அலை ஓசை/பிரளயம்/சீமந்த புத்திரி
இருபத்து ஒன்பதாம் அத்தியாயம் சீமந்த புத்திரி
சாலைக்கு இருபுறத்திலும் குட்டையான ஈச்ச மரங்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன. ஒரு பக்கத்தில் செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. வண்டியை ஓட்டிய பையனிடம் மௌல்வி சாகிபு என்னமோ சொன்னார். பையன் வண்டியைச் சாலையை விட்டுக் காட்டுக்குள் ஓட்டினான். ஈச்ச மரங்களுக்கு மத்தியில் இடங்கிடைத்த வழியாக ஓட்டிச் சென்று பாறைக்குப் பின்புறத்தில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான். தந்தையும் மகளும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து ஒரு கம்பளத்தை எடுத்து விரித்தார். "அம்மா! இதில் உட்கார்! பகலெல்லாம் நாம் இங்கேதான் கழிக்க வேண்டியிருக்கும்!" என்றார். சீதா உட்கார்ந்து, "ஏன், அப்பா! பகலில் பிரயாணம் செய்யக்கூடாதா?" என்று கேட்டாள். "பகலில் பிரயாணம் செய்தால் இரண்டு வகையில் ஆபத்து வரலாம். சீக்கியர்களாவது ஹிந்துக்களாவது நம்மைப் பார்த்தால் ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிம் கிழவன் அடித்துக்கொண்டு போகிறான் என்று எண்ணி என்னைக் கொல்லப் பார்ப்பார்கள். முஸ்லிம்கள் நம்மைப் பார்த்தால் உன்னை என்ன பண்ணுவார்களோ தெரியாது" என்றார். இப்படி சொல்லிவிட்டு மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து தண்ணீர்ப் பையையும் ஒரு சிறு பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். "சீதா! இந்தப் பையில் தண்ணீர் இருக்கிறது. இந்தப் பெட்டியில் கொஞ்சம் பிஸ்கோத்து இருக்கிறது. இவற்றைக் கொண்டு எத்தனை நாள் நாம் காலம் தள்ள வேண்டுமோ தெரியாது. இந்தப் பஞ்சாப் நரகத்திலிருந்து என்றைக்கு வெளியில் போகப் போகிறோமோ, அதையும் சொல்வதற்கில்லை!" என்றார். "பஞ்சாபை நரகம் என்கிறீர்களே? ஒரு வருஷத்துக்கு முன்னால் நான் இங்கே வந்தபோது இது எவ்வளவு நல்ல தேசமாயிருந்தது? ஜனங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பிரியமாயிருந்தார்கள்? கல்கத்தா பயங்கரத்தைப் பார்த்துவிட்டு நானும் உங்களுடைய மாப்பிள்ளையும் பஞ்சாபுக்கு வந்தபோது இது சொர்க்கலோகமாக எங்களுக்குத் தோன்றியது. இந்த ஒரு வருஷத்துக்குள் இங்கே என்ன நேர்ந்துவிட்டது?"
