அலை ஓசை/எரிமலை/"ஜப்பான் வரட்டும்!"
இரண்டாம் அத்தியாயம்
"ஜப்பான் வரட்டும்!"
அன்றிரவு சுமார் எட்டு மணிக்குச் சூரியா எதிர்வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டுச் சென்றபோது அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் அமரநாத் நின்று கொண்டிருந்தான். "வருக! வருக! சுதந்திர வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்று தமாஷ் செய்து கொண்டே சூரியாவின் கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனான் அமரநாத். கூடத்தில் போட்டிருந்த ஸோபாக்கள் ஒன்றில் உட்கார்ந்து வர்ண நூலினால் பூவேலை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண். இவர்கள் உள்ளே வந்ததும் அவள் எழுந்தாள். அமரநாத் அவளைப் பார்த்து, "சித்ரா! என் அருமை நண்பன் சூரியாவை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். சூரியா! இவள்தான் என்னை மணம் புரிந்த பாக்கியசாலி சித்ரா. பெயர் சித்ராவாக இருப்பதற்கேற்பச் சித்திரக் கலையில் மிகத் தேர்ந்தவள். அணில் போட்டால் கிட்டத்தட்ட ஆடு மாதிரி இருக்கும்!" என்று சொன்னான். சூரியா சிரித்துக்கொண்டே, "ஆடு போட்டால் எப்படி இருக்கும்?" என்று கேட்டான். சித்ரா பளிச் சென்று, "ஆடு போட்டால் அமரநாத் மாதிரி இருக்கும்" என்று கூறினாள்."பார்த்தாயா, சூரியா! இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? இந்த மாதரசியின் இதய கமலத்தில் எப்போதும் எழுந்தருளி யிருப்பது இந்த அமரநாத் என்று தெரிகிறதல்லவா! ஆகா! என்னைப் போன்ற பாக்கியசாலி யார்?" என்றான் அமரநாத். "குடியிருக்க வீடு கிடைப்பதுதான் இந்தக் காலத்தில் கஷ்டமாயிருக்கிறதே! ஒருவருடைய இதய கமலத்தில் இன்னொ ருவர் குடியிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்!" என்றாள் சித்ரா. இந்தத் தம்பதிகளின் அன்யோன்ய உல்லாசப் பேச்சைக் கேட்ட சூரியா, 'புருஷன் மனைவி என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்?' என்று எண்ணிக் கொண்டான். வெளிப்படையாக, "அமரநாத்! உங்கள் மனைவியைப் பற்றி லலிதா வர்ணித்திருந்ததெல்லாம் சரிதான்!" என்று சொன்னான். "லலிதா என்பது யார்?" என்று சித்ரா ஒரு கேள்வி போட்டாள். "இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எதிர் வீட்டில் இருக்கும் என்னுடைய சகோதரி லலிதாவைத் தான் சொல்கிறேன்.""ஓகோ! எங்கள் சத்துரு வீட்டு நாட்டுப் பெண்ணையா? நான் அவளைப்பார்த்து எத்தனையோ வருஷம் ஆயிற்றே! என்னைப்பற்றி அவள் என்ன வர்ணித்திருக்க முடியும்?" என்று கேட்டாள் சித்ரா. "முன்னே எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன் அவளும் தாங்களும் ரொம்ப சிநேகிதம் என்று எழுதியிருந்தாள்." "சிநேகமும் இல்லை, ஒன்றுமில்லை; நாங்கள் ஜன்ம விரோதிகள் அல்லவா?" இதற்குள் அமரநாத், "சூரியா! முனிசிபல் எலெக்ஷன் விஷயமாக இந்த இரண்டு வீட்டுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டதல்லவா? அது விஷயத்தில் இவளுக்கு ரொம்பக் கோபம், அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறாள்!" "எனக்குக் கோபம் ஒன்றுமில்லை, மனிதர்கள் இப்படி மூடர்களாயிருக்கிறார்களே என்று பரிதாபந்தான். மொத்தத்தில் நமது தமிழ் நாட்டு ஜனங்கள் வாழத் தெரியாதவர்கள்.வாழும் வகை தெரிய வேண்டுமானால் கல்கத்தாவுக்குப் போய் வங்காளிகளுக்கு மத்தியில் இரண்டு வருஷமாவது இருந்துவிட்டு வரவேண்டும்!" என்றாள் சித்ரா. "நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். தமிழ்நாட்டார் மற்றவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்க முடியும்?" என்றான் சூரியா. "இதைக் கேள், சூரியா! எலெக்ஷன் சண்டைக்குப் பிறகு இவளை இங்கே வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்ய முடியாது என்று தான் முக்கியமாக நான் கல்கத்தாவுக்குப் போனேன். போன பிறகு, ஏண்டாப்பா போனோம் என்று இருக்கிறது. இவளுக்கு வங்காளி நாகரிகத்தில் அத்தனை