அலை ஓசை/பூகம்பம்/மோட்டார் விபத்து

விக்கிமூலம் இலிருந்து

மாசி மாதத்து மனோரம்மியமான மாலை நேரத்தில் ராஜம்பேட்டையை நெருங்கிச் சென்ற சாலையில் இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டி ஒன்று ஜாம் ஜாம் என்று போய்க்கொண்டிருந்தது. காளையின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய சதங்கை மணிகள் கலீர் கலீர் என்று சப்தித்தன. வண்டியும் வண்டி மாடுகளும் வண்டிக்காரன் கட்டிய முண்டாசும் அந்த வண்டி பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டியென்பதை உலகமறியத் தெரிவித்தன. வண்டிக்குள்ளே கிட்டாவய்யரின் மூத்த புதல்வன் சூரியநாராயணன் பெட்டி படுக்கை சகிதமாக வீற்றிருந்தான். அவனுடைய உள்ளம், தன்னுடைய அருமைத் தங்கை லலிதாவைப் பற்றியும் அவளைப் பார்ப்பதற்காகப் பட்டினத்திலிருந்து வரப் போகிற மேதாவி எப்படியிருப்பான் என்பது பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. காரணமில்லாமலே அந்த மேதாவியின் பேரில் சூரியாவுக்குச் சிறிது கோபமும் உண்டாகியிருந்தது. "மகா பெரிய மனிதன் இவன்! பெண்ணைப் பார்க்க வருவதாம்! பிடித்திருக்கிறது - இல்லை என்று தீர்ப்புச் சொல்வதாம்! சுத்த வெட்கக் கேடு!" என்ற எண்ணம் தோன்றி அவன் மனத்தை உறுத்தியது. முந்தா நாள் இரவு தாமோதரம்பிள்ளை வீட்டு மச்சின் பேரில் நடந்த சம்பாஷணையும் இடை இடையே அவனுக்கு நினைவு வந்து கொண் டிருந்தது.

ராஜம்பேட்டை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சூரியா வண்டி முகப்பில் வைத்திருந்த பெட்டி படுக்கையின் மேலாக எட்டிப் பார்த்தான். சமீபத்தில் ஒரு மைல் கல் தென்பட்டது. அதில் பெரிய கறுப்பு எழுத்தில் 3 என்று எழுதியிருந்தது. "இன்னும் மூன்று கல் இருக்கிறது. இருட்டுவதற்கு முன் போய் விடலாமா, முருகா!" என்று சூரியா கேட்டான். "நல்லாப் போய்விடலாம்! நீங்கள் மட்டும் 'மாட்டை விரட்டாதே' என்று சும்மாச் சும்மாச் சொல்லியிரா விட்டால் இத்தனை நேரம் போய்ச் சேர்ந்திருப்போம்! அம்மாகூட, 'சாயங்காலம் காப்பி சாப்பிடச் சின்னய்யாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடு' என்று சொல்லியிருந்தாங்க!" என்றான் வண்டிக்கார முருகன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, முன்னால் சுமார் அரை பர்லாங்கு தூரத்தில் ஒரு கட்டை வண்டி போய்க்கொண்டிருப்பதைச் சூரியா கவனித்தான். அந்த வண்டிக்குள்ளே யாரோ பெண் பிள்ளைகள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வண்டியும் ராஜம்பேட்டைக்குத்தானே போக வேண்டும்? வண்டிக்குள் இருப்பவர்கள் யாராயிருக்கும்?- என்று சூரியா சிந்தித்துக் கொண்டிருந்தபோதே பின்னால் 'பாம் பாம்' என்று முழங்கிக் கொண்டு ஒரு மோட்டார் வண்டி வந்தது.

