அலை ஓசை/பிரளயம்/இருளில் ஒரு குரல்
இருபத்து ஏழாம் அத்தியாயம் இருளில் ஒரு குரல்
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது; கடிகாரத்தின் முட்கள் பன்னிரண்டு எண்ணிக்கையைச் சமீபித்துக் கொண்டிருந்தன. சீதா கையில் 'டிரிப்யூன்' பத்திரிகை வைத்திருந்தாள். கொஞ்சம் பத்திரிகை படிப்பதும் பிறகு ஏதோ யோசிப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதும் மறுபடி படிப்பதுமாயிருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் சீதா ஏதாவது புத்தகமோ பத்திரிகையோ படிப்பது வழக்கம். சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கம் வந்துவிடும். ஆனால் அன்றைக்கு வெகுநேரம் படித்தும் தூக்கம் வரவில்லை. பல காரணங்களால் அவளுடைய மனம் ஏற்கனவே கலக்கமுற்றிருந்தது. பத்திரிகையில் படித்த செய்திகள் அந்தக் கலக்கத்தை அதிகப்படுத்தின. ஹௌஷங்காபாத் நகரத்தின் கோடியில் அது ஒரு தனி வீடு. சுற்றிலும் சிறு தோட்டமும் காம்பவுண்டு சுவரும் இருந்தன. வீட்டின் மச்சு அறையில் சீதா தன்னந் தனியாக இருந்தாள். இல்லை, 'தன்னந்தனியாக' என்று சொல்வது தவறு. பக்கத்துக் கட்டிலில் குழந்தை வஸந்தி படுத்துத் தூங்கினாள். ஆனால் குழந்தை வஸந்தியைத் துணை என்று சொல்ல முடியாதல்லவா? சீக்கிய காவற்காரன் தினம் தினம் இராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணிக்குள் திரும்பி வந்து விடுவது வழக்கம். அன்றைக்கு எதனாலோ அவன் திரும்பவில்லை. இந்தப் பத்திரிகையில் வந்திருக்கும் செய்திகளுக்கும் அவன் வராததற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வஸந்தியின் மீது சீதாவின் பார்வை சென்றது. குழந்தையின் கன்னங்கள் உப்பி இரண்டு அழகிய ஆப்பிள் பழங்களைப்போலக் காணப்பட்டன. மூடிய கண்களுடன் தூங்கிய குழந்தையின் முகத்தில் களை சொட்டிற்று. பஞ்சாபுக்கு வந்த பிறகு குழந்தைக்கு உடம்பு நன்றாய் ஆகியிருக்கிறது. ஒரு வருஷத்தில் எவ்வளவு நல்ல வளர்த்தி! நம்முடைய ஊர்ப் பக்கமாயிருந்தால், குழந்தைக்கு இப்போது மேலாக்குப் போட வேண்டும் அல்லது சித்தாடை உடுத்த வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் பக்கத்திலேதான் பெரிய பெரிய ஸ்திரீகள் எல்லாரும் கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து கொண்டு ஒரு அங்கவஸ்திரத்தையும் தரித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டு விடுகிறார்களே? இங்கே தேச ஆசாரம் அப்படி! குழந்தைக்கு மேலாக்கு, சித்தாடை வாங்குவது பற்றி என்ன கவலை?
