அலை ஓசை/எரிமலை/உல்லாச வேளை
இருபத்து மூன்றாம் அத்தியாயம்
உல்லாச வேளை
உலகத்து மாநகரங்களுள்ளே நவயௌவன சௌந்தரியம் பெற்றுவிளங்குவது கல்கத்தாநகரம். அந்த நகர சுந்தரியின் வனப்புமிக்க தோள்களின் மேலே மிதந்து அசைந்தாடிக் கொண்டிருந்த நீலப் பட்டு உத்தரீயத்தைப் போல் இனிய புனல் ததும்பிய ஏரி ஒய்யாரமாக நீண்டு நெளிந்து கிடந்தது. நீல உத்தரீயத்தின் ஓரங்களில் அமைந்த பச்சை வர்ணக் கரையைப் போல ஏரிக்கரை யோரமாகப் பசும்புல் படர்ந்திருந்தது. ஏரியின் நடுவே மரகதச் சோலைகள் செழித்து வளர்ந்திருந்த தீவு சித்திரக் கலைஞனுடைய கற்பனைச் சித்திரமோ என்று சொல்லும்படி விளங்கியது. ஏரி நீரில் ஆங்காங்கு சில வெண்ணிறப் பறவைகளும் உல்லாசப் படகுகளும் மிதந்து கொண்டிருந்தன. ஏரியின் மத்தியில் இருந்த சோலைத் தீவிலிருந்து புள்ளினங்கள் கோஷ்டி கானமாகப் பாடிய நாத கீதங்கள் இளங் காற்றில் மிதந்து வந்து நாலாபுறமும் இசை இன்பத்தைப் பரப்பின. உல்லாசத்துக்குரிய மாலை வேளையில் ஏரிக்கரை ஓரத்துப் பசும்புல் தரையில் ஆங்காங்கு ஆடவரும் பெண்டிரும் கும்பலாகக் காணப்பட்டனர். சிலர் ஏகாந்தமாகப் புல் தரையில் சாய்ந்து கொண்டு பகற் கனவு கண்டு கவிதை புனைந்து கொண்டிருந்தனர். சிலர் கூட்டமாக உட்கார்ந்து காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் செய்து கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தம்பதிகள் அளாவிளாவிப் பேசி மகிழ்ந்தனர். இளமையின் இன்பத்தில் திளைத்த காதலர்களும் புதுமணம் புரிந்த தம்பதிகளும் வாய்ப் பேச்சுக்கு அவசியத்தைக் காணாது கண்களோடு கண்களும் இதயத்தோடு இதயமும் பேசும்படி விட்டுக் களிப்படைந்தனர்.
அதோ, அந்த இளம் தம்பதிகள் யார்? நமக்குத் தெரிந்தவர்களைப் போலத் தோன்றுகிறார்களே?... ஆம்; தெரிந்தவர் கள்தான் தேவபட்டணம் தாமோதரம்பிள்ளையின் குமாரன் அமரநாதனும் அவனுடைய மனைவி சித்திராவுந்தான். "இந்தக் கல்கத்தா ஏரிக்கரையின் அழகு திருச்செந்தூர்க் கடற்கரைக்குக் கூட வராது!" என்றாள் சித்ரா. "உனக்கு இன்னமும் இந்த வங்க நாட்டு மோகம் விடவில்லை போலிருக்கிறது. எனக்கு இந்த ஏரிக் காட்சி இப்போதெல்லாம் அவ்வளவாக இன்பம் அளிக்கவில்லை. இதைப் பார்க்கும்போது துக்கந்தான் உண்டாகிறது. வங்க மாதா தன் அருமை மக்களின் பரிதாப நிலையை எண்ணிச் சொரிந்த கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்புவதாக எனக்குத் தோன்றுகிறது" என்றான் அமரநாத். "ஒரு சமயம் இந்த ஏரியைப் பற்றி நீங்கள் வேறு விதமாக வர்ணித்தது எனக்கு நினைவிருக்கிறது. 'பங்கிம் சந்தருடைய நாவல் களையும் ரவீந்திரரின் கவிதைகளையும் படித்துவிட்டு வங்க மாதா பொழிந்த ஆனந்தக் கண்ணீர் இந்த ஏரியில் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தது!' என்று சொன்னீர்கள். அந்தப் பரவசமெல்லாம் இப்போது எங்கே போயிற்று?" "அதையெல்லாம் இந்த பயங்கரமான பஞ்சம் அடித்துக் கொண்டு போய்விட்டது. மூன்று மாதமாகத் தினம் தினம் சாலையின் இரு பக்கங் களிலும் பட்டினியால் செத்துக் கிடப்பவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிறகு, கதையாவது கவிதையாவது காவியமாவது என்று தோன்றுகிறது.
