அலை ஓசை/எரிமலை/யமுனை தடுத்தது
பதினேழாம் அத்தியாயம் யமுனை தடுத்தது
சீதாவை ஏற்றிக்கொண்ட மோட்டார் புது டில்லியிலிருந்து ஷாஜஹான் புரத்தை நோக்கி அதிவிரைவாகச் சென்றது. வெள்ளி வீதி வழியாகப் போய், ஜும்மா மசூதியைத் தாண்டி, செங்கோட்டையை வலப் புறத்தில் விட்டு, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து அப்பால் சென்று, யமுனைப் பாலத்தை நெருங்கிற்று. முதலில் சிறிது நேரம் சீதா திக்பிரமை கொண்டிருந்தாள். பின்னர் சூரியாவின் எச்சரிக்கை நினைவு வந்தது. தன்னைப் பின் தொடர்ந்து சூரியா வருகிறான் என்ற எண்ணத்தினால் சற்றுத் தைரியமாயிருந்தாள். எப்படியும் சூரியாவின் கார் இந்தக் காரைப் பிடித்துவிடும் என்று நம்பியிருந்தாள். ஆனால் யமுனைப் பாலத்தைக் கார் நெருங்கியதும் அவளுடைய மனதில் 'திக்' என்றது. அது மிகவும் குறுகலான பாலம், வண்டிகள் ஒரு வரிசை தான் அதில் போகலாம். இரண்டு பக்கத்திலிருந்தும் வரும் வண்டிகள் ஒரே சமயத்தில் அந்தப் பாலத்தில் போக முடியாது. பாலத்தின் இரு முனைகளிலும் போலீஸ்காரர்கள் நிற்பார்கள். ஒரு பக்கத்துக் கார்களை விடும்போது மற்றொரு முனையில் உள்ள போலீஸ்காரர்கள் அங்கு வரும் கார்களையெல்லாம் தடுத்து நிறுத்தி வைப்பார்கள். பிறகு இந்த முனையிலிருந்து கார்களை விடும்போது அந்த முனையிலிருந்து வரும் வண்டிகளை நிறுத்தி வைப்பார்கள். இது சீதாவுக்கு நினைவு வந்தது. தான் ஏறியுள்ள வண்டியைப் பாலத்தில் போக விட்டு விட்டு, பின்னால் வருகிற சூரியாவின் காரை நிறுத்திவிட்டால் என்ன செய்கிறது என்ற துணுக்கமடைந்தாள். சூரியாவின் வண்டியோ பின்னால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் வந்து கொண்டிருந்தது.
சீதா பயந்தவண்ணமே ஆயிற்று; அவள் ஏறியிருந்த வண்டி பாலத்தில் சென்றதும், பின்னால் வருகிற வண்டிகள் நிற்க வேண்டும் என்று போலீஸ்காரன் கையைக் காட்டி விட்டான். சீதாவின் வண்டி பாலத்தைக் கடந்தவுடனே அந்த முனையில் காத்திருந்த வண்டிகள் பாலத்தில் விடப்படுவதைச் சீதா கவனித்தாள். உடனே ஒரு பெரும் பீதி சீதாவை பற்றிக் கொண்டது. அவளுடைய வயிற்றிலிருந்து குடல் மேலே கிளம்பி மார்பை அடைத்தது போலவும் மார்பிலிருந்து நெஞ்சு கிளம்பித் தொண்டையை அடைத்தது போலவும் இருந்தது. தலைக்குள்ளே வெடிகுண்டு வெடித்து நாலாபுறமும் சிதறிச் சென்றது போலத் தோன்றியது. தன்னையறியாத ஆக்ரோஷத்துடன் 'வீல்' என்று ஒரு தீர்க்கமான கூச்சல் போட்டுக் கொண்டு சீதா ஓடுகிற காரிலிருந்து குதிக்க முயன்றாள். பக்கத்திலிருந்த மனிதன் அவளுடைய முகத்தைப் பார்த்து ஓங்கி ஒரு அறை கொடுத்தான் உடனே சீதாவின் கூச்சல் நின்றது. காரிலிருந்து குதிக்கும் முயற்சியும் நின்றது. வண்டிக்குள் நிசப்தம் குடிகொண்டது. எதிர்ப்புறமாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளிலிருந்து சிலர் இந்த வண்டியிலிருந்து ஏதோ கூச்சல் வந்ததைக் கவனித்துக் காரை உற்றுப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாதபடி சீதாவை ஏற்றிக் கொண்டிருந்த மோட்டார் வண்டி அதிவேகமாகச் சென்றது.
