அலை ஓசை/பிரளயம்/பட்டாபியின் புனர்ஜென்மம்

விக்கிமூலம் இலிருந்து


ஒன்பதாம் அத்தியாயம் பட்டாபியின் புனர்ஜென்மம்

ரயில் தேவபட்டணம் ஸ்டேஷனை நெருங்கியபோது இரவு எட்டு மணி இருக்கும். ரயில் பாதையின் இரு பக்கமும் தேங்கியிருந்த மழைத் தண்ணீரில் ரயில் வண்டியின் விளக்குகள் வரிசையாகப் பிரதிபலித்தன. அவ்வாறே தேவபட்டணத்தை அடுத்துள்ள சாலைகளில் போட்டிருந்த விளக்குகளும் பக்கத்தில் கடல் போலத் தேங்கியிருந்த தண்ணீரில் வரிசையாகப் பிரதிபலித்து மினுமினுத்தன. வானை மூடியிருந்த மேகங்களினாலும் பூமியில் சூழ்ந்திருந்த அந்தகாரத்தினாலும் கருமை உருக்கொண்டிருந்த அந்த இரவு நேரத்தில் வரிசை வரிசையான மின்சார தீபங்களும் தண்ணீரில் அவற்றின் பிரதிபிம்பங்களும் சேர்ந்து ஏதோ ஒரு மாயாபுரி வானத்திலிருந்து பூமியில் இறங்கியிருக்கிறது போன்ற பிரமையை உண்டாக்கின. ரயில் ஸ்டேஷனுக்குள் சென்று நின்றதும் பட்டாபிராமன் முதலியவர்கள் ரயில் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினார்கள். கதவைத் திறந்தவுடனேயே ஊதல் காற்று சுளீர் என்று அடித்தது. கீழே அவர்கள் இறங்கி நின்ற இடத்தில் பிளாட்பாரத்தின் மேற்கூரை இருந்தபோதிலும் திறந்திருந்த இரு பக்கங்களிருந்தும் மழைச்சாரல் வந்து தாக்கியது. போர்ட்டர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டே வந்து சாமான்களைத் தூக்கிக் கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஸ்டேஷனுக்கு ஒரு பக்கத்திலிருந்து ஏராளமான ஜனங்கள் சொட்டச் சொட்ட நனைந்த துணிகளுடன் கூச்சலிட்டுக் கொண்டு ஓடி வந்தார்கள். சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான ஸ்திரீகளும் புருஷர்களும் குழந்தைகளும் ரயில் பிளாட்பாரத்திலும் பிளாட்பாரத்துக்கு வெளியிலும் வந்து நிறைந்து விட்டார்கள். அவர்களுடைய துணியிலிருந்தும் உடம்பிலிருந்தும் சொட்டிய ஜலம் ரயில்வே ஸ்டேஷனை வெள்ளக்காடு ஆக்கியது. முதலில் இவ்வளவு பேரும் ரயில் ஏற வருகிறார்களா என்ன என்று எண்ணிப் பட்டாபிராமன் ஆச்சரியப்பட்டான். ஆனால் ஈரத்துணிகளுடன் வந்தவர்கள் யாரும் அந்த ரயிலுக்குள் ஏறவில்லை, ரயிலும் போய்விட்டது.

அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து இடிபட்டுக் கொண்டு பட்டாபிராமனும் அவனுடைய குடும்பத்தாரும் வெளியேற வேண்டி நேர்ந்தது. "இது என்ன கூட்டம்? இவ்வளவு பேரும் எந்த ரயிலில் ஏறுவதற்காக வந்திருக்கிறார்கள்?" என்று பட்டாபிராமன் போர்ட்டரைக் கேட்டான். "இவர்கள் ரயில் ஏற வரவில்லை, ஸார்! இன்று சாயங்காலம் அடித்த புயலிலும் மழையிலும் இவர்களுடைய கூரைக் குச்சுகள் பிய்த்துக் கொண்டு போய்விட்டன. மழைக்குத் தங்க இடமில்லாமல் இங்கே வந்து குவிந்திருக்கிறார்கள். சனியன் பிடித்தவர்கள்!" என்றான் போர்ட்டர். "ஏன் அப்பா வீணாகத் திட்டுகிறாய்? ஏழை ஜனங்கள் வேறு எங்கே போவார்கள்?" என்றாள் சீதா. "எங்கேயாவது சத்திரம் சாவடி பார்த்துப் போய்த் தொலைகிறது தானே? தங்க இடமில்லாவிட்டால் ரயில்வே ஸ்டேஷன்தானா அகப்பட்டது? இன்றைக்குச் சாயங்காலத்திலிருந்து இவர்களைத் துரத்தித் துரத்தி எனக்குக் கையும் அலுத்துவிட்டது சத்தம் போட்டுப் போட்டு வாயும் வலிக்கிறது!" என்றான் போர்ட்டர். கஷ்டப்பட்டு வாடகை வண்டிகள் பிடித்து ஏறிக்கொண்டு பட்டாபிராமன் முதலியவர்கள் வீடு போய்ச் சேர்ந்தார்கள். வீடு சேர்ந்ததும் லலிதா சரசரவென்று வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். பட்டாபிராமன் ஆபீஸ் அறைக்குள் சென்று வந்திருந்த கடிதங்களைப் பார்த்துவிட்டுப் பத்திரிகை படிக்கத் தொடங்கினான். குழந்தைகள் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்குச் சென்றார்கள்.

