உள்ளடக்கத்துக்குச் செல்

அவள் ஒரு மோகனம்/மணமகன் தேவை!

விக்கிமூலம் இலிருந்து

1. மணமகன் தேவை!


யவு செய்து யாரும் சத்தம் போடாதீர்கள்!...

உள்ளே:

டாக்டர் ரேவதி இருக்கிறார்கள்!...

“ரேவதி நர்ஸிங் ஹோம்” கழிந்த ஏழு ஆண்டுகளாக நித்தநித்தம் சட்டம் படித்துக் கொண்டிருக்கும் புது விதி, இது. அந்த விதியையும் மீறி-

“ஹாய் பிருந்தா! உனக்கு ஒரு நல்ல சமாசாரம் தெரியுமா? நம்ம டாக்டரம்மாவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கப் போகுதாம்!”

“மகிழ்ச்சியான சங்கதிதான்; மாப்பிள்ளை யாராம்?”

“மாப்பிள்ளை யார்னு ரேவதி அம்மாளுக்கே இன்னம் தெரியாதாக்கும்!”

“என்ன சொல்றீங்க, மஞ்சு அக்கா?”

“மாப்பிள்ளை தேடிப் பிடிக்கத்தான் ‘மணமகன் தேவை’ அப்படின்னு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருக்காங்க, ரேவதி டாக்டர்!”

“அப்படியாவது அவங்க திருமணம் நடக்கட்டும். டாக்டர் ரேவதின்னா எனக்கு வெகுவாகப் பிடிக்கும். அவங்களோட மனப்போக்கு தனி; தனித்தன்மை ஆனது. அதைப் புரிஞ்சிக்கிடாதவங்க ‘டாக்டர் ரேவதி அகம்பாவம் பிடிச்சவங்க’ என்று சொல்லுவாங்க. நான் அறிஞ்ச வரை, ரேவதி அம்மா அன்புக்கு ரொம்ப ரொம்பக் கட்டுப்படுறவங்க, எதிலேயும் ஒரு நியாயம் வேணும்னு நினைக்கிறதும் நம்புறதும் தப்பா?” என்று கேட்டாள், பிருந்தா. அவள் கழுத்தில் தங்கச் சங்கிலி மின்னியது.

“பெரிய இடத்து விஷயம் இதெல்லாம்; நமக்கேன் வம்பு? ஆனா, ஒரு சின்னச் சந்தேகம், பிருந்தா!”

“சந்தேகப்படுறதுதான் படுறீங்க; பெரிசாகவே சந்தேகப்படுறது தானே, மஞ்சு?”

“டாக்டரம்மாவுக்கு எப்படியும் முப்பது, முப்பத்திரண்டு வயசு இருக்காதா? இன்னமும் அவங்க ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?”

“டாக்டர் ரேவதி அம்மாவோட தனிப்பட்ட சுதந்திரமான மனப்போக்குக்கு ஈடு கொடுத்து ஒத்துப் போற மனப்பக்குவம் கொண்ட ஒரு நல்ல ஆண்பிள்ளையை இதுவரை அவங்க சந்திக்க முடியாமல் இருந்திருக்கலாம், இல்லையா அக்கா?”

“கதை அப்படியிருந்தால், நல்லதுதான் தங்கச்சி! ஆனால்...”

கூடத்தில் கூச்சல் கேட்கவே அவர்களின் பேச்சு தடைப்பட்டது.

கூப்பாடு போட்டவன், ஓர் ஆண்பிள்ளை சிங்கம்; ஓடிக் கொண்டிருக்கிற பாம்பை ‘நச்’ சென்று நசுக்கி விடுகிற பொல்லாத-பொல்லாத்தனமான பருவம். பின், இவன் இப்படி ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடலாமா?-அவன் வயிற்று வலி அவனை இப்படி அலற வைத்தது.

இளஞ்சிங்கத்தை தோளுக்குத் தோளாக துணை நிறுத்தி அணைத்தபடி, கூடத்துள் நுழைந்த பெரியவர், “உத்தரவின்றி உள்ளே நுழையக் கூடாது!” என்ற விளம்பரப் பலகையைப் பார்க்காமலே, டாக்டரின் கதவைத் தள்ளினார். நோய் நொடி கூட உத்தரவில்லாமல் தானே உடலுக்குள் நுழைந்து விடுகிறதென்று நினைத்திருக்கலாம், அவர்.

