அலை ஓசை/பூகம்பம்/மூன்று நண்பர்கள்
தேவபட்டணத்தின் தேரோடும் மாடவீதியில் எதிர் எதிராக இரண்டு மச்சு வீடுகள் இருந்தன. இரண்டு வீடுகளிலும் வாசல் தாழ்வாரத்திற்கு இரும்புக் கம்பியினால் அடைப்புப் போட்டிருந்தது. இரண்டு வீட்டு வாசற் புறத்திலும் ஒவ்வொரு போர்டு தொங்கிற்று. ஒரு போர்டில், "ஆர், ஆத்மநாதய்யர்,பி.ஏ., பி.எல்., அட்வகேட்" என்றும் இன்னொரு போர்டில், "என். தாமோதரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அட்வகேட்" என்று எழுதியிருந்தது ஆத்மநாதய்யரும், தாமோதரம் பிள்ளையும் நெடு நாளைய சிநேகிதர்கள், தேவபட்டணத்தில் பெரிய வக்கீல்கள். இருவரும் பெரிய குடும்பிகள்; நல்ல சம்பாத்தியம் உள்ளவர்கள்; ஆனாலும் பெரிய வீடு கட்டிக் கொஞ்சம் கடன்பட்டிருந்தார்கள். இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவர்களுடைய அந்தஸ்தில் கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. 'பப்ளிக் பிராஸிகியூடர்' பதவிக்கு இருவரும் பிரயத்தனம் செய்தார்கள். ஒருவருக்கொருவர் தெரிந்துதான் பிரயத்தனம் செய்தார்கள். "தாமோதரம் பிள்ளைக்கு எந்தக் காரணத்தி னாலாவது கொடுக்காவிட்டால் எனக்குக் கொடுங்கள்" என்று ஆத்மநாதய்யர் கேட்டார். "ஆத்ம நாதய்யருக்கு ஒருவேளை கொடுக்காவிட்டால் எனக்குக் கொடுங்கள்" என்று தாமோதரம் பிள்ளை சொன்னார். ஊரில் இன்னும் பல வக்கீல்களும் தத்தமக்குப் பதவிக்காகப் பிரயத்தனம் செய்தார்கள். கடைசியில் ஸ்ரீ தாமோதரம் பிள்ளைக்குப் 'பப்ளிக் பிராஸிகியூடர்' வேலை கிடைத்தது. இதைக் குறித்து அபார சந்தோஷமடைந்து முதன் முதலில் ஸ்ரீ தாமோதரம் பிள்ளைக்குப் 'பார்ட்டி' கொடுத்தவர் ஸ்ரீ ஆத்மநாதய்யர்.
சந்தோஷம் ஒருபுறம் இருந்தபோதிலும் ஆத்மநாதய்யரின் மனத்தில், "நம்முடன் இவ்வளவு சிநேகமாயிருந்த மனிதர் இந்த ஒரு விஷயத்தில் நமக்கு விட்டுக் கொடுக்கவில்லை பார்த்தாயா?" என்ற எண்ணம் இருந்தது. தாமோதரம் பிள்ளையின் மனத்திலோ, "நம்முடன் இவ்வளவு சிநேகமாயிருந்த மனிதர் கடைசியில் நம்மோடு போட்டியிட முன் வந்தார் அல்லவா?" என்ற எண்ணம் இருந்தது. இம்மாதிரி எண்ணத்தை இருவரும் தங்கள் மனதிற்குள் வைத்துக்கொண்டு மற்றபடி முன் மாதிரி சிநேகமாகப் பழகி வந்தார்கள். ஆனால் பழைய தலைமுறையைச் சேர்ந்த வயதான இந்த மனிதர்களைப் பற்றி நமக்கு இப்போது என்ன கவலை? இளந்தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் கவனிக்கலாம். தாமோதரம் பிள்ளை வீட்டின் மூன்றாவது மச்சில் ஒரு நாள் முன்னிரவில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து மூன்று வாலிபர்கள் உல்லாசமாகப் பேசிக்கொண்டிருந் தார்கள். அவர்களில் ஒருவன் தாமோதரம் பிள்ளையின் மூத்த மகனான அமரநாதன்; இன்னொருவன் ஆத்மநாதய்யரின் சீமந்த புத்திரனான பட்டாபிராமன். மூன்றாவது வாலிபன் நமது ராஜம்பேட்டை கிட்டாவய்யரின் திருக்குமாரன் சூரிய நாராயணன். முதல் இருவரும் இந்த வருஷத்தில் பி.ஏ. பரீட்சை எழுதுவதற்குப் படித்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் வயது இருபது ஆனவர்கள். சூரியநாராயணன், அவர்களுக்கு இரண்டு வயது சின்னவன். ஆனாலும் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்குத்தான் படித்துக் கொண்டிருந்தான்; ஏனெனில் கொஞ்சம் வயதான பிறகே அவனை ஹைஸ்கூல் படிப்புக்காகக் கிட்டாவய்யர் தேவபட்டணத்துக்கு அனுப்பினார்.
