அலை ஓசை/எரிமலை/மண்டை உடைந்தது
பதினெட்டாம் அத்தியாயம் மண்டை உடைந்தது
வைஸ்ராயின் நிர்வாக சபை அங்கத்தினர் கொடுத்த ஜாஜ்வல்யமான இரவு விருந்து முடிவடைந்து, விருந்தாளிகள் அவரவர்களுடைய கார் கிடைத்துப் புறப்படுவதற்கு அரைமணி நேரம் ஆயிற்று. வழக்கம்போல் ராகவனுடைய காரில் மாஜி திவானும் அவருடைய புத்திரிகளும் ஏறிக் கொண்டார்கள்; வண்டி போய்க் கொண்டிருந்தபோது தாமாவும் பாமாவும், விருந்தில் பார்த்தவை களையும் கேட்டவைகளையும் பற்றிச் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கம் போல ராகவன் அந்த பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்தான். மாஜி திவானுடைய பங்களா வாசலில் வண்டி நின்றதும் அவரும் அவருடைய புதல்விகளும் காரிலிருந்து இறங்கினார்கள் ராகவன் இறங்கவில்லை. "மிஸ்டர் ராகவன்! நீங்கள் வரவில்லையா? ஒரு ஆட்டம் போடலாமே?" என்று தாமா கேட்டாள். "இல்லை; இன்றைக்கு வீட்டுக்குச் சீக்கிரமாகப் போக வேண்டும்" என்றான் ராகவன். அப்போது பாமா தாமாவிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். ராகவன் வண்டியிலிருந்து இறங்கி பங்களா முகப்பு வரையில் அவர்களுடன் சென்று, அங்கே நின்றான். "நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்றான். "பின்னே தெரியாமல் இருக்குமா? விருந்தில் தாரிணியைப் பார்த்துப் பேசியதில் மதி மயங்கிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அது உண்மைதானே?" என்று சொல்லித் தாமா மறுபடியும் சிரித்தாள். "அதில் ஒரு பாதிதான் உண்மை; தாரிணியைப் புரட்சிக்காரி என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்து கொண்டீர்களா?" என்று ராகவன் கேட்டான். "மிஸ்டர் ராகவன்! அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்கள்?"
"புரட்சிக்காரியாயிருந்தால் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியுமா? விருந்து கொடுத்த நிர்வாக சபை அங்கத்தினரும் அவருடைய மனைவியும் தாரிணியிடம் எவ்வளவு சிநேகமாக நடந்து கொண்டார்கள் பார்க்கவில்லையா? இன்னும் என்ன அத்தாட்சி வேண்டும்?" "ஓ! ராகவன்! சில காரியங்களில் நீங்கள் இன்னும் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள்! தாரிணி புரட்சிக்காரியாயிருந்தால் அவள் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியாதா? அது அவள் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் காட்டுகிறது!" "நம்முடைய சி.ஐ.டி. போலீஸார் எவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பதையும் காட்டுகிறது?" என்றான் ராகவன். "அதுவும் உண்மை சி.ஐ.டி. போலீஸார் வேண்டுமென்று தான் அவளை விட்டு வைத்திருக்கிறார்கள். டில்லியில் புரட்சிக் கூட்டம் தங்கும் இரகசிய இடம் ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப் பதற்காக அவளைப் பிடிக்காமல் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!" என்றாள் தாமா. "அப்படியா? நம்ப முடியாத விஷயமாக இருக்கிறதே!" "நீங்கள் நம்ப முடியாத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அது போகட்டும் இன்றைக்கு வீட்டுக்குப் போவதற்கு அவசரம் என்ன?" "இரண்டு நாளாகச் சீதாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது. அவளுடைய மனோநிலை மேலும் கெட்டிருக்கிறது. அதனால் தான் சீக்கிரம் வீடு போகிறேன். ஒரு மாதம் லீவு எடுத்து அவளை மதராஸில் கொண்டு போய் விட்டு வரலாம் என்று இருக்கிறேன்." "ஓகோ! இப்போது தெரிகிறது; நீங்களும் சீதாவும் மட்டும் போகிறீர் களா? தாரிணியும் கூட வருகிறாளா?" "நீங்கள் சீதாவை மதராஸில் கொண்டு போய் விட்டு விட்டுப் பம்பாய்க்குப் போகப் போகிறீர்களாக்கும்!" "உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட இருந்து கேட்டது போலச் சொல்லுகிறீர்களே?" என்றான் ராகவன் அதிசயத்துடன். "பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும் என்ற பழமொழி தெரியாதா?" என்றாள் பாமா.
