அலை ஓசை/புயல்/ரஜினிபூர் ஏரி (2)

விக்கிமூலம் இலிருந்து

அன்று பிற்பகலில் ராகவன் சீதாவைப் பார்த்து, "அப்படியானால், உனக்கு நிஜமாகவே தலையை வலிக்கிறதா?" என்று கேட்டான். "பின்னே பொய்யாகவா தலைவலிக்கும்? இது என்ன கேள்வி?" என்றாள் சீதா. "சரி நான் போய்வருகிறேன்!" என்று ராகவன் கிளம்பினான். "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டாள் சீதா. "புறப்படுகிறபோது, 'எங்கே போகிறீர்கள்?' என்று கேட்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா? வேறு எங்கே போவேன்? ஏரிக்குத்தான்!" "என்னை விட்டுவிட்டுத் தனியாகவா போவீர்கள்?" "தனியாக என்ன? தாரிணியும் அவளுடைய தோழியும் தான் வருவதாகச் சொல்லியிருக்கிறார்களே?" "என்னை இங்கே ஒண்டியாக விட்டுவிட்டு அவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு போவீர்களா?" "இங்கே நீ ஒண்டியாக இருப்பானேன்? இது என்ன காடா? வீடுதானே? தாமாவும் பாமாவும் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள்." "அவர்களோடு என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது." "அப்படியானால் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிரு." "எப்படியாவது நீங்கள் போய்த்தான் தீரவேண்டும்?" "போய்த்தான் தீரவேண்டும்; போட்ட திட்டத்தை உன்னுடைய தலைவலிக்காக மாற்ற முடியாது?" "நான் செத்துப் போனால் அப்போதாவது போட்ட திட்டத்தை மாற்றுவீர்களா?" "செத்துப் போய்ப் பார்! அப்போது தெரிகிறது!"

சீதாவுக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. ஆயினும் அப்போது ராகவனோடு தகராறு செய்வதில் பயனில்லை என்று உணர்ந்தாள். "பெண் ஜென்மம் எடுத்தாகிவிட்டது, தலைவலி என்று சொன்னால் என்ன பிரயோஜனம்? இங்கே தனியாகக் கிடந்து சாவதைக் காட்டிலும் உங்களுடன் வந்தே பிராணனை விடுகிறேன்!" என்று சொன்னாள். "விடுகிற பிராணனைச் சீக்கிரமாக விட்டுத் தொலைக்கலாம் புறப்படு உடனே" என்றான் ராகவன். காரில் போகும்போது இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சீதா மட்டும் அடிக்கடி கைக்குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். தாரிணியும் நிருபமாவும் இறங்கியிருந்த ஜாகையின் வாசலில் வண்டி நின்றது. மேல் மாடியின் முகப்பில் நிருபமா வந்து நின்று கையைத் தட்டி அழைத்து "கொஞ்சம் இப்படி வந்து உட்காருங்கள்; தாரிணிக்கு இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்று சொன்னாள். "நான் வரவில்லை காரிலேயே இருக்கிறேன். எப்போதாவது நான் புறப்பட ஒரு நிமிஷம் தாமதமானால் பிரமாத கோபம் வந்துவிடும் இப்போது மட்டும்?" என்றாள்."ஏதாவது உளறிக்கொண்டிராதே! தெரியுமா?" என்று ராகவன் கோபமாகச் சொல்லிவிட்டுக் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றான்.