சுவரிலே மாட்டியிருந்த வஸந்தியின் போட்டோ படத்தைச் சீதா பார்த்தாள். பஞ்சாப் பெண்களைப் போல் கால் சட்டை, மேல் சட்டை, அங்கவஸ்திரத்துடன் விளங்கிய வஸந்தியின் படம் அது, அந்த உடை குழந்தைக்கு அழகாய்த் தானிருக்கிறது. ஆனால் சில வருஷம் போன பிறகு நன்றாயிருக்குமா? ஒருவேளை இந்தப் பக்கத்திலேயே நாம் நெடு நாள் இருந்துவிட்டால் வஸந்தி வயதான பின்னரும் இப்படித்தான் உடை தரிப்பாளோ, என்னமோ? இந்த ஊரிலேயே இருப்பதற்கு ஆட்சேபம் என்ன? ஒன்றுமேயில்லை, பஞ்சாபைப் போன்ற தேசமே கிடையாது. எந்த விதத்தில் பார்த்தாலும் சரிதான். கள்ளிச் சொட்டைப் போலக் கனமான பால், ரூபாய்க்கு இரண்டரைப் படி. ஆப்பிளும் ஆரஞ்சும் திராட்சையும் வாதாமியும் கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கின்றன; மற்ற சாமான்களும் அப்படித்தான். ஏன் எல்லாருக்கும் உடம்பு நன்றாய் ஆகாது? இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நல்ல ஆஜானுபாகுவாக வளர்ந்திருப்பதற்குக் கேட்பானேன்? ஆகா! இந்தப் பக்கத்தின் இயற்கை அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஏதோ நம்முடைய பக்கங்களிலும் 'வஸந்த காலம்' என்று சொல்கிறார்கள். அங்கேயெல்லாம் வசந்த காலத்தைக் கண்டது யார்? புத்தகங்களிலே படிப்பதுதான். இங்கேயோ சரியாகப் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வஸந்த காலம் பிறப்பதைக் கண்ணாலே காணலாம். முதல் நாள் வரையில் மரங்கள் எல்லாம் மொட்டை மொட்டையாய் நிற்கும். பிப்ரவரி மாதம் 15-ந் தேதியன்று பார்த்தால் மரங்களில் எல்லாம் சின்னஞ்சிறு சிவந்த மொட்டுக்களைக் காணலாம். முதலில் மொட்டுக்கள் மலரும்; பிறகு இலைகள் தளிர்க்கும். பிப்ரவரி 14-ந் தேதி வரையில் வாசற் பக்கமெல்லாம் வெறுங் கட்டாந் தரையாகக் காணப்படும். சரியாக 15-ந் தேதியன்று எங்கே பார்த்தாலும் தரையில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும். பூமாதேவி திடீரென்று குதூகலித்துச் சிரிப்பது போன்ற அக்காட்சியை எப்படி வர்ணிப்பது? இவ்வளவு அழகான நாட்டை விட்டு ஏன் போகவேண்டும்? கோடைகாலத்தில் இங்கே வெயில் என்னமோ கடுமைதான்; சந்தேகம் இல்லை; ஆனால் பக்கத்தில் காஷ்மீர் இருக்கிறது; சிம்லா இருக்கிறது; இன்னும் பல மலை வாசங்களும் இருக்கின்றன.
மே, ஜுன் மாதங்களில் மலைக்குப் போய்விட்டு வந்தால் மற்ற மாதங்களைப் பற்றிக் கவலையே இல்லை. பஞ்சாபுக்கு வந்தபிறகு, ஏறக்குறைய இந்தப் பத்து மாத காலமும் சீதாவின் வாழ்க்கை ஒரே ஆனந்தமயமாக இருந்தது, வம்பு இல்லை, தும்பு இல்லை, அசூயை இல்லை, ஆத்திரம் இல்லை, பொறாமை இல்லை, புழுங்குவதும் இல்லை, சிநேகிதர்கள் இல்லை, விரோதிகளுமில்லை. தான் உண்டு, தன் கணவனின் அன்பு உண்டு, தன் குழந்தையின் மழலை உண்டு, வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில்? இத்தகைய ஆனந்தமயமான வாழ்வு இன்னும் எத்தனை காலம் நிலைத்து நிற்குமோ தெரியவில்லையே? மறுபடியும் அந்தப் பாழும் டில்லிக்குப் போக வேண்டிவருமோ, என்னமோ, தெரியவில்லையே? இவருக்கு என்னத்துக்காகத் திடீரென்று சர்க்கார் உத்தியோக மோகம் மறுபடியும் பிடித்துக் கொண்டது? என்ன இருந்தாலும் புருஷர்களுடைய போக்கே விசித்திரமானதுதான். வீட்டில் அமைதியும் இன்பமும் குடிகொண்டிருந்தால் அவர்களுக்குப் போதுவதில்லை. கூட்டமும் கூச்சலும் அதிகாரமும் ஆர்ப்பாட்டமும் தடபுடலும் இருந்தால்தான் புருஷர்களுக்கு வாழ்க்கை ரஸிக்கும் போலும். கிளப்புகள், பார்ட்டிகள், விருந்துகள் இல்லாமல் அவர்களால் அதிக காலம் உற்சாகமாக இருக்க முடியாது போலும்! இல்லாமற் போனால், பஞ்சாபுக்கும் வந்த புதிதில் இருந்த உற்சாகம் அவருக்கு இப்போது ஏன் இல்லாமற் போயிற்று? சிரிப்பும் குதூகலமும் களிப்பும் விளையாட்டும் ஏன் வர வர குறைந்து போய்விட்டன?
