அலை ஓசை/புயல்/டில்லிப் பிரயாணம்

விக்கிமூலம் இலிருந்து

சென்னையிலிருந்து புறப்பட்டு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு அதிகமானபடியினால், உட்கார்ந்து உட்கார்ந்து சலித்துப் போன பிரயாணிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டும் பெருமூச்சு விட்டுப் புகையையும் கரித்தூளையும் கக்கிக் கொண்டும் சில சமயம் வீல் என்ற சத்தமிட்டு அலறிக் கொண்டும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரினால் பிரசித்தி பெற்ற நீராவித் தொடர் வண்டி தண்டவாளத்தின் மீது நீள நெடுகச் சென்றது. டில்லி ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரந்தான் இருந்தது என்றாலும், அந்த ஒரு மணியும் ஒரு யுகமாக மேற்படி ரயிலில் பிரயாணம் செய்தவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் எல்லாரிலும் அதிகமாக மனத்தில் அவசரமும் பரபரப்பும் கொண்டிருந்த சீதாவுக்கோ பாக்கியிருந்த அந்த ஒரு மணியும் ஒரு பிரம்ம யுகமாகத் தோன்றியது. மனிதர்களுக்கு ஒரு சதுர்யுகம் பிரம்மதேவருக்கு ஒரு பகல் என்று கணக்கு. அப்படியென்றால் பிரம்ம யுகம் எவ்வளவு நீண்டது என்பதை நேயர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். அந்தக் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதா பிரயாணம் செய்தாள். சீதாவின் மாமியார் காமாட்சி அம்மாளும் அதே வண்டியில் பக்கத்தில் இருந்தாள்.

காமாட்சி அம்மாளின் மடியைச் சிம்மாதனமாகக் கொண்டு வீற்றிருந்த இன்னொரு ஸ்ரீமதி யார்? அந்த ஸ்ரீமதியிடம் காமாட்சி அம்மாள் ஏன் அவ்வளவு பயபக்தி கொண்டிருக்கிறாள்? அவள் தன்னுடைய தோளிலும் கன்னத்திலும் 'பளீர் பளீர்' என்று அடிப்பதை எதற்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்? அப்புறம் நடப்பது இன்னும் விசித்திரமாயிருக்குது. காமாட்சி அம்மாளின் மடியில் வீற்றிருந்த ஸ்ரீமதியைச் சீதா கோபமாகப் பார்த்துப் பயமுறுத்துவதாகத் தன் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, "வஸந்தி! இதோ பார்! பாட்டியை அடிக்காதே! தெரியுமா!" என்று அதட்டுகிறாள். உடனே சீதாவுக்கும் அந்த ஸ்ரீமதி இரண்டு அடி கொடுக்கிறாள். மாமியார், மருமகள் இருவரும் பலமாகச் சிரிக்கிறார்கள்! "லயிலின் கயவைத் தற! கயவைத் தறக்காத்தா அப்பித்தான் அய்ப்பேன்!" என்று ஸ்ரீமதி வஸந்தி மழலை மொழி பேசியதும் நமக்கு ஒருவாறு விஷயம் புரிகிறது. ஸ்ரீமதி வஸந்திதேவி, காமாட்சி அம்மாளின் கண்ணுக்குக் கண்ணான செல்லப் பேத்தி. சௌந்தரராகவனும் சீதாவும் பெற்றெடுத்த சீமந்த புத்திரி. இப்போது அவளுடைய பிராயம் இரண்டு வருஷம் ஆறு மாதம்.