இந்தச் சமயத்தில் பங்களாவுக்குள்ளே டெலிபோன் மணி அடித்தது. ஏற்கெனவே பங்களாவுக்குள் சென்றிருந்த ஸ்ரீ ஆதிவரா காச்சாரியார் டெலிபோனை எடுத்து "யார்?" என்று கேட்டு விட்டு, "மிஸ்டர் ராகவனுக்கு டெலிபோன்" என்றார். ராகவன் உள்ளே போய் டெலிபோனை வாங்கிச் செய்தியைக் கேட்டான். அவனுடைய முகத்தில் கவலையும் பயமும் குடிகொண்டன. "என்ன? என்ன?" என்று தாமாவும் பாமாவும் கேட்டார்கள். "சீதா சாயங்காலம் வெளியில் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லையாம் வேலைக்காரன் சொல்கிறான்!" "சீக்கிரம் போய்ப் பாருங்கள்; சாயங்காலம் எட்டு மணி சுமாருக்கு ஜந்தர் மந்தர் பக்கத்தில் ஏதோ கலாட்டா என்றும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்றும் விருந்தில் பேசிக் கொண்டார்கள்!" என்றாள் தாமா. "சீதாவுக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?" என்று ராகவன் கேட்டான். "இந்தக் காலத்தில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் உடனே போய்ப் பாருங்கள். ஏதாவது உதவி தேவையாயிருந்தால் எங்களுக்கு டெலிபோன் பண்ணத் தயங்க வேண்டாம்!" என்றாள் பாமா. "ஆமாம் அப்பா! சீக்கிரம் போய்ப் பார்! அவசியமாயிருந்தால் டெலிபோன் பண்ணு!" என்றார் ஆதிவராகாச்சாரியார்.
சௌந்தரராகவன் வீடு போய்ச் சேர்ந்த பிறகு புதிய விவரம் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சாயங்காலம் வழக்கம் போல் உலாவச் சென்ற அம்மாள் திரும்பி வீட்டுக்கு வரவில்லை என்று மட்டும் வேலைக்காரர்கள் சொன்னார்கள். "யாராவது சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் ஏதாவது வந்ததா?" என்று ராகவன் கவலையுடன் கேட்டான். "சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் வரவில்லை. ஆனால் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நாலு தடவை கூப்பிட்டார்கள்" என்று சமையற்காரப் பையன் சொன்னான். ராகவன் சிறிது திடுக்கிட்டு, "போலீஸ் ஸ்டேஷனிலிருந்து என்ன செய்தி வந்தது?" என்று கேட்டான். "ஒன்றும் இல்லை எஜமான் வீட்டுக்கு வந்துவிட்டாரா? என்று கேட்டார்கள் அவ்வளவுதான்!" என்றான் சமையற்காரப் பையன். பிறகு ராகவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு டெலிபோன் செய்தான். அவனுக்குத் தெரிந்த சிநேகிதரான போலீஸ் உத்தியோகஸ்தர் பேசினார். "யார் மிஸ்டர் ராகவனா? உங்களை ஒன்பது மணியிலிருந்து கூப்பிட்டுக் கொண்டி ருக்கிறேன். விருந்துக்குப் போய் இப்போது தான் திரும்பினீர்கள் போலிருக்கிறது! இங்கே உடனே புறப்பட்டு வந்தால் நல்லது!" என்றார்."என்ன விசேஷம்?" என்று ராகவன் கேட்டான் "விசேஷத்தை நேரில் தான் சொல்ல வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்!" என்று சொன்னார் போலீஸ் அதிகாரி. "இங்கே எனக்கு ஒரு தொந்தரவு நேர்ந்திருக்கிறது. என்னுடைய மனைவி சீதா சாயங்காலம் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லை தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை!" "ஓஹோ! அப்படியா சமாசாரம்? நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டியது இன்னும் முக்கியமாகிறது!" என்றார் அதிகாரி.
சௌந்தரராகவன் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் முதலில் சீதாவைப் பற்றி அவனிடமிருந்து தகவல் கேட்டுக்கொண்டார். வேலைக்காரர்கள் சொல்வதை அவரிடம் கூறிவிட்டு "உங்களிடம் ஏதாவது தகவல் கிடைத் திருக்கிறதா?" என்று ராகவன் கேட்டான். "கிடைத்திருக்கிறது ஆனால் உபயோகமான தகவல் இல்லை!" என்றார் இன்ஸ்பெக்டர். பிறகு, ஒரு கைத்துப் பாக்கியை எடுத்து மேஜை மேல் வைத்து, "இது யாருடையது, தெரியுமா?" என்றார். ராகவன், அதைப் பார்த்துத் திடுக்கிட்டான் பிறகு தயக்கத்துடன் "எனக்குத் தெரியாதே!" என்றான். "ராகவன்! என்னிடமே மறைக்கப் பார்க்கிறீரா? அழகாயிருக்கிறது!" என்றார் இன்ஸ்பெக்டர். "இல்லை; ஆமாம்; மன்னிக்க வேண்டும் முதலில் பார்த்த போது தெரியவில்லை; என்னுடையது தான் எப்படிக் கிடைத்தது?" என்று உளறித் தடுமாறினான் ராகவன். "நீங்கள் தகவல் கொடுத்திருந்தீர்கள் அல்லவா? அந்தப் புரட்சிக்கார ஆளிடந்தான் இருந்தது அவனுக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? யார் கொடுத்திருப்பார்கள்?" "சத்தியமாக எனக்குத் தெரியாது!" என்றான் ராகவன். பிறகு அவனை இன்ஸ்பெக்டர் போலீஸ் ஸ்டேஷன் 'லாக் - அப்' அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே சூரியா தலையிலும் தோளிலும் கட்டுக்களுடன் உணர்வின்றிப் படுத்திருந்தான். "இவனைக் கைது செய்வது சுலபமான காரியமாயில்லை. நாலு போலீஸ் ஜவான்களைத் திமிறிக்கொண்டு தப்பிக்கப் பார்த்தான். அதன் பயனாக இவன் மண்டையிலும் தோளிலும் நல்ல அடி! மண்டை பிளந்தே விட்டது!" என்றார் இன்ஸ்பெக்டர்.