பத்து நாளைக்கு முன்புதான் திடீரென்று அவர் இந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "சீதா! ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப் போகிறது. நம்முடைய சொந்த சர்க்கார் ஏற்படப் போகிறது. புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நான் வீட்டில் இடம் கொடுத்தேன் என்பதற்காகத்தானே எனக்கு உத்தியோகம் போயிற்று? போன உத்தியோகம் ஆகஸ்டு 15-ந் தேதி எனக்குத் திரும்பி வந்துவிடும்!" என்றார். "அப்படியானால் இந்த ஊரைவிட்டு டில்லிக்குப் போக வேண்டியிருக்குமோ?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் தொனித்த கவலையைத் தெரிந்து கொண்டு ராகவன், "டில்லிக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று அவசியம் இல்லை. இஷ்டமிருந்தால் டில்லிக்குப் போகலாம். இஷ்டம் இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு 'ஆப்ட்' செய்து கொண்டு பஞ்சாபிலேயே உத்தியோகம் பார்க்கலாம். சீதா! உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேனே! என்னதான் இருந்தாலும் சர்க்கார் உத்தியோகத்தைப் போல கம்பெனி உத்தியோகம் ஆகாது. ஆயிரம் ரூபாய் சம்பளம் குறைவாயிருந்தாலும் சரி, சர்க்கார் உத்தியோகத்தின் மவுஸே வேறுதான்" என்றான் சௌந்தரராகவன். இதற்குப் பிறகு சீதா ஆட்சேபம் சொல்ல விரும்பவில்லை. "அதற்கென்ன சந்தேகம்? சர்க்கார் உத்தியோகம் திரும்பி வந்தால் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?" என்றாள். "ஆனால் சர்க்கார் உத்தியோகம் நம்மைத் தேடிக் கொண்டு வராது. நாம் அதைத் தேடிக் கொண்டு போகவேண்டும். டில்லிக்குப் போய் அதற்காகக் கொஞ்சம் வேலை செய்தாக வேண்டும். உடனே புறப்பட்டுப் போனால்தான் கைகூடும். திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாள் பிடிக்கலாம். நீ இங்கேயே இருக்கிறாயா, சீதா? அல்லது என்கூட நீயும் வருகிறாயா?" என்று கேட்டான் ராகவன். "நான் உங்களுடன் வந்தால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்குமா?" என்று சீதா கேட்டாள். "அப்படிப் பிரமாத இடைஞ் சலாயிராது. கொஞ்சம் இடைஞ்சலாயிருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்!"
