அலை ஓசை/புயல்/மல்லிகை மாடம்

விக்கிமூலம் இலிருந்து

ரயில் வண்டி ஆக்ராவை நெருங்கிக் கொண்டிருந்த போது சூரியாவுக்கும் ராகவனுக்கும் விவகாரம் முற்றி அவர்களுடைய குரல் ரயிலின் சத்தத்தையும் மிஞ்சிக் கேட்டது. "காங்கிரஸை வரவர மிதவாதம் பற்றிக் கொண்டு வருகிறது. மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் ஏற்பட்டதினால் என்ன மாறுதலைக் கண்டோ ம்? ஒன்றுமில்லை! கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் முன்போலவே அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். போலீஸ் கெடுபிடியும் முன்போலவே தான் இருக்கிறது!" என்று சொன்னான் சூரியா. "அது மட்டுமா? ரயில் முன் போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. தபால்கள் முன் போலவே டெலிவரி ஆகிக்கொண்டிருக்கின்றன. மாஜிஸ்ட்ரேட்டுகள் முன் போலவே திருடர்களை தண்டித்து வருகிறார்கள் - இப்படியெல்லாம் புகார் செய்வாய் போலிருக்கிறதே! நல்ல சோஷலிஸ்ட் நீ பின்னே என்னதான் செய்யவேண்டும் என்கிறாய்? கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் போலீஸ்காரர்கள் உள்பட எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் சட்ட திட்டங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிறாயா? ஒழித்துவிட்டால் அரசாங்கம் எப்படி நடக்கும்! அரசாங்கமே வேண்டாம் என்கிறாயா?" என்றான் ராகவன்.

"அரசாங்கமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கம் என்றால், இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். அரசாங்கந்தான் என்பது உங்களுடைய எண்ணம். இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம்முடைய தேசத்தில் அரசாங்கமே கிடையாதா?" "ஏன் கிடையாது? பேஷாக உண்டு! இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம் தேசத்தில் அங்க, வங்க, கலிங்க, குக்குட, கர்நாடக, மராட்ட முதலிய ஐம்பத்தாறு ராஜாங்கங்கள் இருந்தன; ராஜாக்களும் இருந்தார்கள். சுல்தான்களும், பாதுஷாக்களும் கூட இருந்தார்கள், அவரவர்கள் இஷ்டமே சட்டமாக அரசாட்சி நடத்தினார்கள். அத்தகைய ராஜாக்களின் ஆட்சிக்கு நாம் திரும்பிப் போகவேண்டும் என்கிறாயா? நீதான் சுதேச சமஸ்தானங்களையே ஒழித்துவிட வேண்டும் என்கிறாயே!" "ஆம்; சுதேச ராஜ்யங்களையெல்லாம் ஒழித்துவிட வேண்டியதுதான். அந்தப் பழைய ஹைதர் காலத்து ஆட்சிக்கோ பேஷ்வா காலத்து ஆட்சிக்கோ போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பழைய ஆட்சி வேண்டாம் என்றால், புதிய ஆட்சி என்பது இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். ஆட்சிதானா? உலகத்தில் வேறு தேசங்கள் இல்லையா? அந்தந்த தேசங்களில் அரசாங்கம் நடக்கவில்லையா?

"நடக்கிறது, அப்பனே நடக்கிறது; ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. இத்தாலியில் முஸோலினி ஆட்சியும் நடக்கிறது. இங்கிலாந்திலிருந்து திரும்பும்போது ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் நான் போய்விட்டு வந்தேன். கல்விக்கும் நாகரிகத்துக்கும் பெயர் போன ஐரோப்பாவில் நடக்கும் அரசாங்க முறைகளைப் பார்த்தால் ஆங்கில ஆட்சி முறை எவ்வளவு மேலானது என்று உனக்குத் தெரியும். அங்கே எல்லாம் ஜனநாயகம் என்பது மருந்துக்கும் கிடையாது. சுதந்திரம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது..." "அதைப்பற்றி நமக்கென்ன கவலை? ஹிட்லரும் முசோலினியும் எவ்வளவு பொல்லாதவர்களாயிருந்த போதிலும் அவரவர்களுடைய நாட்டுக்குள்ளேதான் இருக்கிறார்கள்? இங்கிலீஷ்காரர்களைப் போல உலகத்தையே கட்டியாள அவர்கள் ஆசைப்படவில்லையே? பிற நாடுகளையெல்லாம் தங்களுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளாக்கவில்லையே..." "உனக்கு எப்படித் தெரியும்? அவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் சொரூபத்தைக் காட்டுவார்கள். இங்கிலீஷ்காரர்களை விட எவ்வளவோ பொல்லாதவர்களாயிருப்பார்கள். சீனாவில் ஜப்பான் செய்கிற அநியாயத்தைப் பார்!"