பாட்டியையும் அம்மாவையும் வஸந்தி மாற்றி மாற்றி அடித்ததற்குக் காரணம் என்னவென்பதை நேயர்கள் அவளுடைய மழலைப் பேச்சிலிருந்து ஊகித்திருப்பார்கள். ரயிலில் பலகணி வழியாக குழந்தை வெளியே எட்டிப் பார்க்கிறாள் என்பதற்காகக் காமாட்சியம்மாள் பலகணிக் கதவை மூடியிருந்தாள். மூடிய கதவைத் திறக்கவேண்டும் என்பது வஸந்தியின் கட்சி. இரண்டு பக்கமும் ஜன்னல் வழியாகப் பார்க்க முடியாவிட்டால் ரயிலில் பிரயாணம் செய்வதின் உபயோகம்தான் என்ன என்பது வஸந்தியின் கேள்வி. இதற்குத் தக்க பதில் சொல்ல முடியாத காரணத்தினால் காமாட்சி அம்மாள் சீக்கிரத்திலேயே ஜன்னல் கதவைத் திறக்கும்படி நேர்ந்தது. கதவைத் திறந்ததும் வஸந்தி தன் சின்னஞ்சிறு கையின் பட்டுப் போன்ற மிருதுவான ஆள்காட்டி விரலை வெளியிலே சுட்டிக்காட்டி, "அம்மா! அது என்ன? பாத்தி அது என்ன?" என்று கேட்டாள். "அது ஒரு பழைய காலத்துக் கோட்டை!" என்றாள் சீதா. "கோத்தைன்னா என்ன?" என்று வஸந்தி கேட்டாள். "கோட்டைன்னா கோட்டைதான்! உனக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. சூரியா மாமாதான் வரவேணும்" என்றாள் சீதா. "சூரியா மாமாவைக் கூப்பிது அம்மா!" "இப்போது கூப்பிட்டால் அவருக்குக் காது கேட்காது. ரயில் நின்ற பிறகு வருவார் கொஞ்ச நேரம் சும்மா இரு!" "லயிலு நின்ன அப்பதம் எதுக்கம்மா வரணும்? லயிலு ஓதறபோதே மாமா வந்தா என்ன?" "ரயிலு ஓடுகிற போது வந்தால் உன் தலையில் ஒரு குட்டு!?" என்று சீதா குழந்தையின் தலையிலே ஒரு செல்லக் குட்டு குட்டினாள். "போ, அம்மா?" என்று சொல்லிவிட்டு வஸந்தி மறுபடியும் வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.

வஸந்தியைப் போலவே வெளியே நோக்கிக் கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அதோ ஒரு கோட்டை! அங்கே ஒரு கோட்டை! எங்கே பார்த்தாலும் ஒரே கோட்டையாயிருக்கிறதே சீதா! இதையெல்லாம் யார் கட்டியதோ?" என்றாள். "பல ராஜாக்கள் கட்டியதாயிருக்கும், அம்மா! சுமார் ஆயிரம் வருஷம் டில்லிதான் இந்தியாவின் தலைநகரமா இருந்தது. ஆக்ராவிற்கும் டில்லிக்கும் நடுவில் இப்படித்தான் எங்கே பார்த்தாலும் இடிந்த கோட்டையாயிருக்கும்" என்றாள் சீதா. "நம்முடைய தென் தேசத்திலே யாத்திரை போனால் இரண்டு பக்கமும் ஒரே கோவிலாயிருக்கும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு கோபுரம் தெரியும். சிதம்பரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி போகிற வரைக்கும் ஒரு தடவை நான் ஐந்நூறு கோபுரத்திற்கு மேலே எண்ணினேன். இந்தப் பக்கத்தில் கோயில் என்ற பேச்சே கிடையாது போலிருக்கிறது!" "இந்த வழியிலே மதுரை - பிருந்தாவனத்திலே மட்டும் கோவில் இருக்கிறது, அம்மா! பிருந்தாவனத்தில் இருக்கிற கோவில் நம்ம பக்கத்திலேயிருந்து வைஷ்ணவாள் வந்து கட்டியதாம். மற்றபடி இந்த வழியிலே கோயில் கிடையாதுதான். காசிப் பக்கம் போனால் ஏராளமான கோயில் இருக்குமாம்." "டில்லிப் பட்டணத்தில் கூடக் கோவில் கிடையாதா சீதா!"

