ஆடரங்கு/பேரன்பு
பேரன்பு
"இன்னிக்கி ஏதாவது நல்ல ராஜா ராணிக் கதைசொல்லு பாட்டி" என்று சுந்தாப்பாட்டியின் மடிமேல் ஏறி உட்கார்ந்துகொண்டு அதிகாரம் பண்ணினாள் சரோஜா.
" ராஜா ராணிக் கதையா? எனக்குத் தெரிஞ்ச ராஜா ராணிக் கதைகளை யெல்லாம் உனக்குச் சொல்லியாயிடுத்தே| " என்றாள் சுந்தாப்பாட்டி,
" புதுசா ஏதாவது சொல்லேன், பாட்டி !” என்று சரோஜா உத்தரவிட்டாள்.
" புதுசா எனக்கு ஒண்ணும் தெரியாதேடி, கண்ணு !"
" உனக்கா தெரியாது ? பொய் சொல்றே நீ " என்றாள் சரோஜா ஆச்சரியத்துடன். இவ்வளவு பெரிய பாட்டி இப்படிப் பொய் சொல்கிறாளே என்று குழந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது.
என்ன பதில் சொல்வது என்று அறியாமல் சுந்தாப்பாட்டி சிறிது நேரம் மௌனமாக இருந்தாள்.
" பொய் சொல்லாதே பாட்டி, ராஜா ராணிக் கதை சொல்லு பாட்டி" என்று சரோஜா மேலும் வற்புறுத்தினாள். சுந்தாப்பாட்டி சொன்னாள்.
வெகு காலத்துக்கு முன் ஒரே ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு அழகிலே சிறந்த ஒரு ராணியும், அறிவிலே சிறந்த ஒரு மந்திரியும் இருந்தார்கள். வீரப்போர்கள் பல புரிந்து அவனுடைய முன்னோர்கள் ஜயித்துக் கொடுத்திருந்த பரந்த ராஜ்யமும் இருந்தது.
அவனுடைய ராஜ்யத்திலே சுபிக்ஷம் குடிகொண்டிருந்தது. தாது வருஷத்திலே கூட அங்கே பஞ்சம் வருவது கிடையாது. மாசம் மும்மாரி பெய்தது. நிலங்கள் தக்க காலத்தில் சாகுபடி செய்யப்பட்டுச் செழித்துக் கொழித்தன. வருஷம் பூராவும் ஆறுகளும் நீர் நிலைகளும் நிறைந்திருந்தன. மலை வளமும் நில வளமும் கடல் வளமும் நிரம்பிச் செழித்திருந்தது அந்தத் தேசம்.
இவ்வளவு இருந்தும் அரசனுக்கும் அரசிக்கும் மந்திரிக்கும் மற்றுமுள்ள ஜனங்களுக்கும் மனசிலே பெருங் குறை ஒன்றிருந்தது. வெகு காலம் வரையில் ராஜாவுக்குப் புத்திரனே பிறக்கவில்லை.
ராஜாவும் ராணியும் செய்யாத தான தருமங்கள் இல்லை. பூஜை புனஸ்காரங்கள் இல்லை, தங்கள் நாட்டுத் தெய்வங்களை மட்டு மின்றிக் கடல் கடந்து வந்திருந்த அன்னியதெய்வங்களையும் பூஜித்து வேண்டிக்கொண்டார்கள். நாடெங்கும் பற்பல தெய்வங்களுக்கும் பற்பல கோயில்கள் கட்டுவித்தார்கள். பட்டினியும் பாரணையும் மாறிமாறி ஏற்றார்கள். கைலாசம் முதல் குமரி வரை உள்ள புண்ணிய தீர்த்தங்கள் ஒரு கோடியிலும் முழுகி எழுந்தார்கள். புத்திரனில்லாத குறை தீரவில்லை.
விதியுடன் போராடுவது வீண் என்று மன முடைந்து அலுத்துப் போன சமயம் ஒரு கிழ ஜோசியர் வந்தார். அவர் எல்லாக் கிரகங்களையும் சரிவரப் பரிசீலனை செய்து பார்த்துவிட்டுச் சொன்னார்; " இன்னும் இரண்டு வருஷத்தில் நீங்கள் இருவரும் குமரித் துறையில் நீராடிவிட்டு வருவீர்கள். திரும்பிய ஒரு வருஷத்தில் கோடி சூரியனைப் போல ஒளிவீசும் ஒரு பிள்ளை பிறப்பான் " என்றார் ஜோசியர்.
