அவள் ஒரு மோகனம்/உங்கள் ‘பூவை’ பேசுகிறேன்:
உங்கள் ‘பூவை’ பேசுகிறேன்:
நடைமுறைப் பூர்வமான வேடிக்கை ஒன்று! இந்த வேடிக்கை, மண்ணுலக வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், விண்ணுலகத்தின் வாழ்விற்கும் ஒரு விதியாகவும்-விதியின் விதியாகவும் அமைந்தது!
உண்மைதான்!
கவிச்சக்கரவர்த்திக்கு விதியின் நாயகியாக மிதிலைச் செல்வியாம் சீதை கிடைத்தாள்.
எனக்கோ, விதிக்கு ஒரு நாயகியாக ரேவதி கிடைத்தாள்! அவள் வெறும் ரேவதி அல்லள்; டாக்டர் ரேவதி எம். எஸ், எம். பி. பி. எஸ், டி.ஜி.ஒ, ஃஎப். ஆர். ஸி. எஸ், ஃஎம். ஐ. ஸி. எஸ் , ஃஎப். ஏ. ஸி. எஸ்.!. பட்டங்கள் ஆள்கின்றவள்; சட்டங்கள் செய்கின்றவளும் அவளே!-அதனால்தான், “நானே ஒரு விதிதான்!... ஆமாம்; எனக்கு நானேதான் விதி!” என்பதாகப் பெண்மை சிறக்கவும் நிறக்கவும் தமிழச்சியாக முழக்கம் செய்தாளோ?
அவள் வேடிக்கையானவள்!-அவள் எனில், டாக்டர் ரேவதி!
வாழ்க்கை மட்டிலும், மட்டில்லா வேடிக்கை இல்லையா, என்ன?
பாரதி, அமரகவி!- ஆகவேதான், இன்றைய ஜனநாயக மரபு துலங்கிட, அன்றைக்கே அவனால் பாட்டுக் கட்ட முடிந்தது! எங்கெங்கும் சக்தியைக் கண்டவன்! - அதனால்தான், பெண்மை வாழ்கவென்றும், பெண்மை வெல்கவென்றும் கூத்திட்டான்; கூத்து ஆடினான்!
அலகிலா விளையாட்டுடைய அப்பனே அம்மையப்பன் ஆகிப் பெண்மைக்கு வாழ்த்துரைத்து அனைத்து உலகிற்கும் முன் உரிமை பெற்ற முன் உதாரணம் ஆனான்!
அந்த அறநெறிமுறை மரபினில் உதித்த பாரதி, பாரதத் தமிழ்ச் சமுதாயத்தில், உயிரினைக் காத்து உயிரினைச் சேர்த்து உயிரினுக்கு உயிராய் இன்பமாகி, உயிரினும் ‘பெண்மை’ இனிக்கக் கண்டதில் வியப்பில்லைதான்!
அந்தப் பெண்மைக்குச் சத்தியத்தின் தருமமாகவும் தருமத்தின் உண்மையாகவும், உண்மையின் சத்தியமாகவும் விளங்குகிறாள் ரேவதி-டாக்டர் ரேவதி! அவள் சுந்தரக்கிளி மாத்திரமல்லள்; சுதந்திரக் குயிலும் கூட!
ஓர் அதிசயம்!
டாக்டர் ரேவதிக்கு மணமகன் தேவையாம்!
செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பேசின!
ரேவதியின் மருத்துவமனையில் தோழிமார்கள் இருவர் ரேவதியை-ஊகூம், டாக்டர் ரேவதியை விமரிசனம் செய்கின்றனர்.
மஞ்சுளாவுக்கு டாக்டர் ரேவதியைப் பிடிக்காது.
ஆனால், பிருந்தாவுக்கு டாக்டர் ரேவதியென்றால், நிரம்பியதோர் ஈடுபாடு! அவள் சொல்லுவாள்: “டாக்டர் ரேவதின்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்; எப்படியாவது அவங்க திருமணம் நடக்கட்டும்! ரேவதி அம்மாவோட மனப்போக்கே தனி; தனித்தன்மையானது. அதைப் புரிஞ்சுக்கிடாதவங்க, ‘டாக்டர் ரேவதி அகம்பாவம் பிடிச்சவங்க’ அப்படின்னு சொல்லுவாங்க! நான் அறிஞ்சவரை, ரேவதி-டாக்டர் ரேவதி அன்புக்கு ரொம்ப ரொம்பக் கட்டுப்படுறவங்க! எதிலேயும் எப்பவுமே ஒரு நியாயம் வேணும்னு நினைக்கிறதும் நம்புறதும் எதிர்பார்க்கிறதும் தப்பா?”
