அலை ஓசை/பூகம்பம்/பம்பாய்க் கட்டிடம்

விக்கிமூலம் இலிருந்து

கிட்டாவய்யர் பட்டணத்து நாகரிகத்தைக் கிராமங்களுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டார். அந்த ஆசையின் அறிகுறியாகச் சில காலமாய் அவர் தமது மனைவியைப் பெயர் சொல்லி நாலு பேருக்கு முன்னால் கூப்பிடவும் அவளுடன் சங்கோசமின்றிச் சம்பாஷிக்கவும் ஆரம்பித்திருந்தார். பீஹார் பூகம்பத்தையும் லலிதா தபால் ஆபீஸ் சென்றதையும் சம்பந்தப்படுத்திய தமது மனைவியின் பேதமையை எண்ணியபோது அவர் முகம் புன்னகை பூத்து மலர்ந்தது. "சரசு! பீகாரிலே பூகம்பம் வந்தால் இவ்விடத்தில் நமக்கு என்ன வந்தது? வீண் காபரா செய்யாதே!" என்று சொன்னார். "இது என்ன பேச்சு! பூகம்பம் பீஹாரிலிருந்து இவ்விடம் வர எத்தனை நேரம் செல்லும்?" "அதெல்லாம் ஒன்றும் வராது, நம் ஊருக்கும் பீஹாருக்கும் ஆயிரத்தைந்நூறு மைல் தூரம், தெரியுமா? வீணாக அலட்டிக் கொள்ளாதே!" "ஆமாம்! நான் வீணாக அலட்டிக் கொள்கிறேன். நீங்கள்..."

இந்தச் சமயத்தில் சீமாச்சுவய்யர் மத்தியஸ்தம் செய்ய ஆரம்பித்தார். "ஓய்! பெற்ற மனம் பித்து என்று கேட்ட தில்லையா? பெற்ற தாய்க்கு அப்படித்தான் கவலையாயிருக்கும்; நம்மைப் போன்ற தடியர்களுக்கு நிர்விசாரம்!" என்றார். "ஆமாம், ஆமாம்! உலகத்தில் ஒருவரும் பெண்ணைப் பெறவில்லை. இவள்தான் அதிசயமாகப் பெற்றாள்! 'பூவரசை மரத்தைத் தேள் கொட்டிற்று - புளியமரத்துக்கு நெறி கட்டியது' என்ற கதையாக, பீஹாரில் பூகம்பம் என்றால், அதற்காக நாம் பயப்பட்டுச் சாக வேண்டும் என்கிறாள். பெண்கல்வி வேண்டும் என்று இதற்காகத்தான் சொல்கிறது."

மறுபடியும் சீமாச்சுவய்யர் குறுக்கிட்டு, "ஓய்! மத்தியானம் சாப்பாட்டுக்கு மேலே ஒரு 'கழுதை' ஆட்டம் போடலாமா?" என்றார். "பேஷாய்ப் போடலாம்; இங்கேயே சாப்பிடலாமே, ஓய்!" என்றார் கிட்டாவய்யர். "வேண்டாம்! அப்புறம் நம்முடைய வீட்டில்..." என்று சொல்லிக்கொண்டே சீமாச்சுவய்யர் வெளியேறினார். கிட்டாவய்யர் கொல்லைக் கிணற்றடிக்குக் குளிப்பதற்குச் சென்றார். சரஸ்வதி அம்மாள் வீட்டு வாசலுக்குச் சென்று குழந்தை லலிதா பீஹார் பூகம்பத்துக்குத் தப்பிப் பத்திரமாய் வந்து சேர வேண்டுமென்ற கவலையோடு அவள் வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கிரகாரத்தின் வீதி திரும்பிக் கொஞ்ச தூரம் போனதும் பெரிய சாலை இருந்தது. சாலையோடு அரை பர்லாங்கு தூரம் நடந்தால் தபால் சாவடி இருந்தது. லலிதா ஓட்டமும் நடையுமாகச் சென்று ஐந்து நிமிஷத்தில் தபால் ஆபீசை அடைந்தாள்.

