அலை ஓசை/எரிமலை/விடுதலை
இருபத்திரண்டாம் அத்தியாயம் விடுதலை
மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் சீதா திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதிக் கூண்டில் நின்றாள். அவளுடைய சித்தம் தன் சுவாதீனத்தை இழந்து பிரமை கொள்ளும் நிலைக்கு வந்திருந்தது. அரண்மனைச் சிங்கார வனத்தில் நடந்த சம்பவங்களைக் காட்டிலும் நேற்றிலிருந்து நடந்த சம்பவங்கள் அவளுடைய சுயபுத்தியைக் கொண்டு நம்ப முடியாதன வாயிருந்தன. முந்தாநாள் அவள் புராதனமான ராஜகுலத்தில் பிறந்த அரசிளங்குமரி தான் என்று கொஞ்சநேரம் எண்ணிப் பெருமிதம் கொண்டிருந்தாள். இன்றைக்கு அவள் ரயில்வே ஸ்டேஷனில் பெட்டி திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்டிருந்தாள். விசாரணை நடந்து கொண்டிருந்தது பிராஸிகியூஷன் தரப்பில் மூன்று நபர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொல்லி விட்டார்கள். மூன்று சாட்சிகளில் ஒருவன் அப்பெட்டியின் சொந்தக்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டான். ஆக்ரா ஜங்ஷன் பிளாட்பாரத்தில் இருந்த ஒரு பெஞ்சியில் தான் பெட்டியுடன் உட்கார்ந்திருந்ததாகவும், தாகம் எடுத்து ஒரு கப் 'சாய்' குடிப்பதற்குப் பாயிருந்ததாகவும், திரும்பி வந்து பார்க்கும்போது பெட்டியைக் காணோம் என்றும், அப்புறம் டெல்லி ரயிலில் அந்த அம்மாள் பெட்டியுடன் உட்கார்ந்திருந் ததைக் கண்டுபிடித் ததாகவும் அவன் சொன்னான். இந்தப் பெரும் பொய்யனுடைய பெயர் லாலா சத்தியப் பிரகாஷ் குப்தா என்று தெரிந்தபோது சீதா தன் பயங்கர நிலைமையிலும் புன்னகை செய்யாமலிருக்க முடியவில்லை. இன்னொரு சாட்சி மேற்படி லாலா சத்தியப் பிரகாஷினால் அழைத்து வரப்பட்ட போலீஸ் சேவகன். சத்தியப் பிரகாஷ் புகார் செய்ததின் பேரில் குற்றவாளி ஸ்திரீயை ரயிலிலிருந்து பெட்டி சகிதமாக இறக்கி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனதாக அவன் சாட்சி கூறினான்.
அடுத்தபடியாக மேற்படி போலீஸ் ஸ்டேஷனில் அச்சமயம் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாட்சியம் கூறினார். "இந்த அம்மாள் பெட்டி திருடியிருப்பாள் என்பதை முதலில் நான் நம்பவில்லை. ஆனால் சத்தியப் பிரகாஷ் வற்புறுத்திச் சொன்னதின் பேரில் இந்த ஸ்திரீயிடம் 'பெட்டி உன்னுடையது தானே; அப்படியானால் அதில் என்ன சாமான்கள் இருக் கின்றன?' என்று கேட்டேன். இந்த ஸ்திரீ பதில் ஒன்றும் சொல்லாமல் திகைத்து நின்றாள். ஆனால் சத்தியப் பிரகாஷ் குப்தா பெட்டியில் இருக்கும் சாமான்களுக்கு ஜாபிதா கொடுத்தான். சாவியும் அவனிடம் தான் இருந்தது. திறந்து பார்த்தால் அவன் சொன்ன