"கிடையாது அம்மா! அவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு கோவிலைக் கூட நான் பார்க்கவில்லை; ரொம்ப காலமாய் டில்லியில் துருக்க ராஜ்யந்தான் நடந்தது. அதனாலே டில்லியில் எங்கே பார்த்தாலும் மசூதிகளாயிருக்கும். மசூதி இல்லாவிட்டால் துருக்க ராஜாவைப் புதைத்த சமாதி இருக்கும். நான் பார்த்த வரையில் டில்லியில் ஒரு கோவில்கூட என் கண்ணுக்குத் தட்டுப் படவில்லை. யாரோ பிர்லா என்கிற பணக்காரச் சீமான் புதிதாகக் கோயில் கட்டுகிறார் என்று சொன்னார்கள்." "தாஜ்மகால், தாஜ்மகால் என்று ஜபம் பண்ணுகிறாயே அதுவும் யாரோ ஒரு ராஜாவைப் புதைத்த இடந்தானோ?" உண்மையில் சீதாவின் மனம் அப்போது 'தாஜ்மகால்' ஜபம் செய்யவில்லை. ரயில் ஓடும் சமயம் சக்கரங்கள் உருண்டு உருண்டு போகும்போது அந்தச் சத்தத்திலிருந்து ஒருவித சுருதியும் தாளமும் ஏற்படுகின்றன அல்லவா? அந்தச் சுருதிக்கும் தாளத்துக்கும் இசையச் சீதாவின் மனது "டில்லி ஜங்ஷன்" "சௌந்தரராகவன்" என்றுதான் ஜபம் செய்து கொண்டிருந்தது. டில்லி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் தங்களுடைய வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டு தன் கணவன் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த கணவனைச் சந்திப்பதில் அவளுக்கு இருந்த அவசரத்தினாலே தான் ரயில் வெகு மெதுவாகப் போவதாய் அவளுக்குத் தோன்றியது.

இவ்விதம் மனம் சௌந்தரராகவனிடம் லயித்திருந்தாலும் மாமியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையைக் கருதியே பதில் சொல்லி வந்தாள். "இல்லை, அம்மா! தாஜ்மகால் ராஜாவைப் புதைத்த இடமல்ல; ராணியைப் புதைத்த இடம். ஷாஜஹான் என்னும் டில்லி பாதுஷாவுக்கு மும்தாஜ்மகால் என்று ராணி இருந்தாள். அவளிடம் பாதுஷாவுக்கு ரொம்பஆசை. அவள் இறந்த பின் ஷாஜஹான் வேறு கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவளைப் புதைத்த இடத்தில் தாஜ்மகால் என்னும் அற்புதமான கட்டிடத்தைக் கட்டினான். முழுதும் வெள்ளைப் பளிங்குக் கல்லால் கட்டி அதில் பலவர்ணக் கற்களினால் சித்திரப் பூ வேலைகள் செய்வித்தான். உலகத்திலேயே அவ்வளவு அழகான கட்டிடம் வேறு கிடையவே கிடையாதாம்!" "நீ பார்க்கவில்லையா, சீதா!" "இன்னும் பார்க்கவில்லை முன்னே நான் இங்கே வந்திருந்தபோது முழுசாக மூன்று மாசம் கூட இருக்கவில்லையே? 'தாஜ்மகாலுக்குப் போகலாம், போகலாம்' என்று உங்கள் பிள்ளை சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் சீமைக்குப் போக உத்தரவு வந்து விட்டது!" "அதனால் என்ன சீதா? இனிமேல் டில்லியில் தானே இருக்கப் போகிறீர்கள்? எப்போது இஷ்டமோ, அப்போது போய்ப் பாருங்களேன்!" "அதென்ன 'போய்ப் பாருங்களேன்' என்று சொல்கிறீர்கள்? நீங்களுந்தான் எங்களோடு வரவேண்டும் எல்லாருமாய்ப் போய்ப் பார்த்தால் போகிறது!"

