அலை ஓசை/எரிமலை/லலிதாவின் கடிதம்
இருபத்து ஐந்தாம் அத்தியாயம் லலிதாவின் கடிதம்
காலை நேரத்தில் அரைமணி நேரம் சடசடவென்று பெய்த மழையினால் கல்கத்தாவின் வீதிகள் சுத்தமாக விளங்கின. ஓரங்களில் வளர்ந்திருந்த செழுமையான மரங்களிலிருந்து மழைத் துளிகள் முத்து முத்தாகச் சொட்டிக் கொண்டிருந்தன. பட்சிகள் சிறகுகளை அடித்து மழைத் துளிகளை உதறிக் கொண்டிருந்தன. மேல் மாடியின் பலகணி மாடத்தில் உட்கார்ந்து சித்ரா அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன் அமரநாத் ஆபீஸுக்கு போவதற்காக உடுப்புத் தரித்துக் கொண்டிருந்தான். "இன்றைக்கு சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுவீர்களா? மழை பெய்திருக்கிறபடியால் ஏரிக்கரை இன்று ரொம்ப சுகமாயிருக்கும் சீக்கிரம் வந்தால் போகலாம்!" என்றாள் சித்ரா. "சரிதான், சரிதான்! அன்றைக்கு ஒரு நாள் ஏரிக்கரைக்குப் போனது போதாதா? அன்றிலிருந்து ஏரி என்றாலே எனக்குப் பயமாயிருக்கிறது. திரும்பி வரும்போது பஞ்சத்தில் அடிப்பட்ட இன்னும் ஒரு பெண்மணி யாரையாவது காப்பாற்ற வேண்டி நேரிட்டால்? அதைக் காட்டிலும் ஏதாவது நல்ல சினிமாவுக்குப் போய்விட்டு வந்தாலும் வரலாம் 'அன்னா கரினா' வந்திருக்கிறதாம்!..." "புருஷர் களுடைய காரியமே விசித்திரமா யிருக்கிறது. நாடகத்திலும் சினிமாவிலும் யாராவது ஒரு அனாதைப் பெண் வீதியிலே கிடந்தால் அதைப் பார்த்து உருகிப் போய்விடுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அந்த மாதிரி ஒரு பெண் கிடந்தால், அந்தப் பக்கமே பார்க்காமல் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்..." "அது உண்மைதான்; யார் இல்லை என்கிறார்கள்? அதற்குக் காரணம் இருக்கிறது. சினிமாவில் ஒரு பெண் தெருவில் கிடந்தாள் என்றால், அவள் சாமான்யப் பெண்ணாயிருப்பாளா? ஒரு கிரேடா கார்போ, அல்லது நார்வா ஷியரர் அல்லது கண்ணன் பாலா அவ்விதம் விழுந்து கிடப்பாள். பார்க்கிறவர்களுடைய மனம் கட்டாயம் உருகத்தான் செய்யும்.."
"கொஞ்சம் நில்லுங்கள், மிஸ்டர்! அன்றைக்குத் தாங்கள் பெரிய மனது செய்து காரிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்க் காப்பாற்றினீர்களே, அந்தப் பெண் உங்கள் கிரேடா கார்போ அல்லது உங்கள் கண்ணன் பாலாவுக்கு எந்த விதத் திலும் குறைந்தவள் அல்ல! நான் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்! இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள்! இரண்டு பேருமாகப் போய் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குப் போவோம். கல்கத்தா நகரத்தைச் சுற்றிக்காட்டுவதாக அவளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறாள்" என்றாள் சித்ரா. "முடியவே முடியாது! அந்த மாதிரி நீ சொல்வதாயிருந்தால் நான் ஆபீஸிலிருந்து இராத்திரி பத்து மணிக்குத்தான் திரும்பி வருவேன். நம்முடைய திருநெல்வேலிப் பக்கங்களில் 'விருதுப்பட்டிக்குப் போகிற சனியனை விலைக்கு வாங்கினாற் போல்' என்பார்கள். அம்மாதிரியல்லவா இருக்கிறது நீசொல்லுகிற காரியம்?" "ஊர்பேர் தெரியாத ஒரு அனாதைப் பெண்ணிடம் உங்களுக்கு என்னத்திற்காக இவ்வளவு கொடூரம்?" என்று கேட்டாள் சித்ரா. "ஊர் பேர் தெரியாததினால்தான் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவள் யோக்யமான ஸ்திரீயாயிருக்கும் பட்சத்தில் ஊர் பேர் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? இன்னும் சொல்லாமல்தானே இருக்கிறாள்" என்றான் அமரநாத். "அதனால் என்ன? எத்தனையோ காரணம் இருக்கலாம். ரொம்பவும் துக்கப்பட்டவளாகத் தெரிகிறது. அவளுடைய யோக்யதையைப் பற்றி எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் நான் சத்தியம் செய்யத் தயாராயிருக்கிறேன். அனாதை விடுதியின் தலைவி சௌதாரிணி அம்மாள் இந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லுகிற புகழ்ச்சிக்கு அளவேயில்லை. தினம் ஐம்பது அனாதைக் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி விடுகிறாளாம்! அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறாளாம். அவள் இங்கேயே இருந்துவிட்டால் எவ்வளவோ தனக்கு உதவியாயிருக்கும் என்று சௌதாரிணி அம்மாள் சொல்லுகிறாள்."
