அலை ஓசை/பிரளயம்/"பாக்கியசாலி சீதா!"

விக்கிமூலம் இலிருந்து

நாற்பதாம் அத்தியாயம் "பாக்கியசாலி சீதா!"

டாக்டர் இஞ்செக்ஷன் செய்வதற்காக மருந்து தயாரித்துக் கொண்டிருந்தார். பாமா அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ராகவன் சீதாவின் தலையைத் தன் மடியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி அவன் விம்முகிற சத்தம் கேட்டது. சீதா தட்டுத் தடுமாறிச் சொன்னாள்:- "நீங்கள் ஏன் அழ வேண்டும்? எனக்கு இதைவிட வேறு பாக்கியம் கிடைக்குமா? கஸ்தூரிபாய் தெய்வத்தைப்போல நானும் தாலி கட்டிய புருஷன் மடியில் படுத்துச் சாக வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருந்தேன் அந்தத் தவம் பலித்துவிட்டது. என்னைப் போலப் பாக்கியசாலி யார்? நீங்கள் அழவேண்டாம்!" என்றாள். சௌந்தரராகவனைத் துக்கம் ஒரு பக்கமும் வெட்கம் இன்னொரு பக்கமும் பிடுங்கித் தின்றன. "சீதா! இந்த மாதிரியெல்லாம் பேசாதே! உனக்கு உடம்பு ஒன்றுமில்லை. சீக்கிரம் சுகமடைந்து பிழைத்து எழுந்திருப்பாய்!" என்றான். "அதெல்லாம் இல்லை, நான் இனி வெகு நேரம் உயிரோடிருக்க மாட்டேன். அதென்னமோ அப்படி எனக்குத் தோன்றுகிறது. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. தாரிணி அக்காவும் நீங்களும் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டேன். அதற்காகத் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். 'உங்களை மணந்துகொள்ளச் சம்மதம்' என்று தாரிணி அக்கா சொன்னதை என் காதால் கேட்டேன். உடனே புறப்பட்டு வந்துவிட்டேன், எனக்கு இனி ஒரு குறையும் இல்லை. அக்கா இப்போது எங்கே? அவளைக் கொஞ்சம் வரச் சொல்லுங்கள். அவளுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேணும்." "வஸந்தியை அழைத்துக்கொண்டு வரத் தாரிணி போயிருக்கிறாள். நீ நினைப்பது போலெல்லாம் ஒன்றும் நடவாது, சீதா! என்னைப் பரிதவிக்க விட்டு நீ போவது கடவுளுக்கே பொறுக்காது!" என்றான் ராகவன். அதே சமயத்தில் கடவுளை நினைத்து, "பகவானே! இந்த ஒரு தடவை மட்டும் சீதாவைக் காப்பாற்றி விடு. அப்புறம் நான் யோக்கியமாய் நடந்து கொள்ளுகிறேன் இனிமேல் ஒரு பிசகும் செய்யமாட்டேன். சுயநலத்துடன் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்!" என்று மனமாரப் பிரார்த்தனை செய்தான். ராமேசுவரம் முதல் காசி வரையில் உள்ள கோயில் தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டான். அந்த நிமிஷத்துக்கு முன்னால் ராகவன் எந்த நாளிலும் அவ்வளவு தீவிர ஆஸ்திகனாக இருந்ததில்லை.

