அலை ஓசை/பூகம்பம்/கிட்டாவய்யர் குடும்பம்
ராஜம்பேட்டை கிட்டாவய்யர் அவருடைய தந்தைக்கு ஒரே புதல்வர். தகப்பனார் அகண்ட காவேரிக் கரையில் தேடி வைத்திருந்த பல ஏக்கரா நன்செய் நிலத்துக்கும் கிராம முனிசீப் வேலைக்கும் உரிமை அடைந்தார். வளமான பூமி; பொன் போட்டால் பொன் விளையக்கூடியது. ஆயினும், அந்நிலத்தில் பொன்னைப் போடாமல் பொன்னைக் காட்டிலும் சிறந்த சம்பா நெல், கதலி வாழை, வெற்றிலை, கரும்பு முதலியவை பயிராக்கி வந்தனர். தகப்பனார் காலத்திலேயே அவருடைய சகோதரிகள் இருவருக்கும் கலியாணம் ஆகிவிட்டது. ஆகவே அவர் குடும்பத்தலைவரான பிறகு குடும்பத்துக்கும் பெரிய செலவு ஒன்றுமில்லை. எனினும் தான தர்மங்களிலும் பொதுக் காரியங்களிலும் சிநேகிதர்களுக்கு உதவி செய்வதிலும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதிலும் தாராளமாகப் பணம் செலவழித்துக் கொண்டிருந்தபடியால் தகப்பனார் காலத்துக்குப் பிறகு சொத்து விருத்தியடையவில்லை. புதல்வி லலிதாவுக்கு மட்டும் வருஷத்துக்கு ஒரு வயது வீதம் கூடிக்கொண்டே யிருந்தது. சென்ற வருஷமே கலியாணம் செய்திருக்க வேண்டும். இந்த வருஷமும் கலியாணம் செய்யாமலிருந்தால் குடிமூழ்கிப் போய்விடும் என்பது அவருடைய மனைவி சரஸ்வதி அம்மாளின் திடமான அபிப்பிராயம்.
சென்ற வருஷம் கிட்டாவய்யர் லலிதாவின் கலியாணத்தில் அதிக சிரத்தை காட்டாததின் காரணம், அவர் குடும்ப சகிதமாய்ப் பம்பாய்க்கு பிரயாணம் செய்ய நேர்ந்ததுதான். கிட்டாவய்யரின் சகோதரிகளில் ஒருத்தி அவருக்கு மூத்தவள். அந்த அம்மாளுக்குச் சமீப கிராமம் ஒன்றில் வைதிக குடும்பத்தில் கலியாணமாகியிருந்தது. கிட்டாவய்யரின் தங்கை ராஜமோ பம்பாயில் இருந்தாள். சிறு பிராயத்தில் ராஜம் கிட்டாவய்யரின் வாஞ்சைக்குப் பெரிதும் உரிமை பெற்றிருந்தவள். அவளுடைய கலியாணத்தின் போது கிட்டாவய்யர் காட்டிய உற்சாகத்துக்கும் பெருமைக்கும் அளவே கிடையாது. ராஜத்தை மணந்த மாப்பிள்ளையைப் பல தடவை "அதிர்ஷ்டக்காரன்" என்று அவர் பாராட்டியதுண்டு. ஆனால், யாரும் அறிய முடியாத தெய்வ சித்தத்தினால் ராஜத்தின் அதிர்ஷ்டம் அவ்வளவு சரியாக இல்லை. கலியாணம் ஆன உடனேயே மாப்பிள்ளை துரைசாமிக்குப் பம்பாயில் ரயில்வே காரியாலயத்தில் நல்ல உத்தியோகம் ஆயிற்று. கொஞ்ச காலத்துக்குப் பிறகு ராஜம் பம்பாய்க்குப் போனாள்.