சீதாவுக்கு காரில் உட்கார்ந்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாக இருந்தது. அத்தகைய பல நிமிஷங்களுக்குப் பிறகு மேலே கலகலவென்று சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்தச் சிரிப்புச் சத்தம் சீதாவின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. தலையைச் சிறிது காருக்கு வெளியே நீட்டி மேலே அண்ணாந்து பார்த்தாள். சிறிது நேரம் வரையில் பேச்சுச் சத்தமும் சிரிப்புச் சத்தமும் கேட்டதே தவிர கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. சட்டென்று பலகணிக்கருகே ஒரு காட்சி தென்பட்டது. ராகவன் ஏதோ ஒரு கவரை கையில் பிடித்துக்கொண்டு தாரிணியிடம் அதைக் கொடுக்கப் போனான். அவள் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்தாள். ராகவன் சட்டென்று அவளுடைய கரத்தைப் பிடித்துப் பலாத்காரமாக அந்தக் கவரைத் திணிக்க முயன்றான். அப்புறமும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் தாரிணி தன்னை விடுவித்துக் கொண்டு ஓடினாள். ராகவன் அவளைத் தொடர்ந்து பின்னால் ஓடினான். அரை நிமிஷ நேரமே நீடித்திருந்த இந்தக் காட்சி சீதாவின் உள்ளமாகிய காமிராவில் படமாகப் பதிந்துவிட்டது. சிறிது நேரம் சிந்தனா சக்தியையே இழந்திருந்தாள். பின்னர் ஏதேதோ சந்தேகங்கள் உதித்து மனதை அரிக்கத் தொடங்கின. உடம்பெல்லாம் விடவிடவென்று நடுங்கும்படியாக மனதில் ஆத்திரம் பொங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் ராகவனும் தாரிணியும் மட்டும் கீழிறங்கி வந்தார்கள். தாரிணியைப் பின்னால் சீதாவுக்குப் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு ராகவன் காரின் முன்புறத்தில் அமர்ந்தான். நிருபமா பின்னால் வருவாள் என்று சீதா நினைத்தாள். ஆனால் அவள் வராமலே கார் புறப்பட்டதைக் கண்டதும் துணுக்குற்றாள். அதைப்பற்றி விசாரிக்க விரும்பினாலும் பேசுவதற்கு நா எழவில்லை.

தாரிணி சீதாவின் முகத் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, "ஏன் இப்படி ஒரு மாதிரியாயிருக்கிறாய், சீதா! உடம்பு ஏதாவது சரிப்படவில்லையா, என்ன?" என்று கேட்டாள். "ஆமாம்; காலையிலிருந்து தலைவலி!" என்று சீதா முணுமுணுத்தாள். "அடடா! ரொம்பத் தலைவலி போலிருக்கிறதே! குரல் கூட எப்படியோ ஆகிவிட்டதே! இதோடு வெளியில் புறப்படாவிட்டால் என்ன? நாளைக்குப் போயிருக்கலாமே? ஏரி எங்கே ஓடியா போகிறது!" என்று தாரிணி கூறியது சீதாவின் மனதில் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போன்ற பலனை அளித்தது. "வரவில்லையென்று சொன்னால் கேட்டால்தானே!" என்றாள். சற்றுப் பொறுத்துத் தாரிணி, "உடம்பு சரியில்லையென்று தான் நிருபமா கூட வராமல் நின்றுவிட்டாள். இப்போது கூட மோசம் போய் விடவில்லை, திரும்பிப் போய்விடலாம்! என்ன, மிஸ்டர் ராகவன்!" என்றாள். அதற்கு ராகவன், "அவ்வளவு ஒன்றும் அவளுக்குப் பிரமாதமான தலைவலி இல்லை. ஏரியில் படகிலே போனால் தலைவலி தீர்ந்து விடும்!" என்றான். நீல வானத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை எடுத்துப் பூமியில் வைத்தது போலிருந்தது ரஜினிபூர் ஏரி. அதன் இரு பக்கங்களில் இரண்டு மலைத் தொடர்கள் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் மதில் சுவர்களைப் போல் உயர்ந்து நின்றன. மற்ற இரு புறங்களில் பசுமையான மரங்கள் அழகிய நீல வர்ணச் சித்திரத்துக்குப் பச்சை வர்ணச் சட்டங்கள் போட்டது போல் நின்றன. அங்கே நள்ளிரவின் நிசப்தம் நிலவியது. வைகறையில் சலனமற்ற சாந்தம் குடிகொண்டிருந்தது. மாலை நேரத்தில் மனோகரம் பரவி இருந்தது.