இதன் பிறகு சீதா டில்லிக்கு ராகவனுடன் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள். அடிக்கடி ராகவன் வெளியூர் களுக்குக் கம்பெனி காரியமாகப் போவதுண்டு. அதுபோல இப்போது போய்விட்டு வருகிறார். தான் எதற்காகப் பரபரப்பு அடைய வேண்டும்? டில்லிக்குத் தானும் போனால் அதிக நாள் அங்கே தங்கும்படி நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். அவர் மட்டும் தனியாகப் போனால் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவார்! இவ்விதம் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ராகவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் போய் இரண்டு நாளைக்குப் பிறகு சிறிதும் எதிர்பாராத விதமாகப் பாமா என்பவள் வந்து சேர்ந்தாள். முன்னொரு காலத்தில் அவள்பேரில் சீதாவுக்கு ரொம்பவும் கோபம் இருந்தது. ஆனால் இப்போது சீதாவின் மனதில் கோபத்துக்கோ ஆங்காரத்துக்கோ அசூயைக்கோ சிறிதும் இடம் இருக்கவில்லை. அப்படி எப்போதேனும் சிறிது ஆங்காரம் தோன்றினாலும் தேவபட்டணத்திலிருந்து தான் நள்ளிரவில் புறப்பட்ட அன்று காந்தி மகாத்மாவின் படத்தின் முன்னிலையில் செய்த பிரதிக்ஞையை நினைவுபடுத்திக் கொள்வாள். உடனே ஆங்காரம் அடங்கிச் சாந்தம் குடி கொள்ளும். எனவே, பாமாவைச் சீதா அன்புடன் வரவேற்றாள். அவளுடைய குணமும் இப்போது நல்ல விதத்தில் மாறியிருந்தது கண்டு மகிழ்ந்தாள். ராகவன் டில்லிக்குப் போக நேர்ந்தது பற்றி இன்னொரு காரணத்தை பாமாவிடமிருந்து சீதா அறிந்தாள். ராகவன் எந்தக் கம்பெனியில் உத்தியோகம் பார்த்தானோ அந்தக் கம்பெனியார் பஞ்சாபில் தங்களுடைய கடையைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்களாம். பஞ்சாப் பாகிஸ்தானில் சேரப் போவதுதான் அதற்குக் காரணமாம். ஆகையால், "இனி பஞ்சாப்பில் உனக்கு வேலை இல்லை! மதராஸுக்குப் போகிறாயா?" என்று ராகவனைக் கேட்டிருந்தார்களாம். இதனால் வெறுப்படைந்துதான் ராகவன் திரும்பவும் சர்க்கார் உத்தியோகத்தைத் தேடிப்போயிருக்க வேண்டும் என்று பாமா சொன்னாள்.
லாகூரில் கம்பெனியின் காரியங்களை முடிவு செய்வதற்காகப் பாமாவின் தகப்பனார் லாகூருக்கு வந்திருந்தாராம். அவருடன் வந்திருந்த பாமா, ராகவன் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்து கொண்டு போவதற்காக ஹொஷங்காபாத்துக்கு வந்தாளாம். இதையெல்லாம் கேட்ட சீதாவுக்கு கொஞ்சம் மனக் கலக்கம் அதிகமாயிற்று. பஞ்சாப் பாகிஸ்தானில் சேர்வதற் காகக் கம்பெனியை எதற்காக மூடவேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ராகவன் மதராஸுக்குப் போக விரும்பாதது இயற்கைதான் என்பதை உணர்ந்திருந்தாள். ஆகையால் டில்லியிலே உத்தியோகம் பார்க்க வேண்டியிருந்தாலும் நான் தடை சொல்லுவதில்லையென்று எண்ணிக் கொண்டாள். பாமா மேலும் சில தினங்கள் சீதாவுடன் அங்கே இருந்தாள். பஞ்சாபின் நிலைமைகளைப் பற்றி ஏதேதோ பயங்கரமான விஷயங்களைக் கூறினாள். அந்த நிலைமையில் ராகவன் சீதாவைத் தனியாக விட்டுவிட்டுப் போனது பற்றிக் குறை கூறினாள். சீதா அதை மறுக்கவே, "அப்படியானால் நானும் ராகவன் வரும் வரையில் இங்கே இருக்கின்றேன்!" என்றாள். ஆனால் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதியன்று "அப்பா என்னைப் பற்றிக் கவலைப் படுவார்; நான் இனி இருக்க முடியாது" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாள். பாமா போன பிறகு சீதா தன்னுடைய தனிமையை அதிகமாக உணர ஆரம்பித்தாள். மனதில் கலக்கம் மணிக்கு மணி அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆயினும் தைரியத்தை அடியோடு இழந்துவிடவில்லை. 'உலகத்தில் பார்க்க வேண்டிய பயங்கரங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது. அநுபவிக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அநுபவித்தாகிவிட்டது. புதிதாக இனிமேல் எனக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?' என்று அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மனதைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
