அலை ஓசை/பிரளயம்/பட்டாபியின் வெற்றி
பதினெட்டாம் அத்தியாயம் பட்டாபியின் வெற்றி
தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. "பட்டாபிராமன் வாழ்க! கறுப்பு மார்க்கெட் வீழ்க!" என்ற கோஷம் மூலை முடுக்குகளிலெல்லாம் எழுந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் தலை நரைத்த வயோதிகர்கள் வரையில் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். கறுப்பு மார்க்கெட் வியாபாரத்தில் கொள்ளைப்பணம் சம்பாதித்த பழைய சேர்மன் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் முப்பதினாயிரம் ரூபாய் வாரி இறைத்திருந்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருந்தது. வோட்டு ஒன்று நூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பழைய சேர்மன் பிரம்ம பிரயத்தனம் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனாலும் அவருக்கு எதிராக நின்ற பட்டாபிராமன் பெரும்பான்மை வோட்டுக்கள் பெற்று வெற்றி அடைந்தான் பொது ஜன அபேட்சகராகிய பட்டாபிராமன் வெற்றியடைந்தது பற்றித் தேவபட்டணத்துப் பொது மக்கள் எல்லோரும் அளவிலாத ஆனந்தமடைந்தார்கள். பலவிதங்களிலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பட்டாபிராமன் வெற்றி பெற்றதாக வோட்டு முடிவு வெளியானவுடனே ஜயகோஷங்கள் வானளாவ எழுந்தன. "பட்டாபிராமன் எங்கே?" என்று கேட்கும்படியாகப் பூமாலைகள் அவனுடைய தலைக்குமேலே எழுந்து அவன் முகத்தையே மறைத்து விட்டன. முன் ஏற்பாடு எதுவும் இல்லாமலே ஊர்வலம் ஒன்று ஆரம்பமாயிற்று. திறந்த மோட்டார் வண்டி ஒன்றில் பட்டாபிராமனைப் பலவந்தமாகப் பொதுஜனங்கள் ஏற்றி வைத்தார்கள். எங்கிருந்தோ நாதஸ்வர வாத்தியமும் பாண்டு கோஷ்டியும் வந்து சேர்ந்தன. ஊர்வலமும் தேவபட்டணத்து வீதிகளில் எல்லாம் சாவகாசமாகச் சுற்றி வந்து கடைசியில் பட்டாபிராமனுடைய வீட்டில் அவனைக் கொண்டு வந்துவிட்ட பிற்பாடு கலைந்தது.
பொது ஜனங்கள் எல்லாரும் போன பிற்பாடு சில ஆப்த நண்பர்களும் பிரமுகர்களும் பட்டாபிராமனைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள்ளே வந்தார்கள். பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்த நாற்காலிகளில் எல்லாம் அவர்கள் உட்கார்ந்தும் இடம் போதாமல் பலர் ஜன்னல் விளிம்புகளிலும் உட்கார வேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே பட்டாபிராமனைப் பாராட்டினார்கள். "பட்டாபிராமன் சேர்மன் ஆவது நிச்சயம்" என்று சபதம் கூறினார்கள். சில பெரியவர்கள் வயதின் உரிமை எடுத்துக் கொண்டு, "மிஸ்ஸஸ் பட்டாபிராமன் எங்கே?" என்று கேட்டார்கள். சந்தோஷம் ஒரு பக்கமும் சங்கோசம் ஒரு பக்கமும் பிடுங்கித்தின்ன, ஸ்ரீ மதி லலிதா அங்கே வந்து சேர்ந்தாள். "இந்த வெற்றியெல்லாம் உங்களுடைய அதிர்ஷ்டபலத் திலேதான்!" என்று லலிதாவைப் பார்த்துத் தனித்தனியாகப் பலர் உபசாரம் சொன்னார்கள்.லலிதா அங்கிருந்துபோன பிறகு ஒருவர், "அந்த அம்மாளுக்கு உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். பட்டாபிராமனுடைய முகம் சுருங்கிற்று. "பரவாயில்லை!" என்று சொன்னான். "சீதா அம்மாளைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அவருடைய உடம்புக்கு என்ன வந்தது? மனதுதான் ரொம்பவும் நொந்து போயிருக்கும்!" என்றார் இன்னொரு நண்பர். "பொது வாழ்க்கை என்றால் இந்த மாதிரி எத்தனையோ தான் இருக்கும். வம்புக்காரர்களுடைய பொய்களுக்கெல்லாம் பயந்து விடவும் கூடாது; மனதைச் சோர்வடைய விட்டு விடவும் கூடாது!" என்றார் எதிர் வீட்டுத் தாமோதர முதலியார். "மிஸ்டர் பட்டாபிராமன்! நீங்கள்தான் சீதா அம்மாளுக்கு தைரியம் சொல்லித் தேற்ற வேண்டும்" என்றார் அட்வகேட் அப்பாராவ்.