சாமான்கள் எல்லாம் இருந்தன. இந்த அம்மாள் தன்னைப் பற்றி வேறு தகவல்களும் சரியாகக் கொடுக்கவில்லை. விலாசம் சொல்லக் கூட மறுத்து விட்டாள். ஆகையால் என்னுடைய முதல் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வழக்குப் பதிவு செய்தேன்" என்று இன்ஸ்பெக்டர் சாட்சி சொன்னார். இதையெல்லாம் சீதா கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த இன்ஸ்பெக்டர் கூறியதெல்லாம் உண்மை தான். பெட்டியில் என்ன இருந்தது என்பது தனக்கு உண்மையில் தெரியாது; ஆகையால் சொல்ல முடியாமல் திகைக்க நேர்ந்தது. தன்னுடைய சொந்த விலாசத்தைக் கொடுக்கவும் அவளுக்கு இஷ்டமில்லை. இந்த அவமானம் வேறே அவருக்கு வரவேண்டுமா என்றுதான் சொல்லவில்லை. தான் குற்றமற்றவள்; நிரபராதி இதை எப்படியும் நிரூபித்து விடலாம். நிரூபித்து விடுதலை பெறுவது நிச்சயம். பின் எதற்காகத் தன் கணவரை இந்த வெட்கக்கேட்டில் சம்பந்தப்படுத்த வேண்டும்? ஆனால் எப்படி நிரூபிப்பது?
தான் குற்றமற்றவள் என்பதை எவ்விதம் நிரூபிப்பது? அதற்கு வழி எவ்வளவு யோசித்தும் புலப்படவில்லை தன்னுடைய கதையை யார் நம்புவார்கள்? அந்தக் கோர்ட்டிலிருந்த வயோதிகரான வக்கீல் ஒருவர் சீதாவின் பேரில் கருணை கொண்டு அவளுடைய கட்சியை எடுத்துப் பேசுவதற்கு ஒப்புக்கொண்டார். தம்மிடம் உண்மையைச் சொல்லும்படி சீதாவைக் கேட்டார். சீதா உண்மையில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஆனால் அவர் ஒரேயடியாகத் தலையசைத்தார். "கதை ஜோடிக்கும் சாமர்த்தியம் உன்னிடம் அபாரமாயிருக்கிறது. எழுதும் சக்தியும் இருந்தால் பிரபல ஆசிரியை ஆகலாம். ஆனால் கோர்ட்டில் இந்தக் கதையை யாரும் நம்ப மாட்டார்கள். நீ உண்மையைச் சொல்ல மறுக்கிறாய்! நான் என்ன செய்யட்டும்? முடிந்த வரையில் முயன்று பார்க்கிறேன்" என்றார். அவ்வாறே அவரால் முடிந்த வரையில் முதல் மூன்று சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்து பார்த்தார். ஆனால் ஒன்றும் பயன் தரவில்லை. குற்றவாளிக்குச் சாதகமாக அந்தச் சாட்சிகளின் வாய் மொழியிலிருந்து எதுவும் வெளியாகவில்லை. முதல் மூன்று சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. பிராஸிகியூஷன் தரப்பில் இன்னும் ஒரே ஒரு சாட்சி பாக்கி இருந்தது. ஆனால் மாஜிஸ்ட்ரேட் அவசரப்பட்டார் "இன்னும் எதற்காகச் சாட்சியம்? கேஸ் தெளிவாக இருகிறதே" என்று சொன்னார். பிராஸிகியூஷன் தரப்பில் கேஸ் நடத்திய போலீஸ் வக்கீல் "கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நாலாவது சாட்சி திருட்டைக் கண்ணால் பார்த்த சாட்சி" என்றார். உடனே, அந்த கிராதக சாயபு சாட்சிக் கூண்டிற்கு வந்து நின்றான்.