பாமா சென்று இன்றைக்கு நாலு தினம் ஆகிவிட்டது. ராகவனிடம் இருந்தோ கடிதம் ஒன்றும் வரவில்லை. ஏன் பிடிவாதம் பிடித்து ராகவனுடன் தானும் போகவில்லையென்று தோன்றியது. பாமாவை வற்புறுத்தித் தன்னுடன் இருக்கும்படி சொல்லாமற் போனதும் பிசகுதான். பத்திரிகையிலே போட்டிருக்கும் செய்திகளையெல்லாம் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது! எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்று குமுறிக் கொண்டிருக்கிறதாமே? இப்படியெல்லாம் பத்திரிகையில் எழுதியிருப்பதில் அர்த்தந்தான் என்ன? விளக்கை அணைத்துவிட்டுச் சீதா படுத்துக்கொண்டாள். கடிகாரத்தில் மணி பன்னிரண்டு அடித்தது பன்னிரண்டாவது தடவை மணி அடித்ததும், நிசப்தம் குடிகொண்டது, ஒரு நிமிஷ நேரத்துக்குத்தான். அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. வர வர அது பெருகி கொண்டும் அருகில் நெருங்கிக் கொண்டும் வந்தது. சமுத்திரத்தில் அடிக்கும் அலைகளின் ஓசை மாதிரி இருந்தது. சீச்சீ! இது என்ன பிரமை? அந்தப் பழைய உபத்திரவம் மறுபடியும் திரும்பி வருகிறது போலிருக்கிறதே! ஐந்தாறு மாதமாகவே இவ்விதம் அடிக்கடி காதில் ஓசை மாதிரி கேட்கிறது. ஆரம்பிக்கும்போது மெதுவாயிருக்கிறது; வர வர சத்தம் அதிகமாகிறது. காதிலே ஏதோ கோளாறு என்று ராகவன் சொன்னது சரியாகத்தான் இருக்க வேண்டும்! அடுத்த தடவை லாகூருக்குப் போகும்போது நல்ல காது வைத்தியரைக் கொண்டு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இருக்கிற இடைஞ்சல் எல்லாம் போதாது என்று காது வேறே செவிடாகித் தொலைந்துவிட்டால் என்னத்தைச் செய்கிறது?
காதிலே கேட்ட அலை ஓசை வர வர அதிகமாகி வரவே அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவள் படுத்திருந்த மச்சு ஹாலின் ஒரு பக்கத்துக்குப் போய் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இராத்திரியில் எந்த நேரத்திலும் ஹௌஷங்காபாத் நகரத்தில் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு ஒரு விளக்கையும் காணோமே? இது என்ன அதிசயம்! ஒருவேளை 'கரண்ட்' தடைப்பட்டு விட்டதா என்ன? ஆனால் இந்த வீட்டில் விளக்கு 12 மணி வரையில் எரிந்ததே! அப்புறம் கரண்ட் நின்று போயிருக்குமோ? ஸ்விட்சைப் போட்டுப் பார்க்கலாமா? எங்கேயோ ஒரு விஸில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதற்குப் பதிலாக இன்னொரு விஸில் சத்தம் கேட்டது. நாய் ஒன்று ஊளையிட்டது. 'தம்' 'தம்' என்று எங்கேயோ ஒரு முரசு பயங்கரமாகத் தொனி செய்தது. சீதாவுக்கு உடம்பு சிலிர்த்தது, சீ! இது என்ன பைத்தியக்காரப் பயம்? போலீஸார் விஸில் ஊதினால் அது ஒரு ஆச்சரியமா? நாய் ஊளையிடாமல் வேறு என்ன செய்யும்? எங்கேயோ சீக்கியரின் குருத்வாரத்தில் முரசு முழங்குகிறது. இன்று ஏதாவது உற்சவமாயிருக்கலாம். இதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? திடீரென்று அர்த்தமில்லாத ஒரு புது பயங்கரமான எண்ணம் சீதாவின் மனதில் தோன்றியது. இரண்டு கண்கள் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை எங்கிருந்து பார்க்கின்றன என்று தெரியவில்லை. அறைக்குள்ளிருந்தா, வெளியிலிருந்தா என்று தெரியவில்லை. மனிதருடைய கண்ணா, காட்டு மிருகத்தினுடைய கண்ணா, கோட்டானுடைய கண்ணா, கொள்ளிவாய்ப் பிசாசின் கண்ணா என்றும் தெரியவில்லை.