"என்ன இருந்தாலும் இந்த மாதிரி அயோக்கியத்தனமாகவா அவதூறு சொல்கிறது? எனக்கு என்னமோ நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது!" என்றான் பட்டாபிராமன். "அப்பா, பட்டாபி! அப்படியெல்லாம் இரத்தத்தைக் கொதிக்கும்படி விட்டு விடாதே! நீ எலெக்ஷனுக்கு நிற்க உத்தேசித்தபோது நான் உனக்கு எச்சரிக்கை செய்யவில்லையா? எலெக்ஷன் என்றால் இப்படித்தான் குப்பை கூளம் எல்லாம் வெளியில் வரும். அதற்காக, 'ஆஹா ஊஹூ' என்று அலறுவதில் பிரயோசனமில்லை!" என்று சொன்னார் தாமோதர முதலியார். "அதெல்லாம் இல்லை, ஸார் இந்த மாதிரி காலிப்பயல்களைச் சும்மா விட்டுவிடக் கூடாது. துண்டுப் பிரசுரம் போட்டவனைக் கோர்ட்டுக்கு இழுத்துச் சந்தி சிரிக்க அடிக்க வேண்டும்!" என்றார் ஒரு ஆக்ரோஷக்காரர். "கோர்ட்டுக்குப் போவது பிசகு, அவதூறு கேஸுகளில் புரூப் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியாதா என்ன? பேசாமல் 'பினீத் கண்டெம்ட்' என்று விட்டுவிடுவது தான் சரி!" என்றார் அட்வகேட் அப்பாராவ். "அதுதான் ஸார், சரி! சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் சந்திரனுக்கு என்ன குறைவு வந்துவிடும்?" என்றார் ஒரு சாந்தமூர்த்தி. "நமக்கு அப்படித் தோன்றுகிறது ஆனால் சந்திரனுக்கு என்ன தோன்றுகிறதோ, என்னமோ!" என்றார் ஒரு ஹாஸ்யப் பிரியர். கடைசியாக, பட்டாபிராமன் அவனுடைய மகத்தான வெற்றியைக் குடும்பத்தோடு சேர்ந்து அனுபவிக்கட்டும் என்று விட்டு விட்டு எல்லாரும் போய்ச் சேர்ந்தார்கள்.
மேற்கூறிய சம்பாஷணையில் சீதாவைப்பற்றிக் கூறப்பட்ட அனுதாப வார்த்தைகள் வாசகர்களுக்கு அவ்வளவாக விளங்காமலிருக்கலாம். விஷயம் என்னவென்று கேட்டால்:- வோட்டுப் போடும் தினத்துக்கு முதல் நாளைக்கு முன்னாள் பட்டாபிராமனை ஆதரித்துக் கடைசிப் பெரும் பொதுக் கூட்டம் நடந்தது. கேவலம் முனிஸிபல் தேர்தல் கூட்டங்களில் சாதாரணமாகக் கண்டிராத பெரும் கூட்டம் கூடியிருந்தது, சுமார் ஐயாயிரம்பேர் இருக்கும். மேடையில் அபேட்சகர் பட்டாபிராமனோடு இன்னும் பல பிரமுகர்களும் பெண்மணிகளும் அமர்ந்திருந்தார்கள். பெண்மணிகளிலே சீதாவும் இருந்தாள். சென்ற ஒன்றரை மாதமாகத் தேர்தல் வேலை செய்ததில் சீதா பிரமாதமான பிரசங்கி ஆகிவிட்டாள். அவளுடைய பேச்சிலே தேசபக்தி ததும்பிற்று; ஆவேசம் பொங்கிற்று; வீரசுதந்திரம் தாண்டவ நர்த்தனம் செய்தது; கறுப்பு மார்க்கெட் சின்னாபின்னமடைந்தது; அக்கிரமமும் அநீதியும் அதோகதி அடைந்தன. பட்டாபிராமனை ஆதரித்த சீதாவின் வார்த்தைகள் அன்பும் ஆதரவும் உருக் கொண்டவையாக வெளிவந்தன. எதிரி அபேட்சகரைத் தாக்கி அவளுடைய சொற்களோ இராமபாணங்களைப்போல் விர்ரென்று பாய்ந்து சென்று அக்கிரமத்தின் உயிர் நிலையில் தைத்தன. ஆகையால் சபையோர் எல்லோரும் வீராங்கனையான ஸ்ரீ மதி சீதாதேவி எப்போது பேசப் போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டி ருப்பது வழக்கமாகி விட்டது. மற்றவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் ஏதோ சகித்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் கடைசியாக நடந்த பெரும் பொதுக் கூட்டத்தின் போது சபையோர் பெரும் ஏமாற்றம் அடையும்படி நேர்ந்தது. ஏனெனில் ஸ்ரீ மதி சீதாவின் பேச்சு அன்று நடைபெறவில்லை. வழக்கம்போல் சீதா எழுந்தது என்னமோ உண்மைதான். ஆனால் மூன்று நாலு வாக்கியங்களுக்குமேல் பேசவில்லை; பேச முடியவில்லை. அந்த மூன்று நாலு வாக்கியங்களையும் சீதா விம்மலுடன் பேசினாள் பிறகு குபீரென்று பெரிய அழுகையாக வந்துவிட்டது. எனவே பேச்சை நிறுத்திக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். நல்ல வேளையாகக் கூட்டத்தில் குழப்பம் எதுவும் ஏற்படாமல் மேடையில் இருந்த பிரமுகர்களும் ஸ்திரீகளும் அங்கிருந்து கலைந்து போக முடிந்ததைப் பற்றியே அனைவரும் சந்தோஷப்பட வேண்டியதாயிற்று. சீதாவின் விபரீத நடவடிக்கைக்குக் காரணமாயிருந்தது இதுதான்:- அன்று பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஜனக் கூட்டத்தின் ஓரப் பக்கங்களில் யாரோ ஒருவன் ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தான். அதைக் கையில் வாங்கிப் படித்தவர்கள் எல்லாரும் மேடைமீதிருந்த சீதாவை உற்றுப் பார்க்கலானார்கள். மேற்படி துண்டுப் பிரசுரங்கள் கைமாறி மாறிக் கூட்டத்தில் பரவிக் கொண்டேயிருந்தன. அநேகருடைய கவனம் மேடையில் நின்று பேசுகிறவர்கள் மீதோ அவர்களுடைய பேச்சிலோ செல்லவேயில்லை. திரும்பத் திரும்ப சீதாவையே அவர்கள் நோக்கிக் கொண்டிருந்தார்கள். சிலருடைய நோக்கில் பரிதாபம் இருந்தது; சிலருடைய பார்வையில் ஆத்திரம் அதிகம் இருந்தது; வேறு சிலருடைய பார்வையில் ஏளனமும் கலந்திருந்தது.
