அவள் ஒரு மோகனம்/அந்தக் கொடியிடையில்...

விக்கிமூலம் இலிருந்து

7. அந்தக் கொடியிடையில்...


சுகத்திற்கு என்று ஒரு மனமா?

சோகத்திற்கு என இன்னொரு மனம் வேண்டுமோ?

வேடிக்கையான மனம்!

வேடிக்கையான வாழ்க்கை !

நல்ல மன நிலை மாறுமுன் அவள் சுழற் நாற்காலியில் இருந்து எழுந்து விட்டாள். காதல் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்ந்திருந்த விண்ணப்பங்கள், புகைப்படங்கள் அடங்கிய கோப்பு அப்பால் நகர்ந்து கொண்டது. சிதறிக் கிடந்த நிழற்படங்களும் இருட்டை நிழலாக்கி இளைப்பாறின.

செயலாளர் ராவ் மேலே வந்து விட்டால், புதிய தகவல்களைச் சொல்லக் கூடும்! வரட்டும்!

பூச்சிதறலாக சாதி முல்லை மணக்கிறது.

அடடே... இன்னொரு டாக்டர் ரேவதியும் அதோ சிரிக்கிறாளே!

கச்சிதம்.

திலகம் அபாரம்.

பதக்கம் மின்னுகிறது.

போதும், போதும்!... கண் பட்டு விடப் போகிறது!

யார் கண்ணாம்?

அந்த இரகசியத்தை பிப்ரவரி நான்கு சொல்லிவிடும்.

அவளது இளமை மாறாமலும் மாற விடாமலும் பேணிப் பாதுகாத்த மகத்தான பெருமைக்கு உரியவள் ஆயிற்றே, அவள்!

ராவ் வந்தார்; கையில் ‘காயகல்பம்’ டைரி; முகத்தில் தெளிவு கலந்த அச்சம்.

அவள் விழிப்புடன் இருந்தாள். தெளிந்த போதத்தில் ஆர்வம் இருந்தது; ஆவலும் இருந்தது. “ராவ், பேசுங்க” என்றாள். அதிகாரமான தோரணை, மாமூல் விஷயம்தான்.

“ஞானசீலனைப் பற்றி...”

ரேவதி குறுக்கிட்டாள்: “ராவ், மிஸ்டர் ஞானசீலன்னு ஆரம்பிங்க; அவர் யாராக இருந்தாலும், அவரோட பேருக்கு மரியாதை கொடுத்தாக வேணும். ஊம், சொல்லுங்க!”

ராவ் சுதாரித்துக் கொண்டார். “மிஸ்டர் ஞானசீலனைப் பற்றி இன்னிக்குத்தான் நம்பகமான தகவல்கள் கிடைச்சுதுங்க; அவருக்கு நாளது தேதி வரை மறு கலியாணம் ஆகலையாம்; தங்குமிடம் எதுவும் கிடையாது; நாடோடியாட்டம் சுத்திக்கினு இருக்கார்; பூர்வீகச் சொத்து, வீடு வாசல் சகலமும் காலி!... குடிக்கிறது மட்டும்தான் கெட்ட பழக்கம்னு சொல்ல முடியாதாம்! கெட்ட கெட்ட பொம்பளைங்களோட கெட்ட சகவாசமும் உண்டாம்!... இம்மாதிரியான கதை இனி மேலும் தொடர் கதையானால், அவரைக் கீழ்ப்பாக்கத்திலேதான் சந்திக்க வேண்டி வருமாம்!...” நிறுத்தினார், ராவ்.

“கதை அவ்வளவுதானா?”

“உண்மை அவ்வளவுதாங்க!”

“ஓகோ! இதெல்லாம் யார் மூலம் உங்களுக்கு. கிடைச்சுது, ராவ்?”

“எனக்குத் தேனாம்பேட்டையிலே ஒரு நண்பர். அவர்தான் இத்தனை விவரங்களையும் எனக்குச் சொன்னார்.”

“அவர் பெயர்?”

“அவர் பேர் எஸ்.பி. சிதம்பரம்!”

“ஓகோ?”

“ஊம்!”

“சரி; இனி, நீங்கள் கீழே போகலாம்!”

“ஆகட்டுங்கம்மா!”

நகர எத்தனம் செய்தவர் நேர்முகமாகத் திரும்பி நின்றார்; நேர்முக உதவியாளர் அல்லவா? “இன்னிக்கு மதியம் வந்தது இந்த உறை” என்று கூறி, வந்திருந்த தபாலை அமெரிக்கையாக நீட்டினார். “யாரோ ஓர் ஆள் ஏதோ ஒரு வண்டியிலே கொண்டாந்து டெலிவரி செஞ்சுட்டுப் போனாருங்க. கையெழுத்துப் போட்டு வாங்கிக்கிணேனுங்கம்மா!” என்றார்.

கடிதத்தை நிதானத்தோடுதான் வாங்கினாள், அவள். ஆனாலும், அது நிதானம் தவறி வீழ்ந்தது, விடவில்லை. மடக்கிப் பிடித்து எடுத்துக் கொண்டாள்.