இஞ்செக்ஷன் மருந்து ஏற்றிய ஊசியுடன் டாக்டர் வந்தார். ஊசி குத்திவிட்டு, "சரி, நான் போய் வருகிறேன். காலையில் நிலைமை எப்படியிருக்கிறது என்று டெலிபோன் செய்யுங்கள்!" என்றார். டாக்டருடன் வாசல் வரையில் சென்ற பாமா திரும்பி வந்ததும் ராகவனைப் பார்த்து, "உங்கள் மனைவிக்கு உங்களிடம் ஏதாவது சொல்லிக்கொள்ள வேணுமா, மனதில் ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டு விடுவது நல்லது" என்றாள். ராகவன் கோபமுற்று, "இது என்ன நான்ஸென்ஸ்? நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நலமாயிருக்கும்!" என்றான். அப்போது சீதா, "அவர் மேல் எதற்காக வீணில் கோபித்துக் கொள்கிறீர்கள்? அவர் கேட்கச் சொல்வது நியாயந்தான், என் மனதில் ஒரு ஆசை இருக்கத்தான் இருக்கிறது. நான் கண்ணை மூடிய பிறகு நீங்கள் தாரிணி அக்காவைக் கட்டாயம் கலியாணம் செய்து கொள்ள வேண்டும். அக்கா எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாள், அதை மீறமாட்டாள்" என்றாள். சற்று நேரத்துக்கெல்லாம் தாரிணியும் சூரியாவும் வஸந்தியுடன் வந்து சேர்ந்தார்கள். எத்தனை எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்திருந்த வஸந்திக்குத் தன் தாயாரின் நிலைமை எந்தவித உணர்ச்சியையும் தரவில்லை. பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். "இத்தனை நாள் எங்கே அம்மா ஒளிந்து கொண்டிருந்தாய்?" என்றாள். சீதா தன்னுடைய துவண்ட கைகளைத் தூக்கிக் குழந்தையைத் தன் முகத்தோடு சாத்திக்கொள்ள முயன்றாள். ஆனால் அவளுடைய கையில் அதற்கு வேண்டிய பலம் இல்லை. அதைப் பார்த்த தாரிணி குழந்தையின் முகத்தைத் தாயின் முகத்தோடு சேர்த்து வைத்தாள். சீதா அண்ணாந்து நோக்கினாள், முகமூடி தரித்த உருவத்தைப் பார்த்து, மிக மெல்லிய குரலில், "இது யார்?" என்று கேட்டாள். "என்னை உனக்குத் தெரியவில்லையா, சீதா!" என்றாள் தாரிணி. அவள் யார் என்பதைக் குரலிலிருந்து சீதா தெரிந்து கொண்டாள்.

"வந்து விட்டாயா, அக்கா! ரொம்ப சந்தோஷம் என் மனது குளிர்ந்து விட்டது. நீ இவரிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு இனிமேல் ஒரு கவலையும் இல்லை. ஆனால் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? திறந்து விடு! அக்கா! நான் சாவதற்கு முன்னால் உன்னுடைய முகத்தை ஒரு தடவை பார்க்கவேணும். பார்த்துவிட்டால், அந்த ஞாபகமாகவே மேல் உலகத்துக்குப் போவேன். போகும்போது வானத்தில் பூரண சந்திரனைப் பார்த்து அக்காவின் முகத்தைப் போல் அழகாயிருக்கிறதா என்று ஒத்துப் பார்த்துக் கொண்டு போவேன்!....." இப்படி பேசிக் கொண்டேயிருக்கையில் சீதாவின் கண்கள் தாமாக மூடிக்கொள்ளத் தொடங்கின. தாரிணி சீதாவின் கையைப் பிடித்து நாடி பார்த்தாள். மிக மெலிவாயும் அதிவேகமாயும் அடித்தது. கூண்டிலிருந்து கிளி பறந்து செல்லும் காலம் நெருங்கிவிட்டது என்பதைத் தாரிணி உணர்ந்தாள். "சீதா! இதோ என் முகத்திரையை எடுக்கிறேன். கண்ணைத் திறந்து ஒரு தடவை என்னைப் பார்! பயந்து போய் விடாதே! உன்னுடைய குழந்தை வஸந்தியை நான் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போது இந்த மாதிரி ஆயிற்று. ஆனால் இதற்காக நீ சிறிதும் வருத்தப்பட வேண்டாம்......." இந்த வார்த்தை ஒன்றும் சீதாவின் காதில் விழவில்லை. திரை விலகி தாரிணியைப் பார்த்தவுடன் சீதாவின் முகம் அணையுந் தறுவாயில் தீபம் சுடர் விடுவதுபோல் காந்தி வீசிப் பிரகாசித்தது. முன்னைக் காட்டிலும் மெதுவான குரலில், வியப்பும் ஆனந்தமும் ததும்பிய குரலில் கூறியதாவது; "அக்கா! உன் முகந்தான் என்ன அழகாயிருந்தது? முன்னே நான் பார்த்த போது இருந்ததைக் காட்டிலும் இப்போது உன் முகத்தில் களை சொட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அழகை இந்த உலகத்தில் நான் பார்த்ததேயில்லை. தேவலோகத்திற்குப் போனால் அங்கேயும் உன்னைப் போன்ற ரூபவதியைப் பார்ப்பேனா என்பது சந்தேகந்தான். உன்னைப் பார்த்துக் காதலித்த என் கணவர் என்னைக் காதலிக்கவில்லையென்றால் அதில் அதிசயம் என்ன இருக்கிறது? நான் பாக்கியசாலி, அக்கா! ஒரு குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் நான் போகிறேன், ஒருவரும் எனக்காகத் துக்கப்பட வேண்டாம்! சூரியா எனக்காக ரொம்ப வருத்தப்பட்டு உருகுவதாய்ச் சொல்வான். அவனை வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லு."

