அலை ஓசை/பூகம்பம்/பீஹார்க் கடிதம்
கலியாணம் நிச்சயம் பண்ணிக்கொண்டு சௌந்தரராகவன் சென்னைக்குத் திரும்பியபோது மிக உற்சாகமாயிருந்தான். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய ஆனந்த அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது என்ற எண்ணம் அவன் மனத்தில் குடிகொண்டிருந்தது. தாரிணிக்கும் தனக்கும் ஏற்பட்ட சினேக சம்பந்தத்தை ஒரு மாயக்கனவு என்று தீர்மானித்து அதை மறக்கப் பிரயத்தனப்பட்டதுடன் அநேகமாக மறந்தும் விட்டான். ஆனால் அந்த சம்பந்தத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தும் இரண்டு கடிதங்கள் ராகவன் சென்னை திரும்பிய மூன்றாவது நாள் வந்தன. முதற்கடிதத்தின் மேல் உறையில் எழுதியிருந்த விலாசக் கையெழுத்தைப் பார்த்தவுடனேயே ராகவனுக்கு அதை எழுதியது யார் என்று தெரிந்து விட்டது. முத்து முத்தான அந்த வட்ட வடிவக் கையெழுத்து தாரிணியின் கையெழுத்துத்தான். ஒரு பக்கம் அந்தக் கடிதத்தைப் பிரிக்க ஆர்வமும் இன்னொரு பக்கம் அதில் என்ன எழுதியிருக்குமோ என்ற தயக்கமும் அவன் மனதைக் கலக்கின. கடைசியில் பிரித்துப் பார்த்தான்.
முஸபர்பூர்,(பீஹார்) 9-2-34 அன்பரே! ரயிலிருந்து தங்களுக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்திருக்கலாம். அதுவே தங்களுக்கு நான் எழுதும் கடைசிக் கடிதம் என்று எண்ணியிருந்தேன். இங்கு வந்து நிலைமையைப் பார்த்த பிறகு எதனாலோ மறுபடியும் தங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. எவ்வளவுதான் தங்களை நான் மறக்க முயன்றாலும் அது கைகூடவில்லை. இப்போது நான் இயற்றிவரும் தொண்டில் தங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை என் மனதில் பொங்கிக் கொண்டிருக்கிறது. இக்காரணங்களினாலேயே தங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்தேன். இங்கே பூகம்ப நிவாரணத் தொண்டர்களின் முகாமில் எல்லாரும் தூங்கிய பிறகு நான் மட்டும் மங்கலான கிரோஸின் எண்ணெய் விளக்கின் அருகில் உட்கார்ந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். பீஹாருக்கு நான் வந்து பத்து தினங்கள் ஆகின்றன. இந்தப் பத்து நாளும் நான் கண்ட காட்சிகள், அம்மம்மா, - ஆயிரம் வருஷம் உயிரோடிருந்தாலும் மறக்க முடியாதவை. இந்த ஜென்மத்திலே மட்டும் அல்லாமல் அடுத்த ஜன்மத்திலும், அதற்கடுத்துவரும் ஜன்மங்களிலும் கூட மறக்க முடியாது என்று தோன்றுகிறது. பகலில் பார்த்த காட்சிகளை இரவில் மறுபடியும் என் கனவில் காண்கிறேன். பகலில் மன உறுதியினால் உணர்ச்சியை அடக்கிக் கொள்கிறேன். ஆனால் கனவில் அது சாத்தியப்படவில்லை. சில சமயம் பயங்கரத்தினால் அலறிக் கொண்டும் சில சமயம் பரிதாபத்தினால் தேம்பி அழுதுகொண்டும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறேன்.
திருஷ்டாந்தமாகச் சில சம்பவங்களைச் சொன்னால் என்னுடைய மனோநிலையைத் தாங்களும் அறிந்து கொள்வீர்கள். முஸபர்பூரில் பாபு லக்ஷ்மி நாராயண பிரசாத் என்று ஒரு பிரமுகர். பீஹார் மாகாணத்தில் நடக்கும் கதர்த்தொண்டின் தலைவர் இவர். ஒரு மாதத்திற்கு முன்பு இம்மாகாணத்தில் உள்ள சர்க்கார் சங்கக்கிளை ஸ்தாபனங்களைப் பார்வையிடுவதற்காகப் புறப்பட்டார். ஒரு மாதம் ஆனதும் மனைவி மக்களின் நினைவு வந்தது. ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று கிளம்பினார். வரும் வழியில் உலகம் தலை கீழாகத் திரும்புவது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டது. அது பூகம்ப அதிர்ச்சி என்று தெரிந்து கொண்டதும், "ஐயோ! வீட்டில் தனியாக மனைவி மக்களை விட்டு வந்தோமே! அவர்களுடைய கதி என்னவாயிற்றோ?" என்று திடுக்கிட்டார். பதைபதைப்புடன் வீடு திரும்பினார். அவருடைய பதைபதைப்புக்குக் காரணம் இருந்தது. அவருடைய வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய கும்பல், மண்ணும் கல்லும் மரத்துண்டுகளும் உடைந்த ஓடுகளும் கிடந்தன. ஆகா! அவருடைய மனைவி மக்கள் எங்கே? அலறினார்; பதறினார். மண்ணையும் கல்லையும் அப்புறப்படுத்தத் தொடங்கினார். மற்றும் பல தொண்டர்கள் அவருக்கு உதவி செய்தார்கள். ஐயோ! என்ன கோரம்! என்ன பரிதாபம்! அந்தக் கும்பலுக்கு அடியில் அவருடைய மனைவியும் குழந்தைகளும் மடிந்து நசுங்கி உருத் தெரியாத பிணங்களாகக் கிடந்தார்கள். பாபு லக்ஷ்மி நாராயண பிரஸாத் இப்போது பைத்தியம் பிடித்தவராக, "என் பெண் எங்கே? பிள்ளை எங்கே?" என்று கேட்டுக் கொண்டு அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்.
