ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்/ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

விக்கிமூலம் இலிருந்து


ஆடும் பெருமானும்

அளந்த நெடுமாலும்


ஒரு கண்ணாடிக் கடை. அக்கடையில் பெரிய நிலைக் கண்ணாடிகள். சிறிய கண்ணாடிகள், இன்னும் வண்ணப் பீங்கான் கோப்பைகள், எலக்டிரிக் ஷேவர். குளோப்புகள், சாலாந்தார்கள் எனப் பல கண்ணாடிச் சாமான்கள் விற்பனைக்காக அடுக்கடுக்காய் வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கடையில் நான் நுழைகிறேன் ஒரு நாள். கடைக்குள் நடக்கும் போது எனக்கு ஒரே பயம். அப்படி இப்படிக் கையை வீசினால் எப்படி எப்படி எல்லாம் கண்ணாடிகள் உடைந்து சிதறுமோ என்றுதான்.

ஆதலால் மிக்க கவனத்தோடு அடிமேல் அடிவைத்து மெல்ல நடக்கின்றேன் நான். அப்போது ஒரு சிலம்ப வித்தைக்காரன் ஒருவனும் அக்கடைக்குள் நுழைகிறான். அவன் கையில் இரண்டு சிலம்பக் கம்புகள். அக்கம்புகளை வலசாரி இடசாரி சுற்றி அக்கடைக்குள்ளே தன் சிலம்ப வித்தையைக் காட்டுகிறான். கடைக்காரனோ கையை கையை நெறிக்கிறான்.

தப்பித் தவறி ஒரு சாமான் மீது கம்பு பட்டு விட்டால் எத்தனை சாமான்கள் தவிடு பொடியாக நொறுங்கிவிடும் என்று எண்ணுகிறான். பதறுகிறான். சிலம்ப வித்தைக் காரனோ மிகுந்த கெட்டிக்காரனாக இருக்கிறான். ஒரு சாமான் மீது கூட கம்பு படாமல் லாகவமாக கம்பைச் சுற்றிக் கால் மணி நேரம் விளையாடி விட்டு ஒய்கிறான். அதன் பின் கடைக்காரன், கடைக்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள் எல்லாம் சிலம்ப வித்தைக்காரனைப் பாராட்டி பரிசுகள் கொடுத்து அனுப்புகிறார்கள். இது என்னையா கதை, இப்படி நடக்குமா என்று தானே எண்ணுகிறீர்கள். ஆம், அப்படி ஒன்றும் நடக்கவில்லைதான். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணித்தான் பாருங்களேன்.

நம் நில உலக வாழ்விலே இத்தகைய சிலம்பக்காரன் ஒருவனை நாம் கானாவிட்டாலும் கலை உலகிலே ஒன்றுக்கு இரண்டாக இரண்டு சிறந்த சிலம்பக்காரர்களை அல்லவா காண்கிறோம். அவர்களில் ஒருவன்தான் ஊர்த்துவ தாண்டவம் புரியும் அந்த நடன ராஜனாம் சிவபெருமான். மற்றவனோ ஓங்கி உலகளந்த உத்தமனாம் பரந்தாமன். இவர்களில் முன்னவனைப் பற்றித்தான் காரைககால அமமையாா,

            அடிபேரில் பாதாளம்
                  பேரும், அடியார்
            முடிபேரில் மாமுகடு
                  பேரும் தொடிகள்
            மறிந்தாடும் கை பேரில்
                  வான்தி சைகள் பேரும்
            அறிந்தாடும் ஆறு என் அரங்கு

என்று பாடுகிறார். இப்படி பாதாளம், மாமுகடு வான் திசைகள் எதுவும் பெயராமே, நீ அரங்கத்தில் அறிந்து ஆடக் கற்றிருக்கிறாயே அது எப்படிச் சாத்திய மாயிற்று, என்று வியர்த்து முக்கின் பேரில் விரலை வைத்து நிற்கிறார். இக்காரைக்கால் அம்மையைப் போலவே நம்மாழ்வாரும் மூவுலகும் ஈரடியால் அளந்து நிற்கும் அந்த எம்பிரானது கோலத்தை கண்டு வியக்கிறார். ஏதோ சின்னஞ்சிறிய வாமனன் வடிவில் வந்தான். நின்றான், நிமிர்ந்தான், ஓங்கி உலகளக்கும் பெருமாளாக உயர்ந்து விட்டானே என்று எண்ணுகிறார், பாடுகிறார்.