தோழி பிருந்தாவின் இதய ஒலிக்கு இதய ஒளி ஆனவள்தான் ரேவதி-டாக்டர் ரேவதி!
அதிநவீனமானதும், அநீதமானதுமான இன்றையக் ‘கம்ப்யூட்டர் யுக’த்திலே பெண் ஒருத்தி ‘மணமகன் தேவை’ என்பதாக நாளேடுகளிலே விளம்பரப்படுத்துவது கொச்சையான செய்தி அல்ல! - கொச்சைப்படுத்த வேண்டிய தகவலும் இல்லை!-கொச்சைப்படுத்தப்பட வேண்டிய விஷயமும் அல்லதானே?
டாக்டர் ரேவதி செய்த விளம்பரங்களுக்கு இணங்கிப் புகைப்படங்கள் சகிதம் வந்த விண்ணப்பங்கள்-மனுக்கள் எத்தனை தெரியுமோ?-680.
ஆனால், அவளுக்கு ஒரேயொரு மணமகன்தான் தேவை! - அவள் தமிழ்ச்சாதிப் பாவை! அவள் எட்டுப் பேர்களைத் தேர்வு செய்து தாக்கல் அனுப்புகிறாள்! ‘எனக்கு நான்தான் விதி! அதனாலேதான், இப்படிச் செஞ்சேன். சோதனையோட நல்லதும் கெட்டதும் எனக்குப் புரிஞ்ச புதிர்தான். அதுவேதான் இந்த ரேவதியோட ஜாதக விசேஷம்!...அதுவேதான் ரேவதி... டாக்டர் ரேவதி! விதின்னு ஒண்ணு இருந்தால் கூட, அதோட வறட்டு ஜம்பம் என் கையிலே சாயவே சாயாது!...’ அவள் எண்ணுகிறாள் இப்படி: எக்காளச் சிரிப்பு சீறுகிறது; சிதறுகிறது. சிரித்தது அவள்தான்!-விதி அல்ல! விதி சிரிப்பதாகச் சொல்வதெல்லாம் அசல் பொய்!
உணர்வுகள், மன உணர்வுகள் மண உணர்வுகளாகித் தாயம் ஆடுகின்றன.
டாக்டர் ரேவதியின் மனவோட்டம் உள்வட்டம் சுழித்து மேலும் ஓடுகிறது; மென்மேலும் ஆடுகிறது!-‘எல்லா வகையிலும் என் மனத்துக்குப் பிடித்தமான ஒருவரை-எனக்கு எல்லா வழியிலும் பொருத்தமான ஒருவரை-எனக்குக் கணவராகத் தேர்ந்தெடுப்பேன், நான்! என்னால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிற அம்மனிதர், ஊரறிந்த என்னுடைய உயர்வு மனப்பான்மையை உணர்ந்தும் மதித்தும் போற்றியும் நடக்கத் தெரிந்தவர்தான் என்று நான் நம்பினால்தான், அந்த மனிதர் என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி எனக்கு நாயகனாகவும் ஆக முடியும்! ஆமாம்; இது என் வாழ்க்கைப் பிரச்னை! - மற்றப்படி, ஊர் உலகத்தைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது! தவிரவும், சுதந்திரப் பறவையான இந்த டாக்டர் ரேவதியின் சொந்த உரிமையாக்கும் இது!... இந்த உரிமைக்கு, உயிரால் உறவு சொல்லத் தெரிந்த, உறவு காட்டத் துணிந்த, அசலான உண்மை மனிதர் ஒருவர் கிடைத்தால்தான் எனக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கும்!-இதுவேதான் சத்தியமான, தர்மமான, உண்மையான என் முடிவு ஆகும்! ஏன், தெரியுமா? எனக்கு நான்தான் விதி! அந்த விதிதான் டாக்டர் ரேவதி நான் விதியின் நாயகியாக்கும்!’ அவள் சுயப் பிரக்ஞையை மீட்டுக் கொள்கிறாள்.
விடிகிறது, பொழுது; அது ஊர்கிறது; தவழ்கிறது; நடக்கிறது; ஓடுகிறது.