"ஒரு வருஷத்துக்குள் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஜனங்கள் பைத்தியமாகிவிட்டார்கள்; அவ்வளவுதான். கல்கத்தாவுக்கு நவகாளியில் பழி வாங்கினார்கள். நவகாளிக்குப் பீஹாரில் பழி வாங்கினார்கள். பீஹாருக்கு இப்போது மேற்கு பஞ்சாபில் பழி வாங்குகிறார்கள். இதன் பலன் என்ன ஆகுமோ கடவுளுக்குத் தான் தெரியும். இத்தனை பைத்தியங்களுக்கு மத்தியில் அந்த மகான் ஒருவர் இருந்து அன்பு மதத்தைப் போதித்து வருகிறார்; அவர் உண்மையில் மகாத்மாதான்!" "உங்களுக்கு காந்திஜியிடம் பக்தி உண்டா அப்பா?" "செய்யக்கூடிய பாபங்களையெல்லாம் செய்த பிறகு இப்போது காந்திஜியிடம் பக்தி உண்டாகியிருக்கிறது. இந்த பக்தியினால் என்ன பயன்? உன் தாயாருக்கு ஆதிமுதல் மகாத்மா காந்தியிடம் பக்தி உண்டு 'மகாத்மாதான் தெய்வம்' என்று சொல்லிக்கொண்டிருப்பாள். அப்போதே அவளுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தேனானால் என் வாழ்க்கை இப்படி ஆகியிராது." "அப்பா! நான் கேட்கிறேனே என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. ரொம்ப நாளாக என் மனதில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியைத்தான் கேட்கிறேன். அம்மாவிடம் நீங்கள் எப்போதாவது பிரியமாக இருந்ததுண்டா?" என்றாள் சீதா. "நீ இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக எனக்கு உன் பேரில் கோபம் இல்லை சீதா! இந்த மட்டும் கேட்டாயே என்று சந்தோஷப்படுகிறேன். என் மனதில் கிட்டத்தட்ட முப்பது வருஷ காலமாக இருந்து வரும் பாரத்தை இன்று நீக்கிக் கொள்ளப் பாகிறேன். யாரிடமாவது சொன்னாலன்றி என் மனத்தின் சுமை தீராது. உன் அக்காவிடம் சொல்லும் தைரியம் எனக்கு ஏற்படவே இல்லை. இந்தப் பழிகாரி ரஸியா பேகமும் அதற்குக் குறுக்கே நின்றாள். நல்ல வேளையாக அவளும் இப்போது இங்கு இல்லை. எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிடப் போகிறேன்! தான் செய்த குற்றங்களைத் தான் பெற்ற பெண்ணிடம் சொல்லுவதென்பது கஷ்டமான காரியம் தான்.
ஆனாலும் இந்தச் சந்தர்ப்பம் தவறினால் மறுபடியும் கிடைக்குமோ என்னமோ!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் மௌல்வி சாகிபு முப்பது வருஷத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவை அதிசயமான சம்பவங்கள்தான். அதிசயமில்லாவிட்டால் அவற்றைக் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இராதல்லவா? துரைசாமி ராஜம்மாளைக் கலியாணம் செய்து கொண்டு பம்பாயில் புதுக்குடித்தனம் தொடங்கிய சில காலம் அவர்களுடைய வாழ்க்கை இன்ப மயமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆனந்தத் திருநாளாயிருந்தது. ராஜம்மாள் முதல் தடவை கர்ப்பமானாள். தம்பதிகள் களிப்புக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். வாழ்க்கைச் சக்கரம் ஒரு முறை சுழன்று வந்தது. இன்பக் கிரஹம் பெயர்ந்து துன்பக்கிரஹம் தோன்றியது. 'மூன்று சீட்டு' என்னும் சூதாட்டத்தில் துன்பத்தின் சிறிய வித்து துரைசாமி அறியாமலே விதைக்கப்பட்டு முளைத்து எழுந்தது. சொற்ப சம்பளக்காரரான துரைசாமி ரங்காட்டத்தில் தோற்ற பணத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்துவிட விரும்பினார். இதற்காகக் கடன் வாங்கிக்கொண்டு குதிரைப் பந்தயத்துக்குப் போனார். ஒரு தடவை போன பிறகு மனதைத் தடுக்க முடியவில்லை. லாபமும் நஷ்டமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. தம்முடைய யுத்தி சாமர்த்தியத்தால் இழந்த பணத்தையெல்லாம் எடுத்து மேலும் லாபமும் சம்பாதித்துவிடலாம் என்றும் ஒரு நல்ல தொகை கிடைத்ததும் பந்தயத்தை விட்டொழித்து விடலாம் என்றும் எண்ணினார். ஏதோ பொய்க் காரணங்களைச் சொல்லி ராஜம்மாள் அணிந்திருந்த சில நகைகளையும் வாங்கிக் கொண்டுபோய் அடகு வைத்துப் பணம் கடன் வாங்கினார். மேலும் மேலும் சேற்றில் அமுங்கிக் கொண்டிருந்தார், கடைசியில் அடியோடு அமுங்கிப்போக வேண்டியதுதான் என்ற நிலைமை ஏற்பட்டிருந்த சமயத்தில் ராஜம்மாளின் பிரசவ காலமும் நெருங்கியிருந்தது. வீட்டில் வசதியில்லாமல் ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார். வண்டி வைத்து ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவதற்குக்கூட கையில் பணம் இல்லாமலிருந்தது. இந்த நிலைமையை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டே ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ரமாமணிபாய் தன் சகோதரியுடன் வந்து சேர்ந்தாள்.