உறையை முன்னும் பின்னும் புரட்டியெடுத்தாள். அனுப்பியது யாராம்?-மூச்! ஒரு துப்பும் துலங்கவில்லை.

ஒட்டப்பட்டிருந்த ஓரத்தைக் கணித்துப் பிரித்தாள். கனகச்சிதமாகவே பிரிந்து விட்டது.

“அன்புடையீர்,

நலம்தானே?

விளம்பரம் கண்டேன்.

கலியாண சுயம்வரம் விளம்பரத்தைத்தான் சொல்லுகிறேன்.

போட்டியில், அடியேனும் கலந்து கொள்ள உத்தேசம்.

பிப்ரவரி நாலில் நேரிலே தோன்றுவேன்.

வரும் போது, நேரிலே என் படத்தையும் தருகிறேன். போதுமா?

விதி இவ்வளவுதானே அம்மணி?

இப்படிக்கு,
எஸ். பி. சிதம்பரம்.

ராவ் அந்நேரத்தில் அங்கிருந்து சமர்த்தாகவே காணாமல் போயிருந்தார்.

ஆகவே, அவள் பலமாகவே, சுத்தமாகவே பெருமூச்சை நெட்டிப் பிடித்துத் தள்ளி விடலானாள்.

இந்தச் சிதம்பரம் - ஆமாம்; எஸ். பி. சிதம்பரம் ஏற்கெனவே கலியாணம் ஆனவர் ஆயிற்றே? அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினியை சாட்சி வைத்து, என் ஆருயிர்த் தோழி சிந்தாமணிக்குத் திருப்பூட்டினாரே? அப்படியென்றால், அவளை இவர் மண விலக்கு செய்து விட்டாரா? இவரும் என்னைப் போல்தானோ? நினைவுகள் தாயம் ஆடின. காலையில் வந்த நாளிதழை எடுத்தாள். புரட்டினாள்.

‘ராஜகுமாரி’யில் அழகான ‘செக்ஸ்’ படம் ஓடுகிறதாமே? போகலாமா?...

ஓ... போக வேண்டியதுதான்!

கூடத்தைப் பூட்டிக் கொண்டு படி தாண்டிக் கீழே இறங்கி வந்தாள் ரேவதி.

ஐந்து, முப்பத்தொன்று.

ராவ் எழுந்து நின்றார்.

அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள்.

அவளுக்கு ‘டெலிபோன் டைரக்டரி’ தேவைப்பட்டது.

சைகை காட்டினாள். தேடி வந்தது அது.

புரட்டினாள்.

ஞானசீலன் என்கிற பெயர் இப்போது மட்டும் அதில் எப்படி இடம் பெற்றிருக்க இயலும்? அந்தப் பெயரில் மருந்துக்கு என்றாவது ஒரேயொரு பெயராவது அச்சாகி இருக்கக் கூடாதோ? விநோதமான பெயர்தான், அது!

இப்போது எஸ். பி. சிதம்பரத்தைத் தேடினாள். தேடியது கிடைத்தது.

எண்களைச் சுற்றி விட்டாள்.

செட்டி நாட்டுக்குப் போய்விட்டாராம், மனிதர்!

காப்பி ஆவி பறக்க வந்தது.

சுவைத்துச் சுவைத்துப் பருகினாள். ஆவி உதடுகளில் வட்டம் சுழித்தது. ஆவியென்றால், இந்த ஆவிதான்!

ராவ் சூடு தாங்காமல் திண்டாடினார்.

ரேவதி இப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தாள். “உலகத்திலே யாரைத்தான் நம்புவதின்னே புரியலையே?... சிதம்பரம் சொன்னதாகச் சொல்லி, ஞானசீலனைப் பற்றி ராவ் தெரியப்படுத்தின சங்கதியெல்லாம் மெய்யாக இருக்குமா?... எனக்கென்னமோ மனசே ஒட்டக் காணோம்!... பெரிய லட்சாதிபதி வீட்டுப் பிள்ளை பத்து ஆண்டுக்குள் எல்லாத்தையும் தொலைத்திட முடியுமா, என்ன? ஞானசீலனைப் பற்றிய அந்தரங்கம் ஆதியோடந்தமாகச் சிதம்பரத்துக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்?”

குடிபோதையோடு வாடகைக் காரில் பயணம் செய்த ஞானசீலன் மருத்துவமனை வாசலில் அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வைத்தியம் செய்யப்பட்டு, பிறகு தன்னினைவு வந்ததும், சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறிய காரணமும் அவளுக்கு இன்னமும் புதிராகத்தான் தோன்றியது. -

“மெய்யாகவே இவருக்கு இப்ப வாடகைக் கார் பிரயாணம்தான் விதிச்சிருக்குமா?” நினைவு பளிச்சிட்ட கையோடு, ஒட்டுநர் கூறிய வேறொரு தாக்கலும் பிசிறு தட்டிற்று. “இவர் யாரோ மெக்கானிக்கை பார்க்கணும்னு சொன்னதாகத் தெரிவித்தாரே டிரைவர்? ஒரு வேளை, இவரோட புதுக்கார் செவர்லேயாயினும் மிஞ்சியிருந்து, அது ரிப்பேர் ஆகியிருக்கலாம்தானே? அம்மாடி... ஒரே குழப்பமாகப் போயிடுச்சே?... போதுமடி, ஆத்தா, போதும்!” நெற்றி ‘விண் விண்’ என்று தெறித்தது.