சீதா மட்டும் சோகமே உருக் கொண்டவளாக ஈரமான துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். இலை போட்டானதும் லலிதா சாப்பிடக் கூப்பிடுவதற்காகக் கூடத்தில் வந்து பார்த்தாள். "இது என்ன, சீதா! ஈரத் துணியைக் கூட மாற்றிக் கொள்ளாமல் உட்கார்ந்திருக்கிறாயே?" என்று கேட்டாள். அதே சமயத்தில் பட்டாபிராமன் தன்னுடைய ஆபீஸ் அறைக்குள்ளேயிருந்து வெளியே வந்தான். "எனக்கென்னமோ அந்த ஏழை ஜனங்களின் நினைவாகவே இருக்கிறது, அவர்கள் எல்லாரும் - சின்னக் குழந்தைகள் உள்பட - ராத்திரியெல்லாம் ஈரத் துணியோடுதானே கழிக்கப் போகிறார்கள்? அவர்களை நினைத்தால் வேறு உலர்ந்த துணி உடுத்திக் கொள்ளவே மனம் வரவில்லை! இந்த மச்சு வீட்டில் கொஞ்சம்கூட நனையாமல் சௌகரியமாக உட்கார்ந்திருப்பதே வேதனையாயிருக்கிறது!" என்றாள் சீதா. "அது பரிதாபமான விஷயந்தான்; அதற்காக நாம் என்ன செய்வது? பத்துப் பேரா, இருபது பேரா? ஆயிரம் பேருக்கு மேலே இருக்கும்பொழுது விடிந்த பிறகு அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்!" என்றான் பட்டாபிராமன். "சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்; வாருங்கள்!" என்றாள் லலிதா. "இன்று இராத்திரி அத்தனை ஜனங்களும் பட்டினி கிடக்கப் போகிறார்கள். பச்சைக் குழந்தைகள் பசி தாங்காமல் அழுவார்கள். அதை நினைத்துக் கொண்டால் நமக்கு எப்படிச் சாப்பிடுவதற்கு மனம் வரும்?" என்றாள் சீதா.

"ஆகையால் அதை நினைத்துப் பார்க்கவே கூடாது. உலகத்திலுள்ள கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மன நிம்மதி இராதுதான்!" என்றான் பட்டாபிராமன். "நம்முடைய கவலையை நாம் பட்டால் போதாதா? ஊர்க் கவலையையெல்லாம் எதற்காக விலைக்கு வாங்க வேண்டும்?" என்றாள் லலிதா. "சில பேரால் அப்படிச் சொந்தக் காரியத்தை கவனிப்பதோடு இருக்க முடிகிறது. என்னால் அப்படி இருக்க முடியவில்லையே" என்றாள் சீதா. "எனக்குப் பட்டும், பாலுவும் சாரலில் நனைந்ததைப் பற்றியே நினைவாயிருக்கிறது. ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்று கவலையாயிருக்கிறது!" என்று லலிதா சொன்னாள். "ரயில்வே ஸ்டேஷனில் இந்தக் குழந்தைகள் மாதிரி எத்தனை குழந்தைகளைப் பார்த்தோம்! அவ்வளவு பேரும் இன்று ராத்திரியெல்லாம் மழையிலும் சாரலிலும் கிடக்கப் போகிறார்கள். அவர்களுக்கெல்லாம் உடம்புக்கு வந்தால் யார் கவனிப்பார்கள்?" என்றாள் சீதா. "நானும் அதைப்பற்றி யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பொழுது விடியட்டும்; என்னுடைய சிநேகிதர்களுடன் கலந்து யோசித்து ஏதாவது ஏற்பாடு செய்யலாம். இப்போது உலர்ந்த துணி உடுத்திக்கொண்டு சாப்பிடலாம் வாருங்கள்! நம்முடைய உடம்பைப் பாதுகாத்துக் கொண்டால்தானே மற்றவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியும்?" என்றான் பட்டாபிராமன். இதைக் கேட்ட சீதா எழுந்து சாப்பிடச் சென்றாள். சாப்பிட்ட பிறகு மூன்று பேரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் படுக்கச் சென்றார்கள். லலிதா படுத்துக்கொண்ட உடனே கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினாள். சீதாவுக்கு ரயில்வே ஸ்டேஷனில் பார்த்த ஏழை ஜனங்களை நினைத்து நினைத்து இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. பட்டாபிராமனுக்கோ சீதாவின் தயாள குணத்தை எண்ணி எண்ணித் தூக்கம் வரவில்லை.