பொருமா நீள் படை
ஆழி சங்கத் தொடு
திரு மா நீள் கழல்
ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி
நிமிர்ந்த அக் கரு
மாணிக்கம் என்
கண்ணாளது ஆடுமே

என்றவர் பின்னும்

மண்ணும் நீரும்
எரியும், நல்வாய்வும்
விண்ணும் ஆய்
விலியும் எம்பிரானையே

என்றுதானே பாடுகிறார். இப்படி உலகை அளந்தவனும் அரங்கில் ஆடியவனும் கலை உலகில் ஒருப்போலவே உருப் பெற்றிருக்கிறார்கள் என்று அறிகிற போது நாமும் நம்மை அறியாமலே இருவரிடமும் காணும் ஒற்றுமையைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். ஆடும் பெரு மான், எப்போது எதற்காக ஆடினான், உலகளந்தான் எவருக்காக ஞாலம் முழுவதையும், இரண்டே அடிகளில் அளந்தான் என்பதெல்லாம் நாம் அறிந்ததுதான் என்றாலும், அவற்றைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளலாம் தானே. அன்று தில்லையில் ஒரு நடனப் போட்டி நடக்கிறது. தில்லைக் கூத்தனாம் நடராஜனும், எல்லைப் பிடாரியாம் காளியும் மாறி மாறி ஆடுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் சளைக்காது ஆடுவதனால், வெற்றி தோல்வி யாருக்கு என்று நிர்ணயிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஆடும் பெருமானின் காதில் அணிந்திருந்த குழை ஒன்று கழன்று கீழே விழுந்து விடுகிறது.

ஆட்டத்தை நிறுத்திக் குழையை எடுக்க விரும்ப வில்லை இறைவன். ஆட்டத்தோடு ஆட்டமாகவே, தன் இடக்காலை தரையில் ஊன்றி, வலக்காலின் பெரு விரலாலே குழையை எடுத்து, அக்காலை அநாயாசமாக உயர்த்தி காதிலே குழையைப் பொருத்தி விடுகிறான். இப்படி ஊர்த்துவ தாண்டவம் ஆடிய ஆட்டத்தை பெண் பாலான காளியால் ஆட முடியவில்லை.

அதனாலே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, தில்லையை விட்டே ஓடி, எல்லைக் காளியாக நின்று விடுகிறாள் என்று கதை. இதைத்தானே திருவள்ளுவர் இழை நக்கி நூல் நெருடும் ஏழை அறிவேனோ குழை நக்கும் பிஞ்ஞகன் கூத்து என்று, குறிப்பாக உணர வைத் தார் என்பர். இந்த ஊர்த்துவ நடனத்தை கண்டு தானே,

            தா ளொன்றால் பாதாளம்
                  ஊடுருவி, நீள் விசும் பில்
            தாளொன்றால் அண்டம்
                  கடந்துருவி - தோள் ஒன்றால்
            திக்கனைத்தும் பேரி
                  திறன் காளி காளத்தி
            நக்கனைத்தான் கண்ட
                  நடம்

என்று நக்கீரரும் பாடுகிறார் இதைப் போலவே மூன்றுலகையும் ஆண்ட மன்னன் மகாபலிக்கு அருள் செய்ய, பரந்தாமன் வாமன வடிவில் அவன் முன் வந்து மூன்றடி மண்ணை யாசித்துப் பெற்று, பின்னர் ஒங்கி உயர்ந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து ஒரு அடியினாலே இந்த நில உலகம் முழுவதையும் அளந்து, மற்றொரு அடியினாலே வான் முழுவதையும் அளந்து, அதன் பின் மூன்றாவது அடியை மாவலியின் தலை மேல் பொருத்தி அவனுக்கு முத்தியை அருளினான் என்பர். இக்கோணத்தில் உறைபவனையே

            அங்கை பால் ஆடிமூன்று
                  நீர் ஒற்றி அயன் அலர் கொடு
            தொழுது ஏத்த
                  கங்கை போதாக் கால்
            நிமிர்ந்து அருளிய கண்ணார்

என்று மங்கை மன்னன் தனது பெரியதிரு மொழியில் பாடுகிறார். இப்படி ஆடியவன் சேவடியையும் அவர்தன் திருவடிவையும் நான் எத்தனை எத்தனையோ கோயில்களில் கண்டு வணங்கியிருக்கிறேன். தில்லையிலே, திருப் பனந்தாளிலே, செங்காட்டாங் குடியிலே, திருவாலங் காட்டிலே, தென்காசியிலே, மதுரையிலே, பேரூரிலே எல்லாம் இவ்வூர்த்துவ தாண்டவ வடிவங்கள் கல்லிலோ அல்லது செம்பிலோ சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. அவ்வடிவங்களின் அடி ஒற்றியே சேலத்தை அடுத்த தார மங்கலம் கைலாசநாதர் கோயிலிலும், ஒரு வடிவம் உருவாகி இருக்கிறது. அதனையே பார்க்கிறீர்கள் பக்கத்திலே. இதைப் போலவே, ஓங்கி உலகளந்தவனையுமே அளந்து கல்லில் அமைத்து வைத்திருக்கிறார்கள். அழகர் கோயிலிலே, பூரீ வில்லிபுத்துரிலே எல்லாம். திருக்கோயிலூரிலோ அவனே மூல மூர்த்தியாக உருப் பெற்றிருக்கிறான். இன்னும் கோவையை அடுத்த சிங்கா நல்லூரிலே ஒரு சிறிய கோயிலிலே செப்புச் சிலையாகவும், அவன் நிற்கிறான். அவன் கோலத்தையுமே பார்க்கிறீர்கள் பக்கத்திலே.

