அலை ஓசை/பூகம்பம்/பத்மாபுரம்
சென்னைப் பட்டினத்தின் ஒரு புதிய பகுதியான பத்மாபுரத்தைப் பற்றி அறியாதவர்கள், அறியாதவர்களே ஆவர். தினப்பத்திரிகை வாசகர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியாகும் பத்திரிகையில் நகர நிகழ்ச்சிக் குறிப்புகளில் 'பத்மாபுரம்' என்ற பெயரைக் கட்டாயம் படித்திருப்பார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் ஏதேனும் ஒரு கூட்டம் கட்டாயம் நடந்தே தீரும். அந்தக்கூட்டத்தில் யாரேனும் ஒரு அரசியல் நிபுணரோ அல்லது பிரசித்தமான சமூகப் பிரமுகரோ அல்லது இலக்கிய மகாவித்வானோ உபந்நியாசங்கள் செய்தே தீருவர். திங்கட்கிழமை தினப்பத்திரிகைகளில் முக்கியமான இடத்தில் இரண்டு பத்தியை மேற்படி உபந்நியாசங்கள் அடைத்துக் கொண்டு மற்றச் செய்திகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடும்.
பிரசங்க சாகர உபந்நியாச ரத்னாகர படாடோ ப பயங்கர பிருந்தாவனச்சாரியாருக்கு எண்பத்தேழாவது அஸ்திபூர்த்தி விழா ஒரு சமயம் வந்தது. அதை இந்தப்பரந்த உலகத்தில் யாருமே கவனியாமல் இருந்து விட்டார்கள். ஆனால், பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தார் சும்மா விட்டுவிடவில்லை. "உலகமெல்லாம் கொண்டாடாமல் விட்டாலும் நாங்கள் கொண்டாடுவோம். மேதாவியின் பெருமையை எங்களைப் போன்ற மேதாவிகளால் தான் அறிய முடியும்; மற்றவர்களாலே எப்படி முடியும்?" என்று சொன்னார்கள். எண்பத்தேழு அங்குல நீளம், எண்பத்தேழு அங்குலம் அகலம், எண்பத்தேழு அங்குல உயரமுள்ள ஒரு மகத்தான பிரசங்க மேடையை அமைத்தார்கள். எண்பத்தேழு கால் நட்டுப் பந்தல் போட்டார்கள். ஐன்ஸ்டின், ரோமன் ரோலண்டு, ரொனால்டு, கால்மென், பெர்னாட்ஷா, மிக்கி மவுஸ் முதலிய உலகப் பிரமுகர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப் பினார்கள். அன்று மாலையில் பத்மாபுரத்தில் பார்த்தால் ஒரே அல்லோல கல்லோலமாய் இருந்தது. அன்றைய கூட்டத்தில் தினப்பத்திரிகை நிருபர்கள் மட்டும் பதினைந்து பேர் வந்திருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.அந்தப் பதினைந்து பத்திரிகை நிருபர்களும் பத்மாபுரத்தில் சொந்த வீட்டிலோ அல்லது வாடகை வீட்டிலோ குடியிருப்பவர்கள். எனவே, அவர்கள் சபையோர்களாகவும் விளங்குவார்கள்! பத்திரிகை நிருபர்களாகவும் தங்கள் கடமையைச் செய்வார்கள்.
பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் கூட்டம் என்றால் எப்படிப்பட்ட பிரமுகர்களும் உடனே பிரசங்கம் செய்ய ஒப்புக்கொள்வதின் இரகசியம் இதுதான். பத்மாபுரத்தில் முப்பது பேர் அடங்கிய சபையில் பிரசங்கம் செய்வதும் சரி, வேறு எங்கேயாவது முப்பதினாயிரம் ஜனங்கள் அடங்கிய சபையில் பிரசங்கம் செய்வதும் சரி என்பது உபந்நியாசகர்களின் உலகத்தில் சகலரும் அறிந்த உண்மை. ஆகவே பத்மாபுரம் சங்கத்திலிருந்து பேசுவதற்கு அழைப்பு வந்துவிட்டதென்றால் ஹைகோர்ட் ஜட்ஜுக்கள் என்ன, அரசியல் தலைவர்கள் என்ன, பேராசிரியர்கள் என்ன, பிரசங்க காளமேகங்கள் என்ன, சங்கீத கலாநிதிகள் என்ன - யாராயிருந்தாலும் பெருமிதம் அடைந்து மகிழ்வார்கள். பத்மாபுரம் பற்றி எதற்காக இவ்வளவு வர்ணனை? - என்று வாசகர்கள் கேட்கலாம். என் அன்பார்ந்த தமிழ்நாட்டுச் சகோதர சகோதரிகளே! பத்மாபுரத்தைப் பற்றி நாம் இத்தனை தூரம் வர்ணிப்பதற்குத் தகுந்த முகாந்திரம் இருக்கிறது. அசைக்க முடியாத காரணங்கள் இருக்கின்றன. (கேளுங்கள் கேளுங்கள்!) சரிதான்! பத்மாபுரத்துப் பிரசங்க ஆவேசம் நம்மையும் பிடித்துக் கொண்டது; மன்னிக்கவும்.