"எனக்கு என்னத்துக்கடி அம்மா, இதெல்லாம்? ஏதாவது கோவில் குளத்துக்குப் போனாலும் பிரயோஜனம் உண்டு. தாஜ்மகாலும் கீஜ்மகாலும் எனக்கு எதற்கு? நான் பார்த்து என்ன ஆகப் போகிறது?" "அப்படிச் சொல்லாதீர்கள்! போய்ப் பார்த்தால் அப்புறம் அதிசயப்படுவீர்கள். டில்லியில் கூட ஷாஜஹான் கட்டிய அரண்மனை இருக்கிறது. அதில் திவானிகாஸ் என்றும் திவானிஆம் என்றும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அவற்றை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பதினாயிரம் கண்ணால் பார்த்தாலும் அலுக்காது ஓரிடத்தில் ஷாஜஹானுடைய அந்தப்புரமாம். அதில் ராணிகள் குளிப்பதற்காகப் பளிங்குக் கல்லாலேயே குளங்களும் வாய்க்கால்களும் அருவிகளும் கட்டியிருக்கிறார்கள். அடடா! அந்த அற்புதத்தை நேரில் பார்த்தால்தான் அதன் மகிமை தெரியும்." "அது எவ்வளவு மகிமையாயிருந்தாலும் சரி, எனக்கு வேண்டாம். டில்லியில் கோவில் இல்லாவிட்டால் போகட்டும்; இந்தக் கண்மணிதான் (வஸந்தியைக் காட்டி) எனக்கு சுவாமி, அம்மன், கோவில், குளம் எல்லாம் என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனால், சீதா! டில்லிப் பட்டணத்தில் எப்போதுமே துருக்க ராஜாக்கள்தான் ஆண்டார்களா? ஹிந்து ராஜாக்கள் எப்போதுமே ஆளவில்லையா?" "ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் டில்லியில் ஹிந்து ராஜாக்கள் இருந்தார்களாம்; பிரிதிவிராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" "கேட்ட மாதிரி இருக்கிறது; அதற்கு மேல் ஒன்றும் ஞாபகம் இல்லை நீ சொல், சீதா! பொழுது போகட்டும்!"

"டில்லியில் பிரிதிவிராஜன் என்று ஒரு ராஜா இருந்தான். டில்லிக்குப் பக்கத்தில் இன்னொரு ராஜ்யத்தில் ஜயச்சந்திரன் என்ற ராஜா இருந்தான். ஜயச்சந்திரனுக்குச் சம்யுக்தை என்ற குமாரி இருந்தாள். ஜயச்சந்திரனுக்குப் பிரிதிவிராஜன் மீது ஜன்மப் பகை. ஆனால் ஜயச்சந்திரனுடைய குமாரி சம்யுக்தை பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டு அவனையே கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித் திருந்தாள்..." "எப்படி அவளுக்குப் பிரிதிவிராஜன் பேரில் காதல் உண்டாயிற்று? அவர்கள் எப்போதாவது பார்த்துக் கொண்டதுண்டா?" "இல்லை, அம்மா! பிரிதிவிராஜனுடைய பராக்கிரமத்தையும் அழகையும் பற்றிச் சம்யுக்தை கேள்விப்பட்டிருந்தாள். நளனைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தமயந்தி காதல் கொண்டது போல் சம்யுக்தையும் பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டாள்." "நல்ல காதல்! அப்புறம்?" "அப்புறம் சம்யுக்தையின் கலியாணத்துக்காக ஜயச்சந்திரன் சுயம்வரம் வைத்தான். அதற்கு ஐம்பத்துநாலு தேசத்து ராஜாக்களையும் அழைத்தான். ஆனால் டில்லி பிரிதிவிராஜனை மட்டும் அழைக்கவில்லை. அழைக்காததோடு பிரிதிவிராஜனை அவமானப்படுத்துவதற்காக அவனைப்போல் ஒரு சிலை செய்து சுயம்வர மண்டபத்தின் வாசலில் காவல்காரனைப்போல் நிறுத்தி வைத்திருந்தான்!" "சேச்சே! என்ன கேவலமான காரியம்! அவனுக்கு ஏன் அப்படிப் புத்தி போயிற்று?"