மாங்கீர் என்னும் பட்டிணத்தில் பிரபாவதிதேவி என்று ஒரு ஸ்திரீ இருந்தாள். பாவம்! அவள் கைம்பெண்! கணவர் விட்டுப்போன சொற்ப சொத்தைக்கொண்டு குழந்தைகளைத் தைரியமாகக் காப்பாற்றி வந்தாள். கைக்குழந்தை தொட்டிலில் தூங்கியது. இன்னொரு குழந்தை கூடத்தில் விளையாடியது. பிரபாவதி சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தாள். திடீரென்று ஒரு குலுக்கல், வீடு சுழன்றது; சமையல் பாத்திரம் கவிழ்ந்தது; கொல்லைப்புறத்தில் தடதடவென்று சத்தம் கேட்டது. கொல்லைத் தாழ்வாரத்தில் கன்றுக்குட்டி கட்டியிருந்ததை எண்ணிக் கொண்டு ஓடினாள். அவள் கொல்லைப்புறம் செல்வதற்குள் கன்றுகுட்டி இருந்த இடத்தில் கூரைஇடிந்து விழுந்து மேடு போட்டிருந்தது. இதற்குள் வீட்டின் முன்கட்டிலும் அதே மாதிரி சத்தம் கேட்டு ஓடினாள். இரண்டு குழந்தைகள் மேலும் வீடு இடிந்து விழுந்து அடியோடு மூடி மேடிட்டு விட்டது. "ஐயோ!" என்று அலறிக்கொண்டு பிரபாவதி வாசல் பக்கம் ஓடி வந்தாள். "என் குழந்தைகளை இழந்தேனே! பூமி வெடித்து என்னையும் விழுங்கி விடாதோ?" என்று கதறினாள். அந்தப் பதிவிரதையின் வாக்கு உடனே பலித்தது. அவள் நின்ற இடத்தில் பூமி விரிந்து பிளந்தது. அதற்குள் விழுந்து பிரபாவதி மறைந்தாள். சீதாதேவி பிறந்த மிதிலை ராஜ்யந்தான் இப்போதைய பீஹார் என்பதை அறிந்திருப்பீர்கள். சீதையைத் தன்னிடத்தே ஏற்றுக்கொண்ட பூமாதேவி இன்று பீஹார் மாகாணத்தில் எத்தனையோ உத்தம பத்தினிகளை விழுங்கி விட்டாள்.
