அலை ஓசை/பூகம்பம்/வண்டி வந்தது

விக்கிமூலம் இலிருந்து

இந்தக் கதையின் வாசகர்களை இப்போது நாம் பம்பாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. பம்பாய்க்கு மட்டுமல்ல... கல்கத்தாவுக்கும் கராச்சிக்கும் டில்லிக்கும் லாகூருக்கும் கூட நம்முடன் வாசகர்கள் வர வேண்டியதாயிருக்கும். ஒரே நாளில் ஒரே நேரத்தில் அவ்வளவு தூரதூரமான இடங்களில் இருந்து கொண்டு அங்கங்கே நடக்கும் சம்பவங்களைக் கவனிக்கும்படி யாகவும் நேரிடக் கூடும்!

பம்பாய் நகரின் ஒரு பகுதியான தாதரில், அடையாளங் கண்டுபிடிக்க முடியாத ஒரு வீதி. அடையாளங் கண்டுபிடிக்க முடியாத ஒரு வீடு. பல வீதிகள் ஒரே மாதிரியாயிருப்பதாலும் பல வீடுகள் ஒன்றைப்போல் இருப்பதாலும் அடையாளங் கண்டுபிடிக்க முடியாதவை என்று சொன்னோம். நாம் குறிப்பிடும் வீடு ஐந்து மாடிக் கட்டிடம். அதைப்போல் அந்த வீதியின் இரு பக்கங்களிலும் அநேக கட்டிடங்கள் இருந்தன. ஒன்றைப்போல ஒன்று அச்சில் வார்த்ததுபோல் தோற்றமளித்தன. வீதி முனையிலிருந்து மூன்றாவது வீடு நாம் குறிப்பிடும் வீடு என்று அடையாளம் வைத்துக் கொள்வோம். அந்த வீட்டில் ஒவ்வொரு மாடியிலும் பத்துக் குடித்தனங்கள் வீதம் மொத்தம் ஐம்பது குடித்தனங்கள்; ஜனத்தொகை மொத்தம் முந்நூறுக்குக் குறைவு இல்லை. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அறைகளிலோ மூன்று அறைகளிலோ குடியிருந்தன. குடியிருக்கும் அறைகளைத் தவிர ஒரு குளிக்கும் அறையும் உண்டு.

அந்த வீட்டில் நாலாவது மாடியில் மூன்று அறைகளும் ஒரு குளிக்கும் அறையும் சேர்ந்த ஜாகையில் கிட்டாவய்யரின் சகோதரி ராஜம்மாள் சென்ற இருபது வருஷ காலமாக வசித்து வந்தாள். ஹிந்து சமூகப் பெண் குலத்தின் உத்தம குணங்கள் எல்லாம் ஒருங்கு சேர்த்து உருவெடுத்தாற்போன்ற அந்த மாதரசி கலியாணமாகிக் கணவனைக் கைப்பிடித்துப் பம்பாய்க்கு வந்த பிறகு அந்த மூன்று அறைக்குள்ளேயே தன்னுடைய ராஜ்ய பாரத்தைச் செலுத்தி வந்தாள். இருபது ஆண்டு இல்வாழ்க்கையின் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த மூன்று அறைக்குள்ளேயே அவள் அனுபவித்தாள். குழந்தைகளைப் பெற்று வளர்த்ததும் அங்கேதான். குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு அலறி அழுததும் அங்கேதான். கூடிக்குலாவிச் சிரித்துக் களித்ததும் அங்கேதான். கணவனுடைய விசித்திர நடவடிக்கைகளை எண்ணி உள்ளம் வெதும்பி இதயம் வெடித்துக் கண்ணீர் பெருக்கியதும் அதே இடத்தில்தான்.

அந்த மூன்று அறைகளில் ஒன்றிலே தற்சமயம் ராஜம்மாள் படுத்த படுக்கையாகி, பிழைப்போம் என்ற நம்பிக்கை யையும் இழந்து, இருபது தினங்களுக்கு மேலாகப் படுத்திருந்தாள். வீட்டில் வைத்திய சிகிச்சைகளுக்கும், பணிவிடைக்கும் அவ்வளவு வசதி போதாது என்று அவளை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதாக அவளுடைய கணவர் துரைசாமி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆஸ்பத்திரிக்குப் போக ராஜம் கண்டிப்பாக மறுத்து விட்டாள். "இருபது வருஷமாக இருந்த இடத்திலேயே இருந்து கண்களை மூடுகிறேன்; ஆஸ்பத்திரிக்குப் போகமாட்டேன்" என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டாள்.

