அலை ஓசை/புயல்/பிரயாணக் காரணம்

விக்கிமூலம் இலிருந்து

அவர்கள் தனிமையை அடைந்ததும், "சீதா! குற்றவாளி பிடிபட்டான் என்கிற செய்தியைக் கேட்டாயல்லவா!" என்றாள் தாரிணி.

"ஆம், அக்கா! ஆச்சரியமாயிருக்கிறதே! நான் கூடத் தெரியாத்தனமாய் ரஸியாபேகத்தைப்பற்றிப் பேச்சு எடுத்து விட்டேன். நல்ல சமயத்தில் நீங்கள் தடுத்தீர்கள்!" என்றாள் சீதா.

"சகோதரி! அந்த ஒரு விஷயம் நம் இருவருக்கு மட்டும் தெரிந்த இரகசியமாய் இருக்கட்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் உன் புருஷரிடம் கூடச் சொல்லாதே! அவர் பதட்ட சுபாவமுள்ளவர் என்பதை இதற்குள் தெரிந்து கொண்டிருப்பாய். விஷயத்தைச் சொன்னால், 'ஏன் உடனே சொல்லவில்லை?' என்று உன் பேரிலேயே திரும்பிக் கொண்டாலும் திரும்பிக் கொள்வார்."

"அது வாஸ்தவந்தான், நான் இனிமேல் சர்வ ஜாக்கிரதையாயிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது. அக்கா! போலீஸ்காரர்கள் சொன்ன விஷயம் உண்மையாயிருக்குமா?"

"நமக்கென்ன தெரியும், சீதா; அது உண்மையாகவே இருக்கலாம். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்ததுபோல் ரஸியாபேகத்தைச் சந்தேகித்தது பிசகாயிருக்கலாம். அவளோ உன்னிடம் ஒன்றும் விவரமாகச் சொல்லவில்லை. எவ்வளவு தேடியும் நானும் அவளைச் சந்திக்க முடியவில்லை. அன்றிரவு நடந்த சம்பவத்தை நாம் இருவரும் மறந்து விடுவதுதான் நல்லது."

"அன்றிரவு நான் அநாவசியமாக அடைந்த பீதியையும் கலக்கத்தையும் நினைத்தால் இப்போது வேடிக்கையாயிருக்கிறது, அது போனால் போகட்டும். நீங்கள் எங்கேயோ லாகூருக்குப் போகிறேன் என்கிறீர்களே? அதை நினைத்தால் தான் எனக்குக் கவலையாயிருக்கிறது. நீங்களும் சூரியாவும் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருந்தால் எனக்கு உற்சாகமாயிருக்கும். நீங்கள் வந்தால் இவர் கூட உற்சாகமாயிருக்கிறார்..."

"சீதா! நான் இங்கே அடிக்கடி வருகிறதென்பது இனிமேல் இயலாத காரியம். உன் மாமியாருக்கு நான் வருவது விருப்பமாயிராது.."

"என் மாமியாரைப்பற்றித் தவறாக எண்ணுகிறீர்கள், அவர் ரொம்ப நல்லவர். ஒரு தடவை பழகிவிட்டால் தெரிந்து கொள்வீர்கள். பாமாவையும் தாமாவையும் போலிருந்தால் ஒருவேளை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. உங்களை நிச்சயமாக அவருக்குப் பிடித்துவிடும்."

"அப்படியானால் இப்போதே அவரை நான் பார்த்து விடுகிறேன்! பிறகு எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னமோ? உன் மாமியாரின் வாக்கை நீ தட்ட வேண்டாம். டிராயிங் அறைக்கு நீ போய் எல்லாருடனும் பேசிக் கொண்டிரு. நானே தற்செயலாகப் பார்த்ததுபோல் பார்த்துப் பேசிக்கொள்கிறேன்."

"அதுதான் சரி; நீங்கள் என் மாமியாரை ஐந்து நிமிஷத்தில் மயக்கி விடுவீர்கள்!" என்று சொல்லிவிட்டு சீதா சென்றாள்.

பூஜை அறையில் காமாட்சி அம்மாள் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்திருந்தார். "அம்மா! என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று சொல்லிக் கொண்டே தாரிணி அவளுக்கு நமஸ்காரம் செய்தாள்.

காமாட்சி அம்மாள் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தாள். தாரிணி என்று தெரிந்து கொண்டதும், "பெண்ணே? நீ நன்றாயிருக்க வேண்டும். இந்த ஊரிலே தான் இருக்கிறாயா?" என்று கேட்டாள்.

"இந்த ஊரில் கொஞ்ச நாளாக இருந்தேன் சீக்கிரத்தில் இந்த ஊரை விட்டுப் போகப் போகிறேன்".

"அப்படியா?" என்று காமாட்சி அம்மாள் கூறிய குரலில், 'நல்லவேளை!' என்பதும் தொனித்தது.

"அம்மா! உங்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றினேன் அல்லவா? இனிமேலும் நிறைவேற்றுவேன்! நீங்கள் கவலைப்பட வேண்டாம்!"


