ஆசாரியர்கள் வாழித் திருநாமங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

அப்பிள்ளை திருவாய் மலர்ந்தருளிய

ஆசாரியர்கள் வாழித் திருநாமங்கள்[தொகு]

பெரிய பெருமாள்[தொகு]

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதய ரதன்மகனா யவதரித்தோன் வாழியே
அந்தரியா மித்துவமு மாயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்றுயின்றான் வாழியே
பெரியபெரு மாளெங்கள் பிரானடிகள் வாழியே. (1)


பெரிய பிராட்டியார்[தொகு]

பங்கயப்பூ வில்பிறந்த பாவைநல்லாள் வாழியே
பங்கினியி லுத்தரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழிற் சேனைமன்னர்க் கிதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ் சுட்பொருள்மா லியம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே. (2)


சேனைமுதலியார்[தொகு]

ஓங்குதுலாப் பூராடத் துதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி யுறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற் கிதமுரைத்தான் வாழியே
எழில்பிரம்பின் செங்கோலை யேந்துமவன் வாழியே
பாங்குடன்முப் பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுக ழரங்கரையே சிந்தைசெய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. (3)


நம்மாழ்வார்[தொகு]

மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுரு வாய்ப்புவியி லவதரித்தான் வாழியே
அனவரதஞ் சேனையர்கோ னடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிர முரைத்தான் வாழியே
நன்மதுர கவிவணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே. (4)


நாதமுனிகள்[தொகு]

ஆனிதனி லனுடத்தி லவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க் குபதேச மருளிவைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன்சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார்சொற் பிரபந்தம் பரிந்துகற்றான் வாழியே
கானமுறத் தாளத்திற் கண்டிசைத்தான் வாழியே
கருணையினா லுபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழு நாதமுனி நற்பதங்கள் வாழியே. (5)


உய்யக்கொண்டார்[தொகு]

வாலவெய்யோன் றனைவென்ற வடிவழகன் வாழியே
மால்மணக்கால் நம்பிதொழு மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகைநாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டு மையைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டி னுட்பொருளை நடத்தினான் வாழியே
மாலரங்கர் மணவாளர் வளமுரைப்போன் வாழியே
வையமுய்யக் கொண்டவர்தாள் வையகத்தில் வாழியே. (6)


மணக்கால் நம்பிகள்[தொகு]

தேசமுய்யக் கொண்டவர்தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ்நாத முனியுகப்பைத் தாபித்தோன் வாழியே
நேசமுட னாரியனை நியமித்தான் வாழியே
நீணிலத்தில் பதின்மர்கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகந் தனில்விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பிபதம் வையகத்தில் வாழியே. (7)


ஆளவந்தார்[தொகு]

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறைநான்கு மோருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோ னீடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சிநகர் மாயனிரு கழல்பணிந்தோன் வாழியே
கடகவுத் திராடத்துக் காலுதித்தோன் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி யணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைக ளனவரதம் வாழியே. (8)


பெரியநம்பிகள்[தொகு]

அம்புவியில் பதின்மர்கலை யாய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை யடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர்தொழு மரங்கேசர்க் குகப்புடையோன் வாழியே
ஓங்குதனுக் கேட்டைதனி லுதித்தபிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழிசெய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளி்த்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க் கிதமுரைத்தான் வாழியே
எழில்பெரிய நம்பிசர ணினிதூழி வாழியே. (9)


திருக்கச்சிநம்பிகள்[தொகு]

மருவாருந் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசிமிருக சீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாள ருடன்மொழிசொல் லதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க் களித்தபிரான் வாழியே
திருவால வட்டம்செய்து சேவிப்போன் வாழியே
தேவரா சாட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரு மாளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பியிரு திருவடிகள் வாழியே. (10)

எம்பெருமானார்[தொகு]

அத்திகிரி யருளாளரடி பணிந்தோன்வாழியே
அருட்கச்சி நம்பியுரையாறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை யுட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல்பெரிய நம்பிசரண் தோன்றினான் வாழியே
சித்திரையி லாதிரைநாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர்பெரும்பூ தூர்முனிவன் திருவடிகள் வாழியே. (11)

கூரத்தாழ்வான்[தொகு]

சீராருந் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
பாராரு மெதிராசர் பதம்பணிந்தோன் வாழியே
பாடியத்தி னுட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் றனக்குமுத்தி நல்கினான் வாழியே
ஏராருந் தையிலத்தத் திங்குவந்தான் வாழியே
எழில்கூரத் தாழ்வான்றன் னிணையடிகள் வாழியே. (12)

முதலியாண்டான்[தொகு]

