அலை ஓசை/பூகம்பம்/தேவி பராசக்தி
கதையோ கற்பனையோ என்று கிட்டாவய்யர் சந்தேகப்படும்படி ராஜம்மாள் கூறிய வரலாறு அத்துடன் முடியவில்லை. ராஜத்தையும் சீதாவையும் அதிசயக் கடலில் மூழ்க அடித்து விட்டு அந்த ஸ்திரீ கீழே இறங்கிப் போன சிலநிமிஷத்துக் கெல்லாம் துரைசாமி வந்து சேர்ந்தார். ராஜத்தைப் பார்த்து "இங்கு யாராவது வந்திருந்தார்களா, என்ன? நான் மச்சுப்படி ஏறி வந்தபோது ஒரு 'ஜெனானா' ஸ்திரீ, முகத்தை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு தடதடவென்று இறங்கி ஓடினாளே?" என்றார்.
ராஜம் சீதாவைக் குறிப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு "இங்கு ஒருவரும் வரவில்லையே!" என்றாள். "போகட்டும்; சாயங்கால வேளையில் நீ ஏன் படுத்திருக்கிறாய்? உனக்கு ஏதாவது உடம்பா, என்ன?" என்று கேட்டார் துரைசாமி. "அதெல்லாம் எனக்கு உடம்பு, கிடம்பு ஒன்றுமில்லை. ஏதோ படபடவென்று வந்தது, படுத்துக் கொண்டேன்" என்றாள் ராஜம். துரைசாமி அருகில் வந்து ராஜத்தின் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தார்! அவருடைய கை ஏன் இவ்வளவு ஜில்லிட்டிருக்கிறது என்று ராஜம் எண்ணினாள். "அசடே! உடம்பு ஒன்றுமில்லை என்கிறாயே! 103 டிகிரி சுரம் இருக்கும் போலிருக்கிறதே! இதோ தெர்மா மீட்டர் எடுத்துக்கொண்டு வருகிறேன்!" என்று துரைசாமி தம்முடைய அறைக்குச் சென்றார். அவர் அப்பால் போனதும் சீதா அம்மாவைத் தொட்டுப் பார்த்து விட்டு, "ஆம் அம்மா! அப்பா சொன்னது சரிதான்! உடம்பு கொதிக்கிறதே?" என்றாள். ராஜத்துக்கும் தனக்குச் சுரந்தான் என்று தெரிந்து விட்டது. உடனே ஒரு சந்தேகம் உதித்தது. சற்று முன் நடந்ததெல்லாம் சுரத்தின் வேகத்திலே தனக்குத் தோன்றிய பிரமையோ என்று எண்ணினாள். அந்த எண்ணம் அவளுக்கு மிக்க வேதனை அளித்தது. அவளுடைய முப்பத்தைந்து பிராயத்தில் இன்று ஒருநாள் அவளுடைய வாழ்க்கை கதைபோல் ஆகியிருந்தது. கதைகளில் நடப்பது போன்ற அதிசயச் சம்பவம் அன்று நடந்திருந்தது. அது பொய்யாய், கானல் நீராய் வெறும் பிரமையாய்ப் போவதாயிருந்தால், அவளுக்கு ஏமாற்றமாயிராதா?
சந்தேகம் தோன்றிய ஒரு நிமிஷ நேரத்துக்கெல்லாம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வழி தோன்றியது. தலையணை யடியில் கையை விட்டுத் துழாவிப் பார்த்தாள். ரூபாய் நோட்டுக் கத்தையும் ரத்தின ஹாரமும் கையில் தட்டுப்பட்டன. பிரமையல்ல, உண்மைதான் என்று நிச்சயம் செய்துகொண்டாள். சீதாவை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டு, "சீதா! அப்பாவிடம் ஒன்றும் சொல்லாதே! காரணம் பிற்பாடு சொல்கிறேன்" என்று காதோடு சொன்னாள். சீதாவும் குறிப்பை அறிந்து கொண்டு, "சரி அம்மா!" என்றாள். துரைசாமி தெர்மாமீட்டர் கொண்டு வந்து வைத்துப் பார்த்தார், சுரம் 104 டிகிரி இருந்தது. "ஏதோ இந்த வருஷத்துக்கு இன்னும் நீ படுத்துக் கொள்ளவில்லையே என்று பார்த்தேன். படுத்துக்கொண்டாயல்லவா?" என்றார் துரைசாமி. பிறகு அவசரமாக டாக்டரை அழைத்து வரச் சென்றார்.