மோகம் பிறந்துவிட்டது. அதுவும் நேதாஜி சுபாஷ் மலாய் நாட்டில் சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறார் என்று தெரிந்த பிறகு இவளுக்கு ஒன்றுமே தலைகால் புரியவில்லை. ஆகாச விமானம் ஒன்று கிடைத்தால் என்னை இவள் பரிதவிக்கவிட்டு நேதாஜி போஸிடம் பறந்து போய்விடுவாள்!" என்றான் அமரநாத். இந்தச் சமயத்தில் வாசலில் ஆள்வரும் சத்தம் கேட்கவே, சித்ரா, "மாமனார் வருகிறார் போலி ருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே எழுந்து, மச்சுப்படி ஏறத் தொடங்கினாள். "நாளை ஆண்டு நிறைவுக்கு உங்களை வந்து லலிதா அழைப்பாள்! அவசியம் வரவேண்டும்" என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை உள்ளே வந்ததும், இளைஞர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள். "அப்பா! யார் பார்த்தீர்களா? அடையாளம் தெரிகிறதா?" என்று அமரநாத் கேட்டான். "ஓகோ! நம்ம சூரியா போலிருக்கிறதே! ஒருவேளை தவறாகச் சொல்கிறேனோ? கண் அவ்வளவு துல்லியமாக இல்லை; வயதாகி விட்டதல்லவா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "சூரியாதான், அப்பா! சூரியாவே தான்!" என்றான் அமரநாத். "நமஸ்காரம்" என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை அவருடைய ஆபீஸ் அறைக்குப் போய் விடுவார் என்று அமரநாத் நினைத்ததற்கு மாறாக அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார். வாலிபர்கள் இருவரும் உட்கார்ந்த பிறகு சூரியாவை அவர் மறுபடியும் உற்றுப் பார்த்தார். "ஆமாம், சூரியாதான்! என்ன ஓய்! சூரியநாராயண ஐயரே! நீர் எங்கேயோ ஆப்கானிஸ்தானத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்; மாஸ்கோவில் பார்த்ததாகச் சொன்னார்கள்; அப்புறம் ஸைகானுக்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்; கடைசியில் நம்ம ஊரிலே இருக்கிறீரே? இந்தியாவின் சுதந்திரம் எந்த மட்டில் இருக்கிறது? எங்கே கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறீர்?" என்றார். "மாமா! என்னைப்பற்றி இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்துக் கொண்டு, எந்த நாட்டுக்குப் போயிருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்து வைத்திருக்கிறீர்களே? அதற்காகச் சந்தோஷம், ஆனால் நான் எந்த அயல் நாட்டுக்கும் போகவில்லை. இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவிலே தான் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆப்கானிஸ்தானத்துக்கு ஏன் போக வேண்டும்?" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லாதேயும், ஓய் சூரியநாராயண ஐயரே. நேதாஜி போஸ் மலாய் நாட்டில்தானே சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறாராம்? அப்புறம், ஜயப்பிரகாச நாராயணன் நேபாளத்திலோ திபெத்திலோ இந்தியாவின் சுதந்திரத்தை ஸ்தாபித் திருப்பதாகச் சொல்கிறார்கள்! அதெல்லாம் பொய்யா?" "உண்மையில் இந்தியாவின் சுதந்திரம் ஆமத்நகர் சிறைச்சாலையில் காந்தி மகாத்மா, நேருஜி முதலிய தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது!" என்றான் அமரநாத். "சூரியநாராயண ஐயரே! அமரநாத் சொல்வதை நீர் ஒத்துக் கொள்கிறீரா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "மாமா! என்னைச் சூரியா என்று அழைத்தால்தான் இனிமேல் பதில் சொல்வேன். "சரி அப்பா, சூரியா! இப்போது சொல்லு! இந்தியாவுக்குச் சுதந்திரம் எந்த வழி மூலமாக வரப் போகிறதென்று நினைக்கிறாய்?" என்று தாமோதரம்பிள்ளை கேட்டார். "சொல்ல முடியாது மாமா! எந்த வழியினாலும் வரும்; எல்லா வழியி னாலும் வரும். ஆனால் வரும்போது அதைக் கைப்பற்ற ஜனங்கள் தயாராயிருக்க வேண்டும். இதற்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்வது தான் இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை..." "சுதந்திரத்துக்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்கிறதா? சூரியா! அது ஒருநாளும் முடியாத