அலை ஓசை/எரிமலை/"சூரியா! போய்விடு!"
பன்னிரண்டாம் அத்தியாயம் "சூரியா! போய்விடு!"
டெலிபோனில் ராகவனுடைய குரலைக் கேட்ட அதே சமயத்தில் சீதாவின் முகத்தையும் சூரியா பார்த்தான். ஏதாவது தவறு நேர்ந்து விட்டதோ என்ற எண்ணத்தில் அவன் உள்ளம் குழம்பிற்று. ராகவன், "யார்? சூரியாவா?" எப்போது வந்தாய்!" என்று கேட்டதற்கு, "இன்றைக்குத் தான்!" என்று பதில் அளித்தான். "ஓகோ! நான் வருகிற வரையில் இருப்பாயல்லவா?" என்று ராகவன் கேட்டான். "ஆகா! இருக்கிறேன்!" என்றான் சூரியா. பிறகு, "அத்தங்கா! மாப்பிள்ளை பேசுகிறார்!" என்று சொல்லி டெலிபோன் ரிசீவரைச் சீதாவின் கையில் கொடுத்தான். ரிஸீவரைக் காதில் வைத்துக் கொண்டபோது சீதாவின் முகம் மேலும் பீதியைக் காட்டியது. ராகவன் என்ன கேட்டான் என்பது சூரியாவின் காதில் விழவில்லை. சீதா, "இல்லையே! இன்றைக்குத்தானே வந்திருக்கிறான்!" என்று சொன்ன போது அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளித்ததைச் சூரியா பார்த்தான். பிறகு, "சரி, சரி இருக்கச் சொல்கிறேன்!" என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை வைத்து விட்டாள். "அத்தங்கா! மாப்பிள்ளை என்ன சொன்னார்? எதற்காக உன் கண் இப்படி கலங்கியிருக்கிறது?" என்று சூரியா கவலையுடன் கேட்டான்.
சீதா சிறிது நேரம் எங்கேயோ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாள். பிறகு திடீரென்று விம்மிக்கொண்டே, "சூரியா! நீ போய்விடு! உடனே போய்விடு!" என்றாள். "அத்தங்கா! இது என்ன? எதற்காக என்னைப் போகச் சொல்கிறாய்? மாப்பிள்ளை இருக்கச் சொல்லியிருக்கிறாரே?" என்றான் சூரியா. "அதனாலே தான் உன்னைப் போகச் சொல்கிறேன். என்னிடமும் உன்னை இருக்கப் பண்ணும்படிதான் சொன்னார். ஆனால் எனக்கு என்னமோ பயமாயிருக்கிறது. சூரியா! நீ இன்றைக்கு இங்கே இருந்தால் ஏதாவது அபாயம் நேரிடும் என்று தோன்றுகிறது போய்விடு!" "நான் அவசரப்பட்டுக்கொண்டு போனால்தான் அபாயம் வரும். அவர் இரு என்று சொல்லியிருக்கும்போது நான் போகலாமா? வீண் சந்தேகத்துக்கு இடமாகாதா?" "சந்தேகம் இனிமேல்தானா வரப்போகிறது? உனக்கு ஒன்றுமே தெரியவில்லை, சூரியா! பச்சைக் குழந்தையாய் இருக்கிறாய்! நம் இருவர் பேரிலும் தகாத சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னை அவர் படுத்துவதெல்லாம் அதற்காகத் தான்." "சுத்த மூடத்தனம்; என் பேரில் மாப்பிள்ளைக்குச் சந்தேகமாவது! அவர் இப்போது வரட்டும்; நேரிலே கேட்டு விடுகிறேன். அவருக்கு உன்னைக் கலியாணம் செய்து வைத்ததே நான் தானே?" என்றான் சூரியா.
