உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாந்தரும் அசோகரும்/ஆட்சி முறையும்

விக்கிமூலம் இலிருந்து
444174அலெக்சாந்தரும் அசோகரும் — 6. ஆட்சி முறையும் சமுதாயமும்தியாகி ப. ராமசாமி

6. ஆட்சி முறையும் மக்கள் வாழ்க்கையும்

அசோகரது பேரரசைப் போன்ற விரிந்த எல்லைகளுடைய பேரரசு இந்தியாவில் எக்காலத்தும் ஏற்பட்டதில்லை. இக்காலத்திலுள்ள ஆப்கானிஸ்தானம், பலுசிஸ்தானம், சிந்து, கச்சு, காஷ்மீர், நேப்பாளம், தமிழகம் நீங்கலாக மற்ற இந்தியா முழுதும் அந்தப் பேரரசுக்குள் அடங்கியிருந்தன. திபெத்து நாட்டில் ஒரு பகுதியும், அசோகர் ஆட்சிக்கு உட்பட்டதாகவும், அவர் அந்நாட்டிற்கும் எழுந்தருளியிருந்ததாகவும் அந்நாட்டுக் கதைகள் கூறுகின்றன. அஸாம் மட்டும் தனி அரசாக இருந்து வந்தது.

பேரரசு முழுதும் பெருவேந்தரின் ஆட்சியிலேயே இருந்தது. அவருக்கு மேல் எவரும் இல்லாத நிலையில், முடிவான அதிகாரங்கள் அனைத்தும் அவரிடமிருந்தன. ஆகவே தோற்றத்திற்கு அவர் சர்வாதிகாரியாயிருந்தார். ஆனால் நடைமுறையில் இந்தியாவில் அப்படி இருப்பதற்கில்லை. பேரரசரும் அறநூல் நெறிகளுக்குக் கட்டுப்பட்டவர். இக்காலத்து முறைப்படி சட்டங்கள் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட நூல்களாக அச்சிட்டு வைக்கப்பெறவில்லை; என்றாலும், அக்காலத்திலும் சட்டங்கள் இருந்தன. பல சமயத்தார்களும், சாதியார்களும், பல பிரதேச மக்களும் தொன்று தொட்டுப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களைக் கொண்டே சட்டங்கள் நிர்ணயிக்கப் பெற்றன. தருமம் பற்றியும், ஒழுக்கம் பற்றியும் பொதுவான விதிகளும் இருந்தன. இவற்றையெல்லாம் பேரரசர் தம் விருப்பப்படி, நினைத்தபோது தூக்கி எறிந்து விட முடியாது. மிகுந்த திறமையும், கல்வியும், கேள்வியும், நீதியும், மதிநுட்பமும் வாய்ந்த மந்திரிகளையும் எப்பொழுதும் புறக்கணித்துக் கொண்டிருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவில் ஒரு மத்திய அரசாங்கம் ஏற்படுவதற்கு முன்னர், கிராமங்களும் நகரங்களும் காரியங்களைப் பெரும்பாலும் தாமே நிறைவேற்றிக் கொண்டிருந்தன. ஓரளவில் அவற்றைக் குட்டிக் குடியரசுகள் எனலாம். அந்த நிலையில் பேரரசரின் அதிகாரம் ஒரு கட்டுக்குள் அடங்கியதே என்று சொல்ல வேண்டும். அதிலும் அசோகர் தாமாகவே தமக்கென்று மேலும் பல கட்டுப்பாடுகளை அமைத்துக்கொண்டார் என்பதை அவருடைய ஆணைகளிலிருந்து தெரிந்துள்ளோம். உண்ணும் பொழுதும், உறங்கும் பொழுதும்கூட அரசாங்கக் காரியங்களுக்காகத் தம்மிடம் எவரும் வரலாம் என்று அவர் விதித்திருந்தார்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தலைநகரான பாடலிபுத்திரத்தில் இருந்துகொண்டு மாபெரும் அரசை அசோகர் நெடுங்காலம் ஆளமுடிந்தது என்றால், அதற்குத் தேவையான சூழ்நிலைகளை அவர் அமைத்துக் கொண்டதாலேயே அது முடிந்தது. அவருக்கு அடுத்தாற்போல் அவருக்குப் பிரதிநிதிகளாக நான்கு மாநிலங்களில் நான்கு இளவரசர்கள் நியமிக்கப் பெற்றிருந்தார்கள். அவர்கள் வடக்கே தட்சசீலம், நடுவே உச்சயினி, கிழக்கே தொசலி, தெற்கே சுவர்ணகிரி ஆகிய நகரங்களில் தங்கியிருந்தனர். இந்த அரசப் பிரதிநிதிகளுக்கு அடுத்தாற்போல், அவர்களுக்குக் கீழே, இராஜூகர்களும், அவர்களுக்கு அடுத்தபடியில் பிரதேசிகர்களும் நியமிக்கப் பெற்றிருந்தனர். இவ்விருவகை அதிகாரிகளையும் சேர்த்தே 'மகா மாத்திரர்கள்' என்று அசோகர் குறிப்பிட்டிருப்பதாகக் கருதப்படுகின்றது. மகாமாத்திரர்கள் இக்காலக் 'கவர்னர்'களைப் போன்றவர்கள். அவர்களுக்குக் கீழே யுக்தர்கள், உப யுக்தர்கள், மற்றும் பல நிர்வாகிகளும், அலுவலர்களும் வேலை செய்து வந்தனர். அசோகர் ஆட்சியில் அரசாங்க இயந்திரம் எந்தப் பகுதியிலும் தூங்கி விழுந்துகொண்டிராமல் சுறுசுறுப்பாக அரசியலை நடத்தி வந்துள்ளது.

