அவள் ஒரு மோகனம்/பாரிஸ் இன்ப இரவுகள்

விக்கிமூலம் இலிருந்து


8. பாரிஸ் இன்ப இரவுகள்


‘ராஜகுமாரி' கொட்டகையில் எக்கச்சக்கமான கூட்டம்.

ரேவதி ஒற்றை ரோஜாச் செடியாக சற்றே ஒதுங்கி நின்றாள்.

ஒர் ஆட்டம் முடிந்து, இன்னோர் ஆட்டம் தொடங்க இருந்த நேரமானதால், சத்தங்களே மனித விதியாகி ஆர்ப்பாட்டம் நடத்தவே, அவளுக்கு எரிச்சல் எகிச்சலாக வந்தது.

கூட்டத்திலே தலைமுறையின் இடைவெளியைக் கண் கூடாகப் பார்த்ததும், அவளுக்கு வியப்பு மேலிட்டது. கட்டத்தினரில் இளைய தலைமுறையினரை விடவும் முற்றிப் பழுத்து முதிர்ந்தவர்களே கூடுதலாகக் காணப்பட்டனர்! வயதான கட்டைகளுக்கு செக்ஸ் என்கிற இனக்கவர்ச்சியில் இ த் த ைன மயக்கமா! அவள் திகைத்தாள்.

அவள் கேள்வியே அவளைச் சுட்டிருக்கலாம். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி படித்துக் கொள்வ தற்குப் பால் உணர்வு ஒர் ஆர்வத் தூண்டுதலாகப் பயன்பட்டால், வாழ்க்கை வாழ்வதற்காக அமையும்:-இவ்வகையில் 'பாரிஸ் இன்ப இரவுகள்' பயனுள்ளதுதான்!

"குட் சவினிங் டாக்டர்"

ஓ... குமாரி குழலி!... நல்லா இருக்கியாம்மா?...”

"உங்கள் புண்ணியத்திலே, நல்லாவே இருக்கேன், டாக்டரம்மா!" வெள்ளைத் தாவணி இயற்கை தாய்க்கு வெண்சாமரம் வீசியதோ?

"படம் பார்க்க வந்தியா?”

"இல்லே... இல்லே. பக்கத்துத் தெருவிலே என் தோழி ஒருத்தியைப் பார்த்துட்டுத் திரும்பினேன். உங்களை மாதிரி தெரிஞ்சுது; அதான் ஒடியாந்தேன்..."

"மிகவும் மகிழ்ச்சி, குழவி!" பாசம் கரைபுரளப் பேசினாள், ரேவதி.

கண்களுக்குள்ளே நின்றவளை நேரிடையாக மீண்டும் பார்த்த களிப்பு, அவளுக்கு ஆறுதலை அளித்தது. குழவியை அப்படியே விழுங்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பதென்று தீர்மானம் செய்து கொண்டவளைப் போல, தொடுத்த கண் எடுக்காமல், ஆழமாகவும், அன்பாகவும் பார்த்தாள். அந்தப் பார்வை அவளுக்கு எத்துணை ஆறுதலையும் தேறுதலையும் தருகிறது!

யாரோ தும்முகிறார்கள்!

“ஒரு நிமிடம் நிற்கிறாயா, குழலி: ஒரு நிமிடத்திலே வண்டியை எடுத்துக்கிட்டு வந்திடறேன்" என்று கூறி நகர்ந்தாள், ரேவதி.

மறுகணத்தில், தன் தோளைத் தொட்டு யாரோ உலுக்குவதை உணர்ந்து தி கி லு - ன் முதுகைத் திருப்பினாள்.

அங்கே... விதியின் கைப்பாவையென நின்றாள், மந்தாகினி. "உங்கள் ஆணவத்துக்கு நான் ஒன்றும் குறைந்தவள் இல்லை" என்று சொல்லாமல் சொல்வதைப் போன்று அவள் காணப்பட்டாள்.

"இடைவேளை நேரத்திலே என்னமோ கேட்டீங்க. இப்ப சொல்றேன்: உங்கள் கணவன் பேர் எதுவோ, அதுவேதான் என் கணவன் பேரும்!" என்றாள்.