ராஜத்தின் இல்வாழ்க்கை அவ்வளவு ரம்மியமாக இல்லை என்று சீக்கிரத்திலே தெரிய வந்தது. ஆனாலும் விவரம் இன்னதென்று தெரியவில்லை. மான உணர்ச்சி அதிக உள்ளவளான ராஜம்மாள் தன்னுடைய கஷ்டங்களைப் பகிரங்கப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. பம்பாய்க்கும் ராஜம் பேட்டைக்கும் போக்குவரவு அடிக்கடி இருக்க முடியாதல்லவா? நாளடைவில் கடிதப் போக்குவரவு கூட நின்று போயிற்று. சிற்சில சமயம் கிட்டாவய்யர், "ராஜம் எப்படியிருக்கிறாளோ?" என்று எண்ணி ஏங்குவார். அப்போது அவருடைய கண்களில் கண்ணீர் துளிக்கும். கண்ணைத் துடைத்துக்கொண்டு, "அவள் தலைவிதி அப்படி!" என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் தம் காரியத்தைப் பார்க்கத் தொடங்குவார்.
இந்த நிலையில், ஒரு வருஷத்துக்கு முன்னால் ராஜத்திடமிருந்து கடிதம் ஒன்று வந்தது; உருக்கமான கடிதம் அது. இத்தனை வருஷமாக எவ்வளவோ பொறுமையுடன் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டிருந்தும் தன்னுடைய மனவேதனை தீர்ந்தபாடில்லை என்று ராஜம் எழுதியிருந்தாள். வர வரத் தன் உடம்பு நிலையும் மோசமாகி வருகிறதென்றும் கூடிய சீக்கிரம் வந்து தன்னை ஒரு தடவைப் பார்த்துவிட்டுப் போகவேண்டுமென்றும் தமையனைக் கேட்டுக் கொண்டிருந்தாள். "வரும் போது மன்னியையும் லலிதாவையும் அழைத்து வர வேணும். சீதா அவளுடைய அம்மங்காளைப் பார்க்க வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருக்கிறாள்" என்றும் எழுதியிருந்தாள்.
கிட்டாவய்யருக்குத் தம் மனைவியைப் பம்பாய்க்கு அழைத்துப் போக விருப்பமில்லை. ஆனால் சரஸ்வதி அம்மாளின் மனோநிலை அதற்கு நேர்மாறாக இருந்தது. லலிதாவுடன் பம்பாய்க்குப் போவதில் அவள் துடியாக நின்றாள். குழந்தைகளுக்குத் தலைமொட்டை போடுவதற்காகத் திருப்பதி யாத்திரை போனதைத் தவிர அந்த அம்மாள் பிரயாணம் அதிகமாகச் செய்ததில்லை. பிரயாணம் செய்ய ஆசைப்பட்டதும் கிடையாது. ஆனால் இப்போது பம்பாய்க்குப் போவதில் ஆத்திரம் காட்டினாள். காரணம் லலிதாவுக்கு வயது பதினாலு ஆகியிருந்ததுதான். "நாலு இடத்துக்குப் போய்ப் பார்த்தால் தானே நல்ல வரனாகக் கிடைக்கும்? இந்தப் பட்டிக்காட்டிலேயே உட்கார்ந்திருந்தால் எப்படி?" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
ஆகவே கிட்டாவய்யர் குடும்ப சகிதமாய்ப் பம்பாய்க்குப் போனார். சரஸ்வதி அம்மாள், லலிதா, லலிதாவின் தம்பி சுண்டு ஆகியவர்களும் போயிருந்தார்கள் பிரயாணம் வெகு உற்சாகமாயிருந்தது. துரைசாமி ஐயர் ஸ்டேஷனுக்கு வந்து அவர்களைத் தாதரில் இருந்த தம் ஜாகைக்கு அழைத்துச் சென்றார். பம்பாயில் தங்கியிருந்தபோது லலிதாவும் சுண்டுவும் வெகு குதூகலமாயிருந்தார்கள். லலிதாவும் அவளைவிட ஒரு வயது மூத்தவளான சீதாவும் பிராண சினேகிதர்களானார்கள். ஒருவரையொருவர் மறப்பதில்லையென்றும் கையடித்துச் சத்தியம் செய்து கொண்டார்கள்.
