அலை ஓசை/பிரளயம்/என் சொர்க்கம்
இருபத்து நான்காம் அத்தியாயம் என் சொர்க்கம்
சீதாவின் வரவினால் ராகவனுடைய சுரம் குணம் அடைந்து வந்ததாகத் தோன்றியது. சுரத்தின் வேகத்தில் அவன் எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் எப்படியெல்லாம் சத்தம் போட்டுப் பிதற்றினாலும் சீதாவின் கை பட்டவுடனேயே அவன் உடம்பும் மனமும் சிறிது அமைதி அடைந்தது. இதைக் கவனித்த சித்ரா, "அடியே! இதற்கு முன்னால் நீ என்னவெல்லாம் தவறாக நடந்திருந்தாலும் இப்போது நல்ல சமயத்தில் வந்து உன் புருஷனுடைய உயிரைக் காப்பாற்றினாய். நீ செய்த பாவத்துக்கெல்லாம் பிராயசித்தம் செய்து கொண்டுவிட்டாய்!" என்று சொன்னாள். இதைக் கேட்ட சீதாவின் கண்களில் நீ ததும்பிற்று. சீதா வந்த புதிதில் ராகவனுடைய கண்கள் அவளைப் பார்த்தாலும் அவள் யார் என்று அவன் தெரிந்து கொண்டதற்கு அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு ஒரு தடவை சீதாவைப் பார்த்தபோது ராகவனுடைய கண்களில் வியப்பும் முகத்தில் மலர்ச்சியும் தோன்றின. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீதாவுடன் அவன் பேச ஆரம்பித்தான். அவள் கல்கத்தாவுக்கு என்றைக்கு வந்தாள், எங்கே தங்கியிருந்தாள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். ஹாவ்ராவில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்களைப் பற்றி ரொம்பவும் சிலாகித்தும் பேசினான்.
குழந்தை வஸந்தி கேட்ட கேள்வியையே ஒரு நாள் சௌந்தரராகவனும் சீதாவிடம் கேட்டான். "உன் பிரயாண மெல்லாம் முடிந்து விட்டதல்லவா? இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் அல்லவா?" என்றான். "முன்னேயும் எனக்குப் போக வேண்டியிருக்கவில்லை. இனிமேலும் எனக்கு எங்கும் போல வேண்டியிராது!" என்றாள் சீதா. "அப்படிப் போவதாயிருந்தாலும் வஸந்தியை விட்டு விட்டுப் போகாதே! எங்கே போனாலும் அவளையும் கூட அழைத்துக் கொண்டு போய் விடு!" என்றான் ராகவன். "வஸந்தியையும் விட்டுப் போகவில்லை; உங்களையும் விட்டுப் போக உத்தேசமில்லை" என்றாள் சீதா. "என்னைப் பற்றிக் கவலை என்னத்திற்கு!" என்றான் ராகவன். சீதா பதில் சொல்லாமல் ராகவனுடைய முகத்தைத் துயரம் ததும்பிய கண்களினால் ஏறிட்டுப் பார்த்தாள். மற்றொரு நாள் ராகவன், "சீதா! உனக்கு இந்தக் கல்கத்தா நகரம் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சித்ரா சொன்னாள், அது வாஸ்தவந்தானே?" என்று கேட்டான். சீதா சிறிது முக மலர்ச்சியுடன், "ஆமாம்; கல்கத்தா எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இங்கேயே நான் இருந்து விடுவதில் எனக்குப் பூரண சம்மதந்தான்!" என்றாள். "ரொம்ப சந்தோஷம்; நீயும் வஸந்தியும் இங்கேயே இருந்து விடலாம். உங்களுக்கு நல்ல துணையும் இருக்கிறது. சித்ராவையும் அவளுடைய கணவனையும் போல் நல்லவர்கள் எங்கும் கிடைக்கமாட்டார்கள்!" என்று சொன்னான் ராகவன். சீதா சந்தேகக் குரலில், "நானும் வஸந்தியும் மட்டும் இங்கே இருக்கிறதோ? நீங்கள்?" என்றாள்.
"எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, அதிலும் இங்கே நடந்த கோர கிருத்யங்களையெல்லாம் பார்த்த பிறகு அடியோடு பிடிக்காமற் போய் விட்டது. இங்கே இருந்தேனானால் என்னுடைய மூளை சரியாகவே ஆகாது. உடம்பு கொஞ்சம் சரியானதும் இங்கிருந்து கிளம்பிப் போய் விடவேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்." "தயவு செய்து இப்படிப் பிரித்துப் பேச வேண்டாம். உங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை என்றால், எனக்கும் பிடிக்கவில்லை. உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கிறதோ, அந்த ஊர்தான் எனக்கும் பிடிக்கும். நீங்கள் எங்கே போகிறதாக உத்தேசம்?" "நான் பஞ்சாப் மாகாணத்துக்குப் போகிறதாக இருக்கிறேன்." "நீங்கள் பஞ்சாபுக்குப் போகிறதாயிருந்தால், நானும் அந்த பஞ்சாபுக்கே வருகிறேன்." "ஒரு வேளை பஞ்சாப் தேசம் உனக்குப் பிடிக்காது!" "பிடிக்காமல் என்ன? டில்லியில் நாம் இருக்கும்போதே பஞ்சாபுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அமிர்தசரஸில் சீக்கியர்களின் அற்புதமான பொற்கோயில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெரிய மசூதி அங்கே இருக்கிறதாம், அதையெல்லாம் பார்க்கலாம் அல்லவா?" ராகவனுடைய முகம் சுருங்கியது. "சீதா! உன்னை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசு, ஆனால் மசூதி என்கிற பேச்சை மட்டும் நான் இருக்கும் போது எடுக்காதே! என் உடம்பு பதறுகிறது!" என்றான். சீதாவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தாஜ்மகாலைப் பார்க்கவேண்டும், அக்பர் சமாதியைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளினால் தனக்கு நேர்ந்த இன்னல்களையெல்லாம் நினைத்துக் கொண்டாள்.
"ஏதோ யோசியாமல் சொல்லிவிட்டேன். எனக்கு இனிமேல் ஒரு இடத்தையும் பார்க்கவேண்டாம், உங்களையும் வஸந்தியையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதுவே போதும்!" என்றாள். சீதாவின் இந்த வார்த்தைகள் சௌந்தர ராகவனுக்குச் சொல்ல முடியாத இன்பத்தை, வெகுகாலமாக அவன் அநுபவித்திராத அபூர்வ மகிழ்ச்சியை அளித்தன. இன்னொரு நாள் ராகவன், "சீதா! எதற்காக நான் இங்கிருந்து பஞ்சாபுக்குப் போகத் தீர்மானித்தேன் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது; எனக்குக் காரணம் தெரிய வேண்டியதுமில்லை! பஞ்சாபுக்கு நீங்கள் போக விரும்புவது ஒன்றே போதும்." "இல்லை; உனக்குக் காரணம் தெரிந்திருக்கவேண்டும். நான் சீமையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே நான் வேலை செய்யும் கம்பெனிக்காரர்கள் `பஞ்சாபுக்குப் போகிறாயா? அங்கே லாகூரில் ஷாலியார் தோட்டம் இருக்கிறதாம். மானேஜர் உத்தியோகம் தருகிறோம்' என்று கேட்டார்கள். நான் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பஞ்சாப் டில்லிக்குப் பக்கத்தில் இருப்பதால் அங்கே போக எனக்கு அச்சமயம் விருப்பமாக இல்லை. ஆனால் இங்கே ஆகஸ்டு 16ம் தேதி ஆரம்பித்து நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு `வசித்தால் பஞ்சாபிலேதான் வசிக்க வேண்டும்' என்று முடிவு செய்துவிட்டேன். உலகத்தில் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ மதங்களை ஸ்தாபிக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக் என்பவரையே நான் மிகப்பெரிய மகான் என்று கருதுகிறேன். அவர்தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததோடு ஒரு வீர சமூகத்தையும் படைத்தார்.