இப்படிக் கூட்டத்தில் பலர் ஏதோ ஒரு பிரசுரத்தைப் பார்ப்பதும் பிறகு தன்னைப் பார்ப்பதுமாயிருந்ததைச் சீதாவும் சிறிது நேரத்தில் கவனிக்கும்படி நேர்ந்தது. இன்னது என்று விளக்கமில்லாத கவலையும் பீதியும் அவள் மனதில் உதித்தன. அந்தப் பிரசுரத்தை வாங்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் பிரசுரத்தை விநியோகித்தவன் பிரசங்க மேடைக்கு அருகில் வந்து அதை விநியோகிக்கத் தொடங்கினான். அப்படி விநியோகிக்கக் கூடாதென்று சிலர் ஆட்சேபித்தார்கள். அந்தப் பையன் நாலுத் துண்டுப் பிரசுரத்தை மேடையில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான். கை மாறி மாறி ஒரு பிரசுரம் சீதாவுக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தது. சீதா அதை கைநீட்டி வாங்கிக் கொண்டாள்; வாங்கிப் படிக்கவும் தொடங்கினாள். முதல் நாலைந்து வரிகளைப் படித்ததுமே அவளுடைய நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போலிருந்தது. மேலே படித்ததும் இதயம் வெடித்துவிடும் போல் தோன்றியது. படித்து முடித்ததும் உடம்பெல்லாம் ஆயிரம் தேள்கள் கொட்டினாற் போன்ற துன்பம் உண்டாயிற்று. துன்பத்தோடு கலந்து சொல்ல முடியாத கோபமும் ஆத்திரமும் எழுந்தன. அந்தத் துண்டு பிரசுரத்தில் சீதாவைப் பற்றி அவ்வளவு நிந்தனையாக எழுதியிருந்தது. அவளுடைய ஒழுக்கத்தைக் குறை கூறியிருந்தது. அவள் தன் புருஷனை விட்டு விட்டு அம்மாஞ்சி சூரியாவோடு ஓடி வந்தவள் என்று எழுதியிருந்தது. அவள் தேசத் தொண்டில் சிறைபுகவில்லையென்றும் ரயிலில் திருடியதற்காகத் தண்டிக்கப்பட்டவள் என்றும் கண்டிருந்தது. அப்படிப்பட்ட ஜாலக்காரியின் மாயப் பேச்சில் மயங்கும் முட்டாள்களுக்கு நன்றாக டோ ஸ் கொடுத்து விட்டு அந்தத் துண்டுப் பிரசுரம் முடிவுற்றது.
ஒரு பெண்ணின் மனதைப் பாதித்து வேதனைக்குள்ளாக்குவதற்கு வேறு என்ன வேண்டும்? வேதனையிலிருந்து பொங்கி எழுந்த ஆத்திரம் காரணமாகச் சீதா பேச எழுந்தாள். அந்தத் துண்டு பிரசுரத்தைக் குறிப்பிட்டு அதைச் சின்னாபின்னமாக்கி அதை எழுதியவனுடைய மதியீனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தாள். அவளுடைய நோக்கம் நிறைவேறவில்லை. நாலைந்து வாக்கியங்கள் பேசுவதற்குள்ளேயே அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தபடியால் பேச்சை நிறுத்திவிட்டு உட்காரும்படி நேர்ந்தது. அடுத்த இரண்டு நாளும் சீதா வெளிக்கிளம்பவேயில்லை. கேட்டவர்களுக் கெல்லாம் பட்டாபிராமன் சீதாவுக்கு உடம்பு சரியில்லை என்று பதில் சொல்லிக்கொண்டு வந்தான். மேற்படி சம்பவத்தினால் பட்டாபிராமனுடைய மனமும் வேதனை அடைந்திருந்தது. கோபமோ சொல்ல முடியாமல் வந்தது. எனினும் எலெக்ஷன் முயற்சியில் அவன் சோர்ந்து விடவில்லை. மேற்படி சம்பவம் தேர்தலில் வெற்றி பெறுவதில் அவனுடைய ஆத்திரத்தை அதிகமாக்கி விட்டது. அம்மாதிரி பட்டாபிராமனுக்கு வேலை செய்தவர்களும் அதிக ஊக்கம் கொண்டார்கள். இந்தத் தேர்தலில் ஜெயிக்காவிட்டால் தங்கள் மானமே போய்விடும் என்றும் பிறகு தேவபட்டணத்துப் பொது வாழ்க்கையில், தாங்கள் தலைகாட்ட முடியாதென்றும் அவர்கள் எண்ணி முன்னைவிட ஆவேசமாக வேலை செய்தார்கள். பொது ஜனங்கள் - வோட்டர்கள் மனதில் மேற்படி துண்டுப் பிரசுரம் எந்தவித மாறுதலையும் உண்டாக்கவில்லை. பொது ஜனங்களை முட்டாள்கள் என்று சொல்லி யாராவது அவர்களுடைய ஆதரவைப் பெற முடியுமா? வேறு என்ன விதமாகத் தங்களைத் திட்டினாலும் பொது ஜனங்கள் பொறுத்துக் கொள்வார்கள். "நீங்கள் முட்டாள்கள்" என்று சொல்லி யாரும் அவர்களுடைய ஆதரவைப் பெறலாம் என்று எதிர்பார்க்க முடியாது! "நாங்களா முட்டாள்கள்? துண்டுப் பிரசுரம் எழுதிய நீதான் முட்டாள் என்பதை நிரூபித்து விடுகிறோம்!" என்று தேவபட்டணம் பொது ஜனங்கள் தீர்மானித்தார்கள்.