மறுநாள் பொழுது விடிந்ததும் பட்டாபிராமன் சீதாவிடம் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற எண்ணி வெளியே சென்றான். எத்தனை ஏழைக் குடும்பங்களின் குடிசைகள் விழுந்துவிட்டன. எத்தனை பேர் தங்க இடமின்றியும் உண்ண உணவின்றியும் தவிக்கிறார்கள் என்பதை யெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். சில சிநேகிதர்களோடு கலந்து பேசி வெள்ளக் கஷ்ட நிவாரண வேலை தொடங்குவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்தான். மத்தியானம் வீட்டுக்குத் திரும்பி வந்து சீதாவிடம் எல்லா விவரங்களையும் கூறினான். "கல்கத்தாவில் இந்த மாதிரி கஷ்ட நிவாரண வேலையில் எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. நானும் உங்களுடன் வந்து ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் என்னால் இயன்ற உதவி செய்கிறேனே! வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்கப் பிடிக்கவே இல்லை!" என்றாள் சீதா. பட்டாபிராமன் மிக்க சந்தோஷத்துடன் அதை ஒப்புக் கொண்டான். "இந்த ஊரில் அம்மாதிரி சேவை செய்யக்கூடிய இன்னும் சில சகோதரிகளும் இருக்கிறார்கள்! அவர்களுடன் உன்னைச் சேர்த்து விடுகிறேன்" என்று சொன்னான். அன்று மத்தியானமே பட்டாபிராமன் ஒரு பக்கத்திலும் சீதா இன்னொரு பக்கத்திலும் வெள்ளக் கஷ்ட நிவாரண வேலையில் ஈடுபட்டார்கள். முதலில் சிலநாள் வரையில் குடிசைகளை இழந்த ஏழை ஜனங்களுக்குப் பள்ளிக்கூடங்களில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அவ்வளவு பேருக்கும் சமையல் செய்து சாப்பாடு போடவேண்டியிருந்தது. நோய்ப் பட்டவர்களுக்கு மருந்து கொடுக்க சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. குழந்தைகளுக்கு நோய் நொடி வராமல் சர்வ ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தன.

மழை நின்று தரை காய்ந்த பிறகு அவர்களுக்கெல்லாம் புதிதாகக் குடிசைகள் கட்டிக்கொள்ள வசதி செய்து கொடுக்க வேண்டி வந்தது.நிவாரண வேலை முடிவடைவதற்கு மூன்று மாதம் பிடித்தது. இந்த மூன்று மாத காலமும் பட்டாபிராமனுக்கும் சீதாவுக்கும் ஓயாத ஒழியாத வேலை இருந்தது. அவர்களுடன் அந்த ஊர்க்காரர்கள் இன்னும் பலர் ஒத்துழைத்தார்கள். சீதாவின் ஊக்கமும் உழைப்பும் இனிய சுபாவமும் மதுரமான மொழிகளும் அனைவருக்கும் உற்சாகத்தை ஊட்டி வந்தன. தேவபட்டணமெங்கும் சீதாவின் புகழ் பரவி வந்தது. பட்டாபிராமன் சிறையிலிருந்து வந்தது முதல் உற்சாகம் குன்றியிருந்தான். தேசத்திற்குச் சுதந்திரமோ வந்தபாடில்லை. நாட்டில் தேசீய ஊக்கம் என்பதே கிடையாது. பழையபடி கோர்ட்டுக்குப் போய் வக்கீல் தொழில் செய்யப் பிடிக்கவில்லை. மேலும், கட்சிகாரர்களுக்கு எங்கே போவது? செய்வதற்கு வேறு வேலையும் இல்லை. இதனாலெல்லாம் மனச்சோர்வு அடைந்திருந்தவன் இப்போது புனர்ஜென்மம் எடுத்தவன் போல் ஆனான். வெள்ளக் கஷ்ட நிவாரணத்தில் அவனுக்கு வேலை நிறைய இருந்தது. அந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்தமாகவும் இருந்தது. மாலையில் வீடு திரும்பியதும் அன்றன்று நடந்த வேலைகளைப்பற்றிப் பட்டாபியும் சீதாவும் உற்சாகமாகப் பேசிக் கொள்வார்கள். வீட்டில் பொதுவாகக் கலகலப்பு அதிகமாயிற்று. இது லலிதாவுக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