அன்று படுத்த ராஜம் இருபது நாளைக்குமேல் ஆகியும் எழுந்திருக்கவில்லை. முதலில் 'இன்புளூயன்ஸா' என்றார் டாக்டர். ஐந்து நாள் ஆன பிறகு, "டைபாய்டு என்று சந்தேகமாயிருக்கிறது; பார்க்கலாம்" என்றார். பத்து நாள் ஆன பிறகு, "டைபாய்டு இல்லை; 'காலா ஹஸார்' என்று ஒரு புது சுரம் இப்போதெல்லாம் வருகிறது ஒருவேளை அதுவாயிருக்கலாம்" என்றார். கடைசியில், இது உடம்பைப் பற்றியே வியாதியே இல்லை; மனோ வியாதிதான் என்று முடிவு கூறினார். ஆயினும் தினம் தினம் மருந்து எழுதிக் கொடுப்பதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.
இவ்வளவையும் ஓரளவு அவநம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டிருந்த கிட்டாவய்யர், "போதும் ராஜம்! நிறுத்து! பாக்கியை நாளைக்குச் சொல்லலாம்!" என்றார். இதற்குள் டாக்டருடன் மருந்துக் கடைக்குச் சென்ற துரைசாமியும் மருந்து வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தார். முன்னதாக அவருடைய வரவைத் தெரிவித்துக் கொண்டே சீதா அந்த அறைக்குள்ளே பிரவேசித்தாள். தனது மனைவியும் மைத்துனரும் இருந்த நிலையைப் பார்த்துவிட்டுத் துரைசாமி, "அண்ணா அருமையாக வந்திருக்கிறீர்களே என்று மொச்சு, மொச்சு என்று பேசிக் கொட்டினாளாக்கும். அதிகமாகப் பேசக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அவள் பேசாதபடி நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். நான் சொன்னால் கேட்பதில்லை" என்றார்.
கிட்டாவய்யர் தம் மனத்திற்குள், "நல்ல வேலை நமக்கு இடுகிறார்? அகண்ட காவேரியில் வரும் வெள்ளத்தை அணை போட்டு நிறுத்து என்று சொல்வது போலிருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டார். வழக்கம்போல் அடுத்த நாளும் டாக்டர் வந்தார். தமக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவே ராஜம் வியாதியாய்ப் படுத்துக் கொண்டாள் என்ற பாவத்துடனே வழக்கமாகச் சோதனை களைச் செய்தார். "நான் சொன்னது சரிதான்; அண்ணா வந்ததில் தங்கைக்குக் கொஞ்சம் உடம்பு சௌகரியமாய்த்தான் இருக்கிறது!" என்றார். ஆனாலும் காகிதமும் பேனாவும் எடுத்துப் பத்துவிதமான மருந்துகளை வரிசையாக எழுதிக் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்.
