ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்/குடும்பக் கட்டுப்பாடுபற்றிய

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchகுடும்பக் கட்டுப்பாடு
ப ற் றி ய
சில முக்கியமான கேள்விகள்


மகாத்மா காந்தியடிகளும் போப்பாண்டவரும் குடும்பக் கட்டுப்பாடு வேண்டாம், குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கவேண்டாம் என்று கூறுவதாகச் சொல்லு கிறார்களே, அது உண்மைதானா ? எனச் சிலர் கேட்பர்.

போப்பாண்டவர் உலகத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் வாழ்ந்துவரும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு லோக குரு, மகாத்மா காந்தியடிகள் ஆங்கி லேயர்க்கு இருநூறு ஆண்டுகளாக அடிமையாயிருந்து அல்லலுற்ற இந்திய மக்களுக்கு விடுதலை தேடித்தந்த பாரத தேசத்தின் தனிப்பெரும் பிதா.

இவர்கள் இருவரும் குடும்பக் கட்டுப்பாடு வேண் டாம், பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளிக்கொண்டே இருக்கலாம் என்று கூறவில்லை. அதற்கு மாறாக அவர்கள் இருவரும் குடும்பக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும், அதிகக் குழந்தைகளைப் பெறலாகாது என்றே கூறுகிறார்கள். போப்பாண்டவர் உபதேசம் இது : பெற்ற குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் மீண்டும் குழந்தைகளைப் பெறாமல் இருப்பதற்காக இயற்கை முறைகளையே கையாளவேண்டும், செயற்கை முறை களைக் கையாளலாகாது. மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள மாத்திரைகளும் களிம்புகளும் கருவிகளும் செயற்கை முறைகள். இனிக் குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் இந்த மருத்துவ முறைகளை விட்டுவிட்டு இனிக் காதல் செய்வதில்லை என்று மனத்தில் உறுதி செய்துகொண்டு அவ்விதம் காதல் செய்யாமல் இருந்துவிடவேண்டும், இந்த இயற்கை முறையே சரியான முறை. ஆனால் எல்லோர்க்கும் இது சாத்தியப் படாது, எல்லோரும் மனத்தை அடக்கிக்கொண்டு காதல் செய்வதை அறவே துறந்துவிட முடியாது. அவர்கள் காதல் செய்யவும் வேண்டும், குழந்தை உண்டாகாமலும் இருக்கவேண்டும் என்றே எண்ணுவார்கள் அதற்கும் ஓர் இயற்கையான முறை இருக்கிறது. குழந்தை வேண்டாம் என்று எண்ணினாலும் காதல் செய்யாமல் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாமல் கருத்தரிக் காத நாட்களில் காதல் செய்யலாம். இதில் தவறு ஏதுமில்லை.

அமெரிக்க நாட்டில் மார்கரட் ஸாங்கர் என்ற பெயருடைய ஓர் அம்மையார் இருக்கிறார். அவர் தாம் அந்த நாட்டில் முதன் முதலாகக் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துக்காட்டி அதற்கான முறைகளைப் பரவச் செய்தவர். அவர் இப்போது சர்வதேசக் குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவராக இருந்துவருகிறார். அவர் 1936-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார். மகாத்மா காந்தியடிகளுடன் குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். காந்தியடிகளும் போப்பாண்டவரைப் போலவே மருத்துவர் கூறும் செயற்கை முறைகளை ஆதரிக்கவில்லை. அதோடு போப்பாண்டவர் கூறும் காதல் செய்யாதிருக்கும் முறையையே ஆதரித்தார். அது எல்லோர்க்கும் சாத்தியப்படாது என்பதை அம்மையார் வற்புறுத்தி வாதித்தார். அதன்மேல் காந்தியடிகள் சரி, அப்படி யானால் குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் கருத்தரியா நாட்களில் காதல் செய்யட்டும், மற்ற நாட்களில் காதல் செய்யாதிருக்கட்டும் என்று கூறினார். ஆகவே காந்தியடிகளும் போப்பாண்டவரைப் போலவே குழந்தை பெறாமலிருப்பதற்காகக் (1) காதல் செய்யாதிருத்தல் என்னும் முறையையும், (2) கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாதிருத்தல் என்னும் முறையையும் ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

ஆகவே இந்த இரண்டு உலகப் பெரியார்களும் குடும்பக் கட்டுப்பாடு வேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு மாறாக அவர்கள் வேண்டும் என்றே கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் வழிகள் நான் கூறும் வழிகளுக்கு வேறானவை. அவ்வளவே.