லலிதாவுக்கும் சுண்டுவுக்கும் பம்பாய் நகரத்துக் காட்சிகளையெல்லாம் காட்டுவதில் சீதாவுக்கு அளவில்லாத பெருமை; சொல்ல முடியாத உற்சாகம். மிருகக்காட்சிச் சாலையாகட்டும், மியூஸியம் ஆகட்டும், ரயில்வே ஸ்டேஷன்கள் ஆகட்டும், தாஜ்மகால் ஹோட்டல் ஆகட்டும், எட்டு மாடியுள்ள மாளிகைகள் ஆகட்டும், மலபார் குன்றிலுள்ள மச்சுத் தோட்டம் ஆகட்டும் - லலிதா பார்த்ததையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போனபடி நிற்பாள். சீதாவோ, அடிக்கடி, "இங்கே வாடி! இதைப் பாரடி! இப்படிப் பார்த்ததையே பார்த்துக் கொண்டு நின்றால் பட்டிக்காடு என்று பரிகாசம் செய்வார்கள். ஓடி வாடி! ஓடி வா!" என்று அவசரப்படுத்துவாள்; கையைப் பிடித்து இழுப்பாள்; முதுகைப் பிடித்துத் தள்ளுவாள்; "சீ! அசடே!" என்று சில சமயம் வையவும் வைவாள். ஆனால், இதையெல்லாம் லலிதா பொருட்படுத்தவில்லை. சீதாவிடம் அவளுக்கு ஏற்பட்டிருந்த அளவில்லாத பிரியமும் அவளாலேதானே இந்தப் பம்பாய்க் காட்சிகளையெல்லாம் பார்க்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியும் சேர்ந்து சீதா இழுத்த இழுப்புக்கெல்லாம் லலிதா பம்பாயில் தங்கிய நாட்களில் எப்போதும் ஒரே உற்சாகமாயிருந்தாள். இதற்கு முன் எந்த நாளிலும் அவள் அவ்வளவு சந்தோஷமாயிருந்ததில்லை.
ஆனால் கிட்டாவய்யரும், அவருடைய மனைவி சரஸ்வதி அம்மாளும் வெவ்வேறு காரணங்களினால் லலிதாவுக்கு நேர்மாறான மனோநிலையை அடைந்திருந்தார்கள். ராஜத்தின் வாழ்க்கை ஏமாற்றமும் மன வேதையும் நிறைந்தது என்று கிட்டாவய்யர் அறிந்து கொண்டார். ஆனால் அதன் காரணங்களை அவர் தெளிவாக அறிய முடியவில்லை. அவர்கள் பம்பாயில் தங்கியிருந்த நாட்களில் துரைசாமி அபூர்வமாகவே வீட்டுக்கு வந்தார். வந்தபோதெல்லாம் முக மலர்ச்சியோடு மரியாதையாகவே பேசினார். இரவு நேரங்களில் பெரும்பாலும் 'டியுடி' இருக்கிறதென்பதாய்ச் சொல்லி அவர் வீட்டிற்கு வருகிறதில்லை.
ராஜத்தின் கஷ்டங்களைக் கிட்டாவய்யர் அறிந்து கொள்ள முயன்றார். பணக்கஷ்டம் இருப்பது பிரத்யட்சமாகத் தெரிந்தது. ராஜத்தின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தொங்கிய திருமாங்கல்யத்தைத் தவிர வேறு ஆபரணம் என்பதே கிடையாது. கிட்டாவய்யர் எதிர்பார்த்தபடி ராஜம் அதிகமாக மெலிந்து படுத்த படுக்கையாக இல்லை. சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டுதான் இருந்தாள்.