"இங்கிலீஷ்காரர்களுடைய கொட்டத்தை அடக்கக்கூடிய கீழ்நாடு ஜப்பான் ஒன்றுதான். சீனாவில் ஜப்பான் அக்கிரமம் செய்வதாகச் சொல்லுகிறதெல்லாம் இங்கிலீஷ்காரர்கள் செய்யும் பிரசாரந்தானே? உண்மை நமக்கு எப்படித் தெரியும்? என்னைக் கேட்டால் இங்கிலீஷ்காரர்களின் அரசாட்சியைக் காட்டிலும் வேறு எந்த அரசாட்சியும் மேல் என்று சொல்லுவேன். இங்கிலீஷ் ஆட்சி ஒரு தேசத்தின் ஆத்மாவையே அழித்துவிடுகிறது. தேச மக்களுக்குள் பிரிவையும் பிளவையும் உண்டாக்குகிறது..." "சூரியா! நன்றாகச் சொன்னாய்? நமது தேசத்தில் ஏற்கனவேயுள்ள பிளவுகளையும் பிரிவுகளையும் விடவா இங்கிலீஷ் ஆட்சியால் அதிகம் உண்டாகிவிட்டது?" "இங்கிலீஷ்காரர்கள் தலையிடாமலிருந்தால் நம்மிடையேயிருந்த பிளவுகளும் பிரிவுகளும் இதற்குள் தீர்ந்து போயிருக்கும்!" "சரித்திரத்தையே பொய் என்று நீ சாதிக்கப் பார்க்கிறாய்! உன்னோடு எப்படி விவாதம் செய்வது?" என்று அலுத்துக் கொண்டான் ராகவன். இந்தச் சமயத்தில், "போதும் உங்கள் பேச்சு! சண்டையை நிறுத்துங்கள்; ஆக்ரா ஸ்டேஷன் வந்துவிட்டது!" என்றாள் சீதா.

"நேபிள்ஸ் நகரத்தைப் பார்த்துவிட்டுச் செத்துப் போகவும்!" என்று மேனாட்டில் ஒரு வசனம் வழங்குகிறது."ஆக்ராவைப் பார்க்கும் வரையில் உயிரோடிருக்கவும்!" என்று இந்தியாவில் பிறந்தவர்களுக்கு நாம் சொல்லுகிறோம். இந்திய தேசத்தின் மத்திய கால மகோந்நதத்தையும் கலை வளத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர் ஆக்ரா நகரைப் பார்க்கவேண்டும். மனிதனுடைய உள்ளமானது கற்பனை செய்யக்கூடிய இன்பமயமான சொர்க்க பூமியும் கந்தர்வ லோகமும் எப்படியிருக்குமென்று தெரிந்து கொள்ள விரும்புவோர் ஆக்ராவை அவசியம் பார்க்கவேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரை டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றி, ஆக்ராவுக்கு உயர்வையளித்தார். அக்பரின் பேரன் ஷாஜஹான் சக்கரவர்த்தி, ஆக்ராவின் சொப்பனபுரியைப் போன்ற பற்பல பளிங்கு மாளிகைகளும் தாஜ்மகாலையும் கட்டி ஆக்ரா நகரை உலக சரித்திரத்தில் என்றும் நிலை பெறக்கூடிய அமரபுரியாக்கினார். ஆக்ராவுக்கு போகிறவர்கள் சாதாரணமாக முதலில் அந்நகரின் பழைய கோட்டையிலுள்ள அரண்மனைகளைப் பார்க்கப் போவார். பார்த்து வியந்து, "இதைக் காட்டிலும் அதிகமான அற்புதம் என்ன இருக்கபோகிறது!" என்று எண்ணிக்கொண்டு தாஜ்மகாலைப் பார்க்கச் செல்வார்கள். தாஜ்மகாலைப் பார்த்ததும் அதிசயிக்கும் சக்தியையுங்கூட இழந்து பிரமித்து நிற்பார்கள்.