இந்த வடிவங்களை நான் சிற்பக்கலை உலகில் கண்ட போது இதன் காலத்தைக் கணக்கிட முயன்றேன். பல்லவர் கோயில்களிலே இவ்வடிவங்களை காணோமே. ஆதலால் சோழ மன்னர் காலத்திலேயும், அதன் பின்னர் வந்த நாயக்க மன்னர் காலத்திலும்தான் இந்த நடனக் கோலம் உருப் பெற்றிருக்குமோ என்று எண்ணினேன். எனது வட நாட்டு யாத்திரையில் அப்படி எண்ணியது தவறு என்று கண்டேன்.

1913-ஆம் ஆண்டிலே தகூடிசீலத்திலே புதை பொருள் ஆராய்ச்சியாளர் வேலை செய்த போது பீல்மவுண்டு என்னும் இடத்திலே ஒரு சதுரமான கல் ஒன்றைக் அகழ்ந்து எடுத்திருக்கின்றனர். அக்கல்லில் பலவித சிற்ப வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு வடிவம் ஒருகாலை ஊன்றி ஒரு காலை உயர்த்தியிருக்கின்ற நிலையில் இருப்பதை சிற்பக் கலை ஆராய்ச்சியாளரான கங்கோலி கண்டு பிடித்திருக்கிறார். அக்கல் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட மெளரிய அரசர்கள் காலத்தியது என்றும் அறுதியிட்டு வைக்கிறார். இன்னும் இந்த வடிவமே பரத சாஸ்திரத்தில் சொல்லப்படும் லதா திலகம் என்னும் வடிவம் என்றும் முடிவு கட்டுகிறார். இந்த லதாதிலகம் தாண்டவ லக்ஷணங்களில் ஒரு கரணம் என்பதைப் பரதம் கற்றவர்கள் அறிவார்கள். லதாதிலகம் என்றால் பாத நாட்டியம் ஆடும் போதே ஒரு காலை உயர்த்தி நெற்றியில் பொட்டிட்டுக் கொள்ளும் சாகலம் என்று தெரிகிற போது நமக்கு ஒரு ஆதங்கம் தோன்றும். இந்த சாகஸ்த்தை, அன்று தில்லையில் ஆடிய காளி அறியாதிருந்த காரணத்தினால் அல்லவா அவள் தோற்று ஒடும்படியாயிற்று என்று எண்ணத் தோன்றும். அப்படி ஆடும் போதே எப்படி ஒரு காலாலேயே கீழே விழுந்த குழையை எடுத்து காதில் அணிந்தானோ அதே போல ஆடும் போதே காலால் நெற்றியில் திலகமுமே இட்டுக் கொண்டிருக்கலாமே. இந்த லதாதிலகம் தான் பரதசாஸ்திரத்தில் உள்ள நூற்றெட்டுக் கரணங்களில் 64 வது கரணம் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். பின்னால் சிதம்பரம் நடராஜர் கோயில் கீழ்க் கோபுரத்தைக் கட்டிய கோப்பெருஞ் சிங்கனுக்கு இக்கரணங்களை எல்லாம் அங்கு சிற்ப வடிவில் வடித்து வைக்க வேண்டும் என்றும் தோன்றியிருக்கிறது. அதனாலேயே லதாதிலகம் என்று பரத நாட்டிய கரணத்தை அடிப்படையாக வைத்தே ஓங்கி உலகளந்தவனையும், ஆடி அண்டம் அளந்தவனையும் உருவாக்கியிருக்கிறார்கள் சிற்பிகள்.

எனக்கிருக்கிற அதிசயம் எல்லாம் இப்படி இரண்டு பெருமானையும் ஒரே வடிவில் சமைப்பதன் மூலமாக கலை உலகில் ஒர் ஒருமைப்பாட்டை அல்லவா ஆக்க முயன்றிருக்கிறார்கள், அனுபவத்தாலே.

            பொன் திகழும் மேனிப்
                  புரிசடையம் புண்ணியனும்
            நின்றுலகம் தாய
                  நெடு மாலும் - என்றும்
            இருவா திருவர்
                  எனும் ஒருவன்
            ஒருவன்

என்று பொய்கை ஆழ்வார் போன்ற பக்த மணிகளால் பாட முடிந்திருக்கிறது. நாமும் இருவரையும் ஒரே வடிவிலேயே கண்டு மகிழும் பேறு பெறலாம் தானே.


ஆ.பெ.ஆ.நெ-2