ஜோசியருக்கு மன்னன் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் தானமாகக் கொடுக்கப் போனார். ஆனால் ஜோசியர்
க-4 அவற்றை அங்கீகரிக்க மறுத்து விட்டார். நவக்கிரகங்களை மேலும் பரிசீலனை செய்தார்: ஏதோ சொல்ல வாயெடுத்தார் ; சற்றுத் தயங்கினார்.
ஆவலே உருவாக நின்ற அரசன், " தாராளமாகச் சொல்லுங்கள். தயங்க வேண்டாம். கிரகங்கள் என்ன சொல்கின்றன? என்று கேட்டான்.
" அப்படிப் பிறக்கும் அந்தக் குமாரனால் நீங்கள் கிழ வயதில் ராஜ்யத்தை இழந்து நாடோடிகளாகத் தேச சஞ்சாரம் செய்ய நேரிடும் " என்றார் ஜோசியர்.
" ஹா ! ” என்றான் அரசன். " பிறகு...... ?" என்று கேட்டான்.
" தங்கள் புத்திரன் இழந்துவிட்ட ராஜ்யத்துக்குப் பதில் இப் பிரபஞ்ச முழுவதுமே பரந்துள்ளதாக மக்களின் மனத்திலே ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பான். அன்பு என்னும் நித்யத்துவத்துக்குப் புத்துயிர் கொடுப்பான் அவன் " என்றார் ஜோசியர்.
அண்டையில் நின்ற ராணிக்கு ஜோசியர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் அவள் மனம் கனிந்து குளிர்ந்திருந்தது. அரசனுடைய முகமும் ஆனந்தத்தாலும் வியப்பாலும் மலர்ந்தது. தன் பொக்கிஷத்திலிருந்ததை எல்லாம் அள்ளி ஜோசியர் கையில் கொடுக்க விரும்பினான் அரசன். மந்திரி தடுத்தான். ஜோசியரும் அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.
அக் கிழ ஜோசியர் சொன்னதையே வேதவாக்காக நம்பிக் கொண்டு ராஜாவும் ராணியும் புது உத்ஸாகத்துடன் வாழ்க்கை நடத்தினார்கள். கிழவர் சொன்னபடியே நடக்கவும் நடந்தது.
உலகத்திலுள்ள ஒளி யெல்லாம் திரண்டு உருவெடுத்து வந்ததுபோல அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள் ராஜாவும் ராணியும். ராஜ குமாரனும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெரியவனானான். அரச குமாரர்களுக்கு ஏற்ற எல்லாக் கலைகளையும் அவன் நன்கு கற்றுணர்ந்தான். யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வில்வித்தை, வாள் வித்தை எல்லாவற்றிலுமே நல்ல தேர்ச்சி பெற்று அவன் பதவியினால் மட்டுமின்றி பலத்திலும் அறிவிலும் பயிற்சியிலும் தேசத்திலேயே முதல்வனானான். அவனுக்கு வயதை மீறிய ஞானமும் அறிவும் இருந்தன. தங்களிடையே இரண்டாவது ராமன் அவதரித்து விட்டான் என்று எண்ணி மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
வேட்டையாடுவதும் வில்வித்தையும் மல் யுத்தமும் இராஜகுமாரனுடைய மனத்துக் குகந்த பொழுது போக்குகளாக இருந்தன.
இப்படி யிருக்கையில் ராஜாவுக்கும் ராணிக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ராஜகுமாரனுக்கும் கலியாண வயது வந்து விட்டது. அவனுக்குத் தக்க பெண்ணாகப் பார்த்துக் கலியாணம் செய்து வைத்துவிட்டு, பின்னர் நாட்டுக்கு அவனை மன்னனாக முடி சூட்டிவிட்டு, தாங்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமே என்று ராஜாவும் ராணியும் விரும்பினார்கள்.