நம்முடைய கதையின் பிரதான கதாநாயகனான ஸ்ரீ சௌந்தரராகவன் தற்சமயம் பத்மாபுரத்தில் இருக்கிறான் என்று சொன்னால், அதற்கு மேலே வேறு என்ன சொல்ல வேண்டும்? பத்மாபுரத்தைப் பற்றி எவ்வளவு வர்ணனை செய்தாலும் அதிகமாகி விடாதல்லவா? பத்மாபுரத்தில் மொத்தம் பன்னிரண்டு வீதிகள் உண்டு. ஒவ்வொரு வீடும், முன்னாலும், பின்னாலும் இருபுறமும் தோட்டமுள்ள பங்களாக்கள். அநேகமாக எல்லா வீடுகளும் மச்சு வீடுகள். மாடி இல்லாத வீட்டைப் பத்மா புரத்துப் பன்னிரண்டு வீதிகளிலும் தேடினால் ஒருவேளை எங்கேயாவது ஒன்று இரண்டு இருக்கலாம். அவையும் மற்றப் பெரிய மச்சு வீடுகளுக்கு மத்தியில் தாம் இருப்பது பற்றி வெட்கப்பட்டுக் கொண்டு சுற்றிலுமுள்ள மரங்களினால் தங்களை மறைத்துக் கொண்டு நிற்கும்.
பத்மாபுரத்து மாடி வீடுகளுக்குள்ளே ஒரு மாடி வீடு தனி அந்தஸ்துடன் தலை நிமிர்ந்து நின்றது. அதனுடைய வாசல் கேட்டின் இரு பக்கத் தூண்களிலும் இரண்டு கரும் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றில் "தேவி ஸதம்" என்றும், இன்னொன்றில் "ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரி பி.ஏ. பி.எல். மாஜி சப்ஜட்ஜ்" என்று எழுதப்பட்டிருந்தன.
பத்மாபுரத்தில் வசித்த பிரமுகர்களிலே ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் முதன்மை பெற்றவர். பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் எந்தக் கூட்டத்திலும், பிரசங்க மேடைக்குப் பக்கத்தில் போடப்படும் கௌரவ நாற்காலிகளிலே முதல் நாற்காலியில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகளையும் அவருடைய வெள்ளிப் பூண் போட்ட கைத்தடியையும் காணலாம். ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாரை இன்னும் சில இடங்களிலேயும் அந்தக் காலத்து மனிதர்கள் கண்டிருக்கலாம். ஆங்கில தினப் பத்திரிகைகளில் நேயர்களின் கடிதப் பத்தியில் அடிக்கடி அவருடைய பெயர் தென்படுவதுண்டு. முக்கியமாக ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியும் பேராசிரியர் பரிவிராஜக சர்மாவும் அவ்வப்போது நடத்திக் கொண்டிருந்த யுத்தங்கள் உலகப் பிரசித்தமானவை.
எப்போதாவது காந்தி மகாத்மாவோ பண்டித மதன்மோகன் மாளவியாவோ ஆசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களோ தங்களுடைய பொதுப் பேச்சுக்களில் பகவத் கீதையைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார்களானால், வந்தது விபத்து. உடனே ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியார் தமது கைத்தடியை எடுத்துச் சுவரின் மூலையில் சாத்திவிட்டுக் கையிலே தம்முடைய 'ஆய்வந்த' உலக்கைப் பௌண்டன் பேனாவை எடுத்துக் கொள்வார்; எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்குவார். எழுதுவார், எழுதுவார், அப்படியே எழுதுவார். எழுதியதைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு கையில் மறுபடியும் தடியை எடுத்துக் கொண்டு பத்திரிகைக் காரியாலயத்துக்குப் போய்ப் பத்திரிக்கை யாசிரியரை நேரிலே பார்த்துத் தமது கடிதத்தைக் கொடுப்பார். கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிய வேண்டுமா? காந்திஜிக்காவது, மாளவியாஜிக்காவது, ராதா கிருஷ்ணனுக்காவது பகவத்கீதையைப் பற்றிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை என்பதாக ஒரு கேள்வி கேட்டுக்கொண்டு அவர் குறிப்பிட்ட பகவத்கீதை சுலோகத்துக்கு அர்த்தம் இப்படி என்று எடுத்துக் காட்டுவார். அந்தச் சுலோகத்தை அவர்கள் தப்பாகக் கையாண்டுயிருப்பதை எடுத்துக்காட்டி, இனிமேல் மேற்படியாளர்கள் வேறு எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் பகவத்கீதையைப் பற்றி மட்டும் பேசவேண்டாம் என்று எச்சரிக்கை செய்து முடித்திருப்பார்.