சீதாவின் பயமெல்லாம் உண்மையாகி விட்டது. "இவன் எதற்காகத் தொடர்ந்து வருகிறான்?" என்று முதல் நாள் இரவு சீதா கேட்டுக் கொண்ட கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. தன் குடியைக் கெடுப்பதற்குத்தான்; பொய் சாட்சி சொல்லித் தன்னைத் திருடி என்று நிரூபிப்பதற்குத்தான்! அடப்பாவி! உனக்கு நான் என்ன தீங்கு செய்தேன்! நீ யார் என்பது கூட எனக்குத் தெரியாதே! எதிர்பாராத எத்தனையோ கஷ்டங்களுக்கு உள்ளான இந்த துர்ப்பாக்கியசாலியின் தலையில் இப்படிக் கடைசியாகப் பெரிய கல்லைத் தூக்கிப்போட்டுக் கொல்லப் பார்க்கிறாயே? அந்தக் கிராதக சாயபு, "சர்வ வல்லமையுள்ள ஆண்டவன் சாட்சியாக உண்மையே சொல்லுவேன்" என்று சத்தியப்பிரமாணம் செய்தார். பிறகு போலீஸ் தரப்பு வக்கீலின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். இரண்டாவது மூன்றாவது கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள் கோர்ட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. "இந்த ஸ்திரீ பெட்டியைத் திருடி எடுத்துச் சென்றதை நீர் கண்ணால் பார்த்தீர் அல்லவா?" "இல்லை நான் பார்க்கவில்லை.""ஓகோ! இது என்ன? நீர் பார்க்கவில்லையென்றால், பின்னே இவள் திருடினாள் என்பது உனக்கு எப்படித் தெரியும்? அப்படி அனுமானிப்பதற்கு வேறு காரணம் உண்டா?" "இல்லை; அப்படி அனுமானிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை! இந்த அம்மாள் பெட்டியைத் திருடவில்லை என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும்!"
தன் காதில் விழுவது உண்மைதானா என்று சீதா அதிசயித்தாள். லாலா சத்தியப் பிரகாஷ் குப்தாவின் முகம் வெளுத்தது. போலீஸ்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். மாஜிஸ்ட்ரேட் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினார். சீதாவின் கட்சி பேசிய வக்கீலின் முகம் பிரகாசம் அடைந்து மலர்ந்தது. போலீஸ் வக்கீல் போலீஸ் அதிகாரியுடன் ஏதோ பேசி விட்டு, "இந்தச் சாட்சி விரோதமாய்த் திரும்பிவிட்டபடியால் விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்" என்றார். குற்றவாளி தரப்பு வக்கீல் குதித்து எழுந்து, "நான் சிலகேள்விகள் கேட்கக் கோர்ட்டார் அனுமதி கொடுக்கவேண்டும்" என்றார். மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உண்மையை அறியும்ஆர்வம் ஏற்பட்டிருந்தது கேள்வி கேட்க அனுமதித்தார். "ஜனாப்! இந்த ஸ்திரீ திருடவில்லை என்று நிச்சயமாய்த் தெரியும் என்று சொன்னீரே, நிச்சயமாய் எப்படித் தெரியும்?" "உண்மையில் பெட்டியைத் திருடியது யார் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அதனால் தான் இந்த அம்மாள் திருடவில்லை என்று நிச்சயமாய்ச் சொன்னேன்." கோர்ட்டில் பரபரப்பு அதிகமாயிற்று கசுமுசுவென்று பேசும் சத்தம் எழுந்து உடனே அடங்கிவிட்டது. "உண்மையில் பெட்டியைத் திருடியது யார்?" என்று வக்கீல் கேட்டார். முகம்மதியர் பதில் சொல்லத்தயங்கினார். "சத்தியப் பிரகாஷ் குப்தாவா?" "இல்லை!" "பின்னே யார்?" "நான்தான்!" "என்ன? நன்றாய்ச் சொல்லும் கோர்ட்டாரின் பக்கம் பார்த்துச் சத்தியமாய்ச் சொல்லும்." "பெட்டியைத் திருடியவன் நான் தான். பெட்டியை எடுத்துப் போய் நான் முதலில் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டேன். அதே வண்டியில் பிற்பாடு அந்தஅம்மாள் வந்து ஏறினாள். நான் திருடி வந்த பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்..."