அந்த முறையைப் பின்பற்றி ராகவனும் சீதாவும் சூரியாவும் முதலில் ஆக்ரா கோட்டைக்குப் போனார்கள். கோட்டைச் சுவரின் உயரத்தையும், நேற்றுதான் கட்டியது போல் புத்தம் புதியதாக விளங்கிய அதன் தோற்றத்தையும் கண்டு வியந்தார்கள். கோட்டை வாசலின் கம்பீரமான அமைப்பைப் பார்த்து அதிசயித்தார்கள். பிறகு உள்ளே பிரவேசித்து திவானி ஆம் என்னும் பொது ஜனசபா மண்டபத்தை நோக்கிச் செல்கையில் பக்கத்தில் காணப்பட்ட ரோஜா மலர்த் தோட்டத்தைச் சீதா பார்த்தாள்; உடனே அந்தப் பக்கம் ஓடினாள். சில நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, "ஏன், ஸார்! அனார்க்கலி இங்கேதான் புஷ்பம் விற்றுக் கொண்டிருந்திருப்பாள்; சலீம் இங்கேதான் அவளைச் சந்தித்திருப்பான்; இல்லையா? இருவரும் எந்தச் சுரங்க வழியாக யமுனைக் கரைக்குப் போனார்களோ!" என்றாள். "அனார்க்கலியின் ஞாபகம் இன்னும் உன்னை விட வில்லையா?" என்று நகைத்தான் ராகவன். "அதெப்படி அனார்க்கலியை நான் மறக்க முடியும்? அனார்க்கலி புஷ்பம் விற்ற இடத்தைப் பார்ப்பதற்காகத்தானே நான் முக்கியமாக இங்கு வந்தேன்?" என்றாள் சீதா. "அனார்க்கலி என்றால் யார்!" என்று சூரியா கேட்டான். "அதுகூடத் தெரியாதா உனக்கு? அனார்க்கலி கதையை நீ வாசித்ததே இல்லையா?" என்றாள் சீதா. "வாசித்ததில்லை, அத்தங்கா! எனக்குக் கதையும் நாவலும் அவ்வளவாகப் பிடிக்காதே!" என்றான் சூரியா.

"நம்ம சூரியாவுக்கு நாவலும் கதைகளும் படிக்க நேரம் ஏது? காரல்மார்க்ஸைக் கட்டிக்கொண்டு அழுவதற்குத்தான் அவனுக்குப் பொழுது சரியாயிருக்குமே?" என்று எகத்தாளம் செய்தான் ராகவன். "அம்மாஞ்சு! நான் சொல்கிறேன், தெரிந்துகொள்! அனார்க்கலி என்றால் மாதுளை மொக்கு என்று அர்த்தம். இளவரசன் சலீம் அவளுக்குக் கொடுத்த பெயர் அது!..." "சலீம் என்பது யார்?" "அது கூடவா தெரியாது? ஜஹாங்கீர் சிம்மாசனம் ஏறுவதற்கு முன்னால் அவன் பெயர் சலீம்..." "சீதாவை என்னமோ என்று நினைக்காதே, சூரியா! மொகலாயர் சரித்திரத்தில் அவள் பெரிய எக்ஸ்பர்ட்! ஜதுநாத் சர்க்காருக்கும் வின்சென்ட் ஸ்மித்துக்கும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சீதாவினிடம் தான் அவர்கள் கேட்க வருவது வழக்கம்." "இவர் இப்படித்தான் பரிகாசம் பண்ணுவார், அம்மாஞ்சி! நான் சொல்கிறதைக் கேட்டுக் கொள். ஜஹாங்கீர் சிறுபிள்ளையா இருக்கும்போது அவனை வளர்த்த தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள், அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துவிட்டு சலீம் அவளுக்கு 'மாதுளை மொக்கு' என்று பெயரிட்டு அழைத்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்திருந்தான்..." இப்படிக் கதை சொல்லிக் கொண்டே அவர்கள் திவானிகாஸ் என்னும் அழகிய பளிங்குக்கல் சபா மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தின் அழகிய தூண்களையும் மேல் விதானத்தையும் விதவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் கண்டு அதிசயித்தார்கள்.