அதற்குள் இளம் பூச்சிட்டு கீதா பின்புறமிருந்து விரைந்து வந்து தடுத்தாள். “பெரியவரே, நீங்க இந்தப் போர்டைப் பாருங்க; ஐயா சின்னவரே, அந்த எச்சரிப்பை நீங்களும் வலியோட வலியாய் பார்த்துக்கங்க” என்று உபதேசம் செய்தாள். அது கீதா உபதேசமாகவும் இருக்கலாம்!-அந்த மருத்துவப் பணிக் கன்னியின் பெயர், கீதாதானே? டாக்டரம்மா இன்னும் வரவில்லை என்பதையும் அவள் தெரிவித்தாள்.

இடம் காட்டியது, ஸ்டூல்.

இடம் கண்டது, இளவட்டம்.

சற்று நேரத்தில், காரில் இருந்து இறங்கி கம்பீரமாக நடந்து, முன் கூடத்திலே வந்து நின்றாள், லேடி டாக்டர் ரேவதி. முறி மேனிக்கு தும்பைப்பூ மூக்குத்தி எடுப்பு.

நோயாளிகள் தங்கள் தங்கள் நோய் நொடிகளை மறந்து எழுந்து நின்றார்கள்.

தளதளத்த ‘ஜிஃபான்’ பட்டுச் சேலையின் மார்பகப் பகுதியில் மையம் கண்டு, அனந்த சயனத்தை மேற்கொண்டிருந்த கழுத்துச் சங்கிலியின் மயில் பதக்கத்திற்கு ஆயிரமாயிரம் முத்தங்களை அலுக்காமல் சலிக்காமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த ‘ஸ்டெத்தஸ்கோப்’ நீண்ட நெடுமூச்சுத் தூள் பறக்க, ஒருமுறை முறையாக குலுங்கி அடங்கியது.

“வணக்கங்க, டாக்டரம்மா!”

“வணக்கம்...வணக்கம்!”

“குட் ஈவினிங், மேடம்!”

“எஸ்...எஸ்!”

அப்பொழுது காலை வெளியில் ‘செவர்லே’ ஒன்று வந்து நின்றது; சென்றது.

ரேவதி ஒரு கணம் அதிர்ந்தாள். மறுகணத்தில், அவள் சமன் நிலையை அடைந்தாள்! “இது கண்றாவிக் கறுப்பு செவர்லேயாக்கும்!” உள் நெஞ்சில் எதையோ நினைத்திருப்பாள்; வேறு எதுவோ முளைத்திருக்கும்!-சலனமும் சாந்தியும் நடத்திய கண்ணாமூச்சி விளையாட்டிலே, அவளது அழகான முகத்திலும், கவர்ச்சியான கன்னங்களிலும் ஈரவேர்வை கசிகிறது.

புதுக்கோட்டை ராஜ வீதிகளில் நானும் அவரும் புதுமணத் தம்பதியாக புத்தம் புதிதாக ரோஸ் செவர்லேயில் ராஜ உலா வந்த அந்த நாட்களை என்னாலே எப்படி மறக்க முடியுமாம்?

ஆச்சி ஒருத்தி, “அம்மா நான் புதுக்கோட்டைப் பக்கம்” என்று கூறி நெருங்கினாள்.

“அப்படியா? போய் உட்காருங்க!”

நோயாளிகள் கூடம் இப்போது ‘கப்சிப்’!...

வாயைப் பொத்திக் கொண்டு வயிற்றைப் பிசைந்தபடி நல்ல பிள்ளையாக நின்றிருந்த இளைஞனை நெருங்கினாள், ஊடுருவிப் பார்த்தாள்; பார்வையிட்டாள். உள்ளே வருமாறு சமிக்ஞை செய்தாள். நெற்றித் திலகம் மங்களமாகப் பொலிந்தது. முகப்பருக்கள் பளிச்சிட்டன.

முதலில் ரேவதி அறைக்குள் விரைந்தாள்.

அடுத்து, ஒடிந்து விழுந்து கொண்டிருந்த இளைஞன் இளமைக் கோலம் தாங்கி உள்ளே புகுந்தான்!

அவனுக்கும் ஒரு பெயர் இருந்தது-முத்தையன்!

கதவுகள் ‘படீ’ரென்று சாத்திக் கொள்கின்றனவே!...