அலை ஓசை/பிரளயம்/ஜனவரி 31ம் தேதி
முப்பத்தாறாம் அத்தியாயம் ஜனவரி 31ம் தேதி
சீதாவின் துர்ப்பாக்கியமானது அவளுடைய கடைசி மனோரதம் நிறைவேறுவதற்கும் குறுக்கிடவே செய்தது. அவர்கள் இரண்டு மூன்று நாளைக்கெல்லாம் பிரயாண வசதி செய்து கொண்டு டில்லிக்குப் புறப்படுவது என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால், அதற்குள்ளே, அதாவது ஜனவரி மாதம் 30ம் தேதி மாலையில், பேரிடி போன்ற செய்தி ரேடியோவின் மூலம் உலக மெல்லாம் பரவியதுபோலப் பானிபத் பட்டணத்துக்கும் வந்துவிட்டது. முதலில் யாருக்குமே அந்தச் செய்தியில் நம்பிக்கை பிறக்கவில்லை. 'உண்மைதானா, உண்மைதானா?' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். "மகாத்மாவையாவது, மனிதனாகப் பிறந்த ஒருவன் சுடவாவது?" என்றார்கள். ரேடியோவில் நேரில் கேட்டவர்கள்கூட அதில் ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி இருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். பாகிஸ்தான் ரேடியோ டில்லி ரேடியோவைப் போல் பாசாங்கு செய்து ஏமாற்றி அந்தப் பயங்கரமான செய்தியை விஷமத்துக்காகப் பரப்பியிருக்கிறது என்று எண்ணினார்கள். இன்னும் சிலர் டில்லி நகரில் உள்ள முஸ்லிம்கள் டில்லி ரேடியோவைக் கைப்பற்றி அவ்விதம் பொய்ச் செய்தியை வெளியிடுவதாகச் சந்தேகித்தார்கள். வேறு சிலர், "அப்படியே மகாத்மாவை ஒரு பாதகன் சுட்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அந்த மகானுடைய உயிர் பிரிந்திருக்குமா? ஏதோ அவசரப்பட்டுச் செய்தி சொல்லிவிட்டார்கள். 'பிழைத்து விட்டார்' என்ற சந்தோஷச் செய்தி சீக்கிரத்தில் வந்து விடும்!" என்று நினைத்தார்கள். இரவு 8-30க்கு எல்லாச் சந்தேகமும் தீர்ந்துவிட்டது. பண்டித ஜவஹர்லால்ஜியும், சர்தார் படேலும் அவர்களுடைய சொந்தக் குரலில் தெள்ளத் தெளிய பேசிய பிறகு, தொண்டை அடைக்க விம்மிக் கொண்டே மகாத்மா கொல்லப்பட்ட செய்தியைச் சொன்ன பிறகு, வேறு சந்தேகம் என்ன இருக்க முடியும்?
அகதி முகாமில் அந்தக் கொடூரமான செய்தியைக் கேட்ட சூரியா தன்னுடைய சொந்த ஜாகைக்கு ஓடினான். துரைசாமி ஐயர் அச்சமயம் சீதாவை மூர்ச்சை தெளிவிக்க முயன்று கொண்டிருந்தார். சுமார் ஐந்தரை மணிக்குச் சீதா 'வீல்' என்று கத்திவிட்டு உணர்வை இழந்து ழுந்ததாகத் துரைசாமி ஐயர் சொன்னார். பிறகு சூரியா ரேடியோ மூலம் வந்த கொடிய செய்தியைத் தெரிவித்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மன வேதனை ஒருபுறமிருக்க சீதாவுக்குத் தெரிவிப்பதா வேண்டாமா என்றும் யோசிக்க வேண்டியதாயிற்று. தெரிவித்தால் அதனால் அவளுடைய இருதயம் பாதிக்கப் படலாம். ஆனால் தெரிவிக்காமலே இருந்து விட முடியுமா? வருங்காலத்தில் என்றென்றைக்கும் அவளுடைய மனம் வேதனைப்படாதா? அதைக் காட்டிலும் அவளை டில்லிக்கு அழைத்துப் போய் மகாத்மா காந்தியின் புனிதத் திருமேனியை யாவது தரிசனம் செய்து வைப்பது நல்லதல்லவா? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு உணர்வு வந்தது. வழக்கத்தைக் காட்டிலும் அவளுடைய ஆயாசமும் பிரமிப்பும் அதிகமாயிருந்தன. தான் இனி அதிகம் காலம் பிழைத்திருக்க முடியாது என்றும், ஆகையால் காந்திஜியைத் தரிசிக்க உடனே டில்லிக்குப் போகவேண்டும் என்றும் அவள் சமிக்ஞையினால் வற்புறுத்திச் சொன்னாள். இதன் பேரில் மற்ற இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். காலையில் சூரியா அவளை டில்லிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டியதுதான். சமயோசிதம் போல் காந்திஜியின் மரணத்தைப் பற்றி அவன் அவளுக்குத் தெரிவிக்க வேண்டியது. அல்லது அவளே பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டியது. அந்தச் சந்தர்ப்பத்தில் டில்லிப் பிரயாணம் போய் வருவதற்கு வேண்டிய தெம்பு துரைசாமி ஐயருக்கு இல்லையாதலால் அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். சீதாவைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு போய் ஜாக்கிரதையாகத் திரும்பி வரும்படி ஆயிரந்தடவை சூரியாவுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
