அலை ஓசை/பிரளயம்/டைரக்டர் சியாம சுந்தர்
இருபத்திரண்டாம் அத்தியாயம் டைரக்டர் சியாம சுந்தர்
எப்போதும் கலகலவென்று பற்பல குரல்களும் விதவித சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் கூட அந்த இரவு மூன்றரை மணிக்கு நிசப்தமாயிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் அலங்கோலமாகப் படுத்துத் தூங்கினார்கள். சுண்டுவும் சீதாவும் பிளாட்பாரத்துக்குள் சென்று அங்கே கிடந்த ஒரு மர பெஞ்சியில் உட்கார்ந்தார்கள். "வெகு நாளாக உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று எனக்கு எண்ணம். அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; இப்போது சொல்லட்டுமா?" என்று சுண்டு கேட்டான். "பேஷாகச் சொல், கேட்கிறேன் பொழுதும் போக வேண்டும் அல்லவா?" என்றாள் சீதா. "அத்தங்கா! ஒவ்வொருத்தருக்கும் இந்த உலகத்தில் பெயரும் புகழும் அடைவதற்கு என்று கடவுள் ஒரு வழியை வகுத்திருக்கிறார். அதை விட்டு விட்டு வெளியே போனால்தான் இல்லாத கஷ்டங்கள் எல்லாம் வந்து சேருகின்றன. இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. 'சதுரத்தில் வட்டத்தைத் திணிக்க முயல்வதைப் போல' என்பார்கள். அது முடியாத காரியம். அதைச் செய்ய முயற்சிப்பதால் வீண் உபத்திரங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு வகுத்திருக்கும் வழி இன்னதென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலே தான் ஒருவனுடைய சாமர்த்தியம் இருக்கிறது. அத்தங்கா! நீ எதற்காக இந்தப் பூவுலகில் பிறந்தாயோ அதை நீ இன்னும் தெரிந்து கொள்ளவில்லையென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்...."
"ரொம்ப உண்மை, சுண்டு! நான் இந்த உலகில் ஏன் பிறந்தேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லைதான்!" "நீ உன் கஷ்டங்களினால் மனங்கசந்து இவ்விதம் சொல்கிறாய். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வாழ்க்கையில் உன்னுடைய துறை இன்னது என்பதை நீ இன்னமும் அறிந்து கொள்ளவில்லையென்றுதான் சொல்கிறேன். நான் கூறப் போவதில் உனக்கு ஒருவேளை நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். அல்லது நான் சொல்லுவதை ஒருவேளை நீ விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலிப் பேச்சுப் பேசலாம். அதனாலெல்லாம் என்னுடைய முடிவில் மாறுதல் ஏற்படப் போவதில்லை. உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதாகத் தீர்மானித்துக் கொள்வேன்...." "நான் கேலி ஒன்றும் செய்யவில்லை, சுண்டு! நான் கெட்ட கேட்டுக்குக் கேலி வேறேயா? உன் கருத்தைச் சொல்லு!" "அத்தங்கா! நீ நடிப்புக் கலைக்காகப் பிறந்தவள் என்பது என் தீர்ந்த அபிப்பிராயம். நாடக மேடையில் ஏறி நீ நடித்தாயானால் உனக்கு இணை இந்தியாவிலே யாரும் இல்லையென்று புகழ்பெறுவாய். சினிமாத் துறையில் பிரவேசித்தாயானால் கிரேடா கார்போவையும், ரீடா ஹேவொர்த்தையும், நர்மாஷியரையும் போல உலகப் பிரசித்தியே அடைந்துவிடுவாய். உன்னுடைய முகத்தைக் கடவுள் சினிமாத் திரைக்கு என்றே அமைத்திருக்கிறார்." சீதாவின் உள்ளத்தில் பழையபடி சபலம் முளைவிட்டு எழுந்தது. சுண்டுவின் சமத்காரமான பேச்சு அவளுடைய தற்பெருமை உணர்ச்சியைத் தூண்டி விட்டது. "இது வரையில் என்னை அழகானவள் என்று யாருமே சொல்லவில்லை. எனக்கும் வயது இருபத்தெட்டு ஆகப் போகிறது. நீதான் முதன் முதலாகச் சொல்கிறாய்!" என்றாள்.
