அலை ஓசை/பிரளயம்/மாயா மோகினி

விக்கிமூலம் இலிருந்து

ஐந்தாம் அத்தியாயம் மாயா மோகினி

உலகமாகிற அரங்க மேடையை மறைப்பதற்கு மெல்லிய இருள் திரை விழுந்து கொண்டிருந்தது. வானத்தின் வடகிழக்கு மூலையில் கரிய மேகங்கள் திரண்டிருந்தன. மேகத் திரளை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை கிழித்துக்கொண்டு மின்னல் கீற்றுக்கள் ஒரு கணம் ஜொலிப்பதும் மறுகணம் மறைவதுமாயிருந்தன. வாடைக்காற்று ஜில்லென்று வீசியது, தென்னந்தோப்புகளில் தென்னை மட்டைகள் ஆடி உராய்ந்து மர்ம சத்தத்தை உண்டாக்கின. வயல் வரப்பில் மேய்ந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பசு ஒன்று திடீரென்று கன்றை நினைத்துக் கொண்டு, "அம்மா!" என்று கத்திற்று. பட்டிக்காட்டுச் சங்கீத வித்துவான் ஒருவன். "நாளைக்கு நாளைக்கென் றேதினம் கழியுது! ஞானசபையை எண்ணில் ஆனந்தம் பொழியுது;" என்று பாடிக்கொண்டு சென்றான். கொஞ்ச தூரத்தில் இன்னொரு இசைப் புலவன் புல்லாங் குழலில் நாட்டக் குறிஞ்சி ராகத்தை வாசிக்க முயற்சி செய்ய, அது புன்னாகவராளியாக உருக்கொள்ளப் பார்த்தது. சற்றுத் தூரத்திலிருந்த இலுப்பை மரத்தோப்பில் ஒரு இராத்திரிப் பறவை 'கிரீச்' என்று சத்தமிட்டு விட்டுச் சடபடவென்று இறகுகளை அடித்துக்கொண்டு ஒரு மரத்தின் உச்சியிலிருந்து இன்னொரு மரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. வான விதானத்தில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து எட்டிப் பார்க்கத் தொடங்கின.

சீதாவின் விம்மல் சத்தம் வரவர லேசாக மறைந்தது. "அத்தங்கா! வீட்டுக்குப் போகலாமா?" என்று லலிதா கேட்டாள். "லலிதா! எனக்கு வீடு எங்கேயிருக்கிறது போவதற்கு?" என்று சொன்னாள் சீதா. "நான் உயிரோடிருக்கும் வரை என்னுடைய வீடு உன்னுடைய வீடுதான்!" என்றாள் லலிதா. உன்னுடைய நல்ல மனதை நான் அறிவேன், லலிதா! அதனாலேதான் உன்னைத் தேடி வந்தேன். ஆயினும் பெண்ணாகப் பிறந்தவளுக்கு அது போதுமா? எவ்வளவுதான் பிராண சினேகிதியாயிருந்தாலும் சொந்த வீட்டில் சுதந்திரமாயிருப்பது போல் இன்னொரு வீட்டில் இருக்க முடியுமா?..." "ஏன் இருக்க முடியாது? பேஷாய் இருக்கலாம். என்னுடைய தேவபட்டணத்து வீட்டில் எனக்கு எவ்வளவு சுதந்திரம் உண்டோ அவ்வளவு உனக்கு உண்டு; இன்னும் அதிகமாகக்கூட உண்டு!" என்றாள் லலிதா. "உன்னுடைய அன்பு காரணமாக இப்படிச் சொல்கிறாய். நீ சொன்னால் போதுமா? உனக்கு எஜமானர் இருக்கிறார் அல்லவா?" "இருந்தால் என்ன? அவர் எஜமானர் என்றால் நான் எஜமானி. அவருக்கு வீட்டில் எவ்வளவு பாத்தியதை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு! என்னுடைய எஜமானரின் நல்ல குணம் உனக்குத் தெரியாது, சீதா! என்னைக் காட்டிலும் அவர் உன்னிடம் அதிக பிரியமாக இருப்பார். அதிலும் நீ தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டாய் என்றும் சிறையிலே இருந்தாய் என்றும் அவருக்குத் தெரிந்தது முதல் உன்னைச் சிலாகித்து எத்தனையோ தடவை பேசியிருக்கிறார். நீ எங்கள் வீட்டில் எத்தனை நாள் இருந்தாலும் அவருக்குச் சந்தோஷமாகவேயிருக்கும்!" என்றாள் லலிதா.