சீதாவின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு தடவை கனவில் நடப்பவை போன்ற சம்பவங்கள் நடந்தன. பானிபத்தி லிருந்து டில்லிக்குப் போகும் சாலையில் அன்று போன ஜனக் கூட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. சூரியாவோ அவளுடைய கேள்வி ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தலையை அசைத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவர்கள் டில்லியை அடைந்தார்கள். பழைய டில்லியிலிருந்து ஒரு பெரிய ஜன சமுத்திரம் புதுடில்லியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள். கனவில் நடப்பவளைப் போல் நடந்து சீதாவும் சென்றாள். கூட்டத்தில் தவறிப் போய் விடாமல் சூரியா கண்ணுங் கருத்துமாக அவளைத் தொடர்ந்து போய்க்கொண்டி ருந்தான். அவனுடைய நெஞ்சை ஒரு பெரிய பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது. சீதாவுக்குச் செய்தியைச் சொல்லும் தைரியம் இன்னமும் அவனுக்கு வரவில்லை. இனிமேல் சொல்லவேண்டிய அவசியமும் கிடையாது. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவே காந்தி மகாத்மாவின் திருமேனியைப் பார்த்துத் தெரிந்து கொள்வாள். ஆனால் அவ்விதம் பார்த்த உடனே அவளுக்கு ஏதாவது நேராமல் இருக்க வேண்டுமே? இத்தனை கூட்டத்துக்கு மத்தியில் அவள் உணர்விழந்து விழாமல் இருக்கவேண்டுமே?...... சூரியாவும் சீதாவும் போய்ச் சேர்ந்த சமயம், மகாத்மா திருமேனியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும் சமயமாயிருந்தது. எப்படியோ படாதபாடுபட்டு அந்த ஜன சமுத்திரத்துக்குள் இடித்துப் புடைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் காந்தி மகாத்மாவின் திருமுகத்தைப் பார்க்கக்கூடிய சமீபத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதோ ஒரு மகத்தான முக்கியமான சம்பவத்தை தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற பரபரப்போடு சீதாவும் கூட்டத்துக்குள் புகுந்து விரைந்து சென்றாள். புஷ்பங்களைக் கொட்டி அலங்கரித் திருந்த மோட்டார் ரதத்தில் மகாத்மாவின் திருமேனி கிடந்த நிலையையும் அவருடைய திருமுகத்தின் தோற்றத்தையும் பக்கத்தில் மாபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருந்த காட்சியையும் சுற்றிலும் நின்ற மக்கள் கூட்டத்தின் சோக முகங் களையும் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்ததும் சீதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
லட்சக்கணக்கான ஜனங்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் காது செவிடுபடும்படியான ஓலம் எழுந்துகொண் டிருந்தது. சீதாவின் காதில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அலை ஓசையானது ஜனசமுத்திரத்தின் இரைச்சலோடு ஒன்றாகக் கலந்தது. காந்திஜியின் நிலை இன்னதென்று அறிந்ததும் அவளுடைய நெஞ்சு விம்மி எழுந்து தொண்டையை அடைத்தது. பின் கழுத்துக்கு மேலே இரு செவிகளுக்கும் மத்தியில் ஏதோ ஒரு நரம்பு, வீணையின் மந்திரத் தந்தி அறுந்தாற்போல், படீரென்று வெடித்து அறுந்தது. அந்த ஓசை மேற்கூறிய இருவகைப்பட்ட அலை ஓசையையும் பிளந்து