ஆத்மநாதய்யர் கிட்டாவய்யரின் வக்கீல்; நெடுநாளைய சிநேகிதர். ஆகையால் பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படி அவரிடம் கிட்டாவய்யர் சொல்லியிருந்தார். சூரியநாராயணன் ஹோட்டலில் சாப்பிட்டான். படிப்பதற்கு வசதியிருக்கும் என்று ஆத்மநாதய்யர் வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தான். "அமர்நாத்! நம்ம சூரியா நாளைக்கு ஊருக்குப் போகிறான் தெரியுமோ, இல்லையோ?" என்றான் பட்டாபி. "அப்படியா? இப்போது ஊரில் என்ன விசேஷம்? பரீட்சை நெருங்கிவிட்டதே!" என்றான் அமரநாத். "மதராஸிலிருந்து யாரோ பெண் பார்க்க வருகிறார்களாம்; அதற்காக என்னை வந்துவிட்டுப் போகும்படி அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்" என்றான் சூரியா. "யாரோ பெண் பார்ப்பதற்கு வந்தால் உனக்கு என்னடா வந்தது? நீ பெண்ணா? அல்லது யாரோவா?" என்றான் அமரநாதன். "என்ன இப்படிக் கேட்கிறாய்? இவனுடைய தங்கைக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிறதாயிருந்தால் இவன் அங்கே இருக்க வேண்டாமா?" என்றான் பட்டாபிராமன். "யார்? சூரியாவின் தங்கை லலிதாவுக்கா கல்யாணம்? அவளைப் பார்ப்பதற்காகவே மதராஸ்காரன் வருகிறான்? அழகாயிருக்கிறதே! ஏனப்பா பட்டாபிராமா! சூரியாவின் தங்கையை நீ கட்டிக்கொள்ளப் போகிறாய் என்றல்லவா எண்ணியிருந்தேன்....?" "சீ! சீ! என்ன இப்படி உளறுகிறாய்? அதுவும் சூரியாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு."