இராஜகுமாரனின் புகழ் - அழகன் என்றும் வீரன் என்றும் அறிஞன் என்றும் நாடெங்கும் பரவி யிருந்தது. ஐம்பத்திரண்டு தேசத்து அரசர்களும் அவனுக்குத் தங்கள் தங்கள் பெண்ணைக் கொடுத்துச் சம்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள். ராஜ குமாரத்திகளின் சித்திரங்களைத் தீட்டித் தூதுவர்களிடம் கொடுத்தனுப்பி ஓலை விட்டார்கள்.
சித்திரங்கள் எல்லாமே அழகாகத்தான் இருந்தன என்று பட்டது ராஜகுமாரனுக்கு. ராஜகுமாரிகளை நேரில் பார்த்தாலும் அழகாகத்தான் இருப்பார்கள். ஓரிருவரின் சித்திரம் அதி அற்புதமான அழகைக் காட்டியது. ஆனால் அவர்களில் யாரிடமும் ராஜகுமாரனின் மனம்செல்லவில்லை.இதைத் தன் தகப்பனாரிடமும் மந்திரியிடமும் ராஜகுமாரன் ஒளிக்காமல் சொல்லி விட்டான். வேடிக்கையாக அவன் மேலும் சொன்னான்: " இந்த ஐம்பத்திரண்டு தேசத்து ராஜகுமாரிகளையுமே கலியாணம் பண்ணிக்கொண்டுவிட நான் தயார் - நீங்கள் அப்படிவிரும்பினால். ஆனால் அவர்களில் யாரிடமும் என் மனம் ஈடுபடாது என்பது. மட்டும் நிச்சயம். "
அரசன் வருந்தினானே தவிரத் தன் பிள்ளையை வற்புறுத்த வில்லை.
இதற்கிடையில் ராஜகுமாரன் அடிக்கடி தனியாகவும் வேடுவர்களுடனும் வேட்டையாடக் காட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். இப்படி அவன் ஒருதரம் தனியாகப் போய் விட்டுத் திரும்பி வரும்பொழுது தனியாக வரவில்லை. ஓர் அழகியையும் உடன் அழைத்து வந்தான்.
அந்த அழகியின் கண்கள் ...... ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருப்பானேன் ? தவிரவும் அவள் அழகை வர்ணிப்பது என்பது கவிகளால்கூட ஆகாத காரியும். அவ்வளவு அழகி அவள்.
" இவளையேதான் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன் " என்றான் ராஜகுமாரன்.
அரசன் எதுவும் தடுத்துக் கூறவில்லை. ஆனால் அந்த அழகி யார்? தன் மகன் எங்கே எப்படி அவளைச் சந்தித்தான் என்பதை அறிய முயன்றான். காட்டில் ஒரு தடாகக் கரையில் அவள் உட்கார்ந்து அழுதுகொண் டிருந்ததைக் கண்டு தேற்றி ராஜகுமாரன் அவளை அழைத்து வந்திருந்தான். அவளைப்பற்றி வேறு ஒரு விவரமும் அவனுக்கும் தெரியாது. " ஆனால் இவள் தான் என் துணைவி என்று என் மனம் அங்கீகரித்துவிட்டது. அவ்வளவுதானே வேண்டியது?" என்றான் அவன்.
ராணி அந்த அழகியையே விசாரித்துப் பார்த்தாள். கன்னி வாயைத் திறக்கவேயில்லை. ராணிக்குத் தாழ்ந்து நமஸ்காரம் செய்துவிட்டுக் குனிந்த தலை குனிந்தபடியே ஒதுங்கி நின்றாள் அவள். அந்த அழகி ஊமையோ என்று ராணிக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது.
ஆனால் சந்தேகத்துக்கு அவசியமில்லை. மாலையில் வீணையை மீட்டிக்கொண்டு அந்த அழகி சரஸ்வதியே போல வீற்றிருந்து இனிய கீதங்களை இசைத்தாள். அக் கீதங்கள் கேட்போர் காதில் தேவகானமாக ஒலித்தன ; கேட்பவரை ஆனந்த மயமான ஒரு புது உலகிலே கொண்டுபோய்ச் சேர்த்தன.
கலியாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காட்டுக்கு வேட்டையாடப் போவதையும், மல் யுத்தங்களில் ஈடுபடுவதையும் அரச குமாரன் நிறுத்திவிட்டான். ஆற்றங் கரையிலே அழகான வசந்த மாளிகை நிர்மாணித்துக் கொண்டு தன் காதலியுடன் இன்ப வாரிதியிலே ஆழ்ந்துவிட்டான். அறுபது நாழிகையும் அங்கே இன்னிசையும் நடனமும் கதையும் கவிதையுந்தான்.