சாஸ்திரிகளின் கடிதம் பிரசுரமான இரண்டு நாளைக்கெல்லாம் பரிவிராஜக சர்மாவின் கடிதம் பிரசுரமாகும் என்று வாசகர்கள் நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தது வீண் போகாது. சர்மாவின் கடிதமும் அச்சில் வரும். அதில் சர்மாவானவர் காந்திஜியையும் மாளவியாவையும் பற்றிச் சாஸ்திரியார் எழுதியிருப்பதை ஒப்புக்கொண்டு பலமாக ஆதரிப்பார். "அவர்களுக்கெல்லாம் பகவத்கீதையைப் பற்றி ஒன்றும் தெரியாது; ஒன்றுமே தெரியாது; தங்களுக்குப் பகவத்கீதையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு, "ஆனால்" என்று ஆரம்பிப்பார். ஆரம்பித்து ஓர் அதிசயமான கேள்வியைப் போடுவார். "ஆனால் நமது ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிக்கு மட்டும் பகவத்கீதையைப் பற்றித் தெரியுமா? பகவத்கீதையை அவர் குருமுகமாகப் பாடங்கேட்டதுண்டா? பாராயணம் செய்ததுண்டா? பகவத்கீதையைக் கண்ணாலாவது அவர் பார்த்தது உண்டா? அப்படிப் பார்த்திருந்தாரானால் பகவத்கீதையின் பதினோராவது அத்தியாயத்தில் இருபத்தேழாவது சுலோகத்தை குறிப்பிட வந்தவர் இருபத்தெட்டாது சுலோகத்தை எதற்காக குறிப்பிட்டார்? அதையாவது சரியாகக் குறிப்பிட்டாரா? இருபத்தெட்டாவது சுலோகத்தில், 'அர்ச்சுனா! என்னைப் பார்!' என்று பகவான் அருளியதாகச் சொல்லியிருப்பது எவ்வளவு அசம்பாவிதம்? 'என்னைப் பார்!' என்று பகவான் சொன்னாரா?
சாஸ்திரியாரே! பகவத்கீதைப் புத்தகத்தை எடுத்துக் கண்ணையும் கண்ணாடியையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு பாரும், பாரும், ஐயா பாரும்! 'என்னைப் பார்!' என்றா பகவான் சொல்லியிருக்கிறார்? அப்படிச் சொல்லியிருந்தால் அவர் பகவான் ஆவாரா? 'என்னைப் பார்ப்பாயாக!' என்றல்லவோ பகவான் சொல்லியிருக்கிறார்? 'என்னைப் பார்!' என்பதற்கும் 'என்னைப் பார்ப்பாயாக!?' என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் ஆனைக்கும் பூனைக்கும் எருமைக்கும் எறும்புக்கும் உள்ள வித்தியாசம் உண்டு என்பது தெய்வீக சமஸ்கிருத பாஷையில் அ, ஆ படித்திருக்கும் குழந்தைக்குக் கூடத் தெரியவரும். ஆனால் இரண்டு குட்டிச்சுவர்களுக்கு ஆன வயதாகியிருக்கும் பத்மலோசன சாஸ்திரிக்கு அது எங்கே தெரியப்போகிறது? சம்ஸ்கிருதம் என்பது என்னவென்று அவருக்குத் தெரிந்தால் அல்லவா பகவத்கீதையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்? 'என்னைப் பார்!' என்பதற்கும், 'என்னைப் பார்ப்பாயாக!' என்பதற்குமுள்ள அஜகஜாந்தரமான வித்தியாசத்தைச் சாஸ்திரியாரால் எப்படித் தெரிந்து கொள்ளமுடியும்!"