"நீதான்! நீ செய்த பெரிய தவறு அது தான்! நேரில் பார்த்துப் பேசுவதினால் அவருடைய சந்தேகத்தை நீ போக்கி விட முடியாது. ஏதாவது நீ பதில் சொன்னால் அவருடைய கோபம் அதிகமாகும். நீ இன்றைக்கு இங்கே இருந்தால் நிச்சயமாகக் கொலை விழும்! அந்தப் பாவத்துக்கு என்னை ஆளாக்காதே! தயவு செய்து போய்விடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!" சீதாவின் வெறி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகி வருவதைச் சூரியா கவனித்தான். ஆனாலும் அவனுக்குப் போக மனம் வரவில்லை. "சீதா! பதட்டம் வேண்டாம்! கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்! நான் இப்போது போய்விட்டால் அவருடைய சந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆகாதா?" என்றான். "உறுதிப்பட்டால் படட்டும் அவரையே தெய்வம் என்று நானெண்ணிக்கொண்டிருந்தும் எப்போது சந்தேகப்படுகிறாரோ, அப்போது அவருடைய சந்தேகத்தை உண்மையாக்கி விட்டால்தான் என்ன? அதனாலேயே என்னை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகும்படி உன்னைக் கேட்டேன்; ஆனால் நீ பயங்கொள்ளி, கோழை, ஸ்திரீகளின் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுவாயே தவிர, அதற்காக ஒரு துரும்பு எடுத்துப் போடமாட்டாய். உன்னை நான் நம்பியிருக்கவும் இல்லை. ஒரு நாளைக்கு இவரை விட்டு விட்டு ஓடவே போகிறேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்; என்னை வீண் கஷ்டத்துக்கு ஆளாக்காமல் உடனே போய்விடு. உன்னால் எனக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் அபகாரமாவது இல்லாமல் இருக்கட்டும்."
இனிமேல் தான் அங்கு இருந்தால் சீதாவின் இரத்த நரம்புகள் வெடித்து அவள் மூர்ச்சையாகி விடுவாள் என்று சூரியா பயந்தான். போய்விட வேண்டியதுதான்; ஆனால் அப்புறம் என்ன? சீதாவின் நிலையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? ஆம்; டெலிபோன் ஒன்று இருக்கிறதே! டெலிபோன் மூலம் நாளைக்கு விசாரித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு இராத்திரி நடக்கிறது நடக்கட்டும். நாளை தாரிணியுடன் யோசித்துக் கொண்டு சீதா விஷயமாக என்ன செய்கிறது என்று தீர்மானிக்கலாம். "சரி அத்தங்கா! நீ இவ்வளவு வற்புறுத்துகிறபடியால் நான் போகிறேன். அப்புறம் நாம் எப்போது சந்திப்பது? நாளைக்கு டெலிபோன் பண்ணட்டுமா?" "ஆமாம்; நாளைக்குப் பதினொரு மணிக்கு மேல் டெலிபோனில் பேசு எல்லாம் சொல்கிறேன்." "அத்தங்கா! ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். உனக்கு உண்மையில் உதவி தேவையாயிருந்தால் நான் அதற்கு பின்வாங்க மாட்டேன். உன்னுடைய மனதைத் திடப்படுத்திக்கொண்டு சொல்லு. என்ன சொல்கிறாயோ, அந்தப்படி செய்யத் தயாராயிருக்கிறேன். உன்னுடைய க்ஷேமந்தான் எனக்குப் பெரிது; தேச விடுதலை கூட அப்புறந்தான்!" என்றான் சூரியா.
இப்படிச் சூரியா சொன்னபோது அவனுடைய மனதில் உண்மையாக எண்ணியதையே சொன்னதாகக் கூற முடியாது. அவசரப்பட்டுச் சீதா ஏதாவது செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தினால் அவளைத் தைரியப்படுத்துவதற்காகவே சொன்னான்.ஆனால் சீதா, சூரியா சொன்னதை நூற்றுக்கு நூறு பங்கு உண்மையாகவே எடுத்துக்கொண்டு, "ரொம்ப வந்தனம், அம்மாஞ்சி! அபாய காலத்தில் உன்னுடைய உதவியைக் கோரும்படி அம்மா எனக்குச் சொல்லியிருந்தாள்; அவளுடைய வாக்கு வீண் போகவில்லை.நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே டெலிபோனில் பேசு. நானும் அதற்குள் நன்றாக யோசித்து வைக்கிறேன். அவசரப்பட்டு ஒரு காரியத்தைச் செய்தோம் என்ற பெயர் வேண்டாம். இல்லாவிட்டால் இப்போதே என்னை அழைத்துக்கொண்டு போகும்படி சொல்லியிருப்பேன்!" என்றாள் சீதா. சூரியா புறப்பட எழுந்தான் சீதாவிடமிருந்து எடுத்துக் கொண்ட கைத்துப்பாக்கியை முன்னமேயே கால்சட்டையின் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். 'இந்தப் பித்துக்குளிகளின் வீட்டில் துப்பாக்கி இருப்பது ஆபத்து. நம்மிடம் இருந்தால் ஒரு சமயம் பயன்படும்' என்று முடிவு செய்திருந்தான். அதன்படி கைத்துப்பாக்கியுடன் கிளம்பிச் செல்ல ஆயத்தமானான். அப்போது வாசலில் 'பாம்' 'பாம்' என்ற சத்தம் கேட்டது.