அவளுடைய கண்ணில் துளித்திருந்த கண்ணீரும் அவள் தன் தங்கையைப்பற்றிச் சொன்ன வரலாறும் துரைசாமியின் உள்ளத்தை இளக்கிவிட்டன. அதோடு அவர்களுக்கு உதவி செய்வதால் தன்னுடைய தரித்திரம் தீரலாம் என்ற ஆசையும் கூடச் சேர்ந்து கொண்டது. தன் மனைவியைப் பிரசவத்துக்காக விட்டிருந்த அதே பிரசவ ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் சேர்த்தார். துரைசாமி பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தமது மனைவியைப் பார்ப்பதற்காகப் போனபோதெல்லாம் ரமாமணிபாயையும் பார்க்கும்படி நேர்ந்தது. வறுமை வலையில் சிக்கியிருந்த அம்மனிதர் மீது ரமாமணிபாய் தன் மோகவலையையும் விரித்தாள். துரைசாமியின் மனம் தத்தளித்தது. நல்லபடியாகத் தன் மனைவிக்குப் பிரசவம் ஆகி வீடு திரும்பிய பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப் போய்விடுவது என்று ஒரு சமயம் எண்ணுவார். அடுத்த நிமிஷம் அவருடைய மன உறுதி பறந்து போய்விடும். ரமாமணியுடன் காதல் வாழ்க்கை நடத்துவதுபற்றி அவருடைய உள்ளம் ஆகாசக் கோட்டைகள் கட்டத் தொடங்கிவிடும். ஒருவேளை ராஜம்மாள் பிரசவத்தின் போது இறந்து போய்விட்டால் ரமாமணியைத் தாம் கலியாணம் செய்துகொண்டு ஏன் சுகமாக இருக்கக்கூடாது, என்னும் படுபாதக எண்ணங்கூடத் துரைசாமியின் மனதில் ஒவ்வொரு சமயம் எழுந்து அவரையே திடுக்கிடச் செய்யும். ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இரவில் குழந்தை பெற்றெடுத்தார்கள். அன்றிரவு துரைசாமிக்கு ஸ்டேஷனில் 'டியூடி' இருந்தது. ஆகையால் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியவில்லை. இராத்திரி ஒரு தடவை டெலிபோன் பண்ணி விசாரித்தார். ராஜம்மாளுக்குச் சுகப்பிரசவம் ஆனதாகவும் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் பதில் வந்தது. காலையில் 'டியூடி' முடிந்ததும் துரைசாமி பரபரப்புடன் மருத்துவச் சாலைக்குப் போனார். நர்ஸின் அனுமதி பெற்று ராஜம்மாளைப் போய்ப் பார்த்தார். அளவில்லா வேதனையும் வலியும் அனுபவித்துச் சோர்ந்து போயிருந்த ராஜம்மாளின் முகத்தில் புன்னகை மலர்ந்து பெருமிதம் குடிகொண்டிருந்தது. "நான் சொன்னதுதான் பலித்தது!" என்றாள் ராஜம்மாள்.