"நானும் உன்னை அழகி என்று சொல்லவில்லை. அழகு யாருக்கு வேண்டும், அத்தங்கா! பெரும்பாலும் அசடுகள்தான் அழகாயிருப்பார்கள். அழகு வேறு; முகத்தில் ஜொலிக்கும் அறிவின் களை வேறு. நாடக மேடைக்கும் சினிமாத் திரைக்கும் வேண்டியது அழகு அல்ல; முகவெட்டுத்தான் வேண்டும் அது உன்னிடம் இருக்கிறது." "என் முகத்தில் ஒரு வெட்டுக் காயம் கூட இல்லையே, சுண்டு!" "பார்த்தாயா? கேலி செய்கிறாயல்லவா? அதனால்தான் உன்னிடம் சொல்லத் தயங்கினேன்." "கோபித்துக் கொள்ளாதே சுண்டு! நான் கேலி செய்தது தப்புத்தான். மேலே நீ சொல்ல உத்தேசித்திருந்ததைச் சொல்லு." "வெள்ளித் திரைக்கு மிகவும் பொருத்தமான முகவெட்டு உனக்கிருக்கிறது. இந்த முகவெட்டைக் கொண்டு நீ உலகத்தையே வென்று விடலாம். முகவெட்டு மாத்திரம் அல்ல; உள்ளத்தின் உணர்ச்சிகளையெல்லாம் தெள்ளத் தெளிய முகத்தில் வெளியிடும் சக்தியும் உனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீ சம்பாஷணை செய்யும் போதும், மேடையில் பிரசங்கம் செய்யும் போதும் நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். ஆத்திரமோ, கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ - எந்த உணர்ச்சியானாலும் உன் முகத்திலே பளிச்சென்று தெரிகிறது. நீ வாய் திறந்து பேசவேண்டிய அவசியமில்லை. உன்னுடைய கண்கள் பேசுகின்றன; உன் புருவங்கள் பேசுகின்றன; உன் நெற்றியின் சுளிப்புப் பேசுகிறது; உன் உதடுகளின் துடிப்புப் பேசுகிறது.
இது மாத்திரந்தானா? உன்னுடைய நடையின் அழகைப் பற்றி யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. உன் நடையின் அழகோடு எந்த ஹாலிவுட் சினிமா நட்சத்திரத்தின் நடை அழகையும் ஒப்பிட முடியாது. அன்னப்பட்சி தண்ணீரில் 'கிளைட்' பண்ணுவது போல நீ நடக்கிறாய். நம்முடைய நாட்டுப் பழங்காலக் கவிகள் 'அன்ன நடை' யைப் பெண்களின் நடையோடு ஒப்பிட்டிருப்பதின் பொருத்தம் உன்னுடைய நடையைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இன்றைக்குக்கூட நான் உனக்குக் கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததின் காரணம் அதுதான். உன் நடையின் அழகைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி நடையுள்ளவள் ஒருத்தியை ஹாலிவுட் டைரக்டர்கள் கண்டால் விடவே மாட்டார்கள். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்!" "சுண்டு! நீ மட்டும் என்னைவிட நாலு வயது பெரியவனாயிருந்து என்னைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் எனக்கு இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் ஒன்றும் வந்திராது." "அத்தங்கா! முதலிலேயே நான் சொல்லிவிட்டேனே! காதல், கலியாணம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று.
உண்மையில் எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. கலைத்தேவியை நான் மணந்து கொண்டு விட்டேன். வேறு மானிடப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே எனக்குக் கிடையாது. நீ எதற்காகப் பிறந்தாய் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பது போலவே நான் பிறந்த காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் சினிமாக் கதையை உதாரணம் செய்வதற்காக நான் பிறந்தவன். தென்னிந்தியாவில் அறிவாளிகள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்களில் யாரும் இதுவரையில் சினிமாக் கலையில் கவனம் செலுத்தவில்லை. அசடர்களும் துர்த்தர்களும் பிழைப்புக்கு வழியில்லாதவர்களுந்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஏதோ பி.ஏ. பரீட்சையை முடித்துத் தொலைக்க வேண்டுமென்பதற்காகப் படிக்கிறேன். பி.ஏ. பாஸ் செய்ததும் சினிமாத் துறையில் இறங்குவேன். நீயும் என்னோடு ஒத்துழைத்தால் தென் இந்தியாவை மட்டுமல்ல. இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே நாம் வெற்றி கொள்ளலாம். நான் இன்றைக்குச் சொல்லுகிறேன், கேள்! டைரக்டர் சியாம சுந்தர் எடுக்கப் போகும் முதல் படம் உலகப் பிரசித்தி அடையப் போகிறது. ஹாலிவுட் அகாடமி பரிசு அதற்கு நிச்சயம் கிடைத்தே ஆகவேண்டும்...." "சுண்டு! டைரக்டர் சியாம சுந்தர் என்பது யார்?" "யாரா! நான்தான்! என்னுடைய முதல் படத்தில் நீ கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டால் நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன், என்னால் நீ எவ்வளவு பெயரும் புகழும் அடையப் போகிறாய் என்பதை நீயே பார்க்கப் போகிறாய்!"