செயலாளர் செயலிழந்து வருகிறார். “டாக்டரம்மா! நீங்க நடத்தப் போற மாப்பிள்ளைப் போட்டிக்காக மணி ஐந்தாகியும் பொறுமையோட காத்துக்கினு இருந்தாங்க அந்த எட்டுப் பேரும். அந்நேரம் பார்த்து யாரோ சிதம்பரம்னு ஒருத்தர் வந்து அவங்களோட காதிலே என்னமோ சிதம்பர ரகசியத்தை ஓதினார். என்னமோ ‘எச்சில் பழம், எச்சில் பழம்’ என்கிற வார்த்தைங்க மட்டிலுந்தான் எனக்குக் கேட்டுச்சுங்க. டாக்டர் அம்மா! அவ்வளவுதான்; மறு நிமிஷம், வந்தவங்க எட்டுப் பேரும் பேய் பிசாசைக் கண்டதாட்டம் விழுந்தடிச்சுக்கிட்டு ஓடிப் போயிட்டாங்களே!” என்றார்.
அவள் சிரிக்கிறாள்!-விதி சிரிக்கவில்லை; டாக்டர் ரேவதியேதான் சிரிக்கிறாள்! சிரித்துக் கொண்டே தன்னுடைய அந்தரங்கமான அறைக்கு அந்தரங்க சுத்தியுடன் ஓடுகிறாள். தாழ் இடுகிறாள். அன்புக்கு அடைக்குந்தாழ் வேண்டியதில்லைதான்! அறைக்கு - தனி அறைக்கு-தனிப் பெண் ஒருத்தியின் அந்தரங்க அறைக்கு அடைக்குந்தாழ் வேண்டும்தானே? அவளுடைய பெண் மனம் என்னவெல்லாமோ நினைக்கிறது; அவளது பெண்மையின் மனச்சாட்சி என்னென்னவோ எண்ணுகிறது! மனச்சுமை இறங்க வேண்டாமோ? ‘ராயல் சாலஞ்ச்’ துணை வருகிறது!-புதுமைப் பெண்ணான டாக்டர் ரேவதி, புரட்சிப் பெண்ணும் அல்லவா?
ஓ!...ஆமாம்!
ஆகவேதான், அவளே அவளுக்கு விதியாகி, அவளே அவளுடைய விதியும் ஆகி, தன் வழியே-தன்னுடைய தனி வழியே தனக்குச் சதமென்று உணர்ந்து, கைத்துப்பாக்கியைச் சரண் அடைகின்றாள்! எச்சில் பழமாமே? சே! என்ன உலகம் இது!... என்ன வாழ்க்கை இது? என்ன மாயச் சோதனை இது? ‘வாழ்க்கையோட எல்லா நிலைகளிலேயும் நானே உசத்தியாய் நின்னு, முன் உரிமை பெற்று விளங்க வேணும் என்கிற லட்சியத்துக்காகப் போராடி, என் மானம் மரியாதையைப் பத்திரமாகவே காப்பாற்றிக்கிட அல்லும் பகலும் அரும்பாடு பட்டுக்கிட்டிருந்த எனக்குக் கடைசியிலே வெகுமதி இப்படிப்பட்ட மிருகத்தனமான கேலிப் பேச்சும் மனிதாபிமானம் இல்லாத அவமானமும் தானா??’ நிதர்சனமான யதார்த்த வாழ்க்கையிலே தோற்றுப் போன அவளுக்கு-ரேவதிக்கு -- டாக்டர் ரேவதிக்கு அழவும் தெரிந்தது; தெரிந்திருந்தது! -அந்த உருவம் மீண்டும் மீண்டும் நெஞ்சிலும் நினைவிலும் நிழலாடியது!...
அதோ, துப்பாக்கி தயார்!
ஒன்று...
இரண்டு...
‘மூன்று’ என்று அவள்-டாக்டர் ரேவதி-உச்சரிக்க ஆயத்தமாகிறாள். மங்கலத்தாலி ஊசலாடியது!
அப்போது-
கதவு தட்டப்பட்டது.
‘தட்டுங்கள்; திறக்கப்படும்’ என்னும்படியான வேதம் பொய்த்து விடுமா?-பொய்த்து விடலாமா?
திறந்தாள் ரேவதி!
அங்கே-
மிஸ்டர் ஞானசீலன் அதோ, டாக்டர் ரேவதியின் ‘மணமகன் தேவை’ போட்டிக்கெனத் தயாராகத் தோன்றுகிறார்!
ஞானசீலன் யார், தெரியுமோ?
டாக்டர் ரேவதியின் மனக்கணக்கின் கணிப்புப் பிரகாரம் குற்றவாளியான அந்த ஞானசீலன், யாராம்?
அது ‘சஸ்பென்ஸ்’!