மோட்டார் கார் 'விர்' என்று வேகமாக வந்து வீட்டு வாசலில் நின்றது சீதாவும் சூரியாவும் திகைத்து நின்றார்கள். ராகவன் வண்டியை வீட்டு முகப்பில் நிறுத்திவிட்டு இறங்கி 'விடுவிடு' என்று உள்ளே வந்தான். சூரியாவையும் சீதாவையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்த்தான். அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த குரோதம் அவனுடைய பார்வையில் ஒருவாறு தெரிந்தது. ஆனால் வாய் வார்த்தையில் குரோதத்தைக் காட்டிக் கொள்ளாமல், "என்ன சூரியா? புறப்படத் தயாராக நிற்கிறாய் போலிருக்கிறதே?" என்றான். "ஆமாம், மாப்பிள்ளை! போக வேண்டும் மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதல்லவா? நீங்கள் வந்ததும் புறப்படலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்" என்றான் சூரியா. "அதென்ன இத்தனை நேரம் கழித்து எங்கே போவாய்? பெரிய 'நைட் பர்ட்' (இராத்திரி சஞ்சாரப் பறவை) ஆகிவிட்டாய் போலிருக்கிறதே!" "நீங்களும் என் தோழனாகத் தான் இருக்கிறீர்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே?" என்று சூர்யா கொஞ்சம் துடுக்காகப் பதில் சொல்லி ராகவனுடைய கோபத்தைக் கிளறிவிட்டான். "நான் ஓரிடத்தில் மிக முக்கியமான வேலையாகப் போக வேண்டியிருந்தது."
"நானும் முக்கிய வேலையாகத் தான் போகவேண்டியிருக்கிறது. இன்று இராத்திரி சில சிநேகிதர்களைச் சந்திப்ப தாகச் சொல்லியிருக்கிறேன்." "அழகுதான்! இத்தனை நேரம் கழித்துச் சிநேகிதர்களைச் சந்திக்கவாவது! சந்தித்து? என்ன செய்வீர்கள் எங்கேயாவது கொள்ளையடிக்கப் போகிறீர்களா, என்ன?" "கொள்ளையடிக்கப் போகிறவர்களும் இராத்திரியில் போவார்கள்; அவர்களைப் பிடிக்கப் போகிறவர்களும் இராத்திரியிலே தான் போய் ஆக வேண்டும்? இந்தியா தேசத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் உங்களுக்குத் தெரியாதா, மாப்பிள்ளை? "எனக்கு எப்படித் தெரியும்? உன் அத்தங்காளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவளை நீ அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போகிறாய் அல்லவா...!" "அடிக்கடி நான் வந்து பார்ப்பதில்லையே? மூன்று மாதத்துக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தேன். அப்போது நீங்கள் வெளியூருக்கு போயிருந்தீர்கள், உங்கள் தாயார் இருந்தார் அவரைத் தரிசித்து விட்டுப் போனேன்." "அது கிடக்கட்டும், அப்பா! இப்போது நீ எங்கெங்கேயோ போய்விட்டு வந்தாயாம். மதராஸுக்குக் கூடப் போயிருந் தாயாம். அவ்விடத்து விஷயங்கள் எல்லாம் உன்னிடம் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன்? நீ போக வேண்டும் என்கிறாயே? இராத்திரி இங்கே தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகக்கூடாதா?"
"இல்லை ஸார்! நான் அவசியம் இப்போதே போக வேண்டும். மதராஸில் உங்கள் தாயாரையும் குழந்தையையும் பார்த்தேன். குழந்தை இங்கே வரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் வழியில் எனக்குப் பல ஜோலிகள் இருந்தபடியால் அவளை நான் அழைத்து வரவில்லை. மற்ற விவரங்கள் எல்லாம் இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்லுகிறேன். "இன்னொரு நாள் என்றால் என்றைக்கு?" என்று ராகவன் கேட்டான். "சௌகரியப்பட்டால் நாளைக்கே வருகிறேன்; இல்லாவிட்டால் மறுநாள் வருகிறேன். என்னுடைய பிரயாண விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் சொல்கிறேன்." "சரி; அப்படியானால் போய் வா! நாளைக்கு வருகிறதாயிருந்தாலும் இரவிலே தான் வருவாயாக்கும்!" "ஆமாம்; போலீஸ்காரர் கண்ணுக்குப் படாமல் வருவதாயிருந்தால் இராத்திரியில் தான் வரவேண்டியிருக்கிறது. என்னுடைய காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொந்தரவு எதுவும் விளைவதை நான் விரும்பவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? அதுவும் சாமானிய உத்தியோகமா?" "ஓஹோ! அவ்வளவு தயவு என் பேரில் வைத்திருக்கிறாயா? போகட்டும்! ராஜம்பேட்டை கிட்டாவய்யர் குமாரன் தலையில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்?"