(2) அப்படியானால் மருத்துவர்கள் கூறும் செயற்கை முறைகளை விட்டு விட்டு இயற்கை முறைகளைக் கையாளலாம் அல்லவா ? ஆப்பரேஷன் வேண்டாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பார்.

1952-ஆம் வருஷம் நவம்பர் மாதத்தில் பப்பாய் நகரத்தில் சர்வதேசக் குடும்பக் கட்டுபாட்டு மகாநாடு நடைபெற்றது. உலகம் புகழும் தத்துவ ஞானியும் பாரத தேசத்தின் ராஷ்டிரபதியுமான டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள் அந்த மகாநாட்டை. ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் செய்த சொற்பொழிவில் செயற்கை முறைகள் வேண்டாம், இயற்கை முறைகள் தான் வேண்டும் என்று கூறுகிறவர்களுக்குத் தக்கவாறு பதில் கூறியுள்ளார். அவர் கூறுவதன் சாரம் இது :- நமக்குக் கடவுள் அறிவு கொடுத்திருப்பது நாம் அதைப் பயன்படுத்துவதற்காகவே, நாம் அறி வைப் பயன்படுத்தி இயற்கையை, அடக்கி ஆண்டு நமக்கு நன்மையான பலவற்றைத் தேடிக் கொள்கின்றோம், அங்ஙனமிருக்கக் குடும்பக் கட்டுப்பாட்டு விஷயத்தில் மட்டும் அறிவைப் பயன்படுத்த வேண்டாம், இயற்கைப்படியே நடக்கவேண்டும் என்று கூறுவது பொருந்தாது. இந்த விஷயத்திலும் செயற்கை முறைகள் தான் முழுப்பலன் தருமாயின் அவற்றைக் கையாளத் தயங்கலாகாது.

நம்முடைய ராஷ்டிரபதி பேரறிஞர், அவர் தவறான கருத்துக் கூறமாட்டார். ஆதலால் எல்லோரும் எந்த முறை நிச்சயமாகப் பயன் தருமோ, அந்த முறையை அனுஷ்டிக்கப் பின்வாங்கலாகாது. ஆப்பரேஷன் முறை அத்தகையது என்பதில் ஐயமில்லை.

(3) கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாதிருக்தால் குழந்தை உண்டாகாது என்றால் ஆப்பரேஷன் முறையை விட்டுவிட்டு இந்த முறையைக் கையாளலாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பர்.

இந்த முறையைக் கையாளவேண்டுமானால் கருத்தரிக்கும் நாட்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

(விபரம் : 8-ஆம் பக்கம் பார்க்க )

படங்களைப் பார்த்தால், இரண்டு சினைப் பைகள் இருப்பது தெரியும். சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒரு முட்டை இந்த மாதம் வலது சினைப்பையிலிருந்து வெளியானால் அடுத்த மாதம் இடது சினைப் பையிலிருந்து வெளியாகும் சினைக் குழாயின் விரல்கள் அதைக் கிரகித்துச் சினைக்குழாய் வழியாக அனுப்பும். அம் முட்டை கருப்பையை அடைய ஒரு நாளாகும். அந்த நாளில்தான் கரு உண்டாக முடியும்.

அந்த நாளில் கோசத்திலிருந்து குய்யத்தினுள் பாயும் விந்திலுள்ள விந்துயிர்கள் கருப்பைக்குள் சென்று அங்கிருந்து சினைக்குழாய்களுக்குள் நுழையும். முட்டையுள்ள சினைக் குழாயினுள் செல்லும் விந்துயிர்களில் ஒன்று முட்டையைக் கிழித்துக் கொண்டு அத்துடன் ஐக்கியமாகிவிடும். இவ்வாறு விந்துயிர் கலந்த முட்டை கருப்பைக்கு வந்து அதில் ஒட்டிக் கொண்டு குழந்தையாக வளரும்.