"பாருங்க, சின்னய்யா! மோட்டார் வண்டியிலே ஏறி விட்டாலே தலை கிறுங்கிப் போவுது! இவன் வந்துட்டா, மற்ற வண்டியெல்லாம் உடனே ஒதுங்கிக்கொள்ள வேணுமாம்! மோட்டார் வண்டிக்கு என்று தனியாக ரோடு போட்டுக் கொள் கிறதுதானே!" என்று புகார் சொல்லிக்கொண்டே முருகன் வண்டியைக் கொஞ்சம் சாலை ஓரத்தில் ஒதுக்கினான். மோட்டார் வண்டி அவர்களைத் தாண்டி ஒரு பெரிய புழுதிப் படலத்தை வாரித் தூவிவிட்டு மேலே சென்றது. அது போன உடன் முருகன், "சின்னய்யாகூடப் படிச்சுப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து மோட்டார்கார் வாங்க வேணும்!" என்றான். "அப்போது, மோட்டார் காரர்களைப் பற்றி நீ இப்போது திட்டியது போலத்தானே பத்துப்பேர் என்னையும் திட்டுவார்கள்!" என்றான் சூரியா. இதற்குள் எதிரே கொஞ்ச தூரத்தில் நடந்த சம்பவம் அவர்களுடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பெட்டி வண்டியைத் தாண்டிச் சென்ற மோட்டார், கட்டை வண்டியையும் சாலை ஓரமாக ஒதுங்கச் செய்வதற்காகப் 'பாம்' 'பாம்' என்று முழங்கியது. கட்டை வண்டிக்காரன் இடது புறத்தில் ஒதுக்குவதற்குப் பதிலாக, வலது பக்கத்தில் ஒதுங்க முயன்றான். கட்டை வண்டியை வலப்பக்கமாகக் கடக்க முயன்ற மோட்டார் அது முடியாதென்று தெரிந்து அதி வேகமாக ஒரு திரும்புத் திரும்பி இடப்பக்கம் தாண்டிச் சென்றது. போகும்போது வண்டி மாட்டின்மீது உராய்ந்து விடும் போல அவ்வளவு நெருக்கமாகச் சென்றபடியால் வண்டி மாடுகள் மிரண்டு சாலையோரத்துப் பள்ளத்தில் இறங்கி விட்டன. அப்படி இறங்கியதில் மாடுகளை மூக்கணையுடன் பிணைத்திருந்த கயிறுகள் கழன்றன. வண்டிக்காரன் காபரா அடைந்து கீழே குதித்தான். வண்டியின் மூக்கணை மேலே போயிற்று. வண்டியின் பின் தட்டுக் கீழே வந்து தரையைத் தொட்டது. வண்டிக்குள்ளிருந் தவர்கள் சறுக்குமரத்திலிருந்து வழுக்கி விழுகிறவர்களைப்போல உருண்டுவந்து வெளியே தரையில் விழுந்தார்கள். அவர்கள் மேலே சாமான்கள் உருண்டு விழுந்தன.

இத்தகைய கட்டைவண்டி விபத்தை உண்டாக்கிய மோட்டார்வண்டி அதை மறைப்பதற்கு ஒரு பெரிய புழுதித் திரையையும் உண்டாக்கிவிட்டு மறுகணமே தூரத்தில் மறைந்து போய்விட்டது. புழுதி மறைந்தபடியால் மேற்படி விபத்தைப்பற்றி நடந்ததைக் காட்டிலும் அதிகமாகச் சூரியா மிகைப்படுத்தி எண்ணிக் கொண்டான். "முருகா! ஓட்டு! ஓட்டு! வண்டி குடையடித்து விட்டது போலிருக்கிறதே! சீக்கிரம் ஓட்டு!" என்று பதறிக்கொண்டே கூறினான். முருகனும் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு போய்ச் சம்பவம் நடந்த இடத்துக்குச் சமீபத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். "சின்னய்யா! நம்ம அத்தை அம்மாபோல இருக்கிறதே! பம்பாய் அம்மாவும் அவங்க பொண்ணுங்கூட இருக்காங்களே! சாமி ஆண்டவனே! ஒருத்தருக்கும் ஒண்ணும் இல்லாமல் இருக்க வேண்டும்!" என்று வண்டிக்காரன் சொன்னது ஒன்றும் சூரியாவின் காதில் விழவில்லை. வண்டியிலிருந்து அவன் பளிச்சென்று குதித்துக் குடையடித்த வண்டியை நெருங்கி ஓட்டமாக ஓடினான்.