பத்து வருஷத்துக்கு முன்னால் ஒரு மகாராஷ்டிர வேலைக்காரி, வீட்டுச் சில்லறை வேலைகள் செய்வதற்காக வந்தாள். ராஜத்தை அவளுக்கு ரொம்பப் பிடித்து விட்டது. வீட்டு வேலைகளை எல்லாம் அவளே இப்போது செய்தாள். ராஜம் படுத்துக் கொண்ட பிறகு வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டதோடு ராஜத்துக்குக் கஞ்சி வைத்துக் கொடுப்பது மருந்து கொடுப்பது முதலிய காரியங்களையும் அந்த வேலைக்காரியே செய்து வந்தாள். கூடிய வரையில் குழந்தை சீதா அவளுக்கு உதவி புரிந்து வந்தாள். சீதா பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி ஒரு வருஷம் ஆயிற்று. ராஜம்மாள் மிக்க முன் யோசனையுடன் குழந்தையை எந்த மாதிரி இடத்தில் கலியாணம் செய்து கொடுக்க வேண்டியிருக்குமோ என்னவோ என்று எண்ணி, அவளைச் சமையல் முதலிய வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு வந்தாள். அது இப்போது மிக்க சௌகரியமாயிருந்தது. இதோ இந்தக் குறுகலான மாடி வராந்தாவில் கைப்பிடிச் சுவர் ஓரமாக நின்று கீழே வீதியைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பது யார்?.. சந்தேகம் என்ன? அகன்று விரிந்த அவளுடைய வட்ட வடிவமான கண்களிலிருந்தே தெரிந்து விடுகிறதே! லலிதாவின் அருமை அத்தங்காள் சீதாதான் அவ்வளவு ஆவலுடன் வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அடுத்த நிமிஷமே தீர்ந்து விடுகிறது. உள்ளே இருந்து, "சீதா!" என்று ஒரு தீனக்குரல் கேட்கிறது. "அம்மா! இதோ வந்துவிட்டேன்!" என்று வீணைக் குரலில் கூவிக்கொண்டு சீதா உள்ளே ஓடுகிறாள். மூன்று அறைகளில் ஒன்றில் படுத்திருக்கும் தாயாரின் அருகே செல்கிறாள். "சீதா! ஏதோ கார் சத்தம் கேட்டதே!" என்று ராஜம்மாள் தன் மெலிந்த முகத்திலே ஆர்வம் ததும்பக் கேட்கிறாள். "இல்லை, அம்மா! அது வேறு எங்கேயோ போகிற கார். இன்னும் நேரமாகவில்லை, அம்மா! ரயிலே இப்போது தான் வந்திருக்கும்! ஸ்டேஷனிலிருந்து இங்கே வரக் கால்மணி நேரமாவது வேண்டாமா! இப்படி அவசரபட்டால் என்ன செய்கிறது?" என்று கலகலவென்று வார்த்தைகளைக் கொட்டுகிறாள் சீதா. இதற்குள் மறுபடியும் கார் சத்தம் கேட்கவே, சீதா வராந்தாவுக்கு ஓடி வந்து வீதிப்புறம் எட்டிப் பார்த்தாள். ஒரு மோட்டார் வந்து அந்த வீட்டு வாசலில் நின்றது. "அம்மா! மாமா வந்தாச்சு! நான் கீழே போய் அழைத்து வருகிறேன்!" என்று கூவிக்கொண்டே சீதா மாடிப்படிகளின் வழியாக ஓர் எட்டில் இரண்டு மூன்று படிகளைத் தாண்டிக் கொண்டு இறங்கினாள். இரண்டு மச்சு இறங்கியதும் கையில் தோல் பையுடன் டாக்டர் வருவதைப் பார்த்துத் தயங்கி நின்றாள். "டாக்டர்! உங்கள் வண்டியா இப்போது வந்தது! ஊரிலேயிருந்து மாமா வந்து விட்டாராக்கும் என்று நினைத்தேன்!" என்றாள். "ஓகோ! உன் மாமா இன்றைக்கு வருகிறாரா? அவர் வந்த பிற்பாடாவது உன் அம்மாவுக்கு உடம்பு சரியாகிறதா, பார்ப்போம்!" என்றார் டாக்டர். வழக்கம்போல் சீதா டாக்டர் கையிலிருந்து தோல் பையை வாங்கிக் கொண்டாள். பிறகு இருவரும் மௌனமாக மேலே ஏறி வந்தார்கள்.