கிட்டாவய்யர் ராஜத்தைக் கேட்டபோது, "எனக்கு உடம்பு ஒன்றுமில்லை, அண்ணா! உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருந்தது. அதற்காகத்தான் அப்படி எழுதியிருந்தேன்" என்றாள். கிட்டாவய்யர் இதனால் ஏமாந்து விடாமல் மேலும்மேலும் கேள்விகள் கேட்டு உண்மை அறிய முயன்றார். "ஏன் அம்மா, ராஜம்! உன் அகத்துக்காரருக்கு ஏதேனும் கெட்ட பழக்கம் உண்டோ ? குடி, கிடி...." "குடி, குதிரை பந்தயம் இன்னும் எல்லாம் உண்டு, அண்ணா! அதை யெல்லாம் ஏன் கேட்டு என் வயிற்றெரிசலைக் கிளப்புகிறாய்?" என்று சொல்லி விட்டுக் கலகலவென்று கண்ணீர் வடித்தாள். கிட்டாவய்யர் அவளுக்குத் தேறுதல் கூறிக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டார். சூதாட்டங்களோடு கூடச் சிற்றின்ப விவகாரங்களிலும் துரைசாமி ஈடுபவதுண்டு என்று ராஜத்தின் சிற்சிலவார்த்தை களிலிருந்து கிட்டாவய்யர் ஊகித்தார். ஆனால் தங்கையிடம் இதைப்பற்றி அதிகம் கேட்பதில் உள்ள விரஸத்தைக் கருதி நிறுத்திக் கொண்டார்.
துன்பப்பட்டிருந்த ராஜத்தினிடம் கிட்டாவய்யர் காட்டிய பிரியத்தையும் அநுதாபத்தையும் பார்க்கப் பார்க்க, சரஸ்வதி அம்மாளின் உள்ளத்தில் குரோதப் புகை கிளம்பத் தொடங்கியது. ராஜத்தின் கஷ்டங்களைத் தெரிந்து கொள்வதற்காக அவளிடம் அவர் தனியாகப் பேசும் போதெல்லாம் சரஸ்வதி அம்மாள் அங்கே தேடிக்கொண்டு வந்து சேருவாள். "சரசு! நீ போ!" என்றால், "இரகசியம் என்ன இரகசியம்? நல்ல வெட்கக் கேடு!" என்று கன்னத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு திரும்பிச் செல்வாள். "அந்தப் பிராமணர் பரமசாது! தங்கக் கம்பி; பார்ப்பதற்கு மகாராஜா மாதிரியிருக்கிறார். இந்தத் துக்கிரிதான் இப்படிக் குடித்தனத்தைப் பாழாக்கியிருக்கிறாள்!" என்று முணுமுணுப்பாள். தன் புதல்வி லலிதாவைக் காட்டிலும் ராஜத்தின் மகள் சீதா சிவப்பாகவும் இலட்சணமாகவும் இருப்பதைப் பார்க்கப் பார்க்கச் சரஸ்வதிக்கு ஆத்திரம் பொங்கியது. சீதா கலகலவென்று பேசுவதும் சிரிப்பதும் இவளுக்குக் குரோதத்தை உண்டாக்கியது. லலிதா எப்போதும் சீதாவைப் பின்தொடர்ந்து போவதும், அவள், "சீ! போடி! வாடி!" என்று அதட்டுவதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருப்பதும் சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவேயில்லை.
இந்த நிலைமையை ராஜம் ஒருவாறு அறிந்துகொண்டு தன்னுடைய இனிய பேச்சினாலும் உபசாரத்தினாலும் மன்னியைக் கூடுமான வரையில் சாந்தப்படுத்தி வந்தாள். லலிதாவின் பேரில் ரொம்பவும் அதிகாரம் செலுத்தாதபடி சீதாவுக்கு அடிக்கடி எச்சரிக்கை செய்து வந்தாள். இதனாலெல்லாம் சரஸ்வதி அம்மாளின் மனம் சாந்தம் அடையவில்லை. லலிதா சீதா இவர்களின் தோற்றத்தை அவளுடைய உள்ளம் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. லலிதா மாநிறமானவள்; சீதாவின் மேனியோ வெண்பட்டினையொத்த சந்தன வர்ணங்கொண்டது. சாமுத்திரிகா இலட்சணம் அறிந்தவர்கள் ஒருவேளை சீதாவைவிட லலிதாதான் அழகுடையவள் என்று சொல்லக்கூடும். ஆனால் மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்கு இருவரில் சீதாதான் அழகி எனத் தோன்றும். லலிதாவின் கண்கள் நீண்டு சாந்தம் குடிகொண்டு தாமரை இதழின் வடிவை ஒத்திருந்தன. சீதாவின் கண்களோ அகன்று வட்ட வடிவமாய்க் குமுத மலரையொத்திருந்தன. அவளுடைய கண்ணிமைக் குள்ளே கருவிழிகள் அங்குமிங்கும் சுழன்று சஞ்சல புத்தியைக் காட்டின என்றாலும், பார்ப்பவர்களை உடனே பிரமிக்கச் செய்யும் தன்மை வாய்ந்திருந்தன.