"அவ்வளவு நல்ல பெண்ணாயிருக்கும் பட்சத்தில் ஊர், பேர் சொல்ல எதற்காக மறுக்க வேண்டும்?" என்று அமரநாத் மீண்டும் வற்புறுத்திக் கேட்டான். "யார் கண்டது, அவளுடைய கணவன் உங்களைப் போன்ற கொடூர குணம் உள்ளவனா யிருக்கலாம்! இவளை அடித்துத் துரத்தியிருக்கலாம்! அதைச் சொல்லிக் கொள்ள அவள் வெட்கப்படலாம்!" "சரி, சரி! உன்னை நான் ஒரு நாளைக்கு வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறேனா, இல்லையா, பார்!" என்றான் அமரநாத். "நீங்கள் அப்படிச் செய்தால் நான் இந்தச் சாதுப் பெண்ணைப் போல் வாயை மூடிக்கொண்டிருப்பேன் என்று நினைக்க வேண்டாம்! என்னை அடித்துத் துரத்திய அருமைக் கணவர் யார் என்பதை ஊரெல்லாம் பறையடித்து விடுவேன்!" என்றாள் சித்ரா. இந்தச் சமயத்தில் வேலைக்காரப் பையன் அன்றைய தபால்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அமரநாத் முதலில் தபால்களைப் புரட்டிப் பார்த்து, "ஸ்ரீ மதி சித்ரா தேவிக்கு ஒரு கடிதம் இருக்கிறது. லலிதா தேவி எழுதியதாகத் தோன்றுகிறது!" என்று சொல்லிக் கொண்டே ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். பிறகு தன் தபால்களைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். சித்ரா தனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குப் படிப்பதற்குப் போனாள். ஐந்து நிமிஷத்துக் கெல்லாம், "கேட்டீர்களா கதையை?" என்று கூவிக் கொண்டே ஓடிவந்தாள். அமரநாத் நிமிர்ந்து சித்ராவைப் பார்த்துவிட்டு, "கதை பரபரப்புள்ள மர்மம் நிறைந்த திடுக்கிடும் கதையாக இருக்கும் போலிருக்கிறதே?