காரியம். நம்முடைய ஜனங்களைச் சுதந்திரத்துக்குத் தயார் செய்ய வேண்டுமானால் அதற்கு வழி என்ன தெரியுமா? ஜப்பான்காரன் படையெடுத்து வந்து இந்தியாவைப் பிடித்து ஒரு பத்து வருஷமாவது ஆட்சி நடத்த வேண்டும். நம்ம ஜனங்களுக்கு ஜப்பான்காரன் தான் சரி. அவன் உச்சிக்குடுமிகளையெல்லாம் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிச் சாதி வித்தியாசம், மத வித்தியாசம் எல்லாவற்றையும் அடியோடு ஒழிக்க வேண்டும். அரிசியும் பருப்பும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் சவுக்கினால் நாலு அடி அடித்து மாமிசமும் மீனும் சாப்பிடச் செய்ய வேண்டும். பத்து வருஷம் இப்படி ஜப்பானிய ஆட்சியிலே இருந்தால் இந்தியா சுதந்திரத்துக்கு லாயக்காகும்! என்ன சொல்கிறாய், சூரியா!" "நான் அதை ஒப்பவில்லை; ஜப்பான் ஆட்சியில் பத்து வருஷம் இருந்தால் அதற்குப் பிறகு இன்னும் 140 வருஷம் ஜப்பான் ஆட்சியிலே இருக்க நேரிடும். ஆனால் ஜப்பானியர்கள் அவ்வளவு மூடர்கள் என நான் நினைக்கவில்லை. இந்தியாவைத் தாங்கள் ஜயிப்பதற்குப் பதிலாக, நேதாஜி சுபாஷ்போஸுக்கு உதவி செய்து அவரைக் கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டவே பார்ப்பார்கள். இந்தியாவை ஜயித்து ஆள்வதைக் காட்டிலும் இந்தியாவைச் சிநேகமாக வைத்துக் கொள்வதுதான் ஜப்பானுக்கு அனுகூலம்." "ஜப்பானுக்கு எது அனுகூலம் என்று உமக்குத் தெரிந்திருக்கிறது, ஓய்! அது ஜப்பானுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? நாய் குரைத்ததைப் பார்த்து ஒருவன் பயப்பட்டானாம். 'குரைக்கிற நாய் கடிக்காது' என்கிற பழமொழி தெரியாதா? என்று இன்னொருவன் சொன்னானாம். 'பழமொழி எனக்குத் தெரியும்; ஆனால், அந்த நாய்க்குத் தெரிந்திருக்க வேண்டுமே!' என்றானாம் பயந்த பேர்வழி. அந்த மாதிரி, நேதாஜிக்கு உதவி செய்வதின் அனுகூலத்தை ஜப்பான் உணர்ந்திருக்க வேண்டுமே?" "நேதாஜி படையில் இதுவரை ஐம்பதினாயிரம் வீரர்கள் சேர்ந்திருக்கிறார்களாம். ஜப்பான்தான் ஆயுதம் கொடுத்து உதவியிருக்கிறதாம்!" என்றார் அமரநாத். ஐம்பதினாயிரம் வீரர்கள் என்றால் அவ்வளவு அதிகமா? அவர்களைக் கொண்டு இந்தியா தேசத்தையே பிடித்துவிட முடியுமா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "நேதாஜி ஐம்பதினாயிரம் பேரோடு வந்தால் இந்தியாவில் அவருடன் சேர்வதற்கு ஐம்பது லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்!" என்றான் சூரியா. "வங்காளத்தில் மட்டுமே ஐம்பது லட்சம் பேர் சேர்வார்கள். கல்கத்தாவெல்லாம் ஓயாமல் இதைப்பற்றியே பேச்சாக இருக்கிறது" என்றான் அமரநாத். "ஐம்பது லட்சம் பேர் சேரட்டும்; ஐந்து கோடிப் பேர் வேணுமானாலும் சேரட்டும். நேதாஜி புது டில்லிக்கு வந்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளட்டும், நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடுகிற காரியம் மட்டும் உதவாது. நேதாஜி எப்போதோ வரப்போகிறார் என்பதற்காக இப்போது இங்கே சில தறிதலைகள் 'ஸாபொடாஜ்' வேலையில் இறங்குகிறார்களே, அது சுத்த முட்டாள்தனம். ஜப்பான் வருகிறவரையில் காத்திருப்பது தானே! அதற்குள்ளே ரயிலைக் கவிழ்க்கிறேன், பாலத்தை உடைக்கிறேன் என்று ஆரம்பிக் கிறார்களே! 'ஸாபொடாஜ்' வேலைகள் அரசாங்கத் துரோகம் மட்டுமல்ல, பொது ஜனத் துரோகம். நான் ஜட்ஜாயிருந்தால் அப்படிப்பட்ட காரியம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பேன். "இவ்விதம் தாமோதரம்பிள்ளை சொல்லி வந்த போது சூரியாவின் முகத்தில் ஒரு மாறுதல் காணப் பட்டது. மலர்ந்திருந்த அவன் முகம் சட்டென்று சுருங்கிற்று. இந்த மாறுதலை அமரநாத் கவனித்தான். அமரநாத் கவனித்தான் என்பதைச் சூரியாவும் தெரிந்து கொண்டான். தெரிந்து கொண்டதும் அமரநாத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். சூரியாவின் கண்கள் ஏதோஒரு உறுதியை அமரநாத்தினிடம் எதிர்பார்த்ததாகத் தோன்றியது. அமரநாத்தின் கண்கள் அந்த உறுதியைச் சூரியாவுக்கு அளித்தன.