அவள் ஒரு மோகனம்/எழுத்தை மட்டும் நம்பி!

விக்கிமூலம் இலிருந்து

எழுத்தை மட்டும் நம்பி!
ச. மெய்யப்பன், எம். ஏ
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழில் நாவல் இலக்கியம் நலமுடன் வளர்ந்து வருகிறது. சமூக நாவல்கள், பிரச்சினை நாவல்களுடன், தனித்தன்மை சான்ற வட்டார நாவல்களும் வெளிவருகின்றன. பல்கலைக்கழகங்களில் நாவல்கள் பாடநூல் ஆகின்றன. தமிழ் நாவல்களைப் பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் தமிழ் வழங்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வேடுகளாக அளிக்கப் பெற்றுள்ளன. அவற்றில் பல அச்சாகி உள்ளன. நாவல் இலக்கியம் பற்றிய திறனாய்வுகள் ஐம்பதுக்கு மேல் வெளி வந்துள்ளன. நாவலாசிரியர்கள் சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராய்வதாலும் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதாலும் தீர்வுகள் கூறுவதாலும் சமூகத்தில் இந்நாளில் மதிப்புப்பெற்று வருகின்றனர். காப்பியங்கள் போன்ற பெருநாவல்களும் இப்பொழுது தமிழில் வெளி வருகின்றன. தலைகீழ் விகிதமாக மாத நாவல்களாகிய புற்றீசல்களும் பலவாகத் தோன்றி மறைகின்றன. வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படும் மாத நாவல்கள் மிகுந்த பரபரப்புடன் விற்பனையாகி, வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடுகின்றன. ராணிமுத்து, இருபது ஆண்டுகளாக 240 நாவல்களையும் மாலைமதி திங்கள் இதழாய், மாதமிருமுறையாய், வார இதழாய் நூற்றுக்கணக்கான நாவல்களையும் வெளியிட்டுள்ளது. மாத நாவல் என்னும் நோய் நாவல் இலக்கிய வளர்ச்சியை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை ஆராயவேண்டிய காலம் இது.

குறுநாவல்களுக்குக் குறுநாவல்களின் வடிவம் சிதைந்தும் சீர்குலைந்தும் வருகிறது. எவ்வாறாயினும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில்-தமிழ் இலக்கிய வரலாற்றில்-நாவல் இலக்கியத்திற்கு ஒரு நல்ல இடமுண்டு.

முப்பது ஆண்டுகளாக பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் நல்ல பல நாவல்களை எழுதியுள்ளார்கள். பலநூறு சிறுகதைகளையும் படைத்தவர். முதற் காளாஞ்சி என்னும் சிறுகதைக்கு முதற்பரிசு பெற்றவர். நாவலுக்காகத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றவர். சிறுகதை, புதினம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, திறனாய்வு எனப் பல வடிவங்களிலும் நூல் படைத்தவர். உலகம் புகழும் அன்னை தெரசா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். ஏலக்காய் பற்றி இவர் எழுதிய நூல் வேளாண்மைத் துறைக்குப் புதிய வரவாகும், நல்வரவும் ஆகும். ‘கல்கி முதல் அகிலன் வரை’ என்னும் நூல் திறனாய்வுத் துறைக்கு இவர்கள் அளித்த கொடை ஆகும். ‘அகிலன் முதல் சுஜாதா வரை’ என்னும் நூலிலும் சிவசங்கரி உள்ளிட்ட படைப்பிலக்கிய ஆசிரியர்கள் பற்றிச் சிறந்த முறையில் திறனாய்வு செய்துள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உமா இதழின் ஆசிரியராக அமைந்து சிறந்த இலக்கிய இதழை நடத்திய பெருமை இவர்களைச் சேரும். துறைதொறும் சிறந்து விளங்கும் தமிழ்ப் பெருமக்கள் பலரைப் பேட்டி கண்டு, மிகச் சிறப்பாக வெளியிட்டவர்கள். ‘புனைபெயரும் முதல் கதையும்’ என்னும் நூல் இவர்களது திறனாய்வுத் திறனுக்கு ஒரு சான்றாக அமைகிறது.

எளிய வாழ்க்கையும், உயர்ந்த நோக்கமும் கொண்ட இவர்கள் எழுத்தையே நம்பி வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தை மட்டுமே நம்பி வாழ முடியாத நிலைமையில் தவிக்கிறார்கள். எல்லா இலக்கிய வடிவங்களில் எழுதியும் எவ்வளவோ எழுதியும் வசதியான வாழ்வும் சமூக அந்தஸ்தும் பெற தமிழகத்தில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. பிரபலமான பத்திரிகைகளில் இடைவிடாது தொடர்ந்து எழுதினால்தான் ஒரளவு பிழைப்பு நடத்த முடிகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் எழுத்துத் தவம் செய்யும் பூவை ஆறுமுகனாருக்கு இது மணிவிழா ஆண்டு. அவருடைய மணிவிழாச் சிறப்பு வெளியீடாக மணிவாசகர் பதிப்பகம் இந்த நாவலை வெளியிடுகிறது. பூவை ஆறுமுகம் என்னும் பெயர் பலரறிந்த பெயர்: நல்ல பெயர்; நாடறிய வேண்டிய பெயர். நல்லவருக்கு மணிவிழா ஆண்டில் எல்லா நலன்களும் நிரம்ப தமிழன்னை அருள் புரிவாளாக.