெறி காரணமாக அவர் காலத்தில் மாமிச உணவு உண்டவர்களும் மரக்கறி உணவை உண்ணலானார்கள்.

‘அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே’

என்பது தாயுமானவரின் வாக்கு. அவ்வாக்கிற்கிணங்க அசோகர் தம் நாட்டுக் குடிமக்களின் பொதுநலப் பணிகளில் பேரார்வம் காட்டிவந்தார். அவரது அறப்பணியால் நாடெங்கும் சாலைகள் அமைந்தன; சோலைகள் தழைத்தன; நீர் நிலைகள் தோன்றின; மருத்துவ நிலையங்கள் மலர்ந்தன; கல்வி நிலையங்கள் ஏற்பட்டன; பெண் கல்வியும் எங்கும் தழைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அசோகர் என்றும் தற் பெருமை கொண்டதில்லை. பெரிய நிலப்பரப்பை ஆளும் பேரரசராக இருந்த போதிலும் அவர் தம்மைப் பேரரசர் என்று கூறிக் கொண்டதேயில்லை. ‘தேவர்களுக்கு உகந்த பிரியதரிசி மன்னர்’ என்றே தம்மைப் பலவிடங்களிலும் கூறிக்கொள்வார்.

அசோகர் பௌத்த சமயத்தவராயினும் எந்தச் சமயத்தவரிடமும் வெறுப்புக் கொண்டதில்லை. ஒருவர் தம் சொந்த சமயத்தைப் புகழ்வதற்காக மற்றொருவர் சமயத்தைக் குறைகூறுவது தவறு என்று அசோகர் கருதினார். எல்லாச் சமயங்களின் சமரசமே மேலானது என்று அனைவருக்கும் அறிவுரை கூறினார். அவர் காலத்தே பலவகை சமயத்தினரும் ஒன்றுபட்ட உள்ளத்துடன் அன்புற்று இன்புற்று வாழ்ந்து வந்தனர்.

விடா முயற்சி வெற்றிக்கு அடிப்படை என்னும் சீரிய கொள்கையைச் சிரமேற் கொண்டவர் அசோகர். மக்கள் எப்போதும் எறும்பைப் போல் உழைத்த வண்ணமாகவே இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். அவர் தம் கல்வெட்டுக்களில் முயற்சியின் சிறப்பைக் குறித்து வரைந்துள்ளார். அல்லும் பகலும் விழிப்போடிருந்து வேலை செய்வதே அவருக்கு மனநிறைவை அளித்தது.

அசோகர் பகைவருக்கும் அன்பு காட்டும் பண்புடையவர். கலிங்கப் போரில் ஆயிரக்கணக்கான பகைவர்களைப் பழிவாங்கும் எண்ணமின்றி விடுதலை செய்தார். தம் அதிகாரிகளுக்கும் பகைவருக்குத் தீங்கு செய்யலாகாது என்று அறிவுரை கூறினார். எல்லைப்புற மக்கள் தமக்காகச் சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை என அறிக்கை வெளியிட்டமை இவ்வுண்மையைப் புலப்படுத்தும்.

அசோகர் ஒரு கலைப்பிரியர். விகாரங்களும் தூண்களும் அவர் காலத்தில் சிறப்பாகக் கட்டப்பட்டன, நாடகக் கலையும் நாட்டியக் கலையும் வளர்ச்சியடைய அசோகர் வேண்டிய ஏற்பாடுகளை விருப்புடன் புரிந்தார். பலவகைக் கலைஞர்களும் அவரது ஆட்சியில் ஆதரிக்கப்பட்டார்கள்.

இங்ஙனம் அருங்குணங்கள் பலவற்றுக்கும் உறைவிடமான அசோகரின் நீதியும் நேர்மையும் மிக்க ஆட்சியில் குடிமக்கள் எல்லாரும் வளமெல்லாம் நிறைந்து அமைதியும் பெற்று வாழ்ந்தார்கள். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெருகி இன்புற்று வாழ்ந்தார்கள்.

‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்னும் பொன் மொழிக் கிணங்கக் குடிமக்கள் அரசரைத் தெய்வமாகப்போற்றி அவர் அறிவுரைப்படி நடந்தனர். அசோகரின் புகழ் மணம் அவனி யெங்கும் பரவியது. சரித்திரச் சோலையிலே அசோகரின் வரலாறு என்றும் வாடாமலராகப் பூத்துக் குலுங்கும் என்பதில் ஐயமில்லை.