சுத்தப் பைத்தியக்காரத்தனம்; அதனால் தான் காந்தி மகாத்மா சொன்னார்: 'மக்கள் பசியால் வாடும் நாட்டில் கலை என்ன, கவிதை என்ன, பாடல் என்ன?' என்றார். 'இராட்டையின் ரீங்காரமே இனிமையிலும் இனிமையான சங்கீதம்!' என்றார். மகாத்மா வுக்கும் டாகூருக்கும் இதைப்பற்றி ஒரு சமயம் பலத்த விவாதம் நடந்தது. நான் அப்போது டாகூரின் கட்சிதான் சரி என்று எண்ணினேன். இந்த மூன்று மாதத்துப் பயங்கரங்களைப் பார்த்த பிறகு, பதினாயிரக்கணக்கான ஜனங்கள் பசிக்குச் சோறின்றித் தெரு வீதிகளில் விழுந்து செத்து மடிவதைப் பார்த்த பிறகு, மகாத்மா சொல்வதுதான் சரியென்று எண்ணுகிறேன்." "இந்த வங்க நாட்டு ஜனங்கள் இவ்வளவு தேச பக்தியும் கடவுள் பக்தியும் உள்ளவர்களாயிற்றே! கடவுள் எதற்காக இவர் களை இப்படிச் சோதிக்கிறாரோ, தெரியவில்லையே!" என்று சித்ரா பரிதபித்துக் கூறினாள். "வங்காளிகள் நல்லவர்கள் தான்! ஆனால் இவர்களிடம் பெரிய துர்க்குணம் ஒன்றும் இருக்கிறது. குறுகிய மாகாணப் பற்று அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்கு 'வங்காளிகள் தேவ ஜாதிகள்; மற்ற நாட்டார் எல்லாரும் நீச்ச ஜாதிகள்' என்று எண்ணம். மதராஸியையோ பம்பாய்க் காரனையோ கண்டால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இவர்கள் மட்டும் லாகூர் வரைக்கும் சென்று உத்தியோகம் பார்ப்பார்கள். ஆனால் மற்ற மாகாணத்தார் இங்கே வந்து பிழைப்பது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அந்தக் கெட்ட குணத்துக்காகத் தான் கடவுள் இவர்களை இப்படித் தண்டித்திருக்கிறார்!" என்றான் அமரநாத். "கடவுளை அவ்வளவு கொடுமையானவராக ஆக்கி விடுகிறீர்களே?
கிருஷ்ண சைதன்யரும் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் விவேகானந்தரும் அவதரித்த நாட்டின் மக்களைக் கடவுள் அவ்வளவு கருணையில்லாமல் தண்டிப்பாரா? சுரேந்திரநாதரும் தேசபந்துவும் சுபாஷ் போஸும் பிறந்த நாட்டின் மக்கள் கொஞ்சம் மாகாணப் பற்று உள்ளவர்களாயிருந்தால்தான் என்ன?" "பின்னே, நீ என்ன காரணம் சொல்லுகிறாய்? வங்காளிகள் எதற்காக இவ்வளவு பயங்கர மான கஷ்டத்துக்கு உள்ளாக வேண்டும்?" "எல்லாம் மனிதர்கள் செய்கிற காரியந்தான். பணத்தாசை பிடித்த பேய்கள், விளைந்த தானியத்தையெல்லாம் வாங்கி முடக்கி விட்டால் பஞ்சம் வராமல் என்ன பண்ணும்?" "அந்தக் கொடிய மனிதர்களையும் கடவுள்தானே சிருஷ்டித்தார்? 'எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார்' என்று நம்முடைய வேத சாஸ்திர புராணங்கள் எல்லாம் சொல்லு கின்றனவே! ஆகையால் மனிதன் செய்தாலும் அதன் பொறுப்பு கடவுளின் தலையிலேதானே விழும்?" "உங்களோடு விவாதம் செய்ய முடியாது. நீங்கள் இந்தக் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இப்படி நாஸ்திகராகப் போய் விட்டீர்கள்! நான் உங்களோடு பேசத் தயாராயில்லை!" என்றாள் சித்ரா. "போகட்டும்; கம்யூனிஸ்டுகளால் இந்த ஒரு நன்மையாவது நிச்சயம் இருக்கிறது. அவர்களுடைய சகவாசத்தினால் ஒரு பெண்மணியின் வாயை மூடி மௌனமாகச் செய்ய என்னால் முடிந்ததல்லவா?" என்று கேலி செய்தான் அமரநாத். "வீண் ஆசை! அந்த மாதிரி எண்ணி நீங்கள் கர்வங்கொள்ள வேண்டாம். வங்க நாட்டுக்கு இந்தக் கொடும் பஞ்சத்தை அனுப்பியவர் கடவுளாக இருந்தால், அதனாலும் ஏதோ ஒரு நன்மை ஏற்படும் என்பது நிச்சயம். இந்த வங்காளத்தில் பஞ்சம் வருவது இது முதல் தடவையல்ல, முன்னேயும் வந்திருக்கிறது.
'ஆனந்த மடம்' கதையில் வங்க நாட்டில் அப்போது பரவியிருந்த பயங்கரமான பஞ்சத்தைப் பற்றிப் பங்கிம் சந்திரர் எப்படி வர்ணித்திருக்கிறார் என்று ஞாபகம் இருக்கிறதா? அந்தப் பஞ்சத்தின் காரணமாக ஒரு பெரும் புரட்சி தோன்றியது. மகேந்திரன், கல்யாணி, ஜீவானந்தன், சாந்தி, பவானந்தன், ஸத்தியானந்தர் முதலிய சுதந்திர வீரர்கள் உதயமானார்கள். 'வந்தேமாதரம்' என்னும் மகா மந்திரமும் ஏற்பட்டது. இப்போது இந்தப் பஞ்சத்தின் காரணமாகவும் ஒரு பெரும் புரட்சி ஏற்படப் போகிறது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கப் போகிறது. அந்த எரிமலை பொழியும் நெருப்பில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி விடப் போகிறது. இந்திய தேசம் சுதந்திரம் அடையப் போகிறது." "இந்தியா சுதந்திரம் அடையட்டும்; நான் வேண்டாம் என்று சொல்ல வில்லை; குறுக்கே நின்று தடுக்கவும் இல்லை. ஆனால் எனக்கென்னமோ சந்தேகந்தான். பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் புரட்சி செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. பசியினாலும் பஞ்சத்தினாலும் பிரஞ்சு புரட்சி ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். ஒருவேளை அரை வயிறு பட்டினியாயிருப்பவர்கள் புரட்சி செய்யலாம். முழுதும் பட்டினி கிடப்பவர்கள் அடியோடு சக்தியை இழந்து சோர்ந்து விடுகிறார்கள்; அல்லது செத்தே போய் விடுகிறார்கள். செத்துப் போனவர்கள் எப்படிப் புரட்சி செய்ய முடியும்?