அவள் உள்ளே போவதற்குள் ரன்னர் தங்கவேலு தபால் மூட்டையைக் கொண்டு போய்ப் போஸ்டு மாஸ்டர் முன்னிருந்த மேஜையின் மேல் வைத்திருந்தான். நாலு அடி நீளமும் மூன்று அடி அகலமும் உள்ள அந்த மேஜையில் நாலாயிரம் இடத்தில் மை கொட்டிய அடையாளங்கள் காணப்பட்டன. போஸ்ட் மாஸ்டர் பேனாவை மேஜைமேல் தீட்டிவிட்டுத் தான் எழுதுவது வழக்கமோ என்று சொல்லும்படி தோன்றியது. தபால்கார பாலகிருஷ்ணன் ரன்னர் தங்கவேலுவைப் பார்த்து, "ஏன் அப்பா இத்தனை நேரம்? வழியில் எங்கேயாவது படுத்துத் தூங்கிவிட்டு வந்தாயோ!" என்றான். "தினம் உனக்கு இது ஒரு கேள்வி. ஐந்து மைல் ஜிங்கு ஜிங்கு என்று ஓடிவந்து பார்த்தால் தெரியும்!" என்றான் தங்கவேலு. "சும்மா இருங்க, அப்பன்மார்களே! இதோ கிட்டாவய்யர் வீட்டுக் குழந்தை வருகிறது!" என்று சொல்லிவிட்டுப் பாங்காரு நாயுடு தம் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். லலிதா ஓடி வந்ததினால் ஏற்பட்ட மூச்சு இரைப்புடனே, "போஸ்டு மாஸ்டர்! எனக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கிறதா?" என்று கேட்டாள்.

போஸ்டு மாஸ்டர் அப்போதுதான் அவளுடைய வரவை அறிந்தவர்போல் நிமிர்ந்து பார்த்து, "ஓகோ! நீயா குழந்தை? கொஞ்சம் உட்காரு! தபால் கட்டை உடைத்துப் பார்த்துச் சொல்கிறேன்!" என்றார். "இன்னும் கட்டு உடைக்கவில்லையா? ஸார்!" "கட்டும் உடைக்கவில்லை; குட்டும் உடைக்கவில்லை!..." "சீக்கிரம் உடைங்கோ, ஸார்!" "என்ன அம்மா அவ்வளவு அர்ஜண்டு?" "அர்ஜண்டுதான், ஸார்! இன்றைக்கு பம்பாயிலிருந்து எனக்குக் கடிதம் வரும்." "இவ்வளவுதானே? ஹூம்! பம்பாயிலிருந்தானே? இதற்கா இவ்வளவு அவசரம்? ஒருவேளை சிங்கப்பூரிலிருந்து கடிதம் வருகிறதாக்கும் என்று பார்த்தேன்." "சிங்கப்பூர் ரொம்ப ஒசத்தியா? எங்க பம்பாயிலே...." "உங்க பம்பாய் மட்டும் ஒசத்தியா? எங்க சிங்கப்பூரிலே" "எங்க பம்பாயிலே, விக்டோ ரியா டெரிமினஸ் ஸ்டேசனை நீங்கள் பார்த்தால் அப்படியே அசந்து போய் விடுவேள், ஸார்!"

"எங்க சிங்கப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு உறைபோடக் காணாது உங்க விக்டோ ரியா டெர்மினஸ்! தெரியுமா குழந்தை!" "எங்க பம்பாயிலே எட்டு மாடி வைத்த வீடு இருக்கு, ஸார்!" "ஹூம்? இவ்வளவுதானா? சிங்கப்பூர்லே இருபத்து நாலு மாடி வைத்த வீடு இருக்கே?" "எங்கே பம்பாயிலே மச்சு வைத்த மோட்டார் பஸ் இருக்கே?" "எங்க சிங்கப்பூரிலே மாடி வைத்த ரிக்ஷா வண்டி இருக்கே?" "எங்கே பம்பாயிலே வழவழவென்று தார் ரோடு இருக்கே?" "ஹூம்! எங்க சிங்கப்பூரிலே ரப்பர் ரோடு போட்டிருக்கே?" "உம் வந்து, வந்து, எங்க பம்பாயிலே அத்தங்கா இருக்காளே?" "ஹூ!...எங்கே சிங்கப்பூரிலே அய்யங்கார் இருக்காரே?" "உங்களோடு போட்டி போட என்னால் முடியாது! தபால் கட்டைப் பிரிங்கோ, ஸார்!" "நிஜமாய்ப் பிரிச்சு விடட்டுமா?" "நிஜமாய், சீக்கிரமாய்ப் பிரிங்கோ ஸார்! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு, ஸார்!" "இதோ உடைச்சுட்டேன், குழந்தை!" என்று சொல்லிக் கொண்டே போஸ்டு மாஸ்டர் தபால் கட்டைப் பிரித்துத் தபால்களின் விலாசத்தை ஒவ்வொன்றாய்ப் பார்க்கத் தொடங்கினார். "ஆச்சா! இதோ இருக்கிறது குழந்தை, பம்பாய்க் கடிதம்! ஆனால் விலாசம் தப்பா இருக்கே! உங்க அப்பா பேரல்லவா...."