கொண்டு சென்று அவளுடைய மண்டைக்குள்ளேயே பாய்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் பிரமிப்பு நீங்கி மனம் தெளிவுற்றது, சிந்தனா சக்தி திரும்ப வந்தது. ஆகா! இந்த மகா புருஷரைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ தடவை நெருங்கியிருந்தும் பல காரணங்களினால் அப்போதெல்லாம் தவறிப் போய்விட்டது. அவருடைய உயிர் பிரிந்த பிறகு நடக்கும் இறுதி ஊர்வலத்தின் போதுதானா காந்திஜியின் திருமேனியைப் பார்க்கும்படி நேரவேண்டும்? எத்தனை தடவை மகாத்மாவின் ஆசிரமத்துக்கே போய்விட வேண்டும் என்றும், அவருடைய தொண்டுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிடவேண்டும் என்றும் எண்ணியிருப்பாள்? தன் உடம்பில் அணிந்துள்ள ஆபரணங்களையெல்லாம் அவரிடம் கழற்றிக் கொடுத்துவிடவேண்டும் என்று எவ்வளவு முறை ஆசைப்பட்டிருப்பாள்? அந்த ஆசையெல்லாம் இனிமேல் நிறைவேறப் போவதில்லை. சீதா! நீ இந்த உலகத்தில் எதற்காகப் பிறந்தாய்? உன்னுடைய உள்ளத்தின் ஆசை ஒவ்வொன்றும் இவ்விதம் அவலமாகப் போவதற்குத்தானா பிறந்தாய்? உற்றார் உறவினருக்குக் கஷ்டம் கொடுப்பதற்காகவேயா பிறந்தாய்? காந்தி மகாத்மாவிடம் பாவியாகிய நீ பக்தி வைத்திருந்தாயே? அது காரணமாகவே இவருடைய முடிவு இப்படி ஆயிற்றோ? நூற்றிருபத்தைந்து வயது வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாரே? அவரை உயிரோடு நீ தரிசிக்கக் கூடாது என்பதற்காகவே போய் விட்டாரோ?....
இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே சீதா ஊர்வலத்தோடு போய்க்கொண்டிருந்தாள். சில சமயம் ஜனக் கூட்டத்தின் நெருக்கமும் அவளை அந்தப் புஷ்ப ரதத்துக்கு வெகுதூரத்துக்கு அப்பால் கொண்டு வந்து தள்ளிவிடும். மறுபடியும் அவள் முண்டியடித்துக் கொண்டு புஷ்பரதம் போகும் இடத்தை நோக்கி நெருங்கிச் செல்வாள். காந்திஜியின் திருமேனியை, அவருடைய திருக்கரத்தை, அல்லது பாதகமலத்தைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் அடக்க முடியாமல் எழுந்தது. இது காரணமாகவே அவள் புஷ்ப ரதத்தை நெருங்குவதற்கு அவ்வளவு பெருமுயற்சி செய்தாள். இதற்கிடையில் சூரியா அவளைப் பிரிந்துவிடும்படி நேர்ந்தது. காந்திமகானைப் பார்த்த பிறகு சூரியாவைப் பற்றிச் சீதா ஒரு கணமும் நினைக்கவில்லை. சூரியாவோ அவளைப் பிரிந்ததினால் ஏற்பட்ட பீதியுடனும் எப்படியாவது அவளைத் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடனும் கூட்டத்தில் அங்குமிங்கும் இடித்துப் பிடித்துக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தான். கடைசியாக, பிற்பகல் சுமார் நாலுமணிக்கு யமுனை நதிக்கரைக்கு வந்து ஊர்வலம் முடிவடைந்தது. சிதையும் அடுக்கப்பட்டது, இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. அப்போது அங்கே திரண்டிருந்த ஜன சமுத்திரத்தின் வெளி வரம்புக்குச் சீதா வந்து விட்டாள். அவளால் எவ்வளவோ முயன்றும் கூட்டத்தைப் பிளந்துகொண்டு உள்ளே போக முடியவில்லை. சிதையில் நெருப்பு வைத்தாகிவிட்டது! செந்தழலின் கொழுந்து அதோ கிளம்பி வானை எட்டப் பார்த்தது. ஏழு கடல்களும் கொந்தளித்தாற் போன்ற ஒரு பெரும் ஓலக்குரல் அப்பெருங் கூட்டத்தில் எழுந்தது. அதற்குமேல் சீதாவினால் அங்கே நிற்க முடியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது, தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது; உலகமே முடிந்து விட்டது. தன்னுடைய ஆசைகள் மனோரதங்கள் எல்லாம் எரிந்து பொசுங்கிப் பஸ்மீகரமாகிப் பிடி சாம்பலாய் மாறிவிட்டன; இனி அங்கே நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்?