"போதாத காலந்தான் நம்முடைய இந்திய தேசத்துக்கே போதாத காலம். அப்போது, சம்யுக்தை என்ன செய்தாள் தெரியுமா? கையில் மணமாலையுடன் ஒவ்வொரு ராஜாவாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். அவர்கள் கழுத்திலேயெல்லாம் மாலையைப் போடவில்லை. மண்டபத்தின் வாசலிலே பிரிதிவிராஜனுடைய சிலை வைத்திருந்ததை அவளுடைய தோழி அவளுக்குச் சொல்லியிருந்தாள். மண்டப வாசலண்டை வந்ததும் சட்டென்று அந்தச் சிலைக்குப் பக்கத்தில் போய்க் கையிலிருந்த சுயம்வர மாலையைச் சிலையின் கழுத்தில் போட்டாள்.." "சுத்த அசட்டுப் பெண்ணாயிருக்கிறாளே! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டு என்ன பிரயோசனம்?" "என்ன பிரயோசனமா? கேளுங்கள்! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டதும் அதற்கு அந்த க்ஷணமே உயிர் வந்துவிட்டது! சம்யுக்தையைக் கட்டித் தூக்கிக்கொண்டு போய்..." "சிலைக்காவது, உயிர்வரவாவது? ஏதோ நிஜமாக நடந்த கதை சொல்கிறாய் என்றல்லவா நினைத்தேன்? விக்கிரமாதித்தன் கதை மாதிரி இட்டுக் கட்டிக் கதை சொல்கிறாயாக்கும்!" "இல்லை, அம்மா! நிஜமாக நடந்த கதைத்தான்!" "நிஜமாக நடந்த கதை என்றால் உண்மையாகவே சிலைக்கு உயிர் வந்தது என்று அர்த்தமா?" "பின் என்ன அர்த்தம்?"

"அந்தச் சிலைக்குப் பின்னால் நிஜப் பிரிதிவிராஜன் ஒளிந்து கொண்டிருந்தான். சமயம் பார்த்துச் சம்யுக்தையைக் கொண்டு போவதற்காகவே அவன் வந்து காத்துக்கொண்டிருந்தான். உடனே அவன் சம்யுக்தையைத் தூக்கிப் பக்கத்திலே தயாராயிருந்த குதிரையின் மேலே வைத்துக்கொண்டு பறந்தான். நிசமாகப் பறந்தானா என்று கேட்காதீர்கள்! பறக்கிறது மாதிரி வேகமாகக் குதிரையை விட்டுக்கொண்டு போனான். அவனைப் பிடிப்பதற்காக ஜயச்சந்திரனும் அவனுடைய ஆட்களும் தொடர்ந்தார்கள் ஆனால் முடியவில்லை. பிரிதிவிராஜனுடைய வீரர்கள் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்...." "அப்புறம் பிரிதிவிராஜனும் சம்யுக்தையும் கலியாணம் செய்து கொண்டு ரதியும் மன்மதனும் போல் சந்தோஷமாயிருந்தார்களாக்கும்!" "அப்படி இருந்தால்தான் தேவலையே? இல்லவே இல்லை. அந்தக் காலத்தில் கோரிமுகம்மது என்ற துருக்க ராஜா வடக்கேயிருந்து படையெடுத்து வந்தான். டில்லி வரையில் வந்து விட்டான். அவனைப் பிரிதிவிராஜன் நன்றாகத் தோற்கடித்துத் திருப்பி அனுப்பினான். முதலில் இரண்டு மூன்று தடவை இப்படி நடந்தது. அதற்கப்புறம் சம்யுக்தையின் தகப்பன் ஜயச்சந்திரன் கோரிமுகம்மதுவுக்கு ஓலை அனுப்பினான். 'நீ மறுபடியும் படையெடுத்து வா! உனக்கு நான் உதவி செய்கிறேன்' என்று.கோரிமுகம்மது, ஜயச்சந்திரன் இரண்டு பேரும் சேர்ந்து பிரிதிவிராஜனுடன் யுத்தம் செய்தார்கள். பிரிதிவிராஜன் கடைசி வரையில் சண்டை போட்டு யுத்தகளத்தில் செத்து விழுந்தான்."

