அலை ஓசை/பிரளயம்/"மாமழை போற்றுதும்"

விக்கிமூலம் இலிருந்து

எட்டாம் அத்தியாயம் "மாமழை போற்றுதும்"

போர்க்களத்தில் அம்பு மழையைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட இலட்சியத்தை நோக்கிச் செல்லும் வீரனைப்போல் அந்த ரயில் வண்டி காற்றையும் மழையையும் பொருட்படுத்தாமல் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதாவும், லலிதாவும், லலிதாவின் புருஷன் பட்டாபிராமனும் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய கவனமும் வண்டிக்கு வெளியே தோன்றிய காட்சிகள் சென்றிருந்தது. வானம் முழுதும் கருமேகங்கள் மூடி மழை பெய்து கொண்டிருந்தபடியால் பகல் நேரம் அந்திப் பொழுதைப் போல் மங்கி இருள் அடைந்து தோன்றியது. சடசடவென்று அடித்த மழை ஒரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளைத் தாக்கிச் சுக்கு நூறாக்கிவிட முயன்று கொண்டிருந்தது. ஆனால் இன்னொரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகளின் வழியாக வெளியே தோன்றிய பலவிதக் காட்சிகள் தெளிவாகப் புலனாகிக் கொண்டிருந்தன. நீர்வளமும் நிலவளமும் நிறைந்து செழித்த பிரதேசத்தின் வழியாக ரயில் அச்சமயம் போயிற்று. பெருங் காற்றில் பேயாட்டம் ஆடிய தென்னை மரங்களின் மட்டைகள் வானத்து மேகங்களின்மீது கோபங்கொண்டு தாக்கி அடித்தன. அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த மூங்கில் மரங்கள் நாலா பக்கமும் சுற்றிச் சுற்றி மழைத் துளிகளைத் தாக்கிச் சிதறச் செய்து கொண்டிருந்தன. மாமரக்கிளைகள் அலங்கோலமாக ஆடியபோது, அவற்றில் மழைக்கு ஒதுங்கிப் பதுங்கிக் கொண்டிருந்த பட்சிகளின் பாடு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது.

திடீரென்று ஒரு மாமரத்தின் கிளை முறிந்து கீழே விழுந்தது. அதிலிருந்த ஒரு காக்கை மழையினால் நனைந்த சிறகுகளை விரிக்க முடியாமல் விரித்து, பறக்க முடியாமல் பறந்து கரகரவென்று கட்டிப் போயிருந்த தொண்டையினால், "அபயம்" "அபயம்" என்று கூவிக்கொண்டு இன்னொரு மரத்தில் போய் உட்கார்ந்தது. "ஐயோ! பாவம்!" என்று சீதா பரிதாபக் குரலில் கூறிவிட்டு லலிதாவைப் பார்த்தாள். லலிதா குழந்தை பாலுவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தபடியால் பட்டாபிராமனுடைய முகத்தை நோக்கினாள். பட்டாபிராமன் அச்சமயம் சீதாவைக் கவனித்துக் கொண்டிருந்தான். மழையில் நனைந்த காக்கைக்கு அவள் இரக்கப்பட்டதைக் குறிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். "அந்தக் காக்கையின் பாடு கஷ்டந்தான்!" என்று சொன்னான். "நான் பிறந்த வேளையில் அந்தக் காக்கையும் பிறந்திருக்க வேண்டும்!" என்றாள் சீதா. லலிதா திரும்பிப் பார்த்து, "எந்தக் காக்கை? எதைப்பற்றிப் பேசுகிறீர்கள்!" என்று கேட்டாள். சீதாவும் பட்டாபிராமனும் பேசாமல் இருந்தார்கள். "ஒரே மௌனமாயிருக்கிறீர்களே? என்ன விஷயம் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?" என்று லலிதா மறுபடியும் கேட்டாள். "ஒரு மரக்கிளை ஒடிந்து விழுந்தது, அதிலிருந்து ஒரு காக்கை அலறி அடித்துக் கொண்டு இன்னொரு மரத்துக்குப் பறந்து சென்றது! நீ வனிக்கவில்லை!" என்றான் பட்டாபிராமன். "பாலு என்னமோ கேட்டான் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன், அதனால் கவனிக்கவில்லை" என்றாள் லலிதா. "அதைத்தான் நானும் சொன்னேன்!" என்றான் பட்டாபிராமன். "குழந்தையைக் காட்டிலும் எனக்கு காக்கை ஒசத்தியில்லை!" என்று சொன்னாள் லலிதா. "குழந்தையைக் காட்டிலும் காக்கை ஒசத்தி என்று யார் சொன்னது?" என்றான் பட்டாபிராமன். ரயில் போய்க் கொண்டேயிருந்தது.

