அலை ஓசை/புயல்/துயரத்தின் வித்து
கலியாணம் நடந்த உடனேயே சௌந்தரராகவன் சீதாவைத் தன்னுடன் புதுடில்லிக்கு அழைத்துப் போனான். இங்கிலீஷ் ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாக அவர்கள் தங்கினார்கள். ஒரு மாத காலம் கந்தர்வலோகத்தில் சஞ்சாரம் செய்து காண்டிருந்தார்கள். புதுடில்லியின் அழகான சாலைகளிலும் சதுக்கங்களிலும் பழைய டில்லியின் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகள், மசூதிகளிலும் அவர்கள் கைகோத்துக் கொண்டு உலாவி வந்தார்கள். இம்மாதிரி சில வருஷங்களுக்கு முன்னால் இன்னொரு பெண்ணுடன் கைகோத்துக்கொண்டு இதே இடங்களில் உலாவியது பற்றி ராகவனுக்கு அவ்வப்போது நினைவு வருவதுண்டு. ஆனால் அந்த நினைவை அலட்சியமாக உதறி எறிந்து விட்டுப் பக்கத்தில் நின்ற தன் தர்மபத்தினி சீதாவின் கரத்தை ராகவன் கெட்டியாகப் பிடித்துக்கொள்வான். பிறகு ராகவன் இங்கிலாந்துக்கு அவசரமாகப் புறப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பேரில் சீதாவைச் சென்னைக்கு அழைத்து வந்து தன் பெற்றோர்களிடம் விட்டான். தானும் சில நாள் தங்கியிருந்து, சீதாவுக்கு ஆயிரம் விதமாகத் தேறுதல் கூறினான். அச்சமயம் சீமைக்குப் போவதால் தன்னுடைய உத்தியோக வாழ்க்கைக்கு ரொம்ப அனுகூலம் ஏற்படும் என்றும், அப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பம் மறுபடி கிடைப்பது அரிது என்றும், அதை நழுவவிடுதல் மிக்க அறிவீனமாகும் என்றும் எடுத்துச் சொன்னான்.
மனதாரத் தெரிந்தெடுத்து ஆசையுடன் மணந்து கொண்ட மனைவியை அவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வதில் தனக்கு மட்டும் வருத்தமில்லையா என்று கேட்டான். வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்றத்திற்கு அவள் குறுக்கே நிற்கலாமா என்றான். அடுத்த தடவை தான் வெளிநாட்டுக்குப் பிரயாணமாகும்போது அவளையும் அவசியம் அழைத்துப் போவதாக உறுதிமொழி கூறினான். சீதாவுக்கு ஒரு பக்கத்தில் தன்னுடைய இதய நாயகனை இவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்கிறதே என்று துக்கம் துக்கமாய் வந்தது. இன்னொரு பக்கத்தில் ராகவன் சீமைக்குப் போவது பற்றிப் பெருமையாகவும் இருந்தது. அழுது கொண்டே சிரித்தாள், சிரித்துக் கொண்டே அழுதாள். ஒரு நிமிஷம் 'போகவேகூடாது' என்று பிடிவாதம் பிடித்தாள். அடுத்த நிமிஷம், "கட்டாயம் போக வேண்டும்" என்று வற்புறுத்தினாள். கடைசியாக விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் திரும்பி வருவதற்கு பதினைந்து மாதத்துக்கு மேலாயிற்று. அதற்குள் சீதாவின் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகள் நேர்ந்தன. அவளுடைய அருமைத் தாயார் பம்பாய் ராஜம்மாள் தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தோம் என்ற மனத்திருப்தியுடன் இந்த மண்ணுலகை நீத்துச் சென்றாள். தன்னுடைய புருஷர் துரைசாமி அய்யரின் மடியின் மீது தலையை வைத்துக்கொண்டு கடைசி மூச்சை விடும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்தது. அதோடு அவள் பெரிதும் ஆசை வைத்திருந்த அகண்ட காவேரிக் கரையில் அவளுடைய உடல் தகனமாகும் பேறும் கிடைத்தது.