"ஐயோ! பாவம்! சம்யுக்தையின் கதி என்னவாயிற்றோ!" "சம்யுக்தை தீயில் குதித்துப் பிராணனை விட்டாள். அது முதல் டில்லியில் துருக்க ராஜ்யம் ஏற்பட்டது. சீக்கிரத்தில் ஜயச்சந்திரனும் ராஜ்யத்தை இழந்து துருக்க ராஜாவுக்கு அடிமையானான்." "என்ன விபரீதம்? இதற்குத்தான் பெரியவர்கள் சொல்கிறதைக் கேட்டு நடக்க வேண்டும் என்கிறது. சம்யுக்தை தகப்பனார் சொன்னபடி கேட்டிருந்தால் இப்படியெல்லாம் நடந்திராது அல்லவா?" "அழகாயிருக்கிறதே, நீங்கள் சொல்வது! அது எப்படி சம்யுக்தையின் பேரில் பழி போடுகிறீர்கள்? ஜயச்சந்திரன் செய்தது என்ன நியாயம்? மகளுடைய சம்மதப்படி அவளைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் என்ன? அது மட்டுமல்லாமல் சொந்த மாப்பிள்ளையின் பேரில் துவேஷத்தினால் அன்னிய ராஜாவோடு சேர்ந்தானே? அது எவ்வளவு பெரிய துரோகம்! என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தில் மட்டும் அப்பா அம்மா தலையிடுவது ரொம்பப் பிசகு என்று சொல்வேன். பெண்ணாயிருந்தாலும் சரி, பிள்ளையாயிருந்தாலும் சரி, அவர்களுக்குப் பிடித்திருப்பவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்கு அப்பா அம்மா குறுக்கே நிற்கக் கூடாது. அப்படிக் குறுக்கே நிற்பவர்களைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விடவேண்டும்!"

இந்த வார்த்தைகள் காமாட்சி அம்மாளுக்கு ஒரு பழைய ஞாபகத்தை உண்டாக்கின. அவளுடைய முகம் சுருங்கியது; இதைப் பார்த்த சீதா, "அம்மா! உங்களுக்கு தலை வலிக்கிறதா, என்ன?" என்று கேட்டாள். "இல்லை!" என்று சொன்னாள் காமாட்சி அம்மாள். பிறகு, "நீ சொல்கிறது அவ்வளவு சரியில்லை, சீதா! தாயார் தகப்பனார் சொல்கிறது எப்போதும் தப்பாயிராது! குழந்தைகளின் நன்மைக்காகத்தான் சொல்லுவார்கள். குழந்தைகள் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தானே தாயார் தகப்பனாருக்கு இருக்கும்? எல்லாரும் ஜயச்சந்திரனைப்போல் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் சௌக்கியமாயிருக்க வேண்டும் என்றுதான் பெற்றவர்கள் யோசனை செய்து சொல்வார்கள்!" என்றாள். "வாஸ்தவந்தான், அம்மா! எல்லாரும் ஜயச்சந்திரனைப் போல் இருப்பார்களா? இப்போது என்னுடைய கலியாணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் இஷ்டம் போல் நீங்கள் விட்டதனால்தானே நடந்தது? இல்லாவிட்டால் நடந்திருக்குமா!" என்றாள் சீதா. மறுபடியும் காமாட்சி அம்மாளின் மனத்தில் சுருக்கென்று தைத்தது எனவே அவள் பேச்சை மாற்ற விரும்பினாள். "சூரியாவுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே, சீதா! ஏன் ஆகவில்லை என்று உனக்கு ஏதாவது தெரியுமா? குற்றங்குறை ஏதேனும் உண்டோ ?" என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை; சூரியாவுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? இருபது அல்லது இருபத்தொன்று தானிருக்கும். ஆனால் அவனிடம் கலியாணத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தவர்களிடம், 'நான் கலியாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை' என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்."