"உளறல் என்னடா உளறல்? உண்மையைச் சொன்னால் உளறலா? சூரியாவைத்தான் கேட்கிறேனே? எனக்கு என்ன பயம் ஏண்டா, சூரியா? நம்ம பட்டாபிராமன் தினம் பொழுது விடிந்தால் லலிதாவைப் பற்றியே எண்ணி எண்ணி உருகிக் கொண்டிருக்கிறானே!- அப்படியிருக்கும்போது லலிதாவைப் பார்க்க மதராஸிலிருந்து ஒருவன் வருவானேன்?" என்றான் அமரநாத். "அதெல்லாம் எனக்கென்ன தெரியும், ஸார்! என்னைக் கேட்டுக் கொண்டா ஏற்பாடு செய்கிறார்கள்? ஒருவேளை பட்டாபிக்கு ஜாதகப் பொருத்தம் சரியில்லையோ என்னமோ?" என்றான் சூரியா. "ஜாதகம் பார்க்கிறது, கீதகம் பார்க்கிறது என்றெல்லாம் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நம்முடைய தேசம் பாழாய்ப் போகிறது நடக்கிற கல்யாணம் எல்லாம் ஜாதகம் பார்த்துத்தான் செய்கிறார்கள். ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகு நடப்பதென்ன? 100-க்கு 90 தம்பதிகளின் இல்வாழ்க்கை நரகமாயிருக்கிறது. எத்தனையோ பெண்கள் கல்யாணமாகி ஒரு வருஷத்துக்குள்ளே விதவைகளாகித் தொலைகிறார்கள். விதவைகளோடு நிற்கிறார்களா? எத்தனையோ காரியங்களுக்கு அபசகுனமாக எதிரே வந்து காரியங்களைக் குட்டிச் சுவராக்கு கிறார்கள். இந்தத் தேசத்திலேயுள்ள ஜாதகங்களை யெல்லாம் திரட்டித் தீயிலே போட்டுப் பொசுக்கினால் எவ்வளவு நன்மையுண்டு!" என்று குட்டிப் பிரசங்கம் செய்தான் அமரநாத்.
"எல்லாம் வாய்ப் பேச்சுத்தான்; உன் தகப்பனார் கூடப் பெரிய 'சூனா மானா' மாதிரிதான் பேசுகிறார். ஆனால், போன வருஷம் உன் சகோதரியின் கல்யாணம் நடந்ததே, பிராமணப் புரோகிதரைக் கூப்பிட்டுத்தானே நடத்தினார்? அப்புறம் 'ஜோஸ்யத்தில் எனக்கு நம்பிக்கையேயில்லை; சுத்த ஃபிராடு!' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், பப்ளிக் பிராஸிகியூடர் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் ஏற்பட்டதும் சப்தரிஷி வாக்கியம் என்னும் ஏட்டுச் சுவடி வலையில் விழுந்து விட்டாரா இல்லையா?" "பட்டாபி! இது என்ன வாதத்தில் சேர்ந்தது? என் அப்பா செய்யும் காரியங்களுக்கெல்லாம் நான் ஜவாப்தாரியா?" என்றான் அமரநாத். "ரொம்ப சரி! அது போலவே சூரியா தங்கையின் கல்யாணத்துக்கும் ஜாதகத் தடைக்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய ஜாதகத்தைக் கேட்கவும் இல்லை; பார்க்கவும் இல்லை. கலியாண விஷயத்தில் என்னுடைய திடமான கொள்கை உனக்குத் தெரியாதா? பி.ஏ. பாஸ் செய்து விட்டுக் குறைந்த பட்சம் மாதம் இருநூறு ரூபாய் சொந்தத்தில் சம்பாதிக்கும் நிலைமை ஏற்பட்ட பிறகுதான் நான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே?"
"அடே, இந்தக் கதையெல்லாம் யாரிடம் அளக்கிறாய்? சென்ற வருஷத்தில் கிட்டாவய்யரும் அவருடைய குமாரியும் உன் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தபோது நீ என்ன பாடுபட்டாய் என்று எனக்குத் தெரியாதா! வீட்டின் உள்ளேயிருந்து வெளியிலும், வெளியிலிருந்து உள்ளேயும் குட்டி போட்ட பூனை போல் நிமிஷத்துக்கு ஒரு தடவை போய் வந்து கொண்டிருந்தாயே? அதையெல்லாம் நான் மறந்து விட்டேன் என்றா நினைத்தாய்?" "அமரநாத்! உன்னிடம் நான் இந்தப் பேச்சை எடுத்ததே தப்பு. சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்." "அதெல்லாம் முடியாது, அப்பா, முடியாது! கோர்ட்டில் கேஸ் தாக்கல் செய்து விட்டால் அப்புறம் வாதியின் இஷ்டம் போல் வழக்கை வாபஸ் பெற முடியுமா? பிரதிவாதியும், கோர்ட்டாரும் சம்மதித்தால்தானே முடியும்? நான் கேஸை வாபஸ் கொடுக்கச் சம்மதிக்கவில்லை, பட்டாபி! லலிதாவைப் பற்றி நீ அந்த நாளில் வர்ணனை செய்ததெல்லாம் எனக்கு நினைவில்லை என்றா நினைக்கிறாய்? கம்பனும் காளிதாஸனும் வெட்கிப் போகும்படி வர்ணனை செய்தாயே? ஒரு கவிகூடப் பாடியது எனக்கு நினைவிருக்கிறதே! 'ஒரு நாள் குமுத மலர்கள் நிறைந்திருந்த குளக்கரையோரமாக லலிதா சென்றாள். கூம்பியிருந்த குமுத மலர்கள் எல்லாம் கலீரென்று சிரிப்பது போல் மடலவிழ்ந்து மலர்ந்தன. லலிதாவின் சௌந்தரிய வதனத்தை அந்தக் குமுதங்கள் பூரணச் சந்திரன் என்று நினைத்துக்கொண்டு விட்டதுதான் காரணம்?' என்று நீ ஒரு கவி பாடவில்லையா? நிஜமாகச் சொல்லு!"