அந்த முரட்டு மனிதன் முகத்தில் கொடுத்த அறை சீதாவுக்கு தன் சுய புத்தியைத் திருப்பிக் கொடுத்தது. ஒரு நொடியில் அவள் மனம் அமைதி அடைந்தது. தன்னுடைய நிலைமையைப் பற்றிச் சீதா நிதானமாக யோசிக்கத் தொடங்கினாள். சாயங்காலம் சூரியா தனக்கு எச்சரிக்கை செய்தபோது தான் அலட்சியமாகப் பேசியதை ஞாபகப்படுத்திக் கொண்டாள். இப்போது தனக்கு உண்மையிலேயே ஆபத்து வந்து விட்டது. யார் தன்னைக் கொண்டு போகிறார்கள்? எதற்காகக் கொண்டு போகிறார்கள்? வட இந்தியாவில் அவ்வப்போது நடந்த நர கோரங்களைப் பற்றியும் பெண் விற்பனையைப் பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த வரலாறுகள் அலையலையாக நினைவுக்கு வந்தன. எங்கேயாவது கொண்டுபோய்த் தன்னை விற்று விடுவார்களோ என்று எண்ணிய போது அவளுடைய தேகம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் நடுங்கியது. அல்லது ஒருவேளை யாராவது ஒரு துர்த்தனான மகாராஜா அல்லது நவாபின் அந்தப்புரத்தில் கொண்டு போய்த் தன்னைச் சேர்த்து விடுவார்களோ? இந்த மாதிரிச் சம்பவங்களைப் பற்றியும் அவள் கேட்டிருந்தாள்; கதைகளிலும் பத்திரிக்கைகளிலும் படித்திருந்தாள். தன் விஷயத்தில் அப்படியெல்லாம் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை ஆனால் இப்போது...? ஒரு விஷயம் நிச்சயம் வெறும் கூச்சல் போடுவதினாலோ பலாத்காரத்தினாலோ இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முடியாது.
தான் படித்திருந்த நாவல்களில் இம்மாதிரியான அபாயத்துக்குள்ளான பெண்கள் என்னென்ன விதமான தந்திரங்களைக் கையாண்டு தப்பினார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். ஞாபகத்துக்கு வந்தது ஒன்றும் தன் விஷயத்தில் காரியத்துக்கு உதவும் என்றும் தோன்றவில்லை. தெய்வாதீனமான உதவிகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்ததினாலேயே அவர்கள் தப்பியிருக் கிறார்கள். தனக்கோ, வந்த உதவியையும் தெய்வம் குறுக்கே நின்று தடுத்துவிட்டது! ஆகா! யமுனா நதியே! கண்ணன் விளையாடிய புண்ணிய யமுனா நதியே! உனக்கு நான் என்ன அபசாரம் செய்தேன்? ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாய்? நல்ல சமயத்தில் சூரியாவைத் தடுத்து நிறுத்தி விட்டாயே? எத்தகைய பயங்கரமான படுகுழியில் விழப் போகிறேனோ தெரியவில்லையே? ஆனால் அதற்குள்ளாக ஏன் நிராசை அடைய வேண்டும்? சூரியா எப்படியும் தொடர்ந்து வராமல் இருந்து விடுவானா? கால் மணி தாமத மாயிருக்கும் அவ்வளவுதானே? அதற்காகத் தன்னைப் பின் தொடர்வதை விட்டு விடுவானோ? ஒருநாளும் மாட்டான் வந்து கொண்டு தானிருப்பான். ஆகையால் இந்தக் காரை எங்கேயாவது தாமதப்படுத்தினால் நல்லது; அது ஒன்றுதான் வழி எப்படிக் காரைத் தாமதப்படுத்துவது? ஆம்; எங்கேயாவது ஊர் கண்ட இடத்தில் 'தாகமாயிருக்கிறது' என்று சொல்லலாம். அப்புறம் 'பசிக்கிறது' என்று சொல்லலாம். அதற்கு அந்த மனிதர்களோடு நல்லதனமாகப் பேசி முன்னாடியே சிநேகம் செய்து கொள்ள வேண்டும்.
