அலை ஓசை/பிரளயம்/ராகவன் துயரம்
முப்பத்து இரண்டாம் அத்தியாயம் ராகவன் துயரம்
கல்கத்தாவுக்குச் சௌந்தரராகவன் போன அன்றைக்கு அங்கே சுதந்திரத் திருநாள் குதூகலமாகக் கொண்டாடப் படுவதைக் கண்டான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கட்டித் தழுவிக் கொள்வதைப் பார்த்தான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏகோபித்து ஒரே குரலில், "ஜே ஹிந்த்" என்றும், "வந்தே மாதரம்" என்றும், "ஹிந்து முஸ்லிம் ஏக் ஹோ!" என்றும் கோஷ மிடுவதைக் கேட்டான். சென்ற வருஷத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கொன்று இரத்த வெள்ளம் பெருகிய அதே கல்கத்தாவில்தானா இதெல்லாம் நடைபெறுகிறது என்று அதிசயித்தான். இனி இந்தியாவுக்கு அதிர்ஷ்ட காலந்தான் என்று தீர்மானித்துக் கொண்டான். அமரநாதனின் வீட்டில் சென்ற வருஷம் விட்டுவிட்டுப்போன தன் உத்தியோக சம்பந்தமான தஸ்தாவேஜிகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். திரும்ப டில்லிக்கு வந்தபோது பஞ்சாப்பில் தீப்பிடித்து எரியும் விஷயம் தெரியவந்தது. ஸ்ரீ மதி பாமா அவனைத் தேடிக் கண்டுபிடித்துப் பஞ்சாப்பில் நடப்பதைப் பற்றியெல்லாம் சொன்னாள். அத்துடன் தான் ஹௌஷங்காபாத் சென்றிருந்ததையும், தன்னுடன் வந்து விடும்படி சீதாவை அழைத்ததையும், அவள் வர மறுத்ததையும் பற்றிக் கூறினாள். சௌந்தரராகவனுக்குச் சீதாவின் பேரில் சிறிது கோபமாகத்தான் இருந்தது. 'பாமாவுடன் அவள் புறப்பட்டு வந்திருந்தால் எவ்வளவு சௌகரியமாகப் போயிருக்கும்?" என்று எண்ணினான். ஆனாலும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. எப்படியாவது சீதாவையும் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றியாக வேண்டும். புலியின் குகைக்குள் நுழைவது போலவும், தீப்பிடித்து எரியும் பஞ்சாலைக்குள் பிரவேசிப்பது போலவும், பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது போலவும் பஞ்சாப்புக்குள் சென்றாக வேண்டும்.
பாமாவின் தைரியமும் சாமர்த்தியமும் பலருடன் சரளமாகப் பழகும் இயல்பும் இச்சமயம் ராகவனுக்கு மிக்க உதவியாயிருந்தன. பாமாவின் பேரில் அவனுக்கு ஏற்கனவே இருந்த அருவருப்பெல்லாம் இப்போது மாறிவிட்டது. பெண்கள் என்றால் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இரண்டு பேரும் ஆகாச விமானத்தில் இடம் பிடித்துக் கொண்டு லாகூர் போய்ச் சேர்ந்தார்கள். நல்ல வேளையாக லாகூரில் இன்னும் அவர்களுடைய கம்பெனியின் கிளை வேலை செய்து கொண்டிருந்தது. கம்பெனி உத்தியோகஸ்தன் என்ற முறையில் சௌந்தரராகவன் லாகூருக்குப் பிரயாண அநுமதிச்சீட்டுப் பெறுவது சாத்தியமாயிற்று. லாகூரில் ஒரு பகுதி பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெருக்கள் எல்லாம் குத்தும் கொலையும் பிணக்காடுமாயிருந்தன. பஞ்சாப்பின் உள் பிரதேசங்களில் நிலைமை இன்னும் பயங்கரம் என்று சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாகச் சௌந்தரராகவனையும் பாமாவையும் நடை உடை பாவனைகளைக் கொண்டு ஹிந்து மதத்தினர் என்று உடனே தெரிந்து கொள்ளுதல் கஷ்டமாயிருந்தது. ஆங்கிலோ இந்தியர்கள் என்றோ, பார்ஸிகள் என்றோ அவர்களைக் கருதும்படியிருந்தது. ஆகையால் உள் நாட்டில் அவர்கள் பிரயாணம் செய்வதில் அவ்வளவு அபாயம் இல்லை என்பதாகத் தெரிந்து கொண்டார்கள். ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களின் தயவினால் ஒரு ஜீப் வண்டி சம்பாதித்துக் கொண்டு பிரயாணமானார்கள்; வழியெல்லாம் அவர்கள் பார்த்த காட்சிகள் அவர்களுக்குச் சீதாவின் கதியைப் பற்றிய கவலையையும் பயத்தையும் உண்டாக்கின. ஆயினும் எப்படியோ கடைசியில் ஹௌஷங்காபாத் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த சமயம் அந்த ஊரில் படுகொலைக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருந்தது. பாதுகாப்புக்குச் சீக்கிய சோல்ஜர்கள் வந்ததும் தப்பிப் பிழைத்தவர்களின் பிரயாணம் தொடங்குவதாயிருந்தது. அதிகாரிகளின் அநுமதியுடன் சௌந்தரராகவனும் பாமாவும் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து தேடித் தேடிப் பார்த்தார்கள்.