அந்த விஸ்தாரமான நீல நிற நீர்ப்பரப்பைப் பார்த்தால் ஞானிகள் எங்கும் நிறைந்த பரம்பொருளைத் தங்களுக்குள்ளே காணும்போது அடையும் ஆனந்தத்தைப் பாமர ஜனங்களும் அடைவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகளின் கண்களுக்குள்ளே தங்கள் பிரதி பிம்பத்தைக் காணும்போது அடையும் களிப்பை அந்த ஏரி நீரில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் எவரும் பெறுவார்கள். முதன் முதலில் பெற்றெடுத்த குழந்தையின் இதழ்களில் இலேசாக அரும்பும் புன்னகையைப் பார்க்கும்போது அன்னைக்கு உண்டாகும் மகிழ்ச்சி, அந்த ஏரி நீரின் சிற்றலைகள் விரியும் காட்சியைப் பார்க்கும் அனைவருக்கும் உண்டாகும். தும்பை மலரைப் போல் வெண்ணிறத்துடன் விளங்கிய ஆயிரக்கணக்கான பறவைகள் அந்த ஏரி நீரின் மீது கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் காட்சியை ஒரு முறை பார்த்தவர்கள் என்றென்றைக்கும் மறக்க மாட்டார்கள். அத்தகைய ஏரிக்கரையில் வந்து ராகவன், சீதா, தாரிணி மூவரும் காரிலிருந்து இறங்கினார்கள். ஏரியின் காட்சியைப் பார்த்துவிட்டுத் தாரிணி, "ஆகா! என்ன அழகு! என்ன அழகு! நானும் இயற்கைக் காட்சிகள் எவ்வளவோ பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி பார்த்ததில்லை!" என்றாள். "அதனால்தான் உங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு வற்புறுத்தி அழைத்து வந்தேன். ஸ்விட்ஸர்லாந்தில் உலகப் பிரசித்தமான ஏரிகளை இதன் காலிலே கட்டி அடிக்க வேண்டும். ஆயினும் இதைப் பார்ப்பதற்கு உங்கள் இருவரையும் அழைத்து வருவதற்குள் என் பிராணனில் பாதி போய் விட்டது!" என்றான் ராகவன்.

சீதா மட்டும் ஒன்றும் சொல்லாமல் ஏரியை நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்த கடுகடுப்பைப் பார்த்து விட்டுத் தாரிணி, "ஏரி என்னமோ அழகாய்த்தானிருக்கிறது, ஆனால் இரண்டு பேராக வந்திருந்தால் இன்னும் நன்றாக இதைப் பார்த்து அனுபவிக்கலாம் அல்லது நாலு பேராக வந்திருக்க வேண்டும்!" என்று கூறினாள். அவள் மனதில் நினைத்துச் சொன்னது சீதாவும் ராகவனும் மட்டும் வந்திருக்கலாம் என்று. ஆனால் சீதா அதைத் தப்பர்த்தம் செய்து கொண்டு, "நான் வரவில்லை என்று ஆனமட்டும் சொன்னேன்; கேட்டால் தானே?' என்று முணுமுணுத்துவிட்டு ஏரிக்கரையை நோக்கி விடுவிடு என்று நடந்தாள். கரை ஓரமிருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து ஏரியைப் பார்க்கலானாள். ஆனால் அவளுடைய கண்கள் ஏரியைப் பார்த்தனவே தவிர, மனது வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஏரியின் குளிர்ந்த நீரில் அளாவிக் கொண்டு வந்து உலாவிய காற்று அவளுடைய உடம்பெல்லாம் அக்கினி ஜுவாலையை மூட்டியது. அவள் விடுவிடு என்று நடந்து போனதைக் கவனித்த தாரிணி, ராகவனைப் பார்த்து, "உங்கள் மனைவி என்ன இன்றைக்கு இப்படி இருக்கிறாளே? இது தலைவலி மட்டும் அல்ல; உள்ளக் கோளாறும் ஏதோ இருக்கும் போலிருக்கிறது" என்று சொன்னாள். "இந்த மாதிரி செய்வாள் என்று தெரிந்திருந்தால் அவளை அழைத்து வந்திருக்கவே மாட்டேன்" என்றான் ராகவன். "பெண்களின் மனதை அறியும் சக்தி உங்களுக்கு இல்லவே இல்லையென்று தெரிகிறது. உங்கள் மனைவிக்கு உங்களுடன் தனியாக வந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போக வேண்டும் என்று எண்ணம்!"

"அவளைத் தனியாக அழைத்துக்கொண்டு வந்து என்ன செய்கிறது? அவளோடு எந்த விஷயத்தைப்பற்றிப் பேசுகிறது? எங்களிரு வருக்கும் பொதுவான விஷயம் எதுவும் இல்லை. அவளுடைய பேச்சு என் மனதில் ஏறவே ஏறாது. நான் பேசுகிற விஷயம் அவளுக்குப் புரியாது." "அது யாருடைய தப்பு அவளை நீங்கள் படிப்பித்து உங்கள் நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுடன் சமதையான படிப்பில்லாதவளை மணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்போது தப்புச் செய்து விட்டு இப்போது இப்படிப் பேசுவதில் என்ன பயன்?" "தப்பு என் பேரில் இல்லை, தாரிணி! உங்கள் பேரில்தான் உங்களால் வந்த வினைதான் இதெல்லாம்!" "வெகு அழகு! இப்படியெல்லாம் பேசாதீர்கள், உங்கள் மனைவி உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நாமும் போகலாம் வாருங்கள்! இல்லாவிட்டால் அவளுடைய கோளாறு இன்னும் அதிகமாகிவிடும்." "அதிகமானால் ஆகட்டும்; அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை" என்றான் ராகவன். ஆயினும் தாரிணி போகத் தொடங்கியதும் அவளைப் பின்பற்றி அவனும் போனான். இருவரும் ஏரி ஓரம் சென்று சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். ஏரிக்கரையில் படகு ஒன்றும் இல்லை. ஆனால் ஏரியில் சில படகுகள் மிதந்து சென்று கொண்டிருந்தன. அவை ஏரியின் நடுவில் இருந்த சோலை சூழ்ந்த ஒரு சிறு தீவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அந்தத் தீவின் உயரமான மரங்களின் மத்தியில் ஒரு பெரிய மாளிகை காணப்பட்டது. "அந்த மாளிகை யாருடையது?" என்று தாரிணி கேட்டாள்.