"இந்த வீடு இம்மாதிரி முன்னெப்போதும் கலகலப்பாயிருந்ததில்லை, சீதா! இவரும் இவ்வளவு குதூகலமா யிருந்ததில்லை. உன்னை இவருக்கு ரொம்பவும் பிடித்துப்போயிருக்கிறது. யாருக்குத்தான் உன்னைப் பிடிக்காமலிருக்கும்; நீ இங்கேயே எப்போதும் இருந்து விடு, சீதா!" என்று லலிதா அடிக்கடி சொல்லுவாள். "கடவுளுடைய சித்தமும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. எனக்குப் போக்கிடம் எங்கே?" என்று சொல்வாள் சீதா. "உன் குழந்தை வஸந்தியை நீ மதராஸில் விட்டு வைத்திருப்பது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. நாலு பேர் நாலு சொல்வதற்கு ஏன் இடம் வைத்துக் கொள்ள வேண்டும்? குழந்தையையும் இவ்விடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து விடு! இரண்டு குழந்தையோடு மூன்றாவது குழந்தையாக இருந்துவிட்டுப் போகிறாள்!" என்று லலிதா கூறுவாள். "இந்தக் கோடைக்குப் பள்ளிக்கூடம் சாத்தியதும் வஸந்தியை அழைத்து வந்துவிடலாம் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்று சீதா பதில் கூறுவாள். நாள் செல்லச் செல்ல, அந்த வீட்டில் லலிதாவின் செல்வாக்கு குன்றி சீதாவின் செல்வாக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. பட்டுவும் பாலுவும் அம்மாவின் வார்த்தையைக் காட்டிலும் அத்தையின் வார்த்தைக்கு அதிக மதிப்புக் கொடுக்கத் தொடங்கினார்கள். அரை நாழிகை நேரம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாலும் அவர்கள் வரமாட்டார்கள்; ஆனால் அத்தை ஒரு தடவை கூப்பிட்டால் ஓடி வந்து விடுவார்கள்.

வேலைக்காரர்கள் வீட்டு அம்மாளைக் காட்டிலும் டில்லி அம்மாளுக்கு அதிக மரியாதை காட்டத் தொடங்கினார்கள். லலிதா ஏதாவது ஒரு காரியத்தை இந்த மாதிரி செய்ய வேண்டும் என்று சொன்னால், "டில்லி அம்மா அப்படிச் செய்யச் சொல்லியிருக்கிறார்களே!" என்று வேலைக்காரர்கள் கூசாமல் பதில் சொல்லுவார்கள். சுண்டு, லலிதா சொல்லுகிற காரியத்தை எந்த நாளும் செய்ததில்லை; இப்போதும் அவள் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டான். ஆனால் சீதா அவனிடம் ஏதாவது செய்யும்படி சொல்லிவிட வேண்டியதுதான்! அடுத்த நிமிஷமே விழுந்தடித்து ஓடிச் சென்று அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு வருவான். 'எள்ளு' என்று சொன்னால், 'எண்ணெய்' கொண்டு வந்து விடுவான். இதெல்லாம் லலிதாவுக்குத் திருப்தியாகவே இருந்து வந்தது. தன்னுடைய அத்தியந்த அன்புக்குரிய தோழிக்கு இப்படி எல்லாரும் மரியாதை செய்வது அவளுக்கு மகிழ்ச்சி தந்தது. "அத்தங்கா! உன்னிடம் என்னதான் சொக்குப் பொடி இருக்கிறதோ? இப்படி எல்லாரும் மயங்கிப் போய்விடுகிறார்களே?" என்று லலிதா சீதாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாள்.