அன்பரே! இத்தகைய பூமிப் பிளவு ஒன்றை நான் அருகில் நெருங்கிப் பார்த்தேன். பக்கத்திலிருந்தவர்கள் தடுத்தும் என் மனம் கேட்கவில்லை. பள்ளத்தின் ஓரமாகச் சென்று குனிந்து பார்த்தேன். பள்ளம் கீழே ஆழம் கணக்கிட முடியாதபடி அதல பாதாளம் வரையில் போகிறது. கொஞ்ச தூரத்துக்குக் கீழே ஒரே கன்னங் கரிய இருள். அதற்குக் கீழே எவ்வளவு தூரம் போகிறது என்று சொல்ல முடியாது. அதிக நேரம் உற்றுப் பார்த்தால் மயக்கம் வந்து தலை சுற்றுகிறது. பூகம்பம் இன்னும் எத்தனையோ விசித்திரங்களையெல்லாம் இங்கே உண்டாக்கியிருக்கிறது. மேட்டுப் பிரதேசங்கள் திடீரென்று பள்ளமாகிப் பெரிய ஏரிகளைப் போல் தண்ணீர் ததும்பி நிற்கின்றன. ஏரிகள் இருந்த இடத்தில் தண்ணீர் அடியோடு வற்றிக் கட்டாந்தரை ஆகியிருக்கிறது. குடிசைகளும் வீடுகளும் பிரும்மாண்டமான மாளிகைகளும் கம்பெனிக் கட்டிடங்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இடிந்தும் விழுந்தும் எரிந்தும் கிடக்கின்றன. மொத்தம் 25,000 ஜனங்கள் பூகம்பத்தில் மாண்டிருக்கலாம் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். மாண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள், தப்பிப் பிழைத்தவர்களில் லட்சக்கணக்கான ஜனங்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தலைக்கு மேலே கூரையின்றி, உட்காரவும் இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்பரே! இதையெல்லாம் தாங்கள் வந்து பார்த்தீர்களானால் இப்படிப்பட்ட மகத்தான துரதிர்ஷ்டத்தையடைந்த ஜனங்களுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் வாழ்க்கையில் வேறு என்ன பெரிய காரியம் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வருவீர்கள். பூகம்பத்தினால் ஏற்பட்ட கஷ்ட நிவாரணத் தொண்டுக்காக இந்தியாவின் நாலா பக்கங்களிலிருந்தும் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். எல்லாரும் பாபு ராஜேந்திர பிரஸாத்தின் தலைமையில் வேலை செய்கிறார்கள். பாபு ராஜேந்திர பிரஸாத் ஓர் அற்புத மனிதர். அவருடைய சாந்தம், அடக்கம், அன்பு, தொண்டு செய்யும் ஆர்வம் - இவற்றுக்கு நிகரேயில்லை. ஒரு வாரத்துக்கு முன்னால் பண்டித ஜவஹர்லால் நேரு இங்கு வந்தார். நாம் இருவரும் முதல் முதலில் சந்தித்தோமே, கராச்சி நகரில்; அங்கே நடந்த காங்கிரஸில் பண்டித ஜவஹர்லால் நேருவை நான் பார்த்தேன். அதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் இப்பேர்ப்பட்ட மகா புருஷர் என்று அறிந்து கொள்ளவில்லை. மாபெரும் தலைவர் தாம் என்கிற உணர்ச்சியேயில்லாமல் தொண்டர்களோடு தொண்டர்களாகப் பணியாற்றுகிறார்கள். ஆகா! என்ன ஆர்வம்? என்ன அவசரம்? எத்தனை சுறுசுறுப்பு? அவர் நடப்பதே கிடையாது; ஒரே ஓட்டந்தான்.
நேற்று ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. பூகம்பத்தினால் இடிந்து விழுந்து நாசமான ஒரு தெருவின் வழியாக நேருஜி போய்க் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு தீனமான சத்தம் கேட்டது. நாய்க்குட்டி குரைக்கும் குரல் போலிருந்தது. நேருஜி அங்கேயே நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அதே குரல் கேட்டது. உடனே நேருஜி சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார். இடிந்து விழுந்து மேடிட்டுக் கிடந்த கல்லையும் மண்ணையும் அப்புறப்படுத்தத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி மற்றத் தொண்டர்களும் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். அரை மணி நேர வேலைக்குப் பிறகு அவர்கள் தேடிய காட்சி தென்பட்டது. மர விட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்து ஒரு சிறு கூரையைப் போலாகிக் கீழே காலி இடம் உண்டுபண்ணியிருந்தது. அந்த இடத்தில் பாவம்! ஒரு சிறுவன் இறந்து கிடந்தான். இறந்த குழந்தையைக் காத்துக்கொண்டு அந்த நாய் இருந்தது. இத்தனை நாளும் அது எப்படித்தான் உயிர் வைத்திருந்ததோ தெரியாது! மேலே மூடியிருந்தவற்றை எடுத்தவுடனே நாய் வெளியே ஓடி வர வேண்டுமே! கிடையாது! செத்துக் கிடந்த சிறுவனை முகர்ந்து பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றது.
கடவுளே இந்த மாதிரி எத்தனையோ பயங்கர சம்பவங்கள். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு உலகத்து நாடோ டி வாழ்க்கையில் யாருக்குத்தான் மனம் செல்லும்! மனித வாழ்க்கை எடுத்ததின் பயன் இம்மாதிரி கஷ்டப்படுகிறவர்களுக்குச் சேவை புரிவதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தாங்களும் இங்கு வந்து பார்த்தால் என்னைப் போலவேதான் எண்ணுவீர்கள். ஏற்கெனவே எத்தனையோ விஷயங்களில் நம்முடைய அபிப்பிராயங்கள் ஒத்திருந்தன அல்லவா? சர்க்கார் உத்தியோகம், பெரிய சம்பளம், சௌக்கியமான பங்களா வாழ்வு, மோட்டார்கள், டீ பார்ட்டிகள் - இவற்றில் எல்லாம் என்ன சுகம் இருக்கிறது? இங்ஙனம், தாரிணி.