மேலும், கறுப்பு மார்க்கெட்டில் பணம் சேர்த்த பழைய பெருச்சாளி இப்படியெல்லாம் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறைக் கிளப்பிவிட்டுத் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான் என்ற அபிப்பிராயமும் பொது மக்களிடையே பரவியது. அந்தப் பொதுஜன அபிப்பிராயத்தையே வோட்டுகளும் பிரதிபலித்தன. முடிவில், பட்டாபிராமன் பெரும் வெற்றி அடைந்தான். அந்த மகத்தான வெற்றியானது பட்டாபிராமனுக்கு நியாயமாக அளித்திருக்கவேண்டிய ஆனந்தத்தை அளிக்கவில்லை. 'தெள்ளிய பாலில் சிறிது நஞ்சையும் சேர்த்துவிட்டது போல், அவனுடைய வெற்றி குதூகலத்தைச் சீதாவைப் பற்றிய அவதூறு பிரசாரம் பாதித்துவிட்டது! யாருடைய தூண்டுதல் அந்த எலெக்ஷனில் அவன் நிற்கும்படியான ஊக்கத்தை அளித்ததோ, யாருடைய மகத்தான முயற்சி அவனுடைய வெற்றிக்குக் காரணமாயிருந்ததோ, யார் அவனுக்குச் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் ஆறுதல்கூறி, உற்சாகமூட்டி வந்தாளோ, அத்தகைய சீதா வெற்றிக் கொண்டாட்டக் குதூகலத்தை அவனுடன் பகிர்ந்து அனுபவிக்க முடியவில்லை. இரண்டு நாளாக மச்சு மேலிருந்து கீழே இறங்காமலேயே இருந்து வருகிறாள். சீதாவும் சேர்ந்து கொண்டாட முடியாத இந்த வெற்றியினால் என்ன பிரயோஜனம்? இவ்விதம் பட்டாபிராமன் மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்த போது லலிதா தன்னுடைய தாயாருடன் பட்டாபிராமனின் ஆபீஸ் அறைக்கு வந்தாள். பட்டாபிராமன் வெற்றியடைந்ததில் அவனுடைய மாமியாரைப் போல் சந்தோஷமடைந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது! முதல் தடவையாக மாப்பிள்ளையிடம் சங்கோசத்தை விட்டுச் சரஸ்வதி அம்மாள் கலகலப்பாகப் பேசினாள்.
சந்தோஷத்தை பலவிதத்திலும் தெரிவித்த பிறகு, "இந்த வைபவத்தையெல்லாம் பார்க்க அவர் இல்லாமற் போய்விட்டாரே என்று நினைத்தால் மட்டும் மனது வேதனைப்படுகிறது!" என்று சொல்லிக் கொண்டு இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டாள். உடனே, இந்தச் சமாசாரத்தைப் பிரஸ்தாபித்து விட்டதற்காக வெட்கப்பட்டவளாய் விரைந்து சமையற்கட்டுக்குப் போய்விட்டாள். "நீங்கள் என்ன வேணுமோ சொல்லுங்கள். அம்மாவுக்கு உங்கள் பேரில் உள்ள பாசம் வேறு யாரிடமும் கிடையாது!" என்றாள் லலிதா. "யார் இல்லை என்றார்கள்? உன் அம்மாவுக்கு என்பேரில் ரொம்பப் பாசந்தான். ஆனால் அந்தப் பாசம் எனக்குப் பிராண சங்கடமாயிருக்கிறது!" என்றான் பட்டாபிராமன். "அது போனால் போகட்டும், சீதா இப்படி இரண்டு நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள், நீங்களும் எலெக்ஷன் மும்முரத்தில் இருந்து விட்டீர்கள். இப்போது மாடிக்குப் போய் அவளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வரலாம், வாருங்களேன்!" என்றாள் லலிதா. "என்ன சமாதானத்தைச் சொல்வது? வீண் பிடிவாதத்துக்கு நாம் என்ன செய்யமுடியும்? யாரோ வழியிலே போகிறவன் என்னமோ பிதற்றினான் என்பதற்காகப் குப்புறப்படுத்து ஓயாமல் அழுது கொண்டிருக்கிறதா? என்ன இருந்தாலும் பெண்பிள்ளை என்பது சரியாயிருக்கிறது. இப்படிப்பட்ட கோழை மனதுள்ளவர்கள் பொது வேலைக்கு வரவே கூடாது!" என்றான் பட்டாபிராமன். "சூரியாவும் அன்றைக்கு அப்படித்தான் சொன்னான். எலெக்ஷன் தொல்லைக்குப் பெண்பிள்ளைகள் போகக்கூடாது என்றான்...." "சூரியா என்ன உளறினால் இப்போது என்ன? அவன் என்னை எலெக்ஷனுக்கே நிற்கக்கூடாது என்று சொன்னான். நின்றதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? இன்றைக்கு ஊரெல்லாம் 'ஜே' கோஷம் செய்கிறதோ இல்லேயோ" என்று பட்டாபி கர்வம் ததும்பப் பேசினான்.