நீயே பார், சித்ரா! இந்த வங்காளப் பஞ்சத்தில் ஐம்பது லட்சம் பேர் செத்து போயிருக்கிறார்கள். இவர்களில் கால்வாசிப் பேர், ஒரு பத்து லட்சம் பேர், சுதந்திரத்துக்காக உயிரை விடத் துணிந்திருந்தால் இந்தியா சுதந்திரம் பெற்றி ருக்கும். அவ்வளவு கூட வேண்டாம்; ஒரு லட்சம் பேர் உயிரை விடத் துணிந்து கிளம்பியிருந்தாலே போதும். ஆனால் வீதி ஓரங்களில் விழுந்து செத்தாலும் சாவார்களேயன்றி நாட்டின் விடுதலைக்காக உயிரைக் கொடுக்க முன்வர மாட்டார்கள்...." "ஏன் வரமாட்டார்கள்? பேஷாக முன் வருவார்கள். ஜனங்களை நடத்திச் செல்லத் தகுந்த தலைவர்கள் இல்லாத தோஷந்தான். சுபாஷ் பாபு மட்டும் இச்சமயம் இங்கே யிருந்தால் கட்டாயம் புரட்சி ஏற்பட்டிருக்கும். சுபாஷ் பாபு இப்போது மலாய் நாட்டில் சேர்த்து வரும் சைனியத்தில் இந்திய வீரர்கள் ஏராளமாய்ச் சேருகிறார்களோ, இல்லையோ? உயிரைக் கொடுக்கத் துணிந்து தானே அவர்கள் சேருகிறார்கள்? ஆகா! தலைவர் என்றால் சுபாஷ் பாபுவைப் போல் இருக்க வேண்டும்." "சுபாஷ் பாபுவின் பேரில் உன்னுடைய மோகம் இன்னும் போகவில்லை. சுபாஷ் பாபு வெற்றியடைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இந்தியாவில் இங்கிலீஷ்காரர்களின் ஆட்சிக்குப் பதிலாக வங்காளிகள் ஆட்சி ஏற்படும்!" என்றான் அமரநாத். "ஏற்பட்டால் என்ன? அன்னியர்களாகிய இங்கிலீஷ்காரர்களின் கீழ் அடிமைகளாயிருப்பதைக் காட்டிலும் வங்காளிகளின் ஆட்சியில் நாம் இருந்தால் என்ன?"
"இருந்தால் என்ன? ஒன்றுமில்லை விஷயம் என்னவென்று உனக்குச் சொன்னேன்! அவ்வளவுதான். பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் ஆனந்த மடம் எழுதியிருக்கிறாரே? அதில் யாரைத் தூக்கி வைத்து எழுதியிருக்கிறார்? வங்க மாதாவின் புதல்வர்களைத் தான்! 'வந்தே மாதரம்' கீதத்தில் ஏழு கோடி மக்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதை முப்பது கோடி என்று பின்னால் மாற்றினார்கள். எப்படியும் வங்காளிகளிடம் இந்த துர்க்குணம் இருக்கத்தான் இருக்கிறது. அதன் பலனைப் பார், சித்ரா! வங்காளம் இப்போது முஸ்லீம் லீக் மந்திரிகளின் ஆட்சியில் இருக்கிறது. முஸ்லிம் லீகர்களும் வங்காளிகள் தான்! ஆனால் எப்பேர்ப்பட்ட வங்காளிகள்!" "டாக்டர் டாகூரும் வங்காளி தான் அவரைப் பாருங்களேன்! உலகமெல்லாம் ஒன்று. மனித ஜாதியெல்லாம் ஒரே ஜாதி என்று சொல்லவில்லையா? நீங்கள் வங்காளிகளைப் பற்றிக் குறை சொல்வது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதுவும் இந்த நாட்டில் நாம் தொழில் நடத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டே இந்த நாட்டு மக்களைப் பற்றிக் குறை சொல்லலாமா? போதும், புறப்படலாம்! ஹாவ்ராவுக்குப் போக வேண்டும் என்கிறீர்களே!" இவ்வாறு சொல்லிக் கொண்டே சித்ரா எழுந்தாள். "நான் இங்கே அதிக நாள் இருப்பதாக உத்தேசமில்லை சித்ரா! சீக்கிரம் தமிழ்நாட்டுக்குப் போய்விட விரும்புகிறேன்" என்று சொல்லிக் கொண்டு அமரநாத்தும் எழுந்தான். "அதெல்லாம் முடியாது! நீங்கள் போவதாயிருந்தால் தனியாகப் போக வேண்டியதுதான்.