"அப்பா! அமரநாத்! போதும், இத்துடன் நிறுத்து. வீணாக என் மானத்தை வாங்காதே. உன் பரிகாசப் பேச்சைப் பற்றிச் சூரியா ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறான்!" என்று பட்டாபிராமன் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டே சொன்னான். "தப்பாக நினைத்துக் கொண்டால் நினைத்துக் கொள்ளட்டும். நினைத்துக்கொண்டு என் தலையையா வாங்கி விடப் போகிறான்? அப்படி வாங்குவதாயிருந்தாலும் நான் உண்மையைத்தான் சொல்வேன். சூரியா! இருந்தாலும் உன் அப்பா செய்கிற காரியம் கொஞ்சமும் நன்றாயில்லை. நம்ப பட்டாபிராமன் இருக்கும்போது உன் அப்பா எதற்காக வேறு வரன் தேடவேண்டும்? இவனுக்கு என்ன குறைவு?" இத்தனை நேரமும் முகச் சிணுக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தச் சூரியா இப்போது, "நானும் உண்மையைச் சொல்லி விடட்டுமா? எனக்கும் அப்பாவின் ஏற்பாடு பிடிக்கவில்லை. லலிதாவைப் பட்டாபிராமனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். லலிதாவுக்கும் அதுதான் சந்தோஷமாயிருக்கும். யாரோ முன்பின் தெரியாத ஆசாமியின் கழுத்திலே லலிதாவைக் கட்டுவதற்கு ஏன் முயற்சி செய்கிறார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே எனக்கு அது பிடிக்கவில்லை" என்றான்.
"நான் ஒருவன் இருக்கிறேன், என் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற யோசனையேயில்லாமல் இரண்டு பேரும் பேசுகிறீர்களே! லலிதா விஷயமாக எனக்கு அத்தகைய எண்ணம் கிடையவே கிடையாது, ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். யாரோ ஒரு முன்பின் தெரியாத மனிதன் வருவது - பெண்ணை அவன் முன்னால் கொண்டு நிறுத்துவது - அவன் சாமுத்திரிகா லட்சணம் எல்லாம் சரியாயிருக்கிறதா - என்று பார்ப்பது - அப்புறம் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லுவது - இவையெல்லாம் மிகப் பிசகான காரியங்கள், இதே மாதிரி 'வேண்டும்; அல்லது வேண்டாம்' என்று சொல்லுகிற உரிமை பெண்ணுக்கும் இருந்தாலும் பாதகமில்லை! ஆனால் பெண்ணுக்கோ வருகிறவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் தைரியம் கிடையாது..." "அதென்னப்பா, அப்படிச் சொல்கிறாய்? பெண் பார்க்க வந்தவனைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எத்தனையோ பெண்கள் சொல்லித்தானிருக்கிறார்கள். அதனால் பல கலியாணங்கள் நின்று போயிருக்கின்றன."