நாலாவது மாடி வராந்தாவுக்கு வந்ததும் சீதாவின் ஆவல் அவளை மறுபடியும் வீதிப் பக்கம் எட்டிப் பார்க்கச் செய்தது. அச்சமயம் ஒரு கோச்சு வண்டி வந்து அந்த வீட்டு வாசலில் நின்றது. அந்த வண்டியிலிருந்து தன் தகப்பனாரும் மாமாவும் இறங்குவதைச் சீதா பார்த்தாள். உடனே சீதாவின் மௌனம் கலைந்து விட்டது. "அம்மா! அம்மா! மாமா வந்தாச்சு! நிஜமாகவே வந்தாச்சு!" என்று கூவிக்கொண்டு உள்ளே போனவள், "முதலில் வந்தது மாமா இல்லை, அம்மா! டாக்டர் வந்தார்! டாக்டரை அழைத்துக்கொண்டு நான் மேலே வந்தேன். மேலே வந்ததும் வீதியில் பார்த்தால், அப்பாவும் மாமாவும் கோச்சு வண்டியில் வந்து இறங்குகிறார்கள். ஒரு டாக்ஸி வைத்துக்கொண்டு வரக்கூடாதோ? அதனால்தான் இவ்வளவு தாமதம்...." என்று கடிகாரம் அலாரம் மணி அடிப்பது போலப் பொழிந்தாள் சீதா. "அதனால் என்ன, சீதா? ஒருவேளை டாக்ஸி கிடைத்திராது. நீ மறுபடியும் கீழே போக வேண்டாம், அம்மா! இங்கேயே டாக்டருக்கு ஒத்தாசையாயிரு! அவர்கள் வந்து விடுவார்கள்" என்றாள் ராஜம். சீதா கொஞ்சம் அதிருப்தியுடன் அங்கேயே இருந்தாள். டாக்டர் வழக்கம் போலத் தர்மாமீட்டர் வைத்துப் பார்த்தார். முதுகிலே குழாயை வைத்துப் பார்த்தார்; தொண்டைக்குள் டார்ச் விளக்குப் போட்டுப் பார்த்தார். எல்லாம் பார்த்துவிட்டு, 'பிரிஸ்க்ரிப்ஷன்' மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் துரைசாமியும் கிட்டாவய்யரும் வந்து விட்டார்கள்.

ராஜத்தைப் பார்த்ததும் கிட்டாவய்யர் திகைத்துப் போனார். கிராமத்தை விட்டுப் புறப்படும்போது கிட்டாவய்யர் உற்சாகக் குறைவுடன் கிளம்பினார். ஆனால், சென்னையில் பத்மலோசன சாஸ்திரி வீட்டுக்குப் போய் 'மாப்பிள்ளைப் பைய'னைப் பார்த்ததின் காரணமாக அவருக்குக் கொஞ்சம் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. வரன் நிச்சயமானதாகவே வைத்துக் கொள்ளலாம் என்று சுப்பய்யர் உறுதி சொல்லியிருந்தார். ஆகவே, சென்னையிலிருந்து பம்பாய்க்குப் புறப்பட்டபோது கிட்டாவய்யர் உற்சாகமாயிருந்தார். அந்த உற்சாகம் காரணமாக, 'ராஜத்துக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமாயிராது. சரசு சொன்னமாதிரி கொஞ்சம் அதிகப் படுத்தியே கடிதத்தில் எழுதியிருக்கலாம்' என்று அவருடைய மனம் எண்ணத் தொடங்கியது.

ஸ்டேஷனில் அவரைச் சந்தித்த துரைசாமியும் 'காபரா'ப் படுத்தும் முறையில் ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே பல நாள் காய்ச்சலினால் உலர்ந்து மெலிந்து போயிருந்த ராஜத்தைத் திடீரென்று பார்த்ததும் கிட்டாவய்யரின் அன்பு நிறைந்த உள்ளம் பெரும் துன்பத்துக்கு உள்ளாயிற்று. ராஜத்தின் உடல் மெலிவு மட்டுமல்ல; அவளுடைய முகத்தோற்றத்தில் பிரதிபலித்த ஏதோ ஒரு சாயல், 'இவள் பிழைப்பது துர்லபம்' என்ற எண்ணத்தைக் கிட்டாவய்யரின் மனதில் உண்டாக்கியது. அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு 'ராஜம் பிழைப்பாள்' என்று உறுதி பெற விரும்பியவராய், கண்ணீர் ததும்பிய கண்களுடன் கிட்டாவய்யர் டாக்டரை நோக்கினார்.