சீதாவையாவது குழந்தையையாவது காணவில்லை. பிறகு துணிச்சலாக ஊருக்குள்ளேயே புகுந்தார்கள். சௌந்தர ராகவன் குடியிருந்த வீட்டை நோக்கிச் சென்றார்கள். வீடு இருந்த இடத்தில் இடிந்து கரியுண்ட சில குட்டிச்சுவர்களும் கல்லும் கரியும் சாம்பலும் கலந்த கும்பல்களும் கிடந்தன! சில இடங்களிலிருந்து இன்னும் இலேசாகப் புகை வந்து கொண்டிருந்தது! ராகவன் அவனுடைய வாழ்நாளிலே என்றும் இல்லாத விதமாக அன்றைக்கு அங்கேயே உட்கார்ந்து விம்மி விம்மி அழுதான். பாமாவும் அவனுடன் சேர்ந்து 'ஓ'வென்று கதறினாள். இதற்குள்ளே அந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியது. பின்னோடு வந்திருந்து போலீஸ் அதிகாரி அவர்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தினார். கிளம்புகிற சமயத்தில் ஒரு பையன் அவர்களை நெருங்கி வந்தான். அவனை முன்னர் பார்த்திருந்த ஞாபகம் ராகவனுக்கு இருந்தது. அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கோவேறு கழுதை வண்டியுடன் அவன் ராகவனைப் பார்த்து, "சாகிப்! ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்!" என்றான். அவனை ஜீப் வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னான் ராகவன். வண்டி புறப்பட்ட பிறகு "என்ன விஷயம்?" என்று கேட்டான். அந்த வீட்டிலிருந்த அம்மாள் சாகவில்லையென்றும் அவளை ஒரு முஸ்லிம் கிழவர் அழைத்துக்கொண்டு போனதாகவும் தன்னுடைய வண்டியில் ஏறிக்கொண்டுதான் அவர்கள் போனதாகவும் பையன் கூறினான். குழந்தையைப் பற்றி யாதொரு தகவலும் தெரியாது என்று சொன்னான். இரவெல்லாம் அவர்கள் பிரயாணம் செய்து விடியும் சமயத்தில் ஒரு பாறைக்குப் பின்னால் தங்கினார்கள் என்பதையும் சொல்லி அந்த இடத்தைக் காட்ட முடியும் என்று கூறினான். அந்தப் பையனையும் ஜீப் வண்டியில் அழைத்துக்கொண்டு போனார்கள். பையன் காட்டிய இடத்தில் கட்டை வண்டியின் சக்கரச் சுவடுகள் தெரிந்தன. அது மட்டுமல்லாமல் சீதா வழக்கமாக அணியும் கண்ணாடி வளையல் ஒன்று அங்கே உடைந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் ராகவனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று.