"இங்கே கொடுங்க ஸார், பார்க்கலாம். இது எங்க அப்பாவுக்குத்தான், எங்க அத்திம்பேர் எழுதியிருக்கார். இன்னும் பாருங்க, ஸார்! எனக்குக் கட்டாயம் லெட்டர் இருக்கும்!" "ஆஹா! இதோ ஒன்று இருக்கு; இதுவும் அப்பாவுக்குத் தான்." "இங்கே கொடுங்கள்! ஆமாம்; இதையும் அப்பாவிடம் கொடுத்துவிடுகிறேன். எனக்கு ஏதாவது கடிதம் இருக்கா என்று பாருங்கோ, ஸார்!" என்று ஏமாற்றமான குரலில் கூறினாள் லலிதா.

போஸ்ட் மாஸ்டர் எல்லாத் தபால்களையும் பார்த்தபிறகு கடைசியாக அடியில் இருந்த கடிதத்தைப் பார்த்து, "ஆகா! இதோ இருக்கு உன் தபால்! எல்லாவற்றுக்கும் அடியிலே போய் உட்கார்ந்திருக்கு!" என்று சொல்லிவிட்டு எடுத்துக் கொடுத்தார். லலிதா ஆவலோடு அக்கடிதத்தை வாங்கிக் கொண்டு வாசற்பக்கம் குதித்தோடினாள். தபாலாபீசின் வாசலிலேயே உறையை உடைத்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். அந்தக் கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது:- என் பிரியமுள்ள உயிருக்கு உயிரான தோழி லலிதாவுக்கு அத்தங்காள் சீதா அன்புடன் எழுதியது. போன ஞாயிற்றுக்கிழமை நான் எழுதிய கடிதம் உனக்குக் கிடைத்திருக்கும். அதை எழுதும்போது மிகவும் சந்தோஷமாயிருந்தேன். வரிந்து வரிந்து நாலு பக்கம் எழுதித் தள்ளினேன். நான் எழுதும்போது அம்மா வந்து பார்த்துவிட்டு, 'சீதா! இவ்வளவு நீளமாய்க் கடிதம் எழுதுவதற்கு அப்படி என்னதான் சமாசாரம் இருக்கும்?' என்று கேட்டாள். 'அம்மா! நாலு பக்கம் எழுதியும் இன்னும் சமாசாரம் முடிய வில்லை. தொடர்கதை மாதிரி அடுத்த வாரம் எழுதப் போகிறேன்' என்றேன். அம்மா என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, 'என் கண்ணே! இப்படியே நீயும் லலிதாவும் உங்களுடைய ஆயுள் முழுவதும் சிநேகிதமாயிருங்கள்!' என்றாள். அப்போது அம்மாவின் கண்ணில் கண்ணீர் சுரந்திருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். 'இது என்ன அம்மா? எதற்காகக் கண்ணீர் விடுகிறீர்கள்?' என்று நானும் வருத்தமாகக் கேட்டேன். 'ஒன்றுமில்லை சீதா! எனக்கு இந்த உலகில் சிநேகிதிகளே இல்லை. நீயாவது ஒரு நல்ல சிநேகிதியைப் பெற்றிருக்கிறாயே என்பதாகச் சந்தோஷப் பட்டேன், வேறொன்றுமில்லை' என்றாள்.