தாயார் இறந்து பல தினங்கள் வரையில் சீதா கண்ணீரும் கம்பலையுமாயிருந்தாள். மாமியார் எத்தனை ஆறுதல் சொல்லியும் அவளுடைய துக்கம் தீரவில்லை. மாமனார் பகவத் கீதையிலிருந்து எவ்வளவு சுலோகங்கள் சொல்லி வியாக்யானம் செய்து காட்டியும் அவளுடைய மனம் நிம்மதியடையவில்லை. இப்பேர்ப்பட்ட துக்கம் தனக்கு நேர்ந்த சமயத்தில் தன் அருமைக் கணவர் பக்கத்தில் இல்லாமற் போனது அவளுடைய துயரத்தை அதிகமாக்கியது. உண்மையான அன்பு, சினேகம் இவற்றின் பெருமை அதுதான் அல்லவா? அன்புடையவர்களிடமும் சிநேகிதர் களிடமும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் துக்கம் குறைந்து சீக்கிரத்திலேயே மனச்சாந்தி ஏற்படுகிறது. அன்புள்ளோரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டால் அந்தச் சந்தோஷம் பொங்கிப் பெருகுகிறது. சீதாவுக்கு நேர்ந்த பெருந்துக்கத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ளச் சௌந்தரராகவன் அருகில் இல்லை.இதனால் அவளுடைய துக்கம் வெகு காலம் நீடித்திருந்தது.சீதாவின் வாழ்க்கையில் இன்னொரு முக்கிய சம்பவம் - சந்தோஷமான சம்பவம் - நேர்ந்த பிற்பாடுதான், அந்தத் துக்கம் மறைந்தது.
சீதா தன் உயிருக்கே நேர்ந்த அபாயத்திலிருந்து கடவுள் அருளால் பிழைத்து எழுந்து தான் பெற்ற செல்வக் கண்மணியைப் பார்த்த பிறகு மற்றதெல்லாம் அவளுக்கு மறந்தே போய்விட்டது. தாயாரை நினைத்துக்கொண்டு துக்கப்படுவதற்கு இனிமேல் அவளுக்கு நேரம் ஏது? அதோடு கூடக் காமாட்சி அம்மாளும் மற்றும் அக்கம் பக்கத்து மூதாட்டிகளும், "உன் அம்மாவே உன் வயிற்றில் பெண்ணாய் வந்து பிறந்து விட்டாள்!" என்று அடிக்கடி சொன்னதனால் சீதாவுக்கு அத்தகைய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தன் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதில் உண்டான ஆனந்தத்தில் தன்னைப் பெற்ற தாயின் முகத்தை மறந்தாள். சீமைக்குப் போயிருக்கும் கணவன் திரும்பி வந்ததும் குழந்தையை அவரிடம் காட்டி ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்யும் நேரத்தை எண்ணி எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தாள். சீமைக்குப் பயணமாகும்போது ராகவன் சீதாவைக் கான்வெண்ட் ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லிப் பெற்றோர்களிடமும் ஏற்பாடு செய்துவிட்டுப் போனான். அதன்படி சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகவில்லை என்று அறிந்ததும் அவன் மிக்க கோபம் கொண்டு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்துக்குப் பதிலாக அவனுடைய தகப்பனார், "உன்னுடைய சீமந்தக் கலியாணத்துக்கு அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறது; உடனே புறப்பட்டு வந்து சேரவும்" என்று எழுதினார்.
சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாத காரணம் இப்போது ராகவனுக்குப் புலனாயிற்று. அதனால் அவன் சந்தோஷமடைந் தானா, அதிருப்தி கொண்டானா என்று சொல்ல முடியாது. பதில் கடிதத்தில் பரிகாசமாக, சீமந்தக் கலியாணத்தை ஆறு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளவும்; தள்ளி வைக்க முடியாவிட்டால் பர்த்தி வைத்து நடத்தி விடவும்!" என்று எழுதியிருந்தான். சீதாவுக்கு இந்தக் கடிதம் அளவில்லாத கோபத்தை அளித்தது. ராகவனுடைய கடிதங்களை விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தைப் போல் போற்றிப் பத்திரப்படுத்தும் வழக்கமுடைய சீதா மேற்படி கடிதத்தைச் சுக்கலாகக் கிழித்தெறிந்தாள். ராகவன் அவ்வாறு பரிகாசமாகப் பதில் எழுதியது பற்றி மாமியாரிடம் புகாரும் சொன்னாள். மாமியாரும் மருமகளும் வெகு ஒற்றுமையாகவும் அன்யோன்னியமாகவும் இருந்து வந்தார்கள். "மருமகள் மெச்சிய மாமியார் இல்லை" என்னும் பழமொழி அவர்கள் விஷயத்தில் பொய்யாயிற்று. "அம்மா! உங்களிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாதென்று என் 'ஓர்ப்படி' பிறந்த வீட்டோ டு போய் விட்டாளாமே? அவள் எவ்வளவு பெரிய ராட்சஸியா இருக்க வேண்டும்?" என்றாள். அக்கம் பக்கத்து வீடுகளில் தன் மாமியார் தன்னை அன்புடன் நடத்துவது பற்றிப் பெருமையுடன் சொல்லிக் கொண்டாள். காமாட்சியம்மாளின் மனோரதம் நிறைவேறி விட்டது. அந்த அம்மாள் பத்மாபுரத்தின் வீதிகளில் கம்பீரமாகப் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள்.
சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்தான். வஸந்தியைப் பார்த்து அகமகிழ்ந்து முகமலர்ந்தான். சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாததினால் ஏற்பட்ட கோபத்தையும் மறந்தான். புதுடில்லியில் ஜாகை கிடைத்ததும் கடிதம் எழுதி அவர்களைத் தருவித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் போனான். நல்ல ஜாகை கிடைப்பதற்கு இத்தனை காலம் ஆகிவிட்டது. சீதா புதுடில்லிக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று; அந்த ஏழு நாளும் புது ஜாகை போடும் ஏற்பாடுகளில் எல்லாரும் முனைந் திருந்தார்கள். இந்த நாற்காலியை எடுத்து அந்த அறையில் போடுவது, அந்த அலமாரியைத் தூக்கி இந்த அறைக்குக் கொண்டு வருவது, கட்டில்களை மாற்றி மாற்றிப் போடுவது, சமையல் வேலைகளுக்கு ஏற்பாடு செய்வது, அம்மிக் குழவியும் கல்லுரலும் சம்பாதிப்பது, கிராமபோனும் ரேடியோவும் வைப்பது ஆகிய காரியங்களில் சதா ஈடுபட்டிருந்தார்கள். சாயங்காலம் வந்ததும் சீதா முன்போல அதாவது கலியாணம் ஆனவுடனே வந்திருந்த நாட்களைப்போல் ராகவனுடன் வெளியில் உலாவச் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுவாள். காரியம் அதிகமாக இருந்தபடியால் அந்த ஆசையை அடக்கிக் கொள்வாள்.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் காலை ராகவனைப் பார்த்து, "இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள். வெளியில் எங்கேயாவது அழைத்துப் போங்கள்!" என்றாள் சீதா. "நான் அழைத்துப் போவது என்ன? உனக்கு இஷ்டமான போது இஷ்டமான இடத்துக்குப் போய் வருவதுதானே!" என்றான் ராகவன். "அழகாயிருக்கிறது; நான் மட்டும் தனியாகப் போவதாக்கும்?" "போனால் என்ன? உன்னை யாராவது வழிப்பறி செய்து கொண்டு போய் விடுவார்களா? இங்கே இன்னும் பிரிட்டிஷ் ராஜ்யம் நடக்கிறது; காங்கிரஸ் ராஜ்யம் பூராவும் வந்து விடவில்லை!" என்றான் ராகவன். "என்னை ஒருவரும் கொண்டுபோய் விடமாட்டார்கள்; வாஸ்தவந்தான். ஆனாலும் தனியாகத்தான் போக வேண்டும் என்றால், நான் போகவே மாட்டேன்." "தனியாகப் போக வேண்டாம்; உன் மாமியாரையும் கூட அழைத்துக் கொண்டு போயேன்?" "மாமியாரை நான் கூட அழைத்துக் கொண்டு போவதற்கு உங்களுடைய அனுமதி வேண்டுமாக்கும்!" என்று சீதா பொய்க் கோபம் வருவித்துக் கொண்டு சொன்னாள். "சரி; சரி! கோபித்துக்கொள்ளாதே! இன்று சாயங்காலம் சீக்கிரம் வந்து உன்னை 'வாக்கிங்'க்கு அழைத்துப் போகிறேன்," என்று சொல்லிவிட்டு ராகவன் சென்றான். அவ்விதமே அன்று மாலை சீக்கிரமாக ராகவன் திரும்பி வந்தான். சீதாவைப் பார்த்து "மோட்டாரில் 'வாக்கிங்' போகலாமா? அல்லது கால்நடையாகப் போகலாமா?" என்று கேட்டான்.
