அவள் ஒரு மோகனம்/அவள் யார்?

விக்கிமூலம் இலிருந்து

9. அவள் யார்?


துப்பாக்கியைப் பார்த்துப் பயந்து விடவில்லை, ரேவதி. அவளிடம் இல்லாத துப்பாக்கியா? அதோடு, பயம் என்பதும் அவள் அறியாத ஒன்று. பயந்து பயந்து ஒரு பெண்-அதுவும் தனித்து இருக்கும் சிறு பெண்-இந்த உலகில் எவ்வாறு வாழமுடியும்?

ரேவதி தனக்கே உரிய அகங்காரத்தோடு சிரித்தபடி, “இப்ப உனக்கு என்ன வேணும்?" என்று கேட்டாள்.

"நீங்கள் கழுத்தில் போட்டிருக்கிற சங்கிலி வேணும்!"

அவ்வளவு தானே?”

"ஆமாம்!”

உண்மையிலேயே இவன் முகமூடிக் கொள்ளைக்காரன் தானா? என்று அவளுக்கு ஒர் ஐயம் தோன்றியது. முக மூடிக் கொள்ளைக்காரனுக்கு தங்கச் சங்கிலியும் தாலியும் ஒன்றுதானே?

"நீ யாராக இருந்தால் எனக்கென்ன? ஆனாலும், நீ மிருகமாகி, விலை மதிக்க முடியாத என்னோட கற்பைச் சூறையாட நினைக்காமல் இருந்தவரையிலும், மனிதன் தான்! நான் உயிரோடு இருக்கிறவரை, சங்கிலியை உன்னாலே பறிச்சுக்கிட முடியாது. சரித்திரம் வேணும். அதனாலே,

எனக்குச் சொந்தமான உயிரை நானே போக்கிக் கொண்டபின் என் கழுத்துச் சங்கிலியை நீ கழற்றி எடுத்துக் கொள்."

பேசிக் கொண்டே சட்டென்று அவள் கையில் சுழன்ற கைத் துப்பாக்கியை வெகு லாவகமாகத் திருப்பித் தன் இதயத்துக்கு நேராகக் குறிவைத்தாள் டாக்டர் ரேவதி.

அதற்குள்-

"அம்...மா!"

கெட்ட கனவு கண்டு விழித்துக் கொண்ட குழலி, காரில் இருந்து இறங்கி ஓடோடி வந்தாள். கைத் துப்பாக்கியைப் பதட்டத்தோடு பறித்துக் கொண்டாள். அதை நேர்வசமாகத் தயார் நிலையில் பற்றிப் பிடித்துக் கொண்டே, முகமூடித் திருடனைக் குறிவைத்தாள்.

ரேவதி மலைத்தாள்.

குழலி கர்ச்சனை செய்தாள்: "ஏய், முத்தையா ! உன் வினை இப்ப உன்னைச் சுடுதுதானே? உனக்கு உன் உயிர் மேலே ஆசையிருந்தா, உடனே மரியாதையா ஓடிப்போயிடு. ஞானசீலன் அண்ணன் திரும்பினதும் உன்னோடு பேசிக்கிடுவேன்!’’

அடபாவமே! ‘முகமூடி' எங்கே ஒடுகிறதாம்? பரிதாபம்!

"அட பாவமே! இந்த முகமூடி ஆசாமி அல்சர் நோயாளி முத்தையன் தானே?...இவனுக்கு வயிற்று வலிக்கு வைத்தியம் செய்ததே நான் தானே!" என்று அனுதாபம் மேலிடச் சொன்னாள் டாக்டர் ரேவதி.


"அது எனக்குத் தெரியுமுங்க, டாக்டர்" என்றாள் , குழலி.

"உன் ஞானசீலன் அண்ணனுக்கு இந்த முத்தையனைத் தெரியுமா?’’ "ஊம்!"