சீதா, தன் தாய் நாட்டின் விடுதலைக்காகச் சிறை போகவில்லை என்றும், தன்னை இன்னொருத்தி என்று நினைத்துத் தவறாகச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்றும் சொல்லிவிட எண்ணினாள். "லலிதா! நீங்கள் எல்லாரும் நினைப்பதுபோல் அப்படியொன்றும் நான் தாய்நாட்டுக்குச் சேவை செய்துவிடவில்லை...." என்று சீதா சொல்ல ஆரம்பித்தாள். "எல்லாம் எனக்குத் தெரியும்! சூரியா அப்போதே எல்லாவற்றையும் விவரமாக எழுதியிருந்தான். ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் பிரமாதமாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். நீ பிரமாதமான காரியத்தைச் செய்துவிட்டு ஒன்றுமில்லை என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும்? அடக்கத்துக்கும் எல்லை வேண்டாமா?" என்றாள் லலிதா. ஓஹோ! இவர்கள் எல்லாம் இப்படி நினைப்பதற்குக் காரணம் சூரியாவா? தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவ்விதம் சூரியா எழுதியிருக்கிறான். அதை இப்போது இல்லையென்று சொல்லிச் சூரியாவைக் காட்டிக் கொடுப்பானேன்? தன்னைப்பற்றிச் சிலர் பெருமையாக நினைத்துக் கொண்டால் நினைத்துக்கொண்டு போகட்டுமே? அப்படி நினைப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்? தான் சொல்ல எண்ணியதைச் சீதா மாற்றிக்கொண்டு, "மற்றவர்கள் செய்யாத காரியம் அப்படி என்ன நான் பிரமாதமாகச் செய்துவிட்டேன்? உன் அகத்துக்காரர் கூடத்தான் சிறையில் இரண்டரை வருஷத்துக்குமேல் இருந்திருக்கிறார்!" என்றாள். "ஆமாம்; அவர் செய்ததை நினைத்தாலும் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது!" என்றாள் லலிதா. சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

திடீரென்று லலிதா, "இதுதான் எனக்கு அர்த்தமாகவேயில்லை. உன்னுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமில்லை என்று சொல்கிறாயே? கலியாணமான புதிதில் நீ எழுதிய கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்தக் கடிதங்களை நான் அடிக்கடி எடுத்துப் படிப்பதுண்டு. உன்னுடைய கடிதங்களைப் படிக்கும்போது சுவாரஸ்யமான நாவல்களைப் படிப்பது போல அவ்வளவு சந்தோஷமாயிருக்கும். நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன். உன்னுடைய கடிதங்களை இவருக்குக்கூட நான் படித்துப் பார்க்கும்படி கொடுப்பதுண்டு..." "ஐயையோ! என்ன வெட்கக்கேடு! இப்படி நீ செய்வாய் என்று தெரிந்திருந்தால் எழுதியிருக்கவே மாட்டேன்!" என்றாள் சீதா. "எதற்காக இவ்வளவு பதற்றப்படுகிறாய்? இப்போது என்ன முழுகிப் போய்விட்டது. உன்னுடைய கடிதங்களைப் படித்து இவர் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருக்கிறார். இன்னொன்று கூடச் சொல்கிறேன், கேள்! உன்னுடைய கடிதங்களை அவர் படித்ததினால்தான் என்னிடம் அவருடைய அலட்சியம் நீங்கி அன்பாக நடந்துக்கொள்ளத் தொடங்கினார் என்று எனக்குச் சில சமயம் தோன்றும்." "அந்தவரையில் என் கடிதங்கள் உனக்கும் பிரயோஜனமாயிருந்தது பற்றிச் சந்தோஷந்தான்!" "ஆனால் உன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாயிருக்கிறது, அத்தங்கா! அவருக்கு ஏன் அப்படிப் புத்தி மாறியது! பெண்ணாய்ப் பிறந்தவள் யாரோ ஒருத்தியைப் பற்றிச் சொன்னாயே? அந்தப் பாதகி யார்? அவள் பெயர் என்ன?" "அவள் பெயர் தாரிணி!"

"தாரிணியா! சூரியா அவளைப் பற்றிக்கூட எழுதியிருந்தானே? அவள் ரொம்ப சாமர்த்தியக்காரி, உபகாரி, அப்படி இப்படி என்று. உன்னுடைய உயிரை ஒரு தடவை அவள் காப்பாற்றினாள் என்று எழுதியிருந்தானே!" "சூரியா உத்தமமான பிள்ளை, அவனுடைய மனது ரொம்ப நல்ல மனது. வெளுத்ததெல்லாம் பால் அவனுக்கு. அதனால் தாரிணியைப்பற்றி 'ஆ! ஹூ!' என்கிறான். அவளுடைய உண்மையான குணம் அவனுக்குத் தெரியாது." "அப்படியானால் அவள் ரொம்பப் பொல்லாதவளா?" என்று லலிதா கேட்டபோது சீதா சிறிது நிதானித்துவிட்டுக் கூறினாள்:- "தாரிணியைப் பொல்லாதவள் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அவள் எவ்வளவோ நல்லவள்தான். என்னை ஏரியில் முழுகிப் போகாமல் அவள் காப்பாற்றியது உண்மைதான். அது மட்டுந்தானா? கொடிய சுரத்தில் வீழ்ந்து யமனோடு நான் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் அவள்தான் எனக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். அவளும் நானும் தனியாக இருக்கும்போது அவளை என் உடன் பிறந்த சகோதரி என்றே எண்ணத் தோன்றும். உன்னைக்காட்டிலும்கூட அதிகமான அன்பு அவளிடம் எனக்கு உண்டாகும். அவளை விட்டு ஒரு நிமிஷ நேரமும் பிரிந்திருக்க மனம் வராது. வாழும்போது சேர்ந்தாற்போல் வாழ்ந்து சாகிறபோது சேர்ந்து சாகவேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அந்த மாதிரி அவளிடமே சொல்லியும் இருக்கிறேன். ஆனால் என்னுடைய கணவரின் பக்கத்தில் அவள் நிற்பதைப் பார்த்துவிட்டால் என்னுடைய மனதெல்லாம் மாறிவிடும். அவளிடம் எனக்குள்ள அன்பு விஷமாகிவிடும். அவர் அவளுடைய முகத்தைப் பார்த்தால் போதும்; எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரியும். அவரும் அவளும் பேசிக்கொள்வதைப் பார்த்தால் எனக்கு வெறி பிடித்துவிடும். ஒன்று அவளையாவது கொன்றுவிட வேண்டும், அல்லது நானாவது செத்துப் போய்விட வேண்டும் என்று தோன்றும்..."

