உள்ளடக்கத்துக்குச் செல்

அலை ஓசை/எரிமலை/கலியாணம் அவசியமா?

விக்கிமூலம் இலிருந்து


ஆறாம் அத்தியாயம் கலியாணம் அவசியமா?

சாஸ்திரியார் மாடி ஏறிச் சென்றதும், காமாட்சி அம்மாள் வார்த்தைகளைப் பொழிந்தாள்: "சூரியா! இது என்ன இப்படிப்பட்ட காரியம் செய்து விட்டாய்? இந்த வயதில் சந்நியாசமாவது? இவர் ஓயாமல் 'சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்' 'சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டை விட்டு அசைகிற வழியாகக் காணோம். வயதாக ஆக, பாச பந்தம் அதிகமாகி வருகிறது. மூத்த நாட்டுப் பெண் வேறு வந்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாள். நீ இந்த வயதில் காஷாயம் வாங்கிக் கொண்டாயே? கொஞ்சங்கூட நன்றாயில்லை. உன்னை எப்படிக் கூப்பிடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. 'சுவாமிகளே! வாங்கள்! போங்கள்!' என்று மரியாதையாகச் சொல்ல வேண்டுமோ, என்னமோ?" என்றாள். "மாமி, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். தாராளமாய்ச் 'சூரியா' என்றும் 'வா' 'போ' என்றும் சொல்லுங்கள். உங்களிடம் நிஜத்தைச் சொல்லி விடுகிறேன். ஒரு காரியார்த்தமாக இந்த வேஷம் போட்டுக் கொண்டேன். உண்மையில் நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டு சாமியார் ஆகிவிடவில்லை" என்றான் சூரியா. "இது என்ன கூத்து? போயும் போயும் எதற்காக இந்த வேஷம் போட்டுக்கொண்டாய்? இந்தக் காலத்துப் பிள்ளைகளின் காரியமே வேடிக்கையாகத் தான் இருக்கிறது. ஒருவேளை சினிமாவிலே, கினிமாவிலே சேர்ந்திருக்கிறாயா, என்ன?" "அதெல்லாம் இல்லை, மாமி! நான் சுயராஜ்ய இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன் அல்லவா?" "சுயராஜ்யமும் ஆச்சு, மண்ணாங்கட்டியும் ஆச்சு! இந்தக் காஷாய வேஷத்தைக் கலைத்துவிட்டு மறு காரியம் பார்! உனக்குக் கலியாணத்துக்குப் பெண் பார்த்து வைத்திருக்கிறேன், உன்னை இந்தக் கோலத்தில் பார்த்ததும் எனக்குப் பகீர் என்றது." "மாமி! கலியாணம் அவ்வளவு அவசியமான காரியமா? கலியாணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் சந்தோஷமாயிருக்கிறார்களா?" என்று சூரியா கேட்டான். "எத்தனையோ பேர் கலியாணம் செய்து கொண்டு பிள்ளையும் குட்டியுமாய்ச் சந்தோஷமாய்த்தானிருக் கிறார்கள் . சில பேருடைய தலை எழுத்து சந்தோஷமாயிருக்க முடிகிறதில்லை. அப்படிப் பார்த்தால் உலகத்திலே யார்தான் எப்போதும் ந்தோஷமாயிருந்தார்கள்? இராமன் சீதையைக் கலியாணம் செய்து கொண்டு எவ்வளவோ கஷ்டப்பட்டார். அதனால் இராமர் கலியாணமே செய்து கொண்டிருக்கக் கூடாது என்று சொல்லமுடியுமா?" என்றாள் காமாட்சி அம்மாள். "இராமரும் சீதையும் ஒருவருக்கொருவர் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள். அதனால் அவர்கள் சந்தோஷமாயிருந்தார்கள். தம்பதிகள் அன்யோன்யமாயிருந்து மற்றவர்களால் எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்; சந்தோஷமாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்துத் தம்பதிகள் அப்படி இல்லையே?" என்றான் சூரியா. "நீ எதைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறாய் என்று எனக்குத் தெரிகிறது. சூரியா! என் பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் அன்யோன்யமா யில்லை என்றுதானே சொல்கிறாய்? அது வாஸ்தவந்தான். பெரியவர்கள் சொல்லுகிறதைக் கேட்காமல் தான்தோன்றித் தனமாகக் காரியம் செய்ததினால் வந்த