இந்தச் சமயத்தில் போலீஸ் வக்கீல் மேற்படி சாட்சியத்தை ஆட்சேபிக்க எழுந்தார். மாஜிஸ்ட்ரேட் அவரை உட்காரும்படி உத்தரவிட்டார். "போலீஸாரிடம் நேற்று இரவு நீர் எழுதி வைத்த வாக்குமூலத்தில் இந்த அம்மாள் திருடியதைக் கண்ணால் பார்த்த தாக எழுதி வைத்தீர் அல்லவா? அது ஏன்?" "சத்தியப் பிரகாஷ் குப்தா அவ்விதம் சொல்லும்படி கேட்டுக் கொண்டான்.சொன்னால் ஐநூறு ரூபாய் தருவதாகவும் ஒப்புக் கொண்டான்." "பின் எதனால் இப்போது மாறி உண்மையைச் சொன்னீர்?" "இந்த சாட்சிக் கூண்டில் ஏறி அல்லாவின் பெயரால் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு பொய் சொல்ல மனந்துணியவில்லை. அந்த அம்மாளுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக உண்மையைச் சொன்னேன்". "ஆனால் இந்த ஸ்திரீ பெட்டி தன்னுடையது என்று போலீசாரிடம் சொன்னாளே, அது ஏன்?" "இந்த அம்மாள் போலீஸாரிடம் என்ன சொன்னாளோ, எனக்கு அது தெரியாது. இந்த அம்மாளைப் பார்த்தாலே ஒரு மாதிரி பிரமை பிடித்திருக்கிறது என்று தெரிகிறது பிரமையில் ஏதாவது சொல்லியிருக்கலாம்." சீதாவின் வக்கீல் சுருக்கமாகத் தம்முடைய வாதத்தைச் சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டார். மாஜிஸ்ட்ரேட்டு வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டு, சீதாவின் கட்சி பேசிய வக்கீலைப் பார்த்து, "இந்த ஸ்திரீயின் பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். இவள் யார் எந்த ஊர் என்பதைக் கண்டுபிடித்து இவளுடைய சொந்தக்கார மனுஷர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். அது வரையில் இந்த நகரிலுள்ள அனாதை ஆசிரமத்திலாவது வேறு தகுந்த ஸ்தாபனத்திலாவது இவளை விட்டுவைப்பது நல்லது" என்றார்.
"ஆகட்டும்" என்றார் வக்கீல். முதிய பிராயத்தவரும் உத்தமருமான அந்த வக்கில் சீதாவுக்குச் சித்தப்பிரமை இல்லையென்றும், பல காரணங்களினால் மனம் குழம்பியிருந்தாலும் தன்னுடைய நிலைமையைப் பற்றி யுக்தாயுக்தம் பார்த்துத் தீர்மானிக்கும் தெளிந்த அறிவு அவளிடம் இருக்கிறது என்றும் விரைவிலேயே அறிந்தார். அன்று பிற்பகலில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போய் உணவு அருந்துவித்தார். இரவில் ஆக்ரா ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனார். வழியில் அவர் "ஆமா! சாட்சி சொன்ன சாயபுவை உனக்கு முன்னமே தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாது; அவர் எங்கே இப்போது? நான் பார்த்து நன்றி கூறவேண்டும்!" என்றாள். "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், மகளே! நான் ஒரு விஷயம் சொல்லுகிறேன், கேட்கிறாயா?" "அவசியம் கேட்கிறேன், ஐயா! அவ்வளவு நன்றியாவது தங்களிடம் எனக்கு இருக்க வேண்டாமா?" "நல்லது கேள்! கடவுளின் அருள் உன்னை இன்று காப்பாற்றியது. அந்த