சீதா தன்னுடைய பெயநச் சொன்னது காதில் விழுந்ததும் சூரியா அருகில் வந்து அவள் முகத்துக்கு அருகில் குனிந்து, "சீதா! நான் இதோ இருக்கிறேன்" என்றான். அச்சமயம் சௌந்தரராகவன் கூடச் சூரியாவைத் தடுக்க முயலவில்லை. சீதா மிக மெல்லிய குரலில், "லலிதாவுக்கு கடிதம் எழுது; என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டதாக எழுது!" என்றாள். "இவ்வளவுதானா, சீதா! எனக்கு நீ சொல்ல வேண்டியது வேறொன்றுமில்லையா?" என்றான் சூரியா! "இல்லை, வேறொன்றும் இல்லை சூரியா! நான் பாக்கியசாலி! சீக்கிரம் கலியாணம் செய்துகொள்!" என்றாள் சீதா. சீதா பாக்கியசாலிதான்; இல்லை என்று யார் சொல்ல முடியும்? சூரியா விம்மினான், சௌந்தரராகவன் கதறினான். தாரிணியும் வஸந்தியும் பாமாவும்கூடத் துயரத்தின் மிகுதியால் அலறி அழுதார்கள். ஆனால் சீதாவின் காதில் அதெல்லாம் விழவில்லை. அவளுடைய உணர்விலும் தோன்றவில்லை. சீதாவின் உயிர் அநித்தியமான உடலை விட்டுப் பிரிந்தது. ஆகாய வெளியில் மிதந்து சென்றது. மேலே மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. வானவில்லின் வண்ணங்களிலே தோய்ந்து சென்றது. வெள்ளிய மேக மண்டலங்களின் வழியாகப் புகுந்து சென்றது. மந்தமாருதம் ஏந்திக் கொண்டு வந்த சுகந்த பரிமளத்தை முகர்ந்துகொண்டு சென்றது. இனிமையின் எல்லை என்று சொல்லக்கூடிய இசை இன்பத்தை அநுபவித்துக் கொண்டு சென்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் தேவலோகத்துப் பாரிஜாத மந்தார விருட்சங்களின் மலர்கள் பொலபொலவென்று உதிர்ந்தன. அவை சீதாவின் உயிரைச் சுற்றிச் சுழன்று கொண்டே வந்தன. தங்க நிறமும் ரோஜா நிறமும் மாந்தளிரின் நிறமும் கொண்ட மேனிகளுடனே கந்தர்வ கின்னரர்கள் வான வெளியில் ஆங்காங்கே நின்று "வருக! வருக! என்று இன்னிசையுடன் வரவேற்றார்கள். சீதாவின் உயிர் மேலே மேலே போய்க்கொண்டிருந்தது. அற்புத சௌந்தர்யம் வாய்ந்த தேவகணங்களின் உருவங்கள் மெல்லிய மேகத் திரைக்குள்ளே மறைந்து காணப்பட்டது.