"என் வாக்குப் பொய்யாகுமா? பாரத்வாஜ மகரிஷியின் வம்சத்தில் பிறந்தவனாயிற்றே நான்!" என்றார் துரைசாமி. "பொய்யாகிவிட்டதே!" என்றாள் ராஜம்மாள். "முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம்! பெண்ணை ஆணாக்க முடியுமா!" என்றார் துரைசாமி. ராஜம்மாள் பரிகாசத்துக்காகவே அவ்விதம் பிடிவாதமாய்ச் சொல்கிறாள் என்று அவர் நம்பினார். "நீங்கள் வேணுமானால் பாருங்களேன்!" என்றாள் ராஜம்மாள். துரைசாமி கொசுவலை மூடியைத் தூக்கிவிட்டுக் குழந்தையைப் பார்த்தார். ஆண் குழந்தை என்பதைக் கண்டு சிறிது திடுக்கிட்டார். இராத்திரி டெலிபோனில் செய்தி சொன்னவர்கள் தவறாகச் சொல்லியிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். ஆயினும் அவருடைய மனம் பூரண நிம்மதியடையவில்லை. உருவமில்லாத சந்தேகங்கள் தோன்றித் தொல்லை கொடுத்தன. நர்ஸைத் தனியாகச் சந்தித்து, 'டெலிபோனில் பெண் குழந்தை என்று ஏன் சொன்னாய்?" என்று கேட்டார். நர்ஸ் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "நான் சொல்லவில்லை வேறு யாரும் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்; உங்களுக்கு ஏதோ பிரமை!" என்றாள். மறுபடியும் வற்புறுத்திக் கேட்டபோது, "ஒருவேளை கங்காபாயைப் பற்றி விசாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு யாராவது சொல்லியிருக்கலாம்" என்றாள். "கங்காபாய்க்கும் பிரசவம் ஆகிவிட்டதா?" என்று துரைசாமி கேட்டதற்கு, "ஆமாம் பெண் பிறந்திருக்கிறது!" என்றாள் நர்ஸ். உடனே துரைசாமி ரமாமணியைப் போய்ப் பார்த்து அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். இத்துடன் ஒருவாறு அவர் மனம் ஆறுதல் அடைந்தது. கங்காபாயையும் அவரே ஆஸ்பத்திரியில் சேர்த்தபடியால் அவளுடைய பெண் குழந்தையைப் பற்றித் தமக்குத் தெரியப்படுத்தியது இயற்கையே என்று தோன்றியது.
ராஜம்மாளையும் குழந்தையையும் துரைசாமி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். சில காலத்துக்கெல்லாம் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ராஜம்மாளுக்கும் துரைசாமிக்கும் இதனால் ஏற்பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை. தன்னுடைய குழந்தை இறந்த துயரத்தை மறப்பதற்காகத் துரைசாமி கங்காபாயின் குழந்தையை அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார். கங்காபாய் இறந்து போய்விட்டாள். அவளுடைய குழந்தையை ரமாமணிபாய் வளர்த்து வந்தாள். துரைசாமி ஏற்படுத்திக்கொடுத்த ஜாகையில்தான் அவள் வசித்தாள். ஒரு நாள் ரமாமணியின் ஜாகைக்குத் துரைசாமி போனபோது உள்ளே யாருடனோ அவள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அந்தப் பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடவே துரைசாமி கவனமாகக் கேட்டார். அதிலிருந்து ஒரு விபரீதமான மோசடி வேலையைப்பற்றி அறிந்து கொண்டார். பிரசவங்கள் நிகழ்ந்த அன்று இரவில் ராஜம்மாளின் குழந்தை கங்காபாயின் குழந்தையாகவும், கங்காபாயின் குழந்தை ராஜம்மாளின் குழந்தையாகவும் மாற்றப்பட்டன என்று தெரிந்து கொண்டார். உடனே கதவை இடித்துத் திறந்து கொண்டு போய் நர்ஸையும் ரமாமணியையும் சண்டை பிடிக்கவேண்டும் என்று முதலில் தோன்றியது. அப்புறம் அதனால் என்ன பலன்கள் நிகழுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மனக் குழப்பம் மாறிய பிறகு நன்றாக யோசித்துத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். நர்ஸ் வெளியில் போகும்போது அவளுடைய கண்ணில் படாமல் மறைந்திருந்து விட்டுப் பிறகு அறைக்குள் போனார். ரமாமணியைப் பார்த்ததும் அவருடைய பொறுமையெல்லாம் பறந்து விட்டது. அவளைத் திட்டிச் சண்டை பிடித்தார். ரமாமணி ஓவென்று அழுது விட்டாள். ஒரு கத்தியை எடுத்து நீட்டி "இதனால் என்னைக் குத்திக் கொன்றுவிட்டு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போங்கள்!" என்றாள். "என் தங்கை மேல் என் அன்பையெல்லாம் வைத்திருந்தேன், அவளும் போய்விட்டாள். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டு உயிர் வாழலாம் என்று எண்ணியிருந்தேன்.
குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு போனால் எனக்கு அப்புறம் இந்த உலகத்தில் வேலை ஒன்றுமில்லை" என்று கத்தினாள். முடிவில் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாள். அதாவது "குழந்தையை எடுத்துக் கொண்டு போவதில்லை" என்று துரைசாமியிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். குழந்தைகளை மாற்றும் காரியத்தை எதற்காகச் செய்தாள் என்று துரைசாமி விசாரித்துத் தெரிந்து கொண்டார். தன் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தால் ரஜினிபூர் ராஜ்யத்துக்கு அந்தக் குழந்தை வாரிசு ஆகும் என்று ரமாமணிபாய் நம்பினாள். அக்காரணத்தாலேயே ரஜினிபூர் ராஜாவின் துர்மந்திரிகள் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்தாள். குழந்தை வேறிடத்தில் வளர்ந்தால் அந்த அபாயம் இல்லை என்றும், பின்னால் தக்க சமயத்தில் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைத்தாள். ஆனால் கங்காபாய் இறந்து போவாள் அவளுடைய குழந்தையும் செத்துப் போய்விடும் என்று ரமாமணிபாய் எதிர்பார்க்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியமாக, மாற்றி எடுத்து வந்து வளர்த்த ராஜம்மாளின் குழந்தை தன்னுடைய உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்து விடும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்த்தபோது துரைசாமிக்கும் குழந்தையை ரமாமணியிடம் அப்போதைக்கு விட்டுவைப்பதே நலம் என்று தோன்றியது. இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் ராஜம்மாளிடம், "இதுதான் உன் குழந்தை!" என்று சொன்னால் ராஜம்மாள் நம்பவேண்டுமே? ஏற்கனவே அவள் கொஞ்சம் சந்தேகப் பிரகிருதி.
இதைப்பற்றி ஏதாவது விபரீதமான சந்தேகம் அவள் மனதில் தோன்றிவிட்டால் துரைசாமிக்கு வேறொரு காதலியிடம் பிறந்த குழந்தை என்று அவள் எண்ணிவிட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நாசமாகிவிடுமே? - இம்மாதிரி மனக்குழப்பத்துடன் துரைசாமி வீடு திரும்பினார். "பம்பாயில் எத்தனையோ லட்சம் ஜனங்கள் இருக்கிறார்களே? இந்த மாதிரி ஒரு ஆச்சரியமான, விபரீதமான அநுபவம் என் வாழ்க்கையிலேதானா ஏற்படவேண்டும்?" என்று எண்ணிக்கொண்டே சென்றார். அந்த ஒரு ஆச்சரியமான விபரீத சம்பவம் மேலும் பல ஆச்சரிய - விபரீதங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது. ரமாமணியிடம் வளர்ந்து வந்த தன் குழந்தையிடம் துரைசாமியின் பாசம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதன் காரணமாகவே துரைசாமி ரமாமணிபாயிடம் நீடித்த தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆளாகவும் நேர்ந்தது. தன்னுடைய போக்கு வரவுகளைப் பற்றித் தன் மனைவி ராஜம்மாளிடம் பொய் சொல்லி மறைக்க வேண்டியதாயிற்று. அதனால் அந்தப் பேதைக்கு எல்லையற்ற மனத்துன்பத்தையும் அளிக்கவேண்டியதாயிற்று. "சீதா! ராஜம்மாளுக்குப் பிறந்து ரமாமணியிடம் வளர்ந்த அந்தப் பெண்மணியின் பெயர்தான் தாரிணி. அவள்தான் என்னுடைய சீமந்த புத்திரி, நீ அவளுடைய தங்கை. நீங்கள் இரண்டு பேரும் குழந்தை களாயிருந்தபோது நான் பட்ட சங்கடத்தை உன்னால் கற்பனை செய்துகூட அறிய முடியாது. உலகத்தில் யாரும் அத்தகைய சங்கடத்தை அநுபவித்திருக்க மாட்டார்கள். முற்காலங்களில் கொடுமையான அரசர்கள் ஒருவித தண்டனை அளிப்பார்களாம்.