ஆகவே கருத்தரிப்பதற்குக் கட்டாயமாக வேண்டப்படுவதாகிய முட்டையானது ஒரு மாதவிடாய்க்கும் மறு மாதவிடாய்க்கு மிடையில் வெளிவந்து சினைக் குழாயில் தங்குவது ஒருநாள் தான். அந்த நாளில் காதல் செய்யா விட்டால் கரு உண்டாகாது, குழந்தை பிறக்காது, மற்ற நாட்களில் காதல் செய்யலாம். ஆனால் மாதவிடாய்களுக்கிடையில் முட்டை. வெளி வரும் அந்த நாள் எது ? அதைக் கண்டுபிடிப்பது எப்படி ? அந்த நாள் இதுதான் என்று நிச்சயமாகக் கூறமுடியுமானால் ஆப்பரேஷனும் வேண்டாம், வேறு எந்த முயற்சியும் தேவையில்லை.

ஆஸ்திரியா நாட்டு டாக்டர் காஸ் என்பவரும் ஜப் பான் நாட்டு டாக்டர் ஒகினோ என்பவரும் செய்த ஆராய்ச்சிகளின் பயனாக முட்டை வெளியாவது மாதவிடாய் காண்பதற்குப் பதினாலுநாட்களுக்கு முந்திய நாள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாதவிடாய்க் காலம் சாதாரணமாக 28 நாட்களாயிருக்க வேண்டுமாயினும் எல்லோருக்கும் அப்படி யிருப்பதில்லை. ஒரு பெண்ணுக்கே கூட சில சமயங்களில் 23-ஆம் நாளும் சில சமயங்களில் 33-ஆம் நாளும் வருவதுண்டு. ஆதலால் மாதவிடாய் கண்டு 10- ஆம் நாள் முதல் 19-ஆம் நாள் வரைக் காதல் செய்யாதிருந்தால் குழந்தை உண்டாகாது என்று கூறுகிறார்கள்.

ஆயினும் பெண்களின் தேகாரோக்கியத்தில் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாகவும், உறுப்புக்களில் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாகவும் மேற் சொன்ன கணக்குப்படி நடை பெறுவதில்லை. சில சமயங்களில் முட்டையானது சம்போக வேகத்தின் காரணமாகக் காலந் தவறி வெளியே வந்து விடுவதுமுண்டு.

ஆகவே இந்த முறையைக் கையாண்டால் அநேக மாகக் குழந்தை பிறக்காது என்று கூற முடியுமேயன்றி நிச்சயமாகக் குழந்தை பிறக்காது என்று கூற முடியாது.

அதனால் ஒரு குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் சென்ற பின்னரே மறுகுழந்தை பிறக்கவேண்டும், அடுத்தடுத்துப் பெறக் கூடாது என்று எண்ணுகிறவர்கள் மட்டுமே இந்த முறையைக் கையாளலாம். மூன்று குழந்தைகள் உடையவர்கள், இனிக் குழந்தை வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் இந்த முறையைக் கையாளலாகாது. ஆப்பரேஷன் முறை மட்டுமே முற்றிலும் நம்பக்கூடியது, அதனால்தான் அந்த முறையைக் கையாண்டு நலம் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

(4) மருத்துவர்கள் ஒருவித மாத்திரை கண்டு பிடித்திருக்கிறார்கள், அதை மூன்று நாட்கள் சாப்பிட்  டால் காதல் செய்து வந்தாலும் மூன்று ஆண்டுகள் குழந்தை உண்டாகாது என்று கூறுகிறார்களே, ஆப்பரேஷன் செய்து கொள்ளாமல் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பர்.

அந்த மாதிரியான மாத்திரைகள் இருப்பதாகத்தான் அடிக்கடி பத்திரிகையில் விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் விளம்பரங்களை நம்பி எதுவும் செய்துவிட லாகாது. அதுபோல் எந்த மருத்துவர் கூறுவதையும் கூட நம்பிவிடலாகாது. அந்த மாத்திரையை உண்டால் குழந்தை உண்டாகாது, அந்த மாத்திரைகளால் எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்று அதிகார நிலைமையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் அபிப்பிராயம் கூறினால் மட்டுமே அந்த மாத்திரைகளை வாங்கிப் பயன் படுத்தலாம்.

மாத்திரையைச் சாப்பிட்டு மக்களைப் பெறாதிருக்க வழியிருக்குமானால் மிகவும் நல்லதுதான். அதை எண்ணி ஐம்பது வருட காலமாக எல்லா நாடுகளிலும் ஏராளமான மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் - நடத்தி வருகின்றனர். நம்முடைய நாட்டிலும் நடந்து வருகின்றது. ஆனால் இன்னும் அத்தகைய மாத்திரை எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கண்டு பிடித்திருந்தால் நம்முடைய அரசாங்கம் களிம்புகளையும் உறைகளையும் பயன்படுத்துமாறோ ஆப்பரேஷன் செய்து கொள்ளுமாறோ மக்களிடம் பிரசாரம் செய்யாமல், அந்த மாத்திரைகளையே ஆயிரக்கணக்காகச் செய்து நாடு முழுவதும் எளிதாகப் பரவச் செய்துவிடும்.