அன்றைக்கும் டாக்டரின் காரில் துரைசாமி மருந்து வாங்கப் போன பிறகு, கிட்டாவய்யர், தங்கையின் சமீபத்தில் போய் உட்கார்ந்தார். "ராஜம்! நீ அதிகமாய்ப் பேச வேண்டாம் ஆனால், ஒரு விஷயம் கேட்கிறேன்; அதற்கு மட்டும் யோசித்துப் பதில் சொல்! நீ கொடுத்த பணத்தையும் நகையையும் சீதாவுக்காக உபயோகப்படுத்த வேண்டியதுதானா? அவை கிடைத்த விதத்தைப் பற்றி நீ சொன்ன விவரம் அவ்வளவு திருப்திகரமாயில்லையே! அதாவது கோயில் குளம் அல்லது தர்ம காரியத்துக்குக் கொடுத்து விடுகிறேனே! சீதாவுக்கு நான் கலியாணம் பண்ணி வைக்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். யாரோ வழியிலே போகிற ஸ்திரீ கொடுத்தது நமக்கு என்னத்திற்கு? அவள் யாரோ, என்னமோ, எப்படி இந்தப் பணமும் நகையும் அவளுக்குக் கிடைத்ததோ? அவள் கத்தியை வைத்து விட்டுத் திரும்பி வந்து எடுத்துப் போனதாக நீ சொன்னதெல்லாம் அவளைப்பற்றி என்னவெல்லாமோ சந்தேகத்தை உண்டாக்குகிறது. நன்றாய் யோசித்துச் சொல்லு!" என்றார்.
"நன்றாய் யோசித்து விட்டேன், அண்ணா! ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாக யோசித்து விட்டேன். உன்னைப் போலவே நானும் ஏதாவது தான தர்மத்துக்குக் கொடுத்து விடலாமென்று யோசித்தேன். பீஹார் பூகம்ப நிதிக்குக் கொடுத்து விடலாம் என்று கூட எண்ணினேன். உனக்குத் தெரியும் அல்லவா, அண்ணா! நீதான் பத்திரிகை படிக்கிறவன் ஆயிற்றே? எத்தனையோ பெரிய பட்டிணங்கள் எல்லாம் ஒரே நிமிஷத்தில் மண்ணோடு மண்ணாகி விட்டதாம். அங்கே ஜனங்களின் கஷ்டத்தைக் கேட்கச் சகிக்க வில்லை. அந்த நிதிக்குக் கொடுத்து விடலாமா இந்தப் பணத்தை என்று நினைத்தேன்.ஆனால், அப்படிச் செய்ய மனது வரவில்லை அது சீதாவின் சீதனம் - வேறு விதமாய்ச் செலவழிக்க எனக்குப் பாத்தியதை இல்லை என்று தோன்றியது. பூகம்ப நிதிக்கு நீ ஏதாவது கொடுத்தாயா, அண்ணா?" என்று கேட்டாள்.
"அதெல்லாம், பெரிய விஷயம் அம்மா! நீயும் நானும் கொடுத்துத்தானா ஆகப் போகிறது?" "அப்படியில்லை ஏதோ நாமும் மனுஷ ஜன்மந்தான் என்று காட்டிக் கொள்ள வேண்டாமா? நம்மாலானதை நாம் செய்கிறது?" "ஆகட்டும்; அப்படியே செய்யலாம். சீதாவின் விஷயத்தை இப்போது பேசி முடிக்கலாம்; அந்தப் பணத்தையும் நகையையும்...." "சீதாவுக்குக் கிடைத்த அந்தச் சீதனம் சாதாரண சீதனமல்ல, அத்துடன் தெய்வத்தின் ஆசிர்வாதமும் சேர்ந்திருக்கிறது, அண்ணா!" "அது எப்படிச் சொல்கிறாய்? அந்த ஸ்திரீ யார், எப்படிப் பட்டவள் என்று எதுவும் தெரியவில்லையே?" ராஜம் சற்று நேரம் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, கண்ணைத் திறந்து கிட்டாவய்யரை ஏறிட்டுப் பார்த்து, அந்த ஸ்திரீ யார் என்று எனக்குத் தெரியும், அண்ணா!" என்றாள்.