துயரம் விரைவில் கோபமாக மாறியது. யாரோ ஒரு முஸ்லிம் கிழவன் சீதாவைக் கொண்டுபோய் விட்டதாக எண்ணினான். அவளை எங்கே கொண்டு போய் விற்கப் போகிறானோ, அல்லது என்ன செய்யப் போகிறானோ? அதைக் காட்டிலும் சீதா செத்துப் போயிருந்தால், எரிந்து போன வீட்டிலேயே இருந்து மாண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமே! சீதாவுக்கு நேரக்கூடிய கதியை நினைக்க நினைக்க ராகவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. இதற்கு யார் பேரிலாவது பழிக்குபழி வாங்கவேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது. பையனை இறக்கி விட்டுவிட்டு ராகவனும் பாமாவும் ஜீப் வண்டியை ஓட்டிக்கொண்டு விரைந்து சென்றார்கள். வழியில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் தனியே போவதைக் கண்டால் அவனை ராகவன் கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுப் போனான். இதைப் பாமா தடுக்கப் பார்த்தும் பயன்படவில்லை. வழியில் ஒரு ஊரில் அவர்கள் இராத்திரி தங்கும்படி நேர்ந்தது தங்கிய வீடு ஒரு பிரபல ஹிந்து வக்கீலின் வீடு. ஏற்கெனவே கம்பெனி உத்தியோகம் சம்பந்தமாக அவருடன் சௌந்தரராகவனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த ஊரில் ஹிந்துக்கள் அதிகமாதலால் அதுவரை அபாயம் ஏற்படவில்லை. ஆனால் எந்த நிமிஷம் அபாயம் வருமோ என்று எதிர்பார்த்துத் தயாராயிருந்தார்கள். ராகவன் அவருடைய வீட்டில் தங்கிய இரவு ஒரு செய்தி வந்தது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கு முஸ்லிம் ஸ்திரீகள் அணியும் பர்தா உடையைப் போட்டு ஒரு முஸ்லிம் கிழவன் ஜீப் வண்டியில் வைத்து அழைத்துப் போகிறான் என்பது அந்தச் செய்தி. சுற்றுப்புறங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவர்கள் வைத்திருந்த துப்பறியும் ஒற்றர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்டதும் சௌந்தரராகவனுக்கு ஒருவேளை அந்தப் பெண் சீதாவாயிருக்கலாம் என்ற சந்தேகம் உதித்தது.
இல்லாவிட்டால்தான் என்ன? ஒரு ஹிந்து ஸ்திரீக்கு அபாயம் நேர்ந்திருக்கிறது என்றால், அதைத் தடுக்காமல் தான் உயிர் வாழ்ந் திருப்பதில் என்ன பிரயோஜனம்? பழைய காலத்து ராஜபுத்திர வீரர்கள் தங்களுடைய குலப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதற்காகச் செய்த வீர சாகஸச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் ராகவனுக்கு அப்போது நினைவு வந்தது. உடனே அந்த ஜீப் வண்டி எந்தச் சாலையில் போகிறது என்று தெரிந்து கொண்டு அதே சாலையில் சௌந்தரராகவன் தன் வண்டியையும் விட்டான். வழியில் பல தடங்கல்கள் நேர்ந்தன. ஆயினும் முன்னால் போன வண்டியை விட்டுவிடாமல் தொடர்ந்து போனான். ஒரு இடத்தில் முன் வண்டி தப்பிப் போய் விட்டதாகவே தோன்றியது. பிறகு அது பெரிய சாலையிலிருந்து, பிரிந்து குறுக்குச் சாலையில் திரும்பியிருக்க வேண்டும் என்று ஊகித்து அதே குறுக்குச் சாலையில் தானும் திரும்பினான். சிறிது நேரத்துக்கெல்லாம் 'சேனாப்' நதியின் கரையை அடைந்தான். அங்கே ஒரு படகு ஏறக்குறைய நடு ஆற்றில் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு முஸ்லிம் கிழவனும் ஒரு ஹிந்து ஸ்திரீயும் இருப்பதை