சீதா திரும்பிச் சென்றாள்; எங்கே செல்வது என்று தெரியாமல் கால்போன வழியே அவளும் போய்க்கொண்டிருந்தாள். அப்போதும் சூரியாவின் ஞாபகம் அவளுக்கு வரவில்லை. வேறு எந்த ஞாபகமும் அவளுக்கு வரவில்லை. உலகத்துக்கு ஒளி தந்த ஜோதி மறைந்துவிட்டது. இனி என்றைக்கும் இந்த உலகத்தில் காரிருள் சூழ்ந்திருக்கும் என்ற ஒரே எண்ணம் அவள் மனதில் குடிகொண்டிருந்தது. வாழ்க்கையில் இத்தனை துன்பங்களை அனுபவித்த பிறகும் யாரிடம் அடைக்கலம் புகுந்து யாருக்குத் தொண்டு செய்வதன்மூலம் தன்னுடைய வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்யலாம் என்று இதய அந்தரங்கத்தில் அவள் நம்பிக் கொண்டிருந்தாளோ, அந்த மகான் போய் விட்டார் என்ற நினைவு ஒன்றே மேலோங்கியிருந்தது. இனிமேல் அவள் எங்கே போனால் என்ன? என்ன செய்தால் என்ன? வருகிற யமன் வந்தே தீருவான்! வரட்டும்! அதைப் பற்றி என்ன கவலை? யாரைப் பற்றித்தான் கவலைப்படவேண்டும்? குழந்தை வஸந்தி! ஆம், அவளைப் பற்றி என்ன! அவள் உயிரோடிருக் கிறாளா? இருந்தால் அவளை யார் காப்பாற்றுவார்கள்? ஏன்? கடவுள் காப்பாற்றுகிறார். கடவுள்! கடவுள் என்று ஒருவர் இருந்தால் உலகத்தில் இத்தனை கொடுமைகளையும் துன்பங்களையும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருப்பவர் கடவுள் ஆவாரா? அவரைக் கடவுள் என்று சொல்ல முடியுமா? ஆனால் காந்திஜி அத்தகைய கருணைக் கடலான கடவுளைப் பற்றி ஓயாது சொல்லிக்கொண்டிருந்தது ஏன்? அந்த மகானுடைய நம்பிக்கைக்கு ஆதாரம் இல்லாமலா இருக்கும்! இப்படி எண்ணிக்கொண்டே நடந்து, நடந்து, நடந்து, சீதா போய்க் கொண்டிருந்தாள். எங்கே போகிறோம் என்று தெரியாமல் நடந்து போய்க் கொண்டிருந்தாள். கடைசியாக ஓரிடத்துக்கு வந்ததும் கால் ரொம்ப வலிக்கிறதென்று தெரிந்தது. உடம்பு தள்ளாடிற்று; காலையிலிருந்து உணவு இல்லையல்லவா? ஒரு பங்களாவின் வெளி மதில் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். வீட்டுக்குள்ளேயிருந்து கீதம் ஒன்று கேட்டது. வானொலியின் மூலம் வந்த கீதம்? உள்ளத்தை உருக்கிக் கண்ணீர் வருவிக்கும் கீதம்! உடலையும் உயிரையும் நெகிழச் செய்யும் கீதம்!