"என்ன, டாக்டர்? ராஜத்துக்கு உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டார். "நீங்கள் இன்று வந்து விட்டீர்கள் அல்லவா? இனிமேல் ஒருவேளை சீக்கிரம் குணமாகிவிடும். உங்கள் சகோதரிக்கு உடம்புக் கோளாறு காற்பங்கு; மனக் கோளாறு முக்காற்பங்கு; 'எனக்கு உடம்பு குணமாகாது' என்று இந்த அம்மாள் திடமாகத் தீர்மானம் செய்துகொண்டிருக்கிறாள். நான் மருந்து கொடுத்து என்ன பயன்? நீங்கள் கொஞ்சம் பிரயத்தனம் செய்து உங்கள் சகோதரிக்கு மனோதைரியம் உண்டாக்குங்கள், அப்போது உடம்பும் சரியாய்ப் போய்விடும்." இவ்விதம் சொல்லிவிட்டு டாக்டர் புறப்பட்டார். அவரைக் கொண்டு போய் விடுவதற்காகத் துரைசாமியும் கூடச்சென்றார். கிட்டாவய்யர் தம் அருமைச் சகோதரியின் அருகில் சென்று உட்கார்ந்து, "ராஜம்! டாக்டர் சொன்னதைக் கேட்டாயல்லவா? தைரியமாயிருக்க வேண்டும். அம்மா! வீணாக மனதை அதைரியப்படுத்திக் கொள்ளக்கூடாது!" என்றார்.

"அண்ணா! டாக்டர் சொல்லுவதை நீ நம்புகிறாயா? என்னைப் பார்த்தால் பிழைப்பேன் என்று தோன்றுகிறதா!" என்று ராஜம் நேரடியாகக் கேட்டதும் கிட்டாவய்யரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதுவரைக்கும் அவருடைய கண்களில் ததும்பிக் கொண்டிருந்த கண்ணீர் இப்போது கலகலவென்று கொட்டியது. அங்கவஸ்திரத்தினால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "நானே உன்னை அதைரியப்படுத்துகிறேன்! இத்தனை நாளும் உன்னைக் கவனியாமல் இருந்து விட்டேனே என்பதை நினைத்தால் எனக்குத் துக்கம் பொங்கி வருகிறது" என்றார்.

"அண்ணா! உன் பேரில் என்ன தவறு? இத்தனை நாளும் என்னை நீ கவனித்து ஆகக்கூடியது ஒன்றுமில்லை. என்னுடைய விதிக்கு நான் பிறந்தவள். நீ என்ன செய்வாய்? ஒருவேளை நீ இப்போது வராமல் இருந்து விடுவாயோ என்றுதான் பயந்து கொண் டிருந்தேன். எப்படியாவது நீ வருகிறவரையில் உயிரோடு என்னை வைத்திருக்க வேண்டும் என்றுதான் பகவானை பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய். என் மனத்திலுள்ளதை உன்னிடம் சொல்லி விட்டால், பாரம் தீர்ந்தது, அப்புறம் நிம்மதியாகக் கண்ணை மூடிப் பரமாத்மாவின் பாதாரவிந்தத்தை அடைவேன்!"

மீறி வந்த துக்கத்தையும் விம்மலையும் அடக்கிக் கொண்டு கிட்டாவய்யர், "சீ, பைத்தியமே! இது என்ன இப்படிப் பேசுகிறாய்? அதெல்லாம் உனக்கு ஒன்றும் வராது. சீதாவுக்குக் கல்யாணம் பண்ணிப் பேரன் பேத்திகள் பெற்றெடுத்துச் சௌக்கியமாயிருப்பாய்!" என்றார். அவநம்பிக்கையைக் குறிப்பிடும் சோகப் புன்னகை புரிந்தாள் ராஜம். மரணச் சாயல் படர்ந்திருந்த அவளுடைய முகத்துக்கு அந்தப் புன்னகை ஒரு கணம் உயிர் ஒளி அளித்தது. அறையில் கதவண்டை சீதா கண்ணீருடன் நின்று தங்களுடைய சம்பாஷணை யைக் கேட்டுக் கொண்டிருப்பதை ராஜம் கவனித்தாள். கையினால் சமிக்ஞை செய்து அவளை அருகில் அழைத்தாள். "சீதா! ஊரிலிருந்து மாமா வந்திருக்கிறாரே? காப்பி போட்டுக் கொடுக்க வேண்டாமா?" என்று ராஜம்மாள் சொன்னதும், சீதா, "இதோ ஒரு நிமிஷத்தில் போட்டுக் கொண்டு வருகிறேன் அம்மா!" என்று சமையலறைப் பக்கம் ஓடினாள்.