"சரித்திர நிபுணராகிய தங்களுக்கு இது தெரியாதா, என்ன? பழைய சரித்திரத்தைத்தான் ஆராய்வீர்கள் போலிருக்கிறது. இந்த சமஸ்தான ராஜாவின் அரண்மனைதான் இது. காலம் சென்ற பெரிய ராஜா உயிரோடிருந்தபோது இந்த மாளிகையில் அடிக்கடி வசிப்பாராம். அவருடைய உல்லாசக் கேளிக்கைகள் எல்லாம் இதிலேதான் நடக்குமாம்! உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ? ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இந்த நாட்டின் ராஜாவைக் கொல்வதற்குப் பம்பாயில் ஒரு முயற்சி நடந்தது, கொல்ல முயற்சித்தவள் ஒரு ஸ்திரீ. பத்திரிகைகளிலே கூட பிரமாதப்பட்டது ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்த ஸ்திரீ இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனை அடைந்ததுதான் லாபம். கத்திக் காயம் கூடப் படாமல் அப்போது ராஜா தப்பிவிட்டார். இரண்டு வருஷத்துக்கு முன்பு அதிகக் குடி காரணமாகச் செத்தொழிந்தார்." "இப்போதுள்ள ராஜா யார்? அவருடைய குணம் எப்படி?' என்று தாரிணி கேட்டாள். "இப்போதுள்ள ராஜா சிறு பையன், டேராடூனில் படிக்கிறான். நாம் இறங்கியிருக் கிறோமே, அந்த வீட்டில் வசிக்கும் திவான் ஆதிவராகாச்சாரியார்தான் இப்போது ராஜ்ய நிர்வாகம் செய்து வருகிறார். "அப்படியானால், இப்போது ராஜ்யம் நன்றாக நடந்து வருகிறதாக்கும்." "ஏதோ சுமாராய் நடந்து வருகிறது ஆனால் பழைய ராஜாவின் துர்மந்திரியாயிருந்த விநாயகராவ் மதோங்கர் இன்னும் உயிரோடிருக்கிறான். அரண்மனையிலும் சரி, சமஸ்தானத்திலும் சரி, அவனுடைய அட்டூழியங்கள் அதிகம். திவானும் அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருந்து வருகிறார். இல்லா விட்டால், ஏதாவது இல்லாதது பொல்லாததைக் கிளப்பி விட்டுத் திவானுடைய வேலைக்கே உலை வைத்து விடுவான்!"