வினை இது. கலியாணம் நிச்சயம் செய்வது என்றால், ஜாதகம் பார்த்துச் செய்ய வேண்டும் என்று எதற்காகப் பெரியவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? இந்த மாதிரியெல்லாம் ஏடாகூடமாக ஆகக் கூடாது என்றுதான் நான் அப்போதே அடித்துக் கொண்டேன்; 'எல்லாவற்றுக்கும் ஜாதகம் வாங்கிப் பார்த்து விடலாம்' என்று நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தப் பிராமணருக்குக் கூட அப்போது புத்தி எங்கேயோ போய்விட்டது! உன் அத்தங்காள் ஜாதகத்தில் என்ன தோஷம் இருந்ததோ, என்னமோ? உன் தங்கை லலிதாவைப் பார்ப்பதற்காகத்தானே நாங்கள் ஊருக்கு வந்திருந்தோம்? லலிதாவின் ஜாதகமும் ராகவனுடைய ஜாதகமும் பொருந்தியிருந்தது. அப்படி நடந்திருந்தால் இந்தக் கஷ்டமெல்லாம் வந்திராது!" என்றாள் காமாட்சி அம்மாள். "இப்போது என் அத்தங்கா படுகிற கஷ்டத்தையெல்லாம் என் தங்கை பட்டிருப்பாள்!" என்றான் சூரியா. காமாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. "நன்றாய் சொன்னாய் சூரியா! உன் அத்தங்காள் பரம சாது. ராகவன் தான் அவளைக் கஷ்டப்படுத்துகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயாக்கும்! கலியாணம் ஆன புதிதில் நானும் உன் அத்தங்காளைச் சாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட நாட்டுப் பெண் எனக்குக் கிடைத்தாளே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். போகப் போகத் தான் தெரிந்தது; உன் அத்தங்காள் எப்படிப்பட்ட ராட்சஸி என்று. அவளுக்குச் சீதை என்று பெயர் வைத்தது ரொம்பத் தப்பு. சூர்ப்பநகை, தாடகை என்று வைத்திருக்க வேண்டும்?" என்றாள். "சாதுப் பெண்ணாயிருந்தவள் எப்படித் திடீரென்று ராட்சஸியாகி விட்டாள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா?" காரணம் என்ன காரணம்? அவளைச் சாதுப் பெண் என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோமே, அதுதான் தப்பு! உலகத்தில் துஷ்டைகள் எத்தனையோ பேரை நானும் பார்த்திருக்கிறேன். உன் அத்தங்காளைப் போல் பார்த்ததே இல்லை! ஒவ்வொரு சமயம் எனக்குப் பயமா இருக்கிறது. சூரியா! ஏதாவது விஷத்தைக் கிஷத்தைக் கலந்து..." "ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்; அம்மா! எப்பேர்ப்பட்ட ராட்சஸியாக இருந்தாலும் புருஷனுக்கு விஷம் வைத்துக் கொல்லும்படி அவ்வளவு பாதகியாயிருப்பாளா?" என்று அலறினான் சூரியா. "மெள்ளப் பேசுடா, அப்பா! மெள்ளப் பேசு! புருஷனுக்கு விஷம் வைத்துவிடுவாள் என்று நான் சொல்லவில்லையே! கிராமாந்தரத்துப் பெண்கள் சிலர் புருஷனை வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்கு என்று எண்ணிக் கொண்டு மருந்து வைத்து விடுவதுண்டு. அது பல புருஷனுக்கு யமனாக முடியும். உன் அத்தங்காள் அவ்வளவு அசடு அல்ல; அப்படிச் செய்யவும் மாட்டாள். தான் விஷத்தைக் குடித்துவிட்டு ராகவன் பேரில் பழியைப் போட்டு விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன். "புருஷன் படுத்தும் கொடுமை தாங்காமல் செத்துப் போகிறேன்!" என்று எழுதி வைத்துவிட்டுச் செத்தாலும் சாவாள்! அவளுடைய மூர்க்கத்தனத்தை நினைத்தால் சில சமயம் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது..." "மாமி! விஷங்குடித்துச் செத்துபோக வேண்டும் என்று நினைப்பதற்குச் சீதாவின் மனது எவ்வளவு வெறுத்துப் போயிருக்க வேண்டும்? அப்படி மனது வெறுப்பதற்குக் காரணமில்லாமலா