எரிமலையின் பிளந்த வாயருகே தள்ளப்பட்டாள், ரேவதி. என்ன புது சோதனை இது? பெயரைக் கேட்டால் பெயரைச் சொல்லுவாளா?... விடுகதை போடுகிறாளே?

"அப்படிங்களா? அப்படின்னா, என் வீட்டுக்காரர் வச்சிருக்கிறது போலவே, உங்கள் வீட்டுக்காரரும் ஒரு 'செவர்லே' வண்டியை, ஊகூம், 'செவர்லேட்' வண்டியை வச்சிருக்கிறது தப்பு இல்லைதான்" என்று 'நைச்சியம்’ படித்தபடி நகர்ந்தாள், ரேவதி.

"ஆமா ஆமா!" என்று தலையை ஆட்டிவிட்டுப் புறப்பட்டாள், மந்தாகினி.

சாலை ஓரத்துக்கு வந்தது 'மாருதி’.

"முன்னாடி ஏறிக்கம்மா’’ என்றாள் ரேவதி.

குழலி ஏறிக்கொள்ளப் போனபோது-

அசுரத்தனமாகக் குறுக்கு வழியில் பாய்ந்து வந்து நின்றது, மஞ்சள் பூசிக் கொண்டிருந்த கார் ஒன்று. பழைய 'பியட்!'

அதிலிருந்து மந்தாகினி இறங்கினாள்.

“டாக்டரம்மா! என் காரை ஒட்டுகிற ஞானசீலன் தானுங்க எங்கள் வீட்டுக்காரர். இன்னும் நாலு நாளிலே நாங்கள் ஊட்டியிலே ஆப்பிள் சாப்பிடப் போறோமுங்க..." என்றவள் 'டாட்டா' என்று கூறி கைகளை விசியபடி மீண்டும் காரில் ஏறிக்கொண்டாள். காரும் நகர்ந்தது .

சிரிப்பதா , அழுவதா என்பது புரியாமல் போகவே, 'தெய்வமே’ என்று காரைக் கிளப்பினாள், ரேவதி.

பாண்டி பஜார் கடிகாரம் ஒன்று 9 மணி சொல்விற்று. பனகல் பூங்காவின் தெற்கு முடுக்கில் 'மாருதி’ நின்றது.

ரேவதிக்கு அதிர்ச்சி மாறவில்லை. ஞானகுனிய மாகத் தோற்றம் தந்த ஒரு முரடனுக்கு ஞானசீலன் என்பதாகப் பெயர் வாய்த்திருக்கிறது.

"அம்மாடி!... அங்கே போய் ஆளுக்கொரு டீ குடிப்போம் முதலில்’’ என்றாள்.

நாயர் கும்பிடு கொடுத்து வரவேற்க, அவள் கடையை நெருங்க, மீண்டும் அவள் அதிர்ச்சி அடைந்தாள்.

தாடியும் மீசையும் பூண்டவராக, முகத்தைத் திருப்பிக்கொண்டு சாரைப் பாம்பாகப் பாய்ந்து சென்றவர் மிஸ்டர்... மிஸ்டர். ஆமாம்; அவரே தான்! உயிர்ப்பகுதி ஏன் இப்படித் துடிக்க வேண்டும்?

குழலி சற்றுத் தொலைவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு, குழலி?’’

"எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் குடிச்ச சாயாவைப் பாதியிலேயே வச்சுப்போட்டு, திடுதிப்னு தலைபோற அவசரம் வந்ததாட்டம் கிடுகிடுன்னு பறந்திட்டாருங்கம்மா. பின்னாடியே ஒடிப்போய்க் கூப்பிட்டுப் பார்த்தேன் மனுஷன் திரும்பிக்கூடப் பார்க்காமலே மறைஞ்சிட்டாருங்க!”

ரேவதியின் மார்பில் எறும்பு கடித்தது. சுரீர் என்றது "யார் அவர்?"