ஆகா! அந்த உருவங்களின் சிலவற்றைச் சீதாவுக்குத் தெரியும்; நன்றாகத் தெரியும். அதோ லைலாவும் மஜ்னுவும் ஆடிப் பாடிக்கொண்டு போகிறார்கள். அதோ சத்தியவானும் சாவித்திரியும் கைகோத்துக்கொண்டு உலாவுகிறார்கள். இதோ உல்லாசமாய் அன்னப் படகில் மிதந்து செல்கிறவர்கள் ரோமியோவும் ஜுலியத்துமாகவே இருக்க வேண்டும். நளனுக்கும் தமயந்திக்கும் என்ன அவசரமோ தெரியவில்லை! இறகு கட்டிக்கொண்டு அவர்கள் பறக்கிறார்கள். பறந்தால் பறக்கட்டும்; இவர்களையெல்லாம் பார்த்து இப்போது என்ன ஆகவேண்டும்? நாம் பார்க்க விரும்பியது அன்னை கஸ்தூரிபாயை அல்லவா? அவர் எங்கே இருப்பார்? சொர்க்கலோகங்களிலெல்லாம் மேலான சொர்க்கலோகத்திலேதான் இருப்பார்? - இன்னும் மேலே மேலே போக வேண்டியதுதான். ஆகா! இது என்ன பிரகாசம்? இது என்ன ஜோதி? தேஜோமயமான உருவம் ஒன்று எங்கிருந்தோ வருகிறதா? அடடா! அதோ போகிறதே? இவர்கள், - நம்மைச் சுற்றி நிற்கும் தேவ கந்தர்வ கின்னரர்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள்? மின்னலைப் போல் தோன்றி, கோடி சூரியர்களைப்போல் பிரகாசித்து, ராமபாணத்தைப்போல் விரைந்து செல்லும் வடிவத்தைச் சுட்டிக்காட்டி என்ன சொல்லிக் கொள்கிறார்கள்?- "தெரிகிறது. தெரிகிறது!" "காந்தி மகாத்மாவின் ஜோதி" என்றல்லவா ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள்?- வான வெளியிலே பொழிந்த நறுமலர்களும் வீசிய மந்த மாருதமும், மிதந்து வந்த தேவகானமும் தேவர் தேவியரின் உபசரிப்பு, - எல்லாம் காந்தி மகாத்மாவுக்காகத்தான் போலும்! நான் பாக்கியசாலிதான்; சந்தேகமில்லை, மகாத்மாவின் ஆவி வானுலகம் செல்லும் அதே நாளில் நாமும் இங்கே வரும்படியான பேறு கிடைத்ததல்லவா? ஆனால் அவரை விடக்கூடாது! விட்டுப் பிரியக்கூடாது அந்த ஜோதி போன வழியே போனால் அன்னை கஸ்தூரிபாயைக் காணலாம். காந்திஜியின் ஆத்மா கஸ்தூரிபாயின் ஆத்மா இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு போகாமல் வேறு எங்கே போகும்? ஜோதி போன வழியிலேயே சீதாவின் ஆவியும் சென்றது. மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. ஆனால் விரைவில் அந்த ஜோதி போன வழி தெரியாமல் போய் மறைந்துவிட்டது.

ஆயினும் சீதாவின் ஆசை நீங்கவில்லை; நம்பிக்கை குன்றவில்லை. வானவெளியிலேயே போய்க் கொண்டேயிருந்தால் எப்படியும் அந்த ஜோதியைக் கண்டுபிடிக்காமலா போவோம்? சீதாவின் ஆவி பற்பல உலகங்களையும் தாண்டிக்கொண்டு சென்றது. நட்சத்திர மண்டலங்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு சென்றது. ஆகா! எத்தனை உலகங்கள்! எத்தனை சூரியர்கள்! எத்தனை சந்திரர்கள்! எத்தனை நட்சத்திரங்கள்! 'அகிலாண்ட கோடி' என்று சொல்வது எவ்வளவு உண்மை? இவ்வளவையும் தாண்டி அப்பாலே போக முடியுமா? 'அப்பாலுக்கு அப்பாலே' என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உண்டா? உண்டு; அவசியம் உண்டு, அத்தனை அண்டங்களையும் புவனங்களையும் சூரிய சந்திரர்களையும் கணக்கில்லா நட்சத்திர மண்டலங்களையும் தாண்டி வந்தாகிவிட்டது. இனி ஒரே நீல நிறத்து வானவெளிதான்! முடிவில்லாத வானவெளி; எல்லையில்லாத நீல நிறம்; ஆதியும் அந்தமும் இல்லாத ஆனந்த வெள்ளம். சீதா பாக்கியசாலி என்பதைக் குறித்துச் சந்தேகம் என்ன?