"அதற்கு என்ன ஆட்சேபணை? வெறுமனேயா ஜயகோஷம் செய்கிறார்கள்? 'பட்டாபிராமனுக்கு ஜே!' என்றுதான் கோஷிக்கிறார்கள்! நம்முடைய கலியாணத்தன்று எல்லாரும் என்னைப் பிடிவாதம் செய்ததின் பேரில் 'மாமவ பட்டாபிராமா' என்று நான் பாடினேன். அது இன்றைக்குத்தான் நிஜமாயிற்று. இன்று தானே உங்களுக்கு பட்டாபிஷேகம்!" என்று லலிதா அன்பு ததும்ப பதில் கூறினாள். "சரி சரி! நீ உன்னுடைய பழைய பெருமையைப் பீத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டாயாக்கும். இன்னும் எனக்குப் பட்டாபிஷேகம் ஆகவில்லை இன்றைக்குத் துவஜாரோகணந்தான் நடந்திருக்கிறது. சேர்மன் வேலையும் கிடைத்த பிறகுதான் பட்டாபிஷேகம் நடந்தது என்று சொல்லலாம்." "அதற்கு என்ன பிரமாதம்? இது ஆனதுபோல் அதுவும் ஆகிவிடுகிறது! என் வாக்குப் பொய்யாகாது; நீங்கள் வேணுமானால் பாருங்கள்!" "ரொம்ப லட்சணந்தான். உன்னுடைய திருவாக்கின் மகிமையினாலேதான் எனக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது என்று உன் எண்ணமாக்கும்! எலெக்ஷனுக்கே நான் நிற்கக் கூடாது என்று நீ முரண்டு பிடித்ததை மறந்து விட்டாயாக்கும்! அந்தச் சமயம் சீதா மட்டும் என்னுடைய கட்சியில் நின்று பேசியிராவிட்டால்....." "அதைப்பற்றி யார் என்ன சொன்னார்கள்? சீதா அத்தங்கா இந்தத் தேர்தலில் நமக்குச் செய்த ஒத்தாசையை மறக்க முடியுமா?" "அப்படியொன்றும் உன் அத்தங்கா பிரமாத ஒத்தாசை எனக்குச் செய்துவிடவில்லை. அவள் இல்லாவிட்டால் நான் ஜெயித்திருக்க மாட்டேன் என்கிறாயா?"