"ஐயோ! அத்தங்கா! எவ்வளவு கொடுமையான வார்த்தைகளைப் பேசுகிறாய்? எனக்கு அம்மாதிரியெல்லாம் மனம் வேறுபடுவதேயில்லை. இவர் யாராவது ஒரு ஸ்திரீயுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்கு அதில் எவ்விதமான வருத்தமோ கோபமோ உண்டாவதில்லை. உனக்கு மட்டும் ஏன் அப்படிப் பிசகான எண்ணம் தோன்ற வேண்டும்? நீ சொல்வதையெல்லாம் கேட்டால் பிசகு உன் பேரிலேதான் என்று எனக்குத் தோன்றுகிறது." "லலிதா! நீ பாக்கியசாலி! என்னைப்போல் நீயும் நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்று கனவிலும் நான் எண்ணமாட்டேன். அத்தகைய துர்க்கதிக்கு நீ ஆளாகாதபடி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். ஆனால் பிசகெல்லாம் என் பேரில்தான் என்று எண்ணிக்கொண்டு விடாதே! இந்த உலகத்தில் சில அதிசயப் பிறவியான ஸ்திரீகள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதோ ஓர் அபூர்வமான சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட வசீகர சக்தியுடைய ஸ்திரீகள் தாங்களே கடவுளுக்கும் தர்மத்துக்கும் பயந்து ஒழுங்காக நடந்து கொண்டால்தான் உண்டு. இல்லாவிட்டால் எத்தனையோ குடும்பங்களை அவர்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட முடியும். தாரிணியைப் பற்றிச் சூரியா எழுதியிருந்ததாகச் சொன்னாயல்லவா? நீ கோபித்துக் கொள்ளவில்லை என்று வாக்குறுதி கொடுத்தால் ஒரு விஷயம் சொல்லுகிறேன். சூரியா எவ்வளவோ நல்ல பிள்ளைதானே? ஆனால் அவன்கூட அந்த மாயாமோகினியின் வசீகரத்தில் மயங்கிப் போனவன்தான்!" என்றாள் சீதா.

"ஒரு விதத்தில் நீ சொல்லுவது எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. அண்ணா சூரியாவுக்கும் வயதாகி விட்டது அல்லவா? எத்தனை நாளைக்கு இப்படியே பிரம்மச்சாரியாகத் திரிந்து கொண்டிருப்பான்? சூரியா கலியாணம் செய்து கொள்ளாதபடியினால் சுண்டுவின் கலியாணமும் தடைப்படுகிறது என்று அம்மா ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். இனிமேல் சூரியா நம்ம பக்கத்துப் பெண்களைக் கலியாணம் செய்து கொள்ளுவான் என்று எனக்குத் தோன்றவில்லை. சூரியாவுக்கும் நீ சொல்லுகிற அந்தத் தாரிணிக்கும் காதல் என்பது உண்மையானால் அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?" என்று லலிதா கூறிய வார்த்தைகளில் ஆர்வம் ததும்பிக் கொண்டிருந்தது. "லலிதா! இராத்திர ஢யெல்லாம் இராமாயணம் கேட்டு விட்டுச் சீதைக்குராமர் என்னவேணும் என்பதுபோலப் பேசுகிறாயே? காதல் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றம்!..." இவ்விதம் சீதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சற்றுத் தூரத்தில் காலடிச் சத்தம் கேட்டது. வந்தவன் சூரியாதான். "இரண்டு பெண்மணிகள் சேர்ந்துவிட்டால் காதலையும் கலியாணத்தையும் தவிர வேறு பேச்சுக் கிடையாது போலிருக்கிறது. அங்கே, அப்பா உங்களைக் காணோமே என்று தவியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பேரையும் கையோடு கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்!" என்றான் சூரியா.