சீதா பம்பாய்ப் பட்டிணத்தின் நாகரிகத்தில் பிறந்து வளர்ந்தவள். லலிதாவோ பட்டிக்காட்டிலேயே இருந்தவள். அதற்குத் தகுந்தபடி அவர்களுடைய நடை உடை பாவனைகள் அமைந்திருந்தன. சீதாவின் காதுக்கருகில் தொங்கிய சுருட்டை மயிர் ஒன்றே போதும், அவளுடைய முக வசீகரத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு. அவளுடைய பேசுந் திறமையைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. கலகலவென்று வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருப்பாள். லலிதா ஒருவார்த்தை சொல்லுவதற்குள் சீதா பத்து வார்த்தை சொல்லிவிடுவாள். 'கான்வெண்ட்' பள்ளிக் கூடத்தில் படித்தவளாதலால் பேசிக் கொண்டேயிருக்கும் போது திடிரென்று ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடி லலிதாவைத் திகைக்கப் பண்ணி விடுவாள்.
இவ்வளவுக்கும் மேலாக லலிதாவைவிடச் சீதா ஒரு வயது அதிகமானவள். ஆகையால் அவளிடம் யௌவனத்தின் சோபை பிரகாசிக்கத் தொடங்கியிருந்தன. இப்படியெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து, லலிதாவைக் காட்டிலும் சீதா வசீகரம் பெற்றிருப்பதேன் என்பதாகச் சரஸ்வதி அம்மாளால் நிர்ணயிக்க முடியவில்லை. மொத்தத்தில் தன் புதல்வியைக் காட்டிலும் தன் நாத்தனாரின் மகள் அதிக அழகு பெற்று விளங்குகிறாள் என்பதை மட்டும் அவள் உள்ளம் உணர்ந்தது. இது காரணமாக அந்த அம்மாளின் சுபாவமே மாறிவிட்டது.
ராஜம்பேட்டை போஸ்டுமாஸ்டர் பங்காருநாயுடு சரஸ்வதி அம்மாளைப்பற்றிக் கொடுத்த அபிப்பிராயம் ஒரு வருஷத்துக்கு முன்னால் வரையில் உண்மையாயிருந்தது. பம்பாய்க்குப் போய்த் திரும்பியதிலிருந்து சரஸ்வதி அம்மாளின் இயற்கையின் கோபதாபங்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன. லலிதாவைச் சிங்காரிப்பதிலும் அழகுபடுத்துவதிலும் முன்னைக் காட்டிலும் லலிதாவுக்குக் கிடைத்த அடிகள், திட்டுகளுக்குக் கணக்கேயில்லை. அதிலும், சீதாவின் பேச்சை லலிதா எடுத்து விட்டால், அன்று வீடு அமர்க்களம்தான்! பலமுறை தலையில் பட்டுப் பட்டென்று குட்டுகள் விழுந்த பிற்பாடும் லலிதாவுக்கு மட்டும் புத்தி வரவேயில்லை. அத்தங்காள் சீதாவைப்பற்றி யாரிடமாவது ஏதாவது பெருமையடித்துக் கொள்ளாவிட்டால் அவளுக்கு அன்றிரவு தூக்கம் வராது; அப்படித் தூங்கினாலும் சொப்பனத்தில் அக்கிரகாரத்துப் பெண்களிடம் தன் பம்பாய் அத்தங்காளைப் பற்றி ஏதாவது சொல்லியே தீருவாள்.