இருக்கும்? உங்கள் பிள்ளை பேரில் தப்பே இல்லையென்றால், வேறு என்ன காரணம் இருக்க முடியும்?" என்றான் சூரியா. இதற்குக் காமாட்சி அம்மாளின் பதில் சொல் மாரியாக வந்தது: "என் பிள்ளை பேரில் தப்பு இல்லையென்று யார் சொன்னது? எவ்வளவோ தப்பு உண்டு. உன் தங்கையைப் பார்ப்பதற்காகப் போனவன், இந்த ரதியைத் தெருவிலே பார்த்துவிட்டு மயங்கிப் போய் 'இவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன்' என்றானே? அது பெரிய தப்புத் தான். ஒரு செப்புக்காசு வரதட்சணை இல்லாமல் கலியாணம் செய்து கொண்டதும் தப்புத் தான். குப்பையில் கிடந்தவளைக் கொண்டு போய்க் கோபுரத்தில் வைத்தானே, அதுவும் தப்புத் தான். அந்த நாளில் எவ்வளவோ நான் அடித்துக் கொண்டேன். 'இவ்வளவு இடங்கொடுக்காதே!' என்று; இவன் கேட்கவில்லை. ஆக்ரா எங்கே, சிம்லா எங்கே, காஷ்மீர் எங்கே, என்று அழைத்துக் கொண்டு திரிந்தான். என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போக அவனுக்குச் சாவகாசம் கிடைக்கவில்லை. சீதாவை லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகக்கூடத் தயாராயிருந்தான். வைஸ்ராய் வீட்டுப் பார்ட்டிகளுக்கும் அழைத்துக் கொண்டு போனான். இங்கிலீஷ் படிக்க வைத்தான்; அன்னிய புருஷர்களோடு கை குலுக்கவும் ஒரே சோபாவில் உட்கார்ந்து பேசவும் மோட்டார் கார் ஓட்டவும் கற்றுக் கொடுத்தான். அப்படியெல்லாம் செய்த தப்புகளின் பலனை இப்போது அனுபவிக்கிறான். அவனுடைய ஜாதகத்தில் அப்படி எழுதியிருந்தது! இன்னொரு புருஷனாயிருந்தால் இப்படிப்பட்ட பெண்டாட்டியை விறகுக்கட்டையால் அடித்துத் துரத்திவிட்டு வேறு கலியாணம் செய்து கொண்டிருப்பான்!..." இந்த ரீதியில் காமாட்சி அம்மாளுடன் பேசுவதில் பயனில்லையென்று சூரியா அறிந்து கொண்டான். பேச்சை வேறு பாணியில் ஆரம்பித்தான். "மாமி! நான் ஏதோ என் அத்தங்காளுக்குப் பரிந்து பேசுவதாகவும் உங்கள் பிள்ளையைக் குற்றம் சொல்வதாகவும் நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது. சீதா தாயில்லாப் பெண் என்பது உங்களுக்குத் தெரியும். தகப்பனார் உயிரோடிருக்கிறாரா, இல்லையா என்பது ஒருவருக்கும் தெரியாது. உங்களையும் உங்கள் பிள்ளையையும் தவிர அவளுக்குக் கதி கிடையாது. அடித்து விரட்டினால் குளத்திலே கிணற்றிலே விழுந்து சாக வேண்டியது தான். சீதாவை உங்கள் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாயிருந்தவன். நான் வற்புறுத்திச் சொன்னபடியினாலே தான் என் அப்பா அம்மா இந்தக் கலியாணத்துக்குச் சம்மதித்தார்கள். சீதாவின் தாயாரையும் நான்தான் சம்மதிக்கப் பண்ணினேன். என் அத்தையை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதல்லவா? வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டவள், 'நான்தான் கஷ்டப்பட்டே காலம் கழித்து விட்டேன்; சீதாவாவது நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டுச் சௌக்கியமாயிருக்கட்டும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த கலியாணத்தை நடத்தி வைத்ததற்காக என்னை ஆயிரம் தடவை 'மகராஜனாயிரு!' என்று வாழ்த்தினாள். அதையெல்லாம் நினைத்து இப்போது உங்கள் பிள்ளையும் நாட்டுப் பெண் இருக்கிற நிலையையும் எண்ணும்போது எனக்கு எவ்வளவோ துக்கமாயிருக்கிறது. அதனால் நான் எடுத்துக் கொண்ட முக்கியமான வேலைகள் கூடத் தடைப்பட்டுப் போகின்றன. ஏதாவது முயற்சி பண்ணி