"அப்படியெல்லாம் கதைகளிலே நடந்திருக்கும். உண்மை வாழ்க்கையிலே நடப்பதில்லை." இதுவரை நடந்திருக் கிறதோ, இல்லையோ, இப்போது அப்படிச் செய்தாலென்ன என்றுதான் கேட்கிறேன். சூரியா! நான் சொல்லுகிறதைக் கேள்! நீ உன் தங்கையிடம் சொல்லி, வந்து பார்க்கிறவனை, 'எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்லப் பண்ணிவிடு!" என்றான் அமரநாத். "அப்படியெல்லாம் செய்யாதே, சூரியா! லலிதா விஷயத்தில் என்னுடைய மனத்தை தவறாக அறிந்து கொண்டு அமரநாதன் சொல்கிறான். ஒரு மரத்திலே ஓர் அழகான புஷ்பம் மலர்கிறது. 'அது அழகாயிருக்கிறது; கண்ணுக்கினிய காட்சியாயிருக்கிறது!' சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? சிலர் அப்படிப்பட்ட ஆசை கொண்டவர் களாயிருக்கலாம். ஆனால் என்னுடைய கருத்து அதுவல்ல. மரத்திலே பூத்திருக்கும் புஷ்பத்தைப் பார்த்தே நான் சந்தோஷப்படத் தயார். யாராவது அந்த மலரைப் பறித்துத் தலையில் வைத்துக் கொண்டாலும் என்னால் பார்த்துச் சந்தோஷப் படமுடியும்!"
"நீ சொல்வது சுத்த ஹம்பக்! அப்படி அழகான மலரை மரத்திலேயே விட்டு வைக்கத் தயாராயுள்ள மானிடர் வெகு அபூர்வம். அதுமட்டுமல்ல! மலரைப் பறித்துத் தலையில் சூடிக் கொள்வதாயிருந்தால், அதற்குத் தகுதியானவர்களின் தலையில் சூட்டப்பட்டால்தானே அழகாயும் பொருத்தமாயும் இருக்கும்? அதுதான் சந்தோஷமளிக்கும் காட்சி. அவலட்சணம் பிடித்த கழுதைக்கு அழகிய பூவைச் சூட்டினால் அதை எப்படிப் பார்த்து அநுபவிக்க முடியும்? கழுதையினாலேயே முடியாதே! பூவைக் காகிதம் என்று நினைத்துக்கொண்டு தின்றுவிடப் பார்க்குமே. மற்றவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து எப்படிச் சந்தோஷப்பட முடியும்?" என்றான் அமரநாத். "உம்மோடு என்னால் விவகாரம் செய்ய முடியாது, ஸார்! ஆனாலும் நான் சொல்கிறதுதான் சரி!" என்றான் பட்டாபிராமன். "சூரியா! நீ என்ன சொல்கிறாய்?" என்று அமரநாதன் கேட்டான். "நீங்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்!" என்றான் சூரியா. "பார்த்தாயா, பட்டாபி! மெஜாரிட்டி அபிப்பிராயம் உனக்கு விரோதமாயிருக்கிறது! என்ன செய்வது?" என்றான் அமரநாத்.
"உலகத்தில் மெஜாரிட்டியார் முட்டாள்கள் என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறாரே, தெரியாதா?" என்றான் பட்டாபி. "அப்பனே! 'பெரும்பான்மையோர் முட்டாள்கள்' என்று சுவாமி விவேகானந்தர் சொல்லலாம்; ஆனால் நீயும் நானும் சொல்லக்கூடாது! வருங்காலத்தில் மெஜாரிட்டிதான் மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம்? பெரும்பான்மையோரை அலட்சியம் செய்கிறவன் உலகில் முன்னுக்கு வரவே முடியாது. பெரும்பான்மை மக்களின் இஷ்டப்படி நடக்க முடியாவிட்டால் அவர்களை ஏமாற்றியாவது பிழைக்க வேண்டும்!" என்றான் அமரநாத்!