உங்கள் நாட்டில் குடிகொண்டிருக்கும் சிறுமைப் புத்தியும் சின்னச் செயல்களும் எனக்குக் கொஞ்சம் பிடிக்க வில்லை. ஒருவரை யொருவர் நிந்திப்பதே தமிழ்நாட்டாருக்கு வேலை. ஒரு ஸ்திரீயும் புருஷனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் போதும், உடனே நூறு சந்தேகங்களைக் கற்பித்து அவதூறு பேச ஆரம்பித்து விடுவார்கள்!" "வங்காளிகளிடம் இந்தக் குணம் கிடையாது என்று நினைக்கிறாய், சித்ரா! உனக்குத் தெரிந்த இலட்சணம் அவ்வளவுதான்!" "எனக்குத் தெரிந்திருக்கிற அளவே போதும், பிறத்தியாரிடம் என்ன துர்க்குணம் இருக்கிறது என்று தோண்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள எனக்குக் கொஞ்சமும் விருப்ப மில்லை!" இவ்வாறு முடிவில்லாத விவாதம் செய்துகொண்டே அந்த அன்யோன்ய தம்பதிகள் மோட்டார் வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்று வண்டியில் ஏறிக் கொண்டார்கள். அமரநாத்தும் சித்ராவும் கல்கத்தாவில் ஜாலீகஞ்ச் என்னும் பகுதியின் ஒரு அழகான பங்களாவில் வசித்தார்கள். முன்னேயெல்லாம் அவர்கள் அடிக்கடி ஏரிக்கரைக்குக் காற்று வாங்க வருவதுண்டு. பஞ்சத்தில் அடிப்பட்ட ஜனங்கள் கல்கத்தாவிற்கு வரத் தொடங்கிய நாளி லிருந்து அவர்கள் அதிகமாக வெளிக் கிளம்பவில்லை. தெருக்களில் பஞ்சத்தில் அடிப்பட்டுச் செத்துக் கிடந்தவர்களின் பிரேதங்களைப் பார்த்துக் கொண்டு போக அவர்களுக்குச் சகிக்கவில்லை.
அதோடு பஞ்சநிவாரண வேலையில் ஈடுபட்டிருந்த ஸ்தாபனம் ஒன்றில் சேர்ந்து சித்ராவும் தொண்டு செய்து கொண்டிருந்தாள். பர்மாவிலிருந்து வந்த அகதி ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் உதவி புரிவதற்கென்று அந்த ஸ்தாபனம் முதலில் ஏற்பட்டது. அவ்வேலை ஒருவாறு முடிந்ததும் பஞ்சம் வந்து விட்டது பஞ்சத்தில் அடிப்பட்டு மெலிந்தும் குற்றுயி ராகவும் வந்த அனாதை ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஸ்தாபனம் தொண்டு செய்து வந்தது. இப்போது சில நாளாக அப்பஞ்ச நிவாரண வேலை குறைந்திருந்தபடியால் மூன்று மாதத்திற்குப் பிறகு அமரநாத்தும் சித்ராவும் கொஞ்சம் ஏரிக் காற்று வாங்கிவிட்டு ஹாவ்ரா நண்பர் களையும் பார்த்து வரலாம் என்று புறப்பட்டிருந்தார்கள். ஹாவ்ரா ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரத்துக்கருகில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் தொழில் நடத்திய வீதிகள் இருந்தன. அந்த விசாலமான வீதிகளில் நெருங்கியிருந்த ஜனக்கூட்டத்தையும் மோட்டார் முதலிய வாகனங்களின் நெருக்கத்தையும் சொல்லி முடியாது. மாலை நேரங்களில் நிமிஷத்துக்கு ஒரு கஜ தூரம் வீதம் ஊர்ந்து கொண்டுதான் அந்தப் பகுதிகளில் மோட்டார் செல்லவேண்டும். "பஞ்சத்தில் அத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள். இத்தனை லட்சம் பேர் செத்துப் போனார்கள் என்று சொல்லு கிறார்களே! அவ்வளவு பேர் செத்துப் போன பிற்பாடும் இங்கே இத்தனை கூட்டமாக இருக்கிறதே?" என்றான் அமரநாத். "இருந்து விட்டுப் போகட்டும்; நீங்கள் யார் பேரிலாவது வண்டியை ஏற்றி ஜனத்தொகையைக் குறைக்கும் கைங்கரியத்தைச் செய்ய வேண்டாம்!" என்றாள் சித்ரா. "இந்த வீதியில் யார் பேரிலாவது வண்டியை ஏற்றினால் அவன் அநேகமாக அரிசியை முடக்கிய கறுப்பு மார்க்கெட் முதலாளியாக இருப்பான். அவனைக் கொன்றால் தேசத்துக்குப் பெரிய சேவை செய்தவனா வேன்!" என்று சொன்னான் அமரநாத்.