உங்கள் பிள்ளையும் சீதாவும் சந்தோஷமாயிருக்கப் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை; அதனாலே தான் உங்களிடம் வந்தேன். சீதா என்ன தப்புச் செய்கிறாள் என்று தெரிந்தால் அவளுக்குப் புத்தி சொல்லித் திருப்ப முயற்சி செய்வேன்." சூரியாவின் இந்த நயமான பேச்சினால் காமாட்சி அம்மாளின் கோபம் கொஞ்சம் தணிந்தது. "எனக்கும் அந்த ஆசை இல்லையா, சூரியா! ராகவனும் சீதாவும் முன்போல் சந்தோஷமாக இருந்தால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறு கிடையாது. ஆனால் காரணம் என்பதாக ஒன்று இருந்தால்தானே சொல்வதற்கு! மனத்திற்குள் அவர்களுக்கு ஒருவர் பேரில் ஒருவர் பிரியம் இருக்கிறது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் தினம் பொழுது விடிந்தால் சண்டையும் ரகளையும் நடப்பதில் குறைவில்லை, எல்லாவற்றுக்கும் உன் அத்தங்காளின் வாயாடித்தனந்தான் காரணம். வருகிற போது பேசவே தெரியாத ஊமையைப் போல வந்தாளே, அவளுக்கு இத்தனை வாய் எப்படி வந்ததோ, எனக்கே ஆச்சரியமாய்த் தானிருக்கிறது. அவன் ஒன்று சொன்னால் இவள் நாலு சொல்லுவது என்று ஏற்பட்டுவிட்டது. அவன் எது சொன்னாலும் இவள் மறுத்துச் சொல்லாமல் விடுவதில்லை. எங்கேயாவது இவளை அழைத்துப் போகாவிட்டால் 'ஏன் அழைத்துப் போகவில்லை!' என்று சண்டை பிடிக்கிறது. அழைத்துக் கொண்டு போனால் திரும்பி வரும்போது'ஏன் அவளோடு பேசினீர்கள்?' 'ஏன் இவளோடு பேசினீர்கள்?' என்று ஓயாமல் பிடுங்கி எடுக்கிறது. வெளியிலே வாசலிலே போய் உத்தியோகம் பார்த்துவிட்டு வருகிறவனை இப்படிப் போட்டு வதைத்தால் அவன்தான் என்ன செய்வான்? சில சமயம் அவனுக்கும் ரௌத்ராகாரம் வந்துவிடுகிறது. கோபம் வந்திருக்கும் வேளையிலாவது எதிர்த்துப் பேசாமலிருக்கத் தெரிகிறதா? அதுவும் இல்லை. உனக்குத் தான் அந்தத் தாரிணி என்கிற பெண்ணை நன்றாகத் தெரியுமே! அவளைக் கேட்டுப் பார்! நான் காசிக்குப் போயிருந்தபோது சீதாவுக்குச் சுரம் வந்து பிழைப்பது துர்லபம் என்று ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் தாரிணி வந்து இரவு பகலாக இவளுக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். உடம்பு சௌகரியமானதும் சீதா அவளைத் திட்டிய திட்டுக்கு அளவே இல்லை. நாக்கில் நரம்பில்லாமல் அவளையும் ராகவனையும் பற்றிப் பேசினாள். தாரிணி அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சமாதானமாக நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தாள். ஒரு சமயம் அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொண்டேன். இந்த வீட்டில் பூஜை அறையில் அவள் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ராகவனைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதம் கொடுக்கும்படி கேட்டாள். அவள் என்ன சாதியோ என்னமோ என்ற காரணத்தினால் கண்டிப்பாக முடியாது என்று சொல்லி விட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது பெரிய தப்பு என்று தோன்றுகிறது. தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என் பிள்ளை எவ்வளவோ சந்தோஷமாக இருந்திருப்பான், அதற்கு நான் தடையாக நின்றேன். அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல் தான் இப்படி என்னையும் என் பிள்ளையையும் படுத்தி வைக்கிறது என்று தோன்றுகிறது." இதைக் கேட்ட சூரியா சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தாரிணியின் பேரில் அவனுக்குக் கோபம் வந்தது. பழைய கதை இப்படி