ராஜ்ய காரியங்கள் எல்லாம் கிழ ராஜாவின் மேற்பார்வையில், மந்திரியின் திறமையால் ஒழுங்காகவே நடைபெற்றுவந்தன. எனினும், ராஜாவும் ராணியும் மந்திரியும் பல வருஷங்களுக்கு முன் கிழ ஜோசியர் சொன்ன வார்த்தைகளை எண்ணித் துக்கித்தனர். ஜோசியரின் வார்த்தைகள் பலிக்கும் காலம் வந்து விட்டதுபோல் இருக்கிறதே என்று அஞ்சித் துணுக்குற்றனர்.
"நடப்பது நடக்கும். நடந்தே தீரும்" என்று எண்ணி அவர்கள் தங்களையே தேற்றிக்கொண்டார்கள்.
எனினும், அரச குமாரனின் மனத்தைச் " சரியான வழியில் " திருப்ப அவர்கள் தங்களாலான முயற்சிகளையும் செய்யாமல் இல்லை. இன்பம் திகட்டியிருந்த ஒரு சமயம் ராஜகுமாரனை வேட்டையாடக் காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள், சித்தப் பிரமை பிடித்தவன்போல, மனத்தை எதிலோ பறிகொடுத்தவன் போலச் சுய ஞாபகம் இல்லாமல் வந்தான் அவன். ஆனால் வேட்டை ஆரம்பித்ததும் அவன் மனம் சற்றே மாறுவதுபோல் இருந்தது. ஒரு மானைத் துரத்திப்போய், அதை எய்து வீழ்த்த ஓர் அம்பை வில்லில் பூட்டினான். அந்த நிமிஷமே விதிகுறுக்கிட்டது. மேலும், தெய்வத்தின் தூண்டுதலால், ஓடிக்கொண்டிருந்த மான், சுபாவத்துக்கு மாறாக நின்று திரும்பி ராஜகுமாரனைப் பார்த்தது. அதன் பார்வை அவனுடைய இதயத்தைப் பிளப்பதுபோல் இருந்தது. வில்லும் வில்லில் பூட்டிய அம்பும் கை நழுவிக் காலடியில் விழுந்துவிட்டன. அவற்றைத் திரும்பவும் அரச குமாரன் எடுக்கக்கூட இல்லை.
அந்தக் கண்கள் !...... அவள் கண்களேதான்!" என்று ராஜகுமாரன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டது அண்டையில் நின்றவர்கள் காதில் விழுந்தது.
மான் தப்பி ஓடிவிட்டது. அதற்குமேல் அரச குமாரன் வேட்டையில் கலந்துகொள்ளவில்லை. சித்தத்தையும் சிந்தனையையும் பறிகொடுத்தவன்போல அவன் இன்ப மாளிகை திரும்பினான். அவன் கண்களிலே அன்பு ஒளி நிறைந்திருந்தது. அவன் உள்ளத்திலே ஆனந்தம் நிறைந்திருந்தது.
காலக்கிரமத்தில் அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அன்புப் பிணை அவன் நெஞ்சத்தை இன்னும் இறுக்கிப் பிடித்தது. ஒரு காலத்தில் முரட்டு மல்லர்களின் குத்து வரிசைகளில் ஈடுபட்டு நின்ற அவன் இப்பொழுது மல்லிகைப் புஷ்பம் போன்ற மிருதுவான சிறு கரங்களுடன் மல்லுக்கு நின்றான்.
கிழ அரசனும் அவன் தேவியும் ஜோசியனின் வார்த்தைகளை உன்னி உன்னித் துன்பத்திற்கு ஆளாகிக்கொண் டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கும் மறதி என்ற ஆறுதல் கிடைத்தது சில சமயம்.
குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆவதற்கு முன்னரே தெற்கேயிருந்து செய்தி வந்தது. பெரும் படையைத் திரட்டிக் கொண்டு பகை மன்னன் ஒருவன் படையெடுத்து வந்து கொண்டிருந்தான். அரசகுமாரன் பழைய போர் லக்ஷ்யங்கள் தன் உள்ளத்திலே கொதித்து எழுந்து மூள, ஒரு பெருஞ் சேனை யுடன் பகைவனை எதிர்த்துச் சென்றான். எட்டு மாதங்கள் கடும் போர் செய்து வெற்றியும் பெற்றான். ஆனால் ஜயலக்ஷ்மியின் கோயிலில் வெற்றி விழாக் கொண்டாடி பூஜை செய்யும் போது அரசகுமாரன் இனித் தான் யுத்த காரியத்தில் ஈடுபடுவதில்லை என்று ஜயலக்ஷ்மியின் சந்நிதியிலேயே பிரதிக்ஞை செய்துவிட்டான். கிழ மந்திரியும் அரசனும் இந்தத் திடீர்ப் பிரதிக்ஞையைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். ஆனால் அரச குமாரனின் காதலிமட்டும், " நன்று " என்றாள். " நான் வந்த காரியம் பூர்த்தியாக இன்னும் சில நாட்களே உள்ளன போலும் " என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.
இரண்டொரு வருஷங்களுக் குள்ளாகவே நாலாபக்கங்களிலிருந்தும் பகைவர்கள் படை திரட்டிக்கொண்டு நமது அரசனை எதிர்த்து வந்துவிட்டார்கள். அரசன் கிழவன். அரச குமாரனோ போர்த்தொழில் செய்வதில்லை என்று பிரதிக்ஞை செய்துவிட்டான். நாடு சிறிது சிறிதாகப் பகைவர் வசம் ஆகிக்கொண் டிருந்தது.
" என் ராஜ்யத்தைத்தானே அவர்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள் ? எடுத்துக்கொள்ளட்டுமே ! இதற்காக ஏழை மக்களையும், போர் வீரர்களையும் துன்புறுத்துவானேன் ? நான் என்றுமே இந்த ராஜ்ய விஷயங்களிலிருந்து விடுபட்டு நின்றவன்தான் " என்றான் ராஜகுமாரன்.
" பிரியே ! உனக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டோ, நமது நாட்டை அவர்களிடம் ஒப்பித்துவிட்டு வெளியேற?" என்று கேட்டான் அவன்.
"ஆட்சேபமா ? எதற்கு ? வில்லும் வித்தையும் ராஜ்யமும் என்றும் நமது அன்பிற்குக் குறுக்கேதானே நின்றன?' என்றாள் அவள்.
தானாகவே தன் ராஜ்யத்தைத் தன் பகைவர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு அவன் வெளியேறி விட்டான்.
அதற்குப் பின்னர் அவன் வெகு நாள் உயிருடன் இருந்தான். கடைசி வரையில் தான் செய்தது அசாதாரணமான காரியம் என்றே அவனுக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதன் தன் மனைவியிடமும் குழைந்தையிடமும் காட்டும் அன்பே தன் காரியத்துக் கெல்லாம் அடிப்படையானது என்று அவன் நம்பி இருந்தான்.
ஆனால் அவன் காதலி தெய்வாம்ச மானவள் என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டார்கள். அன்புத் தேவியே அவ்வடிவு எடுத்து வந்து அவனை ஆட்கொண்டு, அடிமைப்படுத்தி விட்டாள் என்று சொல்லிக்கொண்டார்கள். கணவன் இறந்தபோது, ஒரு துளி கண்ணீர்கூட வடிக்காமல் அவள், "நாம் இருந்ததும் வாழ்ந்ததும் பூராவும் வியர்த்தமாகி விடாது " என்று சொல்லிவிட்டு அந்தர்த்தான மாகிவிட்டாள் என்று ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். சொல்லியது மட்டுமல்ல; நம்பவும் நம்பினார்கள். பேரன்புக்குப் பெரும் உதாரணமாக அவனைக் கவிகள் பாடினார்கள்: சாதாரண மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
ஆனால் நாளடைவில் அவன் பெயர் கூட மக்கள் மனத்திலிருந்து அகன்றுவிட்டது.
“ கதை சரியாகப் புரியவில்லையே ! " என்றேன் நான்.
"உனக்கு என்னமாடா புரியும் ? புரியாதுதான். குழந்தைக்குப் புரிந்திருக்கும். சரோஜா ! உனக்குப் புரிந்ததோ ? " என்றாள் சுந்தாப் பாட்டி.
“ ஊம் ” என்றாள் சரோஜா.