உலகத்திலே வீரர்கள் என்று சொன்னால் சீக்கியர்களைத்தான் சொல்லவேண்டும். கேள், சீதா! இந்த ஊரில் கலகம் ஆரம்பித்த முதல் இரண்டு நாள் நான் என்ன நினைத்தேன், தெரியுமா? கல்கத்தாவிலும் வங்காளத்திலும் ஹிந்து என்று சொல்லிக்கொள்ள ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ இல்லாமற் போய்விடும் என்று நினைத்தேன். மூன்றாம் நாள் என்ன ஆயிற்று தெரியுமா? கிளம்பினார்கள், சீக்கியர்கள்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் டாக்ஸி கார் ஓட்டிய டிரைவர்கள். அவர்கள் கையில் கிர்பானை எடுத்துக்கொண்டு புறப்பட்ட பிறகுதான் கல்கத்தாவிலும் வீர புருஷர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்பட்டது! கல்கத்தாவில் உள்ள முப்பது லட்சம் ஹிந்துக்களும் உயிர் பிழைத்தார்கள்! இப்படிப்பட்ட வீரர்களின் தாய்நாடு பஞ்சாப் தேசம். அத்தகைய நாட்டில் போய் இருப்பதே புண்ணியம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய மனோ நிலையை உன்னால் புரிந்துகொள்ள முடியாமலிருக்கலாம்!" என்று தயங்கிச் சொன்னான் ராகவன். உண்மையில் ராகவனுடைய மனோநிலையை சீதாவினால் புரிந்துகொள்ள முடியவில்லைதான். பஞ்சாபியர்களைப்பற்றி அவளுடைய நினைவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. டில்லியில் அவள் பஞ்சாபியருடன் பழகியிருக்கிறாள். சுத்த முரடர்கள்; நாகரிகமில்லாதவர்கள். வங்காளிகளின் நாகரிகம் என்ன, படிப்பு என்ன, மரியாதை என்ன? கல்கத்தாவில் வங்காளிகளுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த சொற்பப் பழக்கம் அவர்களைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயத்தை அளித்திருந்தது. அமர்நாத் ஆகியவர்களின் அபிப்பிராயமும் அதற்கு ஒத்தேயிருந்தது.
பழைய காலமாயிருந்தால் ராகவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்து ஒன்பது வார்த்தை சீதா சொல்லி யிருப்பாள். ஆனால் இப்போது இந்த இயல்பு அவளிடம் மாறிப் போயிருந்தது. ராகவனுடைய உடல்நிலையும் அவனுடன் மாறுபட்டுப் பேசக் கூடாது என்று வற்புறுத்தியது. ஆகையால் ராகவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதா கூறினாள்: "என்னத்திற்காக இவ்வளவு தூரம் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்கள்? நான்தான் முன்னமேயே சொல்லி விட்டேனே? எனக்குக் காரணம் ஒன்றுமே தெரியவேண்டியதில்லை. உங்களுக்குப் பிடித்த இடம் எதுவோ அதுதான் எனக்குப் பிடித்த இடம் அந்த நாளிலும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதும் அவ்விதமே எண்ணியிருக்கிறேன். நடுவில் தலைவிதியின் காரணமாக அங்குமிங்கும் சுற்றியலைய நேர்ந்தது. அதெல்லாம் பழைய கதை, இனிமேல் உங்களை நான் பிரியப் போவதில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அதுதான் என்னுடைய சொர்க்கம்...." இந்தக் கடைசி வார்த்தை களைக் கேட்டுக் கொண்டு சித்ராவும் அமரநாத்தும் உள்ளே வந்தார்கள். "இப்போதுதான் எனக்கு உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊரில் கலகம் வந்தாலும் வந்தது உங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைத்தது. எப்படிப்பட்ட கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்று இதனாலேதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!" என்றாள் சித்ரா. "எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக இவ்வளவு பயங்கரமான கலகம் நடக்க வேண்டுமா? அதற்காகப் பத்தாயிரம் பேர் செத்துப் போகவேண்டுமா" என்றாள் சீதா. "இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்தக் கலகத்தை ஆரம்பித்ததே நான்தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போலிருக்கிறது!" என்று சௌந்தரராகவன் தமாஷ் செய்தான். "கலகத்தை நீங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை; உங்கள் மனைவி ஸ்ரீமதி சீதாதேவிதான் ஆரம்பித்து வைத்தார்! அவர் ஹாவ்ரா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய அன்றைக்குத் தானே கலகம் ஆரம்பித்தது?" என்றான் அமரநாத்.