“எனக்குத் தெரிஞ்சவர். உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. தாடியும் மீசையும் வச்சிருந்தார். கண்டுதானோ என்னவோ, பேய் பிசாசைக் கண்டராட்டம் அரண்டு மருண்டு ஓடிப் போயிட்டாருங்க. "அந்த மனுசன் யாராம்?"

"எனக்குத் தெரிஞ்சவர்னு சொன்னேனே...”

"தெரிஞ்சவர்னா...?"

"எனக்கு அண்ணன்!’’

"கூடப் பிறந்த அண்ணனா?”

"கூடப் பிறக்காத அண்ணன்.’’

ரேவதிக்கு நல்ல மூச்சுத் திரும்பியது. "பேர் என்னவாம்?’’

"ஞானசீலன்னு பேருங்க, டாக்டரம்மா.’’

"ஒகோ..."

நாயர் இடைமறித்தார். "அம்மேக்குச் சாயா போடட்டே? எங்க குழலிக்கும் அந்தச் சேட்டன் மாதிரி சாயா தான் இஷ்டம்.”

ரேவதியின் நீலக்கடல் விழிகள் கோலம் போட்ட மாதிரி வியப்பில் விரிந்தன. தேடி வந்த தேனிரை தேட்டமுடன் பருகினாள். இரண்டு சாயாவுக்கும் பைசா கொடுத்தாள். பிறகு தன் காரை - அண்டினாள். தேய்பிறை இருட்டிலும் குழவியின் முகம் பளிச்சென்று தெரிந்தது. 'நீ எப்ப வேலைக்கு வர்றே?’ என்று கேட்டாள்.

“அதை டாக்டரம்மாதான் முடிவு செய்யனும்; அது தான் நியாயம்.”

"அப்படின்னா, நீ நாளைக்குக் காலையிலேயே வேலைக்குச் சேர்ந்திடேன். நாளைக்குத் திங்கட்கிழமை. திங்கட்கிழமைன்னா எனக்கு வெகுவாகப் பிடிக்கும்."

"ஓ... வாய் கொண்ட மட்டும் சிரித்தாள், பூஞ்சிட்டு கன்னி. எங்கள் அண்ணனுக்கும் திங்கட்கிழமைன்னாரொம்பவும் இஷ்டம் டாக்டரம்மா.

"அப்படியா?...” ஆச்சரியக்குறியை ஏந்தினாள் ஏந்திழையாள். "குழலி! இனிமேல் நீ என்னை 'டாக்டர்’னு வெறுமனே கூப்பிட்டால் போதும்; 'அம்மா' பட்டம் சூட்ட வேணாம்."

"அதுவும் சரிதான் டாக்டர்!"

"நீ படுசமர்த்து!"

"ஞானசீலன் அண்ணனும் இப்படித்தான் பாராட்டுவார்.’’

"அண்ணன், அண்ணன்னு உயிரையே விடுறியே, குழலி!...” -

"உண்மைதாங்க... என்னோட அண்ணனுக்காக உயிரை விடவும் சித்தமாய் இருக்கேனுங்க, டாக்டர். அவர்- மிஸ்டர் ஞானசீலன் வெறும் மனுசன் இல்லே. அசலான மனுசன். ஒரு நாளைக்கு அவரை அழைச்சிட்டு வந்து உங்கள் கையிலே அறிமுகப்படுத்தி வைப்பேனுங்க!”

“உன் இஷ்டம் என் பாக்கியம்!"

"எங்கள் டாக்டர் ஜோக்கூட அடிக்கிறாங்களே?” நெஞ்சின் பாதிப்பு உதடுகளைக் கீறியது. இரத்தம் சொட்டாமலே புன்னகை செய்கிறாள், ரேவதி!

“குழலி சின்னப்பொண்ணு! உலகம் இப்ப தெரியாது. அவர் என்னைச் சந்திக்க ஒப்பவே, மாட்டார்; அதே கதை தான் இங்கேயும்; நீானும் அவரைச் சந்திக்க ஆசைப்பட மாட்டேன்; இதெல்லாம் குழலிக்கு என்ன தெரியும்...? குழலிக்குத் தெரிஞ்சு இனி என்ன ஆகப் போகுது..? இந்தக் குட்டிக்கு எதொண்ணும் தெரிய வேண்டாம். தெரியவும் கூடாது!" ரோஷம் நிரம்பிய வைராக்கியத்தின் கால்களிலேயே இப்போதும் நின்றாள், அவள்.