ஒரு ஊருக்குப் பக்கத்தில் வயல்கள் சூழ்ந்திருக்க பொட்டைத் திடலில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சிதையின் தீ மழையில் நனைந்து அணைந்து போய் விடாதபடி சிலர் அதன்மேல் அவசர அவசரமாகக் கீற்றுப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். "அதோ பார், அம்மா! நெருப்புக்கு மேலே பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்! எதற்காக அம்மா?" என்று பட்டு கேட்டாள். எல்லாரும் அந்தப் பக்கம் பார்த்தார்கள். சிதை எரிவதைக் கண்டதும், "மாமாவையும் இந்த மாதிரி தானே சிதையில் வைத்துக் கொளுத்திவிட்டு வந்தோம்?" என்று சீதா சொல்லி விட்டு விம்மி அழத் தொடங்கினாள். லலிதாவின் கண்களிலும் கண்ணீர் துளித்தது ஆனால் அவள் அழவில்லை. "அப்பா செத்துப் போனது கூட எனக்கு அவ்வளவு பெரிதாக இல்லை. நீ துக்கப்படுகிறதைப் பார்த்தால்தான் அதிக வருத்தமாயிருக்கிறது!" என்று லலிதா கூறினாள். "மாமா செத்துப் போனதற்காக யாரும் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவர் மிக மேலான கதிக்குப் போயிருப்பார். மோட்சங்களுக்குள்ளே மிக உயர்ந்த மோட்சத்துக்கு அவர் நிச்சயம் போயிருப்பார்!" என்றான் பட்டாபிராமன். சீதா விம்மலை நிறுத்திக் கண்களையும் துடைத்துக் கொண்டு, "அது வாஸ்தவந்தான். சூரியாவைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றதற்கே அவர் எவ்வளவோ மேன்மையான கதிக்குப் போயிருக்க வேண்டும்!" என்றாள். "சந்தேகமில்லை; பத்து நாளைக்குள் சூரியா குடியானவர்களை எவ்வளவு சரிக் கட்டிக் கொண்டு விட்டான்!" என்று பட்டாபிராமன் சொன்னான். "அப்பா செத்துப் போன அன்றைக்கே குடிபடைகள் எல்லாம் கூட்டமாய் வந்து கதறி அழுது விட்டார்களே!" என்றாள் லலிதா. ரயில் போய்க் கொண்டேயிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாகக் காணப்பட்டது. "இது என்ன, ஒரே ஜலப்பிரளயமாகவல்லா இருக்கிறது? ராஜம்பேட்டையைக் காட்டிலும் இங்கே மழை அதிகம் போலிருக்கிறதே!" என்றான் பட்டாபிராமன். "நாம் ரயில் ஏறிக் கிளம்பிய பிறகு அங்கேயும் மழை கொட்டியிருக்கலாம்," என்றாள் சீதா.

"மழை இல்லை, மழை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது அடைத்து வைத்துக் கொண்டு கொட்டுகிறது!" என்றாள் லலிதா. "மழை கொஞ்சநாள் இல்லாமற் போனால்தான் மழை எவ்வளவு அவசியமானதென்று ஜனங்களுக்குத் தெரிகிறது. வேத காலத்து ரிஷிகள் சூரியனை எப்படி தோத்திரம் செய்தார்களோ அப்படியே வருணனையும் பிரார்த்தனை செய்தார்கள். சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காவியத்தில் சூரியனையும் சந்திரனையும் போற்றிவிட்டு, "மாமழை போற்றுதும்" மாமழை போற்றுதும்" என்று அழகாகப் பாடியிருக்கிறது!" என்று பட்டாபிராமன் தன்னுடைய புலமையைத் தெரியப்படுத்திக் கொண்டான். "இருந்தாலும் மழையை ரொம்பப் போற்றி விடாமலிருந்தால் நல்லது. இப்படி ஒரே கொட்டாகக் கொட்டினால் ஏழை ஜனங்கள் என்ன செய்வார்கள்? அதோ பாருங்கள்!" என்றாள் லலிதா. அவள் சுட்டிக்காட்டிய பக்கத்தில் ஒரு கிராமத்து வீதிகளுக்குள்ளே மழைத் தண்ணீர் ஆற்று வெள்ளம் போலப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு குடிசை வீட்டின் கூரையைப் பெருங்காற்று அப்படியே பிய்த்துத் தூக்கி அப்பாலே எறிந்திருந்தது. குடிசையில் பாக்கி நின்ற குட்டிச் சுவர்கள் மழையில் நனைந்து கரைந்து கொண்டிருந்தன. குடிசைக்குள்ளேயிருந்த சட்டிப் பானை தட்டுமுட்டுச் சாமான்களை ஒரு ஸ்திரீயும் இரண்டு ஆண் பிள்ளைகளும் எடுத்து அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். "இந்த மாதிரி எவ்வளவு குடிசை இன்றைக்கு இடிந்து விழுந்து போச்சோ? அந்தக் குடிசைகளில் வசித்த ஏழை ஜனங்கள் எல்லாரும் என்ன கஷ்டப்படுவார்களோ?" என்று லலிதா பரிதாபப்பட்டாள். "எனக்கு இங்கேயே ரயிலிலிருந்து குதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ஓடிப்போய் வீடுவாசல் இழந்த அந்த ஏழை ஜனங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!" என்றாள் சீதா. மழை மேலும் கடுமையாகப் பெய்தது. காற்று இன்னும் தீவிர வேகமடைந்து மோதி அடித்தது. ரயில் அசைந்து ஆடிக்கொண்டும் திணறித் திண்டாடிக் கொண்டும் தண்டவாளங்களின் மீது ஊர்ந்தும் சென்று கொண்டேயிருந்தது.