ஆரம்பத்தில் வேறு கவனமாக இருந்த சீதா, பம்பாயில் ரஜினிபூர் ராஜாவைக் கொல்லும் முயற்சி நடந்ததைப் பற்றிக் காதில் விழுந்ததும், அவர்களுடைய பேச்சில் கவனம் செலுத்தலானாள். ராகவன் மதோங்கரைப் பற்றிச் சொல்லி முடித்ததும், "பம்பாயில் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயற்சித்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "ஓகோ! நீ கூடக் கவனித்துக் கொண்டிருக்கிறாயா? அந்த ஸ்திரீ யாரோ தெரியாது. சிலர் அவளை ஹிந்து ஸ்திரீ என்றார்கள். சிலர் அவளை முஸ்லீம் ஸ்திரீ என்றார்கள். ஒரு சிலர் அவளைத் தென்னாட்டைச் சேர்ந்தவள் என்றும் சொன்னார்கள். யாராயிருந்தால் என்ன? பெரிய ராட்சஸியாயிருக்க வேண்டும்! பட்டப்பகலில் கொலை செய்ய முயற்சிப்பதற்கு அவளுக்கு எத்தனை தைரியம் இருந்திருக்க வேண்டும்?" என்றான் ராகவன். "புருஷர்கள் மட்டும் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம்; ஸ்திரீகள் அதற்குப் பழிவாங்க முயற்சிப்பதுதான் பிசகோ?" என்றாள் சீதா. "ஏது ஏது? கொலைகாரிக்கு ரொம்பப் பரிந்து பேசுகிறாயே? இப்படிப் பேச எங்கே கற்றுக் கொண்டாய்?" என்றான் ராகவன். தாரிணி குறுக்கிட்டு, "அந்த ஸ்திரீ பிறகு என்ன ஆனாளாம், தெரியுமா?" என்று கேட்டாள். இத்தனை நேரம் மௌனமாயிருந்த அவளுடைய குரலில் இப்போது அதிசயமான மாறுதல் காணப்பட்டது. முன்னே சீதாவின் குரல் நடுங்கியது போல் இப்போது தாரிணியின் குரலும் நடுங்கிற்று. ஆனால் ராகவன் அதைக் கவனியாமல், "யாருக்குத் தெரியும்? இரண்டு வருஷம் சிறையில் இருந்து விட்டு வெளிவந்த பிறகு எங்கே போய்க் கெட்டலைகிறாளோ? அதைப்பற்றி நமக்கென்ன கவலை!" என்றான்.

சீதாவின் மனதில் பம்பாயை விட்டுத் தான் ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்குச் சில நாள் முன்பு கையில் கத்தியுடனேயே ஒரு ஸ்திரீ வந்திருந்த சம்பவமும், ரயில் ஏறும்போது பத்திரிகையில் படித்தறிந்த விஷயமும், அப்போது தன் மனதில் ஏற்பட்ட சந்தேகமும் இப்போது டில்லிக்கு வந்த பிறகு அன்றொரு நாள் சாலை முனைக்கு அதே ஸ்திரீயைக் கையில் கத்தியுடன் பார்த்த விஷயமும் நினைவுக்கு வந்தன. அதையெல்லாம் பற்றிப் பிரஸ்தாபியாமல் வாயை மூடிக்கொண்டிருந்தாள். அவளுடைய மனம் ஸ்திரீ வைத்திருந்த கத்தியின் மேல் அடிக்கடி சென்றது. அவள் இந்த ஊர் ராஜாவைக் குத்திக் கொல்ல முயன்றதற்குத் தக்க காரணம் இருந்திருக்க வேண்டும். என்ன அக்கிரமம் செய்தானோ, என்னமோ? ஆனால் புருஷர்கள் மட்டுந்தானா அக்கிரமம் செய்கிறார்கள்? ஸ்திரீகளுந்தான் செய்கிறார்கள். உதாரணமாக இந்தத் தாரிணியைப் போன்ற வெட்கங்கெட்ட ஸ்திரீயைப் பற்றி என்ன சொல்வது? இப்படிப்பட்டவர்களைக் குத்திக் கொன்றால் கூடப் பாதகம் இல்லை. தன்னிடம் மட்டும் இப்போது ஒரு கத்தியிருந்தால்?...

தன்னுடைய எண்ணம் எவ்வளவு பயங்கரமான காரியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த சீதா திடுக்கிட்டுத் தாரிணியின் முகத்தை நோக்கினாள். அவளுடைய நெற்றியிலிருந்த இரத்தக் காயம் கண்ணில் பட்டது. ஆகா; நல்ல வேலை செய்தான் சூரியா! அவன் மட்டும் இப்போது இங்கிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? தன்னை விட்டு ஒரு நிமிஷ நேரமும் அகலாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான் அல்லவா? அவன் இங்கே இருந்தால், இவர்கள் இருவரையும் நாம் இலட்சியம் செய்ய வேண்டியதேயில்லையே! இந்தச் சமயத்தில் படகு ஒன்று கரையை அணுகியது. படகில் ஏறிக்கொண்டு வந்தவர்கள் கரையில் இறங்கினார்கள். "இந்தப் படகை அமர்த்தட்டுமா? ஏரியில் போய் வரலாமா?" என்று ராகவன் கேட்டான். தாரிணி, "நான் தயார்; போகலாம் ஆனால் உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாளோ?" என்றாள். "அவளும் தானே வருகிறாள் அப்படி அவள் வர இஷ்டப்படாவிட்டால் இங்கேயே கரையில் இருக்கட்டும்; நாம் இருவரும் போய் வரலாம்." இப்படிச் சொல்லிவிட்டு ராகவன் வாடகைப் படகு அமர்த்திக் கொண்டு வருவதற்காகச் சென்றான். ராகவன் அப்பாலே சென்றதும், தாரிணி சீதாவைப் பார்த்து, "சீதா! உனக்கு ஏதாவது என் பேரில் கோபமா? ஒரு மாதிரியாயிருக்கிறாயே?" என்று கேட்டாள். "ஒரு மாதிரி என்ன, ஒருமாதிரி, எப்போதும் இந்த இலட்சணந்தான்!" என்று சீதா முணுமுணுத்தாள். "மறுபடியும் கோபமாகவே பேசுகிறாயே! நான் உன்னோடு சிநேகமாயிருக்க விரும்புகிறேன் சீதா" என்றாள் தாரிணி. "எதற்காக? நீயும் நானும் முன்பின் பார்த்தது கூட இல்லையே?" என்று சீதா சொன்னாள்.