பொய்யாகவும் கனவாகவும் பழங்கதையாகவும் ஆக விட்ட இறந்த காலம் இறந்து சுளைகளையாக புத்த ஆண்டுகள் உருண்டு ஓடிவிடவில்லையா?

இப்போது அவளுக்கு மாற்றம் வேண்டும். நெஞ்சு, ஈட்டி முனையில் வலித்தது. "குழலி, உன் வீட்டிலே இந்நேரம் உன்னைத் தேடிக்கிட்டு இருப்பாங்கதானே?” என்று பரிவுட்ன் விசாரித்தாள்.

தனக்குத் தாலி வழங்கிய அந்தத் திங்கட்கிழமை அவளது அடிமனத்தில் கெட்டிமேளம் கொட்டியிருக்கலாம் அப்போது.

குழலி விரக்தியோடும் வேதனையோடும் சிரிக்க முயற்சி செய்தாள். "நாதியற்ற அனாதைங்க அம்மா நான்; தூரத்து அத்தைக் கிழவி ஒருத்திதான் இப்ப எனக்குச் சதம், அவங்களுக்குப் பார்வை கெட்டுப் போச்சு: அவங்களால என்னைத் தேட முடியாதுங்க டாக்டர்.”

"அப்படியானால், ஒரு காரியம் செய்வாயா?”

"நீங்கள் சொல்லோனும்னுதான் நான் காத்துக்கினு இருக்கேனுங்க.’’

“நீயும் என் கூட தாம்பரத்துக்கு வந்திடு.”

"உங்கள் இஷ்டம் என் பாக்கியம் டாக்டர்!”

ஆனாலும் உனக்கு இத்தனை குறும்பு உதவாது, குழலி!”

"போங்கம்மா... மன்னி க்க ணு ம்... போங்க, டாக்ட்ர்!”

நேரம் கடந்த நேரத்திலே, ஆள்நடமாட்டம் துளியும் இல்லாமலிருந்த பரங்கிமலைப் பகுதியில் சொகுசுக்கார் ரேவதி இல்லத்தைக் குறிவைத்துப் பறந்து கொண்டிருக்கையில், பின்புறமாகத் துரத்தி வந்த கருப்பு டாக்சி ஒன்று பாவிந்து வந்து மாருதியைக் குறுக்கே மறித்து நின்றது .

ஆண்மையின் சீற்றத்தோடு வண்டியை நிறுத்தினாள், டாக்டர் ரேவதி. எதிரே நின்ற கருப்பு நிற வாடகைக் காரின் எண்களைக் கண்டதும் அவள் பிரமித்தாள். அன்றொரு நாள் ஞானசீலன் குடிபோதையில் விபத்துக்கு ஆளாகத் துாண்டியதே. அதே கருப்பு டாக்சிதான், இது! சந்தேகம் இல்லை.

வாட்டசாட்டமான முகமூடிக் கொள்ளைக்காரன் ஒருவன் மட்டும் காரிலிருந்து குதித்து வந்து நின்றான். "டாக்டரம்மா, நீங்கள் கழுத்திலே போட்டிருக்கிறது தாலியானால் எனக்கு வேண்டாம். வெறும் தங்கச் சங்கிலியாக இருந்தால் அதை என்கிட்ட கழற்றிக் கொடுத்திட்டு, மரியாதையாக உங்க மானத்தையும் உசிரையும் காப்பாற்றிக்கினு மூச்சுக் காட்டாமல் திரும்புங்க!” என்று கட்டளை பிறப்பித்தான்.

“என் கழுத்திலே கிடக்கிறது வெறும் சங்கிலிதான். அதை உன் கையில கழற்றித் தர மறுத்தால், நீ என்ன செய்வாய்?" என்று ரோஷத்தோடு சீறினாள், ரேவதி.

"என்ன செய்வேனா?” என்று கொக்கரித்தவனாக, கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து நீட்டினான், அவன்.