"பசங்கள் எல்லாருமே கொஞ்ச காலம் அப்படித்தான் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். கிட்டிமுட்டி வரும்போது சரி என்று சொல்லிவிடுவார்கள். சூரியா எது வரையில் படித்திருக்கிறான்?" "பி.ஏ. படித்துக்கொண்டிருந்தான்; இப்போது படிப்பை விட்டுவிட்டான்." "ஏன் விட்டுவிட்டான்? படிப்பு வரவில்லையா? சூரியாவைப் பார்த்தால் கொஞ்சம் அசடுப்போலத்தான் தோன்றுகிறது." "பார்ப்பதற்கு சூரியா அப்படித்தான் இருப்பான், ஆனால், உண்மையிலே ரொம்பக் கெட்டிக்காரன். என் கல்யாணம் நடந்ததே அவனால்தான் என்று சொல்லவேண்டும். உங்கள் பிள்ளை 'லலிதாவைப் பிடிக்கவில்லை; சீதாவைத்தான் பிடித்திருக்கிறது' என்று சொன்னதும் என் மாமாவும் மாமியும் மிக்க கோபம் அடைந்துவிட்டார்கள். அவர்களைச் சூரியாதான் சமாதானப்படுத்தினான்." "உன் மாமாவும் மாமியும் கோபித்துக்கொண்டால் கலியாணம் நின்று போய் விடுமா? கடவுள் யாருக்கு யார் என்று முடிபோட் டிருக்கிறாரோ அந்த மாதிரிதான் நடக்கும். அது இருக்கட்டும், சீதா! சூரியா ஏன் படிப்பை விட்டுவிட்டான்?"

"அவனுக்கு என்னவோ இங்கிலீஷ் படிப்புப் பிடிக்கவில்லையாம்! பி.ஏ. பாஸ் செய்துவிட்டால் அப்பாவும் அம்மாவும் ஏதாவது உத்தியோகம் பார்க்கும்படி வற்புறுத்துவார்களாம். யாராவது பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்து அவனைத் தொந்தரவு செய்வார்களாம்...." "பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்தால் அது ஒரு தொந்தரவா? நான் கூட என் தம்பி பெண்ணுக்குப் பார்க்கச் சொல்லலாம் என்றுதான் இவ்வளவு தூரம் சூரியாவைப்பற்றிக் கேட்கிறேன். உத்தியோகம் பார்க்காமல் அவன் வேறு என்ன செய்யப் போகிறானாம்." "இந்தப் பக்கத்தில் எங்கேயோ காங்கிரஸ் நடக்கிறதாம்; அதற்காக வருகிறானாம். ஆனால் திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை யாம். டில்லியிலேயே தங்கியிருந்து பத்திரிகைகளுக்கு எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானாம்." "ஓகோ! பத்திரிகைக்கு எழுதுவானா என்ன? அவ்வளவு கெட்டிக்காரனா? அப்படியென்றால் தேவலையே? சீதா! ராகவன் பத்திரிகைக்கு எழுதியதால்தான் அவனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?" "உங்கள் பிள்ளையையும் இவனையும் ஒன்றாகச் சொல்லாதேயுங்கள். அவரைப்போல் இவனுக்குப் படிப்பு உண்டா? அவ்வளவு சாமர்த்தியந்தான் உண்டா? ஏதாவது காமாசோமா என்று தமிழ்ப் பத்திரிகைக்கு எழுதுவான்."

இந்தச் சமயத்தில் ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு கொஞ்சம் மெதுவாயிற்று. தூரத்தில் அநேக ஜனங்கள் ஏக காலத்தில் இரைச்சல் போடும் சத்தம் கேட்டது. சீதா ரயிலுக்கு வெளியில் எட்டிப் பார்த்தாள். "அம்மா! அம்மா! டில்லி ஸ்டேஷன் அதோ தெரிகிறது உங்கள் பிள்ளை ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்." "வந்திருக்கிறானோ அல்லது ஆபீஸில் அதிக வேலை என்று வேறு யாரையாவது அனுப்பி வைக்கிறானோ?" "அதெல்லாம் இல்லை; அவர் கட்டாயம் ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்" என்றாள் சீதா. இந்தச் சம்பாஷணையின் ஆரம்பத்திலேயே வஸந்தி தூங்கிப் போய்விட்டாள். குழந்தையைச் சீதா தட்டி எழுப்பி, "வஸந்தி வஸந்தி! டில்லி வந்துவிட்டது. அப்பா பிளாட்பாரத்தில் வந்திருப்பார், எழுந்திரு எழுந்திரு" என்றாள். காது செவிடுபடும்படியான பலவகை இயந்திரச் சத்தங்களுக்கும் மனிதரின் கூக்குரலுக்கும் மத்தியில் கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் டில்லி ஸ்டேஷனுக்குள் பிரவேசித்தது.