ஒரு சமயம் அந்தக் கண்கள் பின்னாலிருந்து பார்ப்பது போலிருந்தது. இன்னொரு சமயம் அந்தக் கண்கள் பக்கவாட்டிலிருந்து பார்ப்பதாகத் தோன்றியது. ஜன்னலுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் இருந்தது. இருட்டில் அந்த மரம் நெடிதுயர்ந்த ஒரு கரிய பூதம் எனக் காணப்பட்டது. அதிலிருந்து இரண்டு கண்கள் சீதாவை உற்று நோக்கின. முதலில் சாதாரணக் கண்களாக அவை தோன்றின. பிறகு நெருப்புத் தணலைப்போல் அக்கண்கள் பிரகாசித்தன. சீதா தலையை ஒரு ஆட்டம் ஆட்டி அந்த மரத்திலிருந்து பார்வையைத் திருப்பி அடுத்த வீட்டின் பக்கம் நோக்கினாள். அடுத்த வீட்டுக் கூரை மேலிருந்து இரண்டு கண்கள் அவளை நோக்கின. வெளியிலிருந்து தன் பார்வையைத் திருப்பி அறைக்குள்ளே செலுத்தினாள். அறையின் சுவரிலிருந்து அவளை இரு கண்கள் நோக்கின, மறுபடியும் வெளியில் பார்த்தாள். வீட்டைச் சுற்றிலுமிருந்து நூற்றுக்கணக்கான கண்களின் ஜோடிகள் அக்னிமயமாக ஜொலித்துக் கொண்டு அவளை உற்று நோக்கின. "நம்முடைய மூளை குழம்பி வருகிறது! சீக்கிரத்தில் பைத்தியம் பிடித்துவிடுமோ, என்னமோ! அவர் எப்போது வருவாரோ, தெரிய வில்லையே! அவர் வரும் வரையிலாவது நாம் பைத்தியமாகாமல் இருக்க வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே ஜன்னல் பக்கமிருந்து திரும்பி வந்து படுக்கையில் படுத்துக்கொண்டாள். தலையணைக்கு அப்பால் கையினால் துளாவினாள். டார்ச் லைட்டும், ரிவால்வரும் கையில் தட்டுப்பட்டன. "இருங்கள் ஜாக்கிரதையாக!" என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டாள். ராகவன் இந்த பத்து மாத காலமாகத் தினந்தோறும் டார்ச் விளக்கும் கைத்துப்பாக்கியும் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் படுப்பது வழக்கம். அவன் வெளியில் போகும்போது சீதாவும் அந்தமாதிரியே செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தான்.
சீதா அந்தக் கட்டளையை நிறைவேற்றி வந்தாள். ஆனால் கைத்துப்பாக்கியினால் தனக்கு என்ன பிரயோஜனம்? தன்னுடைய சத்துரு வெளியிலே இல்லையே? கைத்துப்பாக்கியினால் தன்னுடைய மூளை குழம்பாமல் தடுத்துக் கொள்ள முடியுமா? தற்கொலை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். அப்படித் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்து போவதில் என்ன பயன்? குழந்தை வஸந்தியின் கதி என்ன ஆவது? முன்னொரு தடவை இதே மாதிரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகும் எண்ணம் தனக்கு உதித்திருந்ததும் அதைச் சூரியா வந்து தடுத்ததும் சீதாவுக்கு நினைவு வந்தன. சூரியா இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ? அவனுக்கும் தாரிணிக்கும் கலியாணம் எப்போது நடக்கும்? தனக்குக் கலியாண அழைப்பு வருமா?.... ஆஹா! இது என்ன சத்தம்? வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மரத்தில் கரகரவென்று சத்தம் கேட்கிறது. யாரோ மரத்தில் ஏறும் சத்தந்தான்; சந்தேகமில்லை, அது யாராயிருக்கும்? திருடனா கொலைகாரனா? அல்லது ஒருவேளை காவல்காரச் சீக்கியனா? காவல்காரன் வாசலில் வந்து படுத்துக்கொள்ளாமல் பக்கத்து மரத்தின்மேல் எதற்காக ஏறி வருகிறான்? மரத்தில் ஏறியவன் யாராயிருந்தாலும் அவன் மாடி வராந்தாவில் குதித்துவிட்டான்! குதித்த சத்தம் நன்றாய்க் கேட்டது. அடுத்தபடி என்ன செய்வான்? ஹாலுக்குள் எப்படி நுழைந்து வருவான்? வராந்தா ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு நிழல் தோன்றியது. ஒரு கரிய பயங்கர உருவம் நின்றது. அந்த உருவத்தின் அங்க அடையாளம் ஒன்றும் தெரியவில்லை. ஆகா! ஸ்திரீகள் புருஷர்களைப் பிரிந்து தனியாக இருக்கிறதென்பது எவ்வளவு அபாயகரமான விஷயம்? இந்தத் தடவை பிழைத்தால் இனி இத்தகைய பிசகை என்றைக்கும் செய்யக் கூடாது! ஆனால் இன்றைக்குத் தப்பிப் பிழைப்பது எப்படி? சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்ட வேகத்தைச் சொல்ல முடியாது. காதில் அலை ஓசை கேட்பது நின்று தன்னுடைய இருதய அடிப்பின் ஓசை கேட்கலாயிற்று. கடிகாரத்தின் டிக், டிக்கோடு இருதயத்தின் அடிப்பும் துடிப்பும் சேர்ந்து கொண்டன.