எல்லாம் இருக்கும்போது ராகவன் சீதாவின் வாழ்க்கையில் தாரிணி தலையிட்டிருக்கவே கூடாது என்று எண்ணினான். அவளுடைய மனதிலும் ராகவனுடைய மனதிலும் பழைய சிநேகத்தின் பாசம் இல்லை என்பது என்ன நிச்சயம்? ஆகையால் அவர்கள் விஷயத்தில் சீதா அசூயைப் படுவதிலே தான் என்ன தவறு? இவ்விதம் எண்ணிக்கொண்டே போன சூரியா சட்டென்று அந்த எண்ணப் போக்குக்கு முட்டுக்கட்டை போட்டு நிறுத்தினான். "மாமி! நடந்துபோன காரியத்தைப் பற்றி, அது வேறு விதமாய் நடந்திருக்க கூடாதா என்று யோசிப்பதில் என்ன பிரயோஜனம்? பிரம்மா தலையில் எழுதின எழுத்தை யார் மாற்றி எழுத முடியும்? உங்கள் பிள்ளை சந்தோஷமாயிருப்பதற்கு என்ன வழி என்றுதான் இனி மேல் நாம் பார்க்க வேண்டும். சீதாவின் வாயாடித்தனத்தைப் பற்றி நீங்கள் சொன்னதை நான் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவளுக்கு என்னால் முடிந்த வரையில் புத்திமதி சொல்லிப் பார்க்கிறேன். நீங்களும் நல்ல முறையில் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள். டில்லிக்கு எப்போது வரப்போகிறீர்கள்?" என்று கேட்டான். "ராகவனிடமிருந்து எப்போது கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் டில்லிக்குப் போவதென்றால் ஒரு விதத்தில் பயமாகவும் இருக்கிறது. புருஷன் மனைவி சண்டையில் இந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று பயப்படுகிறேன். உன்னிடம் சொன்னால் என்ன? உனக்குத் தெரிந்திருக்க வேண்டியது தான். ஒரு தடவை சீதா இந்தப் பச்சைக் குழந்தையிடம் ஏதோ அப்பாவிடம், 'அம்மாவை வையாதே, அடிக்காதே!' என்று சொல்லியிருக்கிறாள். அவனும் முரட்டுத்தனமாகத் தன் கோபத்தை இந்தக் குழந்தையிடம் காட்டி இரண்டு அடி அடித்துவிட்டான் குழந்தைக்குச் சுரம் வந்துவிட்டது..." "ஐயோ!" என்றான் சூரியா. "நீ 'ஐயோ' என்று பரிதாபப்படுகிறாயல்லவா? ஆனால் சீதா என்ன செய்தாள் தெரியுமா? குழந்தைக்குச் சுரம் என்பதை மூன்று நாள் வரையில் ஒருவரிடமும் சொல்லவில்லை. அப்புறம் ராகவனுக்கு எப்படியோ தெரிந்து டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தான். குழந்தை பிழைப்பது புனர் ஜன்மம் ஆகிவிட்டது. உன் அத்தங்காளின் ராட்சசத்தனத்தைப் பார்த்தாயல்லவா?" என்றாள். சூரியாவின் மனதிற்குள் அது சீதாவின் ராட்சசத்தனமா, அல்லது தன் புருஷனைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் அப்படிச் செய்தாளா என்ற சந்தேகம் தோன்றியது. அதைப்பற்றிக் காமாட்சி அம்மாளிடம் வாதிப்பதில் பயனில்லை என்று தீர்மானித்து, "போனதெல்லாம் போகட்டும், நான் நாளைக்காலை டில்லி புறப்படுகிறேன். டில்லி போய்ச் சேர்ந்ததும் சீதாவைப் பார்த்துப் பேசிவிட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். எப்படியாவது தகராறைத் தீர்த்து வைத்து உங்கள் பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் நன்றாயிருக்கும்படி செய்வோம்!" என்றான். "நானும் அதற்காகவே தான் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டி ருக்கிறேன். சூரியா! உலகத்திலேயே அவர்கள் இரண்டு பேரிடத்திலும் இந்தக் குழந்தை இடத்திலும் தான் எனக்குப் பாசம். நீ சீதாவிடம் பேசுகிறபடி பேசு. அதோடு சீதாவின் ஜாதகம் எங்கேயாவது கிடைக்குமா என்று பார்த்து வாங்கி அனுப்பு. அவளுடைய ஜாதகத்தில் ஒருவேளை ஏதாவது தோஷம் இருந்தால் அதற்கு வேண்டிய சாந்தியைப் பண்ணச் சொல்லலாம்!" என்றாள் காமாட்சி அம்மாள்.