இப்படியாகப் பேராசிரியர் பரிவிராஜக சர்மா வெளுத்து வாங்கியிருப்பார். ஆனால் இந்த வெளுப்புக்கெல்லாம் பயந்து போகிறவரா சாஸ்திரியார்? 'வெளுப்பானுக்கு வெளுப்பான் வண்ணாரச் சின்னான்' என்பதுபோலச் சாஸ்திரியார் மறுபடியும் பேனாவை எடுப்பார். சர்மாவின் கடிதத்தையும் அவருடைய யோக்யதையையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்தெறிந்து இன்னொரு கடிதம் எழுதிப் பத்திரிகைக் காரியாலயத்துக்கு எடுத்துச் சென்று பத்திரிகையாசிரியரை நேரில் பார்த்து அதைப் பிரசுரிக்கச் செய்வார். இவ்விதம் குறைந்தபட்சம் ஆறுமாதம் சாஸ்திரியாருக்கும் சர்மாவுக்கும் வாதப்போர் நடந்த பிறகு, "இத்துடன் இந்த விவாதம் முற்றுப் பெற்றது" என்று பத்திரிகையாசிரியர் குறிப்பு எழுதி முடிப்பது வழக்கம்.
ஆனால் நாளது 1934-ம் வருஷம் ஜனவரி மாதம் பிறந்து தேதி இருபத்தொன்று ஆகியும் இதுவரையில் அவர்களுக்குள் விவாதம் ஒன்றும் ஆரம்பமாகவில்லை. இதற்குக் காரணம் சில காலமாக ராவ்பகதூர் பத்மாலோசன சாஸ்திரியார் தமது இரண்டாவது குமாரனாகிய 'சௌந்தரராகவனைப்' பற்றிக் கவலையில் ஆழ்ந்திருந்ததுதான். சாஸ்திரியின் மூத்த குமாரனாகிய சங்கரநாராயணனைப் பற்றி ஏற்கனவே சாஸ்திரியாருக்கு ஒரு வகையில் ஏமாற்றம் உண்டாகியிருந்தது. சங்கரநாராயணன் நல்ல புத்திசாலிதான்; பள்ளிக்கூடத்திலும், கலாசாலையிலும் நன்றாகப் படித்து நல்ல மார்க்குகள் வாங்கி முதல்வகுப்பிலேயே எப்போதும் தேறிக் கொண்டு வந்தவன்தான்; சாஸ்திரியாருக்குப் புதல்வனாய்ப் பிறந்து படிப்பிலே சோடையாகி விடுவானா? பி.ஏ. பரீட்சையில் தேறி, எம்.ஏ பரீட்சையிலே தேறி பி.எல். பரீட்சையிலும் எம்.எல் பரீட்சையிலும் பிரமாதமாகத் தேறி, அப்புறம் பாஸ் செய்தவற்கு வேறு பரீட்சையில்லையே என்று சில காலம் தவித்துவிட்டுப் பிறகு வக்கீல் தொழிலில் இறங்கினான். அவனுடைய பிரசித்திப் பெற்ற பிரபல மாமனாராகிய அட்வகேட் தான் வியாக்ரமய்யரின் ஆதரவிலே தொழிலை ஆரம்பித்தான், இதுதான் விபரீதமாக முடிந்தது. அட்வகேட் வியாக்ரமய்யர் தம்மிடம் தொழில் கற்கவந்த மாப்பிள்ளையை அப்படியே விழுங்கிக் கொண்டு விட்டார். அதாவது மாமனார் வீட்டிலேயே மாப்பிள்ளை ஐக்கியமாகிவிட்டான்.