"ஹரி! தும் ஹரே ஜனஜீ பீரு!" ("ஹரீ! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!") ஆகா! இது என்ன? நமக்குக் காது கேட்கிறதே! பாட்டுக் கேட்க முடிகிறதே! அமுத வெள்ளத்தைப்போல் காதில் பாய்கிறதே! இத்தனை நாள் கேட்ட அலை ஓசை எங்கே போயிற்று? அந்த இடைவிடாத பயங்கரச் சத்தம் எப்படி மறைந்தது? காந்தி அடிகளே! கருணாநிதியே! தங்களுடைய மரணத்திலே எனக்கு வாழ்வு அளித்தீர்களோ! காந்தி மகானுக்கு மிகவும் பிரியமான அந்த மீரா கீதத்தை, அவருடைய திருமேனி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், வானொலி நிலையத்தார் ஒலிபரப்பினார்கள். பாட்டு மேலும் சீதாவின் காதில் கேட்டது:- "ஹரி! மக்களின் துன்பத்தை நீ போக்குவாயாக! "நீ முன்னம் துரோபதையின் ஆடையை வளர்த்து அவள் மானத்தைக் காக்கவில்லையா? "பாலன் பிரஹ்லாதனுக்குக் கருணை புரிந்து காப்பாற்றவில்லையா? "கிழவனாகிய கஜ ராஜனுடைய மரண பயத்தைப் போக்கி அருள்புரியவில்லையா? "துன்பம் எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவன் அல்லவா நீ? "ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!" பாட்டைக் கேட்டுக்கொண்டு சீதா மெய்மறந்து நின்றாள் பாட்டு நின்றது. நாலா பக்கமும் மோட்டார் ஹாரன்கள் அலறும் ஓசை கேட்டது; மற்றும் பல சத்தங்கள் கேட்டன. சுற்றுமுற்றும் பார்த்தாள் நன்றாக இருட்டிவிட்டது. பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனி மூடிய மரங்கள் சோகமே உருவாகக் காட்சி அளித்தன. ஜனங்கள் காந்திஜி காலமான சம்பவத்தைக் குறித்துப் பற்பல பாஷைகளில் பேசிக்கொண்டு சாலையோடு போய்க்கொண்டிருந்தார்கள். சுற்றுமுற்றும் சீதா பார்த்தபோது, தான் பிடித்துக் கொண்டு நின்ற மதில் சுவரையும் கவனிக்க நேர்ந்தது. ஆகா! இது என்ன? இது யாருடைய வீடு? நம்முடைய வீடு போலிருக்கிறதே! நாம் பல வருஷ காலம் நமக்குச் சொந்தம் என்று எண்ணி வாழ்ந்த வீடுதான் இது! இந்த வீட்டில் இப்போது யார் இருப்பார்கள்? ஏன் அவர்தான் இருக்க வேண்டும். அவர்தான் ரேடியோ கேட்கிறார் போலிருக்கிறது. கடவுளே நம்மை இந்த இடத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறார். உள்ளே போய் ஏன் அவரைப் பார்க்கக்கூடாது? "போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்வு தொடங்குவோம்!" என்று ஏன் சொல்லக்கூடாது? இதையெல்லாம் அவரிடம் என்னால் சொல்ல முடியுமா? காது கேட்கச் செய்த பகவான் பேசும் சக்தியையும் கொடுத்துத்தான் இருப்பார் அல்லவா?- சீதாவின் நாக்கு முன்னெல்லாம் போல் நன்றாகப் புரண்டது போலத் தோன்றியது. நன்றாகப் பேச முடியும் என்று தோன்றியது! மதில் சுவரின் வாசல் திறந்துதான் இருந்தது. சீதா உள்ளம் நடுங்க, கால் தள்ளாட, அந்தப் பங்களாத் தோட்டத்துக்குள்ளே பிரவேசித்தாள்.