"எனக்கு ஒரு கவலையும் இல்லையடி அம்மா! எப்படியாவது எல்லாரும் நன்றாயிருக்கவேணும், அவ்வளவுதான்! தினம் தினம் சதா சர்வ காலமும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் இதைத் தான் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்; என்னுடைய மூத்த பிள்ளை எனக்கு உதவாதவனாகப் போய் விட்டான். ராகவனை நம்பித் தான் நான் இந்த உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு உன்னாலே ஒரு கெடுதலும் வரக்கூடாது. அவ்வளவு தான்."

"ஒரு நாளும் வராது அம்மா! உங்கள் குடும்பத்துக்கே என்னால் ஒரு கெடுதலும் வராது. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன!" என்றாள் தாரிணி.

இரண்டு தினங்களுக்குப் பிறகு சௌந்தரராகவன் தாரிணியின் அறைக்குச் சென்றான். அங்கே அச்சமயம் சூரியாவும் இருந்தான். இருவரும் பிரயாணம் கிளம்புவதற்குத் தயார் செய்து கொண்டிருந்ததை ராகவன் கவனித்தான்.

"அப்படியானால் உங்களுடைய லாகூர்ப் பிரயாணம் நிச்சயந்தான் போலிருக்கிறது" என்றான்.

"ஆமாம், இன்று இரவு வண்டியில் புறப்படுகிறோம்" என்று தாரிணி சொன்னாள்.

ராகவன் சூரியாவைப் பார்த்து, "இதோ பார், சூரியா! நீ லாகூருக்குப் போ, அல்லது ராவல்பிண்டிக்கு வேணுமானாலும் போ! அதற்கும் அப்பால் காபூலுக்குப் போனாலும் சரிதான். மத்திய ஆசியாவின் பாலைவனங்களுக்குப் போவது இன்னும் பொருத்தமாயிருக்கும். சோஷலிஸம், கம்யூனிஸம் முதலிய கானல் நீரைத் தேடுவதற்குப் பாலைவனங்கள்தானே ஏற்ற இடம்? ஆனால் தாரிணியை உன்னுடன் அழைத்துக்கொண்டு போகாதே! அதனால் உனக்கும் நன்மையில்லை! அவளுக்கும் நன்மையில்லை!" என்றான்.

சூரியா மலர்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "மாப்பிள்ளை, ஸார்! கடைசியில் சொன்னீர்களே - அதிலே தான் தவறு செய்கிறீர்கள். தாரிணி தேவியை நான் அழைத்துப் போகவில்லை. அவர்தான் என்னை வற்புறுத்தி அழைத்துப் போகிறார்!" என்று சொன்னான்.

"தாரிணி! இது சரிதானா?" என்று ராகவன் கேட்டான்.

"ஆம்; நான் சரித்திர ஆராய்ச்சி செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அதற்காகப் பஞ்சாபுக்கும் போக வேண்டியிருக்கிறது..."

"போதும், போதும்! உன்னுடைய சரித்திர ஆராய்ச்சியையெல்லாம் நீயே வைத்துக்கொள். பாரத நாட்டில் இந்து தர்மத்தின் தூய்மையைப் பெண்கள் தான் பாதுகாத்து வந்தார்கள். அதற்கும் ஆபத்து வந்துவிட்டது! போகட்டும். அதைப்பற்றி விவாதிக்க இப்போது அவகாசம் இல்லை. தாரிணி! உன்னிடம் நான் தனிமையில் சில வார்த்தைகள் பேச வேண்டும்" என்றான் ராகவன்.

அவனுடைய முகத்தில் ஏற்பட்டிருந்த கிளர்ச்சியையும் பரபரப்பையும் பார்த்த தாரிணி, "உங்களுடைய கொள்கையின்படி ஸ்திரீகளிடம் புருஷர்கள் தனிமையில் பேசலாமா? அது தர்மத்துக்கு விரோதமில்லையா?" என்று கேட்டாள்.

ஒரு கணம் ராகவன் திகைத்திருந்துவிட்டு, "உனக்குத்தான் அதில் ஆட்சேபம் இல்லையே? அதனால் எனக்கும் ஆட்சேபம் இல்லை. இது விளையாட்டு இல்லை தாரிணி! ரொம்பவும் முக்கியமான விஷயம்" என்றான்.

இச்சமயம் சூரியா, "எனக்கும் புறப்படுவதற்கு முன்னால் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன. நான் போய் வருகிறேன் தாரிணிதேவி! பிரயாணத் திட்டத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால், உடனே சொல்லி அனுப்புங்கள்!" என்று கூறிவிட்டு வெளியேறினான்.

சூரியா போன பிறகு சற்று நேரம் அறையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது. ராகவனே பேச்சை ஆரம்பிப்பான் என்று எதிர்பார்த்த தாரிணி அது நடவாதென்று கண்டு, "தனிமையில் பேச வேண்டிய முக்கியமான விஷயம் என்ன?" என்றாள்.