ஆதலால் மூன்று குழந்தை போதும் என்று எண்ணுகிறவர்கள் விளம்பரம் செய்யும் மாத்திரைகளை வாங்கவேண்டாம் என்றும் ஆப்பரேஷனையே செய்து கொள்ளவேண்டும் என்றும் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன்.

(5) கருவிகள் களிம்புகள் ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகள் உண்டாவதைத் தடுத்துவிடலாம் என்று கூறுகிறார்களே, அப்படியிருக்க ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்று கூறுவதன் காரணம் யாது ? எனச் சிலர் கேட்பர்.

குழந்தைகள் உண்டாவதைத் தடுப்பதற்காகப் பலவிதமான கருவிகளையும் களிம்புகளையும் மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றை வாங்கி மக்கள் பயன்படுத்தவும் செய்கிறார்கள். எந்தவிதமான தீங்கும் செய்யாமல் குழந்தை உண்டாவதைத் தடுக்கக் கூடிய கருவிகளும் களிம்புகளும் உள்ளன.

ஆனால் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதென்றால் அதிகப் பணம் செலவாகும். அதோடு அந்தப் பொருள்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கமாட்டா, பெரிய பட்டணங்களில் மட்டுமே கிடைக்கும். அவற்றை உபயோகிப்பதிலும் பலவித சிரமங்கள் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள மக்களுள் பெரும் பாலோர் ஏழைகள், கிராமங்களில் உள்ளவர்கள். அவர்கள் கருவிகளையும் களிம்புகளையும் வாங்கிப் பயன்படுத்த முடியாது. இதை மனத்தில் வைத்துக்கொண்டு எல்லோரும் எளிதாகவும் பணச்செலவு இல்லாமலும் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் பற்றி இந்த நூல் 21 ஆம் பக்கத்தில் கூறியுள்ளேன்.

இந்தச் சாதனங்களையும் அடுத்தடுத்துக் குழந்தை பெறாமலிருப்பதற்காக மட்டும் பயன்படுத்துவது நல்லது. மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் குழந்தைகளைப் பெறாமலிருப்பதற்கு இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தவேண்டாம். மூன்று குழந்தைகள் பெறு முன்னர் இந்தச் சாதனங்களை உபயோகிப்பவர் ஒரு தடவை உபயோகிக்கத் தவறினாலும் பாதகமில்லை. ஆனால் மூன்று குழந்தைகள் உள்ளவர்கள் ஒரு தடவை தவறினாலும் அந்தத் தடவை கருத்தரித்துவிடலாம். அது அவர் விருப்பத்துக்கு மாறாக நடைபெறும் காரிய மாகும். ஆதலால் மூன்று குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் ஆப்பரேஷனே செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு மீண்டும் குழந்தைகள் உண்டாகவே செய்யாது.

ஆகவே மூன்று குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் அந்த மூன்று குழந்தைகளையும் அடுத்தடுத்துப் பெறாமலிருப்பதற்காக நான் 21-ஆம் பக்கத்தில் சொல்லும் முறையைக் கையாளுங்கள்.

ஆனால் மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் குழந்தைகள் உண்டாகாமலிருப்பதற்காக ஆப்பரேஷனே செய்துகொள்ளுங்கள்.

(6) ஆப்பரேஷன் செய்த பின்னர் குழந்தைகள் வேண்டும் என்று தேவைப்பட்டால், ஆப்பரேஷனை மாற்றியமைத்துக் குழந்தைகள் பெறமுடியுமா என்று சிலர் கேட்பர். அதுவும் முடியக்கூடிய காரியமே. குழந்தைகள் உண்டாகாமலிருப்பதற்காகச் செய்யும் ஆப்பரேஷனை மாற்றி அமைக்கமுடியும். அதற்கான முறையையும் மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். அதை பிளாஸ்டிக் அறுவை மருத்துவ முறை என்று கூறுவார்கள். சென்னை ஜெனரல் மருத்துவ இல்லத்தில் அந்த முறை ஆப்பரேஷன் செய்யக் கூடிய நிபுணர் உள்ளனர்.