இப்படிச் சீதா தீர்மானித்து எப்படிப் பேச்சுத் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்த மனிதனே பேசினான். "மகளே நீ கூச்சல் போடாமலும் தொந்தரவு கொடுக்காமலும் இருந்தால் உமக்கு ஒரு கஷ்டமும் ஏற்படாது. நன்மைதான் ஏற்படும் உன்னை அடிக்க நேர்ந்ததற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன்!" என்றான். அந்த மனிதன் நடுப்பிராயத்தைக் கடந்த முதிய மனிதன் என்பதைச் சீதா கவனித்திருந்தாள். அவனுடைய குரலும் பேச்சின் பாணியும் உண்மையாகவே அவன் அன்புடனும் அனுதாபத்துடனும் பேசுகிறான் என்று தெரியப்படுத்தின. ஆகையால் சீதா மனதைத் திடப்படுத்திக் கொண்டு "நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துக்கொண்டு போகிறீர்கள்?" என்று கேட்டாள். "அப்படிக் கேள், சொல்கிறேன்! உன்னை உன் மாதாஜியிடம் அழைத்துப் போகிறோம்" என்று அந்த மனிதன் சொன்னான். சீதாவுக்கு குபீர் என்று சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. அவளுடைய மாதாஜி இறந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. அகண்ட காவேரிக் கரையில் அன்னையின் உடம்பு எரிந்து சாம்பலாகி எவ்வளவோ காலம் ஆயிற்று. அதற்குப் பிறகு சென்ற காலம் ஒரு யுகம் போலத் தோன்றியது. இப்போது இந்த வடக்கத்தியான் "உன்னை உன் தாயாரிடம் அழைத்துப் போகிறேன்" என்கிறான் இது என்ன பைத்தியக் காரத்தனம்?
ஒருவேளை கனவு காண்கிறோமா? அல்லது தனக்கு மரணமே சம்பவித்து விட்டதா! மரணத்துக்குப் பிறகு நடப்பதா இது? இவர்கள்தான் யம தூதர்களா? உண்மையிலேயே மறு உலகத்தில் உள்ள தன் தாயாரிடம் தன்னை அழைத்துச் செல்கிறார்களா....அப்படி இருக்க முடியாது மறு உலகப் பிரயாணம் மோட்டாரில் நடைபெறும் என்று கேட்டதே இல்லையே? இந்த மனிதர்களும் ஆவி வடிவத்தினராகத் தோன்றவில்லையே? சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளச் சீதா தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். கிள்ளிய இடத்தில் வலித்தது தான் உயிரோடும் உடலோடும் இருப்பது நிச்சயம். பின்னர், இந்த மனிதன் இப்படிச் சொல்லுவதின் அர்த்தம் என்ன? அவன் சொன்னதைத் தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் சீதாவுக்கு உதித்தது. "என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?" என்று அந்த மனிதனைப் பார்த்து மறுபடி கேட்டாள். "அதுதான் சொன்னேனே? உன் தாயாரிடம் அழைத்துப் போகிறோம். சகோதரரும் உன்னைப் பார்க்க ஆவலாயிருக் கிறார்!" என்று அம்மனிதன் சொன்னான். சீதாவின் திகைப்பு அதிகமாயிற்று சகோதரன்! தன்னுடைய சகோதரன்! சீதாவுக்கு முன்னால் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி அவளுடைய தாயார் சில சமயம் கூறியதுண்டு. ஆனால் பிறந்து மூன்று மாதத்திற்குள் அந்தக் குழந்தை செத்துப் போயிற்று. அதைக் குறித்து அடிக்கடி அவள் தாயார் புலம்புவாள். "அவன் முகத்திலே பால் வடிந்தது, ராஜகளை சொட்டியது சிரித்தால் ரோஜா மொட்டு மலருவதைப் போல இருக்கும்.
அவன் உயிரோடிருந்தால் எனக்கு ஒரு கவலையும் இல்லை. உன் தகப்பனார் இந்த மாதிரி இருப்பதைப் பற்றிக் கவலைப் படவே மாட்டேன். எனக்கும் உனக்கும் கொடுத்து வைக்கவில்லை!" என்று ராஜம்மாள் அடிக்கடி புலம்பியது சீதாவுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அந்தக் குழந்தை தான் பிறப்பதற்கு இரண்டு வருஷம் முன்பே செத்துப் போயிற்று. வேறு சகோதரன் தனக்குக் கிடையாது. ஆகா! உண்மையிலேயே ஒரு சகோதரன் மட்டும் தனக்கு இருந்திருந்தால்?.... இத்தகைய கஷ்டங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமா? இந்த மனிதன் தன்னைப்பார்க்க சகோதரன் காத்துக்கொண்டிருப்பதாக உளறுகிறான்! எதற்காக இம்மாதிரி இவன் பொய் சொல்ல வேண்டும்?..... சீதாவின் எண்ணப் போக்கில் திடீரென்று ஒரு தடை ஏற்பட்டது. ஏதோ ஒரு நிழல் போன்ற எண்ணம் ஆச்சரியமான சந்தேகம் சாத்தியமென்று நம்புவதற்கு முடியாத அபிலாஷை... தோன்றியது. ஆனால் ஏன் உண்மையாயிருக்க முடியாது? இந்த மனிதன் எதற்காக இப்படிப்பட்ட பொய்யைக் கற்பனை செய்து சொல்ல வேண்டும்? தன்னுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஒரு மர்மம் இருக்க வேண்டும் என்று சில சமயம் தான் பகற்கனவு கண்டது உண்மையாயிருக்குமோ? "கல்யாணத்தை நிறுத்தி விடவும்" என்று தன் தகப்பனார் தந்தி அடித்ததின் காரணத்தை அவர் சொல்லவே இல்லை. அதைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஏதேனும் உண்மை இருக்குமோ? சீச்சீ! என்ன அசட்டுத்தனம்! ஓயாமல் கற்பனைக் கதைகளும் மர்மம் நிறைந்த நாவல்களும் படித்ததின் பலனே இந்தப் பிரமையெல்லாம் என்று பல தடவை அவற்றை ஒதுக்கித் தள்ளியிருக்கிறோமே? மறுபடியும் அந்தப் பிரமைகளுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?