அப்படிப்பட்ட கதையை யார் எழுதியிருக்கிறது? லலிதாவா?" என்றான். "ஆமாம்; லலிதாவேதான் ஆனால் இதில் அவள் எழுதியிருப்பது வெறும் கதையல்ல, கதையைக் காட்டிலும் திடுக்கிடச் செய்யும் உண்மைச் சம்பவம். இதைப் படித்து பாருங்கள்!" என்று கடிதத்தை நீட்டினாள். "அதெல்லாம் முடியாது! உனக்கு வந்த கடிதத்தை நான் படிக்க மாட்டேன். அப்புறம் எனக்கு வரும் கடிதங்களை நீ படிக்க வேண்டும் என்பாய். ஏதாவது விசேஷ சமாசாரம் இருந்தால் வாயினால் சொல்லி விடு!" என்றான் அமரநாத். "உங்கள் மாதிரி பிடிவாதம் உள்ள மனுஷரை நான் பார்த்ததே கிடையாது. போனால் போகட்டும்! நான் சொல்லுவதையாவது கேளுங்கள். லலிதாவின் அண்ணன் சூரியா, டில்லியில் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடப் பார்த்தானாம். போலீஸார் அவனைச் சூழ்ந்து கொள்ளவே துப்பாக்கியால் சுட்டானாம். ஆனால் போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து விட்டார்களாம். அதனால் பலத்த காயம் பட்டு ஆபத்தான நிலைமையில் இருக்கிறானாம். இதைப்பற்றி லலிதா ரொம்பவும் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறாள். அவளுடைய அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுகிறார்களாம். வருத்தம் இராதா, பின்னே? இது போதாதற்கு இன்னொரு பெரிய விபத்து அவர்களுக்கு! அதுவும் டில்லி சமாசாரந்தான். சீதாவைத் திடீரென்று ஒரு நாள் காணோமாம்! எவ்விதத் தகவலும் சொல்லாமல் மாயமாய் மறைந்து போய்விட்டாளாம். சூரியா பிடிபட்டதும் சீதா காணாமல் போனதும் ஒரே நாளில் நடந்ததாம். சீதாவின் கணவன் லலிதாவின் தகப்பனாருக்கு அதைப்பற்றி எழுதி இருக்கிறானாம். ஒருவேளை தேவப்பட்டணத்துக்கோ ராஜம்பேட்டைக்கோ வந்து சேர்ந்தால் தனக்கு உடனே தகவல் தெரிவிக்கும்படி எழுதியிருக்கிறானாம்! சூரியாவுக்கு நேர்ந்த விபத்தைக் காட்டிலும் சீதாவைப் பற்றிய செய்திதான் லலிதாவை அதிகமாகத் துன்பப்படுத்தியிருக்கிறது. அதைப்பற்றி ரொம்பவும் புலம்பியிருக்கிறாள்!"
இதைக் கேட்டுக் கொண்டு வந்த அமரநாத் நடுவில் பெரும் யோசனையில் ஆழ்ந்து விட்டான். திடீரென்று குதித்து எழுந்து, "சித்ரா! நாலு நாளைக்கு முன்பு டில்லி சமாசாரம் ஒன்று பத்திரிகையில் வந்ததே; உனக்குப் படித்ததாக ஞாபகம் இருக்கிறதா?" என்று சொல்லிக் கொண்டே தினசரிப் பத்திரிகைகள் அடுக்கி வைத்திருந்த மூலைக்குப் போய் அங்கிருந்த பத்திரிகைகளைப் புரட்டத் தொடங்கினான். சில நிமிஷ நேரத்துக்குள் அவன் தேடிய பத்திரிகைச் செய்தி அகப்பட்டு விட்டது. "ஆகா! இதோ அந்தச் செய்தி இருக்கிறது! கேள், சித்ரா!" என்று செய்தியைப் படித்தான். "நாலு நாளைக்கு முன் சூரியநாராயணன் என்னும் புரட்சிக்காரன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி இந்தப் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட போது மேற்படி புரட்சிக்காரன் போலீஸாரை எதிர்த்ததன் காரணமாகப் பலமாக அடிக்கப்பட்டுக் காயம் அடைந்தான். இது காரணமாக அவனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காகச் சேர்த்துப் போலீஸ் காவலும் போட்டிருந்தார்கள். நேற்றிரவு ஆஸ்பத்திரியிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டு போய்விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. போலீஸ் காவலை மீறி அவன் எப்படித் தப்பித்துக் கொண்டு போனான் என்பது பெரிய மர்மமாயிருக் கிறது. இரகசிய போலீஸார் தீவிரமாகப் புலன்விசாரித்துக் கொண்டிருப்பதாய் அறிகிறோம் நிற்க, "சூரிய நாராயணன் கைது செய்யப்பட்ட அன்று மறைந்துவிட்ட புரட்சிக்காரி இன்னும் அகப்பட வில்லையென்று தெரிகிறது. அவள் மிகவும் சாமர்த்திய சாலி என்றும், புது டில்லியில் இரண்டு பெயர்கள் வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தியதாகவும், பெரிய பெரிய உத்தியோக வர்க்கக் குழாங்களில் பழகி வந்ததாகவும் தெரிய வருகின்றன. இந்தப் புரட்சிக்காரியைப் பற்றியும் இரகசிய போலீஸார் புலன்விசாரித்து வருகிறார்களாம்."