ராகவன் பார்த்து விட்டான். அதற்கு மேல் பார்ப்பதற்கோ யோசிப்பதற்கோ என்ன இருக்கிறது? வேறு எந்த விதத்திலும் அந்தப் படகைப் பிடிக்கவோ தடுக்கவோ முடியாது. துப்பாக்கியை எடுத்துக் கிழவனைக் குறி பார்த்துச் சுட்டான். குறி தவறாமல் குண்டு பட்டது. கிழவன் படகிலிருந்து சாய்ந்து தண்ணீரில் விழுந்தான். அதற்குப் பிறகு நடந்ததை ராகவன் எதிர்பார்க்கவில்லை. படகிலிருந்த பெண்ணும் இன்னொரு மனிதனும் தண்ணீரில் குதித்தது போலத் தோன்றியது. படகில் படகோட்டி மட்டுமே பாக்கியிருந்தான். ராகவனுக்கு அப்போது வெறியே பிடித்திருந்தது. அந்தப் படகோட்டி மனிதனையும் நோக்கிச் சுட்டான். படகு குண்டுபட்டு ஓட்டையாகியிருக்க வேண்டும். சிறிது நேரத்துக்கெல்லாம் படகு கவிழ்ந்து விட்டது. இந்தச் சம்பவம் ராகவனுடைய வெறியைத் தணித்தது. தான் செய்தது நியாயமோ என்னமோ என்ற ஐயம் எழுந்தது. நியாயந்தான் என்று மனதை உறுதி செய்து கொண்டான். ஒருவேளை படகில் இருந்தது சீதாவாக இருக்கலாமோ என்ற சிறு சந்தேகம் எழுந்தது.
அப்படியிருக்க முடியாது என்றும், சீதாவாக இருந்தால் அந்த முஸ்லிம் கிழவன் நீரில் விழுந்ததைக் கண்டு அவளும் விழுந்திருக்க நியாயமில்லையென்று எண்ணி ஆறுதல் பெற்றான். ஒருவேளை அப்படிச் சீதாவாயிருந்தால் என்ன? ஒரு முஸ்லீம் வீட்டுக்குப் போய்ப் பலவந்தத்துக்கு ஆளாகி உயிர் வாழ்வதைக் காட்டிலும் அவள் நதியில் முழுகி இறப்பதே மேலல்லவா? பிறகு ராகவனும் பாமாவும் பல அபாயங்களைத் தாண்டி டில்லிக்கு வந்து சேர்ந்தார்கள். வந்த பிற்பாடு ராகவனுடைய மனது கேட்கவில்லை. டில்லியில் உள்ள அகதி முகாம்களில் மட்டும் அல்லாமல் பானிபெத், கர்னால், குருக்ஷேத்திரம் முதலிய ஊர்களில் உள்ள அகதி முகாம்களில் எல்லாம் போய்த் தேடிப் பார்த்தான். எங்கும் சீதாவைப் பற்றியாவது வஸந்தியைப் பற்றியாவது தகவல் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் இறந்து போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டிய தாயிருந்தது. ஆனால், இரண்டு மாதத்துக்கு முன்பு சீதாவின் பெயருக்குத் தாரிணியிடமிருந்து வந்த கடிதமானது சௌந்தர ராகவனுக்கு மறுபடியும் மனக் குழப்பத்தை உண்டாக்கியது. "சூரியா, இப்போது நீ எங்கே தங்கியிருக்கிறாய்?" என்று சௌந்தரராகவன் கேட்டான். "இன்னும் ஒரு இடம் என்று நிலையாக ஏற்படவில்லை. ஏற்பட்டதும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தங்களுக்கும் பாமாவுக்கும் திருமணம் நடக்கும்போது எனக்குக் கட்டாயம் அழைப்பு அனுப்பவேண்டும் மறந்து விடக்கூடாது" என்று சூரியா கூறினான். அவனுடைய முகத்தில் வெறுப்பும் வேடிக்கையும் கலந்த குரூரமான புன்னகை காணப்பட்டது. "ஆகா! அதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? நாங்கள் இன்னும் யாரிடமும் சொல்ல வில்லையே?" என்றான் ராகவன். "சொல்லுவானேன்? ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடியதுதானே? பாவம்! நீங்கள் எத்தனை காலம் சூனியமாக இருக்கும் இந்தப் பெரிய வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியும்?" "ஆம், அப்பா! நீயாவது என்னுடைய நிலைமையைத் தெரிந்து அநுதாபப்படுகிறாயே? உலகத்தில் சுயநலம் அதிகமாகிப் போய்விட்டது?