அந்த ‘சஸ்பென்ஸ்’தான் டாக்டர் ரேவதியின் கதைக்கு முன் உரையும் பின் உரையும் ஆனது; ஆகிறது!
பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டியதில்லையாமே?
அப்பால், ஞானசீலன் ஏன் அலறிக் கதறுகிறார்?-“என்னோட கண் திறந்த நேரம், நீ கண்ணை மூடிக்கிட்டீயே, ரேவதி...!”
மூச்! ...
ஞானசீலனின் ரேவதியும் ரேவதியின் ஞானசீலனும் பளிங்குத் தரையிலே ஆனந்தமாகவும் ஜோடியாகவும் பள்ளி கொண்டிருக்கிறார்கள்!-அதோ... அதோ!
தயவு செய்து அந்த அதிசயத் தம்பதியை-விசித்திரமான அந்தத் தம்பதியை யாரும் எழுப்பி விடாதீர்கள்!...
வாழ்க்கை என்பது சத்திய சோதனை!
சத்தியம் சோதிக்கும் போது-சத்தியம் சோதிக்கப் படும்போதுதான் வாழ்க்கை வாழ்க்கையாக அமையும்; அமைய முடியும்; அமையவும் வேண்டும்.
ஆம், தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் விதியும் இதுவேதான்!-விதியின் விதியும் இவ்வாறுதான் அமைந்திட வேண்டும்!
பெண் ஒரு புதிரல்லள்; அவள் ஒரு புதுமை!...
தெய்வம் ஒரு புதுமையன்று: அது ஒரு புதிர்!-மாயப் புதிர்!
குழந்தை ஒரு கனவு அல்ல; அது ஒரு வாழ்க்கை!
அன்பு ஒரு சோதனையன்று; அது ஓர் உண்மை!
சத்தியம் ஓர் ஆணையல்ல; அது ஒரு தருமம்!
இலட்சியம் ஓர் எல்லையல்ல; அது ஓர் ஆன்மா!
காதல் ஒரு விளையாட்டு இல்லை; அது ஒரு தவம்!
வாழ்வு ஒரு பிரச்னையன்று; அது ஒரு சாதனை!...
அண்மை நாட்களில் மனமார்ந்த இலக்கிய மரபு போற்றி நான் படைத்திட்ட ‘கன்னித் தொழுவம்’ புதினத்தின் கதை நாயகியான பார்வதியை நான் என்றென்றுமே நன்றியறிவுடன் நினைவு கூர்வது உண்டு.
இப்போது, நான் நினைத்து மகிழவும், மகிழ்ந்து பெருமைப்படவும், பெருமைப்பட்டுப் பெருமிதம் அடையவும் டாக்டர் ரேவதி கிடைத்தாள்!
ஒரு செய்தி:
‘அவள் ஒரு மோகனம்’ என்ற இந்நவீனம் ‘தினத்தந்தி’ நாள் இதழில் அண்மையில் தொடரும் கதையாக வெளிப்படுத்தப்பட்டு அமோகமான பாராட்டுதல்களைப் பெற்றது. பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அதிபர் திருமிகு செவந்தி ஆதித்தன் அவர்களுக்கும் ‘ராணி’ ஆசிரியர் திருமிகு அ. மா. சாமி அவர்களுக்கும் நான் நிரம்பவும் கடமைப்பட்டவன் ஆவேன்.
அண்மையில் புத்தாண்டிலே நடைபெறவிருக்கும் என்னுடைய மணிவிழாவுக்கு ஆறுதலான ஒரு முன் அடையாளமாக வெளியிடப்படும் இந்த நவீனத்தை நல்ல முறையிலே சிறப்பாக வெளியிடும் மணிவாசகர் பதிப்புகத்தின் பதிப்பாசிரியர் வெற்றிச் செல்வர் - தமிழ்ப் பேராசிரியர் ச. மெ. அவர்களைத் தலைவணங்கிக் கை வணங்குகின்றேன்.
தமிழ்ப்படைப்பு இலக்கியத் துறையிலே கடந்த சில பல ஆண்டுகளாகப் பரவி வருகின்ற நச்சு நோய்க்கு ஆளாகாமல் தப்பிப் பிழைத்து ஆரோக்கியமான எழுத்துக்களை ஆர்வத்தோடும் அக்கறையோடும் ஆரோக்கியமாகப் போற்றி வருகின்ற உண்மையான இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை நான் மறப்பேனா?
வணக்கம்
சென்னை-600045 பூவை எஸ். ஆறுமுகம்
⚫ ⚫ ⚫