அசோகர், தாம் முடி புனைந்த கொண்ட பதினான்காம் ஆண்டில் தரும மகாமாத்திரர்களையும், அவர்களுக்கு வேண்டிய உதவி அதிகாரிகளையும் நியமித்தார். அவர் சாசனங்களில் விவரித்துள்ள ஒழுக்கங்கள், தருமங்களை, மக்கள் முறையாகக் கடைப்பிடிக்கவும், குறைகள் ஏற்பட்டால் திருத்தவும் வேண்டிய பணி அவர்களுக்கு இருந்தது. அரசருடைய குடும்பத்தவர்களையும் அவர்கள் கண்காணித்து வரவேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. மேலும் தண்டனை அடைந்தவர்களின் நிலைமையை அறிந்து பரிகாரம் செய்யவும் அந்த அதிகாரிகள் உதவியாயிருந்தார்கள்.

மாநிலத் தலைமை அதிகாரிகளாக விளங்கிய மகாமாத்திரர்களுக்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப் பெற்றிருந்தன. ஏனெனில் பல பிரதேசங்களில் அவர்களே மக்களின் நன்மை தீமைகளே விசாரித்துக் கண்டு கொள்ளக்கூடும். அரசப் பிரதிநிதிகள் மூலமே யன்றி, பேரரசரின் நேரிலும் அவர்களுக்கு ஆணைகள் பிறப்பிக்க முடியும். அரசப் பிரதிநிதிகளும், மகாமாத்திரர்களும் பின் பற்றவேண்டிய சட்டங்கள் எவை? வேறு பல அரசர்கள் சட்டங்களை அவ்வப்போது ஏட்டில் எழுதுவார்கள். ஆனால், அசோகரோ அவற்றைக் கற்களிலே நிரந்தரமாகத் தீட்டிவைத்து விட்டார். ஆகவே அவரிடம் இருந்த அதிகாரங்கள் சட்டம் இயற்றல், பாசன வசதிகள் அமைத்தல் முதலிய மராமத்து வேலை, தருமப் பாதுகாப்பு ஆகியவை. இவற்றுடன் பெளத்த சங்கத்திற்கும் அசோகரே சமயத் தலைவராயிருந்து கட்டளைகள் செய்து நிறைவேற்றி வந்ததால், அஃதும் அவர் பொறுப்பில் சேர்ந்தது. அங்த முறையில் அவர் அரசியல் தலைவராயும், சமயத் தலைவராயும் விளங்கி வந்தார். அடிக்கடி அவர் தாம் சுற்றுப் பிரயாணம் செய்ததுபோல் மற்றும் பெரிய அதிகாரிகளும் நாடெங்கும் சுற்றி வரவும் ஏற்பாடு செய்திருந்தார்.

பேரரசரின் அலுவல்களுக்கு உதவியாளராக இக்காலத்தைப் போல, அப்போது காரியதரிசிகள் இருந்தனர். அவருக்கு ஆலோசனை கூறுவதற்குப் 'பரிஷத்' என்று வழங்கப்பெறும் அமைச்சர் அவையும் இருந்தது. அவ்வவையில் எத்தனை அமைச்சர் இருந்தனர் என்பது தெரியவில்லை. பிந்துசாரர் காலத்தில் 500 அமைச்சர் இருந்தனராம்.

இராணுவத்தில், வழக்கம்போல், தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்களைக் கொண்ட நால்வகைப் படைகளும் இருந்தன. தேவைப்படும் போது போர்ப்பயிற்சி யுள்ளவர்களைப் படையாகச் சேர்த்துக் கொள்ளும் முறையின்றி, நிலையாக ஊதியம் கொடுத்துப் பெரும்படைகள் வைக்கப் பெற்றிருந்தன. ஆறுகளில் சென்று வந்த ஓடங்கள், கப்பல்களுடன், கடலில் செல்லும் பல கப்பல்களும் இருந்தன. போர் அலுவலகம் முப்பது பேர்களைக் கொண்ட ஒரு சபையால் நிருவகிக்கப் பெற்று வந்தது. யவன ஆசிரியர்கள் எழுதியுள்ள வரலாறுகளிலிருந்து படை வீரர் பயன்படுத்திய ஆயுதங்களையும், தேர்கள் போர்களிலே செலுத்தப்பட்ட முறைகளையும், சாதாரணமாகச் சாலைகளிலே மாடுகளால் இழுத்துச் செல்லப்பட்டதையும் காண முடிகின்றது.