ரேவதி சிந்தனை வசப்பட்டாள்: "ஒரு வேளை, நான் தாலி கட்டிக் கொண்டிருக்கிறேனா இல்லையா என்கிற துப்பை அறிஞ்சுக்கிடவும் அந்த ஞானசீலன் இப்படியொரு மறைமுகமான நாடகத்தை நடத்தியிருக்கலாமோ?"

அவள் தவித்தாள்!

'மிஸ்டர் ஞானசீலன்! நீங்கள் எனக்கு இன்னும் எத்தனை பரீட்சை வைக்கப் போlங்களாம்?'-கண் முனைகள் கசிகின்றன.

"வா குழலி போகலாம்.’’

மாருதியின் குழல் ஒலி விரிட்டது.

'ரேவதி இல்லம்' உறக்கம் கலைந்தது.

விளக்குகள் ஒளி உமிழ்ந்தன.

ரேவதி உள்ளே நுழைந்து, பூந்தோட்டத்தைக் கடந்து, முகப்பு மண்டபத்தை அடைந்து, அகல விரிந்த வரவேற்புக் கூடத்தில் அவளது மெத்தை 'சோபா'வில் சாய்த்தாள்.

அப்போதுதான் அவளுக்கு மெய்யாகவே நல்ல மூச்சு வந்தது. அப்பொழுது அவள் மனமும், மானமும், மதிப்பும், மரியாதையும் அனுபவித்த ஆனந்தமான அமைதியும் அமைதியான ஆனந்தமும்கூட அவளுக்கு மிகவும் புதிய அனுபவம்தான்!

பின்தொடர்ந்து வந்த குழலியைக் கண்டவுடன், "வாம்மா...வா" என்று வரவேற்புப் படித்தாள். "இங்கே இனிமேல் உனக்குப் பிடித்தமான நாற்காலியில் நீ உட்கார்ந்து கொள்ளலாம்" என்றும் சலுகை வழங்கினாள்.

பத்து இருபது-அது நேரம்.

ஆயா அங்கம்மா வந்து நின்றாள். "உங்களுக்கும் விருந்தாடிப் பெண்ணுக்கும் இலை போடட்டுங்களா? மத்தியானம்கூட நீங்கள் சாப்பிடலையே?" என்றாள்,

"சரி, சரி” என்று சுவையற்றுத் தலையை ஆட்டி விட்டுக் குழலியை நோக்கிப் பார்வையைத் திருப்பினாள், ரேவதி.

குழலி, நீயும் என் மாதிரி அசைவமாகத்தான் இருக்கணும்; முட்டை ஆம்லெட் பிடிக்கும்தானே?”

அவள் பிடிக்குமென்று சொன்னது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தந்திருக்கவேண்டும். ரேவதிக்கு விருப்பமான சாப்பாட்டில் இதுவும் ஒன்று. ஆயாளுக்கு ஆணை இட்டாள்.

ராவ், நெளியாமல் கொள்ளாமல் வந்து நின்றார்.

"உங்களுக்குத் தாராளமாக எலெக்டிரிக் டிரெயின் கிடைக்கும். அவசரப்படாமல் புறப்பட்டுப் போய்ச் சேருங்க. என் சுயவரம் பற்றிய விவரங்கள், விவகாரங்களைப் பற்றி நாளைக்குக் காலம்பறப் பேசுவேன்" என்றாள், டாக்டர் ரேவதி.

ராவ் தயங்கி நின்று பேசினார்: "அம்மா, சரியா அரைமணிக்கு முந்தி மந்தாகினின்னு ஒரு பொண்ணு உங்களை டெலிபோனிலே கூப்பிட்டாங்க. அவசரமா உங்களோடு பேசனுமாம். அந்தப் பொண்ணுக்கு டெலிபோன் கிடையாதாம். மறுபடியும் அவங்களே பேசுவாங்களாம்" என்றார்.

தொலைபேசி கூவுகிறது!