"அழகாய்த்தானிருக்கிறது! நான் அப்படி சொல்வேனா என்ன? உங்களுடைய தியாகத்தினாலும் செல்வாக்கினாலும் நீங்கள் ஜயித்தீர்கள்; அதைப் பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் சீதா அத்தங்காவும் எவ்வளவோ பாடுபட்டு ஒத்தாசை செய்திருந்தாள் அதை நாம் மறக்கக்கூடாது. கொஞ்சம் மேலேபோய் அத்தங்காவைப் பார்த்துவிட்டு வரலாம். வாருங்கள், நீங்கள் இரண்டு வார்த்தை 'உன்னால்தான் ஜெயித்தேன்' என்று சொல்வதினால் ஒன்றும் முழுகிப் போய்விடாது, அவளுக்குத் திருப்தியாயிருக்கும்." "அவளுடைய திருப்திக்காவா நான் ஜன்மம் எடுத்திருக்கிறேன்? அதெல்லாம் முடியாத காரியம். ஊரெல்லாம் திரண்டு வந்து ஊர்வலம் நடத்தி எனக்கு வாழ்த்து சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே யிருந்துகொண்டு இவளுக்கு மச்சுப்படி இறங்கி வரக்கூட முடியவில்லை! அவள் இறங்கிவந்தால் வரட்டும்; வராவிட்டால் போகட்டும். நான் போய் அவளுடைய முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்ச முடியாது! தெரிகிறதா?" இப்படி பட்டாபிராமன் ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ மச்சுப்படி இறங்கிவரும் சத்தம் கேட்டது. உடனே அந்தத் தம்பதிகள் பேச்சை நிறுத்தினார்கள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சீதா அறைக்குள்ளே பிரவேசித்தாள். "அத்தங்கா! உனக்கு நூறு வயது!" என்றாள் லலிதா. "வாருங்கள்! வாருங்கள்! இப்போதுதான் மாடிக்கு வந்து உங்களைப் பார்க்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் நீங்களே இறங்கி வந்துவிட்டீர்கள். தலைவலி இப்போது எப்படியிருக்கிறது?" என்றான் பட்டாபிராமன். "உங்களுடைய வெற்றிச் செய்தி கேட்டதும் தலைவலி பறந்து போய்விட்டது! ரொம்ப சந்தோஷம்!" என்றாள் சீதா. "எல்லாம் நீங்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் செய்த ஒத்தாசையினாலுந்தான். உங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்!" என்றான் பட்டாபிராமன். "நான் என்ன அப்படிப் பிரமாத ஒத்தாசை செய்து புரட்டிவிட்டேன்? லலிதாவின் அதிர்ஷ்டத்துக்கு எல்லாம்தானே நடக்கும்!" என்று சீதா சொல்லிவிட்டு லலிதாவின் கன்னங்களைத் தடவிக் கொடுத்துத் திருஷ்டி கழிக்கும் பாவனையாக நெற்றியில் கையை வைத்து நெரித்துக் கொண்டாள்.
லலிதாவுக்கு ஆனந்தமாயிருந்தது. சீதா மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்ததை நினைத்துக் களிப்படைந்தாள். தன் கணவரோ சற்றுமுன் கடுமையாகப் பேசியதை மறந்து அவளிடம் மரியாதையாகப் பேசுகிறார். பட்டாபிராமனுடைய வெற்றியினால் லலிதாவுக்கு ஏற்பட்ட குதூகலம் இப்போது பூர்த்தியாகிவிட்டது. "அத்தங்கா! இந்த மனுஷருடைய பேராசையைக் கேள். இவருக்கு இந்த எலெக்ஷனில் வெற்றி கிடைத்தது போதாதாம். சேர்மன் பதவியும் கிடைத்தால்தான் சந்தோஷப்படலாமாம்?" என்றாள் ஸ்ரீ மதி லலிதா. "உன் அதிர்ஷ்டத்துக்கு அதுவும் தானே நடக்கிறது!" என்று சீதா கூறினாள். அப்போது பட்டாபி குறுக்கிட்டு, "இவள் சொல்கிறதை நீங்கள் நம்பாதீர்கள், இவளுக்கு 'சேர்மன் ஒயிஃப்' என்று தன்னை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது! அந்தப் பழியை என் தலையின் பேரில் போட்டுவிடப் பார்க்கிறாள்!" என்று சொன்னான். "லலிதா அப்படி ஆசைப்படுவதில் என்ன தவறு? எனக்குக் கூடத்தான் நீங்கள் சேர்மன் ஆகிப் பார்க்கவேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!" என்று பரிவுடன் கூறினாள் சீதா. "அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் நீங்கள் முன்போல் எனக்கு உதவி செய்யவேண்டும். மாடியிலே போய்ப்படுத்துக் கொள்ளக்கூடாது." "இனிமேல் என்னால் உங்களுக்கு உபகாரம் கிடையாது. ஒருவேளை அபகாரம் நேர்ந்தாலும் நேரும். இரண்டு நாளாக நான் தீவிரமாக யோசனை செய்து பார்த்தேன். ஸ்திரீகள் எலெக்ஷன் முதலிய பொதுக் காரியங்களில் தலையிடவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பொது ஜனங்கள் ரொம்பப் பொல்லாதவர்கள்!" என்றாள் சீதா. "நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு. இன்றைக்கு என்னை வாழ்த்துக்கூற வந்தவர்கள் எல்லோரும் தங்களைப்பற்றி அன்புடன் விசாரித்தார்கள், ஒருவராவது தவறாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை." "இன்றைக்கு ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள்; ஆனால் நாளைக்குச் சொல்வார்கள்." "பொது ஜனங்கள் பேரில் ஏன் உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கையோ தெரியவில்லை எவனோ ஒரு காலிப்பயல் என்னமோ பிதற்றினால் அதற்காக எல்லாரையும் சேர்த்துக் குறை சொல்லலாமா?"