ஒரு மனிதனை நடுவில் நிறுத்தி இரண்டு பக்கமும் இரண்டு யானையை நிறுத்தி வலது கையை ஒரு யானையும் இடது கையை ஒரு யானையும் பிடித்து இழுக்கும்படி செய்வார்களாம். அதே மாதிரியாக ஒரு பக்கத்தில் தாரிணியின் மேல் உள்ள பாசமும் இன்னொரு பக்கத்தில் உன்மேல் உள்ள பாசமும் என்னைப் பற்றி இழுத்துக்கொண்டிருந்தன. நடுவில் அகப்பட்டுக் கொண்டு நான் திண்டாடினேன்! ஆனால் இந்தத் திண்டாட்டத்திலெல்லாம் ஒரு சந்தோஷமும் இருந்தது!" என்றார் மௌல்வி சாகிபுவாக விளங்கிய துரைசாமி ஐயர். சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் அதுவரையில் அர்த்தமாகாதிருந்த பல விஷயங்கள் அப்போது விளங்கின. மர்மமாயிருந்த பல சம்பவங்கள் தெளிவு பெற்றன. தாரிணியென்று தன்னை எண்ணிக்கொண்டு ரஜினிபூர் ஆட்கள் கொண்டு போனதற்குக் காரணம் தெரிந்தது. அதைக் காட்டிலும் முக்கியமாக ராஜம்பேட்டையில் சௌந்தரராகவன் தன்னை முதன் முதலில் பார்த்ததும் அன்பு கொண்டதின் காரணம் விளங்கிற்று. தாரிணியின் சாயலைத் தன்னிடம் கண்டதுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தாரிணி தன்னிடம் அவ்வளவு அன்பாயிருந்ததின் காரணமும் சீதாவுக்கு அப்போது நன்கு புலனாயிற்று. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த பாசந்தான்; சந்தேகம் என்ன? தன்னுடைய மனதிலும் தாரிணியிடம் வாஞ்சை பொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் பாழும் அசூயை அடிக்கடி அந்த வாஞ்சையை அமுக்கி விட்டது. எவ்வளவு கீழான மனது தன்னுடைய மனது; தாரிணியின் தயாள குணம் என்ன? விசால இருதயம் என்ன? தன்னுடைய ஈருஷை நிறைந்த சின்ன மனது என்ன? கடவுள் புண்ணியத்தில் இந்த இக்கட்டிலிருந்து தப்பி மறுபடியும் அந்தப் புண்ணியவதியைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கொடுத்து வைத்திருந்தால்?...
