ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/அனுபவம் ஒன்று, பாடல் இரண்டு
அனுபவம் ஒன்று, பாடல் இரண்டு
கவிஞன் ஒருவன் திருவரங்கத்துக்குச் செல்கிறான். அரங்கத்து அரவணையானைக் கண்டு தொழுகிறான். அங்குள்ள அழகிய மணவாளனின் அழகில் ஈடுபட்டு மெய் மறக்கிறான். தோள் கண்டார் தோளே கண்டார் . என்றபடி, அழகிய மணவாளனின் தோள்கள் விம்மிப் புடைத்து கம்பீரமாக இருக்கும் நிலையைக் காண்கிறான். இந்த அழகனின் தோள்கள் பெருமிதத்தோடு இப்படி உயர்ந்து காணப்படுவானேன்! என்று சிந்திக்கிறான்; காரணம் விளங்குகிறது, அவனுக்கு. அதைச் சொல்கிறான். அவன்
அருமறை துணிந்த பொருள்முடியை
இன்சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன
அரவணை விரும்பி அறிதுயில்
அமர்ந்த அணிதிரு அரங்கர் மணிதிகழ் முகுந்தர்
அழகிய மணவாளன் கொற்றப் புயங்களே!
உண்மைதான். "சடகோபரது பாடல்களைப் பெற்ற பெருமையில்தான் அவை பூரித்து உயர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இத்தனை பெருமிதம், இத்தனை உயர்வு இந்தத் தோள்களுக்கு எங்கிருந்து வரும்" என்று தனக்குத் தானே விளக்கமும் கூறிக் கொள்கிறான் கவிஞன்.
கவிஞன் வேறு யாருமல்ல! அரங்கத்து அரவணை யானின் அற்புத அழகிலே தோய்ந்த தோய்ந்து, பக்தியால் பண் பட்டு கனிந்து நின்ற பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தான்! அவரது பாடலிலே அரவணையான் மீது அவருக் குள்ள பக்தியும் ஈடுபாடும் மட்டுமின்றி, சடகோபரது பாசுரங்களிலே அவருக்குள்ள பக்தியும் ஈடுபாடும் கூட விரவி நிற்கின்றன. எப்பேர்ப்பட்ட அனுபூதி நிலை!
இப்படி ஓர் அனுபவம். இந்தக் கவிதை பாடிய பிள்ளைப் பெருமாள் அய்யங்காருக்கு மட்டுமல்ல, இன்னுமொரு கவிஞனும் கிட்டத்தட்ட ஐயங்கார் பெற்ற அனுபவத்தையே பெற்றிருக்கிறான். அவன் நினைக்கிறான், "இந்தப் பரந்தாமன் எங்கேயோ தொலை தூரத்தில் உள்ள பாற்கடலில் படுத்துக் கிடக்கிறான். ஆனாலும், அந்த அநாமதேயப் பேர்வழிக்கு வந்த யோகத்தைப் பார்த்தீர்களா! சாக்ஷாத் திருமகள் பக்கத்திலேயே இருந்து பணிவிடை செய்கிறாள். ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றுமில்லாத இவனுக்கு ஆயிரம் ஆயிரம் பெயர்கள்.
தலையில் அணிவதற்கு கிரீடங்கள்தான் எத்தனை எத்தனை! சூடுவதற்குத் துளவ மாலைகள்தான் எத்தனை, எத்தனை ஆயிரத்துக்கு மேலேயே இருக்கும் போலிருக்கிறதே! இதெல்லாம்தான் போகட்டும் இந்தக் குருகூர் சடகோபன் வேறே அல்லவா, இருக்கின்ற துளவமாலைகள் போதாதென்று, அமுதம் அமுதமான கவிமாலைகள் காத்தியிருக்கிறான்.
அதுவும் ஒன்றா இரண்டா? ஆயிரம் பாமாலைகளால் அல்லவா அரங்கத்து அழகனை அலங்கரித்திருக்கிறான்! இந்த யோகம் என்ன சாமான்யப்பட்டதா! பெரிய சகடயோகமாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது!" என்றெல்லாம் வியந்து, ஒரேயடியாய் அதிசயப்பட்டுப் போய் நிற்கிறான். "எப்படி வந்தது இப்படி ஒரு யோகம் - என்று தனக்குத் தானே ஒரு கேள்வியும் கேட்டு, "இப்படித்தான் இருக்க வேண்டும்"- என்று ஒரு ஊகத்தையும் விடையாகக் கூறுகிறான். எல்லாம் தனக்குக் தானே தான் -
- சேராதன உளவோ
- திருச் சேர்ந் தார்க்கு
- வேதம் செப்பும்
- பேர் ஆயிரம், பொன்
- பெய் துளைத்
- தார் ஆயிரம், நம்
- திருக் குருகூர்
- சடகோபன் சொன்ன
- ஆரா அமுதக்
- கவி ஆகிரம்
- அவ்வரியினுக்கே?
- சேராதன உளவோ
என்பதுதான் கவிஞனது கேள்வியும், பதிலுமாக அமைகின்றன.
இப்படி இரண்டு கவிஞர்கள் அரங்கத்து அரவணை யானைக் கண்ட தங்கள் அனுபவத்தைச் சொல்கிறார்கள். அமுதனைக் கண்ட கண்கள் வேறு வேறாக இருந்தாலும் கூட, கவிஞர் இருவரும் அடைந்த அனுபவம் ஒன்றாக அல்லவா இருந்திருக்கிறது! இருவருக்குமே மற்ற விஷயங்களில் சந்தேகம் இருந்தாலும், அழகிய மணவாளன் தோள்கள் பூரித்துப் பெருகுவதற்கும், அவன் யோகக் காரனாக வாழ்வதற்கும் காரணம் அவன் நம்மாழ்வார் என்னும் சடகோபன் பாடல்களைப் பெற்றது தான் என்பதில் துளியும் சந்தேகம் இருப்பதாகத் தெரிய வில்லையே! அவர்களுக்கே இல்லை என்றால் நமக்கு மட்டும் என்ன சந்தேகம் இருக்கப் போகிறது.