"தெரியுமா? பின்னே ஏன் யாரோ என்று சொன்னாய்? அவள் யார்?" "இத்தனை நாளாக அவள் யார் என்று தெரியவில்லை; அதனால் 'யாரோ' என்றேன். நேற்று இரவு நான் கண்ட கனவிலே இந்த ஸ்திரீ இன்னார் என்று தெரிந்தது." "அப்படியா, அம்மா! யார் என்று தெரிந்ததா?" "அவள் 'தேவி பராசக்தி' அண்ணா! என்னுடைய இருபது வருஷப் பிரார்த்தனை வீண் போகவில்லை?" என்றாள் ராஜம். அவளுடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. இதனால் கிட்டாவய்யருடைய மனம் இன்னும் அதிகமாகக் குழம்பியது. "டாக்டர் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது. இவளுக்கு மனத்திலேதான் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டார். உடம்பாயிருந்தாலும் மனதாயிருந்தாலும் சீக்கிரத்தில் ராஜத்தைக் குணப்படுத்தி அருளும்படி அவளுடைய குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார். அதற்கு மறு நாளும் டாக்டர் வந்தார். வழக்கம்போல் சோதனை செய்து பார்த்தார். "இன்றைக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை!" என்றார். பிறகு 'பிரிஸ்கிருப்ஷன்' எழுதுவதற்குக் கையில் காகிதமும் பேனாவும் எடுத்தார் ஆனால் ஒன்றும் எழுதவில்லை. திடீரென்று ஏதோ தோன்றியவரைப் போல் காகிதத்தையும் பேனாவையும் கீழே வைத்தார்.
"மிஸ்டர் துரைசாமி! ஒரு விஷயம் சொல்லட்டுமா?" என்றார். "பேஷாகச் சொல்லுங்கள்! கேட்பானேன்?" என்றார் துரைசாமி. "உங்கள் சம்சாரத்துக்கு இனிமேல் இந்த மருந்துகளினாலெல்லாம் உபயோகமில்லை!" "பின்னே என்ன மருந்து உபயோகம்? ஆயுர்வேதம் பார்க்கலாம் என்கிறீர்களா?" "ஆயுர்வேதத்திற்குப் போனால் அவ்வளவுதான். இந்த அம்மாளை யமனிடம் ஒப்புவிக்கிற மாதிரிதான்!" "பின்னே என்ன சொல்கிறீர்கள்?"
"உங்கள் மனைவிக்கு இப்போது கொடுக்க வேண்டிய மருந்து இடமாறுதல்தான். இந்தப் பம்பாய் நகரத்தில் இருபது வருஷமாக இருந்திருக்கிறார்கள் அல்லவா? வேறு ஊருக்குப் போய்ச் சில நாள் இருந்துவிட்டு வரட்டும். உங்கள் மைத்துனர் கிட்டாவய்யர் கிராமவாசிதானே? அவரோடு கூட்டி அனுப்புங்களேன்!" "எனக்குக் கொஞ்சங்கூட ஆட்சேபமில்லை. கிட்டாவய்யர் அழைத்துப் போவதாயிருந்தால்...." "அழைத்துப் போவதாயிருந்தால் என்ன? திவ்யமாக அழைத்துப் போகிறேன். போன வருஷமே அழைத்துப் போகிறேன் என்று சொன்னேன். இவர்தான் அனுப்பவில்லை...." "நானா அனுப்பவில்லை? உங்கள் தங்கைதான் 'போக மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாள்."
"இந்த வருஷமும் அதையேதான் சொல்லுகிறேன்!" என்றாள் ராஜம்மாள். "இந்தப் பிடிவாதம் உனக்கு ஆகாது. அம்மா!ஊர் மாறாவிட்டால் உனக்கு உடம்பு குணமாகாது." "டாக்டர்! இருபது வருஷமாக இந்த இடத்தில் இருந்து விட்டேன். பாக்கி இருக்கும் சில நாளும் இங்கேயே இருந்து விடுகிறேன்." "அப்புறம் உங்கள் இஷ்டம்; நான் என்ன சொல்லட்டும்?" என்று டாக்டர் கூறி மறுபடியும் காகிதத்தையும் பேனாவையும் எடுத்து வரிசையாக மருந்துகளை எழுதினார்.