"அப்பா! தாரிணி அக்காவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?" என்று கேட்டாள். "இந்த விஷயமெல்லாம் என்று எதைப் பற்றிக் கேட்கிறாய்? நான் இப்போது சொன்னவற்றில் சில தெரியும்; சில தெரியாது." "நான் அவள் கூடப் பிறந்த தங்கை என்று தெரியுமா?" "தெரியாது, என்னுடைய நெஞ்சு மிகவும் கோழை நெஞ்சு, சீதா! பல தடவை அவளிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கடைசியில் தைரியம் வராமல் விட்டுவிட்டேன். ரஸியா பேகம் அவளிடம் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தாள்." "எதற்காக அப்பா?" "பைத்தியக்காரத்தனந்தான்! உண்மையைச் சொல்லி விட்டால் அவள் பேரில் தாரிணிக்குப் பாசம் இல்லாமல் போய்விடும் என்று பயம். அது மட்டுமல்ல; ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு பாதியாவது தாரிணிக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற சபலம் உன் சித்தியின் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. உலகம் தலைகீழாகப் போகிறது என்பதையும் சுதேச ராஜ்யங்கள் எல்லாம் இன்னும் சில காலத்தில் இருந்த இடந்தெரியாமல் போய்விடும் என்பதையும் அவள் உணரவில்லை!" சீதா சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிறகு, "அப்பா! எனக்குக் கலியாணம் ஆனபிறகு வெகுகாலம் வரையில் என்னை வந்து பார்க்காமலேயே இருந்து விட்டீர்களே, ஏன்?" என்றாள். மௌல்வி சாகிபு தயங்கினார், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறாயா?" என்று கேட்டார். "உங்கள் இஷ்டம்! சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!" "உண்மையைச் சொல்ல வேண்டியதுதான், சீதா! இப்போது சொல்லாவிட்டால் பிறகு சந்தர்ப்பம் வருமோ என்னமோ யார் கண்டது? சொல்லுகிறேன் கேள்! உனக்குக் கலியாணம் ஆன புதிதில் உன் பேரில் எனக்குக் கோபமாகவேயிருந்தது. உன் தமக்கை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொள்ள விரும்பிய புருஷனை நீ கலியாணம் செய்து கொண்டாய். தாரிணிக்கு நீ பெரிய துரோகம் செய்து விட்டதாக நினைத்தேன்.
ஆனால் உண்மையில் நீ அவளுக்குப் பெரிய உபகாரம் செய்திருக்கிறாய் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். அம்மா! சௌந்தர ராகவனைக் கலியாணம் செய்து கொண்டு நீ பட்ட கஷ்டங்களை நினைத்து நினைத்து நான் எத்தனையோ நாள் கண்ணீர் வடித்திருக்கிறேன். இவ்வளவு கஷ்டங்களையும் தாரிணி பட்டிருக்க வேண்டியவள்தானே? நீ அந்தத் தூர்த்தனைக் கலியாணம் செய்து கொண்டதனால் தாரிணிக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய்?" என்றார் மௌல்வி சாகிபு. "அப்பா! அவரைப் பற்றி நீங்கள் ஒன்றும் அவதூறாகப் பேச வேண்டாம், என்னால் பொறுக்க முடியாது!" என்றாள் சீதா. "இல்லை, பேசவில்லை, மன்னித்துக்கொள்!" என்றார் மௌல்வி. "நீங்கள் சற்று முன் கூறியது உண்மையும் இல்லை. அக்கா இவரைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என்னைப் போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டாள். இரண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியிருப்பார்கள். இந்தத் துக்கிரி, - அதிர்ஷ்டமற்ற பாவி அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு நாசமாக்கினேன்!" "அப்படிச் சொல்லாதே, சீதா! இந்த உலகில் எல்லாம் அவரவர்களுடைய தலைவிதியின்படி நடக்கிறது. ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர் நாசமாக்க முடியாது." "தலைவிதியில் எனக்கு நம்பிக்கையில்லை அப்பா! தலைவிதியும் இல்லை, கால் விதியும் இல்லை. எல்லாம் நம்முடைய கர்மத்தின் பயன்தான். அக்காவுக்கு நான் முதலில் துரோகம் செய்தேன்; பிறகு என் அருமைத் தோழி லலிதாவுக்குத் துரோகம் செய்தேன். அதற்கெல்லாம் பிராயசித்தம் நான் செய்து கொள்ளாவிட்டால் எனக்கு நல்ல கதி எப்படிக் கிடைக்கும்!" "நீ மனதறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை, சீதா! எல்லாம் விதி வசமாக நேர்ந்ததுதான். வீணாக மனதை, அலட்டிக் கொள்ளாதே!" "அப்பா! எனக்கு நீங்கள் ஒரு வரம் கொடுக்க வேண்டும்." "நான் என்ன கடவுளா, உனக்கு வரம் கொடுப்பதற்கு?" "கடவுளைப் போலத்தான் வந்திருக்கிறீர்கள். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' அல்லவா? அன்னை போய் விட்டாள். நீங்கள்தான் பாக்கியிருக்கும் கடவுள்.