வழக்கப்படி சீதா ராகவனுடைய ஹாஸ்யத்துக்காகச் சிரித்துவிட்டு, "மோட்டாரில் 'வாக்கிங்' எப்படிப் போவது? நடந்தே போகலாம்!" என்றாள். காமாட்சியம்மாள் தான் 'வாக்கிங்' வரவில்லையென்றும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாள்; சீதா விரும்பியதும் இதுதான். ஆகையால் ராகவனுடன் உல்லாசமாக கிளம்பினாள். இருவரும் கன்னாட் சர்க்கிளுக்கு வந்து ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு 'இந்தியா கேட்'டை நோக்கிச் சென்றார்கள். இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் உள்ள செயற்கை நீர் ஓடைகளில் ஒன்றுக்கு அருகில் பச்சைப் பசும்புல் தரையில் உட்கார்ந்தார்கள். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்து வரும் சமயம். நானா திசைகளிலும் வரிசை வரிசையாக வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு இந்தியத் தலைநகரின் மின்சார தீபங்கள் பிரகாசித்தன. "கந்தர்வலோகம் என்று சொல்கிறார்களே! அந்த கந்தர்வலோகம் இதைவிடவா அழகாயிருக்கும்?" என்றாள் சீதா. "நான் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; அதனால் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை" என்றான் ராகவன். சீதா சிரித்துக்கொண்டே நானும் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; ஆனால் கந்தர்வலோகத்தைப் பற்றிப் பாரதியார் 'ஞான ரதம்' என்ற புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்திருக்கிறேன். புதுடில்லியைவிடக் கந்தர்வலோகம் அவ்வளவு ஒன்றும் ஒசத்தியில்லையென்று எனக்குத் தோன்றுகிறது!" என்றாள். "நான் 'ஞான ரத'த்தில் ஏறினதில்லை; அதனால் அபிப்பிராயம் சொல்ல முடியாது" என்றான் ராகவன்.
ஞான ரதம் வெறும் கற்பனை ரதம். ஆனால் நீங்கள் வான ரதத்தில் ஏறி ஆகாசத்தில் பறந்திருக்கிறீர்கள். ஞான ரதத்தைப் போல் கந்தர்வலோகமும் கற்பனை லோகந்தான். நீங்களோ லண்டன், பாரிஸ் முதலிய உண்மை நகரங்களுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள். ஏன்னா? புதுடில்லியைவிட லண்டனும் பாரிஸும் அழகுதானே?" என்று சீதா கேட்டாள். "ஏன்னா என்று இனிமேல் என்னை அழைப்பதில்லை என்று நீ சபதம் செய்தால் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்" என்றான் ராகவன். "ஆகட்டும்; இனிமேல் 'ஏன்னா' என்கவில்லை; 'ஏன் ஸார்?' என்கிறேன். லண்டன் அழகா, டில்லி அழகா? ஏன் ஸார்?" என்றாள் சீதா. "லண்டன் ஒரு விதத்தில் அழகு; டில்லி இன்னொரு விதத்தில் அழகு" என்றான் ராகவன். சீதாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகவனுடைய கண்கள் அங்குமிங்கும் சுழன்று பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சமயம் சாலையோடு இரண்டு பெண்கள் நடந்து போனார்கள். சாய்ந்து படுத்திருந்த ராகவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவர்களை உற்றுப் பார்த்தான்; மறுபடியும் புல் தரையில் சாய்ந்து கொண்டான். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. "ஏன் ஸார்! அன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒருத்தியைப் பார்த்துப் பேசினீர்களே? அவள் யார்? என்று சீதா கேட்டாள். "அவள் யாராயிருந்தால் உனக்கென்ன?" என்று ராகவன் கேட்ட குரலில் கடுமை தொனித்தது.
"யார் என்று சொன்னால் என்ன!" "சொல்ல முடியாது." "ஏன் சொல்ல முடியாது?" "எனக்கு இந்த ஊரில் எத்தனையோ பேரைத் தெரியும். அவர்களையெல்லாம் யார் யார் என்று உனக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?" "உங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் எனக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே?" "உனக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் தெரிந்தால் போதும். ஊரில் உள்ளவர்களை எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை." பொங்கி வந்த கோபத்தைச் சீதா அடக்கிக் கொண்டாள். சற்று நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். "ஏன் ஸார்? அவள் யார் என்று சொல்லமாட்டீர்களா!" மௌனம். "நம்ம பக்கத்து மனுஷியா? இந்த ஊர்க்காரியா?" மௌனம். "என்னோடு ஏன் பேசப் போகிறீர்கள்? இதற்குத்தான் 'வாக்கிங்' அழைத்து வந்தீர்களாக்கும்?" என்று கூறிய சீதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. இதற்குத்தான் அழைத்துவர மாட்டேன் என்று சொன்னேன். பெண்களின் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டாயல்லவா? சனியன்!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் பசும்புல் தரையிலிருந்து எழுந்தான். "நான் ஒன்றும் சனியன் இல்லை" என்று சீதா கூறி இன்னும் முணுமுணுத்தாள். சீதாவின் குற்றமற்ற இளம் உள்ளத்தில் துன்பத்தின் வித்து விதைத்தாகிவிட்டது. அது முளைத்து வளர்ந்து மரமாகி என்னென்ன பலன்களைத் தரப் போகிறதோ, யார் கண்டது?