'அது எப்படி அம்மா! சந்தோஷத்தினால் யாராவது கண்ணீர் விடுவார்களா?' என்று மறுபடியும் கேட்டேன். 'எத்தனையோ கதைப் புத்தகங்கள் படிக்கிறாயே, சீதா! ஆனந்தக் கண்ணீர் என்று கேட்டதில்லையா?' என்றாள். 'நானும் லலிதாவும் சிநேகிதமாயிருப்பதில் உனக்கு அவ்வளவு ஆனந்தமா?' என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். 'ஆமாம், சீதா! யார் கண்டார்கள்? எனக்கு ஏதாவது காலைத் தலையை வலித்ததென்றால் உனக்கு வேறு துணை யார் அம்மாவினுடைய மனத்திற்குள் எங்களுக்கு வரப்போகிற விபத்து தெரிந்ததோ, என்னமோ? லலிதா! நான் மேலே என்னத்தை எழுதுவேன்? சென்ற கடிதம் எழுதின மறுநாளே அம்மா சுரமாகப் படுத்துக் கொண்டாள். 'சாதாரண சுரம், இரண்டு நாளில் சரியாய்ப் போய்விடும்' என்று அம்மா சொன்னதை நம்பிச் சும்மா இருந்து விட்டோ ம். மூன்றாம் நாள் அப்பாவுக்கு ஏதோ சந்தேகம் வந்து டாக்டரை அழைத்து வந்தார். டாக்டர் 'டைபாய்டு சுரம் என்று சொல்லிவிட்டார்' 'இந்த அம்மாள் போஷாக்குக் குறைவினால் ரொம்பவும் மெலிந்து போயிருக்கிறாள். இத்தனை நாள் கவனியாமல் இருந்துவிட்டிர்களே?' என்று அப்பாவை டாக்டர் கேட்டபோது எனக்குச் 'சுருக்' என்றது. அடிக்கடி அம்மா விரதம் இருந்ததும் பட்டினி கிடந்ததும் அதைப்பற்றி அப்பா கொஞ்சம் கூடக் கவனியாமல் இருந்ததும் ஞாபகம் வந்தது.

லலிதா! அதையெல்லாம் இப்போது எழுதி என்ன பிரயோசனம்! அம்மாவுக்கு உடம்பு ரொம்ப அதிகமாகி விட்டது. 'கடவுள் அருள் இருந்தால் பிழைப்பாள்!' என்று அப்பாவிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். கடவுளின் அருள் இருக்குமா, லலிதா! அல்லது கடவுள் என்னை அநாதையாக விட்டுவிட்டு அம்மாவை அவரிடம் அழைத்துக்கொண்டு விடுவாரா? மாமாவுக்கு அப்பா கடிதம் எழுதியிருக்கிறார். உடனே, புறப்பட்டு வரும்படி நீயும் சொல்லு. மாமா வந்தால் ஒருவேளை அம்மா பிழைத்துக் கொண்டாலும் பிழைத்துக் கொள்வாள். அடுத்த வாரக் கடிதம் உனக்கு எழுதுவேனோ என்னமோ தெரியாது, கடிதம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் எப்போதும் உன் நினைவாகவே இருப்பேன். உன் அருமைத் தோழி, சீதா.

தபால் சாவடித் திண்ணையில் நின்றபடியே மேற்படி கடிதத்தைப் படித்த லலிதாவின் உள்ளம் உருகிவிட்டது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று, விம்மி அழத்தொடங்கினாள். விம்மிய சத்தம் தபால் ஆபீஸுக்குள்ளே கேட்டது. போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடு, போஸ்டுமேன் பாலகிருஷ்ணன், ரன்னர் தங்கவேலு ஆகிய மூன்று பேரும் வெளியே ஓடிவந்து பார்த்தார்கள். "என்ன அம்மா! என்ன?" என்று கவலையுடன் கேட்டார்கள். கையில் பிரித்து வைத்திருந்த கடிதத்தைப் பார்த்து விட்டு, "குழந்தை! கடிதத்தில் ஏதாவது துக்க சமாசாரம் இருக்கிறதா?" என்றார்கள். "ஆமாம் பம்பாயிலிருக்கிற என்னுடைய அத்தைக்கு உடம்பு சரியில்லையாம்!" என்றாள் லலிதா. "இதற்கு ஏன் அம்மா அழவேண்டும்? உலகத்தில் எத்தனையோ பேருக்கு உடம்புக்கு வருகிறது சொஸ்தமாகிவிடவில்லையா?" என்றார் போஸ்டு மாஸ்டர். பிறகு, "பாலகிருஷ்ணா! இந்தக் குழந்தையைக் கிட்டாவய்யரின் வீடு வரையில் கொண்டு போய் விட்டுவிட்டுவா!" என்றார். "ஆகட்டும், ஸார்! வா அம்மா!" என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் புறப்பட்டான்.