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தாரிணி திகைத்துப் போனாள். சற்றுப் பொறுத்து, "சீதா! உன் கழுத்தில் ஒரு ரத்தின ஹாரம் போட்டிருக்கிறாயே? அது ஏது?" என்று தாரிணி கேட்டாள். சீதா திடுக்கிட்டாள் அவள் மனதில் என்னவெல்லாமோ உருத்தெரியாத சந்தேகங்கள் உதித்தன. இந்தப் பாதகி எந்த விதத்திலாவது நம்மைக் கெடுத்து விடுவது என்று தீர்மானித்திருக்கிறாள் போலிருக்கிறது. ஒருவேளை நம் பேரில் திருட்டுக் குற்றம் சாட்டப்போகிறாளோ, என்னவோ? ஐயோ?! இந்த நேரத்தில் சூரியா இங்கு இல்லாமற் போய்விட்டானே! தாரிணி மறுபடியும், "சீதா! நான் கேட்டது உன் காதில் விழவில்லையா? கழுத்தில் ஒரு ரத்ன ஹாரம் போட்டுக் கொண்டிருக்கிறாயே அது ஏது என்று கேட்டேன்!" என்றாள். "என்! அம்மா எனக்குக் கொடுத்தாள்! நீ எதற்காகக் கேட்கிறாய்? ஒருவேளை நான் அதைத் திருடிவிட்டேன் என்று உனக்கு எண்ணமோ?" என்றாள் சீதா. "ஐயோ! என்ன கொடூரமாகப் பேசுகிறாய்? அந்த ரத்தின ஹாரம் ரொம்ப அழகாயும் வேலைப்பாடாயும் இருக்கிறபடியால், எங்கே செய்தது என்று தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன் . அதற்கு ஏன் இத்தனை கோபப்படுகிறாய்?" "எனக்கு ஒன்றும் கோபமில்லை?" "கோபமில்லையென்றால் சரி, உன் அம்மாவுக்கு எந்த ஊர் சீதா! உன் பிறந்தகம் எங்கே?" "அதையெல்லாம் பற்றி இப்போது ஒன்றும் என்னைக் கேட்க வேண்டாம் என் மனது சரியில்லை." "அது ரொம்ப நன்றாய்த் தெரிகிறது!" என்றாள் தாரிணி.

ராகவன் வாடகைக்குப் படகு அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்தான். "சீக்கிரம் படகில் ஏறுங்கள் ஏற்கெனவே நேரம் ரொம்ப ஆகிவிட்டது?" என்றான். "அவசியம் படகில் ஏறத்தான் வேண்டுமா? பேசாமல் திரும்பிப் போய்விடலாமே" என்றாள் தாரிணி. "அழகாயிருக்கிறது! இந்தப் படகோட்டியுடன் எவ்வளவோ வாதாடிப் படகு கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் இப்போது தகராறு செய்யாதீர்கள் சீதா எழுந்திரு! சீக்கிரம் வந்து படகில் ஏறிக்கொள்." சீதா எழுந்து வந்தாள் அவளுடைய கையைப் பிடித்துப் படகிற்குள்ளே ஏற்றி விட்டான் ராகவன். பிறகு தாரிணி தயக்கத்துடன் வந்து தானாகவே படகில் ஏற முயன்றாள்! அது சாத்தியப்படவில்லை படகு நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டிருந்தது. "சொன்னால் கேட்கிறீர்களா? இங்கே கையைக் கொடுங்கள்!" என்று கூறி ராகவன் தாரிணியின் கையையும் பிடித்துப் படகிற்குள் ஏற்றிக்கொண்டான். தாரிணி சீதாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். ராகவன் அவர்களுக்கு எதிரேயிருந்த படகுச் சட்டத்தின் மீது உட்கார்ந்தான். படகு நகரத் தொடங்கியது. இதற்கிடையில் திடீரென்று வானம் கருத்து மேக மண்டலங்கள் திரளுவதையும், காற்று பலமாக அடிக்கத் தொடங்கியிருப்பதையும் அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. ஏரிக்கரைக்கு அவர்கள் வந்த சமயம் ஏரியின் நீர்ப்பரப்பில் கடற்கரை மணலில் தோன்றுவது போன்ற பூ அலைகள் எழுந்து சத்தமின்றி விரிந்து பரவி மீண்டும் ஜலத்திரளில் மௌனமாகக் கலந்து கொண்டிருந்தன. இவர்கள் ஏறிய படகு புறப்பட்ட சமயத்திலோ அலைகள் ஒரு அடி உயரம் எழும்பி விழுந்தன. ஆங்காங்கு அலைகளின் நுனியில் வெண்ணுரை காணவும் ஆரம்பித்திருந்தது. அலை அடிக்கும் ஓசை 'கும்' என்று கேட்கத் தொடங்கியது.