இந்தப் பிரயாணத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ஏதாவது ஆபத்து ஏற்பட்டு நான் இறந்துவிட்டால், நீங்கள் கட்டாயம் தாரிணி அக்காவைப் பார்த்து நான் சொல்லும் செய்தியைச் சொல்ல வேண்டும். நான் அக்காவுக்குச் செய்த துரோகத்துக்காக மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்ல வேண்டும்!..." "இது என்ன பேச்சு?" "ஒருவேளை நான் வழியில் இறந்து போய் விட்டால் நீங்கள் எப்படியாவது தாரிணி அக்காவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இவருடைய மனதிலிருந்து இன்னும் அக்காவின் ஞாபகம் போகவில்லை என்றும், இவரை அக்கா கட்டாயம் கலியாணம் செய்து கொண்டே தீர வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். நான் இறந்த பிறகு தாரிணி அக்காவும் இவரும் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாயிருந்தால்தான் என் ஆத்மா சாந்தமடையும்!" "இது என்ன பைத்தியம்? என்னுடைய தவறுதான்! உன்னிடம் நான் ஒன்றுமே சொல்லியிருக்கக் கூடாது." "நான் இப்போது சொன்னதை நீங்கள் தாரிணி அக்காவிடம் சொல்வதாக வாக்களித்தால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்? இல்லாவிட்டால் புறப்பட்டு வரமாட்டேன்." "உன் இஷ்டப்படியே வாக்களிக்கிறேன், அம்மா! ஆனால் அதற்கு அவசியம் ஏற்படப் போவதில்லை." "எதற்கு?" "தாரிணியிடம் நான் செய்தி சொல்வதற்கு. வழியிலேயே நாம் உன் தமக்கையைப் பார்ப்போம். அப்போது நீயே சொல்லிவிடலாம்." "வழியில் பார்ப்போம் என்று எதைக்கொண்டு சொல்லுகிறீர்கள்?" "எனக்கு ஜோஸியம் தெரியும், இப்போது உனக்கு ஒரு உதாரணம் சொல்லி நிரூபிக்கிறேன், பார்! நம்முடைய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த பையன் இருக்கிறான் அல்லவா?" "ஆமாம், அவனுக்கு என்ன?" "அதோ பாடுகிறான், கேள்? என்ன பாடுகிறான் என்று தெரிகிறதா உனக்கு?"
சற்றுத் தூரத்திலிருந்து 'சல் சல் நவ் ஜவான்!' என்ற டாக்கிப் பாட்டு லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பையன் பாறை மறைவில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தான். "பையன் ஏதோ பழைய பாட்டை முணுமுணுக்கிறது கேட்கிறது! அதனால் என்ன?" "அந்தப் பையன் நம்மை ஏமாற்றிவிட்டு ஓடிவிட உத்தேசித்திருக்கிறான். கவனித்துக்கொண்டிரு." இரண்டு நிமிஷத்துக்குப் பிறகு கோவேறு கழுதையை வண்டியிலே பூட்டும் சத்தம் கேட்டது. "நீங்கள் சொல்வது உண்மைதான், வண்டியைப் பூட்டிக் கொண்டு பையன் ஓடிவிடப் பார்க்கிறான் போலிருக்கிறது. அப்புறம் நம்முடைய கதி என்ன ஆகிறது?" "கவலைப்படாதே, சீதா! அவனுடைய நோக்கம் நிறைவேறாது!" "அது எப்படிச் சொல்கிறீர்கள்?" "ஜோசியந்தான் சொல்கிறேன். பார்த்துக் கொண்டே இரு!" சில நிமிஷத்துக்கெல்லாம் வண்டிச் சக்கரம் உருளும் சத்தம் கேட்டது. வண்டியும் கோவேறு கழுதையும் அதை ஓட்டிய பையனும் கண்ணுக்குத் தென்பட்டார்கள். மௌல்வி சாகிபு சட்டென்று தன் மடியிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். 'டுமீர்' என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்து சென்றது. சீதாவின் காதில் இலேசாக அலை ஓசை கேட்டது. அது, "மரணமே! வா!" மரணமே! வா!" என்று சீதாவின் காதில் ஒலித்தது.