பிறர் கஷ்டத்தைக் கவனித்து அநுதாபப்படுவாரே இல்லை. அதுவும் தியாகிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்களாகப் போயிருக்கிறார்கள், தெரியுமா? அவர்களை உத்தேசித்தால் நம்முடைய மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் போன்றவர்கள் எவ்வளவோ தேவலை!" என்றான் ராகவன். "ஆமாம்; உலக இயல்பே அப்படித்தான். நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவார்கள், கெட்டவர்கள் நல்லவர்கள் ஆவார்கள். தியாகிகள் சுயநலத்தை மேற்கொள்வார்கள். சுயநலம் பிடித்தவர்கள் பரோபகாரிகள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் காந்தி மகான் ஒருவர் மட்டும் மாறாமல் இருந்து கொண்டு திண்டாடுகிறார்!" ஆம், உன்னுடைய காந்தி மகானை நீதான் புகழ வேண்டும். காந்தி செய்கிற அநியாயத்தை எங்களால் பொறுக்க முடியவில்லை. அவர் எதற்காக இந்தப் புது டில்லியில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது; கோபமாய்க் கூட இருக்கிறது. இவ்வளவு அகதிகளையும் இவர்கள் படுகிற துயரங்களையும் பார்த்துவிட்டுப் பாகிஸ்தானுக்குப் பரிந்து பேச எப்படித்தான் மகாத்மாவுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. பட்டினி கிடந்து சர்தார்படேலைக் கட்டாயப்படுத்தியல்லவா பாகிஸ்தானுக்கு அறுபது கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தார்? அவரை 'மகாத்மா' என்று சொல்வதற்கே என் நாக்குக் கூசுகிறது." "கூசினால் சொல்ல வேண்டாமே! சொல்லாம லிருப்பதால் மகாத்மாவுக்கு நஷ்டமில்லை, உங்களுக்கும் கஷ்டம் இல்லை. நாங்கள் என்னமோ சில பைத்தியக்காரர்கள், மகாத்மா எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனாலும் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. போகட்டும், உங்கள் கலியாணம் எப்போது?" என்றான் சூரியா.
"அதைப் பற்றித்தான் தயக்கமாயிருக்கிறது, சூரியா! நான் இப்படியே என் வாழ்க்கையை நடத்த முடியாது என்பது நிச்சயம். ஆனால் சீதாவைப் பற்றியோ உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. போதாதற்கு, தாரிணியின் கடிதம் வேறு என் மனதை அடியோடு குழப்பி விட்டிருக்கிறது..." "தாரிணியின் கடிதம் இந்த விஷயத்தில் உங்கள் மனதைக் குழப்புவானேன்?" என்றான் சூரியா. "உன்னிடம் சொன்னால் என்ன, ஒருமாதிரி உனக்கு முன்னமேயே தெரிந்த விஷயந்தான். தாரிணி என்னுடைய முதற்காதலி, சூரியா! சீதாவை இழந்ததினால் எனக்கேற்பட்ட மனத்துயரத்தை மாற்றக்கூடியவள் தாரிணி ஒருத்திதான். ஒருவேளை உனக்கு இந்த விஷயத்தில் ஆட்சேபணை இருக்கக் கூடும். ஆனாலும் நீ இதில் தலையிடாம லிருந்தால் நல்லது" என்றான் ராகவன். "மன்னிக்க வேண்டும், ராகவன்! நான் அப்படியெல்லாம் பிறர் காரியத்தில் தலையிடுகிறவன் அல்ல. ஒரு தடவை பிறர் காரியத்தில் தலையிட்டு விட்டு அதன் பலன்களை இன்றுவரை அநுபவித்துக் கொண்டிருக்கிறேன், போதும் போதும் என்றாகிவிட்டது. சீதா செத்துப் போயிருந்து ஒருவேளை ஆவி வடிவத்தில் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தால் நீங்களும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்வதைப் பார்த்து ஆனந்தமடைவாள். உங்கள் கலியாணத்துக்கு வந்திருந்து சீதா ஆசிகூடக் கூறுவாள்!" என்றான் சூரியா.