பிறகு அரண்மனையின் அந்தப்புரத்துக்குச் சென்றார்கள். அங்கே ஷாஜஹானின் புதல்விகள் ரோஷனாராவும் ஜஹானாராவும் வசித்த இடங்களைப் பார்த்தார்கள்; கண்ணாடி மகாலைப் பார்த்தார்கள். பிறகு அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் ஜலக்ரீடை செய்வதற்காக அமைந்த பளிங்குக்கல் குளங்களைப் பார்த்தார்கள். அந்த நாளில் ராணிகளின் தூபுரங்களோடும் சிலம்புகளோடும் போட்டி இட்டுக்கொண்டு சலசலவென்ற சத்தத்துடன் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருந்த பளிங்குக்கல் ஓடைகளைப் பார்த்தார்கள். "அடாடா? இந்த அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகளும் ராஜகுமாரிகளும் வசித்துக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந் திருக்கும்?" என்றாள் சீதா. "எப்படியிருந்திருக்கும்? இங்கே வசித்தவர்களுக்கு நரகமாக இருந்திருக்கும்; சிறைச்சாலையாக இருந் திருக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்குத் தான் வசிக்கும் கூண்டைப் பார்த்தால் என்ன தோன்றும்? தங்கத்தினால் செய்து ரத்தினங்கள் இழைத்த கூண்டாயிருந்தாலும், கிளிக்கு அதன் கூண்டு சிறைச்சாலை தானே?" என்றான் சூரியா. "பலே சூரியா! அத்தங்காளுக்குச் சரியான அம்மாஞ்சி நீதான்!" என்றான் ராகவன். "நீங்கள் இரண்டு பேருமாய்ச் சேர்ந்துகொண்டு எனக்கு அசட்டுப் பட்டம் கட்டப் பார்க்கிறீர்கள். இந்த மாதிரி சலவைக்கல் அரண்மனையைச் சிறைச்சாலை என்று சொன்னால் அது உண்மை யாகிவிடுமா? இந்த மாதிரி ஒரு சிறைச்சாலை கட்டி அதில் இருக்கச் சொன்னால் யார்தான் இருக்கமாட்டேன் என்பார்கள்? என்னை இருக்கும்படி சொன்னால் இருந்து விடுவேன்!" என்றாள் சீதா.

"சீதா! இந்த அரண்மனைகளைப் பார்த்து அவ்வளவு மயங்கிவிடாதே! இவற்றைக் கட்டிய பாதுஷாக்களும் ராஜாக்களும் இருந்த காலத்தில் இந்த நாட்டில் எந்த ஸ்திரீயும் பத்திரமாயிருக்க முடியவில்லை. அரசனுடைய கண்பார்வைக்கு எந்தப் பெண்ணாவது ஆளாகிவிட்டால், ஒன்று அவள் உயிரை இழக்க வேண்டும்; அல்லது கற்பை இழக்க வேண்டும் என்ற நிலைமையாயிருந்தது. ஏதோ கடவுள் அருளால் இங்கிலீஷ் அரசாங்கம் இந்திய தேசத்திற்கு வந்தது" என்றான் ராகவன். "அதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். இங்கிலீஷ் ஆட்சி வந்ததினால் என்ன ஆகிவிட்டது? இன்றைக்கும் இங்கிலீஷ் மேலதிகாரத்திற்கு உட்பட்ட சுதேச சமஸ்தானங்களில் மகாராஜாக்கள் என்னவெல்லாம் அக்கிரமம் பண்ணுகிறார்கள்." "உங்கள் சண்டையை மறுபடியும் ஆரம்பித்துவிடாதீர்கள். நீங்கள் சொல்லுவது ஒன்றும் சரியில்லை. நானும் கொஞ்சம் சரித்திரம் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். சிவாஜி மகாராஜாவின் முன்னால் முஸ்லிம் ஜாகீர்தாரின் பெண்ணைக் கொண்டுபோய் நிறுத்தியதும் என்ன சொன்னார்? 'அம்மணி! என்னுடைய தாயார் உன்னைப்போல் அழகாயிருந்தால் நானும் எத்தனையோ அழகாயிருந்திருப்பேனே?' என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணைச் சகல மரியாதைகளுடன் தகப்பனாரிடம் சேர்ப்பித்துவிடவில்லையா? இந்த அரண்மனையைக் கட்டிய ஷாஜஹானையே பாருங்கள். மும்தாஜ் பீகத்தைக் கலியாணம் செய்துகொண்ட பிறகு இன்னொரு ஸ்திரீயை அவன் கண்ணெடுத்துப் பார்த்தானா? மும்தாஜ் செத்த பிறகு கூட அவளை ஷாஜஹான் மறக்கவில்லையே? அவளுக்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து தாஜ்மகாலைக் கட்டினான்? அதோ பாருங்கள்!" என்றாள் சீதா.