“நான் யார்? இவர் யார்?... எனக்கும் ஞானசீலனுக்கும் இருந்த சொந்தமும் பந்தமும் உறவு முறிஞ்சு, உரிமை துறந்து ஆண்டு பத்து ஓடிப் போயிட்டுதே! இனி என்ன?..”

இப்போது, சிறுகச் சிறுக நெஞ்சிலே அமைதியைச் சேகரம் செய்து கொள்ள முனைந்தாள்.

ஊகூம்!...

அந்தரங்கச் செயலாளருக்குக் குதிகால்களில் வலியெடுத்தது. அந்தரங்கத்தில் செயல்பட்ட சமாசாரம்.

“ராவ், காரை எடுத்திட்டு நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டு வந்திட்றேன். டிரைவர் சைக்கிளை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகட்டும். நீங்களும் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். ‘மணமகன் தேவை’ன்னு நான் கொடுத்திருந்த விளம்பரத்தை ஆசையோட மதிச்சு விண்ணப்பம் அனுப்பியிருக்கிற மாப்பிள்ளைமார்களிலே கொஞ்சப் பேரை அநேகமாக நான் திரும்பினதும் தேர்வு பண்ணிப் பட்டியல் போட்டுத் தந்திடுவேன். அவங்களுக்கெல்லாம் இந்த முப்பது, முப்பத்தொண்ணிலே போட்டிக்கு அழைத்துக் கடிதம் குடுங்க. என்ன சரிதானே? பேட்டி பிப்ரவரி நாலு!... ஆமாம்! நேரம், மாலை ஐந்து மணி!”

“உத்தரவுங்க!”

“ராவ், ஒரு சின்ன சந்தேகம்!”

“அம்மா...”

“நான் டாக்டர்!”

“ஆமாங்க, டாக்டரம்மா!”

“நீங்கள் இப்போ காட்டின மரியாதை மெய்யாவே உங்கள் மனசிலே இருந்து வந்தது தானே?”

“ஆமாங்க, நீங்கள் என்னைச் சந்தேகப்பட்டிங்கன்னா, என் குடும்பம் தவிச்சிப் போயிடுங்க!”

“மெய்யா?”

“மெய்தான்.”

“உங்கள் ஒப்பந்தம் பிப்ரவரி நாலாந்தேதி சாயந்தரம் அஞ்சு மணியோட முடிஞ்சிடுது. அது வரைக்குமாச்சும், நீங்கள் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, என்னிடம் நம்பிக்கையாய் நடந்துக்கிணு, நல்ல பேரோட இங்கேயிருந்து ‘டாடா’ வாங்கிக்கினு போவீங்கண்ணும் நான் நம்புகிறேன்.”

“உங்கள் நம்பிக்கை என் தரப்பில் சத்தியமாய் எவ்விதத் துரோகமும் விரோதமும் ஏற்படவே ஏற்படாதுங்க, டாக்டரம்மா! இந்த அம்பது நாளா உங்கள் உப்பைத் துண்ணுறவனாச்சுங்களே நான்?”

“சரி, இனி நீங்க உட்கார்ந்துக்கிடுங்க, ராவ்!...”

ராவ் சாமர்த்தியசாலி; அவசரப்பட்டு அவர் உட்கார்ந்து விடவில்லை.

“என் ஜாதகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”

“நீங்கள் சொன்னால்தானுங்களே எனக்குத் தெரியும்?”

“என்னோட ஜாதகம் பற்றி உங்களிடம் எதற்குச் சொல்ல வேணும்? மறுபடியும் உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன்; டாக்டர் ரேவதியை மண்ணைக் கவ்வ வச்சி, அவளை வெல்லுவதற்கு இது நாள் வரை இந்தப் பாழாய்ப் போன மண்ணிலே யாருமே பிறக்கக் காணோம்! என் வரையிலும் இது வரை சத்தியமான உண்மை!”

“உண்மைதாங்க, டாக்டரம்மா.”

“சரி...சரி! எனக்கு நேரமாகிறது.”

ரேவதி வெளியே வந்தாள்.

காவற்காரப் பெரியவர் கை கூப்பி மரியாதை செலுத்தினார். ‘மாருதி’ தயார்.

திடீரென்று-

ரேவதி மாடிக்கு ஓடினாள்.

ஓடின கையோடு, ஊகூம் காலோடு திரும்பினாள்.

அப்போது-

அவளது அழகான இடுப்பிலே அழகான கைத்துப்பாக்கி ஒன்று அழகாக ஒளிந்து கொண்டிருந்தது!