அத்திகிரி யருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தி லவதரித்தோன் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியந் தன்னில் சீர்பெறுவோன் வாழியே
உத்தமாம் வாதூல முயரவந்தோன் வாழியே
ஊர்திருந்து சீர்பாத மூன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே. (13)

திருவரங்கத்தமுதனார்[தொகு]

எந்தாதை கூரேச ரிணையடியோன் வாழியே
எழில்மூங்கிற் குடிவிளங்க விங்குவந்தோன் வாழியே
நாந்தாம லெதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம்மதுர கவிநிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம வரங்கர்பதம் பற்றினான் வாழியே
பங்குனியி லத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டு மருளினான் வாழியே
அணியரங்கத் தமுதனா ரடியிணைகள் வாழியே. (14)

எம்பார்[தொகு]

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கைமுதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரன் மலர்ப்பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
தேவுமெப் பொருளுமதில் திருந்தினான் வாழியே
திருமலைநம் பிக்கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் மெம்பார்பொற் பதமிரண்டும் வாழியே. (15)

பட்டர்[தொகு]

தென்னரங்கர் மைந்தனெனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண் டகப்பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூர னடிபணிந்தோன் வாழியே
அநவரத மெம்பாருக் காட்செய்தோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசி யனுடத்தில் வந்துதித்தான் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிவான் வாழியே
பராசரனாம் சீர்பட்டர் பாருலகில் வாழியே. (16)

நஞ்சீயர்[தொகு]

தெண்டிரைசூழ் திருவரங்கம் செழிக்கவந்தோன் வாழியே
சீமாதவ னென்னும் செல்வனார் வாழியே
பண்டைமறைத் தமிழ்ப்பொருளைப் பகரவந்தோன் வாழியே
பங்குனியி லுத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினா யிரவுரையை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர்பட்ட ரிணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீய ரினிதூழி வாழியே. (17)

நம்பிள்ளை[தொகு]

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக்கை யிணையழகுந் தடம்புயமும் வாழியே
பாமருவுந் தமிழ்வேதம் பயில்பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகு நாடோறும் வாழியே. (18)
காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக்கார்த் திகையுதித்த கலிகன்றி வாழியே
போதமுட னாழ்வார்சொற் பொருளுரைப்போன் வாழியே
பூதூரன் பாடியத்தைப் புகலுமவன் வாழியே
மாதகவ லெவ்வுயிர்க்கும் வாழ்வளி்ததான் வாழியே்
மதிளரங்க ரோலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி யாளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே. (19)

வடக்குத்திருவீதிப்பிள்ளை[தொகு]

ஆனிதனிற் சோதிநா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை யாய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாத்தினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுல காாியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற வெமையாளு மிறைவனார் வாழியே
எங்கள்வட வீதிப்பிள்ளை யிணையடிகள் வாழியே. (20)

பிள்ளைலோகாசாரியர்[தொகு]

அத்திகிரி யருளாள ரனுமதியோன் வாழியே
ஐப்பசியிற் றிருவோணத் தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதறிவ மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம்நம் பிள்ளைபதம் நெஞ்சில்வைப்போன் வாழியே
நீள்வசன பூடணத்தால் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பைநக ருதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்க ளூழிதோறும் வாழியே. (21)

திருவாய்மொழிப்பிள்ளை[தொகு]

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயனருண் மாரிகலை யாய்ந்துரைப்போன் வாழியே
அழகாரு மெதிராச ரடிபணிவோன் வாழியே
துய்யவுல காரியன்தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல்குருகா புரியதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்திதன்னில் சிறக்கவந்தோன் வாழியே
திருவாய் மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே. (22)

மணவாளமாமுனிகள்[தொகு]

இப்புவியி லரங்கேசர்க் கீடளித்தான் வாழியே
எழிற்றிருவாய் மொழிப்பிள்ளை யிணையடியோன் வாழியே
ஐப்பசியிற் றிருமூலத் தவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி யனந்தனென்றும் வாழியே
எப்புவியும் சீசைல மேத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதறிவன் மணவாள மாமுனிவன் வாழியே. (24)
செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்துசிறந்து மகிழ்ந்திடுநாள்
சீருலகாரியர் செயதரு ணற்கலை தேசு பொலிந்திடுநாள்
மந்தமதிப் புவிமானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்
மாசறு ஞானியர்சே ரெதிராசர்தம் வாழ்வு முளைத்திடுநாள்
கந்தமலர்ப் பொழில்சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்
காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களி்ததிடுநாள்
அந்தமில்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்
அழகு திகழ்ந்திடுமைப் பசியிற்றிரு மூலம தெனுநாளே. (25)


ஆசாரியர் வாழித் திருநாமங்கள் முற்றும்


பார்க்க[தொகு]

ஆழ்வார்கள் வாழித் திருநாமங்கள்