அப்போது அவர்கள், மல்லிகை மாடம் என்று பெயர் பெற்ற அரண்மனைப் பகுதியின் மேல் தாழ்வாரத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் யமுனை நதிக்கு அக்கரையில் தாஜ்மகாலின் அற்புதத் தோற்றம் காணப்படும். மூன்று பேருமே சிறிது நேரம் வரையில் அந்தக் காட்சிக்குத் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களாய்ப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். பிறகு சீதா, "நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கப் பார்க்கிறீர்களே? ஷாஜஹான் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்டவன் என்று தாஜ்மகாலைப் பார்த்தால் தெரியவில்லையா? எவ்வளவு சிரமம் எடுத்து, எவ்வளவு பிரயத்தனம் பண்ணி, எவ்வளவு செலவு செய்து, தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டியிருக்க வேண்டும்? மும்தாஜிடம் அவருக்கு எவ்வளவு ஆசை, எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும்? தாஜ்மகாலைக் கட்டியது மட்டுமா? கட்டிய பிறகும் ஆயுள் முடியும் வரையில் தினம் தினம் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்து கடைசியில் செத்துப் போனானாம். அவன் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தது இந்த மல்லிகை மாடத்திலிருந்து தான் போலிருக்கிறது!" "ஆமாம், சீதா! உன்னுடைய ஊகம் உண்மைதான். இந்த இடத்தில் இருந்தபடியேதான் ஷாஜஹான் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே செத்துப் போனான்!" என்றான் ராகவன். "ஏன் தெரியுமா, அத்தங்கா! நான் படித்த சரித்திரத்தைச் சொல்லுகிறேன். ஷாஜஹான் அரசாங்கப் பொக்கிஷத்தை இப்படியெல்லாம் வீண் விரயம் செய்தது, அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்குப் பிடிக்கவில்லையாம். தகப்பனாரைச் சிறைப்படுத்தி இந்தக் கோட்டையிலே அடைத்து வைத்து, 'நீங்கள் உங்களுடைய அருமை மனைவியின் ஞாபகமாகக் கட்டிய கட்டிடத்தைச் சதா சர்வ காலமும் பார்த்துக் கொண்டே இருங்கள்!" என்று சொல்லி விட்டானாம். ஷாஜஹான் இங்கேயே இருந்து தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இறந்தானாம்!" என்றான் சூரியா.

"ஷாஜஹானுக்குச் சரியான தண்டனைதான். நான் ஔரங்கசீப்பாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன்!" என்றான் ராகவன். "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! இப்பேர்ப்பட்ட அற்புதமான காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி பேசுகிறீர்களே! உங்களுக்கெல்லாம் கண் எங்கே போயிற்று?" என்றாள் சீதா. உண்மையில் அந்தச் சமயம் ராகவன், சூரியா இருவருடைய கண்களும் தூரத்தில் தெரிந்த தாஜ்மகாலையோ அல்லது பக்கத்திலே இருந்த அற்புதமான பளிங்குக்கல் சித்திரங்களையோ பார்க்கவில்லை. அந்த மல்லிகை மாடத்தின் தாழ்வாரத்தின் வழியாக எதிர்ப்புறமிருந்து வந்து கொண்டிருந்தவர்களின் மீது அவர்களுடைய பார்வை போயிருந்தது. மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள், இருவர் ஸ்திரீகள்; ஒருவர் ஆடவர். கராச்சி காங்கிரஸின் போது விமான கூடத்தில் ராகவன் பார்த்த பெண்கள்தான் அவர்கள் இருவரும். ஒருத்தி தாரிணி; இன்னொருத்தி அவளுடைய சிநேகிதி. ராகவன் செயலற்று நின்றான், தாரிணியின் முகத்திலிருந்து அவனுடைய கண்கள் அப்பால் இப்பால் நகரவில்லை. வேறு யாரையும் எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அவனுடைய உள்ளம் மறந்து விட்டது. எதிரில் தாரிணி வருகிறாள் என்கிற ஒரு நினைவுதான் அவனுடைய மனதில் நிலை பெற்றிருந்தது.