முகம்மதியனின் சாட்சியம் தான் உன்னுடைய விடுதலைக்குக் காரணமாயிருந்தது என்பது உண்மை தான். ஆனால் அவனை யோக்கியன் என்று நான் கருதவில்லை. ஏதோ ஒரு நோக்கம் வைத்துக் கொண்டுதான் அவன், தான் திருடியதாகச் சொல்லி உன்னை விடுதலை செய்திருக்கிறான். நீ சர்வ ஜாக்கிரதை யாயிருக்க வேண்டும். இதைக்காட்டிலும் பெரிய ஆபத்து உனக்கு வரக்கூடும்." "இன்றைக்கு என்னைக் காப்பாற்றிய கருணாமூர்த்தியான கடவுள் இனியும் காப்பாற்ற மாட்டாரா?" "காப்பாற்றுவார்;
காப்பாற்றட்டும் ஆனால் நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தச் சாயபு பெட்டி திருடவில்லை என்பது நிச்சயம். உனக்கு யாரோ பெட்டியைக் கொடுத்ததாகச் சொன்னாயே, அதை நான் நம்புகிறேன். பின் எதற்காக அந்த முகம்மதியன் திருட்டுக் குற்றத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டு உன்னை விடுதலை செய்விக்கிறான்?" "ஐயா! அந்த முகம்மதியர் இப்போது எங்கே? ஒருவேளை அவரைக் கைது செய்து விடுவார்களோ?" "ஒருவேளை என்ன? திருட்டுக் குற்றத்தைக் கோர்ட்டில் ஒப்புக்கொண்ட ஆசாமியைச் சும்மா விட்டுவிடுவார்களா!" "ஐயா! அவரைத் தாங்கள் பார்த்து ஏதாவது உதவி செய்ய வேண்டும் உங்களுக்குப் புண்ணியம் உண்டு." "என்னால் ஆனதைச் செய்கிறேன் சற்றுமுன்னால் அவனைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவன் தன்னைப் பற்றி ஒன்றும் பேசவில்லை; உன்னைப் பற்றியே பேசினான். உன்னை எப்படியாவது பத்திரமாய் டில்லிக்கு அனுப்பிவிட வேண்டுமாம். அங்கே உள்ளவர்கள் உன்னைக் கவனித்துக் கொள்வார் களாம். மகளே! என்னுடைய புத்திமதியைக் கேட்பாயா?" "சொல்லுங்கள், ஐயா!" "என் அபிப்பிராயத்தில், நீ இப்போது டில்லிக்கே போகக் கூடாது. அங்கே யாரோ உன்னை ஏதோ செய்யக் காத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு எங்கேயாவது போவது நல்லது; நீ மதராஸ்காரிதானே? மதராஸுக்கே போகலாமே?" "இல்லை ஐயா! மதராஸுக்கு இப்போது போக நான் இஷ்டப்படவில்லை." "டில்லிக்குத்தான் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால்..." "இல்லை; டில்லிக்கு போகவும் எனக்குப் பயமாய்த்தானிருக்கிறது. கல்கத்தாவில் எனக்கு ரொம்ப வேண்டிய சிநேகிதர்கள் இருக்கிறார்கள். ஆகையால் கல்கத்தா போகலாம் என்று பார்க்கிறேன் டிக்கெட்டுக்குத்தான் பணம் வேண்டும்." "அதைப்பற்றி நீ கவலைப் படாதே! நான் டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் கல்கத்தா போனாலும் போவார்கள் . அவர்களிடம் உன்னை ஒப்புவித்து அனுப்பி வைக்கிறேன் சரிதானே?" "அப்படியே ஆகட்டும்; எனக்கு நல்ல காலம் பிறக்கும் போது நீங்கள் கொடுக்கும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறேன்." "பணத்தைப் பற்றி யார் கேட்டார்கள்? சௌக்கியமாகப் போய்ச் சேர்ந்தால் எனக்குப் பரம திருப்தி!" என்றார் வக்கீல்.