"என் தலையில் எப்படி எழுதியிருக்கிறது; எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்!" "இப்படிப் போலீஸ்காரர்களுக்குப் பயந்து திருடனைப் போல் இராத்திரியில் ஒளிந்து திரிய வேண்டியிருப்பதைப் பற்றித் தான். இருக்கட்டும், சூரியா! உன்னுடைய சிநேகிதி தாரிணி எங்கே இருக்கிறாள்? அவளை நீ பார்ப்பதுண்டா?" சூரியா சீதாவின் முகத்தைப் பார்த்தான் அவளுடைய முகம் கொடூரமாவதைக் கவனித்தான். "தாரிணி இந்த ஊரிலேதான் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஒருவேளை பார்த்தாலும் பார்ப்பேன் ஆனால் நிச்சயம் சொல்வதற்கில்லை." "பார்த்தால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்றும் அவளை நான் சந்திக்க விரும்புவதாயும் சொல்லு; அவளுடைய இருப்பிடம் உனக்குத் தெரியுமா?" "பழைய இருப்பிடம் தெரியும் ஆனால் இப்போது தாரிணி அங்கே இல்லை. வேறு ஜாகைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறாளாம்." "பழைய ஜாகை எனக்குத் தெரியும்; புது இடம் தெரியாது. ஒரு நாள் பழைய டில்லியில் ஜும்மா மசூதிக்குப் பக்கம் நான் போய்க்கொண்டி ருந்தபோது தாரிணி மாதிரி ஒருத்தி போவது தெரிந்தது. அவளே தான் என்று நினைத்துப் பார்த்துப் பேசுவதற்காகப் போனேன். திடீரென்று அவள் குறுகலான சந்து ஒன்றில் புகுந்து அவசரமாகச் சென்று அங்கே ஒரு வீட்டுக்குள் புகுந்தாள். எப்படியும் அவளைப் பார்த்துவிடுவது என்று வீட்டுக் கதவை இடித்தேன். அந்த வீதி துருக்க வீதி போலிருக்கிறது.
நூறு முஸ்லீம்கள் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பி வருவது பெரும் பாடாகி விட்டது சூரியா! முதலில் நீங்கள் இந்த நாட்டிலிருந்து துருக்கர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லா விட்டால் நம் இந்திய தேசம் உருப்படப் போவதில்லை."நாங்கள் அப்படி நினைக்கவில்லை; முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்; நம் சகோதரர்கள் அவர்களை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்? வெள்ளைக்காரர்களை அடித்து விரட்டி விட்டால், அப்புறம்..." "அப்புறம் நீங்கள் வைத்ததுதான் சட்டமாயிருக்கும் அரசாங்கமே உங்கள் கையில் வந்துவிடும்." "அது எனக்குத் தெரியாது, மாப்பிள்ளை! சுதந்திரப் போரில் நாங்கள் எல்லாம் உயிர் துறக்க நேரிட்டாலும் நேரிடலாம். ஆனால் ஒன்று நிச்சயம் இந்த நாட்டு ஜனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவைக் கூடிய சீக்கிரம் ஆளப் போகிறார்கள். நேரமாகிவிட்டது; நான் போய் வருகிறேன்" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டுச் சென்றான். அவன் போவதைப் பொருட்படுத்தாமல் ராகவன் சோபாவில் உட்கார்ந்தபடி இருந்தான். ஆனால் சீதா சூரியாவின் பின்னோடு வாசல் வரையில் போனாள். வாசற்படிக்கு அருகில் வந்ததும், "சூரியா! என் தலை மேல் ஆணை! நாளைக்குக் கட்டாயம் எனக்கு டெலிபோன் பண்ணு!" என்று மெதுவான குரலில் கூறினாள். "சரி, அத்தங்கா!" என்றான் சூரியா.