மேற்கண்ட செய்தியை மிகப் பரபரப்புடன் படித்து முடித்த அமரநாத், "இதைப் பற்றி என்ன நினைக்கிறாய் சித்ரா! 'சூரிய நாராயணன்' என்ற பெயரைப் பத்திரிகையில் படித்தபோது சூரியாவின் ஞாபகமே எனக்கு வரவில்லை. ஆனால் இது நம்முடைய சூரியாவாகத்தான் இருக்கவேண்டும். அவனுடைய சாமர்த்தியத்தை என்னவென்று சொல்லுவது? இத்தனை நாள் போலீஸுக்கு டிமிக்குக் கொடுத்து வந்தது பெரிதல்ல; மறுபடியும் ஆஸ்பத்திரியிலிருந்து போலீஸ் காவலை மீறித் தப்பித்துக் கொள்வது என்றால் சாமான்யமா? அதிலும், உடம்பெல்லாம் காயம்பட்டுக் கிடக்கும் நிலையில் - என்ன பேசாமல் நிற்கிறாய், சித்ரா! சூரியாவின் காரியம் உனக்கு அதிசயமாயில்லையா?" என்றான். "உங்கள் சூரியாவின் பெருமை இருக்கட்டும். நான் வேறொரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். மாயமாய் மறைந்த சீதாவைப் பற்றித்தான்! ஸார்! தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். இன்றைக்கு ஆபீஸுக்கு லீவு போட்டு விடுங்கள். டெலிபோனில் கூப்பிட்டுச் சொல்லி விடுங்கள். இரண்டு பேரும் பஞ்ச நிவாரண விடுதிக்குப் போய் விட்டு வரலாம்! இப்பொழுதே புறப்பட்டுப் போக வேண்டும்?" என்றாள் சித்ரா. "பஞ்ச நிவாரண விடுதிக்கு இப்போது என்னத்திற்கு? எதற்காக நான் லீவு எடுக்க வேண்டும்?" என்று அமரநாத் கேட்டான். "உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? அன்றைக்கு நாம் வீதி ஓரத்தில் கிடந்தவளை எடுத்துக் கொண்டு வந்து அனாதை விடுதியில் சேர்த்தோமே? அவளைப் பற்றி ஒரு சந்தேகம் உண்டாகிறது." "ஒருவேளை அவள் சீதாவாக இருக்கலாம் என்று சொல்லுகிறாயாக்கும்.
லட்சணமாகத்தான் இருகிறது? டில்லி எங்கே? கல்கத்தா எங்கே? அங்கேயிருந்து இங்கே எதற்காக அவள் வரவேண்டும்? அவளுடைய கணவன் எழுதியிருப்பது போலத் தேவப்பட்டணம் அல்லது ராஜம்பேட்டைக்குப் போயிருந்தாலும் அர்த்தம் உண்டு!" என்றான் அமரநாத். "ரொம்பப் புத்திசாலிதான்! சீதா புரட்சிக்காரி என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்! ராஜம்பேட்டை அல்லது தேவபட்டணத்துக்குப் போனால் போலீஸாருக்கு நோட்டீசு கொடுத்ததுபோல் ஆகாதா? கல்கத்தா தான் தலைமறைவாயிருக்கச் சரியான இடம் என்று வந்திருக்கிறாள். வந்த இடத்தில், பாவம் ஏதோ ஆபத்து நேர்ந்திருக் கிறது. அது இருக்கட்டும்; ஏன் ஸார்; நீங்கள் தான் முன்னே சீதாவைப் பார்த்திருக்கிறீர்களே? உங்களுக்கு அவளை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமே?" "கல்யாணத்தின் போது ஒரே ஒரு தடவை பார்த்தது தானே! அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னால்! எப்படி ஞாபகம் இருக்கும்? மேலும் அன்று இராத்திரி காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு வந்தபோது அவள் முகத்தையே நான் பார்க்கவில்லை. இருட்டாகவும் இருந்தது, எப்படி அடையாளம் சொல்வது?" "இப்போது வந்து நன்றாய்ப் பாருங்கள்; பார்த்து அந்தப் பெண் சீதாதானா என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!" "எனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை? சீதாவாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? நீயே கேட்டுத் தெரிந்துகொள். உன்னை அனாதை விடுதியில் கொண்டு போய் விட்டுவிட்டு நான் ஆபீஸுக்குப் போய்ச் சேர்கிறேன்" என்றான் அமரநாத். இரண்டு பேரும் காரில் ஏறிக் கொண்டு அனாதை விடுதிக்குச் சென்றார்கள். அமரநாத் சொன்னபடியே சித்ராவை அங்கே இறக்கி விட்டுவிட்டு, தான் ஆபீஸுக்குப் போனான்.