சீதாவின் உள்ளத்தில் முதலிலேயே சபலம் ஏற்பட்டிருந்தது. இப்போது அது கொழுந்துவிட்டு எரிந்தது. எதற்காக நம்மை மதிக்காத அன்பில்லாத புருஷனிடம் போய்க் கஷ்டப்பட வேண்டும்? வாழ்க்கையை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும்? இப்படி நம்மிடம் தேவதா விசுவாசம் வைத்திருப்பவனுடைய முயற்சியில் ஏன் சேர்ந்து உதவி செய்யக் கூடாது? இப்படி எண்ணமிட்ட போது பட்டாபிராமனுடைய வீட்டுச் சுவரில் கண்ட காந்தி மகாத்மாவின் முகம் சீதாவின் மனதின் முன்னிலையில் வந்தது. காந்திஜியின் கருணை ததும்பும் கண்கள் அவளை உற்று நோக்கின. "பேதைப் பெண்ணே! பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அரைமணி நேரங்கூட ஆகவில்லையே? அதற்குள் இந்தச் சஞ்சலமா? என் முன்னிலையில் கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையைக் காற்றில் விடப் போகிறாயா?" என்று கேட்பதுபோல இருந்தது. சீதா ஆகாசத்தை நோக்கினாள்; வானமெங்கும் ஒரு அங்குல இடம் காலியின்றிச் சிதறிக்கிடந்த நட்சத்திரச் சுடர் மணிகள் அவ்வளவும் கண்ணைச் சிமிட்டிச் சீதாவை எச்சரித்தன. அடுத்த ஸ்டேஷனில் ரயில் வண்டி கிளம்பி விட்டது என்பதற்கு, அறிகுறியாக டிங் டிங் என்று ஸ்டேஷன் மணி அடித்தது. சீதா கூறினாள்: "சியாம சுந்தர், உன்னுடைய அபிமானத்தையும் நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நான் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். என்னுடைய கணவருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையென்றும், அதனாலேதான் எனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வந்தன என்றும் உனக்குத் தெரியுமல்லவா? இன்னும் ஒரு தடவை அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்திப் பார்ப்பது என்றும், கூடிய வரையில் ஒத்துப்போகப் பார்ப்பது என்றும், பிரதிக்ஞை செய்தேன். மகாத்மா காந்தியின் உருவப் படத்தில் முன்னால் அவ்வாறு சபதம் செய்தேன். அதை இவ்வளவு சீக்கிரத்தில் கைவிட மனம் வரவில்லை. கல்கத்தாவுக்குப் போய் அவரைப் பார்த்து இன்னொரு தடவை அவருடன் வாழ்க்கை நடத்த முயற்சிப்பேன். ஆனால் இதுதான் கடைசித் தடவை. இதிலும் ஒன்றும் சரிக்கட்டி வராவிட்டால் உன்னிடம் வந்து சேருகிறேன்" என்றாள் சீதா.
"அத்தங்கா! நான் சொல்கிறேன், கேள்! உன் கணவன் சௌந்தரராகவன் மட்டும் அறிவுடையவனாயிருந்தால் உன்னைக் குடும்ப வேலை செய்வதற்கு வைத்துக்கொள்ளமாட்டான். சினிமாக் கலைக்கு உன்னை அர்ப்பணம் செய்வான். குடும்ப வேலை பார்க்க லட்சம் கோடி ஸ்திரீகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளித் திரையில் நடித்துப் பெயர் வாங்கக் கோடியில் ஒருவராலேதான் முடியும். அது போனால் போகட்டும்; உன் தலைவிதியின்படி நடக்கிறது. இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன்னோடு கல்கத்தாவுக்கு வரட்டுமா? மதராஸ் வரையிலாவது வரட்டுமா?" "வேண்டாம் சியாம சுந்தர்! உன்னோடு பேசிக்கொண்டே போனால் என்னுடைய சஞ்சல மனது மாறிப் போய்விடும். இங்கேயே டிக்கட் வாங்கிக் கொடுத்துப் பெண் பிள்ளைகள் வண்டியில் என்னை ஏற்றி விட்டுவிடு; அதுவே போதும்!" என்றாள் சீதா. "சூரியா என் பேரில் நிச்சயம் கோபித்துக் கொள்ளப் போகிறான்" என்றான் சுண்டு. "எதற்காகக் கோபித்துக்கொள்ள வேண்டும்? சூரியா ராஜம்பேட்டைக்குத் திரும்பி வந்ததும் அவன் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காக என்னுடைய வந்தனத்தை அவனுக்குத் தெரியப்படுத்து." "ராஜம்பேட்டைக்கு அவன் திரும்பி வருவானா என்பதே சந்தேகமாயிருக்கிறது."