குடை சாய்ந்த வண்டியின் பின்புறச் சட்டங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பம்பாய் ராஜம்மாள் உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் மூட்டைகள் சிதறிக் கிடந்தன. ஒரு தகரப் பெட்டி இன்னும் வண்டிக்குள்ளேயே இருந்து கொண்டு தானும் கீழே விழலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. ராஜம்மாளுக்கு வண்டிச் சட்டத்தைத் தான் விட்டால் அந்தப் பெட்டி தன் தலையில் விழுந்து விடும் என்ற பயம் தோன்றியிருந்தது. ஏற்கெனவே நோயினால் மெலிந்திருந்த அவளுடைய முகம் மேற்படி பயத்தினால் வெருண்ட தோற்றம் அளித்தது. ஆனால், அவளுடைய பயத்துக்குக் காரணம் இது மட்டுந்தானா? "அம்மா! அம்மா! இதோ நான் வெள்ளத்தில் முழுகப் போகிறேன். என் மேல் அலை வந்து மோதுகிறது. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்! இதோ முழுகப் போகிறேன்!" என்று அவளுடைய செல்வக் குமாரி சீதா அலறிக்கொண்டிருந்ததும் ராஜம்மாளின் பீதிக்கு ஒரு காரணமாயிருக்கலாமல்லவா?

ராஜத்துக்கு நாலைந்து அடி தூரத்தில் தரையில் விழுந்திருந்த இன்னொரு ஸ்திரீ, "ஐயோ! அப்பா!..." என்று முனகிக் கொண்டே மெதுவாக முயன்று எழுந்து உட்கார்ந்தாள். "மோட்டார் சத்தம் கேட்டவுடனேயே 'வண்டியை ஒதுக்கி ஓட்டடா' என்று அடித்துக் கொண்டேன் கேட்டால்தானே?" என்று வண்டிக்காரனுக்கு வாய் நிறைந்த ஆசீர்வாதங்களைச் செய்தாள். பிறகு, "ராஜம்! உனக்குக் காயம் கீயம் ஒன்றும் படவில்லையே!" என்று கவலை நிறைந்த குரலில் கேட்டாள். ஏதோ பயங்கரமான பெரும் விபத்து ஏற்பட்டு விட்டதாக எண்ணி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிவந்த சூரியா மேற்கூறிய காட்சியை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து ஒரு நொடிப் பொழுதில் நிலைமையைத் தெரிந்து கொண்டான். வண்டிக்குச் சற்றுத் தூரத்தில் எழுந்து நிற்க முயன்று கொண்டிருந்த ஸ்திரீ தன்னுடைய மூத்த அத்தை அபயாம்பாள் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் ஒரு நிமிஷத்துக்கு மேல் நிற்கவில்லை.

சாலையில் ஓரத்தில் இருந்த நீர் ஓடையில் விழுந்து காலையும் கையையும் அடித்துக்கொண்டு, "அம்மா! நான் முழுகப் போகிறேன்!" என்று சத்தமிட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணின் மீது அவனுடைய கண்களும் கவனமும் சென்றன. இரண்டே எட்டில் ஓடைக் கரைக்கு ஓடிச் சென்றான். நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கரையேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடேதான். ஓடையில் விழுந்து மேற்கண்டவாறு கூச்சலிட்டுக் கொண்டே காலினாலும் கையினாலும் தண்ணீரை அடித்து அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்த இளம் பெண், ஓடைக் கரையில் வந்து வியர்க்க விருவிருக்க நின்ற வாலிபனைப் பார்த்தாள். உடனே கூச்சலிடுவதையும் தண்ணீரைக் காலாலும் கையாலும் அடிப்பதையும் நிறுத்தினாள். ஏதோ, ஓர் ஆபூர்வமான அதிசயக் காட்சியைப் பார்ப்பது போல் சூரியாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அப்படிப் பார்த்தவண்ணம் கலகலவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் ஒலி செவியில் விழுந்தபொழுது அமுதமுண்ட குயிலின் கீதம் ஆயிரம் பதினாயிரம் வர்ண மலர்களாக மாறி மேலே விழுவது போன்ற உணர்ச்சி சூரியாவுக்கு உண்டாயிற்று.