"அந்த நோட்டீசை நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ தெரியவில்லை. பார்த்திருந்தால் உங்களுக்கும் என்னைப்போல் இரத்தம் கொதித்திருக்கும். அம்மாதிரியெல்லாம் எழுதியவனை வெட்டிப் போட்டு விடலாம் என்று தோன்றியிருக்கும்!" இந்தச் சமயத்தில் லலிதா குறுக்கிட்டு, "போதும் இந்தப் பேச்சு! சந்தோஷமான சமயத்தில் அந்த அக்கிரமத்தைப் பற்றி எதற்காகப் பேசவேண்டும்! சாப்பிடப் போகலாம், வாருங்கள்!" என்று சொன்னாள். மூன்று பேரும் சாப்பிடுவதற்குப் போனார்கள். சாப்பிடு கிறபோது சிரிப்பும் விளையாட்டுமாயிருந்தது. உணவு அருந்தியதும் சீதா மச்சு அறைக்கும் பட்டாபிராமன் வாசல் திண்ணைக்கும் போனார்கள். பிறகு சரஸ்வதி அம்மாள் லலிதாவிடம், "இந்தப் பெண் இனிமேல் இங்கே அதிக காலம் இருப்பது நன்றாயிராது. சீக்கிரம் ஊருக்குக் கிளம்பிப் போனால் நன்றாயிருக்கும்!" என்றாள். "நன்றாயிருக்கிறதடி, அம்மா நீ சொல்லுகிறது; காரியம் ஆகிறவரை காலைப்பிடி என்று சொல்வதுபோல அல்லவா இருக்கிறது? அத்தங்கா மட்டும் வந்திராவிட்டால் உன் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றிருக்கமாட்டார், ஜயித்துமிருக்கமாட்டார். நீயே எத்தனையோ தடவை அவ்விதம் சொல்லியிருக்கிறாய். இப்போது 'சீதா சீக்கிரம் ஊருக்குப் போனால் தேவலை' என்கிறாயே?" "அவள் செய்ததை நான் இல்லை என்றா சொல்கிறேன்? ஏதோ ஒத்தாசை செய்தாள்; வாஸ்தவந்தான். ஆனால் கடைசியில் பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டுவிட்டாள்!" "வீணாகப் பழி சொல்லாதே! அவள் என்ன செய்தாள், பாவம்!"
"அவள் என்ன செய்தாளோ என்னமோ எனக்கு எப்படித் தெரியும்? புகை உள்ள இடத்தில் நெருப்பு இல்லாமற் போகாது. ஏதோ அவளுடைய நடத்தையில் கல்மிஷம் இல்லாமற் போனால் அப்படித் துணிந்து அச்சுப் பிரசுரம் போடு வார்களா?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "அம்மா! அம்மா! அத்தங்காளைப்பற்றி அவதூறு சொல்லாதே! சொன்னால் உனக் குத்தான் பாவம்!" "நான் சொல்லவில்லையடி, அம்மா, நான் சொல்லவில்லை! என் வாயை வேணுமானால் நீ மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா? அடுத்தபடி இன்னொரு பெரிய வேலை இருக்கிறதே, சேர்மன் வேலை. இது மாப்பிள்ளைக்கு ஆக வேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருக்கிறது. சீதா நல்ல எண்ணம் உள்ளவளாயிருந்தால் இரண்டு நாளில் கிளம்பிப் போய்விடுவதுதான் நியாயம். அவளுக்கும் ஒரு புருஷன் இருக்கிறான். ஒரு குழந்தையும் இருக்கிறாள் அல்லவா? இன்னொருவர் வீட்டிலேயே இவள் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தால், இவளுடைய குடும்பம் என்ன ஆகிறது? நீ இப்படிப் போய் இன்னொருவர் வீட்டில் இருப்பாயா? யோசித்துப்பார்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். அம்மா சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்று லலிதாவுக்கு தோன்றியது.