ஆனால் இப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் கற்பனைக் கதைகளையெல்லாம் மிஞ்சியதாயிருக்கிறதே! துப்பறியும் நாவல்களில் வரும் மர்மத்தைக் காட்டிலும் பெரிய மர்மமாயிருக்கிறதே! உண்மையில் இந்த மனிதர்கள், யார்? எதற்காகத் தன்னைக் கொண்டு போகிறார்கள்? போகுமிடத்தில் என்னுடைய கதி என்ன ஆகப் போகிறது!... கொஞ்ச தூரத்தில் தீப வரிசைகள் தெரிந்தன. ஏதோ ஒரு பட்டணத்தை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியான சந்தடி கேட்டதுடன் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஒருவேளை சூரியா பின்தொடர்ந்து வருவதாயிருந்தால் அவனுக்கு இந்தக் காரைப் பிடிக்க அவகாசம் ஏற்படுவதற்கு யுக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் சீதாவின் மனதில் உதித்தது. "எனக்கு வயிற்றைப் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது சாப்பிடுவதற்காவது குடிப்பதற்காவது ஏதாவது கிடைக்குமா?" என்று சீதா கேட்டாள். காரைத் தாமதப்படுத்த வேண்டும் என்றுதான். "ஆகட்டும்; பார்க்கலாம்" என்றான் அந்த மனிதன். சீதாவுடன் இதுவரையில் ஹிந்தியில் பேசி வந்தவன் காரின் முன் பகுதியில் இருந்தவர்களிடம் வேறொரு பாஷையில் ஏதோ பேசினான். அந்த பாஷை பஞ்சாபியாகவோ அல்லது மார்வாரியாகவோ இருக்க வேண்டும் சீதாவுக்கு நன்றாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பட்டணத்தின் குறுகலான வீதிகளின் வழியாகக் கார் சென்றது. கடைத் தெருவில் ஒரு ஹோட்டலுக்கு எதிரில் நின்றது. அந்த ஹோட்டல் வாசலில் பூரிகள், லட்டுகள் மற்றும் தித்திப்புப் பண்டங்கள் விற்பதற்கு வைத்திருந்தன.அந்தப் பண்டங்களின் மீது ஆயிரம் கோடி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடுப்பில் சட்டுவத்தில் கொதித்துக் கொண்டிருந்த பழைய நெய்யின் மணம் சாக்கடை நாற்றத்தோடு கலந்து வந்து மூக்கைத் தாக்கியது. வாய் அகன்ற பெரியதொரு பித்தளைச் சட்டுவத்தில் கெட்டியான பால் காய்ந்து கொண்டிருந்தது. காரிலிருந்து ஒருவன் இறங்கி அந்தக் கடையண்டை போனான்.