நடை உடை பாவனை எல்லாம் வைதிக பாணியிலிருந்து நவநாகரிகத்துக்கு மாறிப் போய்விட்டது. அவனுடைய மனைவியின் அபிப்பிராயத்தை அனுசரித்துத் தன்னுடைய பெற்றோர்களைப் பற்றிச் 'சுத்த கர்நாடகம்' என்று நினைக்கக் கூடிய அளவுக்கு அவனுடைய மனதும் மாறிப் போய்விட்டது. இன்னும் ராவ் பகதூர் சாஸ்திரியார் அடிக்கடி பத்திரிகைகளில் நடத்திவந்த விவாதங்களை அவன் ஆட்சேபித்து கண்டிக்கும் அளவுக்கு நிலைமை மிஞ்சிப் போய்விட்டது. ஒரு தடவை அவன் தன் தகப்பனார் எழுதும் பத்திரிகைக் கடிதங்களைப் பற்றி 'ரிடிகுலஸ்' என்ற சொற்றொடரைப் பிரயோகித்தபோது, இத்தனை காலமும் ஒருவாறு அதனுடைய அதிகப் பிரசங்கத்தைப் பொறுத்துக் கொண்டிருந்த சாஸ்திரியாருக்கு இனிமேல் பொறுக்க முடியாது என்று ஆகிவிட்டது. "ஆமாம் அப்பா, சங்கரா! நான் 'ரிடிகுலஸ் தான்; உன் தாயாரும் மிஸஸ் ரிடிகுலஸ் தான்! நீயே அதிமேதாவி! அட்வகேட் வியாக்ரமய்யரின் சாட்சாத் சீமந்த மாப்பிள்ளையல்லவா? நீ எங்களுக்குப் பிள்ளை இல்லை. பிறக்கும்போதே வியாக்ரமய்யரின் மாப்பிள்ளையாகப் பிறந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறேன். போ! போ! என் முகத்தில் இனிமேல் விழிக்காதே!" என்று சாஸ்திரிகள் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். சாஸ்திரிகளுக்குக் கோபம் வந்தால் வந்ததுதான்; யாராலும் அதை மாற்ற முடியாது. ஆகையால் ஏற்கனவே மாமனார் வீட்டில் பதினாலு அணா ஐக்கியம் அடைந்திருந்த சங்கரநாராயணன் எம்.ஏ., எம்.எல் இப்போது பதினாறு அணா ஐக்கியமாகி மன நிம்மதி அடைந்தான்.
சாஸ்திரியாரின் இளைய குமாரன் சௌந்தரராகவனும் தமையனைப் போலவே மகா புத்திசாலி. கலாசாலைப்படிப்பு பரீட்சையெல்லாம் அவனுக்குத் தண்ணீர்ப்பட்டபாடாயிருந்தது. பி.ஏ. ஆனர்ஸ் வகுப்பில் பொருளாதார விஷயத்தை எடுத்துக் கொண்டு மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறினான். அவன் தேறிய வருஷத்தில் இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையைப்பற்றிப் பத்திரிகைகளில் சர்ச்சை நடந்து கொண்டு வந்தது. ஒருரூபாய்க்குப் பதினெட்டுப் பென்ஸ் கிடைத்தால் நல்லதா பதினாறு பென்ஸ் கிடைத்தால் நல்லதா என்பது பற்றிச் சர்ச்சை. பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதும் ஆற்றலைத் தகப்பனா ரிடமிருந்து பெற்றிருந்த சௌந்தரராகவன் மேற்படி பொருளாதார விவாதத்தைப்பற்றித் தானும் பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதினான், அது பிரசுரமாயிற்று. நாட்டில் பல பொருளாதார நிபுணர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இந்திய சர்க்காரின் பொக்கிஷ இலாகா அதிகாரிகளின் கவனத்தைக்கூடக் கவர்ந்தது. அந்த இலாகாவின் தலைமை அதிகாரி இவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். இவன் அவரைப் போய்ப் பார்த்தான். அந்தப் பேட்டியின் பயனாக இந்திய சர்க்காரின் வரவு செலவு இலாகாவில் சௌந்திரராகவனுக்கு உத்யோகம் கிடைத்தது. எடுத்தவுடனேயே சம்பளம் மாதம் 750 ரூபாய். மேலே எங்கேபோய் நிற்கும் என்பதற்கு வரையறையே கிடையாது.
ஆகவே தமது இளைய புதல்வனைப் பற்றிப் பத்மலோசன சாஸ்திரி பெருமைப்படுவதற்கு எல்லாக் காரணங்களும் இருந்தன. அப்படியிருக்க அவர் கவலைப்படுவதற்குக் காரணம் என்ன? வேறு ஒன்றுமில்லை; அவனுடைய கலியாணத்தைப் பற்றித்தான். சாதாரணமாகப் பெற்றோர்கள் பெண்களின் கலியாணத்தைப் பற்றிக் கவலைப்படுவதுதான் வழக்கம். பத்மலோசன சாஸ்திரியின் கவலை இதற்கு நேர்மாறாயிருந்தது. தம் அருமைப் புதல்வனின் கலியாணத்தைப் பற்றிக் கவலைப்பட்டார். மூத்த பிள்ளை தேவலை என்று இரண்டாவது பிள்ளை செய்து விடுவான் போலிருக்கிறதே என்று மிகவும் கவலைப்பட்டார். அவருடைய வாழ்க்கைத் துணைவி காமாட்சி அம்மாள் அவரைக் காட்டிலும் அதிகமாகக் கவலைப்பட்டார். இவர்கள் கீழ் வீட்டில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் நாம் மேல் மச்சுக்குச் சென்று நம் கதாநாயகனைச் சந்திக்கலாம்.