மந்தாகினியாக இருப்பாளோ? அவளை நினைத்ததும், தலையை வலித்தது. ரேவதி பேசினாள். "யார் பேசறது?...ஒ.டாக்டர் இந்துமதியா! ஹாய் இந்து, எப்படிடீ இருக்கே?...என்ன, லண்டனிலிருந்து ராத்திரி

தான் வந்தியா?...உன் கணவர். சேட்ஜி எப்படி இருக்கார்?...அடடே பாவமே! சேட் உங்களை விலக்கி விட்டு, வேறு ஒருத்தியைக் கட்டிக்கினாரா?...ஒ...அப்படியா? புதுக்கணவரோடத்தான் வந்திருக்கியா? தேனிலவா? பாரிசிலேயே தேன்நிலவு முடிஞ்சாச்சா? ம்...கட்டாயம் வருவேன். என்னோட அன்புத் தோழி இந்துவை-திருமதி இந்து ராஜ்குமாரை-நாளைக்கு சாயந்தரமே சந்திப்பேன். குட்நைட்!"

நல்லவேளை, மந்தாகினி அழைக்காதவரை தலைவலி மிச்சம், மந்தாகினியைப் பார்த்த நேரம் தொட்டு, மனத்தை தொடுகிற மாதிரி அவள் நடந்து கொள்ளவில்லையே? அவளைப் பார்த்தால், குடும்பப்பாங்கான நல்ல பெண்ணாகவே தெரியவில்லையே? இந்த லட்சணத்தில் ஞானசீலனை இவள் எப்படி அறிந்தாளாம்?

ஒருவேளை, இந்தத் துப்பு குழலிக்குத் தெரிந்திருக்கலாமோ? அண்ணன், அண்ணன் என்று உயிரை விடுகிறாளே, இந்தக் கன்னிப் பெண்!

முட்டையின் மணமான வாசனை மூக்கைத் துளைக்கிறது.

"குழலி, எங்கள் குடும்பத்திலே இனி நீயும் சேர்த்தி, கூச்சம் இல்லாமல் நீ சாப்பிடலாம்" என்று அன்புடன் ரேவதி கூறினாள்.

"சரிங்க" என்றாள் குழலி, பேசும் விழிகள் பேசாமலே அமைதியைக் கூட்டின.

சூடான பொன்னி அரிசிச் சோறு.

கத்தரிக்காய் பொறியல்.

புதினா துகையல்.

வற்றல் குழம்பு.

பச்சைக் கொத்தமல்லி ரசம்.

ஆம்லெட்.

கட்டித் தயிர்.

ஆவக்காய் ஊறுகாய்.

பசிக்குப் பசி என்கிற மருந்து முதுரை குழலி விஷயத்தில் உண்மை ஆயிற்று.

ஈர நெஞ்சில் அன்பான ஆறுதலை வரவு வைத்துக் கொள்கிறாள், ரேவதி.

"அம்மா...!"

"என்னம்மா?..."

“ஏதாவது பேசுங்கம்மா!"

"பேசுறேம்மா, அதுக்கு முன்னாடி நீ கொஞ்சம் பேசனும், குழலி! நீ என்னைப் பத்தித் தெரிஞ்சுகிட்டிருக்கிற மாதிரி, நான் உன்னையும் புரிஞ்சுக்கிட வேண்டாமா?"

"நான் சின்னப் பொண்ணு!"

" நீ ஒரு சின்ன உலகம்!”

"நான் ஏறக்குறைய அனாதை மாதிரிதான்!”

"அதெப்படி? உனக்குத்தான் ஓர் அண்ணன் இருக்கிறதாகச் சொன்னியே, குழலி?"

"ஒ!...ஞானசீலன் அண்ணாவைப் பத்திச் சொல்லுறீங்களா? அவர் மெய்யாவே என் அண்ணன்தான்; கூடப் பிறக்காத அண்ணன். அவரைப் பற்றிச் சொன்னால், கதை கேட்கிற மாதிரிதான் தோணும்!”

"சொல்லேன் கேட்போம்.”

கள்ளங்கபடு இல்லாத அந்தக் கன்னிப் பெண், தெள்ளிய நீரோடை போல, எல்லாவற்றையும் குதுனகலத்துடன் சொன்னாள்!