ஏரிக்கரையிலிருந்து அதன் நடுவில் இருந்த சோலைத் தீவு சுமார் இரண்டு பர்லாங் தூரம் இருக்கும். தீவை நோக்கிப் படகு போகலாயிற்று. அரை பர்லாங் தூரம் போவதற்குள் காற்றின் வலிவு அதிகமாகி விட்டது. அலைகள் திரைத்தெழுந்து நுரை பொங்கி ஒரு கஜம் உயரம் வரையில் எழுந்து விழுந்து அலைகளின் சத்தம் 'ஹோ!' என்ற பெரும் ஓசையாகிவிட்டது. படகு அப்படியும் இப்படியும் பலமாக ஆடி எழுந்து விழுந்தது. படகுக்காரன் அவனுடைய பாஷையில் ஏதோ சொன்னான். "தாரிணி, இதென்ன? காற்று இவ்வளவு பலமாகி விட்டதே! திரும்பிப் போய்விடலாமா!" என்றாள். "முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது. உயிருக்கு அவ்வளவு பயப்பட வேண்டுமா!" என்றான் ராகவன். சீதா நாலா பக்கமும் திரும்பிப் திரும்பிப் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள். திடீரென்று, "ஐயோ! அம்மா! எனக்குப் பயமாயிருக்கிறதே!" என்று கூச்சலிட்டுவிட்டு விம்மத் தொடங்கினாள். ராகவன் மிகக் கடுமையான குரலில், "சீதா இது என்ன மடத்தனம்? அழுகையை உடனே நிறுத்துகிறாயா, இல்லையா?" என்றான். சீதாவின் வெறி இன்னும் அதிகமாயிற்று. "ஐயோ அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போய்விட்டதே; அலையில் விழுந்து நான் சாகப் போகிறேனே!" என்று அலறினாள்.

இந்த எதிர்பாரா நிலைமை ராகவனைக் கலங்க அடித்துவிட்டது. அவன் பெரும் மனக் குழப்பத்துடன் தாரிணியை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தான். "இந்தச் சனியன்களையெல்லாம் இதற்குத்தான் வெளியில் அழைத்துக்கொண்டு புறப்படக் கூடாது என்கிறது. நீங்கள் கொஞ்சம் சமாதானப்படுத்திப் பாருங்களேன்!" என்றான். "மிஸ்டர் ராகவன்! சமாதானப்படுத்திப் பயனில்லை. உங்கள் மனைவிக்கு 'ஹிஸ்டீரியா' மாதிரி இருக்கிறது. படகுக்காரனை உடனே கரைக்குத் திருப்பச் சொல்லுங்கள் வேறு வழியில்லை!" என்றாள். ராகவனும் படகுக்காரனை இரைந்து கூப்பிட்டு, "கரைக்குத் திருப்பு!" என்று உத்தரவிட்டான். படகுக்காரன் "குச் டர் நஹி, சாகிப்!" என்றான். "எப்படியிருந்தாலும், சரி! கரைக்கு உடனே படகைத் திருப்பு!" என்று ராகவன் கத்தினான். "படகுக்காரன் திருப்பமாட்டான்; அவனுக்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!" என்று கூறிவிட்டு, சீதா மேலும் விம்மினாள். "ஏதாவது பிதற்றாதே, சீதா! வாயை மூடு!" என்று ராகவன் அதட்டிவிட்டு, படகுக்காரனை மறுபடியும் பார்த்து, "திருப்பு உடனே! திருப்பு கிறாயா, இல்லையா?" என்று கத்தினான். "டீக், ஸாகிப் டீக்!" என்றான் படகுக்காரன்.