சீதாவுக்கு ஒரு கணம் அங்கே கூச்சல் போட்டு ரகளை செய்யலாமா என்று தோன்றியது. உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். தெருவிலே போய்க் கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்ததும், "இங்கே கூச்சல் போடுவது ஒரு ஆபத்திலிருந்து இன்னொரு ஆபத்தில் தாண்டிக் குதிப்பதாகும்" என்று அவளுக்குத் தோன்றியது. அது மட்டுந்தானா காரணம்? அவளுடைய உள்ளத்தின் அந்தரங்கத்தில், இந்தப் பிரயாணத்தின் முடிவுதான் என்ன? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் குடிகொண்டிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். மனித உள்ளத்தின் விசித்திரங்களைப் பூரணமாகக் கண்டறிந்தவர்கள் யார்? இறங்கிய மனிதன் பூரியும் மிட்டாயும் பொட்டணம் கட்டி எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய மண் சட்டியில் கொதிக்கின்ற பாலும் வாங்கிக் கொண்டு காரில் வந்து ஏறினான். வண்டியைத் தாமதப்படுத்தலாம் என்கிற சீதாவின் நோக்கம் அவ்வளவாக நிறைவேறவில்லை. ஏனெனில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் அந்த இடத்தில் வண்டி நிற்கவில்லை. அந்தப் பட்டணத்தைக் கடந்து கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் சாலையின் இருபுறமும் ஒரே பொட்டல் திடலாகக் காட்சியளித்தது. குட்டை குட்டையான கருவேல மரங்களையும் குத்துக் குத்தான புரசஞ் செடிகளையும் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. கொஞ்ச தூரம் அந்தச் சாலையில் சென்ற பிறகு கார் மறுபடியும் நின்றது. சீதாவைப் பார்த்து அந்த மனிதன், "பூரியும் மிட்டாயும் சாப்பிடுகிறாயா?" என்று கேட்டான். பூரி மிட்டாயின் பேரில் மொய்த்திருந்த ஈக்களின் ஞாபகம் வரவே சீதா, "வேண்டாம்" என்றாள். "பசிக்கிறது என்று சொன்னாயே?" என்று அந்த மனிதன் கேட்டான். "பூரி மிட்டாய் பிடிக்காது, அரிசிச் சாதம்தான் எனக்குப் பிடிக்கும்" என்று சொன்னாள் சீதா. "ஆகா; இந்தப் பெண்ணின் பேச்சைப் பார்! அரிசிச் சாதம் வேண்டுமாம்!" என்று சொல்லி அந்த மனிதன் சிரித்தான். பிறகு, "கொஞ்சம் பாலாவது சாப்பிடு" என்றான். அதையும் வேண்டாம் என்று சொல்லுவது சந்தேகத்துக்கு இடமாகும் என்று சீதா எண்ணி, "சரி சாப்பிடுகிறேன்" என்றாள். மண் சட்டியிலிருந்து டம்ளரில் பாலை ஊற்றிச் சீதாவிடம் கொடுத்தார்கள். பால் கமகமவென்று ஏலக்காய், குங்குமப்பூ மணம் வீசிக்கொண்டி ருந்தது. சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் இருந்தது.
சீதா பால் சாப்பிட்டவுடன் கார் மறுபடியும் கிளம்பிற்று. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. இது தூக்கம்தானா? அல்லது மயக்கமா? ஒருவேளை பாலில் எதையாவது கலந்து கொடுத்திருப் பார்களா? சீதா உடம்பு சுரமாய்க் கிடந்தபோது ஒவ்வொரு நாள் மருந்து சாப்பிட்ட பிறகு இப்படித்தான் மயக்கமும் தூக்கமும் கலந்து வந்தது என்பது ஞாபகம் வந்தது. "ஐயோ! மயக்க மருந்து எதற்காகக் கொடுத்தார்கள். தன்னைக் கொன்று விடுவார் களோ? கொன்று அந்த வனாந்தரத்தில் எறிந்து விடுவார்களோ? ஐயோ! இந்தக் கதிக்கா ஆளாகப் போகிறேன். என் அருமைக் கண்மணியைப் பார்க்காமல் போகிறேன்? ஆகா! அவருக்கு நன்றாய் வேண்டும்! நான் கொலையுண்டு செத்துப் போனதை அறிந்து அவர் சந்தோஷப்படட்டும்! ஒரு கணம் கூச்சல் போடலாமா என்று சீதா நினைத்தாள். ஆனால் கூச்சல் போட முடியவில்லை. கண்ணைச் சுழற்றியது தலை சுற்றியது; உடம்பு சோர்ந்தது. சாலையில் மறுபடியும் வண்டி நின்றது போலத் தோன்றியது. எதிரில் வந்த ஒரு வண்டி பக்கத்தில் நின்றது ஏதோ தெரியாத பாஷையில் பேசிக் கொண்டார்கள். கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது. புதிதாக வந்த காரிலிருந்து ஒரு மூதாட்டி இறங்கி வந்து சீதா இருந்த வண்டியில் அவள் பக்கத்தில் ஏறிக் கொண்டது போலிருந்தது. அப்புறம் சீதா அடியோடு நினைவை இழந்து நித்திரையில் ஆழ்ந்தாள்.