"ஏன் அப்படிச் சொல்கிறாய்? ராஜம்பேட்டைக் கிராமத்தைச் சொர்க்கமாக்கிவிடப் போகிறேன் என்று சூரியா சொன்னானே?" "அந்த முயற்சியில் சூரியாவுக்குத் தோல்விதான் உனக்குத் தெரியுமா அத்தங்கா! தபால்கார பாலகிருஷ்ணன் வேலையை விட்டுவிட்டு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டான். நம்ம பக்கத்தில் வேலை செய்து வருகிறான். சூரியாவின் முயற்சியை உருப்படாமல் அடிப்பதே அவனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. சூரியா எங்கள் ஆட்களுக்கெல்லாம் முன்னைப்போல் ஒட்டிக்கு இரட்டி கொடுத்தும் பயனில்லை; அவர்களுக்குத் திருப்தி இல்லை. 'நிலம் உழுகிறவனுக்குச் சொந்தம்' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஊரில் எல்லோருடைய நிலமும் சாகுபடியாகி விட்டது. நம்முடைய நிலம் மட்டும் பாதிக்குமேல் தரிசாகக் கிடக்கிறது. சூரியாவின் மனது ரொம்பவும் ஓடிந்து போய் விட்டது." "அந்தப் பாலகிருஷ்ணன் பேரில் எனக்கு எப்போதும் சந்தேகந்தான். அவன் ரொம்பப் பொல்லாதவன் எங்களைப் பற்றி ஒரு குப்பைப் பத்திரிகையில் கன்னா பின்னாவென்று எழுதியிருந்ததல்லவா? அதெல்லாம்கூடப் பாலகிருஷ்ணனுடைய வேலையோ என்னமோ?" "இல்லவே இல்லை, அத்தங்கா! வீண் பழி சுமத்தாதே! பாலகிருஷ்ணனிடம் வேறு என்ன குற்றம் இருந்தாலும் உன்னைப் பற்றிய அவதூறு அவன் எழுதவில்லை. உன்னிடம் அவனுக்குள்ள மதிப்பையும் அபிமானத்தையும் பலமுறை என்னிடம் தெரிவித்திருக்கிறான். உன்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசை." "அந்த மட்டில் சந்தோஷந்தான்."
"உன்னைப்பற்றித் துண்டு பிரசுரம் போட்டதும் மஞ்சள் பத்திரிகையில் எழுதியதும் யார் என்று எனக்குத் தெரியும். எல்லாம் நம்ம ஊர் சீமாச்சுவய்யர் செய்யும் வேலை!" "ஐயையோ! நம்ம சீமா மாமாவா அப்படியெல்லாம் எழுதுகிறார்? நம்ப முடியவில்லையே." "நம்பத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது? எனக்கு நிச்சயம் தெரியும். பிளாக்மார்க்கெட்டில் இவ்வளவு நாள் சம்பாதித்தது சீமா மாமாவுக்குப் போதவில்லை. அவருக்கு வேண்டிய ஆசாமி சேர்மனாக வர வேண்டும் என்று ரொம்பவும் பாடுபட்டார். அப்படி வருவதற்கு நீ தடையாயிருந்தாய். அதனாலேதான் அவ்விதமெல்லாம் எழுதப் பண்ணினார். ஒரு நாளைக்கு என்னிடம் சீமா மாமா சிக்கிக்கொள்ளப் போகிறார். அப்போது செம்மையாக அவருக்குப் புத்தி கற்பிக்கப் போகிறேன்!" "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், சுண்டு! ஏதாவது எழுதி விட்டுப் போகட்டும்! அவர் மேல் எனக்கு இல்லாத கோபம் உனக்கு என்னத்திற்கு?" "உனக்குக் கோபம் இல்லையென்றால் நான் விட்டு விடுவேனா? ஒரு கை பார்க்கத்தான் போகிறேன். அத்தங்கா! நீ மட்டும் இங்கு இருந்திராவிட்டால் அத்திம்பேருக்கு ஒரு நாளும் சேர்மன் வேலை ஆகியிராது. அதை என் அம்மாவும் அக்காவும் எண்ணிப் பாராததை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அம்மா எப்போதும் ஒரு மாதிரி என்பது தெரிந்த விஷயம். லலிதா எதனால் இவ்வளவு கொடுமையுள்ளவளாகி விட்டாள் என்பதுதான் தெரியவில்லை. உன்னை அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்பும்படி செய்து விட்டாளே!" "லலிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, சுண்டு! அவளைப் போல் உத்தமி உலகத்திலேயே கிடைக்கமாட்டாள். என்னுடைய காலத்தின் கோளாறு, நான் இப்படிக் கிளம்ப வேண்டி ஏற்பட்டது." தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் 'புஃப் புஃப்' என்று புகை விட்டுக் கொண்டும், 'கிறீச்' என்று கத்திக் கொண்டும் ரயில் வந்தது. பெண்பிள்ளை வண்டியில் சீதா ஏறி உட்கார்ந்து சுண்டுவிடம் விடை பெற்றுக் கொண்டாள்.