உண்மையென்னவென்றால், படகுக்காரன் படகைத் திருப்பத்தான் பார்த்தான். ஆனால், காற்றினாலும் அலையினாலும் அது அவ்வளவு சுலபமாயில்லை. படகுக்காரன் எவ்வளவு பலமாகக் கழியைப் போட்டாலும், படகு சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதற்குள் சீதாவின் விம்மல் சத்தம் அதிகமாயிற்று. இடையிடையே, "அம்மா! அம்மா! நீ சொன்னது சரியாய்ப் போயிற்று!" என்று அலறிக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த தாரிணி, "மிஸ்டர் ராகவன்! 'ஹிஸ்டீரியா' அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் இங்கே பக்கத்தில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் ஒரு கையைத் தான் கெட்டியாகப் பிடித்தாள். தாரிணி பிடித்த கையைச் சீதா பலமாக உதறி விடுவித்துக் கொண்டு ஒரு துள்ளு துள்ளிப் படகில் எழுந்து நின்றாள். படகு பேயாட்டம் டிக்கொண்டிருந்தது. "ஓகோ! எனக்கு 'ஹிஸ்டீரியா' என்று சொல்லி ஜலத்தில் தள்ளிவிடப் பார்க்கிறாயோ? எனக்கு ஒன்றும் 'ஹிஸ்டீரியா' இல்லை! நான் விழமாட்டேன்!" என்று கூவினாள். "சீக்கிரம்! இவளை வந்து உடனே பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று தாரிணி கத்தினாள்.

ராகவன் எழுந்து சீதாவை நெருங்கி வருவதற்கு ஒரு அடி எடுத்து வைத்தான். அந்தச் சமயத்தில் படகை ஒரு பெரும் அலை மோதியது. படகு ஒரே ஆட்டமாகத் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்போல் ஆடியது. ராகவன் படகுக்குள்ளே கால் தடுமாறி விழுந்தான். சீதா, "வீல்!" என்று கத்திக்கொண்டு தண்ணீரில் விழுந்தாள். தாரிணி, "ஐயோ! கடவுளே!" என்று அலறினாள். படகுக்காரன் தன்னுடைய பாஷையில் ஏதோ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். கவிழ்ந்து விடும் போலிருந்த படகு எழுந்து நிமிர்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சீதா மேலே வந்து கொண்டிருந்தாள். நிமிர்ந்த படகு சீதாவை விட்டு அகன்று போய்க் காண்டிருந்தது. சீதா ஒரு தடவை தலையைத் தண்ணீருக்கு மேலே தூக்கி, "அம்மா!" என்று அலறினாள். அந்த அலறல் சத்தம் காற்றின் பேரொலிக்கும் அலைகளின் பெரும் ஓசைக்கும் மேலே கேட்டது. தாரிணி ராகவன் இவர்களுடைய நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் அந்த அபயக்குரல் பாய்ந்தது. தாரிணி, "என்ன சும்மா நிற்கிறீர்களே! தண்ணீரில் குதித்து அவளைக் காப்பாற்றுங்கள்!" என்று கூவினாள்.

படகிற்குள் தடுமாறி விழுந்த ராகவன் அப்போதுதான் சமாளித்து எழுந்தான். "ஐயோ! எனக்கு நீந்தத் தெரியாதே!" என்று சொல்லி விட்டுச் சீதாவின் தலை தெரிந்த இடத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான். ராகவனுடைய அந்தரங்கத்தில் அப்போது ஒரு கணம் ஒரு பயங்கரமான எண்ணம் உதயமாயிற்று. "ஒருவேளை இதுதான் விதி போல் இருக்கிறது. சீதா இறந்து போனால்... மேலே அந்த பயங்கர நினைவுக்கு இடங்கொடுக்க விரும்பாமல் "படகுக்காரா! அடே படகுக்காரா..." என்று ராகவன் கூவினான். முழுகிக் கொண்டிருந்தவளின் பக்கத்தில் படகைக் கொண்டு போகும்படி சொல்ல அவன் உத்தேசித்திருந்தான். ஆனால், அதற்குள்ளே தாரிணி படகிலிருந்து தண்ணீரில் குதித்துச் சீதா முழுகிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி வெகு லாவகமாக நீந்திப் போய்க் காண்டிருந்தாள்! அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காக வருணனும் வாயுவும் அமைதியாக நின்றார்கள்.