அவளுடைய உடம்பும் வியர்த்து, கால் முதல் தலை வரையில் நடுநடுங்கிற்று. நடுங்கிய கையினால் துளாவிச் சீதா கைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டாள். துப்பாக்கியைத் தொட்டதும் கைநடுக்கமும் நின்றது. ஒரே வினாடி ரிவால்வரை ஜன்னல் பக்கம் குறிபார்த்துச் சுடவேண்டியதுதான்; வந்திருப்பவன் செத்து விழுவான்! ஆனால் அந்தச் சமயத்தில், சீதா ரிவால்வரைக் கையில் பற்றிக்கொண்ட அடுத்த நிமிஷத்தில், அவள் மனக் கண்ணின் முன்னால் காந்தி மகாத்மாவின் திரு உருவம் தோன்றியது. சுவரில் மாட்டிய படத்திலிருந்து அவர் திருமுகம் தனியாக வெளிக்கிளம்பிக் கருணை ததும்பும் கண்களால் சீதாவைப் பார்ப்பது போல இருந்தது. "சீதா இதை நான் ஒப்பவில்லை, இது ஜீவஹிம்சை! சுடாதே! உன்னால் உயிரை வாங்கமுடியும்; உயிரைக் கொடுக்க முடியுமா?" என்று மகாத்மாவின் கருணைக் கண்கள் கேட்டன. இவன் எதற்காக வந்திருக்கிறானோ என்னமோ? ஒருவேளை ஏழைப்பட்ட மனிதனாயிருக்கலாம். சாப்பாட்டுக்கு இல்லாமல் வயிற்றுப் பசியின் கொடுமை காரணமாகத் திருட வந்திருக்கலாம் பாவம்! அவனை ஏன் கொல்ல வேண்டும்? ஜீன்வால்ஜீன் கதையில் என்ன வருகிறது? திருடனைக் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறாரே, அந்தப் பிஷப்? நாம் மட்டும் எதற்காக இந்தப் பாதகத்தைச் செய்ய வேண்டும்? எப்படியும் ஜன்னல் வழியாக அவன் உள்ளே நுழைந்து வர முடியாது. என்னதான் செய்யப் போகிறான், பார்க்கலாமே? இவ்வளவு எண்ணங்களும் ஒரே நிமிஷ நேரத்துக்குள் சீதாவின் மனதில் குமுறிப் பாய்ந்தன. அந்தக் குமுறலுக்கு மத்தியில் சீதாவின் காதில் ஒரு குரல் கேட்டது. "சீதா! சீதா! எழுந்திரு! சத்தம் போடாமல் எழுந்திரு!" என்று அந்தக் குரல் சொல்லிற்று. ஆகா! அது யாருடைய குரல்! அந்தக் குரலைக் கேட்டதும் உடம்பு ஏன் இப்படிச் சிலிர்க்கிறது? இருளில் வந்த அந்தக் குரல் யாருடையது? ரிவால்வரை வைத்துவிட்டு, டார்ச் லைட்டை எடுத்துச் சீதா ஸ்விட்சை அமுக்கினாள். ஜன்னலுக்கு வெளியே வராந்தாவில் நின்ற உருவத்தின் மீது அதன் வெளிச்சம் விழுந்தது!