ஆனால், அசோகரோ, கலிங்கப் போருக்குப் பின்னர் ஒரே ஆணையில் போரையே ஒழித்துவிட்டார். போர் முழக்கமே மீண்டும் கேட்காதபடி அவர் தடைசெய்து விட்டார். எங்கும் தரும பேரிகையின் முழக்கமே கேட்கவேண்டும் என்பது அவர் கட்டளையாகிவிட்டது.

அக்காலத்தில் பெருஞ் சாலைகள் பல அமைக்கப்பட்டன. பாடலிபுரத்திலிருந்து, தட்சசீலத்தின் வழியாக, சிந்துநதி வரை மிகப் பெரிய சாலை ஒன்று அமைந்திருந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் நிழல் தரும் மரங்கள் வளர்க்கப் பெற்றன. தொலைவு தெரிவதற்காக ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு தூண் வீதம் நிறுத்தப்பட்டிருந்தது. தூணுக்கு அருகில் ஒரு கிணறும், வழியில் பிரயாணிகள் தங்குவதற்கு வேண்டிய விடுதிகளும், கொட்டகைகளும் அமைக்கப்பட்டன. வேறு பல சாலைகளும் செம்மையான முறையில் அமைந்திருந்ததாலேயே அரச காரியங்கள் விரைவாகவும் செம்மையாகவும் நிறைவேற வாய்ப்பு இருந்தது.

அரசாங்க வருவாயில் இன்றியமையாத ஒரு பகுதி நிலவரி. மற்றும் வாணிகம், பொருள்கள் முதலியவற்றிற்கும் வரிகள் வாங்கப்பட்டன. செலவுகளில் இன்றியமையாதவை அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள், இராணுவத்திற்கான செலவு, பொதுத்துறைப் பணிக்காக ஒதுக்கப் பெற்ற தொகைகள் ஆகியவை. பேரரசின் குடும்பத்திற்காக வருவாயில் ஒரு சிறு பகுதியே பயன்பட்டிருக்கும். ஏனெனில், அவருக்கென்று தனி நிலங்கள் பல இருந்தன.

வலிமை மிக்க பேரரசு ஏற்பட்டதிலிருந்து சமுதாய நிலையிலும் அதற்கேற்ற மாறுதல்கள் ஏற்பட்டன. பயிர்த்தொழிலும் கைத்தொழில்களும் பெருகியதுடன், வாணிகமும் செழிப்படைந்தது தொழில்கள் தனித்தனிச் சங்கங்களாக அமைந்அதிகரித்தன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை அரசாங்கம் தணிக்கை செய்ததுடன், உடனுக்குடன் பார்வையிட்ட சரக்குகளின்மீது முத்திரையிட்டு விற்பனைக்கும் அனுப்பி வந்தது. விலை வாசிகளும், வணிகருக்குரிய இலாபங்களும் அவ்வப்போது வகுக்கப்பெற்றன. அளவுக்குமேல் வணிகர்கள் பெற்ற ஆதாயங்கள் அரசாங்கத்திற்கு உரியவை. வாணிகத்திற்கான சட்ட திட்டங்கள் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டன.

உலோகங்களின் பயன்கள் அக்காலத்தில் பெருகியிருந்தன. பய னு ள் ள பொருள்கள் செய்வதற்கு இரும்பும், செம்பும், ஈயமும் பயன்படுத்தப் பெற்றன. நகைகள் முதலியவற்றிற்காகவும், சேமித்துவைக்கவும் தங்கமும் வெள்ளியும் புழக்கத்தில் இருந்தன.

சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவில் சாதிகள் தொழில்களின் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவை நீடித்து நின்றன. புத்தர் காலத்தில் சாதிகளின் கொடுமை குறைந்திருக்கலாம். பெளத்தர்களில் சாதி வேற்றுமை இல்லை. அசோகர் காலத்தில் அவர், பிராணிகளை வதைத்து, யாகங்கள் செய்தல் முதலியவற்றைத் தடை செய்தார். ஒழுக்கமும் தருமமும் வளர வேண்டுவதே இன்றியமையாதது என்று அவர் கருதினார்.

இந்தியாவில், யவன நாட்டைப் போல அடிமைகளை விற்று, வாங்கி, வேலை வாங்கும் முறை இல்லை என யவன ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள். ‘இந்தியர்கள் எல்லாரும் சுதந்தர மக்கள்; அவர்களில் ஒருவர்கூட அடிமையில்லை’ என்று அரியன் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தனிச் சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம்; தங்கள் உழைப்புக்குத் தக்கபடி ஊதியமும் பெற முடியும். முன்னோர் தேடிவைத்த செல்வத்தை அவர்களுடைய பரம்பரையினர் பெறவும் உரிமை உண்டு. இங்ஙனம் அசோகரின் அரசியல் தன்னிகரற்றுத் தழைத்து விளங்கியது.